Tuesday, June 23, 2020

Daily Tamil Homily - தினசரி தமிழ் மறையுரைகள் - மே மாதம் - 5ஆம் தேதி. பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் - நற்செய்தி: யோவான் 10: 22-30

மே மாதம் - 5ஆம் தேதி.

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம்

நற்செய்தி: யோவான் 10: 22-30

 

சுயநல ஆன்மீகத்தை தவிர்ப்போம் 

(இரு மனநிலைகள்)

 

வேடன் ஒருவன் ஒவ்வொரு நாளும் வேட்டைக்கு செல்லும் முன், காலையில் தன் தெய்வத்தை வணங்கி விட்டு செல்வான்.  அன்றைய நாள் முழுவதும் வேட்டையில் அவனுக்கு ஏதாவது கிடைத்தால் மாலையில் தன் தெய்வத்தின் சிலை முன் காணிக்கையாக்குவான். அப்படி எதுவும் கிடைக்காவிடில் தெய்வத்தின் சிலைக்கு சாட்டையடிகள் கொடுப்பானாம். இதைத்தான் "சுயநல ஆன்மீகம்" - அதாவது நம் விருப்பத்திற்கு ஏற்ப இறைவன் நடக்க வேண்டும் என நினைப்பது. ஆனால் நாம் சுயநல ஆன்மீகத்தை அகற்றி இறை விருப்பத்திற்கு ஏற்ப வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.

 

 நற்செய்தியில் இரண்டு விதமான மன நிலைகளை நாம் காண்கின்றோம்.

 

1.       யூதர்களின் மனநிலை  (சுயநல ஆன்மிகம் கொண்ட மனநிலை) இது தன் விருப்பத்திற்கு ஏற்ப இறைவன் நடக்க வேண்டும் எனும் மனநிலை.

 

2.       இயேசுவின் மனநிலை. இது இறை விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்கும் மனநிலை.

 

 நற்செய்தியில் யோவான் 10:24 யூதர்கள் இயேசுவிடம் "இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும், நீர்  மெசியாவானால்  அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லி விடும் என்றனர்.  யூதர்களுக்கு மெசியாவிடம் மூன்று விதமான எதிர்பார்ப்புக்கள் இருந்தது .

 

 1.  மெசியா ஒரு அரசர் ஆக இருப்பார், உரோமை ஆட்சியில் இருந்து தங்களை விடுவிப்பார்.

 2. சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

 3. நமக்காக மட்டும் அவர் வருவார், ஏனென்றால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் மற்றும் தூய இனம்.

 

 இந்த மூன்றும் இயேசுவிடம் கிடைக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்தவாறு இயேசு இருக்கவில்லை. இதுதான் சுயநல ஆன்மீகம். ஆனால் நாம் இயேசுவின் மனநிலை,  அதாவது இறைத் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வாழ அழைப்பு பெறுகிறோம்.  இதைத்தான் இன்றைய நற்செய்தியில் யோவான் எழுதிய நற்செய்தி, பத்தாவது அதிகாரம், 27 ஆவது வசனத்தில் " என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன" என்கின்றார்.  இன்று எனது கிறிஸ்தவ வாழ்வு எத்தகைய மனநிலையில் இருக்கிறது.  யூதர்களின் மனநிலையா?   இயேசுவின் மனநிலையா?

 நான் ஜெபித்த ஜெபம் நடக்கவில்லை, என் வாழ்வு சோதனையாக, துன்பமாக இருக்கிறது. நான் கேட்டது எதிர்பார்த்தது நடக்கவில்லை என நான் யூதர்களின் மனநிலையில் பல வேளைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எத்தகைய சூழலிலும் எத்தகைய காலத்திலும் இறை தந்தையின் விருப்பத்திற்கேற்றவாறு என் வாழ்வு செல்கிறது என்ற உணர்வோடு நாம் வாழ்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.

No comments: