மே மாதம் - 8ஆம் தேதி.
பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம்
நற்செய்தி: யோவான் 14: 1-6
கிறிஸ்துவே நம் வழி
(இயேசுவை பின்பற்ற விரும்பிய நான்கு விதமான மனிதர்கள்)
"101 ways to live your life" அதாவது "உங்கள் வாழ்வை வாழ 101 வழிகள்" எனும் ஆங்கில புத்தகத்தை எழுதியவர் செலஸ்தீன் சுவா. நாம் எப்படியெல்லாம் நம்முடைய வாழ்க்கையை வாழ வேண்டுமென 101 வழிகளை இவர் இந்த புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இவ்வாறு பலரும் பல வழிகளை குறிப்பிடுகிறார்கள். சாதாரணமாக ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தெரிந்த வழி இரண்டே இரண்டு தான், ஒன்று நல்ல வழியில் வாழ வேண்டும், மற்றொன்று கெட்ட வழியில் வாழ வேண்டும். எவை எப்படி இருந்தாலும் கிறிஸ்தவர்களாகிய நமக்கு இன்றைய நற்செய்தி ஒரு உன்னதமான வழியை காட்டுகிறது. அதுதான் கிறிஸ்து என்னும் வழி.
யோவான் 14: 6 "வழியும் உண்மையும் வாழ்வும் நானே என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என இயேசுவே நம் வாழ்க்கைக்கான வழி, இயேசுவே தந்தையாம் கடவுளை பின்பற்றுவதற்கான வழி, அவர் சென்ற வழியே நம் வழி. அவ்வழியே உண்மைக்கும் வாழ்வுக்கும் கூட்டி செல்லும் வழி. இயேசுவைப் பின்பற்ற விரும்பிய மனிதர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
1. பின்னோக்கி பின்னேறிய மனிதர்கள்:
மத்தேயு 19 :21- 22 -ல் இயேசுவை பின்பற்ற விரும்பிய ஒரு இளைஞன், உன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஏழைகளுக்கு கொடுத்து விட்டு வா என்று கூறியவுடன் அவன் பின்னோக்கி பின்னேறிய மனிதனாக மாறுகிறான்.
2. முன்னோக்கி பின்னேறிய மனிதர்கள்:
மத்தேயு 27 :5 இயேசுவின் சீடராக அவரோடு முன்னோக்கிச் என்ற யூதாஸ் இஸ்காரியோத்து இயேசுவையே காட்டிக்கொடுத்து முன்நோக்கி பின்னேறிய மனிதராக மாறுகின்றார்.
3. முன்நோக்கி சந்தேகித்த மனிதர்கள்:
யோவான் 14: 5 தோமா "ஆண்டவரே நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்கு தெரியாது, அப்படி இருக்க நீர் போகும் இடத்திற்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்" என்று முன்னோக்கி இயேசுவோடு சென்றாலும் சந்தேகித்த மனிதனாக தோமா விளக்குகின்றார்.
3. முன்னோக்கி முன்னேறிய மனிதர்கள்:
யோவான் 6 :68 -ல் இயேசுவினுடைய சீடர் பேதுரு "ஆண்டவரே நாங்கள் எங்கு செல்வோம் வாழ்வு தருகின்ற வார்த்தை உம்மிடம்தானே உள்ளன" என்று கூறுவதை பார்க்கின்றோம். இது முன்னோக்கி முன்னேறிய மனிதராக அவரை காட்டுகிறது.
இன்று நாம் எந்த வகையை சார்ந்த மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முன்நோக்கி முன்னேறிய மனிதர்களாக மாறுவதே கிறிஸ்து என்னும் வழியில் வாழ்ந்ததற்கான அடையாளம். இணைச்சட்டம் 5 :33 -ல் "கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கூறிய எல்லா வழிகளிலும் செல்லுங்கள், அப்போது நீங்கள் வாழ்வீர்கள். நாம் வாழ வேண்டுமென்றால் இந்த கிறிஸ்து என்ற வழியில் நடக்கவேண்டும்.
இணைச்சட்டம் 31 :29-ல் "நான் கட்டளையிட்ட வழிகளில் நீங்கள் விலகி செல்லும் போது தீங்கு நேரிடும்". என் வாழ்வில் துன்பம், கஷ்டம், கவலை, சோர்வு எல்லாம் இருக்கிறது என்றால் நான் கிறிஸ்துவின் வழியில் நடக்கவில்லை என்று ஆகிவிடும் ஏனென்றால் நான் கிறிஸ்துவின் வழியில் நடக்கின்ற பொழுது தீங்கு என்னை அணுகாது. எனவே திருப்பாடல் 27 :11 -ல் திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல "ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்" என நாம் அனைவரும் இணைந்து கிறிஸ்து என்ற வழியில் பயணிக்க ஜெபிப்போம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.
No comments:
Post a Comment