பொதுக்காலம் 15ஆம் வாரம்
( ஆண்டு- A)
12-07-2020
ஞாயிற்றுக்கிழமை
|
||||||
எத்தகைய கிறிஸ்தவர்கள் நாம்?
ஆசிரமம் ஒன்றில் குரு தன்னுடைய சீடரை நோக்கி, இந்த காலமே மாறிவிட்டது, யாரும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு இருப்பதில்லை என்று கூறினாராம். சீடருக்கு ஒரே ஆச்சரியம் உடனே சீடன் குருவிடம், குருவே அதை நீங்கள் எப்படிக் கூற முடியும்? ஒவ்வொரு நாளும் உம்மை காண பலரும் நம்பிக்கையோடு வருகிறார்கள். இறைவனை வழிபடுகிறார்கள். ஏன் நம்முடைய ஆசிரமத்தின் மத்தியில் இருக்கின்ற அந்த பாவம் போக்கும் குளத்திலேயே. ஒவ்வொரு நாளும் பலரும் முழுமையான நம்பிக்கையோடு குளித்து. தங்களுடைய பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள். எப்படி நீங்கள் இந்த காலமே மாறிவிட்டது, எல்லோரும் கடவுள் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் என்று கூற முடியும் என்று கேட்டாராம். உடனே குரு சீடரிடம், அது உண்மையே இல்லை வெறும் வெளிவேடம் நான் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். நான் கூறுவதை போல் செய் என்று சீடரிடம் தான் குளத்தில் காலை நனைக்க செல்ல இருப்பதாகவும், அப்படி செல்லும் பொழுது தவறி தான் குளத்தில் விழ போவதாகவும், உடனே யார் காப்பாற்ற வருகிறார்களோ அவரிடம், எவர் ஒருவர் எந்த ஒரு பாவ கரையும் இல்லாமல் தூய்மையாக இருக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே குருவை காப்பாற்ற முடியும் என்று கூறு என்று கூறினாராம், அதேபோல நடந்தது. அவர் இவ்வாறு கூறியவுடன் எவரும் குருவை காப்பாற்ற முன்வரவில்லை, எல்லோரும் தான் பாவி என்று குளத்தின் கரையிலேயே நின்று விட்டார்களாம். குரு குளத்திலே முழ்குகின்ற வேளையிலே அருகில் இருந்த தோட்டக்காரன் எந்த ஒரு கவலையும் படாமல் மிக வேகமாக வந்து குருவை குளத்தில் இருந்து காப்பாற்றி விட்டான். அதன்பிறகு குருவும் சீடரும் தோட்டக்காரனிடம் தனியாக, எந்த ஒரு பாவ கரையும் இல்லாதவர் தான் குருவை காப்பாற்ற முடியும் என்று கூற, எல்லோரும் கரையில் ஒதுங்கி இருக்க, நீர் மட்டும் ஏன் மிக வேகமாக வந்து குருவை காப்பாற்றினாய் என்று கேட்கின்ற போது, மிக, ஐயா! நான் பாவி தான் ஆனால், இந்த குளத்தில் இறங்கி குளிப்பவர்கள் அனைவரும் தங்களுடைய பாவ கரையில் இருந்து விடுபடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை இருக்கின்றது. ஆக நான் பாவியாக இருந்தாலும், இந்த குளத்தில் காலை வைத்த அடுத்த நொடியே நான் என்னுடைய பாவத்திலிருந்து விடுபட்டு தூய்மையாக மாறுகிறேன். எனவே தான் நான் குருவை காப்பாற்றினேன் என்று கூறினானாம்.
ஆம் கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்தவர்களே, அந்த குளக்கரையில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் தெரியும், இந்த குளத்தில் இறங்கினால் நம்முடைய பாவங்கள் எல்லாம் போகும், துய்மையாக மாறுவோம். ஆனால், எவரும் மனமிரங்கி குளத்தில் இறங்கி குருவை காப்பாற்ற முன்வரவில்லை என்றால், அவர்கள் செய்து கொண்டிருந்த அந்த செயல் எல்லாம் வெளி வேடம் எவரும் அதனை தங்களுடைய வாழ்க்கைக்கு உள்ளார்ந்த உணர்வோடு எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் தான் குருவை காப்பாற்ற முன்வரவில்லை. இதுதான் இன்றைக்கு நம்முடைய கிறிஸ்தவ வாழ்வாக இருக்கிறது. நம்முடைய செயல்கள் வேறாக இருக்கின்றது . நம்முடைய செயல்கள் எதுவும் அர்த்தமுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை நமக்கு உருவாக்கித் தருவதே இல்லை. நாம் ஒரு உண்மையான, அர்த்தமுள்ள கிறிஸ்தவர்களாக வாழ்வது இல்லை. இன்றைய நாளில் நாம் எத்தகைய கிறிஸ்தவராக வாழ்கின்றோம். நாம் அர்த்தமுள்ள கிறிஸ்தவர்களாக, நாம் எதை நினைக்கின்றோமோ மற்றும் சொல்கிறோமோ, அதை செய்கின்ற ஒரு கிறிஸ்தவராக, அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ இன்றைய இறைவார்த்தை பகுதி நமக்கு அழைப்பு தருகிறது.
இன்றைய நற்செய்தியில் நாம் காண்கின்ற நான்கு வகையான நிலப்பகுதிகள் நமக்கு நான்கு வகையான கிறிஸ்தவர்களை சுட்டிக் காட்டுகிறது.
1. 1. திருவிழா கிறிஸ்தவர்கள்
2. 2. பதவி கிறிஸ்தவர்கள்
3. 3.நன்கொடை கிறிஸ்தவர்கள்
4. 4. வாழும் கிறிஸ்தவர்கள்
1 1. திருவிழா கிறிஸ்தவர்கள்
சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டு சென்றன. வழியோரம் விழுந்த விதைகளை திருவிழா கிறிஸ்தவர்களுக்கு நாம் ஒப்பிடலாம். வழி ஓரத்திலே விழுந்த விதை களை எவ்வாறு பறவைகள் வந்து கொத்தி சென்று விட்டதோ, அதே போல சிலர் இறைவார்த்தையைக் கேட்பார்கள். ஆனால், அதை வெறுப்பார்கள், அதற்கு கீழ்ப்படிய மாட்டார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நற்செய்தி நூல்களில் நாம் பார்க்கின்ற பரிசேயர்கள் சதுசேயர்கள் மற்றும் மூப்பர்கள். இவர்கள் இயேசு செய்த ஒவ்வொரு நல்ல செயலுக்கும் குறை கூறியவர்கள். மத்தேயு. 9:19 -ல் இயேசு முடக்குவாதமுற்றவரை குணப்படுத்தியதை இவர்கள் குறை கூறினார்கள். யோவான் 5:59 -ல் 38 ஆண்டுகளாக உடல் நலமற்ற ஒருவரை இயேசு குணப்படுத்திய போது, அவர்கள் இறை வார்த்தைக்கு செவி கொடுக்கவில்லை மாறாக குறை கூறினார்கள். இவர்கள் நல்லதை மறந்து குறை கூறுபவர்கள். இன்று பரிசேயர்கள் சதுசேயர்களை போல திருவிழாக் கிறிஸ்தவர்கள், நம்முடைய குடும்பங்களிலும், சமூகத்திலும், பங்குகளிலும் இருக்கின்றார்கள். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை திருவிழாவிற்கு மட்டும், ஆலயத்திற்கு வருகின்ற கிறிஸ்தவர்கள் ஆனால் இவர்கள் ஆலயத்தில் நடக்கின்ற யாவற்றுக்கும் குறை கூறுகின்ற கிறிஸ்தவர்கள். இத்தகைய ஒரு கிறிஸ்தவர்களாக நாம் வாழ்கின்றோமா...
2. பதவி கிறிஸ்தவர்கள்
சில விதைகள் மிகுதியான மண்ணில்லா பாறைப் பகுதிகளில் விழுந்தன, அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால், கதிரவன் மேலே எழ அவை காய்ந்து வேர் இல்லாமையால் கருகிப் போயின. பாறை மீது விழுந்த விதைகளை நாம் பதவி கிறிஸ்தவர்களுக்கு ஒப்பிடலாம். ஆலயத்திற்கு தான் ஒரு பங்கு பேரவை பொறுப்பாளராகவும், பக்த சபையில் பொறுப்பாளராகவும், வெறும் பதவிக்காக வருகின்ற கிறிஸ்தவர்கள். இத்தகைய கிறிஸ்தவர்கள் பாறையில் விழுந்த விதைகள். பாறையில் விழுந்த விதை என்ன ஆகிறது, உடனே முளைக்கிறது ஆனால் வெயிலின் காரணமாக அப்படியே கருகுகிறது மறைந்து போகிறது. இதற்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவைப் பின்பற்றிய சில மனிதர்களை உதாரணமாக சொல்லலாம். யோவான். 6:65-ல் அப்பத்தையும், மீன்களையும் 5000 பேருக்கு பகிர்ந்தளித்த பிறகு, இயேசுவைப் பின் தொடர்ந்த மக்கள் இயேசுவினுடைய வார்த்தைக்கு அல்ல, உணவுக்காக இயேசுவை பின்தொடர்ந்தார்கள். மாற்கு. 12:1-ல் இத்தகைய கிறிஸ்தவர்கள் தான், இயேசு தீய ஆவியை ஓட்டியதும் மகிழ்ந்தார்கள். ஆனால் இயேசுவினுடைய இறைவார்த்தைக்கு செவிமடுக்கவில்லை. இவர்கள் ஓசன்னா என்று பாடிய கிறிஸ்தவர்கள். ஆனால், அதே நாவால் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று முழங்கினார்கள்.
இவர்களெல்லாம் சுயநல கிறிஸ்தவர்கள் தங்களுக்கு ஒரு பதவி வேண்டும் என்று அலைகின்ற கிறிஸ்தவர்கள். இவர்கள் ஆலயத்திற்கு வருவார்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூட வருவார்கள், நன்மை வாங்குவார்கள், பக்த சபையில் இருப்பார்கள், பங்கு பேரவையில் இருப்பார்கள் ஆனால் இவை அனைத்தையும் தங்களுடைய வாழ்க்கையில் பெயர் எடுக்க, இவர்களுக்கு ஆதாயம் கிடைக்க, இவர்களுக்கு இது, பெயர், பதவி, பட்டம் தேவை என்று அலைகின்ற கிறிஸ்தவர்கள்.
நாம் இத்தகைய பதவி கிறிஸ்தவர்களாக இருக்கின்றோமா...
3. நன்கொடை கிறிஸ்தவர்கள்
சில விதைகள் மூட் செடிகளின் இடையே விழுந்தன. பூச்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டது. செடிகளுக்கிடையே விழுந்த விதைகளை, நாம் நன்கொடை கிறிஸ்தவர்ளுக்கு ஒப்பிடலாம். முட்செடியில் விழுந்த விதை முளைத்தது, ஆனால் மீண்டும் முட்செடிகள் வந்து அதை அப்படியே அமுக்கி விட்டது. விவிலியத்தில் இயேசுவின் சீடர்களை நாம் இத்தகையோருக்கு ஒப்பிடலாம். மத்தேயு. 26:14-ல் யூதாஸ் இஸ்காரியோத்து 30 வெள்ளிக் காசுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். மாற்கு. 14:66-ல் பேதுரு இயேசுவை மறுதலித்தது. இயேசுவை பின்பற்ற வேண்டிய இளைஞன் தன்னுடைய சொத்துக்கள் விற்கப்பட வேண்டும் என்பதால் அவரை பின்பற்றாமலே போகிறான். இவர்கள் யாவரும் நன்கொடை கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு வருவார்கள், அனைத்தையும் செய்வார்கள், மகிழ்ச்சியாக இருப்பார்கள் ஆனால் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு சோதனை ஏற்பட்டால், துன்பம் ஏற்பட்டால், இறைவனிடம் நான் பணம் கொடுத்தேன், நன்கொடை கொடுத்தேன், கோவிலுக்கு வந்தேன், எல்லாம் செய்தேன் ஆனால் ஆண்டவன் எனக்கு எதையும் செய்யவில்லை என்று இவர்கள் முழுவதுமாக இறைவனையே வெறுப்பார்கள். இத்தகைய நன்கொடை கிறிஸ்தவர்களாக நாம் வாழ்கின்றோமா….
4. வாழும் கிறிஸ்தவர்கள்
இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. நல்ல நிலத்தை நாம் வாழும் கிறிஸ்தவர்களுக்கு ஒப்பிடலாம். இத்தகைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ள விதத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல நிலம் என்பது தன்னை முழுவதுமாக கொடுப்பது, நல்ல நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும். அவர்கள் பன்மடங்காக விளைச்சலை கொடுப்பார்கள். இத்தகையோரை விவிலியத்தில் நாம் பார்க்கின்றோம், இவர்கள் நல்ல நிலமாக இருந்து, நல்ல விளைச்சலைக் கொடுத்த இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள். பழைய ஏற்பாட்டில் சாமுவேல், “ஆண்டவரே நீர் பேசும் நான் கேட்கின்றேன்” என்று தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தான். லூக்கா 1:38 இல் அன்னை மரியாள் “இதோ ஆண்டவருடைய அடிமை உம் வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்று தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். இறைவனுடைய விருப்பத்திற்கு பணிந்து நடந்ததால் அனைத்தையும் உள்ளத்தில் வைத்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அதனை தான் இறைமகன் இயேசு கிறிஸ்து “எவர் ஒருவர் தன்னுடைய வார்த்தையை கேட்டு அதன்படி வாழ்கின்றாரோ அவரே என் தாயும் சகோதரரும் சகோதரியும்” என்று கூறுகின்றார். லூக்கா. 19-இல் சக்கேயு இறைமகன் இயேசு கிறிஸ்துவை பெற்றவராக, இருந்த யாவற்றையும் பகிர்ந்து கொடுக்கின்றார். நல்ல நிலமாக மாறியவுடன் மிகுந்த விளைச்சலை பகிர்ந்து கொடுக்கின்றார்.
இன்றைய முதல் வாசகம் மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வந்தால், அது நிலத்தை நனைத்து முளை அரும்பி வளரச் செய்து விதைப்பவனுக்கும் பலருக்கும் உணவை கொடுக்காமல் ஒருபோதும் செல்வதில்லை, என்பதை நாம் பார்க்கின்றோம். இன்று அத்தகைய மழையை போல, பனிபோல, நாமும் நல்ல நிலமாக, மேன்மேலும் பல மடங்காக விளைச்சலை கொடுப்பவர்களாக மற்றவர்களை வாழ வைக்கின்ற ஒரு கிறிஸ்தவராக மாற அழைக்கப்படுகின்றோம். எனவே, இன்றைய நாளிலே நாம் சிந்தித்துப் பார்ப்போம். எத்தகை ஒரு கிறிஸ்தவர்களாக, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். திருவிழா கிறிஸ்தவர்களாக, நன்கொடை கிறிஸ்தவர்களாக, பதவி கிறிஸ்தவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா அல்லது அர்த்தமுள்ள ஒரு கிறிஸ்துவை வாழ்ந்து, அன்னை மரியாவை போல வாழும் கிறிஸ்தவர்களாக நாம் இருக்கின்றோமா சிந்தித்துப் பார்ப்போம். இறைவழியில் இறையருளை வேண்டி பக்தியாய் மன்றாடுவோம்.
|
|||||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.