Wednesday, September 14, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 25-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 18 -09-2022- ஞாயிற்றுக்கிழமை


முதல் வாசகம் : ஆமோஸ் 8: 4-7
இரண்டாம் வாசகம் : 1
திமொத்தேயு 2: 1-8
நற்செய்தி : லூக்கா 16: 1-13

பணியாளனின் செயல் 

தையல்காரர் ஒருவர் அவருடைய கடையில் உட்கார்ந்து துணியை தைய்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மகன் அவரருகில் உட்கார்ந்து வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த தையல்காரரோ அழகான துணியை எடுத்து, பளபளப்பான புதிய கத்திரிக்கோலிலே அதை வெட்டுகிறார். பின்பு அந்த கத்திரிக்கோலை அவர் கால் அருகே கீழே போடுகிறார். அந்த வெட்டிய துணியை தைக்கிறார், அதன் பின்பு அதிலிருக்கின்ற ஊசியை எடுத்து அவர் தலை மீது இருந்த தொப்பியிலே பாதுகாப்பாக குத்தி வைக்கிறார். இதைப் பார்த்த மகன், அப்பா கத்திரிக்கோல் விலை உயர்ந்தது அதை அலட்சியமாக காலுக்கு அடியிலே தூக்கி போட்டு விட்டீர்கள். ஆனால் இந்த ஊசியோ மிகவும் மலிவானது அதை பாதுகாப்பாக உங்கள் தொப்பியில் குத்தி வைத்திருக்கிறீர்களே என்று கேட்கிறான். அதற்கு அந்த அப்பா நீ சொல்வது உண்மை தான். கத்திரிக்கோல் விலை உயர்ந்ததாகவும் மற்றும் அழகானதாகவும் இருந்தாலும் அதனுடைய செயல் வெட்டுவது அதாவது பிரிப்பது. ஆனால் ஊசி மலிவானதாகவும் மற்றும் சின்னதாகவும் இருந்தாலும் அதனுடைய செயல் தைப்பது அதாவது சேர்ப்பது. ஒருவருடைய மதிப்பை தீர்மானிப்பது அவருடைய பணமோ அல்லது பொருளோ அல்ல மாறாக அவர் செய்கின்ற செயல் தான். இன்றைய நற்செய்தியிலும் வீட்டுப் பொறுப்பாளரை பணியிலிருந்து நீக்க போகிறேன் என்று தலைவர் கூறியவுடன், அவர் முன்மதியோடு செய்த செயல் தான் அவருக்கு மதிப்பையும் தலைவரிடத்தில் பாராட்டையும் பெற்று தந்தது. அப்பணியாளர் செய்த செயல் பல்வேறு பண்புகளை கொண்டதாக அமைகின்றது.

1. உறவுக்கு முக்கியத்துவம் தந்த செயல்:
செல்வரின் உடமைகளை பாழாக்கியதாக பழி சுமத்தப்பட்டு, கணக்கை ஒப்படையும் இனி நீ வீட்டு பொறுப்பாளராய் இருக்க முடியாது என்று தலைவர் கூறியவுடன் பணியாளர் மூன்று விதமான செயல்களை செய்திருக்கலாம்.

(a). பதவிக்கு முக்கியத்துவம்: அப்பணியாளர் தன்னுடைய பதவியை அதாவது பொறுப்பை காத்துக் கொள்வதற்காக, தான் செய்த செயல் தவறு என்று அந்த தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அந்த பதவியை அதாவது பொறுப்பை தக்க வைத்து கொண்டிருந்திருக்கலாம்.

(b). பொருளுக்கு முக்கியத்துவம்: அப்பணியாளர் தன் தலைவரிடம் கடன்பட்டவர்களை அழைத்து அவர்களது கடன் சீட்டில் குறைத்து எழுத வைத்து அதிலிருந்து ஒரு பங்கை அதாவது மீதமுள்ள 50 குடம் எண்ணெயில் 25 குடம் எண்ணெயும், மீதமுள்ள 20 மூடை கோதுமையில் 10 மூடை கோதுமையும் என்னுடைய பங்காக தாரும் என கேட்டு வாங்கியிருக்கலாம்.

(c). பணத்துக்கு முக்கியத்துவம்: நேர்மையற்ற பணியாளர் தன் தலைவரிடம் கடன்பட்டவர்களை அழைத்து அவர்கள் கடன் சீட்டில் குறைத்து எழுத வைத்து அதற்கு மாற்றாக ஒவ்வொருவரிடமும் பணம் பெற்று இருக்கலாம். தன்னுடைய தலைவரின் கணக்கை நிர்வகித்ததால், பொய் கணக்கு எழுதி தனக்கென்று பணத்தை எடுத்திருக்கலாம்.
ஆனால் இப்பணியாளர் செய்த செயல் பணத்திற்கும், பொருளுக்கும் மற்றும் பதவிக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாக இருந்தது. "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே" என்று சொல்லுவார்கள். இவன் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவனாக அல்லாது குணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உறவுகளை சம்பாதித்துக் கொண்டான். இன்றைக்கு நம்மை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோரை பணத்தின் பொருட்டும் மற்றும் நம்முடைய வேலைகளின் பொருட்டும் மதிக்க மறக்கின்றோம், அவர்களுக்கு
முக்கியத்துவம் தர மறந்து விடுகின்றோம். நமது வேலை, அதன் மூலம் கிடைக்கும் பணம் மற்றும் நகர வாழ்வு என கிராமத்திலிருக்கும் நம்முடைய பெற்றோர்களையும் உறவுகளையும் சந்திக்க நேரமில்லாமல் போய் விடுகிறது. அன்று அந்தப் பணியாளனின் செயல் பணத்திற்கு, பொருளுக்கு மற்றும் பதவிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை மாறாக உறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தது. இன்று நமது செயல் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது? பணம், பதவி மற்றும் பொருளுக்காக? அல்லது நமது உறவுகளுக்காக? சிந்திப்போம்!
2. இக்கட்டான சூழலில் செய்த செயல்:
இன்றைக்கு நற்செய்தியிலே இயேசு எடுத்துரைக்கும் பணியாளன் தன்னுடைய தலைவர் வீட்டு பொறுப்பிலிருந்து தன்னை நீக்க போகிறார் என்பதை அறிகிறான். இது அவனுக்கு ஒரு இக்கட்டான சூழல், திடீரென்று அவனது பொறுப்பு அவனை விட்டு போகிறது. குழம்பிய ‌மற்றும் வாழ்வை வெறுக்கும் ஒரு மனநிலையை உருவாக்கும் நேரம். ஆனால், இக்கட்டான சூழலிலும் சரியான ஒரு செயல், உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன் தலைவரிடத்தில் பெரும் பாராட்டை பெறுகிறான். இக்கட்டான சூழலிலும் அவனது செயல் இரண்டு பண்புகளை கொண்டிருந்தது.

(a). சிந்தித்து செயல்பட்ட நிலை: இக்கட்டான சூழ்நிலையிலும்
நான் என்ன செய்வேன்? என்று சிந்திக்க ஆரம்பிக்கின்றான். வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிடும் போது, பிறர் என்னை தங்களது வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்? என சிந்திக்கின்றான். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் இக்கட்டான சூழல் ஏற்படுவதுண்டு. அத்தகைய சூழல்களில் எல்லாம் நம்முடைய உள்ளம் பயத்தால் சூழ்ந்து, வாழ்க்கையை வெறுத்து மற்றும் எதையும் சிந்திக்காமல் அவசர முடிவுகளை நாம் எடுப்பதுண்டு. எத்தகைய சூழலிலும் நாம் செய்யும் செயல் சரியானதாகவும் நன்மை பயக்கக் கூடியதாகவும் எதிர்கால வாழ்வை தரக்கூடியதாகவும் அமைய சிந்திக்க வேண்டும் என்பதற்கு நற்செய்தியில் வரும் பணியாளன் ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு.

(b). தன்னிலையை உணர்ந்த செயல்: தன் வேலை போக போகிறது என்னும் இக்கட்டான சூழலில், அப்பணியாளன் தன் வேலை போனால் தன்னால் மண் வெட்டவோ, இரந்து உண்ணவோ முடியாது என நினைக்கின்றான். இது அவன் தன்னிலையை உணர்ந்து செயல்பட்டிருக்கின்றான் என்பதன் அடையாளமாகும். இப்பணியாளனைப் போல இன்றைக்கு நாமும் இக்கட்டான சூழலிலும் மன அமைதியுடனும், பொறுமையுடனும் மற்றும் தன்னிலையை உணர்ந்து நன்றாக ஆழ்ந்து சிந்தித்து முடிவுகளை எடுக்கக்கூடிய திறனையும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இன்று நமது முடிவுகள் தன்னிலை மை உணர்ந்து அமைகின்றதா? சிந்திப்போம்!


அனைவருக்காகவும் மன்றாடுங்கள், இறைவனிடம் வேண்டுங்கள், பரிந்து பேசுங்கள் மற்றும் நன்றி செலுத்துங்கள் என்னும் இன்றைய இரண்டாம் வாசக வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் இப்பணியாளனை போல இக்கட்டான சூழலிலும் சரியான ஒரு செயலை செய்யவும், அச்செயல் சிந்தித்து, தன்னிலையை உணர்ந்து மற்றும் நம் உறவுகளை வளர்க்க கூடியதாக அமைய இறையருளை வேண்டுவோம்.
இறைவன் நம் ஒவ்வொருவரையும்
ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

                     

காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)



காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)