உயிர்ப்பை நோக்கி பயணிக்க…
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவினுடைய உருமாற்ற நிகழ்வு தரப்பட்டிருக்கிறது. அவரது மகிமையையும் மற்றும் மாட்சியையும் வெளிப்படுத்துகின்ற மற்றும் உயிர்ப்போடு தொடர்புள்ள ஒரு நிகழ்வு, ஏன்? தவக்காலத்தில் நற்செய்தியாக கொடுக்கப்பட வேண்டும் என்று நான் சிந்தித்தேன். இதை ஆராய்ந்த போது இதன் பின்னணியில் இருந்த உண்மை எனக்கு புரிந்தது. மாட்சியையும் மற்றும் மகிமையையும் வெளிப்படுத்துகிற இயேசுவின் உருமாற்றம் நம்மை உயிர்ப்பை நோக்கி பயணிக்க அழைப்பு தருகிறது. உயிர்ப்பை நோக்கி பயணிக்கின்ற பொழுது அதில் வருகின்ற இடர்களையும் மற்றும் துன்பங்களையும் நாம் ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு மனநிலையையும் உருவாக்க அழைப்பு பெறுகின்றோம்.
சோதனை தந்த உடன்படிக்கை (ஆபிரகாம்)
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிரகாமுடன் உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றார். இது ஆபிரகாம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு அவருக்கு கீழ்ப்படிந்து நடந்ததன் பலன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறைவன் கொடுத்த ஒரே பரிசான தன்னுடைய மகனையே பலியிட தயாரானார், ஆனால் இறைவனே அதை நிறுத்தி அவரோடு உடன்படிக்கையை செய்கின்றார். தன் ஒரே மகனான ஈசாக்கை ஆபிரகாம் பலியிட தயாராவது (தொ.நூல் 22) மற்றும் தனது பலிக்காக சிறுவன் ஈசாக்கே விறகுகளை சுமந்து செல்வதும் (தொ.நூல் 22:6), தன்னுடைய ஒரே மகனான இயேசுவை இந்த உலகிற்கு பலியிட இறைவன் அர்ப்பணித்ததையும் மற்றும் தனது பலிக்காக அவர் சுமந்து சென்ற சிலுவையையும் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆபிரகாமின் வழி மரபில் பிறந்த (காலாத்தியர் 3:16) இயேசுவின் பாடுகள் உடன்படிக்கை என்னும் உயிர்ப்பை நோக்கி அழைத்து செல்கிறது. அவரில் நம்மை இணைய வைக்கும், உயிர்ப்பு என்னும் உடன்படிக்கையை இறைவனோடு நாம் பெற தவக்காலம் என்னும் பயணத்தில் துன்பம், கஷ்டம் மற்றும் சோதனை என்னும் சிலுவைகளை நாம் சுமந்து தான் ஆக வேண்டும்.
சிலுவை தந்த உயிர்ப்பு (இயேசு)
இயேசுவின் இந்த மாட்சிமிகு உருமாற்ற நிகழ்வு சீடர்களுக்கு அவருடைய மூன்றாம் நாள் உயிர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. அதாவது தான் சிலுவையில் அறையப்பட்டு இறந்தாலும் மீண்டும் மாட்சியோடு உயிர்ப்பேன் என்பதை அவர் முன்னறிவிக்கிறார். ஆனால் இந்த மாட்சியில் பங்கு பெற அவர்கள் சிலுவை துன்பத்தை தங்களது வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறார். அதனால் தான் பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" (லூக் 9:33) என்று அவர் சொல்லும் போது "இவரே என் மைந்தர், நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" (லூக் 9:35) என்று குரல் ஒலிக்கிறது. இது அவர் தன்னுடைய பாடுகளை மற்றும் சிலுவைச் சாவை முன்னதாக சீடர்களிடம் முன்அறிவித்ததை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது. இயேசுவின் உருமாற்றத்தின் போது மோசேயுடனும் எலியாவுடனும் பேசி கொண்டிருக்கும் போது எருசலேமில் நிகழவிருந்த அவரது இறப்பை பற்றி பேசி கொண்டிருந்தார்கள் (லூக் 9:31).
ஆக இயேசு தரும் உயிர்ப்பின் மாட்சியில் பங்கு பெற சீடர்கள் சிலுவை துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
இயேசு தனது உருமாற்றத்தின் வழியாக சீடர்களுக்கு உயிர்ப்பு என்னும் நம்பிக்கையை ஊட்டுகின்றார். இன்றைக்கு நமது வாழ்க்கையிலும் பல வேளைகளில் இயேசு நம்மை இந்த உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற பல்வேறு வகையில் நம்பிக்கை அளிக்கிறார். நமது வாழ்க்கையின் கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் நாம் மீண்டு வர, பல வேளைகளில் இறைவன் பலரின் வழியாக நமக்கு மீண்டும் மீண்டுமாக நம்பிக்கை அளித்து நம்மை ஆற்றுப்படுத்துகிறார். இதை நாம் நமது வாழ்க்கையில் உணர்ந்தவர்களாக வாழ்வோம். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த தவக்காலத்தில், நமது வாழ்வின் துன்பங்களோடு ஜெப மற்றும் தவ முயற்சிகளை அர்ப்பணிப்போம். அது நம்மை கிறிஸ்துவின் உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற அழைத்து செல்லும்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF