Friday, May 19, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழா - (ஆண்டு- A) - 21-05-2023 - ஞாயிற்றுக்கிழமை


🌱விவிலிய விதைகள்🌱
ஆண்டவரின் விண்ணேற்ற பெருவிழா 
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(21 மே  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: திபணி 1: 1-11
இரண்டாம் வாசகம்: எபேசியர் 1: 17-23
நற்செய்தி: மத்தேயு 28: 16-20

மாட்சிப்படுத்துவோம்... சாட்சியாவோம்...
உறவாடுவோம்...

        கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் தன்னுடைய மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான். தூக்கு கயிறு, விஷம் மற்றும் கத்தி ஆகியவற்றை முன் வைத்து விட்டு எதைக் கொண்டு உயிரைப் போக்கிக் கொள்வது என்னும் குழப்பத்தில் இருந்தான். அவனை பார்த்து கடைசி மகன் கேட்கிறான் சாவதற்கு இத்தனை வழிகள் என்றால், வாழ்வதற்கு ஒரு வழி கூட இல்லையா? மனம் மாறினான், வாழ முடிவு செய்தான். இன்றைக்கு நம்முடைய வாழ்விலும் துன்பம், கவலை, சோதனை மற்றும் நோய் என பல கஷ்டமான நிலைகளில் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நாம் வாழும் மற்றும் வாழவைக்கும் நிலையான இறைவனைப் பற்றி நினைப்பதே கிடையாது. இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவை கொண்டாடுகின்றோம். இதுதான் நம்மை வாழும் நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இயேசுவின் விண்ணேற்றம் கிறிஸ்தவத்தின் மற்றும் அவர் வாழ்வின் ஆறு முக்கியமான பகுதிகளான இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், பெந்தகோஸ்து மற்றும் இரண்டாம் வருகை அகியவற்றுள் ஒன்று. இத்தகைய இயேசுவின் விண்ணேற்றம் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரும் வாழ மூன்று விதமான அழைப்பை தருகிறது.

1. மாட்சிப்படுத்துவோம்...

        இயேசு தன்னுடைய மண்ணக வாழ்வில் இறைவனால் பலமுறை மாட்சிப்படுத்தப்பட்டார். இவர் திருமுழுக்கு பெற்ற போது "இவரே என் அன்பார்ந்த மகன் இவர் பொருட்டு நான் பூரிப்படைக்கிறேன்" என்ற வார்த்தைகளோடு தந்தையால் மாட்சிப்படுத்தப்பட்டார். அதேபோல தாபோர் மலையில் மூன்று சீடர்களோடு ஜெபித்துக் கொண்டிருந்த போதும் மாட்சிப்படுத்தப்பட்டார்.  இவையனைத்துக்கும் மேலாக நம் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த போது இயேசு மாட்சிப்படுத்தப்பட்டார். இவ்வாறாக மண்ணக வாழ்வில் பல வேளைகளில் மாட்சிப்படுத்தப்பட்ட இயேசு விண்ணகத்தில் தன் விண்ணேற்றத்தின் வழியாக  மாட்சிப்படுத்தப்படுகிறார். இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஜெப மற்றும் ஆன்மீக செயல்களால் இயேசுவை ஒவ்வொரு நாளும் மாட்சிப்படுத்த அழைப்பு பெறுகின்றோம். "நீ என்னை மகிமை செய்யச் செய்ய நான் உன்னை மேன்மேலும் ஆசிர்வதிப்பேன்" என்னும் குழந்தை இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆண்டவரை நமது கிறிஸ்தவ வாழ்வால் மகிமை செய்வோம் அவருடைய அருள் வரத்தை நிறைவாக பெறுவோம்.

2. சாட்சியாவோம்...

              இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளை "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதில்  சீடராக்குதல், திருமுழுக்கு கொடுத்தல் மற்றும் கற்பித்தல் என்னும் மூன்று முக்கிய பணியை இயேசு தன் சீடர்களுக்கு தருகிறார். ஆக இது சாட்சிய வாழ்வுக்கான ஒர் அழைப்பு. நாம் ஒவ்வொருவரும் அவருடைய சாட்சிகளாக மாற வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக இருக்கிறது. அவர் பணிவாழ்வை நாம் தொடர்ந்தாற்றி சாட்சிய வாழ்வை வாழ நமக்கு அழைப்பு தருகிறார். இதைத்தான் சீடர்களும் தங்களுடைய வாழ்வில் செய்தார்கள். திருத்தூதரான பவுலும் இதையே தன்னுடைய வாழ்வில் செய்தார். இன்று திருஅவையில் நாம் போற்றும் பல புனிதர்களும் இயேசு விட்டு சென்ற இவ்வழியில் வாழ்ந்தார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அதே வழியில் வாழ நம்முடைய குடும்பங்களிலிருக்கின்ற நம்முடைய பிள்ளைகளுக்கு மற்றும் சகோதர சகோதரிகளுக்கு ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து கிறிஸ்துவை பகிர்ந்தளிப்போம். நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் ஆரம்பம் அவரவர் வாழும் இடங்களில் துவங்க வேண்டும். இயேசுவிடமிருந்து இறுதி கட்டளைகளைப் பெற்றவர்களில் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ இல்லை. அவர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், சீடர்களைப் போல நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும் சாட்சிய வாழ்வு வாழவும் அழைக்கப்படுகிறோம்.  
  
3. உறவாடுவோம்...

               இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பிறகு நாற்பது நாட்கள் தன்னுடைய சீடர்களுக்கு தோன்றி அவருடைய பணியை தொடர்ந்தாற்றுவதற்காக அதாவது சாட்சிய வாழ்வு வாழ்வதற்காக அவர்களை தயாரித்தது மட்டுமல்லாது, அவர்களுக்கு இரண்டு விதமான வாக்குறுதிகளையும் அளித்து விண்ணேற்றம் அடைந்தார். இயேசுவினுடைய இந்த இரண்டு வாக்குறுதிகளும் நம்மை இறைவனில் உறவாட அழைப்பு தருகிறது.

1. தூய ஆவியின் வருகை

            "நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்." (யோவான் 16:7) என இயேசு தன் சீடர்களுக்கு முன்னறிவித்தவாறு துணையாளராம் தூய ஆவியானவரை  பெந்தகோஸ்து நாளில் அனுப்புகிறார். அன்று "அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்." (திபணி 2:4) அவரால் தங்களுடைய வாழ்வில் ஒரு மாற்றத்தை கண்டனர், இயேசுவில் நிலைத்திருந்தனர் மற்றும் எத்திசையும் இயேசுவை அறிய அவரை பறைசாற்றினர். இன்றைக்கு இதே தூய ஆவியானவர் நம்மோடும் நம்மிலும் இருக்கிறார். அதனால் நாமும் தூய ஆவியில் உறவு கொண்டு இயேசுவில் நிலைத்திருக்கவும் மற்றும் அவரை யாவருக்கும் பறைசாற்றவும் அழைப்பு பெறுகின்றோம். "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்." (திபணி 2:38) என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவங்களிலிருந்து பாவ மன்னிப்பு பெற மனம் மாறுவோம். அது தூய ஆவியை பெற்றுக் கொள்ள நமக்கு வழி வகுக்கும். ஆவியை நம்முள் உணர்ந்து அவரோடு உறவாடி அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வை தொடர்ந்து வாழ்வோம்.

2. இயேசுவின் இரண்டாம் வருகை

                இயேசுவினுடைய விண்ணேற்றம் அவர் தந்தையிடமிருந்து வந்தவர். மீண்டும் அவர் நமக்காக வருவார் என்பதை எடுத்துரைக்கின்ற அடையாளமாக இருக்கிறது. இயேசு தன்னுடைய விண்ணேற்றத்தின் வழியாக, தான் மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையைத் தருகிறார். அதனால்தான் "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்". (மத்தேயு 28:20) என்னும் வார்த்தைகளில் அவரது உடனிருப்பை நமக்கு வெளிப்படுத்துகிறார். எனவே இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து, அவரில் உறவாட நாம் அழைப்பு பெறுகின்றோம். இயேசு விண்ணகம் சென்றது போல, நம் வாழ்வின் பயணமும் விண்ணக வாழ்வை மையப்படுத்தியதாக அமைய வேண்டும்."விண்ணகமே நமக்குத் தாய்நாடு" என்ற புனித பவுலின் வார்த்தைகளை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நமது எண்ணங்களும், ஆசைகளும் விண்ணகம் சார்ந்ததாகவே இருந்திடல் வேண்டும். அதற்கு நாம் இறை உறவில் இணைபவர்களாக மாற வேண்டும். விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்தவர், மீண்டும் விண்ணகம் செல்கின்றார். தந்தையாம் கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து நமக்காக பரிந்து பேசுவார். நம்முடைய விண்ணக வாழ்வுக்கு வழிகோலுகின்றார் என்ற நம்பிக்கையில் அவர் உறவில் இணைவோம்.

            ஆக இயேசுவின் விண்ணேற்றம் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு அழைப்பை தருகிறது. இறையாட்சியை பறைசாற்றவும், இறையாட்சியின் விழுமியங்களான அன்பு, அமைதி, நீதி, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றில் அனுதினமும் வாழவும் அழைப்பு பெறுகிறோம். இயேசுவின் விண்ணேற்றம் அவர் தந்தையோடு கொண்டிருந்த உறவையும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியதையும் எடுத்துக்காட்டுகிறது. "தந்தையே உன் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்." (லூக்கா 23: 46) என தன் வாழ்நாள் முழுவதும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய இயேசுவுக்கு அன்பு பரிசு தான் இந்த விண்ணேற்றம். இன்று கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் விண்ணேற்றம் தரும் அன்பு பரிசு அவரை மாட்சிப்படுத்தவும், சாட்சிய வாழ்வு வாழவும் மற்றும் அவரோடு உறவாடவும் பெறும் அழைப்பாகும். அவ்வழைப்பை ஏற்று வாழ்வோம், இறையருளை பெறுவோம்.


No comments: