Friday, June 16, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 18-06-2023- ஞாயிற்றுக்கிழமை

    

 

🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(18 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 19: 2-6a
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 6-11
நற்செய்தி: மத்தேயு 9: 36- 10: 8

அழைப்பின் மேன்மை...

            பட்டம் விட்டுக் கொண்டிருந்த தன் மகளைப் பார்த்து அப்பா, "இந்த நூலின் வேலை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த மகளோ, "இந்த நூல்தான் இந்த பட்டத்தின் சுதந்திரத்தையே தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது" என்று சொன்னாராம். அதற்கு அப்பா, "இல்லை இந்த நூல் தான் பட்டத்தை பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது" என்று சொல்லிவிட்டு ஒரு கத்தரிக்கோல் எடுத்து அந்த நூலை வெட்டி விட்டாராம். இங்கும் அங்குமாக மேலே பறந்த பட்டம், சிறிது நேரத்தில் கீழே விழுந்து விட்டதாம். இறைவனால் அழைக்கப்பட்டு இறைவனோடு இருக்கின்ற போதும் நாம் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருப்பது போலவும், திருப்பலிக்கும், திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கும் செல்ல கட்டாயப்படுத்தப்படுவது போலவும் நமக்கு தெரிந்தாலும், உண்மையாகவே நாம் வாழ்வது இறைவனின் அழைப்பிலும் அவ்வழைப்பு நமக்கு காட்டுகின்ற வழிகாட்டுதலிலும் தான் இருக்கிறது என்பதை உணர வைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இன்று பொதுக்காலத்தின் பதினொன்றாவது ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுகின்றோம். 
இன்றைய நற்செய்தி வாசகம்
                                                                    1. பரிவு கொண்டார்.
                                                                    2. அழைத்தார்
                                                                    3. அதிகாரம் தந்தார்.
                                                                    4. அனுப்பினார்

          என்னும் இயேசுவின் நான்கு செயல்களை சுட்டிக்காட்டுகிறது. அச்செயல்பாடுகள் இயேசு தரும் அழைப்பின் மேன்மைகளை உணர்ந்திட நம்மை அழைக்கின்றது‌.

1. பரிவு கொண்டார் (இயேசு காட்டும் பரிவு)

            வழிகாட்டியில்லாத அதாவது ஆயனில்லாத ஆடுகளைப் போல இருந்த மக்களை பார்த்து இயேசு பரிவு கொள்கிறார். இது ஒர் உள்ளார்ந்த  இறை இரக்கமாகும். திருவிவிலியம் இறைவனை இரக்கம் மிகுந்தவராக அதாவது பரிவு கொள்பவராக சுட்டிக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டில் எகிப்தில் மக்கள் படும் வேதனையை என் கண்களால் கண்டேன் (விப 3:7) என இறைவன் அவர்கள் மீது பரிவு கொண்டு மோசேயை அழைக்கிறார். எகிப்திய விடுதலைக்குப் பிறகும் பாலைவனத்தில் அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்து, செங்கடலை இரண்டாகப் பிரித்து எகிப்திய படைகளிலிருந்து மீட்பது அவர் கொண்ட இரக்கத்தின் அடையாளமாகும். புதிய ஏற்பாட்டிலும் இயேசு பல இடங்களில் மக்கள் மீது பரிவு கொண்டு எண்ணற்ற புதுமைகளையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதை பார்க்கிறோம். லூக்கா 7:13-ல் கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்து பாடையில் தூக்கிக் கொண்டு வந்த போது இயேசு அப்பெண்ணின் மீது பரிவு கொண்டு அழாதே என்று கூறி இறந்தவனை உயிர் பெற செய்கிறார். மாற்கு 1:40-ல் இயேசுவிடம் தொழுநோயாளர் ஒருவர் வந்து நீ விரும்பினால் என் நோயை குணமாக்கும் என்று கேட்க, இயேசு அவர் மீது பரிவு கொண்டு அவரை தொட்டு அவரது தொழுநோயை குணமாக்குவதை பார்க்கின்றோம். மத்தேயு 20:34 -ல் பார்வையற்ற இருவர் இயேசுவை தேடி வந்த போது அவர்கள் மீதும் பரிவு கொண்டு இயேசு பார்வை தருகிறார். இவ்வாறு இயேசு காட்டிய இரக்கத்தை அதாவது பரிவை நாமும்  ஒருவர் மற்றவர் மீது காட்ட அழைப்பு பெறுகின்றோம். நம்மோடு உடனிருக்கின்ற, உறவாடுகின்ற மற்றும் சமுதாயத்தில் நாம் காண்கின்ற ஏழைகள், எளியவர், ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்டோர் என யாவரிடத்திலும் சிறிது கருணை உள்ளத்தோடு பரிவு காட்டி வாழ்வோம். "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்." (மத்தேயு 5:7) என மலைப்பொழிவில் இயேசு எடுத்துரைப்பதற்கு ஏற்ப நாமும் இரக்கமுடையவர்களாக வாழ்வோம். 

2. அழைத்தார் (உடனிருக்க தந்த அழைப்பு)

    இயேசுவின் இரண்டாவது செயலாக சீடர்களை அழைப்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இயேசுவை பலர் பின்பற்றி இருந்தாலும் அவர் பன்னிருவருக்கு மட்டுமே அவரோடு இருக்க மற்றும் அவர் பணி செய்ய அழைப்பு கொடுப்பதை பார்க்கின்றோம். பன்னிரண்டு என்பது இஸ்ராயேல் மக்களின் பன்னிரு குலங்களை குறிக்கலாம். குலத்திற்கு ஒருவராக பன்னிருவரை அழைத்ததாலே வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள் என சீடர்களுக்கு கூறுகிறார். இயேசு அழைத்தது பணக்காரர்களையோ பதவியில் இருப்பவர்களையோ அல்ல, மாறாக சாதாரண மீனவர்களாக மற்றும் வரிதண்டுபவர்களாக இருந்த தகுதியற்ற எளிய மனிதர்களையே அழைத்தார். இயேசு தகுதியற்றவர்களை அழைத்து அவரோடு உடனிருக்க செய்து தகுதியுள்ளவர்களாக மாற்றினார். இயேசு செல்லுமிடமெல்லாம் சீடர்கள் உடன் பயணித்தது பொதுத்தயாரிப்பாக இருந்தாலும், அவரோடு உடனிருந்தது அதாவது அவரோடு தங்கி அவர் சொல்வதை கேட்டது தனித் தயாரிப்பாக அமைகிறது. இங்கு உடனிருப்பு தாயரிப்பின்றி தகுதியற்றவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்றியிருக்கிறது. இறைவன் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். திருமுழுக்கு மற்றும் ஒவ்வொரு திருவருட்சாதனத்தின் வழியாக அழைப்பு கொடுத்த இறைவன் நாம் அவரோடு உடனிருக்க ஆவல் கொள்கிறார். கிறிஸ்தவ வாழ்வே இறைவனோடு உடனிருத்தல் தான், அப்போதுதான் அது முழுமை பெறுகிறது. நமது கிறிஸ்தவ வாழ்வு அவரோடு உடனிருக்கின்ற வாழ்வாக அமைகின்றதா? சிந்திப்போம். திருஅவை காட்டும் இறைவழியில் வாழ இறையழைப்பை ஏற்று அவரில் உடன் வாழ்வோம்.

3. அதிகாரம் தந்தார். (இயேசு தந்த கொடைகள்)

         இயேசு அழைத்த சீடர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார். இங்கு அதிகாரம் என்பது வாழ்வின் நெறிமுறைகளாகும், எனவே தான் எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார். பொதுவாக எந்த ஒரு குருவும் தன்னுடைய சீடர்களுக்கு தன்னிடமிருந்த எல்லா அதிகாரங்களையும் கொடுப்பதில்லை. ஆனால் இறைமகன் இயேசு கிறிஸ்து தான் செய்த எல்லா அற்புதங்களையும் அதாவது நற்செய்தியை பறைசாற்றவும், நோயாளிகளை குணமாக்கவும், பேய்களை ஓட்டவும், தொழுநோயாளிகளை குணமாக்கவும் மற்றும் இறந்தோரை உயிர்ப்பெற்றெழச் செய்யவும் அதிகாரம் தருகிறார். மேலும் கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் என்கின்றார். இயேசுவின் இந்த மூன்றாவது செயல் அவர் நமக்கு கொடுத்திருக்கின்ற கொடைகளைப் பற்றிய தியானிக்க அழைப்பு தருகிறது. இன்றைக்கு கிறிஸ்தவர்களாக நமக்கும் இயேசு பல அதிகாரங்களையும் திறமைகளையும் மற்றும் திறன் கையும் கொடுத்திருக்கிறார். இதை பிறரோடு பகிர்ந்து வாழ்வதற்கு அழைப்பு தருகிறார். நம் திறமைகள் நம்மை மட்டும் வளர்த்தெடுக்காமல் பிறரையும் வளர்ப்பவையாக அமையட்டும். ஒரு தாலந்து பெற்றவர் மண்ணிலே அதை புதைத்து வைத்தது போல நாமும் நம் திறமைகளையும் மற்றும் அன்போடு உறவாட கொடுத்த உறவுகளையும் மண்ணோடு மண்ணாக புதைக்காமல் இருப்போம். இறைவன் கொடுத்த அழகிய வாழ்வை முழுமையாக பயன்படுத்துவோம்.

4. அனுப்பினார் (அனுப்பப்படுவது சான்று பகர...)

         அழைக்கப்படுவது  அனுப்பப்படுவதற்காக... இறைவன் மோசேயை அழைத்தார், எகிப்தில் அவதியுறும் மக்களை மீட்க அனுப்பப்படுவதற்காக...இறைவாக்கினர்களை அழைத்தார் தன் மக்களை வழிநடத்த அனுப்புவதற்காக... ஆக சீடர்களை அழைத்த இயேசு அவர்களை தன் பணியை தொடர்ந்தாற்ற அனுப்புகிறார். கப்பலானது துறைமுகத்தில் இருப்பது பாதுகாப்பானது. ஆனால் அது அதற்காக கட்டப்பட்டது அல்ல மாறாக கடல் அலைகளை எதிர் கொண்டு பல்வேறு நாடுகளுக்கும் பயணிப்பதற்காக. இந்த அழகிய வாழ்வும் அழைப்பும் அவரோடு உடனிருப்பதற்காக மட்டுமல்ல அவர் பணியை தொடர்ந்தாற்றுவதற்கே ஆகும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இவ்வாழ்விற்கு அழைக்கப்பட்டது இயேசுவுக்கு சான்று பகர அனுப்பப்படுவதற்காக. எனவே இயேசுவின் அழைப்பையும் அனுப்பப்படுதலையும் ஏற்று நம் வாழ்வு அவருக்கு சான்று பகரும் வாழ்வாக அமைய முயற்சிப்போம். சீடர்களுக்கு துணையாளராம் தூய ஆவியை தந்து வழிநடத்திய அதே இறைவன் நம்மையும் வழிநடத்துவார் மற்றும் ஆசீர்வதிப்பார்.

Tuesday, June 6, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா - (ஆண்டு- A) - 11-06-2023 - ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
 கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(11 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: இணைச்சட்டம் 8: 2-3, 14b-16a
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 10: 16-17
நற்செய்தி: யோவான் 6: 51-58

நற்கருணை காட்டும் அடையாளங்கள்

            கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவை இன்று கொண்டாடுகிறோம். இந்த விழாவானது திருத்தந்தை 10-ஆம் பத்திநாதரால் 1264-ஆம் ஆண்டு 'டிரான்சித் தூருஸ்' என்னும் திருத்தூதுமடல் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டது. "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”(மத் 28:20) என்னும் இயேசுவின் வார்த்தைகளின் வெளிப்பாடுதான் நற்கருணை. அப்ப இரச குணங்களுக்குள் இயேசுவின் திருஉடலும் திருஇரத்தமும் அவருடைய இறை இயல்பும் மனித இயல்பும் அடங்கியிருக்கிற அருளடையாளமே நற்கருணை ஆகும். இது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக விளங்குகிறது. அப்படியென்றால் திருஅவையின் மையமே நற்கருணைதான். "நற்கருணை நம்பப்பட வேண்டியது; கொண்டாடப்பட வேண்டியது; அனுபவித்து வாழப்பட வேண்டியது" என்கிறார் மறைந்த திருத்தந்தை 16-ஆம் ஆசீர்வாதப்பர். நற்கருணை கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் ஓர் தெய்வீக விருந்து. அன்று இறுதி இராவுணவில் நற்கருணையை ஏற்படுத்தி தன்னுடலை கையளித்த இயேசுஇ இன்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்காக தன்னுடலை கையளிக்கின்றார். இந்த இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தையும் அடையாளப்படுத்தும் அப்பத்தையும் இரசத்தையும் நாம் உண்டு பருகும்போதெல்லாம் நாம் அவராகவே மாறுகிறோம் என்பதை உணரவும்இ நற்கருணையின் மாட்சியை உணர்ந்து அப்பக்தியில் நாளும் வளர இவ்விழா நமக்கு அழைப்பு தருகிறது. நற்கருணை நமக்கு வெளிப்படுத்தும் ஐந்து முக்கிய பண்புகளை சிந்தித்து அதன் மாட்சியை உணர்ந்து கொள்வோம்.

1. தியாகத்தின் அடையாளம்

        தனக்கென்று பாராமல் பிறருக்கு தேவையென்றால் யாவற்றையும் தர காத்திருக்கும் மனமே தியாகம் ஆகும். இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காக அர்ப்பணித்து உயிரையே தந்திருப்பது தியாகத்தின் அடையாளம். நாம் ஒவ்வொரு முறையும் நற்கருணையை கொண்டாடுகின்ற போது இயேசுவின் தியாகத்தை மீண்டும் மீண்டுமாக வாழ்ந்து காட்டுகின்றோம். நமக்காக தன்னுடைய உயிரை தியாகமாய் அர்ப்பணித்து மீட்பு தந்து இன்றளவும் அத்தியாகத்தின் அடையாளமாக நற்கருணையாய் வீற்றிருக்கின்றார் இயேசு. அவரைப் போல நாமும் நம்முடைய குடும்பங்களில் இருக்கின்ற கணவன்இ மனைவிஇ பெற்றோர்கள்இ பிள்ளைகள்இ உடன் பிறந்தவர்கள் மற்றும் சமுதாயத்தில் இருக்கின்ற ஏழைகள்இ அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள் என யாவருக்கும் நம் நேரங்களை தியாகம் செய்து பேசி உறவாடவும்இ நம்மிடையே இருப்பவற்றை தியாகம் செய்து உதவவும் முன்வருவோம்.

2. அன்பின் அடையாளம்

                   "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை." (யோவான் 15:13) என்னும் அவரின் வார்த்தைக்கு ஏற்ப தன்னுயிரை தந்து நற்கருணை வடிவில் இயேசு அன்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். “அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்; அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்” என்கிறது நீதிமொழிகள். 

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

                அதாவது அன்பு இல்லாதவர் எல்லாம் என்னுடையது என்பர். அன்பு உடையவர் தன் உடலையும் பிறருக்கானது என்பர் என்னும் வள்ளுவரின் வார்த்தைகள் இயேசுவின் வாழ்வில் நடந்த உண்மைகள். பிறரன்பு உணர்வோடு வாழப்பட வேண்டிய மறைபொருளை ‘ஆமென்’ என்று சொல்லி நாவினால் பெற்று மட்டும் திருப்தி அடையலாகாதுஇ மாறாக இயேசுவைப் போல பிறர் நலம்இ பிறரன்பு என்று நம்மோடு இருப்பவர்களோடு வாழ்ந்தால் தான் நற்கருணையை வாழ்வாக்க முடியும். 

3. பகிர்வின் அடையாளம் 

            "பெறுவதிலும் தருவதே இன்பம் பயக்கும்" என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப இல்லை என்று வருவோர்க்குஇ இல்லை என்று சொல்லாமல் இருப்பதை பகிர்ந்து வாழ்வதே சிறந்த மனித வாழ்வாகும். இறைமகன் இயேசு கிறிஸ்து இறைச்சாயலிலிருந்து மனிதச்சாயலுக்கு கடந்து வந்து மானுட குல மீட்புக்காக தன் உடலையும் இரத்தத்தையும் பகிர்ந்தார். தொடக்க திருஅவையில் நற்கருணை பகிர்வு அவர்கள் சம்பாதித்த பொருட்களையும் பகிர வைத்ததுஇ திருத்தூதர்களின் பாதங்களில் கிறிஸ்தவர்கள் தங்களது பொருட்கள் அனைத்தையும் வைத்து தேவையானவற்றை எடுத்துச் சென்றார்கள் (திப.2:43). 
இன்று நற்கருணை பகிர்வின் அடையாளமாகஇ அதாவது தன்னையே நமக்காக கையளித்த இயேசுவைப் போல பிறரது துன்பத்திலும்இ துயரத்திலும்இ வறுமையிலும் மற்றும் ஏழ்மையிலும் நம் வாழ்வை பகிர்ந்து கொள்ள அழைப்பு தருகிறது.

4. உறவின் அடையாளம் 

                பழைய ஏற்பாட்டில் இறைவன் தன் மக்களோடு பல வழிகளில் உறவை வலுப்படுத்தி வந்துள்ளார். அடிமைத்தனத்திலிருந்து மீட்டுஇ பாலைவனத்தில் வழிநடத்தி மற்றும் உடன்படிக்கையை ஏற்படுத்தி இறை - மனித உறவை உருவாக்கினார். இதே உறவு புதிய ஏற்பாட்டில் இறைவன் மனித உருவெடுத்ததன் வழியாக தொடர்ந்தது. இவ்வுறவு நிலைத்து நிற்க இயேசு உறவின் அடையாளமாய் நற்கருணையை தந்தார். அதனால்தான் "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்இ நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்". (யோவான் 6:56) என்கிறார். கிறிஸ்துவின் திருவுடலும் திருஇரத்தமும் அவரோடு இணைந்திருக்க அதாவது உறவில் வளர அழைப்பு தருகிறது. உறவின் உச்சக்கட்டஇ இறுதிக்கட்ட வெளிப்பாடாக இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் நமக்கு தந்துள்ளார். ஆகஇ நற்கருணை உறவுக்கான நிரந்தர உருவம். தொடக்கத் திருஅவையில் திருத்தூதர்கள் இறைவேண்டலிலும் அப்பம் பிடுவதிலும் இறைவனைப் போற்றுவதிலும் ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள். (திப. 2:42) நற்கருணை பகிர்வு அவர்களை உறவில் வளர்த்தது. இயேசுவும் "நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. (யோவான் 15:4) என அவர் உறவில் இணைந்து வாழ அழைப்பு தருகிறார். இன்றைய உறவுகள் தொலைபேசியில் தொடங்கி தொலைவிலேயே நின்று கொண்டிருக்கிறது. இதயத்தில் நிலைத்திருக்க வேண்டிய உறவுகள் இண்டர்நெட்டில் மட்டுமே இருக்கிறது. மண்ணுக்கும்இ பொன்னுக்கும்இ பொருளுக்கும்இ புகழுக்கும் மட்டுமே உறவுகள் என்ற நிலைதான் இன்றைய உலகம். இதில் உறவுக்காக உயிரைத் தந்த இயேசுவைப்போல இறைவனோடும் நம்மோடு உடனிருப்பவர்களோடும் உண்மையான உறவில் நிலைத்திருப்போம்.

5. வாழ்வின் அடையாளம்

                பழைய ஏற்பாட்டில் பாலைவனத்தில் இஸ்ராயேல் மக்களுக்கு பொழியப்பட்ட மன்னா என்னும் உணவு அவர்களுக்கு நிலைவாழ்வை தரவில்லை. அதை உண்ட அனைவரும் இறந்தனர். ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுஇ “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”(யோவான் 6:51) என நிலைவாழ்வின் அடையாளத்தை தருகிறார். இயேசுவின் திரு உடல் அவருடைய வாழ்வில் பங்கு கொள்ளவும்இ திரு இரத்தம் அவருடைய இறப்பில் பங்கு கொள்ளவும் நமக்கு அழைப்பு தருகிறது. "வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்." (யோவான் 6:57) என்னும் இயேசுவின் வார்த்தைகள் நற்கருணையை ஏற்று நிலைவாழ்வை பெற்றுக் கொள்ள அழைப்பு தருகிறது.

                கி.பி. 1730 ஆகஸ்ட் 14ந்தேதி இத்தாலியின் சியன்னா நகரில்இ புனித பிரான்சிஸ் ஆலயத்தில் நுழைந்த கொள்ளையர்கள் நற்கருணை பேழையில் வைக்கப்பட்டிருந்த நற்கருணை அப்பங்கள் இருந்த தங்கப் பாத்திரத்தை தூக்கிச் சென்றுவிட்டனர். அந்த கொள்ளையர்கள் வீசியெறிந்த நற்கருணை அப்பங்கள்இ இரண்டு நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 17ந்தேதி மீண்டும் கண்டெடுக்கப்பட்டன. அந்த நற்கருணை அப்பங்கள் இன்றளவும் அழியாமல் இருக்கின்றன. ஆம்இ நற்கருணையில் இயேசு நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நற்கருணையின் வடிவில் நம்மோடு உறவாடஇ உரையாட ஆவலாயிருக்கும் இறைவனை தேடுவோம். அவரோடிணைந்துஇ அவரன்பை சுவைத்திடுவோம். நற்கருணையின் வழியாக நமது ஆன்மப் பசியைஇ தாகத்தை போக்குகின்றார்இ நம்மைக்; குணமாக்குகின்றார்இ விசுவாச வாழ்வில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகின்றார். நம்மீது அவர் வைத்துள்ள அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றார். அத்தயை இறைவனின் தியாகத்தைஇ அன்பைஇ பகிர்வைஇ உறவை மற்றும் வாழ்வு தரும் நற்கருணையை உய்த்துணர்ந்தவர்களாகஇ நாம் பெற்ற அன்பைஇ பிறரோடு பகிர்ந்துஇ இறைன்பிற்கு சாட்சியாகஇ அவரோடு என்றும் இணைந்து நற்கனி தருபவர்களாகஇ அவரோடு என்றும் நெருங்கிய உறவுள்ளவர்களாக வாழ்ந்திடுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Thursday, June 1, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - மூவொரு கடவுள் பெருவிழா - (ஆண்டு- A) - 04-06-2023 - ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
மூவொரு கடவுள் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(04 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 34: 4b-6, 8-9
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 13: 11-13
நற்செய்தி: யோவான் 3: 16-18

மூவொரு இறைவன் காட்டும் அன்பு

புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் இந்த உலகம் பருப்பொருள், இடம் மற்றும் காலம் ஆகியவற்றால் ஆனது என்கிறார். பருப்பொருள் என்பது திடமானது, சக்தியுடையது மற்றும் நகர்தலையுடையது. இடம் என்பது நீளம், உயரம், அகலத்தைக் கொண்டது. காலம் என்பது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தைக் கொண்டது. இவை மூன்றும் இல்லையேல் அல்லது ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. ஏனெனில் இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன. அதேபோல தான் மூவொரு கடவுளும் இருக்கிறார். இன்று தாயாம் திரு அவையானது மூவொரு இறைவனின் திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. இது திருஅவையில் மிக முக்கியமான ஒரு விழா. 1334-ஆம் ஆண்டு திருத்தந்தை 22-ஆம் யோவான் பெந்தகோஸ்தே ஞாயிற்றுக்கு அடுத்து வருகின்ற ஞாயிறை மூவொரு இறைவனின் பெருவிழாவாக கொண்டாட திருஅவைக்கு அழைப்பு கொடுத்தார். வழிபாட்டு ஆண்டின் முதல் பாதிப்பகுதிக்கு முடிவாகவும், மறு பாதிப்பகுதிக்கு தொடக்கமாகவும் இந்த விழா அமைகிறது. நைசீயா -காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட மறையுண்மையே இந்த விழாவாகும். இது திருஅவையின் அடித்தளமாக உள்ளது. இவ்விழாவும் இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நம்மை மூவொரு இறைவன் காட்டும் அன்பில் வளர அழைப்பு தருகிறது.

மூவொரு இறைவன்:

    பேராயர் புல்டன்ஷீன், மூவொரு இறைவனைப்பற்றிக் கூறும்போது, மூன்று கோடுகளால் வரைந்த முக்கோணத்தை நாம் மூன்று கோடுகள் என்று கூறுவதில்லை, மாறாக முக்கோணம் என்றே கூறுகின்றோம். அதுபோல, இறைவன் மூன்று நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் மூன்று மனிதர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், நாம் மூவொரு இறைவன் என்றே கூறுகின்றோம் என்கிறார். கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார், இவர்கள் மூவராக இருந்தாலும் ஒரே கடவுள். இன்றைக்கு மூவொரு இறைவனை புரிந்து கொள்வதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் நமக்கு தரப்படுகிறது. ஒரு குடும்பத்திலிருக்கும் குடும்பத் தலைவர் தன் தந்தைக்கு மகனாகவும், மனைவிக்கு கணவராகவும், பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருப்பதைப் போலவும், மேலும் ஒரு மரம் வெளியே மட்டும் தெரிந்தாலும், மரம், மரத்தின் வேர், வேரில் உயிர்ச்சத்து இருப்பதைப் போலவும், நீரானது திரவ, திட மற்றும் ஆவி நிலைகளில் இருப்பதைப் போலவும் மூவொரு இறைவன் இருக்கிறார். மேலும் ரோஜா ஒன்று சிவப்பாக , மணமுள்ளதாக, மலரின் அமைப்பைப் கொண்டதாக உள்ளது. எரியும் திரி ஒன்றில் ஒளியுண்டு, வெப்பமுண்டு மற்றும் மெழுகுதிரிக்குரிய அமைப்பும் உண்டு. அதேபோல மூவொரு கடவுள் மூன்று தன்மைகளைக் கொண்டிருந்தாலும் ஒரே கடவுளாக இருக்கிறார். மேலும் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்." (மத் 28:19) என இயேசுவே மூவொரு இறைவனின் மறைப்பொருளை வெளிப்படுத்துகிறார்.

மூவொரு இறைவனில் அன்பு:

        யூத மதத்தில் கடவுள் உண்மையான யூதர்களை மட்டுமே அன்பு செய்கிறார் எனவும், மற்றவர்களை வெறுக்கிறார் எனவும் நம்பினர். ஆனால் கிறிஸ்தவத்தில் இறைவன் இந்த உலகிலுள்ள யாவரையும் அன்பு செய்கிறார், அவர் தன்னை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வதில்லை. அவருடைய அன்பு உலகெங்கும், உலகிலுள்ள யாவரிடத்திலும் மூழ்கிக் கிடக்கிறது. அன்பே இறைவனாக இருப்பதே இறையன்புக்கான காரணமாகும்.

தந்தை:-
        தந்தையாகிய கடவுள் இந்த உலகத்தை படைத்து தன் அன்பின் அடையாளமாய் மனிதரிடம் ஒப்படைக்கிறார். தன் அன்பின் பாதையிலிருந்து மாந்தர்கள் விலகி செல்லும் போதெல்லாம் நீதித்தலைவர்களையும், இறைவாக்கினர்களையும் மற்றும் அரசர்களையும் அனுப்பி அவர்களை மீண்டுமாக அன்பின் பாதையில் வழி நடத்துகிறார். இறுதியாக "தனது ஒரே பேறான மகனை அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புக் கூர்ந்தார்" (யோவான் 3:16).

இயேசு:-
    இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்த இயேசு தன் பணி வாழ்வின் மூலமாக இறையன்பை வெளிப்படுத்தினார். இறையாட்சியை எடுத்துரைத்து, நோயாளிகளை குணமாக்கி, தீய ஆவியை விரட்டியடித்து, இறந்தவரை உயிர்ப்பித்து, இறுதியாக அன்பின் மிகுதியால் சிலுவை சுமந்து தன்னுயிரை தந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன் (யோவான் 14:16) என வாக்களித்தார்.

தூய ஆவி:-
        உலகப்படைப்பில் நிறைந்திருந்த ஆவி, இயேசுவின் பிறப்பிலும், திருமுழுக்கிலும் மற்றும் வாழ்விலும் உடனிருந்த ஆவி, பெந்தகோஸ்து நாளில் திருத்தூதர்களை உறுதிப்படுத்தி திரு அவையில் பிறப்பெடுக்க செய்தது. இன்றைக்கு திருமுழக்கு, உறுதிப்பூசுதல் மற்றும் குருத்துவம் என்னும் திருவருட்சாதனங்களின் வழியாக நம்மை உறுதிப்படுத்தி ஆவியின் ஆலயங்களாக அன்பின் பாதையில் வழிநடத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் தன் மக்களின் அழுகுரலை கேட்ட இறைவன் அவர்கள் மேல் கொண்ட அன்பால் அவர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை அளிக்க மோசேவை அழைக்கிறார். ஆக அன்பே இறைவன் என எடுத்துரைப்பது மூவொரு இறைவனை அறிந்து கொள்வதற்கான எளிமையான வழி. கடவுள் ஒருவரே, இவர் தந்தை, மகன் தூய ஆவியார் என்று மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்றும், இவர்கள் யாதொரு வேறுபாடுமின்றி ஒரே அன்பு உறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை மற்றும் கடவுள் தன்மையோடு இருப்பதால் மூவரும் மூன்று கடவுள் அல்ல மாறாக ஒரே கடவுள் என நாம் நம்புகிறோம். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே, வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து தந்தையாகிய இறைவனின் குரல் கேட்டது. (மத் 3:16,17) ஆக இயேசுவின் திருமுழுக்கில் மூவொரு இறைவனும் அவர்களின் அன்புறவும் வெளிப்படுத்தப்படுகிறது.

நம் வாழ்வுக்கு அன்பு

        அன்புறவில் ஒன்றிணைந்த மூவொரு இறைவனை போல, நாமும் அன்புறவில் ஒருவர் மற்றவரோடு ஒன்றிணைய அழைப்புப் பெறுகிறோம். "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்." (யோவான் 17:21) என்னும் இயேசுவின் வார்த்தைகள் இதுவே இறைவிருப்பம் என்பதை எடுத்துரைக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகமும், நாம் நம்மோடு உடனிருப்பவரை அன்பு செய்தால், "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் நம் அனைவரோடும் தங்கும்" (2 கொரி 13:13) என்கிறது. நாம் ஒவ்வொரு முறையும் சிலுவை அடையாளம் வரையும் போதும், ஜெபிக்க துவங்கும் போதும் மூவொரு இறைவனை உச்சரிக்கின்றோம். நம்பிக்கை அறிக்கையை எடுத்துரைக்கின்ற போது மூவொரு இறைவனில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறோம். மூவொரு இறைவன் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய மறைபொருளுமாவார், தந்தை தமது மகனை முழுமையாக அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாக கையளிக்கிறார், அவ்வாறே மகனும் தந்தையை அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாகக் கையளிக்கிறார். இவர்களுடைய பரஸ்பர அன்பிலிருந்து பிறப்பவர்தான் தூய ஆவியார். மூவொரு இறைவனின் அன்பு நம் குடும்ப வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்து தங்களை முழுமையாகக் கையளிக்கின்றனர். இவ்விருவரின் பரஸ்பர அன்பின் கனிதான் குழந்தை. எனவே ஒவ்வொரு குடும்பமும் மூவொரு இறைவனின் குடும்பத்தை அடித்தளமாகக் கொண்டு அன்பு வழி வாழ வேண்டும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

            என்னும் வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். அன்பின் மிகுதியால் தான் மூவொரு இறைவன் தன் மகனையே மனித குல மீட்புக்காக முழுமையாக அர்ப்பணித்தார். அதே அன்பை மூவொரு இறைக்குடும்பத்திற்கும் நம் குடும்பங்களுக்கும் வெளிப்படுத்தி வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Wednesday, May 24, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தூய ஆவியார் பெருவிழா - (ஆண்டு- A) - 28-05-2023 - ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
தூய ஆவியார் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(28 மே  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: திபணி 2: 1-11
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 2: 3b-7, 12-13
நற்செய்தி: யோவான் 20: 19-23

தூய ஆவி: புதுப்பிறப்பின் அடையாளம் 

        ஒரு மனிதன் வாழ்வின் வழியை தேடிக் கண்டறியும் ஆவலோடு இருந்தான். ஆனால், அதைத் தேடுவதற்கான பாதை எது, அதற்கு வழிகாட்டக் கூடிய தக்க நபர் யார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு சந்நியாசியைக் கண்டபோது, அவரிடம் சென்று, "நான் வாழ்வின் வழியை அறிய விரும்புகிறேன். எனக்கு அதற்கான பாதையையும், வழிகாட்டியையும் உங்களால் கூற இயலுமா?" என்று கேட்டான். "உனக்கு வாழ்வின் வழியை போதிக்கக்கூடிய குரு எங்கே இருப்பார், எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியும்!" என்று கூறிய அவர், "உனது குரு ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பார்" என்று கூறி, அந்த மரத்தையும், அவரது முழு உருவத்தையும் துல்லியமாக வர்ணித்தார். அவனும் தனக்கு வழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவரிடமிருந்து விடைபெற்று, அந்த மரத்தையும் குருவையும் தேடி ஊர் ஊராகச் சென்று கொண்டு இருந்தான். அந்த மரமோ குருவோ அவனுக்குத் தட்டுப்படவே இல்லை. முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. யாரோ ஒரு சந்நியாசி சொன்னதை நம்பி, முப்பது வருடங்களை தேடலில் வீணாக்கி விட்டோமே என்று வருந்திய அவன், தனது ஊருக்குத் திரும்பினான். அவனுக்கு வழி சொன்ன சந்நியாசி, அதே மரத்தடியில், வயதாகி அமர்ந்திருந்தார். அப்போதுதான் அவர் வர்ணித்தபடியே அந்த மரமும் அவரும் இருப்பதை கவனித்தான். அவரிடம் சென்று, "இதுதான் அந்த மரம்; நீங்கள்தான் அந்த குரு என்று ஏன் எனக்கு நீங்கள் அப்போதே சொல்லவில்லை? எனது 30 ஆண்டுகளை வீணாக்கி விட்டீர்களே!"என்று கேட்டான். அதற்கு அவர், "நீதான் எனது 30 வருடங்களை வீணாக்கிவிட்டாய்! மிகத் துல்லியமாக இந்த மரத்தைப் பற்றியும், எனது உருவத்தைப் பற்றியும் நான் வர்ணித்தேன். ஆனால், நீயோ, என்னையும் கவனிக்கவில்லை; அந்த மரத்தையும் கவனிக்கவில்லை. உனது தேடலின் ஆவேசம் உனது கண்களை மறைத்திருந்தது. கண் எதிரே உள்ள ஒன்றை அவ்வளவு துல்லியமாக வர்ணித்தும்கூட உன்னால் கண்டுகொள்ள இயலவில்லை என்றால், புறக் கண்ணுக்குப் புலப்படாத, அகக் கண்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய வாழ்வின் வழியை நீ எப்படி கண்டு கொள்ள முடியும்? என்று கேட்டார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. நம் அக கண்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய வாழ்வின் வழியை நமக்கு அறிய செய்பவரை அதாவது நம்மையும் நம்முடைய வாழ்வையும் புதுப்பிறப்பெடுக்க செய்பவருமான தூய ஆவியை புறக்கண்களில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.  தாயாம் திருஅவை இன்று பெந்தகோஸ்தே திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. இது தூய ஆவியாரின் வருகை மற்றும் திருஅவையின் பிறப்பு என இரண்டு முக்கிய நிகழ்வுகளை நினைவுப்படுத்துகிறது. ஆவியால் பிறப்படைந்த நாம் ஒவ்வொருவரும் மீண்டுமாக அவரில் புதுப்பிறப்படைய இவ்விழா நமக்கு அழைப்பு தருகிறது.

            இன்றைய பெந்தகோஸ்தே நாளோடு பாஸ்கா காலம் நிறைவு அடைகிறது. பெந்தகோஸ்தே என்றால் ஐம்பதாம் நாள் என்று பொருள். பழைய ஏற்பாட்டில் பெந்தகோஸ்தே திருவிழாவானது அறுவடையில் விளைந்த முதல் கனியை கடவுளுக்கு நன்றியாக ஒப்புக் கொடுத்து கொண்டாடப்பட்டது.(எண் 29:26, விப 34:22) இந்த நாளில் நிலத்தின் முதல் கனிக்காக, எகிப்திய விடுதலைக்காக, மற்றும் பத்து கட்டளைகளுக்காக என்னும் மூன்று காரணங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு துணையாளராம் தூய ஆவியை அனுப்புவதாக வாக்களித்தார். அது இயேசுவின் உயிர்ப்பிலிருந்து ஐம்பதாவது நாளான பெந்தகோஸ்து நாளில் நிறைவு பெறுகிறது. இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று நிகழ்வுகளும், நமது கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உண்மைகள். இத்தகைய நம்பிக்கையின் மறையுண்மையாம் ஆவியானவரின் பெருவிழாவை இன்று கொண்டாடி மகிழ்கின்றோம். தொடக்கத்தில் நீரில் அசைவாடிய ஆவி (தொநூ 1:2), அன்னை மரியாவை ஆட்கொண்ட ஆவி (லூக் 1:35), எலிசபெத்தம்மாளை ஆட் கொண்ட ஆவி (லூக் 1:41), இயேசுவின் வாழ்வில் நிறைந்திருந்த ஆவி (லூக் 3:22), பெந்தகோஸ்து நாளன்று திருத்தூதர்களின் மீது மட்டுமல்லாது திருஅவையிலுள்ள ஒவ்வொருவர் மீதும் பொழியப்பட்டது. இவையனைத்திலும் ஒன்று மட்டும் பொதுவாகவே இருந்து வந்திருக்கிறது. ஆம், ஆவியானவர் புதுப்பிறப்பின் ஊற்றாக இருந்து கொண்டிருக்கிறார்.

1. பழைய ஏற்பாட்டில் புதுப்பிறப்பு

                 "மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது." (தொநூல் 1:2) என்னும் இறைவார்த்தை ஆண்டவரின் ஆவியே இவ்வுலகம் பிறந்ததற்கு காரணம் என்பதை அறிய வைக்கிறது. படைப்பின் துவக்கத்தில் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதன் மீது, ஆண்டவராகிய கடவுள், 'உயிர்மூச்சை ஊத', மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் (தொநூ 2:7) என வாசிக்கிறோம். இங்கு ஆண்டவரின் ஆவி உயிரின் அடையாளம். மூச்சு இருந்தால் தான் உயிர் வாழ முடியும், ஆண்டவர் தன் உயிர் மூச்சை தந்து நம்மை படைத்தார். தூய ஆவி நமக்கு உயிர் தந்து புதுபிறப்பெடுக்க செய்தார். இதைத்தான் "பள்ளத்தாக்கில் நிறைந்திருந்த எலும்புகள் மீது, நரம்புகள், தசை, தோல் என்று படிப்படியாக இணைக்கப்பட்டு, அவ்வுடல்களில் உயிர்மூச்சு புகுந்ததும், அவை அனைத்தும் மாபெரும் படைத்திரள்போல் நின்றன". (எசே 37:1-10) என்னும் இறைவாக்கினர் எசேக்கியேல் வார்த்தைகளும் நமக்கு எடுத்துரைக்கின்றது. "சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது." (1 சாமு 16:13) சாதாரண மனிதனாக இருந்த ஒருவரை அரசராக புதுப்பிறப்பெடுக்க செய்ததும் ஆண்டவரின் ஆவி தான். ஆக படைப்பில், மனித பிறப்பில், உலர்ந்த எலும்புகள் ஒன்று சேர்க்கப்படுகையில் மற்றும் திருப்பொழிவு செய்யப்படுகையில் என யாவற்றிலும் ஆவியானவரே புதுப்பிறப்பின் ஊற்றாக இருக்கின்றார். மேலும் "நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்" (யோவேல் 2:28) என இறைவன் அன்றே இறைவாக்கினர் வழியாக திருஅவைக்கு தூய ஆவியை முன்னறிவித்திருக்கிறார்.

2. புதிய ஏற்பாட்டில் புதுப்பிறப்பு

            நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். (மத்தேயு 3:11, லூக்கா 3:16) என திருமுழுக்கு யோவான் வரவிருக்கும் இறைமகன் இயேசுவைப் பற்றி மட்டுமல்லாது தூய ஆவியாரின் வருகையைப் பற்றியும் புதிய ஏற்பாட்டில் முன்னறிவித்திருக்கிறார். இயேசு இம்மண்ணுலகில் மனிதனாக அன்னை மரியாவில் உருவெடுக்கவும், தன்னுடைய பணி வாழ்வில் பயணிக்கவும் மற்றும் சிலுவைச் சாவை ஏற்று மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் இயேசுவின் ஆற்றலாக இருந்தது தூய ஆவி. அதனால்தான் அதே தூய ஆவியை தன் பிரசன்னமாக மற்றும் துணையாளராக சீடர்களுக்கு அளிப்பேன் என வாக்களித்தார்.  இயேசு சீடர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்." என்றார். (யோவான் 20:21-22) தன் சீடர்கள் மீது, இயேசு, உயிர் மூச்சை ஊதி அவர்களை புதுப்படைப்பாக மாற்றினார். அதற்கும் மேலாக பெந்தகோஸ்தே நாளில் திருத்தூதர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டார்கள், அன்று திருத்தூதர்கள் மட்டுமல்லாது திருஅவையும் பிறப்படைந்தது. 

3. நம் வாழ்வில் புதுப்பிறப்பு 

        "ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" (திருப்பாடல் 104:30) என்னும் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆவியானவரே நம்மை புதுப்பெடுக்க செய்கின்றார் மற்றும் புதுப்பிக்கின்றார். இயேசுவின் சீடர்கள் தூய ஆவியை பெற்றதையும் மற்றும் தூய ஆவி அவர்களுக்குள் குடி கொண்டதுமென யாவற்றையும் நாம் இரண்டு நிலைகளில் சிந்திக்கலாம். 

அ. அக வாழ்வில் தூய ஆவி

        பெந்தகோஸ்து நாளில் சீடர்கள் தங்களுடைய அக வாழ்வுக்கான ஆவியைப் பெற்றார்கள். தூய ஆவி அகநிலையில் நம்மை ஆவியின் ஆலயமாக மாற்றி புனிதப்படுத்துகிறார். வாழ்வில் ஞானத்தோடும், விவேகத்தோடு நம்மை நடக்க உதவி செய்வது தூய ஆவி. "அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்." (மத் 3:11) இங்கு நெருப்பு தூய்மையின் அடையாளம். தங்கம் நெருப்பிலிடுகின்ற போதுதான் அது தூய்மை அடைகின்றது. அது போலத்தான் தூய ஆவியார் பாவங்களிலிருந்து நம்மை தூய்மையாக்கி புதுப்பிறப்பு என்னும் வாழ்வை தருகிறார்.  தூய ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள், எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்படும்." (யோவான் 20: 23) தூய ஆவியின் கொடைகளையும் மற்றும் வரங்களையும் பெற்ற ஒவ்வொருவரும் மன்னிக்கும் மனநிலையோடு ஆவியானவரால் வழிநடத்தப்படுவீர்கள். மனிதர்கள் பாவம் செய்து இறை உறவிலிருந்து பிரிந்து வாழுகின்ற போதெல்லாம் அவன் மீண்டும் இறைவனில் சரணடைய தூய ஆவியானவர் துணையாக இருக்கிறார். 

ஆ. புற வாழ்வில் தூய ஆவி

                    அக வாழ்வில் குடி கொண்டிருக்கும் தூய ஆவி புறவாழ்வில் இயேசுவுக்கு சாட்சிய வாழ்வு வாழ உதவுகிறார். பெந்தகோஸ்தே நாளில் அக வாழ்வில் ஆவியை பெற்ற சீடர்கள் சாட்சியாய் புற வாழ்வில் நற்செய்தியை பறைசாற்றி பலரும் ஆவியை பெற்றுக் கொள்ள செய்தார்கள். யூதர்களுக்கு பயந்து ஒரு அறையில் முடங்கி கிடந்தவர்கள், தங்களுக்குள் யார் பெரியவர் என்று அன்று போட்டியிட்டவர்கள், தந்தையின் வலப்பக்கத்தில் ஒருவரும் இடப்பக்கத்தில் மற்றொருவரும் அமர வேண்டும் என பதவி ஆசைப்பட்டவர்கள், உயிருக்கு பயந்து இயேசுவை மறுதலித்தவர், இயேசு இறந்ததும் ஓட முயன்றவர்கள் என தங்களது சுயநலம், போட்டி, பொறாமை, பதவி, ஆசை மற்றும் பயம் என்னும் கதவுகளை உடைத்தெறிந்து இயேசுவை பலருக்கும் அறிவித்தார்கள், அதற்கு அவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தூய ஆவியாரே காரணமாகும். மேலும், பேதுரு நிகழ்த்திய அருளுரையைக் கேட்டவர்களில் மூவாயிரம் பேர் மனமாற்றம் பெற்று திருமுழுக்கின் வழியாக தூய ஆவியை பெற்றார்கள். நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க இயலாது என புறவாழ்வில் யூத சங்கத்திற்கு எதிராக சீடர்கள் பேசக்கூடிய சக்தியை தந்தது தூய ஆவி. இந்த தூய ஆவியில் தான் அன்று இயேசுவின் சீடர்கள் மட்டுமல்லாது அவரை பின்பற்றியவர்கள்,  திருத்தொண்டர்கள் மற்றும் முதல் கிறிஸ்தவர்கள் என யாவரும் ஆட்கொள்ளப்பட்டார்கள், இயேசுவுக்கு சான்றும் பகர்ந்தார்கள். 
 
        நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் மற்றும் குருத்துவம் என்னும் திருவருட்சாதனங்களின் வழியாக தூய ஆவியானவரை பெறுகின்றோம். இவை நம்மை ஆவியானவரின் ஆலயங்களாக மாற்றுகிறது. மேலும் "கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்." (உரோமையர் 8:14) எனவே, நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவும், இவ்வுலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருக்கவும் தூய ஆவி உதவுகிறார். “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." (யோவான் 3:5) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியில் பிறந்து இறையாட்சியைக் பற்றிக் கொள்ள இந்த பெந்தகோஸ்தே பெருவிழாவில் முயற்சி செய்வோம். தூய ஆவியால் நாம் இருளிலிருந்து ஒளியை நோக்கி பயணிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Friday, May 19, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழா - (ஆண்டு- A) - 21-05-2023 - ஞாயிற்றுக்கிழமை


🌱விவிலிய விதைகள்🌱
ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழா 
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(21 மே  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: திபணி 1: 1-11
இரண்டாம் வாசகம்: எபேசியர் 1: 17-23
நற்செய்தி: மத்தேயு 28: 16-20

மாட்சிப்படுத்துவோம்... சாட்சியாவோம்...
உறவாடுவோம்...

        கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் தன்னுடைய மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான். தூக்கு கயிறு, விஷம் மற்றும் கத்தி ஆகியவற்றை முன் வைத்து விட்டு எதைக் கொண்டு உயிரைப் போக்கிக் கொள்வது என்னும் குழப்பத்தில் இருந்தான். அவனை பார்த்து கடைசி மகன் கேட்கிறான் சாவதற்கு இத்தனை வழிகள் என்றால், வாழ்வதற்கு ஒரு வழி கூட இல்லையா? மனம் மாறினான், வாழ முடிவு செய்தான். இன்றைக்கு நம்முடைய வாழ்விலும் துன்பம், கவலை, சோதனை மற்றும் நோய் என பல கஷ்டமான நிலைகளில் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நாம் வாழும் மற்றும் வாழவைக்கும் நிலையான இறைவனைப் பற்றி நினைப்பதே கிடையாது. இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவை கொண்டாடுகின்றோம். இதுதான் நம்மை வாழும் நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இயேசுவின் விண்ணேற்றம் கிறிஸ்தவத்தின் மற்றும் அவர் வாழ்வின் ஆறு முக்கியமான பகுதிகளான இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், பெந்தகோஸ்து மற்றும் இரண்டாம் வருகை அகியவற்றுள் ஒன்று. இத்தகைய இயேசுவின் விண்ணேற்றம் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரும் வாழ மூன்று விதமான அழைப்பை தருகிறது.

1. மாட்சிப்படுத்துவோம்...

        இயேசு தன்னுடைய மண்ணக வாழ்வில் இறைவனால் பலமுறை மாட்சிப்படுத்தப்பட்டார். இவர் திருமுழுக்கு பெற்ற போது "இவரே என் அன்பார்ந்த மகன் இவர் பொருட்டு நான் பூரிப்படைக்கிறேன்" என்ற வார்த்தைகளோடு தந்தையால் மாட்சிப்படுத்தப்பட்டார். அதேபோல தாபோர் மலையில் மூன்று சீடர்களோடு ஜெபித்துக் கொண்டிருந்த போதும் மாட்சிப்படுத்தப்பட்டார்.  இவையனைத்துக்கும் மேலாக நம் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த போது இயேசு மாட்சிப்படுத்தப்பட்டார். இவ்வாறாக மண்ணக வாழ்வில் பல வேளைகளில் மாட்சிப்படுத்தப்பட்ட இயேசு விண்ணகத்தில் தன் விண்ணேற்றத்தின் வழியாக  மாட்சிப்படுத்தப்படுகிறார். இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெப மற்றும் ஆன்மீக செயல்களால் இயேசுவை ஒவ்வொரு நாளும் மாட்சிப்படுத்த அழைப்பு பெறுகின்றோம். "நீ என்னை மகிமை செய்யச் செய்ய நான் உன்னை மேன்மேலும் ஆசிர்வதிப்பேன்" என்னும் குழந்தை இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆண்டவரை நமது கிறிஸ்தவ வாழ்வால் மகிமை செய்வோம் அவருடைய அருள் வரத்தை நிறைவாக பெறுவோம்.

2. சாட்சியாவோம்...

              இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளை "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதில்  சீடராக்குதல், திருமுழுக்கு கொடுத்தல் மற்றும் கற்பித்தல் என்னும் மூன்று முக்கிய பணியை இயேசு தன் சீடர்களுக்கு தருகிறார். ஆக இது சாட்சிய வாழ்வுக்கான ஒர் அழைப்பு. நாம் ஒவ்வொருவரும் அவருடைய சாட்சிகளாக மாற வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இருக்கிறது. அவர் பணிவாழ்வை நாம் தொடர்ந்தாற்றி சாட்சிய வாழ்வை வாழ நமக்கு அழைப்பு தருகிறார். இதைத்தான் சீடர்களும் தங்களுடைய வாழ்வில் செய்தார்கள். திருத்தூதரான பவுலும் இதையே தன்னுடைய வாழ்வில் செய்தார். இன்று திருஅவையில் நாம் போற்றும் பல புனிதர்களும் இயேசு விட்டு சென்ற இவ்வழியில் வாழ்ந்தார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அதே வழியில் வாழ நம்முடைய குடும்பங்களிலிருக்கின்ற நம்முடைய பிள்ளைகளுக்கு மற்றும் சகோதர சகோதரிகளுக்கு ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து கிறிஸ்துவை பகிர்ந்தளிப்போம். நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் ஆரம்பம் அவரவர் வாழும் இடங்களில் துவங்க வேண்டும். இயேசுவிடமிருந்து இறுதி கட்டளைகளைப் பெற்றவர்களில் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ இல்லை. அவர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், சீடர்களைப் போல நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும் சாட்சிய வாழ்வு வாழவும் அழைக்கப்படுகிறோம்.  
  
3. உறவாடுவோம்...

               இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பிறகு நாற்பது நாட்கள் தன்னுடைய சீடர்களுக்கு தோன்றி அவருடைய பணியை தொடர்ந்தாற்றுவதற்காக அதாவது சாட்சிய வாழ்வு வாழ்வதற்காக அவர்களை தயாரித்தது மட்டுமல்லாது, அவர்களுக்கு இரண்டு விதமான வாக்குறுதிகளையும் அளித்து விண்ணேற்றம் அடைந்தார். இயேசுவினுடைய இந்த இரண்டு வாக்குறுதிகளும் நம்மை இறைவனில் உறவாட அழைப்பு தருகிறது.

1. தூய ஆவியின் வருகை

            "நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்." (யோவான் 16:7) என இயேசு தன் சீடர்களுக்கு முன்னறிவித்தவாறு துணையாளராம் தூய ஆவியானவரை  பெந்தகோஸ்து நாளில் அனுப்புகிறார். அன்று "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்." (திபணி 2:4) அவரால் தங்களுடைய வாழ்வில் ஒரு மாற்றத்தை கண்டனர், இயேசுவில் நிலைத்திருந்தனர் மற்றும் எத்திசையும் இயேசுவை அறிய அவரை பறைசாற்றினர். இன்றைக்கு இதே தூய ஆவியானவர் நம்மோடும் நம்மிலும் இருக்கிறார். அதனால் நாமும் தூய ஆவியில் உறவு கொண்டு இயேசுவில் நிலைத்திருக்கவும் மற்றும் அவரை யாவருக்கும் பறைசாற்றவும் அழைப்பு பெறுகின்றோம். "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்." (திபணி 2:38) என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவங்களிலிருந்து பாவ மன்னிப்பு பெற மனம் மாறுவோம். அது தூய ஆவியை பெற்றுக் கொள்ள நமக்கு வழி வகுக்கும். ஆவியை நம்முள் உணர்ந்து அவரோடு உறவாடி அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வை தொடர்ந்து வாழ்வோம்.

2. இயேசுவின் இரண்டாம் வருகை

                இயேசுவினுடைய விண்ணேற்றம் அவர் தந்தையிடமிருந்து வந்தவர். மீண்டும் அவர் நமக்காக வருவார் என்பதை எடுத்துரைக்கின்ற அடையாளமாக இருக்கிறது. இயேசு தன்னுடைய விண்ணேற்றத்தின் வழியாக, தான் மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையைத் தருகிறார். அதனால்தான் "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்". (மத்தேயு 28:20) என்னும் வார்த்தைகளில் அவரது உடனிருப்பை நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து, அவரில் உறவாட நாம் அழைப்பு பெறுகின்றோம். இயேசு விண்ணகம் சென்றது போல, நம் வாழ்வின் பயணமும் விண்ணக வாழ்வை மையப்படுத்தியதாக அமைய வேண்டும்."விண்ணகமே நமக்குத் தாய்நாடு" என்ற புனித பவுலின் வார்த்தைகளை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்களும், ஆசைகளும் விண்ணகம் சார்ந்ததாகவே இருந்திடல் வேண்டும். அதற்கு நாம் இறை உறவில் இணைபவர்களாக மாற வேண்டும். விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்தவர், மீண்டும் விண்ணகம் செல்கின்றார். தந்தையாம் கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து நமக்காக பரிந்து பேசுவார். நம்முடைய விண்ணக வாழ்வுக்கு வழிகோலுகின்றார் என்ற நம்பிக்கையில் அவர் உறவில் இணைவோம்.

            ஆக இயேசுவின் விண்ணேற்றம் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு அழைப்பை தருகிறது. இறையாட்சியை பறைசாற்றவும், இறையாட்சியின் விழுமியங்களான அன்பு, அமைதி, நீதி, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றில் அனுதினமும் வாழவும் அழைப்பு பெறுகிறோம். இயேசுவின் விண்ணேற்றம் அவர் தந்தையோடு கொண்டிருந்த உறவையும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியதையும் எடுத்துக்காட்டுகிறது. "தந்தையே உன் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்." (லூக்கா 23: 46) என தன் வாழ்நாள் முழுவதும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய இயேசுவுக்கு அன்பு பரிசு தான் இந்த விண்ணேற்றம். இன்று கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் விண்ணேற்றம் தரும் அன்பு பரிசு அவரை மாட்சிப்படுத்தவும், சாட்சிய வாழ்வு வாழவும் மற்றும் அவரோடு உறவாடவும் பெறும் அழைப்பாகும். அவ்வழைப்பை ஏற்று வாழ்வோம், இறையருளை பெறுவோம்.