Friday, May 7, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்காகாலம் 6-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 09-05-2021- ஞாயிற்றுக்கிழமை

                                            

                              🌱விவிலிய விதைகள்🌱   

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
( ஆண்டு- B)
- 09-05-2021-
 ஞாயிற்றுக்கிழமை




அன்பில் நிலைத்திருக்க...

                                                           
         இளைஞன் ஒருவன் தான் வாழ்க்கையில் எதை செய்தாலும் முன்னேற    முடியவில்லை, வெற்றி காண முடியவில்லை என வருத்தத்தோடு   இருந்தான். அவன் அருகிலிருந்த குருவிடம் சென்று தன்னுடைய வாழ்க்கையை பற்றி அவரிடம் எடுத்துக் கூறி, என்னுடைய வாழ்க்கையில் நான் வெற்றி காண்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்அதற்கு அந்த குருவோ, உன்னுடைய வாழ்க்கையில் உனக்கென்று ஒரு லட்சியத்தை வைத்துக் கொள், ஒரு இலக்கை வைத்துக்கொள். வாழ்வில் ஒவ்வொரு நாளும் எது நடந்தாலும் அந்த இலக்கிற்காக நீ முயற்சித்துக் கொண்டே இரு. ஒரு நாள் கூட அதை நீ கைவிடக்கூடாது, தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். உன் வாழ்வில் தொடர் தோல்விகள் வரலாம், ஆனால் நீங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினாராம். அந்த இளைஞன் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் பானை செய்து கொண்டிருந்த குயவனை கண்டான். இனிமேல் ஒவ்வொரு நாளும் நான் காலையில் உண்பதற்கு முன்பு  ஒரு குயவனை பார்ப்பேன் என்பதை   லட்சியமாக கொண்டான். அதே போல ஒவ்வொரு நாளும் அவன்  ஊரில்  ஒரு குயவனை பார்த்து விட்டு தான் சாப்பிட்டான். இது ஒரு பெரிய      இலட்சியமாக பலருக்கும் தெரியவில்லை, ஆனால் குரு ஒரு லட்சத்தை    எடுத்து, அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் செய்ய சொல்லி இருக்கின்றார் என்பதை அவன் நினைவில் கொண்டு அதை செய்து கொண்டே இருந்தான். சில நாட்களில் யாரையும் பார்க்க முடியாமல்   தவித்தான், அருகிலிருந்த ஊர்களுக்குச் சென்று அங்கிருந்தவர்களை  பார்த்தான். சில மாதங்கள் கழிந்தனஒரு நாள் குயவன் யாரையும் அவனால் பார்க்க முடியவில்லை, மதியம் ஆகிவிட்டது, அவனுக்கோ  பயங்கர பசி, இருந்தாலும் நான் என்னுடைய லட்சியத்தை கைவிட  மாட்டேன் என கூறி  குயவனை தேடி காட்டுப் பகுதிக்கு சென்றான். அங்கு யாராவது பானை செய்ய மண் எடுத்துக் கொண்டிருப்பார்கள் என நினைத்து தேடினான். அங்கு ஒருவன் பள்ளமான பகுதியில் வைரங்களை வெட்டி எடுத்து  கொண்டிருந்தான். அவன் எடுப்பது வைரம் என அறியாமல், மண் தான் எடுக்கின்றான் என்று நினைத்துக் கொண்டு, குயவனை பார்த்த மகிழ்ச்சியில், நான் பார்த்துவிட்டேன்...பார்த்துவிட்டேன்... என்று மிக சந்தோஷமாக கத்தினான். உடனே அந்த மனிதர் மேலே வந்து, அவனுடைய வாயை அடைத்துகத்தாதே நான் எடுப்பது வைரம் என நம் இருவர் தவிர யாருக்கும் தெரியாது, இருப்பதை நாம் சரிசமமாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினாராம். அந்த இளைஞனுக்கோ மிகுந்த மகிழ்ச்சி, இல்லாத ஒன்றை இலட்சியமாகக் கொண்டு, அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தவனுக்கு மிகப் பெரிய பணக்காரனாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆம், நம்முடைய வாழ்க்கையில் நாம் எதைச் செய்தாலும், அச்செயலில் நிலைத்திருக்க வேண்டும், தொடர்ந்து அதை செய்ய வேண்டும். இதை போலவே நம்முடைய வாழ்க்கையில்  ஒவ்வொரு நாளும், என்றுமே தொடர்ந்து இறைவனில் மற்றும் நம் உறவுகளிடத்தில் அன்பில் நிலைத்திருக்க இன்றைய இறைவார்த்தை வழிபாடு அழைப்பு தருகின்றதுபல்வேறு காலகட்டத்திலே, பல விதமான பணிகளை  செய்கின்ற நாம் அதிலே ஒரு நாளும் நிலைத்திருப்பது இல்லை. நாம் நம்முடைய வாழ்க்கையில் எடுக்கின்ற முடிவுகள், செயல்பாடுகள் மற்றும் இலக்குகள் அனைத்தும் சிறிது நாட்களே நம்மில் நிலைத்திருப்பதை பார்க்கின்றோம். நாம் எதைச் செய்தாலும், இறுதி வரை நிலைத்திருக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நம்முடைய உறவுகளிடத்தில் நாம் காட்டுகின்ற அன்பில் நிலைத்து நிற்க வேண்டும். அதற்காக தான் இறைமகன் இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் இன்றைய நாளிலே இறைவார்த்தையின் வழியாக அழைப்பு தருகின்றார். வாழ்வின் மகிழ்வான மற்றும் துன்பமான தருணங்களிலும், குறிப்பாக எல்லா சூழலிலும் இறைவனுடைய அன்பில் நிலைத்திருக்க  அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகம் இறைவனுடைய அன்பில் நிலைத்திருக்க அவர் அன்பைப் பற்றிய ஐந்து விதமான பண்புகளை நமக்கு எடுத்துரைக்கின்றது

1. மாறாத அன்பு (யோவான்.15: 9)
2. மகிழ்ச்சி தரும் அன்பு (யோவான்.15:11)
3. தியாக அன்பு (யோவான்.15:13-14)
4. கனிதரும் அன்பு   (யோவான்.15:16)
5. நண்பர்களாக்கும் அன்பு  (யோவான்.15:13-14)

1. மாறாத அன்பு  (யோவான்.15: 9)

           படைப்பின் தொடக்கம் முதல் இன்று வரை நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடமும் இறைவன் நம்மீது காட்டுகின்ற அன்பு மாறாத அன்பாக இருக்கின்றது. எத்தகைய ஒரு சூழலிலும் இறை அன்பில் நிலைத்திருக்க நாம் அழைக்கப்படுகின்றோம்இறைவனுடைய அன்பு மாறாத அன்பு ஏனென்றால் இது நம்மை படைத்த, உருவாக்கிய, நம்மை ஒவ்வொரு நாளும் காத்து, மற்றும் வழி நடத்திக் கொண்டிருக்கின்ற அன்பு. அதனால் தான் கடவுள் முதன் முதலாக மனித குலத்தைப் படைத்த பொழுது அதன் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். அதே மனித குலம்  கடவுளை வெறுத்த போதும் அவரை விட்டு பிரிந்த போதும் இறை அன்பு மாறாமல் இருந்தது. அதனால் தான் தன் மக்களுக்காக ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோசேப்பை அழைத்தார். தன்னுடைய மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த பொழுது, அவர்கள் மீது கொண்ட அன்பின் நிமித்தமாக  மோசேயை அழைத்து, அவர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, நீதித்தலைவர்கள், அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக இறைவன் அவர்களை மிக அதிகமாகவே அன்பு செய்தார், ஆனால் மனிதனுடைய அன்பு மாறுகின்ற அன்பாக இருக்கின்றது. தனக்கு தேவையானது கிடைக்காத போது, நினைத்தது நடக்காத போது  அன்பு மறுக்கப்படுகின்றது. இறைவனுடைய அன்பு என்றும் மாறாது அதனால் தான் தன்னுடைய ஒரே மகனை இந்த மண்ணுலகிற்கு அனுப்பி, அன்று முதல் இன்று வரை என்றுமே  அன்பில் நிலைத்திருந்து, அதே அன்பில் நம்மையும் நிலைத்திருக்க அழைப்பு தருகின்றார்.

2. மகிழ்ச்சி தரும் அன்பு (யோவான்.15:11)

இறைவனுடைய அன்பிலே நாம் நிலைத்திருக்கின்ற போது அங்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்பதை தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சொல்கின்றது. நாம் ஒவ்வொருவரும்  மகிழ்ச்சியில் நிலைத்திருக்க இறைவனோடு நாம் கொண்டிருக்கும் உறவின் அன்பில்  முழ்கியிருக்க வேண்டும். தொடக்க நூலில் முதல் பெற்றோர்கள் ஏதேன் தோட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்தார்கள் ஏனென்றால் அவர்கள் இறை பிரசன்னத்தின் அன்பில் நிலைத்திருந்தார்கள். தாவீது ஆண்டவரின் பேழையின் முன்பாக நடனம் ஆடி மகிழ்ந்தார் ஏனென்றால் இறை பிரசன்னத்தின் அன்பில் தாவீது  நிலைத்திருந்தான்(2 சாமு. 6:16). சீடர்கள் இறைமகன் இயேசு கிறிஸ்துவோடு இருந்த பொழுது எவ்வித பயமுமின்றி மகிழ்வோடு இருந்தார்கள். இயேசுவினுடைய இறப்புக்கு பிறகு தான் அச்சத்தில்  அறையினுள் முடங்கிக் கிடந்தார்கள் மற்றும் எருசலேம் நகரை விட்டு சென்றார்கள். இயேசுவின் பிரசன்னம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது ஏனென்றால் அவர்கள் அவர் அன்பில் நிலைத்திருந்தார்கள்இயேசுவினுடைய அன்பிலே நாம் நிலைத்திருக்கின்ற போது நம்முடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி கிடைக்கும்.

3. தியாக அன்பு (யோவான்.15:13-14)

              "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்".(யோவான் 3:16) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்திலே நாம் உணர்வது இறைவன் நம்மீது கொண்டிருக்கின்ற அன்பின் நிமித்தமாக தன்னுடைய ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். அதனுடைய உச்சக்கட்டத்தின் வெளிப்பாடு தான் அவர் தன் உயிரையே நமக்காக அர்ப்பணித்தது. அதுவே அவரது  தியாக அன்பின் வெளிப்பாடு, அவர் இறை நிலையிலிருந்து மனித நிலைக்கு வந்து  பாடுகள் பட்டு சிலுவையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இறந்ததன் அடையாளம்.
"கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.(எபேசியர் 2:4,5)
எனும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இறைவன் நம்மீது இரக்கம் கொண்டு, அன்பு செலுத்தி அந்த அன்பின் நிமித்தமாக நாம் உயிர் பெற்று எழ, மீண்டும் பிறக்க, அவருடைய அருளைப் பெற்றுக் கொள்ள, அதன் வழியாக அவருடைய பிள்ளைகளாக நாம் ஒவ்வொரு நாளும் வாழ நமக்கு வழிவகை செய்திருக்கிறார்.

4. கனிதரும் அன்பு   (யோவான்.15:16)

       "நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்." (யோவான் 15:16) எனும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில் இறைவன் நம்மை தேர்ந்தெடுத்து, நம்மை ஒவ்வொரு நாளும் காத்து வழிநடத்தி, அவருடைய அன்பின் நிமித்தமாக நாம்  வளரவும், வளர்ந்து பிறருக்கு கனி தரவும், குன்றின் மீது ஏற்றப்பட்ட விளக்கைப் போல எங்கும் பிரகாசிக்கவும் இறைவனுடைய அன்பு அடித்தளமாக அமைகிறது. இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும் பொழுது நாம் மட்டும் அல்ல, நம்முடைய வாழ்வும்  என்றும் நிலைபெற்றிருக்கும். புது அர்த்தம் பெறும், மிகுந்த பலன் அளிக்கும், கனி கொடுக்கின்ற அத்தி மரங்களாக வாழ்வதற்கு வழி வகுக்கும் மற்றும் இறைவனில் நாம் என்றும் நிலைத்திருக்க உதவும்.


5. நண்பர்களாக்கும் அன்பு  (யோவான்.15:13-14)

           "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை."(யோவான் 15:13) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இயேசு தன்னுடைய சீடர்களை நண்பர்கள் என்று அழைப்பதோடு மட்டுமல்லாது நண்பர்களுக்காக எதையும் கொடுக்கக் கூடிய அன்பை அவர் முன் வைக்கின்றார். அதாவது இயேசுவினுடைய அன்பில் நிலைத்திருக்கும் போது நீங்கள் என்னுடைய சீடர்களாக மட்டுமல்லாது நண்பர்களாயும் இருப்பீர்கள் என்று கூறுகின்றார். இந்த உலகத்தில் பல வேளைகளில் மிகப்பெரிய அன்பாக, உறவாக, நட்பானது சுட்டிக்காட்டப்படுகின்றது. அழிந்து போகின்ற மனித வாழ்விலே நட்பை பெரிதாக என்னுகின்ற போது இயேசுவினுடைய அன்பில் நாம் இணைந்து இருப்போம்இறை நட்பு நம்முடைய வாழ்வின் வசமாகிறதுஇயேசுவின் உறவில் இணைந்து, அவர் அன்பில் நிலைத்திருந்து இயேசுவினுடைய நண்பர்களாக நாம் மாறுவதற்கு தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

                இயேசுவினுடைய இந்த ஐந்து  விதமான அன்பின் பண்பு நலன்களை நாம் நமது வாழ்க்கையில் உணர்ந்து அவர் அன்பில் நிலைத்திருக்க அழைக்கப்படுகின்றோம். இறைவனுடைய இத்தகைய அன்பில் நாம் நிலைத்திருக்க இரண்டு செயல்பாடுகளை செய்ய இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகின்றது.

1. கட்டளைகளை கடைபிடித்தல் (யோவான் 15:10)
2. ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருத்தல் (யோவான் 15:17)

      இயேசுவினுடைய அன்பில் நாம் நிலைத்திருக்க அவர் நமக்குத் தரக்கூடிய கட்டளைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். இயேசு தருகின்ற அன்பு கட்டளையை நாம் ஏற்றுக் கொள்கின்ற போது அவர் அன்பில் நிலைத்திருப்போம். ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருத்தல் என்பது இயேசுவினுடைய அன்பில் நிலைத்திருக்க இயேசு நமக்கு காட்டும் வழி. நமது சகோதர சகோதரிகள் மற்றும் நம் உடன் வாழ்கின்றவர்கள் மீது நாம் அன்பு காட்ட வேண்டும்.   இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க இறைவார்த்தையின் வழியாக இறைவன் நமக்கு காட்டும்  இரண்டு செயல்பாடுகளையும் தமதாக்கி கொள்வோம். அவர் அன்பின் பண்பு நலன்களை உணர்வோம், தொடர்ந்து அவர் வழியில் வாழ்வோம். இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.


அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்