விவிலிய விதைகள்
தவக்காலம் 1-ஆம் வாரம்
(ஆண்டு- B)
21-02-2021
ஞாயிற்றுக்கிழமை
இயேசுவுக்கு
ஒரு நேர்முகத் தேர்வு
கிறிஸ்துவில்அன்பார்ந்தவர்களே,
நம்மில் பலர் நேர்முகத் தேர்வை சந்தித்திருப்போம். நிறுவனமொன்றில் ஆட்சேர்பிற்கான தகுதிக்கான நடத்தும் சந்திப்பு இது. நேர்முகத்தேர்வில் தெரிவுச் செய்யப்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும். இன்றைய நற்செய்தியிலும், இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு நேர்முகத் தேர்வு நடக்கிறது. தன்னுடைய இறை பணியை துவங்குவதற்காக நடக்கக்கூடிய ஒரு தயாரிப்பு, தேர்வு மற்றும் சோதனை இது. இங்கு நேர்முகத்தேர்வின் இடமாக பாலைவனமும், காலமாக நாற்பது நாட்களும் இருக்கிறது. நேர்முகத்தேர்வு சோதனைக்கும் மற்றும் தயாரிப்புக்கும் காரணமாகிறது. மேலும், நேர்முகத் தேர்வாளராக தூய ஆவியானவரும், தேர்வின் வெற்றியாக, வேலையாக இயேசு இறைப்பணியை துவங்குவதையும் நாம் காண்கின்றோம். இன்று நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை காண, இறைவன் வழியாக, நாம் எண்ணற்ற நேர்முகத் தேர்வுகளை சந்திக்கின்றோம். ஒவ்வொரு முறையும் இத்தகைய சோதனைகளை மற்றும் பாலைவன அனுபவங்களை, நாம் சந்திக்கின்ற பொழுது, நம்முடைய உள்ளங்கள் எத்தகையதாக இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். சோதனை சாதனைக்கான வழி, நேர்முகத்தேர்வுகள் புது வாழ்வுக்கான பயணம் என்பதை உணர்ந்து, நேர்முகத்தேர்வாக கொடுக்கப்பட்ட இந்த தவக்காலத்தை சரியான விதத்தில் பயன்படுத்த இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு தருகிறது.
பாலைவனம் (இடம்):-
பாலைவனம் என்பது ஆழ்ந்த அனுபவங்களுக்கான ஒரு இடமாகும் உணவு, நீர், தனிமைப்படுத்துதல், ஆபத்து, விடுதலை, புதுப்பித்தல், கடவுளுடன் சந்திப்பு என நிறைந்து இருக்கும் இடமாகும். வனப்பகுதியின் புவியியல் வனாந்தரத்தில் ஒரு இறையியல் உள்ளது. விவிலியத்தில் இஸ்ராயேல் மக்களும், இயேசுவும் இத்தகைய ஒரு இடத்தில் தான் தங்களுடைய பாலைவன அனுபவத்தை, நேர்முகத் தேர்வை சந்திக்கிறார்கள்.
நாற்பது நாட்கள் (காலம்):-
சோதனை அல்லது தீர்ப்பின் கருப்பொருளை வலியுறுத்தும் 40 என்ற எண்ணை திருவிவிலியத்தில் பயன்படுத்தியதற்கான சில எடுத்துக்காட்டுகள்... நோவா காலத்தில், வெள்ளத்தின் போது "நாற்பது பகலும் நாற்பது இரவுகளும்" மழை பெய்தது. மோசே எகிப்தியனைக் கொன்ற பிறகு, அவர் மீதியானுக்கு தப்பி ஓடினார், அங்கு அவர் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் மந்தைகளை மேய்த்தார். மோசே சீனாய் மலையில் 40 பகலும் 40 இரவும் இருந்தார். மோசேயின் வாழ்க்கை மூன்று 40 ஆண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யூதாவின் பாலைவனத்தில் இயேசு "நாற்பது பகலும் நாற்பது இரவுகளும்" உண்ணாவிரதம் இருந்தார். நாற்பது நாட்கள் கழித்து இயேசு உயிர்த்தெழுதல் அடைகிறார். இன்று நமக்கும் திருச்சபையானது நாற்பது நாட்கள் கொண்ட நேர்முகத் தேர்வை அதாவது தவக்காலத்தை கொடுத்திருக்கிறது.
சோதனை/தேர்வு (செயல்):-
சோதனை அல்லது தேர்வு என்றாலே அது ஒரு இலக்கிற்காக தான் இருக்கின்றது. ஒருவன் ஒரு நேர்முகத் தேர்வை சந்திப்பது தனக்கு நல்லதொரு வேலையை பெறுவதற்காகவே. இயேசுவின் நாற்பது நாள் பாலைவன நேர்முகத்தேர்வு அவர் பொது பணியை துவங்குவதற்காக தான். இன்று நாம் நம்முடைய வாழ்க்கையிலே பெறுகின்ற ஒவ்வொரு பாலைவன அனுபவமும், கஷ்டமும், துன்பமும், சோதனையும், நம்மை புது வாழ்வுக்கு செதுக்கி கொண்டிருக்கின்ற வழிகளாகும்.
தூய ஆவி (நேர்முகத்தேர்வாளர்):-
இயேசுவினுடைய 40 நாள் பாலைவன அனுபவத்தில் தூய ஆவியானவரே நேர்முகத்தேர்வாளராக இருக்கின்றார். இயேசு அவராலே பாலைவன அனுபவத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.
நற்செய்திப் பணி (இலக்கு):-
இயேசுவினுடைய இந்தப் பாலைவன அனுபவம்/ நேர்முகத்தேர்வு அவரை தன்னுடைய பணி வாழ்வின் தொடக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றது. இவருடைய இந்த 40 நாள் அனுபவம் அவரை மூன்றாண்டு பணி வாழ்வில் நிலைத்திருக்கச் செய்கின்றது.
செங்கடலின் சுதந்திரப் பக்கத்தில் நின்று இஸ்ராயேல் மக்கள்
மகிழ்ச்சியுடன் பாடி நடனமாடினர். அதிசயமாக, கடவுள் அவர்களை எகிப்திலிருந்து விடுவித்தார். மோசே அவர்களை வெளியே அழைத்துச் சென்றார். பின்னர், கடல் பிரிந்து இஸ்ராயேல் மக்கள் அதனை கடந்த பிறகு, அவர்கள் பாலைவனத்திற்கு புறப்பட்டார்கள். சில நாட்களில்: அவர்களுக்கு உணவு இல்லை. அவர்களுக்கு தண்ணீர் இல்லை. தூண்டப்படாத ஒரு எதிரி தேசம் அவர்களைத் தாக்கியது. பசி, முழு சமூகமும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுத்தது. அவர்கள் சினாய் மலையை அடைந்தபோது, மக்கள் ஒருவருக்கொருவர் பழகுவதில் சிக்கல் ஏற்ப்பட்டது, மோசே ஒவ்வொரு நாளும் சச்சரவுகளைச் சமாளித்தார். அதன் பின்னர், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறி, இரண்டாக பிரிந்து, இரு நாடுகளும் பாபிலோனிய மற்றும் அசீரிய அடிமைத்தனத்திற்கு சென்றது. அது மற்றொரு வன அனுபவம் என்னும் நேர்முகத் தேர்வு. விவிலிய வனப்பகுதி ஆபத்தும், சோதனையும், குழப்பமும் நிறைந்த இடமாக இருக்கும்போது, அது தனிமையில், ஊட்டச்சத்து மற்றும் கடவுளிடமிருந்து வெளிப்படுவதற்கான இடமாகவும் இருக்கிறது என்பதை அறிகிறோம். இந்த கருப்பொருள்கள் இயேசுவின் வனாந்தரத்தில், பயணத்தில் மீண்டும் வெளிப்படுகின்றன. இஸ்ரயேல் மக்களின் இத்தகைய அனுபவங்கள், பாவங்களிலிருந்து அவர்கள் விடுதலையாகி, இறைவன் அருகே செல்லக்கூடிய ஒரு வாய்ப்பை பெற்று, தங்களுடைய உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கு ஒரு நேர்காணலாக இருந்தது.
இயேசுவின் நேர்முகத்தேர்வு:-
ஆவியானவர் இயேசுவை நேர்முகத் தேர்விற்காக பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்றார், சாத்தான் அவரைச் சோதித்தார், கடவுளின் உண்மையை நம்புவதை விட கடவுளின் சக்தியைப் பயன்படுத்தும்படி அவரை சோதிக்கிறார். மலை உச்சியில் கொண்டு வரப்பட்டு சோதித்த போதும், சோதனையாளரின் அழைப்பை இயேசு எதிர்த்தார். உண்ணா நோன்பிருந்து தன்னுடைய சோதனையை சாதனையாக்குகிறார். நம் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார்.
நம் வாழ்வின் நேர்முகத்தேர்வு
கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நாம் எண்ணற்ற நேர்முகத் தேர்வுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் நம்மை புது வாழ்வுக்கு அழைத்துச் செல்லுகின்ற வழிகள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சோதனைகளை, இத்தகைய நேர்முகத் தேர்வுகளை ஒரு கஷ்டமானதானாகவே மற்றும் துன்பமானதாகவே கருதுகின்ற ஒரு நிலை நம்மில் உருவாகியிருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் நாம் நம்மையே செதுக்குவதற்காக இறைவன் கொடுத்த வாய்ப்புகள். அதிலும் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் திருஅவையின் வழியாக அவர் கொடுத்த இந்த தவக்காலம் நாம் மனமாற்றம் பெறுவதற்காக மற்றும் புதுவாழ்வு அடைவதற்காக இறைவன் கொடுத்த நேர்முகத்தேர்வுகள். இஸ்ரயேல் மக்களைப் போலவும், இயேசு கிறிஸ்துவைப் போல வாழ்வின் இந்த நேர்முகத் தேர்வுகளை சந்தித்து, நம்முடைய வாழ்வில் புதியதொரு வேலையை மற்றும் வெற்றியை பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.
அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்