Thursday, June 1, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - மூவொரு கடவுள் பெருவிழா - (ஆண்டு- A) - 04-06-2023 - ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
மூவொரு கடவுள் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(04 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 34: 4b-6, 8-9
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 13: 11-13
நற்செய்தி: யோவான் 3: 16-18

மூவொரு இறைவன் காட்டும் அன்பு

புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் இந்த உலகம் பருப்பொருள், இடம் மற்றும் காலம் ஆகியவற்றால் ஆனது என்கிறார். பருப்பொருள் என்பது திடமானது, சக்தியுடையது மற்றும் நகர்தலையுடையது. இடம் என்பது நீளம், உயரம், அகலத்தைக் கொண்டது. காலம் என்பது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தைக் கொண்டது. இவை மூன்றும் இல்லையேல் அல்லது ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. ஏனெனில் இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன. அதேபோல தான் மூவொரு கடவுளும் இருக்கிறார். இன்று தாயாம் திரு அவையானது மூவொரு இறைவனின் திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. இது திருஅவையில் மிக முக்கியமான ஒரு விழா. 1334-ஆம் ஆண்டு திருத்தந்தை 22-ஆம் யோவான் பெந்தகோஸ்தே ஞாயிற்றுக்கு அடுத்து வருகின்ற ஞாயிறை மூவொரு இறைவனின் பெருவிழாவாக கொண்டாட திருஅவைக்கு அழைப்பு கொடுத்தார். வழிபாட்டு ஆண்டின் முதல் பாதிப்பகுதிக்கு முடிவாகவும், மறு பாதிப்பகுதிக்கு தொடக்கமாகவும் இந்த விழா அமைகிறது. நைசீயா -காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட மறையுண்மையே இந்த விழாவாகும். இது திருஅவையின் அடித்தளமாக உள்ளது. இவ்விழாவும் இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நம்மை மூவொரு இறைவன் காட்டும் அன்பில் வளர அழைப்பு தருகிறது.

மூவொரு இறைவன்:

    பேராயர் புல்டன்ஷீன், மூவொரு இறைவனைப்பற்றிக் கூறும்போது, மூன்று கோடுகளால் வரைந்த முக்கோணத்தை நாம் மூன்று கோடுகள் என்று கூறுவதில்லை, மாறாக முக்கோணம் என்றே கூறுகின்றோம். அதுபோல, இறைவன் மூன்று நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் மூன்று மனிதர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், நாம் மூவொரு இறைவன் என்றே கூறுகின்றோம் என்கிறார். கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார், இவர்கள் மூவராக இருந்தாலும் ஒரே கடவுள். இன்றைக்கு மூவொரு இறைவனை புரிந்து கொள்வதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் நமக்கு தரப்படுகிறது. ஒரு குடும்பத்திலிருக்கும் குடும்பத் தலைவர் தன் தந்தைக்கு மகனாகவும், மனைவிக்கு கணவராகவும், பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருப்பதைப் போலவும், மேலும் ஒரு மரம் வெளியே மட்டும் தெரிந்தாலும், மரம், மரத்தின் வேர், வேரில் உயிர்ச்சத்து இருப்பதைப் போலவும், நீரானது திரவ, திட மற்றும் ஆவி நிலைகளில் இருப்பதைப் போலவும் மூவொரு இறைவன் இருக்கிறார். மேலும் ரோஜா ஒன்று சிவப்பாக , மணமுள்ளதாக, மலரின் அமைப்பைப் கொண்டதாக உள்ளது. எரியும் திரி ஒன்றில் ஒளியுண்டு, வெப்பமுண்டு மற்றும் மெழுகுதிரிக்குரிய அமைப்பும் உண்டு. அதேபோல மூவொரு கடவுள் மூன்று தன்மைகளைக் கொண்டிருந்தாலும் ஒரே கடவுளாக இருக்கிறார். மேலும் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்." (மத் 28:19) என இயேசுவே மூவொரு இறைவனின் மறைப்பொருளை வெளிப்படுத்துகிறார்.

மூவொரு இறைவனில் அன்பு:

        யூத மதத்தில் கடவுள் உண்மையான யூதர்களை மட்டுமே அன்பு செய்கிறார் எனவும், மற்றவர்களை வெறுக்கிறார் எனவும் நம்பினர். ஆனால் கிறிஸ்தவத்தில் இறைவன் இந்த உலகிலுள்ள யாவரையும் அன்பு செய்கிறார், அவர் தன்னை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வதில்லை. அவருடைய அன்பு உலகெங்கும், உலகிலுள்ள யாவரிடத்திலும் மூழ்கிக் கிடக்கிறது. அன்பே இறைவனாக இருப்பதே இறையன்புக்கான காரணமாகும்.

தந்தை:-
        தந்தையாகிய கடவுள் இந்த உலகத்தை படைத்து தன் அன்பின் அடையாளமாய் மனிதரிடம் ஒப்படைக்கிறார். தன் அன்பின் பாதையிலிருந்து மாந்தர்கள் விலகி செல்லும் போதெல்லாம் நீதித்தலைவர்களையும், இறைவாக்கினர்களையும் மற்றும் அரசர்களையும் அனுப்பி அவர்களை மீண்டுமாக அன்பின் பாதையில் வழி நடத்துகிறார். இறுதியாக "தனது ஒரே பேறான மகனை அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புக் கூர்ந்தார்" (யோவான் 3:16).

இயேசு:-
    இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்த இயேசு தன் பணி வாழ்வின் மூலமாக இறையன்பை வெளிப்படுத்தினார். இறையாட்சியை எடுத்துரைத்து, நோயாளிகளை குணமாக்கி, தீய ஆவியை விரட்டியடித்து, இறந்தவரை உயிர்ப்பித்து, இறுதியாக அன்பின் மிகுதியால் சிலுவை சுமந்து தன்னுயிரை தந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன் (யோவான் 14:16) என வாக்களித்தார்.

தூய ஆவி:-
        உலகப்படைப்பில் நிறைந்திருந்த ஆவி, இயேசுவின் பிறப்பிலும், திருமுழுக்கிலும் மற்றும் வாழ்விலும் உடனிருந்த ஆவி, பெந்தகோஸ்து நாளில் திருத்தூதர்களை உறுதிப்படுத்தி திரு அவையில் பிறப்பெடுக்க செய்தது. இன்றைக்கு திருமுழக்கு, உறுதிப்பூசுதல் மற்றும் குருத்துவம் என்னும் திருவருட்சாதனங்களின் வழியாக நம்மை உறுதிப்படுத்தி ஆவியின் ஆலயங்களாக அன்பின் பாதையில் வழிநடத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் தன் மக்களின் அழுகுரலை கேட்ட இறைவன் அவர்கள் மேல் கொண்ட அன்பால் அவர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை அளிக்க மோசேவை அழைக்கிறார். ஆக அன்பே இறைவன் என எடுத்துரைப்பது மூவொரு இறைவனை அறிந்து கொள்வதற்கான எளிமையான வழி. கடவுள் ஒருவரே, இவர் தந்தை, மகன் தூய ஆவியார் என்று மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்றும், இவர்கள் யாதொரு வேறுபாடுமின்றி ஒரே அன்பு உறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை மற்றும் கடவுள் தன்மையோடு இருப்பதால் மூவரும் மூன்று கடவுள் அல்ல மாறாக ஒரே கடவுள் என நாம் நம்புகிறோம். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே, வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து தந்தையாகிய இறைவனின் குரல் கேட்டது. (மத் 3:16,17) ஆக இயேசுவின் திருமுழுக்கில் மூவொரு இறைவனும் அவர்களின் அன்புறவும் வெளிப்படுத்தப்படுகிறது.

நம் வாழ்வுக்கு அன்பு

        அன்புறவில் ஒன்றிணைந்த மூவொரு இறைவனை போல, நாமும் அன்புறவில் ஒருவர் மற்றவரோடு ஒன்றிணைய அழைப்புப் பெறுகிறோம். "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்." (யோவான் 17:21) என்னும் இயேசுவின் வார்த்தைகள் இதுவே இறைவிருப்பம் என்பதை எடுத்துரைக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகமும், நாம் நம்மோடு உடனிருப்பவரை அன்பு செய்தால், "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் நம் அனைவரோடும் தங்கும்" (2 கொரி 13:13) என்கிறது. நாம் ஒவ்வொரு முறையும் சிலுவை அடையாளம் வரையும் போதும், ஜெபிக்க துவங்கும் போதும் மூவொரு இறைவனை உச்சரிக்கின்றோம். நம்பிக்கை அறிக்கையை எடுத்துரைக்கின்ற போது மூவொரு இறைவனில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறோம். மூவொரு இறைவன் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய மறைபொருளுமாவார், தந்தை தமது மகனை முழுமையாக அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாக கையளிக்கிறார், அவ்வாறே மகனும் தந்தையை அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாகக் கையளிக்கிறார். இவர்களுடைய பரஸ்பர அன்பிலிருந்து பிறப்பவர்தான் தூய ஆவியார். மூவொரு இறைவனின் அன்பு நம் குடும்ப வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்து தங்களை முழுமையாகக் கையளிக்கின்றனர். இவ்விருவரின் பரஸ்பர அன்பின் கனிதான் குழந்தை. எனவே ஒவ்வொரு குடும்பமும் மூவொரு இறைவனின் குடும்பத்தை அடித்தளமாகக் கொண்டு அன்பு வழி வாழ வேண்டும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

            என்னும் வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். அன்பின் மிகுதியால் தான் மூவொரு இறைவன் தன் மகனையே மனித குல மீட்புக்காக முழுமையாக அர்ப்பணித்தார். அதே அன்பை மூவொரு இறைக்குடும்பத்திற்கும் நம் குடும்பங்களுக்கும் வெளிப்படுத்தி வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

No comments: