கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா ( ஆண்டு- A)
14-06-2020
ஞாயிற்றுக்கிழமை
இறை உறவில் வாழ வைக்கும் நற்கருணை
அலெக்சாண்டரியா மரிய தி கோஸ்தா என்னும் சிறுமி 1904 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் பால்சார் என்னும் ஊரில் பிறந்தார். கிறிஸ்தவ கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இந்த சிறுமி சிறிய வயது முதல் பக்தியிலும் தெய்வ பயத்திலும் வளர்ந்து வந்தார். இவளுக்கு 14 வயது ஆனபோது ஆண்டவர் இயேசுவை நற்கருணையின் வழியாய் முதன் முறையாக பெற்றார்.
ஒரு நாள் தன்னுடைய சகோதரியோடும், தோழியோடும் தன்னுடைய வீட்டின் முதல் தளத்தில் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த மூன்று இளைஞர்கள் இவரிடம் தவறாக நடக்க முயன்ற போது, தன்னையும், தன்னுடைய கற்பையும் காப்பாற்றி கொள்வதற்காக வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டாள். கீழே விழுந்ததில் இச்சிறுமியின் முதுகுப் பகுதியின் தண்டுவட எலும்பு குணப்படுத்த முடியாத அளவுக்கு உடைந்து போனது. இதனால் தன்னுடைய வாழ்க்கையில் இனி படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஆனது. இந்த வேளையிலே இந்த சிறுமி இறை பக்தியில் இன்னும் அதிகமாக வளர்ந்து காணப்பட்டார். ஒவ்வொரு நாளும் தன்னுடைய பங்கு குருவினுடைய உதவியால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நற்கருணையின் வாயிலாக பெற்று வந்தார். ஒவ்வொரு நாளும் இவள் பெற்று வந்த இந்த நற்கருணை, இவளை தொடர்ந்து இயேசுவை நோக்கி, அவர் அன்பில் இன்னும் ஆழமாக வளரச் செய்தது. அதன் வெளிப்பாடாக இயேசுவோடு மிக அருகில் அவருடன் பேசுகின்ற ஒரு வாய்ப்பை இந்த சிறுமி பெற்றாள்.
இவ்வாறாக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த இந்த சிறுமி இயேசுவை கண்டு கொள்ள கூடிய வாய்ப்பையும் பெற்றாள். இறுதியாக 1942 ஆம் ஆண்டு புனித வாரத்தில் இயேசு இவளைப் பார்த்து "இனிமேல் உன் வாழ்க்கையில் நீ உணவே உட்கொள்ள மாட்டாய், என் உடலே, உன் உணவு. என் இரத்தமே உன் பானம்" என்று கூறியதாக நாம் பார்க்கின்றோம். புனித வாரத்தின் பெரிய வெள்ளி அன்று முதல் தன்னுடைய வாழ்க்கையின் இறுதி வரைக்கும் ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு இவர் எந்த ஒரு உணவும் இல்லாமல், இறைமகன் இயேசு கிறிஸ்துவை மட்டும் உட்கொண்டு உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இவர் உட்கொண்ட ஒரே உணவு கிறிஸ்துவின் திருவுடல். ஒவ்வொரு நாளும் இவர் உட்கொண்ட ஒரே பானம் கிறிஸ்துவின் இரத்தம். இந்தச் செய்தியானது பல்வேறு பகுதிகளுக்கும் பரவச் செய்தது, பலரும் இவரை காண வந்து சென்றார்கள். இதில் பலர் நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையில் மருத்துவரிடம் காட்டியபோது, ஏன், நீங்கள் உணவு உட்கொள்ளவில்லை என்று கேட்ட பொழுது, நான் உணவை உண்ட ஒரு உணர்வு ஏற்படுகின்றது என்று கூறினாராம். இதையடுத்து இவர்கள் இவரை சோதிக்க முடிவு செய்தார்கள்.
இவருக்கென்று ஒரு மருத்துவ குழுவை ஏற்பாடு செய்தார்கள். இந்த மருத்துவ குழு இவரை ஒவ்வொரு நாளும் கண்காணிக்கும். இந்த சோதனைக்கு முன்பாக இவருடைய உடல், எடை, ரத்த அழுத்தம் சோதித்தறியப்பட்டது. 30 நாட்களுக்கு இவர் இந்த மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருந்தாராம். 30 நாள் இரவும் பகலும் பல மருத்துவர்களும், செவிலியர்களும் இவரை கண்காணித்து வந்தார்கள். இறுதியாக இன்னும் பத்து நாட்களுக்கு என்று ஏறக்குறைய 40 நாட்களுக்கு இந்த மருத்துவர் குழு கண்காணிப்பில் இருந்து பிறகு மீண்டும் இவருடைய ரத்த அழுத்தம், எடை, உயரம், மூச்சு என அனைத்தும் சோதிக்கப்பட்டபோது, நல்ல உடல் ஆரோக்கியத்தோடு எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அவர் இருந்ததை கவனிக்க முடிகின்றது. அதன் பிறகு அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எந்த விதமான உணவும் உட்கொள்ளவில்லை. அவர் உண்ட ஒரே உணவு கிறிஸ்துவின் திருவுடல், அவருடைய ஒரே பானம் கிறிஸ்துவின் இரத்தம். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்ததை உட்கொண்டு வாழ்ந்த ஒருவராக இருக்கின்றார். இறுதியாக, அக்டோபர் 13ஆம் தேதி 1955 ஆம் ஆண்டு இவர் இறந்தார். அதன் பிறகு ஏப்ரல் 25 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் இவருக்கு முத்திப்பேறு பட்டத்தை வழங்கினார்.
ஆம், கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அலெக்சாண்டரினா 13 ஆண்டுகள் இயேசுகிறிஸ்துவினுடைய உடலையும், இரத்தத்தையும் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்து இருக்கின்றார். கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவை கொண்டாடுகின்ற நாமும் நற்கருணை தருகின்ற வாழ்க்கையை நம்முடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள அழைக்கப்படுகின்றோம்.
இரத்தம் என்று சொல்லுகின்ற பொழுது அது உறவை குறிப்பதாக இருக்கிறது. அதனால்தான் இரத்தபந்தம் உறவுக்கு அடித்தளமாக இருக்கின்றது. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் என்று நாம் கூறுகின்ற போது அது இறை உறவின் அடையாளமாக இருக்கிறது. நாம் பங்கு பெறுகின்ற இந்த நற்கருணை என்னும் இந்த திருப்பலியானது இரண்டு பகுதிகளைக் கொண்டது. இறைவார்த்தை பகுதி மற்றொன்று நற்கருணைப் பகுதி. இன்றைய நாளிலே, முதல் பகுதியான இறைவார்த்தை பகுதி இரண்டாம் பகுதியான நற்கருணையை பற்றி எடுத்துரைக்கின்றது. நற்கருணை நம்மை இறை உறவில் வாழ அழைப்பு தருகின்றது.
கிறிஸ்தவர்களாகிய நாம், ஒவ்வொரு நாளும் இரண்டு வகையான உணவை பெறுகின்றோம். ஒன்று -நம் உடலுக்கான உணவு. இரண்டு- நம் உள்ளத்திற்கான உணவு. இது உடலுக்காக நாம் பெறுகின்ற உணவு, அழிந்து போகக்கூடியது, நிலையற்றது. மாறாக, உள்ளத்திற்கு நாம் பெறக்கூடிய இந்த நற்கருணை என்னும் உணவு வாழ்வு தரக்கூடியது, என்றும் அழியாதது, இது நம் ஆன்மீக உணவு. இந்த ஆன்மீக உணவு நம்மை இறை உறவில் வாழ அழைப்பு தருகிறது.
இன்றைய முதல் வாசகம் இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் இறைவனால் மன்னா என்னும் உணவை பெற்றதை நமக்கு நினைவுபடுத்துகின்றது, இது உடலுக்கான உணவு. தொடக்கநூல் 14 :18 -20 -ல் மெல்கிசதேக் ஆசீர்வதித்த உணவு உடலுக்கானது. விடுதலைபயணம் 12: 20 -ல் பாஸ்கா விழாவின் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட உணவு உடலுக்கானது. பல வேளைகளில் நாமும் உடலுக்கான உணவைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நாளில் உள்ளத்திற்கான, இறை உறவுக்கான, வாழ்வு தரக்கூடிய, நிலையான உணவைத்தேடி வாழ இன்றைய நற்செய்தி வாசகமும், இன்றைய இரண்டாம் வாசகமும் நமக்கு அழைப்பு தருகின்றது.
"நாம் பலர் ஆயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்" என்ற கிறிஸ்து என்னும் உறவில், உணவில் நாம் ஒன்றிணைய இன்றைய இரண்டாம் வாசகமும், "விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தருகின்ற உணவு நானே என்று நற்செய்தி வாசகமும் நம்மை இறை உறவில் வாழ அழைப்பு தருகிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களோடு பகிர்ந்தது வாழ்வு தருகின்ற உணவு. (யோவான் 21: 14) தொடக்க கிறிஸ்தவர்கள் தங்களிடையே பகிர்ந்து கொண்டது வாழ்வு தருகின்ற ஆன்மீக உணவு. (திருத்தூதர் பணி 2: 42 -47) இத்தகைய ஒரு உணவைப் பெற இன்று நாமும் அழைக்கப்படுகின்றோம்.
அன்னை தெரேசா தன்னுடைய வாழ்க்கையில் இந்த வாழ்வு தருகின்ற ஆன்மீக உணர்வை பெற்றதால்தான் இன்று அன்னை தெரேசாவை நாம் அனைவரும் அவருடைய பணியின் நிமித்தமாக நினைத்துப் பார்க்கின்றோம். இந்த அன்னையை பின்பற்றுகின்ற சகோதரிகளும், ஒவ்வொரு நாளும், ஒரு மணி நேரம் நற்கருணை ஆண்டவர் முன்பு தங்களையே அர்ப்பணித்து, இந்த நற்கருணை ஆண்டவரை தங்களுடைய உள்ளத்தில், வாழ்க்கையில் ஏற்று, இந்த ஆன்மீக உணவை பெறுவதால் தான், அவர்கள் இந்த காலத்திலும் இப்படி பணிகளை செய்ய முடிகின்றது.
புனித பிரான்சிஸ் தி சேல்ஸ் "நற்கருணை நம் ஆன்மீக வாழ்வுக்கான வழி" என்கிறார். புனித தாமஸ் அக்குவினாஸ் "நற்கருணை நம் ஆன்மீக வாழ்வுக்கான அடித்தளம்" என்கின்றார். திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் நற்கருணை நம் சமூகத்தின் ஒற்றுமையை வளர்கின்றது" என்றார். இந்த ஆன்மீக உணவு தான் அன்று அப்போஸ்தலர்களையும், தொடக்க கிறிஸ்தவர்களையும், புனிதர்களையும் இந்த இறை உறவை நோக்கி அழைத்து செல்கின்றது. அதே நற்கருணை பக்தி நம்முடைய வாழ்க்கையில் இந்த இழை உறவில் நம்மை வாழ வைக்கின்றதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இன்று, நான் என்னுடைய வாழ்க்கையில் இந்த நற்கருணைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேனா? நற்கருணை மீது நான் பக்தி கொண்டிருக்கின்றேனா? இந்த நற்கருணையை ஒவ்வொரு நாளும் உட்கொள்கின்ற பொழுது நான் இந்த நற்கருணையின் வல்லமையை உணர்ந்து அதனை என் வாழ்க்கையிலே ஏற்றுக்கொள்கின்றேனா? சிந்தித்துப் பார்ப்போம்.
நற்கருணை சக்தி வாய்ந்தது, வல்லமை மிக்கது, ஆற்றலுள்ளது, நம்மை வாழ வைக்கக் கூடியது. இந்த நற்கருணை நம்மை ஒவ்வொரு நாளும் இறைவனை நோக்கி, அவரது இறையுறவை நோக்கி அழைத்துச் செல்லும். அந்த இறை உறவில் நாமும் இணைய இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
|
|||||
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.
No comments:
Post a Comment