பொதுக்காலம் 23ஆம் வாரம்
(ஆண்டு- A)
06-09-2020
ஞாயிற்றுக்கிழமை
திருந்தியும் திருத்தியும் வாழ வைக்கும் அன்பு
பெர்லின் சுவர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி 1961 ஆம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியில் கட்டப்பட்டது. இந்தச் சுவர்தான் கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் 1961 இல் இருந்து 1989 வரை பிரித்திருந்தது. இந்த காலகட்டத்தில் மேற்கு ஜெர்மனி அதிகமாக வளர்ச்சி கண்டது. இதனால் கிழக்கு ஜெர்மனியில் உள்ளவர்களுக்கு கோபமும் வெறுப்பும் வந்தது. ஒரு முறை குப்பைகளை ஒன்று சேர்த்து பைகளில் கட்டி மூன்று மீட்டர் உயரமுள்ள பெர்லின் சுவரின் மறுபக்கம் மேற்கு ஜெர்மனியில் தூக்கி எறிந்தனர். இதனைக் கண்ட மேற்கு ஜெர்மனியை சார்ந்த மக்கள் சற்றே யோசித்தவர்களாய் தங்களிடமிருந்த நல்ல பழக்கங்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை ஒரு பையில் கட்டி அதனோடு ஒரு குறிப்பு காகிதத்தையும் வைத்து கிழக்கு ஜெர்மனியின் பக்கம் சுவற்றை தாண்டி வைத்தனர். இதனைக்கண்ட கிழக்கு ஜெர்மனியை சார்ந்த மக்கள் ஆச்சரியம் கொண்டனர். நாம் பகைமை உணர்வோடு குப்பைகளை தூக்கி எறிந்தோம், ஆனால் அவர்களோ நல்ல உணவுகளையும், பழங்களையும் நமக்குத் தந்திருக்கிறார்கள் என தங்கள் தவறை அவர்கள் உணர்ந்தார்கள். அப்போது அதிலிருந்த குறிப்பு காகிதத்தை எடுத்து வாசித்த பொழுது அதில் "நீங்கள் தந்தவற்றிற்கு நன்றி. எங்களால் எங்களிடம் இருப்பவற்றை தான் உங்களுக்கு தர முடிந்தது. இது உங்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறோம்" என எழுதி இருந்தது அதை வாசித்தவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்தார்கள். மேற்கு ஜெர்மனியை சேர்ந்த மக்கள் கோபம் கொண்டு ஏராளமான குப்பையை மறுபக்கம் போட்டிருந்தால் இவர்களுக்கிடையே இன்னும் பகைமை அதிகமாயிருக்கும், அங்கு உறவு வளர்ந்திருக்காது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இவர்கள் பிரிந்து இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அவர்களை திருத்த நல்ல பழக்கங்களை கொடுத்தார்கள். அவர்களிடையே பிற்காலத்தில் நல்லுறவு ஏற்பட்டது. இது அவர்களுடைய அன்பின் வெளிப்பாடு.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, தவறு செய்தவர்களை வெறுக்காமல் திருந்த செய்வதுதான் அன்பின் வெளிப்பாடு. இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்மை திருந்தியும் திருத்தியும் வாழ அழைப்பு தருகிறது அழைப்பு தருவது மட்டுமல்லாது அதுவே அன்பின் வெளிப்பாடு என்கிறது.
திருந்த செய்தல் என்பது அன்பின் செயல்பாடு:
பிறரையும் பகைவரையும் அன்பு செய்து வாழவைக்கும் இயேசு, இன்றைய நற்செய்தியில் அதற்கு செயல்வடிவம் கொடுக்க பிறர் செய்த குற்றத்தை சுட்டிக் காட்டி அவர்களை திருந்த செய்து அவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்த அழைப்பு தருகிறார். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அழைப்பாக தருகிறது. இத்தகைய அன்பை நாம் பிறர் மீது செலுத்தாவிடில் நாம் அனைவரும் கடன் பெற்றவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் பிறர் குற்றத்தை சுட்டிக் காட்டி அவரை திருத்தினால் நாம் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர்கள் ஆவோம். இன்றைய முதல் வாசகம் நாம் பிறர் குற்றத்தை சுட்டிக் காட்டாவிடில் அவர் சாவார் என்றும், அவரது இரத்தப்பழி நம்மை வந்து சேரும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆக நாம் திருந்தியும் பிறரை திருத்தியும் வாழ்வது இறை விருப்பம், இறைவன் கொடுத்த அன்புக் கட்டளையின் வெளிப்பாடு.
திருந்த செய்ய மூன்று முயற்சிகள்:
நம் சகோதர சகோதரிகளின் தவறை சுட்டிக்காட்ட இயேசு மூன்று விதமான முயற்சிகளை நமக்கு கற்றுத்தருகிறார்.
1. 1. சுய முயற்சி
2. 2. சாட்சிய முயற்சி
3. 3. சமூக முயற்சி.
1. சுய முயற்சி:
சுய முயற்சியால் இறைமகன் இயேசு கிறிஸ்து, நம்முடைய சகோதர சகோதரிகள் பாவம் செய்தால் அவர்கள் தனித்து இருக்கின்ற பொழுது அவர்களுடைய குற்றங்களை சுட்டிக்காட்டி அவர்களை திருந்த செய்ய வேண்டும் என்கின்றார். இதுவே நாம் சுயமாக தனிப்பட்ட முறையில் எடுக்கின்ற ஒரு முயற்சி இதைத்தான் லேவியர் 19 17-ல் "உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரை கடிந்து கொள்" என்று நம் சகோதர சகோதரிகள் பாவம் செய்கின்ற பொழுது அதைக் கடிந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று நமக்கு அழைப்பு தருகிறது.
2. சாட்சிய முயற்சி:
சுய முயற்சி தோல்வி அடைகின்ற போது சாட்சிய முயற்சி எடுக்க இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார். இரண்டு அல்லது மூன்று பேர் சாட்சிகளுடைய வாக்குமூலத்தில் நாம் ஒருவருடைய தவறை சுட்டிக் காட்டி, அவர் அதிலிருந்து மீண்டு திருந்தி வாழ அழைப்பு தர வேண்டும் என்று இறைவன் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார் . இதைத்தான் இணைச்சட்டம் 19:15-ல் "ஒருவனது எந்த குற்றத்தையும் எந்த பழி பாவச் செயலை உறுதி செய்ய ஒரே சாட்சி வாக்குமூலம் போதாது இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை நாம் அதை உறுதி செய்ய வேண்டும்' சாட்சிய முயற்சி நமக்கு இரண்டாவதாக தரப்படுகின்ற முயற்சி.
3. சமூக முயற்சி
இரண்டு முயற்சிகளும் தோல்வி அடைகின்ற போது மூன்றாவதாக சமூக முயற்சி எடுக்க இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்கு அழைப்பு தருகின்றார். நம் சகோதர சகோதரிகள் செய்த தவறை சுட்டிக் காட்ட நாம் சமூகத்தை நாடலாம் என்று இயேசு கூறுகின்றார். அதன் மூலமாக நாம் குற்றம் செய்தவரை தெரிந்து இறைவனை நோக்கி அழைத்து வர இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வழிவகை செய்கின்றது.
கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, செய்கின்ற தவறை சுட்டிக்காட்டி அவர்களை திருத்துவது என்பது இறைவனின் விருப்பம் அதுவே இறைவன் நமக்கு கொடுக்கின்ற அன்பு கட்டளை. குற்றம் செய்தவரை நாம் திருத்துவதன் மூலம் நாம் இறை உறவிலும் பிறர் உறவிலும் மென்மேலும் வளர்க்கின்றோம். பிறர் மீது நமக்கு உண்டான பொறுப்பை இது நமக்குச் சுட்டிக் காட்டி, அன்பை வெளிப்படுத்துகின்றது. ஒரு முறை சாக்ரட்டீஸிடம் “மனிதனுக்கும் மாட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்கின்ற பொழுது, மாடு மற்ற மாட்டின் மீது அக்கறை கொள்ளாது ஆனால் மனிதன் மற்றவர் மீது அக்கறை கொள்வான். அப்படி ஒரு மனிதன் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளாமல் வாழ்ந்தால், அவன் கொழுத்த பன்றி” என்கிறார். மனித வாழ்வே ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டு வாழ்வதுதான், அன்பு கொண்டு வாழ்வதுதான் உறவில் வளர்வது. நாம் ஒவ்வொரு முறையும் மற்றவருடைய தவறை சுட்டிக்காட்டி அவர்களை திருத்துவதன் மூலம் நாம் இறை அன்பில் மற்றும் பிறர் அன்பில் வளர்க்கின்றோம். இன்று நாம் நம்முடைய சமுதாயத்தில் நம்முடைய சகோதர சகோதரிகளுடைய தவறுகளை சுட்டிக் காட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய குடும்பங்களில் தந்தை தன் மகன் செய்கின்ற தவறை சுட்டிக் காட்டாமல் வளர்ப்பது. அவர் கோபப்பட்டு விடுவாரோ அவர் துன்பப்படுவாரோ என்று நாம் மற்றவர்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கணவன் மனைவி செய்த தவறையும், மனைவி கணவன் செய்கின்ற தவறையும் சுட்டிக் காட்டாமல் வாழ்வது, நண்பர்களுக்கிடையே ஒருவர் மற்றவர் செய்த தவறை சுட்டிக் காட்டாமல் வாழ்வது வளர்வது என்பது இன்று நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இது நம்முடைய சகோதர சகோதரிகளை அழிவின் பாதைக்கு நாம் நடத்துவதன் அடையாளம். நாம் அன்பை வெளிப்படுத்த தடையாக இருக்கும் பிறர் குற்றத்தை எடுத்துறைக்கா நிலை ஆகும். இன்றைய நாளில் இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்கு தருகின்ற இந்த மாபெரும் அழைப்பை ஏற்று நாம் திருந்தியும் பிறரை திருத்தியும் வாழ்வோம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
|
|
||||
|
|
|
|||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம். |