பொதுக்காலம் 26ஆம் வாரம்
(ஆண்டு- A)
27-09-2020
ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கையின் காலியான வார்த்தைகள்
1859 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினான்காம் தேதி கனடா மற்றும் அமெரிக்கா நாட்டின் இடையே இருக்கின்ற நயகரா நீர்வீழ்ச்சியில் 160 அடி உயரத்தில் ஏறக்குறைய இந்த இரு நாட்டிற்கும் இடையே இருக்கின்ற 11,000 அடி நீளத்தில் ஒற்றை கயிற்றில் நடக்க போவதாக சார்லஸ் பிளான்டின் அறிவிப்பு கொடுத்தார். இவரால் எப்படி நடக்க முடியும்? இது எப்படி சாத்தியமாகும்? என்று பலரும் கேள்விகளை எழுப்பியவர்களாக இதனை கண்டு கண்டுகளிக்க வந்தார்கள். இவர் நடப்பாரா? கீழே விழுந்து இறந்து விடுவாரா? என்று ஆச்சரியத்தோடும், கேள்விகளோடும் இரு நாட்டின் மக்களும் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாட்டின் ஒரு கயிற்றின் முனையில் இருந்து நடக்க ஆரம்பித்தார் சார்லஸ் பிலான்டின். அவர் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வைக்க மக்களிடையே பலவிதமான உணர்வுகள் இருந்தது. இறுதியாக, அவர் தன்னுடைய முயற்சியின் பயனாக, அடுத்த நாட்டை சென்று அடைந்தார். அப்பொழுது அவர் மக்களை பார்த்து என்னால் இதை சாதிக்க முடியும் என்று உங்களால் நம்ப முடிகிறதா? என்று கேட்டார் அனைவரும் உங்களால் இது முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்கள். இப்பொழுதுதான் மீண்டும் இந்த நாட்டிலிருந்து அடுத்த நாட்டின் கரைக்கு இதே ஒற்றை கயிற்றில் செல்லவிருக்கிறேன், என்னால் முடியும் என நம்புகிறீர்களா? என்று கேட்டார். அனைவரும் நம்புகிறோம் என்று கூறினார்கள். இந்த முறை நான் யாரையாவது என்னுடைய தோள் மீது உட்கார வைத்து நடக்க இருக்கின்றேன். என்னால் செல்ல முடியும் என்று நம்புகிறீர்களா? என்று கேட்டார். அனைவரும் நம்புகிறோம் என்று கூறினார்கள். அப்படியானால் உங்களில் என் தோள் மீது உட்கார யார் தயாராக இருக்கிறார்கள் என்று கேட்டார். அணைவரும் அமைதியாக இருந்தனர். யாரும் அவர் தோள் மீது உட்கார வரவில்லை. இறுதியாக அவருடைய செயலர் ஸ்டோவ் அவர் மீது உட்கார, அவர் மீண்டும் வெற்றிகரமாக அடுத்த நாட்டை சென்றடைந்தார்.
ஆம் அன்பார்ந்தவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் இந்த மனிதர்களை போல பலவற்றை வார்த்தைகளால் பேசுகின்றோம் ஆனால் அதை நாம் செயலிலே வெளிப்படுத்துவதில்லை. உங்களால் முடியும், நாங்கள் நம்புகிறோம் என்று வாயாரப் பேசியவர்கள், உங்களில் யார் வருகிறீர்கள் என்று கேட்டவுடன் அமைதியாகி விடுகிறோம். இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையும், நம்முடைய வார்த்தைகள் வார்த்தைகளாகவே காலியாகவே இருக்கிறது. அது செயலில் வெளிப்படுத்தாமல் இருக்கிறது.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம் வாழ்வின் காலியான வார்த்தைகளை கண்டுணர அழைப்பு தருகின்றது. காலியான வார்த்தைகள் என்பது செயலற்ற வார்த்தைகள். நம் வாழ்க்கையில் வெறும் பேச்சளவில் நிறைந்து கிடக்கின்ற வாழ்க்கையிலே வெளிப்படாத வார்த்தைகள் காலியான வார்த்தைகளாகும். இன்றைய நற்செய்தியில் இளைய மகனின் வார்த்தை வெறும் வார்த்தையாகவே இருந்தது. அது செயலாக மாறவில்லை இளைய மகனின் அவ்வார்த்தைகள் காலியான வார்த்தைகளாகும்.
செயலச்ச காலியான வார்த்தைகள்
செயலற்ற காலியான வார்த்தைகள் வார்த்தையில் இருக்கும் ஆனால் செயலில் இருக்காது. பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் நாங்கள் இறைவனோடு இருப்போம் என்று வார்த்தை கொடுத்தார்கள் அது காலியாக மாறியது எனென்றால் அவர்கள் தங்களுடைய உடன்படிக்கைக்கு ஏற்றவாறு வாழவில்லை. இறைவனை விட்டு விலகி இருந்தார்கள். புதிய ஏற்பாட்டில் இயேசுவை பேதுரு மறுதலிக்க மாட்டேன் என்று கூறிய வார்த்தைகளும் காலியான வார்த்தைகளாக மாறியது ஏனென்றால் அவர் தன்னுடைய வார்த்தையை மீறி இயேசுவை மறுதலித்தார். இன்று நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் கொடுத்த வார்த்தைகளை மீறி நடக்கிறோமோ, அப்போது நம்முடைய வார்த்தைகளை வாழ்வாக்க மறுக்கின்றோம். நம்முடைய வார்த்தைகள் செயலற்று இருக்கும் போதெல்லாம் நம்முடைய வார்த்தைகள் காலியான வார்த்தைகளாகவே அமைகின்றன.
செயலுள்ள நிறைவான வார்த்தைகள்
செயலுள்ள நிறைவான வார்த்தைகள் செயலிலே வெளிப்படுகின்ற வார்த்தைகளாக அமைகின்றன. நம்முடைய வார்த்தைகள் செயல்வடிவம் பெறுகின்றன. பாவியான பெண் இயேசுவை விட்டு தன்னுடைய பாவத்தால் விலகி இருந்தாலும் அவர் இயேசுவோடு இணைகின்றார். இயேசுவினுடைய வார்த்தைகளை தன்னுடைய வாழ்க்கையாக மாற்றுகின்கிறார். பவுலடிகளார் இயேசுவினுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தன்னுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். அவர் தான் எதையெல்லாம் தன்னுடைய திருமடல்களில் எழுதினாரோ, அதையெல்லாம் தன்னுடைய வாழ்க்கையாக்கினார். அவருடைய வார்த்தைகள் நிறைவான வார்த்தைகள். அவருடைய வார்த்தைகள் செயலுள்ள வார்த்தைகள். நாம் எப்பொழுதெல்லாம் நம்முடைய வார்த்தைக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைக்கின்றோமோ, அப்போதெல்லாம் நம்முடைய வார்த்தைகள் செயலுள்ள நிறைவான வார்த்தைகளாக மாறுகின்றன.
ஆம் அன்பார்ந்தவர்களே, நாம் நம்முடைய வார்த்தைகளை வாழ்கின்ற பொழுது, எதை நாம் சொல்கின்றோமோ, அதை நாம் நம்முடைய வாழ்க்கையிலே செய்கின்ற பொழுது, நம்முடைய மனித மாண்பு மேன்மைப்படுத்தபடுகின்றது. மத்தேயு 17 :5-ல் இறைவன் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற பொழுது "இவருக்கு செவிசாயுங்கள்" என்று தந்தையாகிய கடவுள் கூறுவதைப் பார்க்கிறோம். யோவான் 2:1- 10 -ல் இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுவதற்கு அன்னை மரியாள் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று கூறுவதை பார்க்கின்றோம். எனவே நாம் சொல்வதை செய்பவர்களாக மாறுவோம்.
நாம் நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு, நம்முடைய பிள்ளைகளுக்கு, நம்முடைய பெற்றோர்களுக்கு, நம்முடைய கணவன் -மனைவிக்கு, நாம் கொடுக்கின்ற வாக்குறுதிகளை, வார்த்தைகளை நிறைவேற்றுகின்றோமா? வார்த்தைக்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்க்கையை அமைக்கின்ற போது, அதை நாம் நிறைவு செய்கின்ற போது, நம்முடைய வார்த்தைகள் செயலுள்ள, நிறைவான வார்த்தைகளாக மாறும். அதை நாம் பின்பற்றாத போது அது செயலற்ற காலியான வார்த்தைகளாக மாறுகிறது. நம்முடைய திருமுழுக்கின் போதும், நம்முடைய திருமணத்தின் போதும், நம்முடைய குருத்துவத்தின் போதும், துறவற வார்த்தை பாட்டின் போதும், நாம் கொடுக்கின்ற ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நாம் நினைத்துப் பார்ப்போம். அந்த வாக்குறுதிகளுக்கு ஏற்றவாறு என்னுடைய வாழ்க்கை அமைகின்றதா என்பதை சிந்தித்துப் பார்ப்போம். நாம் நம்முடைய வாக்குறுதிகளுக்கு ஏற்றவாறு, வார்த்தைகளுக்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்களாக மாறுவோம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
|
|
|
||||
|
|
|
|||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம். |