🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலம் 26-ஆம் வாரம்
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
ஞாயிற்றுக்கிழமை
நற்செய்தி: - மாற்கு 9: 38-43, 45,47-48
அவர் என்னை சார்ந்தவரா?
1.சாராதவர் என்னும் வேற்றுமை
இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் இயேசுவிடம், “போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” (மாற்கு 9:38) என வேற்றுமையை காட்டுகிறார். பிறர் நம்மை சாராதவர் என்று எண்ணுவது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் மன நிலையாக இருக்கின்றது. இவர்கள் மக்கள் முன்பாக தாங்கள் அனைத்தையும் அறிந்தவர்களாகவும், இறைவனின் திருச்சட்டத்தை சரியான முறையிலே கடைபிடிப்பவர்களாவும், தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, மற்றவர்களை அவற்றிலிருந்து சாராதவர்களாக பிரித்து பார்த்தார்கள். வேற்றுமை உணர்வோடு வாழ்ந்து வந்தார்கள். இன்று பல வேளைகளில் நாமும் மற்றவர்களை இதே மனநிலையோடு தான் பார்க்கின்றோம். இவர்கள் என்னைச் சார்ந்தவர் அல்ல என்று மற்றவர்களுடைய நிலையை கண்டு நாம் மதிப்பிடுகிறோம். நான் பணத்தால், படிப்பால், அதிகாரத்தால், அறிவால், சமுதாயத்தால், சமயத்தால் மற்றும் இனத்தால் உயர்ந்தவனாக இவன்/இவள் இதிலிருந்து என்னை சார்ந்தவனாக இல்லை என்று பலரை வேற்றுமை கண்ணோட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையிலிருந்து நாம் மாறுபட தான் இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது.
2. சார்ந்தவர் என்னும் ஒற்றுமை
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மறுமொழியாக, “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்" (மாற்கு 9:39,40) என ஒற்றுமையை காட்டுகிறார். இது தான் இயேசுவின் மனநிலையாக இருக்கின்றது. நான் எத்தகைய நிலையில் உயர்ந்தவனாக அல்லது தாழ்ந்தவனாக இருந்தாலும், எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் மற்றும் இந்நாட்டின் மக்கள் என்னும் உணர்வோடு ஒற்றுமையோடு எல்லோரும் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வதில் தான் அர்த்தமுள்ள வாழ்வு அமைகிறது. இன்று நான் இயேசுவைப்போல எல்லோரும் என்னைச் சார்ந்தவர்கள் என ஏற்றுக் கொள்கின்றேனா? சிந்தித்துப் பார்ப்போம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்”
எனும் குறள் மானுடத்தை விளக்குகிறது. பிறப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் சமமான ஒன்று. எனவே அவரவர் செய்கின்ற தொழில் வேறுபட்டாலும்; ஏற்றத் தாழ்வுகளால் சிறப்பென்று கூறயியலாது. மனித உடலில் பாயும் குருதியில் நிறமும், துன்பம் வருகின்றபோது விழிகளில் ஓடும் கண்ணீரின் சுவையும் யாவருக்கும் ஒன்றுதான். இதில் வேறுபாடு உள்ளதென்று எவரேனும் கூற இயலுமா? இல்லை, ஏனெனில் இதனை மறுப்பதற்கான சான்று எவரிடத்தும் இல்லை. இவ்வுண்மையை வள்ளுவன் தன் குறட்பா மூலமாக மனிதர்கள் தங்களது தொழிலால் வேற்றுமையடைந்து காணப்பட்டாலும், பிறப்பால் சமமானவர்கள் தான் தொழிற்காரணமாக சிறப்பியல் பினை அவர்கள் எய்திட முடியாது என்று கூறியுள்ளார். இதுதான் இன்றைய இறைவார்த்தையின் மையச் செய்தியாகவும் அமைகின்றது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இந்தியா என்று நாம் நம் நாட்டைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தாலும் அது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும். அனைவரும் என்னை சார்ந்தவர்கள் என ஏற்றுக் கொள்வதில் தான் இது அர்த்தமாகிறது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடியது வெறும் ஏட்டு சுரையாக்கி விடாமல் நடைமுறையில் பின்பற்றுவோம். இனத்தால், சமயத்தால் மற்றும் சமுதாயத்தால் வேறுபட்ட மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதே நம் வாழ்வு அவ்வாழ்வை முழுமையாக்குவோம். இறைவார்த்தையை வாழ்வாகுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF