முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 32: 7-11, 13-14
இரண்டாம் வாசகம் : 1 திமொத்தேயு 1: 12-17
இரண்டாம் வாசகம் : 1 திமொத்தேயு 1: 12-17
நற்செய்தி : லூக்கா 15: 1-32
Start with Why என்னும் ஆங்கில புத்தகம் Simon Sinek என்பவரால் எழுதப்பட்டது. இவர் இந்த புத்தகத்தில் மனிதன் சாதனையாளனாக மாறுவதற்கு Golden Circle அதாவது தங்க வளையம் என்னும் ரகசியத்தை கூறுகிறார். இவர் விமானம் கண்டுபிடிக்காத காலத்தில், Dong Lee என்பவர் அதை கண்டுபிடிப்பதற்காக முயற்சி எடுத்ததாகவும் மற்றும் அவருக்கு பல பெரிய நிறுவனங்கள் உதவி செய்ததாகவும் ஆனாலும் அவர் முயற்சி தோல்வி அடைந்து, அதே சூழலில் வாழ்ந்த ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்ததற்கு காரணம் இந்த ரகசியத்தை அறிந்ததே ஆகும் என்கிறார். அதுமட்டுமல்லாது ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தங்களுடைய இலக்கிலே வெற்றி கண்டதற்கு காரணம் இந்த ரகசியம் தான் என்கிறார். What? how? why? அதாவது என்ன? எப்படி? மற்றும் ஏன்? என இந்த கேள்விகளை நாம் கேட்பதில் இரண்டு அணுகுமுறைகள் உண்டு. Outside In என்பது முதல் அணுகுமுறை அதாவது வெளியிருந்து உள்ளே மற்றும் Inside out என்பது இரண்டாவது அணுகுமுறை அதாவது உள்ளிருந்து வெளியே. சாதனையாளர்கள் எப்போதும் இரண்டாவது அணுகுமுறையை அதாவது ஏன்? என்னும் கேள்வியில் தொடங்கி என்ன? என்னும் கேள்வியில் தங்கள் இலக்குகளை வைக்கிறார்கள் என்கிறார். இத்தகைய அணுகுமுறையை பயன்படுத்தாதவர்கள் தங்களது வாழ்வின் இலக்குகளையும், தங்களது வாழ்வையும் காணாமல் போகச் செய்கிறார்கள் என்கிறார் சைமன் ஸ்னீக்.
நமது வாழ்க்கையிலும் நாம் பல இலக்குகள் மற்றும் நோக்கங்களை கொண்டு வாழ்கின்றோம் ஆனால் அதில் நாம் வெற்றி காண முடிவதில்லை. ஏனெனில் இவற்றை ஏன் செய்கின்றோம்? எப்படி செய்கின்றோம்? மற்றும் என்ன செய்கின்றோம்? என அறியாமலே செய்து கொண்டிருக்கின்றோம். இதனால் நம்முடைய இலக்குகள் மட்டுமல்லாது நமது வாழ்வே காணாமல் போய் விடுகிறது. இன்றைய இறைவார்த்தை இறைவனை, இறையாட்சியை மற்றும் கிறிஸ்தவ வாழ்வு என்னும் நோக்கத்தை விட்டு காணாமற் போன நம் வாழ்வை கண்டறிந்து மகிழ்ச்சி கொள்ள அழைப்பு தருகிறது. குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகம் காணாமல் போன நம் வாழ்வை கண்டறிய மூன்று விதமான உவமைகளை குறிப்பிடுகின்றது. இந்த மூன்று உவமைகளும் மூன்று முக்கியமான பகுதிகளை கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்.
1. காணாமற்போதல்
2. தேடுதல்
3. மகிழ்தல்
1. காணாமற்போதல்
நற்செய்தியின் மூன்று உவமைகளிலும் ஏதோ ஒன்று காணாமல் போயிருக்கின்றது. ஏன் இவைகள் காணாமல் போய் இருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது, காணாமல் போன ஆடு தனது குறிக்கோளிலிருந்து விலகி சென்றிருக்கின்றது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெளியே இருப்பதால் கவர்ந்து இழுக்கப்பட்டு இருக்கின்றது. தன்னுடைய ஆயனின் சொல்லை கேட்காமல் இருந்திருக்கின்றது. தன்னுடன் இருக்கும் ஆடுகளோடு இணைந்திராமல் தனிமையில் இருந்திருக்கின்றது. எனவே தான் அது காணாமல் போயிருக்கின்றது. காணாமல் போன திராக்மாவை கொண்டு வந்த நபர் கவனக் குறைவாக இருந்திருக்க வேண்டும். வேறு எதற்கோ முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அந்த வீடு சுத்தமில்லாததாக மற்றும் இருளாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அந்த திராக்மா காணாமல் போய் இருக்கின்றது. ஊதாரி மைந்தன் உவமையிலே இளைய மகன் பண ஆசை மிகுந்தவனாக இருந்திருக்கின்றான், ஆசையால் கவர்ந்து இழுக்கப்பட்டு, நண்பர்களின் பேச்சைக் கேட்டு தன்னையே மற்றும் தனது வாழ்வையே காணாமல் போக செய்திருக்கின்றான். தந்தைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்காமல் இருந்திருக்கின்றான், தந்தையின் அன்பை உணராமல் இருந்திருக்கின்றான், யாரை சார்ந்து இருக்க வேண்டுமோ அவர்களை சார்ந்து இராமல், பிறரை சார்ந்து இருந்திருக்கின்றான். இவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எதை சார்ந்து இருக்க வேண்டுமோ அதை சார்ந்து இராமல், ஆசையால் வெளியே உள்ளதில் கவர்ந்திழுக்கப்பட்டு, பாவத்தில் விழுந்து இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு நமது கிறிஸ்தவ வாழ்விலும் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்த உலகத்தின் மீது மற்றும் உலகப் பொருட்களின் மீது ஆசை கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நம்மை, நம்முடைய இலக்குகளை மற்றும் கிறிஸ்தவ வாழ்வை காணாமல் போக செய்திருக்கின்றோம். இன்றைக்கு இறைவனை மறந்து, இறைவன் தருகின்ற இறையாட்சியை மறந்து மற்றும் கிறிஸ்துவ வாழ்வை மறந்து, மண், பெண், பொன் மற்றும் பொருளின் மீது ஆசை கொண்டு நம் வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றோம். ஆசைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு நல்ல குடும்ப வாழ்வை, பிள்ளைகளோடு இருக்க வேண்டிய உறவை காணாமல் போக செய்து கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு நான் என்னுடைய வாழ்க்கையிலே எப்படி இருக்கின்றேன்? எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்? இறைவனுக்கும் இறைவன் தந்த அன்பான வாழ்விற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் பொருளுக்கும், பொண்ணுக்கும் மற்றும் மனித ஆசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேனா? சிந்திப்போம்.
2. தேடுதல்
இயேசு கூறும் இந்த மூன்று உவமைகளிலும் காணாமல் போனவற்றை தேடுகின்ற நிலையை பார்க்கின்றோம். காணாமல் போன ஆட்டினை ஆயன் தேடுகின்றான். அதை கண்டுபிடிக்கும் வரை தேடிச் செல்கின்றான். தன்னிடையே இருந்த மீதமுள்ள 99 ஆடுகளையும் விட்டு விட்டு தேடுகின்றான். காணாமல் போன திராக்மா உவமையிலே விளக்கு ஏற்றி தேடுகிறாள், இருளான வீடு இங்கு விளக்கால் ஒளி ஏற்றப்படுகின்றது. அசுத்தமாக இருந்த வீடு கூட்டி சுத்தம் செய்யப்படுகிறது. அப்பெண் மிக கவனமாக அதைத் தேடுகின்றார். ஊதாரி மைந்தன் உவமையிலே இளைய மகன் தான் தொலைத்த வாழ்வை தானே தேடுகிறான். தன் நிலையை உணர்கின்றான், தந்தையின் அன்பை புரிந்து கொள்கின்றான். தன் துன்பத்தை, தனிமையை, பசியை மற்றும் அடிமை வாழ்வை உணர்கின்றான். நாமும் நம்முடைய வாழ்வை காணாமல் போக செய்திருந்தால் அதை தேட முயற்சிக்க வேண்டும். இறைவன் தரும் அன்பு வாழ்வை நோக்கி செல்ல வேண்டும். என்னுடைய குடும்ப வாழ்வை காணாமல் போக செய்திருந்தால், அந்த மகிழ்வான குடும்பத்தை நோக்கி செல்ல வேண்டும். இறைவனை மற்றும் இறைவன் தந்த அழகான கிறிஸ்தவ வாழ்வை நான் காணாமல் போக செய்திருந்தால், மீண்டும் அதை தேடி வந்து கண்டு கொள்ள வேண்டும்.
3. மகிழ்தல்
இந்த மூன்று உவமைகளிலும் காணாமல் போனவற்றை தேடி கண்டடைந்த பிறகு மகிழ்ச்சி ஏற்படுவதை பார்க்கின்றோம். தன்னுடைய ஆட்டை கண்டறிந்த ஆயன் மகிழ்ச்சியோடு அந்த ஆட்டை தோள்மீது போட்டுக் கொண்டு, வீடு வந்து, தன்னுடைய சக நண்பர்களை மற்றும் உறவுகளை அழைத்து மகிழ்ந்து கொண்டாடுவதை பார்க்கின்றோம். காணாமல் போன திராக்மாவை கண்டறிந்த பிறகு அப்பெண் அண்டை வீட்டாரை அழைத்து தன்னிடம் இருப்பவற்றை பகிர்ந்து மகிழ்வதை பார்க்கின்றோம். ஊதாரி மைந்தன் உவமையிலே மகனை கண்ட தந்தை மகிழ்ந்து, கொழுத்த கன்று அடித்து மகிழ்வதை பார்க்கின்றோம். ஆக இங்கு காணாமல் போனவை மீண்டும் கண்டறியப்படுவது மகிழ்வை தருகின்றது. இன்றைக்கு நாமும் நம்முடைய வாழ்க்கையிலே இறைவன் தருகின்ற அந்த நிலையான மகிழ்ச்சியை பெற வேண்டுமென்றால் காணாமல் போன நம் வாழ்வை மீண்டும் தேடுவோம். அப்பொழுது நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமல்லாது அழகான கிறிஸ்தவ வாழ்வு, அன்பான குடும்பம், சகோதரத்துவம், பகிர்வு மற்றும் மன அமைதி எல்லாம் நிரந்தரமாக கிடைக்கும்.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிற தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாவ வாழ்க்கையை வாழ்ந்தது போல, நாம் வாழாது இறைவனை தேடி அவரே எல்லாம் என அவர் பாதம் பணிவோம். இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் கூறுவதைப் போல நாம் நம்முடைய வாழ்க்கையிலே பாவத்தை விட்டு விட்டு இறைவனை நமது சொந்தமாக்குவோம், அவர் தருகின்ற அழகிய வாழ்வை பெற்றுக் கொள்ளுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)