இடுக்கமான வாயில்
(சிலுவை, பொறுமை,
தாழ்ச்சி, இயேசு, மீட்பின் வழி)
முதல் வாசகம் : எசாயா 66: 18-21
இரண்டாம் வாசகம் : எபிரேயர்12: 5-7, 11-13
நற்செய்தி : லூக்கா 13: 22-30
இரண்டாம் வாசகம் : எபிரேயர்12: 5-7, 11-13
நற்செய்தி : லூக்கா 13: 22-30
கிரிக்கெட் மற்றும் கால்பந்து என முக்கியமான போட்டிகளை பார்க்க மைதானத்திற்கு செல்லுவதற்கும், வெளிநாட்டவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள் பங்கேற்கும் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் அரங்கிற்கு செல்லுவதற்கும் பொதுவாக ஒரே ஒரு வழியை ஏற்பாடு செய்வதில்லை. விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் செல்லுவதற்கு ஒரு வழியும், பார்வையாளர்கள் செல்லுவதற்கு மற்றொரு வழியும் என பல்வேறு விதமான மனிதர்களுக்கு ஏற்றவாறு பல வழிகள் அமைப்பதை நாம் அறிவோம். ஆனால் இறைவன் தரும் இறையாட்சிக்குள் நுழைய, அவர் தரும் மீட்பை பெற்றுக் கொள்ள நம் எல்லோருக்கும் ஒரே வழியாம் இடுக்கமான வாசல் மட்டுமே உள்ளது, அதில் நாம் நுழைய வருந்தி முயல அழைக்கப்படுகின்றோம். இன்றைய நற்செய்தியில் ஒருவர் இயேசுவிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” (13:23) என யூதர்கள் தான் கட்டளைகளை கடைபிடிக்கிறார்கள், அவர்கள் மட்டுமே மீட்பு பெற தகுதியானவர்கள், அதை இயேசுவே சொல்லட்டும் என்னும் விவிலிய பின்னணியில் கேட்கின்றார். ஆனால் இயேசு அவரிடம் எல்லோருக்கும் மீட்புக்கு ஒரே வழி "இடுக்கமான வாயில்" என்பதை எடுத்துரைகின்றார். இன்றைக்கு நாமும் நமது வாழ்வில் இடுக்கமான வாயில் வழியாய் நுழைய அதன் ஜந்து முக்கிய குணங்களை புரிந்து அதை தமதாக்க வேண்டும்.
1. சிலுவையின் வழி
2. பொறுமையின் வழி
3. தாழ்ச்சியின் வழி
4. இயேசுவின் வழி
5. மீட்பின் வழி
1. சிலுவையின் வழி
இடுக்கமான வாயிலில் எல்லோரும் அவ்வளவு எளிமையாக நுழைய முடியாது, மாறாக கஷ்டப்பட்டு தான் நுழைய இயலும். இறைவன் பயன்படுத்தும் உருவகமான இடுக்கமான வாயில் நம்மை சிலுவைகளை அதாவது நம் வாழ்வின் துன்பங்களை ஏற்றுக் கொள்ள அழைப்பு தருகிறது. அதனால் தான் இயேசு "என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின்பற்றட்டும்" என்கிறார். அதுமட்டுமல்லாது என்னோடு இந்த துன்பக்கிண்ணத்தில் பருகுவதற்கு தயாரா? எனவும் கேட்கிறார். இன்றைக்கு நமது வாழ்வில் நாம் மீட்பை பெற வாழ்வின் சிலுவைகளை அதாவது துன்பங்களை, அவமானங்களை, சோதனைகளை மற்றும் கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு இயேசுவே முன்னுதாரணமாக சிலுவை சுமந்து, பாடுகளை ஏற்று மற்றும் தன்னுயிரை தந்திருக்கிறார். இவையனைத்தும் இயேசு நம் ஒவ்வொருவருக்கும் சிலுவையின் வழியில் வாழ கொடுக்கும் அழைப்பாகும்.
2. பொறுமையின் வழி
பொறுமை கடலினும் பெரியது என்னும் சொல்லாடலுக்கு ஏற்றவாறு இடுக்கமான வாயில் நமக்கு பொறுமை என்னும் நற்குணத்தை கற்றுத் தருகிறது. இடுக்கமான வாயிலில் நாம் நினைத்தவுடன் எல்லோரும் நுழைந்து விட முடியாது. அதற்காக காத்திருந்து ஒருவர் ஒருவராக தான் செல்ல வேண்டும் மற்றும் முழுவதுமாக நம்மை தயாரிக்க வேண்டும். இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றுவதற்கு முன்பு தன்னுடைய தாயிடம் என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை என்கின்றார். மேலும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய சீடர்களிடம் தான் எருசலேம் செல்ல வேண்டும் மற்றும் பாடுகள் பட வேண்டும் என கூறும் போதெல்லாம் அவர் அதற்காக பொறுமையோடு காத்திருந்தது வெளிப்படுகிறது. இவ்வாறு இயேசு கல்வாரி மலையில் தன்னை சிலுவையில் அர்ப்பணித்து மானுடத்திற்கு மீட்பை அளிக்க முப்பத்து மூன்று ஆண்டுகள் காத்திருந்தார். மாறிவரும் இந்த மாய உலகில் எதுவும் துரிதமாக நடந்து விட வேண்டும் என எண்ணுகிறோம், ஆனால் பொறுமையாக காத்திருக்கும் போது நம் இலக்குகளை அடைய இயலும், குடும்பத்தின் பிரச்சனைகளை சரி செய்ய இயலும் மற்றும் நம் வாழ்வு வசந்தமாகும். எனவே பொறுமையோடு நம் நேரத்திற்காக விழிப்பாய் காத்திருப்போம்.
இடுக்கமான வாயிலில் பணிந்து மற்றும் குணிந்து தான் செல்ல இயலும், ஆக இடுக்கலான வாயில் என்னும் உருவகம் நம்மை தாழ்ச்சியோடு வாழ கொடுக்கும் அழைப்பாகும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கின்ற ஆலயத்தின் நுழைவு வாயிலானது மிக இடுக்கலான வாயிலாக கட்டப்பட்டிருக்கிறதாம். இது எல்லோரும் சிரம் தாழ்த்தி தாழ்ச்சி என்னும் குணத்தோடு இறைவனிடம் செல்வதற்காக அமைக்கப்பட்டதாம். இயேசு தன்னையே சிலுவையில் தாழ்த்தி நமக்கு மீட்பை கொடுத்தார். அன்னை மரியாள் "இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்." என தன்னை முழுவதுமாக தாழ்த்தினார். இன்றைக்கு நாமும் தாழ்ச்சி என்னும் ஆடையை அணிந்து இறைவன் அருளும் மீட்பை பெற்றுக் கொள்வோம்.
4. இயேசுவின் வழி
“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." (யோவான் 14:6) என்னும் வார்த்தைக்கேற்ப இயேசுவே நமக்கு வழியாக இருக்கிறார். அப்படியென்றால் அவரை பின்பற்றுகின்ற சீடர்களாக வாழ நாம் அழைப்பு பெறுகின்றோம். இங்கு இயேசுவின் வழி என்பது சீடத்துவத்தின் வழியாகும், இயேசுவை பின்பற்றும் சீடத்துவமே நமக்கு மீட்பை தரும்.
5. மீட்பின் வழி
இடுக்கலான வழி மீட்பின் வழியாகும், ஆக மேற்கண்ட நான்கு நற்குணங்களை கொண்டு இடுக்கலான வாயிலில் நுழையும் போது நாம் இறையாட்சிக்குள் நுழைகின்றோம், அவர் தரும் மீட்பை பெறுகின்றோம். அத்தகையோராய் வாழ்வோம்.
இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)