Friday, September 10, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 24-ஆம் வாரம் - ( ஆண்டு- B) - 12 -09-2021- ஞாயிற்றுக்கிழமை

   🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 24-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி: -மாற்கு 8: 27-35


..வாழ்வின் சிலுவைகளில் வாழ்வு..


            இரண்டாம் உலகப்போரின் போது கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர் தன்னுடைய மனைவியை பிரசவத்திற்காக அருட்சகோதரிகள் நடத்துகின்ற மருத்துவமனையில் அனுமதித்தார். அப்பொழுது அவருடைய மனைவிக்கு ஒரு அறையானது ஒதுக்கப்பட்டது, அந்த மருத்துவமனையின் அறையில்  சிலுவையானது தொங்கவிடப்பட்டிருந்தது. அதை பார்த்த அந்த மனிதர் அங்கிருந்த செவிலியரிடம் அந்த சிலுவையை  அறையிலிருந்து எடுக்க அல்லது அவர் மனைவிக்கு வேறு ஒரு அறை வழங்க கேட்டு கொண்டாராம். அவர் அவர்களிடம் பிறக்கப் போகின்ற தன்னுடைய குழந்தை துயரத்தின் அடையாளமான இந்த சிலுவையை பார்க்கக் கூடாது என்று கூறினார். அவர் வார்த்தைக்கு இணங்க, அவருடைய மனைவிக்கு வேறு ஒரு அறையானது கொடுக்கப்பட்டது. பின்பு அன்று இரவு அவர் மனைவிக்கு குழந்தை பிறந்தது, அப்போது அவர் அந்த செவிலியர்களிடம் குழந்தை எப்படி இருக்கின்றது என்று கேட்டார். அதற்கு  அவர்கள் குழந்தை நன்றாக இருக்கிறது, நீங்கள் ஆசைப்பட்டபடி உங்களுடைய குழந்தை துயரத்தின் அடையாளமான சிலுவையை மட்டுமல்ல, இந்த உலகத்தின் துயரங்களையும் ஒரு போதும் பார்க்கவே பார்க்காது. ஏனென்றால் உங்களுடைய குழந்தை பார்வையற்றதாக பிறந்திருக்கின்றது என்று கூறினாராம்.

   ஆம் அன்பார்ந்தவர்களே,  இந்நிகழ்வில் கண்ட கடவுள் நம்பிக்கையற்றவர் மட்டுமல்ல மாறாக கடவுள் நம்பிக்கை உள்ளவர் கூட இன்று தன்னுடைய வாழ்க்கையில் துயரத்திலிருந்து பயந்து ஓடுகின்றனர். எனக்கு துயரம் ஒரு போதும் வந்து விடக்கூடாது என்று நினைக்கின்றனர். இது தான் நம்முடைய சமுதாயத்தின் நிலை மற்றும் நமது நிலைப்பாடு, இத்தகைய ஒரு சமுதாய சூழலிலிருந்து நாம் விடுபட இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு கிறிஸ்து அழைப்பு விடுக்கிறார். நாம் அவரைப் பின்பற்றி, அவருடைய சீடராக மாற நம்முடைய வாழ்வின் துயரங்களை அதாவது சிலுவைகளை ஏற்று வாழ "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மாற்கு 8:34) என்று கூறுகின்றார். இதைத் தான் மற்றொரு பகுதியிலும், இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” (மத்தேயு 20:22) என்கின்றார். நமது வாழ்வின் துன்பத்தை அதாவது சிலுவைகளை ஏற்றுக்கொள்ள இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு தருகின்றது.

   இன்று நாம் எதிர்பார்ப்பதெல்லாம் துன்பமில்லாத ஒரு வாழ்வு, நம்முடைய வாழ்க்கையில் நாம் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைத் தான் நினைக்கின்றோம். ஆனால் நமது வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்த இரண்டு பக்க நாணயம் என்பதை நாம் உணர்ந்து பார்ப்பதே இல்லை. நம் வாழ்வின் சிலுவைகள்  வாழ்வு தருவதாக உள்ளது. ஆதாமிடம் இறைவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ அழைப்பு கொடுக்கின்றார். யோபு துன்பத்தை ஏற்று, அனைத்தையும் இழந்ததால் தான் இறைவனில் இணைந்தார்.  கோதுமை மணி மண்ணில் மடிந்தால் தான் மிகுந்த பலனை அளிக்கும் என்கிறார் இயேசு. ஊதாரி மைந்தன் உவமையில் இளைய மகன் துன்பத்தை எற்றவுடன் தான் வாழ்வை உணர்கின்றான்.இவையனைத்துக்கும் மேலாக இயேசுவின் சிலுவைச் சாவு நமக்கு பாவத்திலிருந்து விடுதலை கொடுத்தது. 

        கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, மெழுகு உருகுவதால் தான்  ஒளி கிடைக்கிறது. கல் உளி கொண்டு அடிபடுவதால் தான் சிற்பமாக மாறுகிறது. விதை மடிவதால் தான்   செடி வளர்கிறது. ஒவ்வொரு புது வாழ்வுக்கும்  சிலுவை என்னும் துன்பங்கள் அடித்தளமாக இருப்பதைப் பார்க்கின்றோம். புனித அல்போன்சா கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை என்னும் துன்பத்தை ஏற்றுக் கொண்டதால்,  கிறிஸ்துவின் சிலுவை துன்பத்தில் தன்னை இணைத்து கொண்டதால் திருஅவையில் புனிதையாக உயர்த்தப்பட்டு இருக்கின்றார். திருஅவையின் அனைத்து மறைசாட்சியர்ளும், புனிதர்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு நிலையில் துன்பத்தை வாழ்விலே உணர்ந்து ஏற்றுக் கொண்டதால் தான் அவர்கள் கிறிஸ்துவில் புது வாழ்வு பெற்றார்கள். 

        ஒருமுறை குருவானவர் ஜெப வழிபாட்டில் எல்லோரும் உங்களுடைய சிலுவையை உயர்த்திப் பிடியுங்கள் என்று கூறிய பொழுது, ஒருவர் மட்டும் தன்னுடைய மனைவியை தூக்கி பிடித்தாராம். அன்பார்ந்தவர்களே, நம்முடைய மனைவி, கணவர், பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள் நண்பர்கள், உற்றார் உறவினர்கள், எதிர் வீட்டுக்காரர்கள், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் என யாவற்றையும்  துன்பமாக நினைக்கின்றோம். நாம் அதனால் கிடைக்கின்ற புது வாழ்வைப் பெறாமலே போகின்றோம். நமது வாழ்க்கையில் எல்லோரும் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடைகள் நம்முடைய பொறுப்புகள் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் என்பதை நாம் உணர வேண்டும்.  இன்று நாமும் துன்பம் மனித வாழ்க்கையின் ஒரு அங்கம்,   இது எனக்கு புது வாழ்வைத் தரக்கூடிய ஒரு பயிற்சிப் பாசறை என்பதை உணர்கின்ற பொழுது நம்முடைய வாழ்வில் புது வாழ்வு உருவாகும். இதை நம்முடைய வாழ்க்கையில் உணர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


 அன்புடன் 

 அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF