Tuesday, June 23, 2020

Daily Tamil Homily - தினசரி தமிழ் மறையுரைகள் - மே மாதம் - 7ஆம் தேதி - பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் - நற்செய்தி: யோவான் 13: 16-20

மே மாதம் - 7ஆம் தேதி.

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம்

நற்செய்தி: யோவான் 13: 16-20


 

"இருக்கின்றவராக இருக்கின்றவர்"

(இரு அர்த்தங்கள்)

 

 

ஒருமுறை குடிகாரன் ஒருவன், ஒரு கிணற்றின் மீது உட்கார்ந்து அடிக்கடி கிணற்றுக்குள் பார்த்துக்கொண்டே இருந்தானாம். அவனைப் பார்த்த சிறுவன் ஒருவன், ஏன் இந்த குடிகாரன் அடிக்கடி கிணற்றுக்குள் பார்க்கின்றான் என யோசித்து குடிகாரனிடம் ஏன் அடிக்கடி கிணற்றுக்குள் பார்க்கிறீர்கள் என்று கேட்டான்.  உடனே குடிகாரன் கடவுள் இருக்கின்றார், அதனால் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றானாம். உடனே சிறுவன் நானும் கடவுளை பார்க்க வேண்டும் எனக்கு உதவுங்கள் நானும் கிணற்றுக்குள் பார்க்கிறேன் என்று கூறினானாம்.  உடனே குடிகாரன் சிறுவனை தூக்கி கிணற்றில் காட்ட சிறுவன் அழுதான்.   ஏன் அழுகிறாய் என்று குடிகாரன் கேட்க,  நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், கிணற்றுக்குள் ஒன்றுமே இல்லை என்று சிறுவன் கூறினானாம் நன்றாகப் பார் யார் தெரிகிறார் என்று குடிகாரன் மீண்டும் கேட்டான். யாரும் தெரியவில்லை தண்ணீரில் என் முகம் மட்டுமே தெரிகிறது என்று கூறினான் சிறுவன், உடனே குடிகாரன் ஆம்,  உன்னில் தான் இறைவன் இருக்கின்றார் என்று கூறினானாம். அன்பார்ந்தவர்களே,  நம்மில், நம் மத்தியில், இறைபிரசன்னம் இருக்கின்றது.  அதை நாம் உணர்ந்தவராக வாழவேண்டும்.  இறைவன் நம்மிடையே இருக்கின்றார் என்பதை உணர்ந்து வாழ இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு தருகின்றது.

 

 

யோவான் 3: 19 "இருக்கின்றவர் நானே" என்று இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகின்றார். இருக்கின்றவரான இறைவன், அவரது பிரசன்னம் இன்றும் நம்மில் ஆட்கொண்டிருக்கிறது. அதை நாம் நமது வாழ்வில் உணர்ந்து வாழ்வோம்.                                    விடுதலைப் பயணம் 3 :14-ல்  மோயிசனை இறைவன் அழைக்கின்ற பொழுது "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" எனக் குறிப்பிடுகின்றார்.  "இருக்கின்றவர்"  என்பது இங்கு இரண்டு விதமான பொருளை நமக்கு தருகிறது.

 

ஒன்று- "வாழும் கடவுள்"

இரண்டு- "வழிநடத்தும் கடவுள்"

 

இருக்கின்றவராக இருக்கின்ற இறைவன் என்றால், இறைவன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பது பொருள்பழைய ஏற்பாட்டில் நெருப்பிலும், மேகத்தூணிலும் இறைப்பிரசன்னம் கொண்டு வாழ்ந்த கடவுள், இடியிலும் மின்னலிலும் இறைப்பிரசன்னம் கொண்டு வாழ்ந்த கடவுள் இறைவாக்கினர் வாயிலாகவும், அரசர்கள் வாயிலாகவும் இஸ்ராயேல் மக்களை வழிநடத்தினார்.

               

புதிய ஏற்பாட்டில் தம் ஒரே மகனாம் இயேசுவை இந்த மண்ணுலகிற்கு அனுப்பி அவரில் வாழ்ந்த கடவுள் இறையரசை பறைசாற்றி புதுமைகள், அற்புதங்கள் செய்து நம் ஒவ்வொருவரையும் வழிநடத்தினார். இதைத்தான், இன்றைய நற்செய்தி யோவான் 13:20-ல் "என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்" என்கின்றார்.

 

 

 

மத்தேயு 28 :20 "இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கின்றேன்" என்று இறைவன் இருக்கின்ற கடவுளாக, என்னாலும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு  பிறகும்  தூய ஆவியை சீடர்களுக்கு தந்து அவர்களை வழிநடத்தினார், அவர்களில் வாழ்ந்தார்.  அவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அதனால்தான் பவுல் அடிகளார் 1 கொரிந்தியர் 6: 19-ல் "நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியாரின் ஆலயம்" என்று குறிப்பிடுகின்றார்.  இன்றும் இறைவனுடைய  பிரசன்னம் இறைவார்த்தையிலும்    நற்கருணையிலும் இருக்கின்றது. இயேசு  இறைவார்த்தை வழியாகவும், நற்கருணையின் வழியாகவும் வாழ்கின்றார்.  நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எனவே இதை உணர்ந்து வாழ்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.

No comments: