Saturday, April 10, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 11-04-2021- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்🌱  

பாஸ்கா காலம் 2-ஆம் வாரம் ( ஆண்டு- B)

11-04-2021

ஞாயிற்றுக்கிழமை

உயிர்த்த ஆண்டவர் தரும் அமைதி



                           அர்ஜென்டினாவிற்கும் சிலேக்கும் இடையிலான எல்லையில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் லா கம்ப்ரே பாஸின் உச்சியில் உயிர்த்த ஆண்டவரின் சுரூபம் அமைக்கப்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையின் விளைவாக போர் எழலாம் என்னும் சூழலில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அது அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முடிவாக அமைந்தது, இதன் கொண்டாட்டமாக 1904-ஆம் ஆண்டு மார்ச் 13- அன்று போருக்கு பயன்படுத்தப்படும் பீரங்கியை உருக்கி உயிர்த்த ஆண்டவரின் சுரூபம் செய்யப்பட்டு, அமைதியின் சின்னமாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆண்டிஸ் என்னும் மலைப்பகுதியில் நிறுவப்பட்டது.   அன்று மட்டுமல்லாது இன்றும், இரு நாடுகளுக்கு மட்டுமல்லாது உலகம் அனைத்திற்கும், உயிர்த்த ஆண்டவர்  அமைதியை அளிக்கின்ற அமைதியின் சின்னமாக திகழ்கின்றார் என்பதைத்தான் இன்றைய இறைவார்த்தை நமக்குத் தருகின்ற செய்தியாக இருக்கின்றது.

அமைதி:-

               அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். குடிசார் ஒழுங்கின்மை இல்லாத நிலை எனவும் இதனை வரையறுப்பது உண்டு. தனிப்பட்டவர்கள் சார்பிலும் அமைதி என்னும் சொல் பயன்படுகிறது. இது, வன்முறை சாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளதுஎனினும் கிறிஸ்தவத்தில் அமைதி என்னும் சொல் 'ஷாலோம்' என்னும் எபிரேயச் சொல், இது 'நல்வாழ்வு' என பொருள்படும்.  இன்று நம்முடைய சமுதாயம், குடும்பங்கள் மற்றும் மனித  உள்ளங்கள் என அனைத்தும் அமைதியற்ற சூழலில் இருக்கின்றது. இன்று, நம் நாட்டுக்கும், வீட்டுக்கும் மற்றும் உள்ளத்துக்கும்  உயிர்த்த ஆண்டவர் தருகின்ற அமைதி தேவைப்படுகின்றது.

இயேசு தரும் அமைதி:-

            மீட்பின் வரலாற்றில் உயிர்த்த ஆண்டவர் அமைதியைத் தருபவராக இருக்கின்றார். உயிர்ப்புக்கு பிறகு அவர் சீடர்களை சந்திக்கும் நிகழ்வுகளில் எல்லாம் அவர்களிடம் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்று கூறியிருக்கின்றார். இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு என அனைத்தும் இயேசுவே அமைதியை  தருபவராக இருக்கின்றார், இவரே  அமைதியின் சின்னம் என்பதை அவரது வாழ்வே நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றது. இயேசுவின் பிறப்பின் போது வானதூதர்கள் 'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக'(லூக்கா. 2:14) என்று பாடியிருக்கிறார்கள். இயேசு தன்னுடைய பணி வாழ்வில் அமைதியை எடுத்துரைக்கின்றார். மழைப்பொழிவில் "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" (மத்தேயு.5:9) என்று குறிப்பிடுகின்றார். இயேசு சீடர்களிடம் 'நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக'(மத்தேயு.10:5) என்று கூறுகின்றார். இயேசுவை கைது செய்ய வருகின்ற போது பேதுரு படைவீரரின் காதை துண்டித்தார், அப்பொழுது 'உனது வாளை அதன் உறையில் திரும்பப்போடு' (மத்தேயு.26:52) என்று வன்முறையைக் கண்டித்து அமைதியை ஏற்படுத்துகின்றார். சிலுவையில் தான் இறப்பதற்கு முன்பு கூட "தந்தையே இவர்களை மன்னியும்"(லூக்கா.23:34) என்று பகைமை உணர்வை நீக்கி அமைதி ஏற்படுத்துபவராக இருக்கின்றார். உயிர்ப்புக்கு பிறகு இதே அமைதியை அவர் உலகெங்கும் நிலைநாட்ட குறிப்பாக அமைதியற்று, கலங்கிப்போய், குழப்பத்திலிருந்த சீடர்கள் மனதில்  அமைதியை ஏற்படுத்துகின்றார்.

            இன்றைய நற்செய்தி பகுதி உயிர்த்த இயேசுவின் இரண்டு காட்சிகளை முன் வைக்கின்றது. இவ்விரு காட்சிகளிலும் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக'(யோவான். 20: 19, 21, 26) என்று இயேசு மூன்று முறை கூறியிருக்கின்றார். ஒவ்வொரு முறையும் அவர் கூறிய பிறகு மகிழ்ச்சி, தூய ஆவி மற்றும் நம்பிக்கை என மூன்று பண்புகள்  வெளிப்படுவதை இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது.


1. அமைதி தந்த மகிழ்ச்சி

           இன்றைய நற்செய்தியில் இயேசு தனது சீடர்களிடம் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" (யோவான். 20: 19)என்று கூறியவுடன்சீடர்கள் இயேசுவை கண்டு மகிழ்வதை பார்க்கின்றோம். இயேசுவின் அமைதி என்ற வார்த்தையை அவர்களுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுவரை அவர்கள் கலக்கத்தில், துக்கத்தில், வேதனையில் மற்றும் குற்றவுணர்வில் இருந்தார்கள், இயேசுவின் அமைதி என்ற வார்த்தை அவர்களுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை தந்தது. இன்று நம்முடைய வாழ்க்கையிலும் எப்பொழுதெல்லாம் நாம் கலக்கத்தோடு, துக்கத்தோடு, கஷ்டத்தோடு வாழ்கின்றோமோ அப்போதெல்லாம் உயிர்த்த ஆண்டவருடைய அமைதி, நம்முடைய உள்ளத்திலே நிலவினால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.

2. அமைதி தந்த தூய ஆவி

            நற்செய்தியில் இரண்டாவது முறையாக மீண்டும் சீடர்களைப் பார்த்து "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" (யோவான். 20: 21) என்று கூறி அவர்கள் மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்.   "என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்" (யோவான் 14:4, 26) எனும் இறைவாக்கு இவ்வாறு அமைதியில் வெளிப்படுகின்றது. சீடர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தற்கும் இயேசுவின் அமைதி தந்த தூய ஆவி தான் காரணம்.(திருத்தூதர் பணிகள்.2:1-12) இந்த அனுபவம் தான் சீடர்களை உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்றிதந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுக்க செய்தது. இன்றைய இரண்டாம் வாசகம் "தூய ஆவியாரே உண்மை" (1யோவான்.5:6) என்னும் செய்தியையும் நம்முன் வைத்து ஆவியார் நம் மத்தியில்  வாழுகின்ற போது நாம் இறைவனுக்கு ஏற்ற ஒரு வாழ்வை வாழ்வோம், தூய ஆவியாரின் கனிகளும், கொடைகளும் நம்மை அமைதியான, உன்னதமான மற்றும் மகிழ்வான ஒரு வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் என்பதை காட்டுகின்றது. ஆக ஆண்டவர் இயேசு கிறிஸ்து சீடர்களுடைய பணி வாழ்விற்கு, அமைதியின் வழியாய் ஆவியானவரை அனுப்பி, அவர்களை  வழிநடத்துவதை பார்க்கின்றோம். இன்று நம் வாழ்வின் வழிநடத்துதலுக்கும் இயேசுவின் அமைதி தரும் ஆவியானவர் தேவைப்படுகின்றார்.

3. அமைதி தந்த நம்பிக்கை

        "நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்"(திருத்தூதர் பணிகள். 4:32) என்னும் இன்றைய முதல் வாசகத்தின் வழியாய் உயிர்த்த இயேசு தந்த அமைதியின் வெளிப்பாடு அன்றைய தொடக்க கிறிஸ்தவர்களிடத்திலே நம்பிக்கை என்னும் விதையை விதைத்திருக்கின்றது.  இன்றைய நற்செய்தியில் இயேசு "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று கூறி வாழ்த்திய பின், தோமா நம்பிக்கை கொள்வதை பார்க்கின்றோம். நம்பிக்கையற்று இருந்த அவருக்கு இயேசுவின் அமைதி நம்பிக்கையை தந்தது. இன்றும் நமது குடும்பங்களில்  ஒருவர் மற்றவரிடம் நம்பிக்கையற்ற ஒரு சூழல் இருக்கின்றது என்றால், நாம் உயிர்த்த ஆண்டவரை நாடுவோம், அவர் தருகின்ற அமைதி நம்முடைய உள்ளங்களிலே விதைக்கப்படுகின்ற போது, நம் வாழ்வில் இறைவன் மீதும், ஒருவர் மற்றவர் மீதும் நம்பிக்கை வளரும்.

நம் வாழ்வில் அமைதி:-

                இன்று நாடுகளுக்கிடையே போர் எழக்கூடிய சூழல், தொடர் எல்லைப் பிரச்சினை, பொருளாதார மற்றும் வணிக பிரச்சனைகள் என அமைதியற்ற சூழலில் பல நாடுகள் இருக்கின்றன. நம் நாட்டிலும் மாநிலங்களுக்கிடையே தண்ணீர்வேலைவாய்ப்பு, மின்சாரம் மற்றும் வணிகம் என எண்ணற்ற பிரச்சனைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம்முடைய ஊர்களிலே  சாதி, மொழி மற்றும் சமயம் என ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். இதற்கிடையே அரசியல், தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள் என எண்ணற்ற பிளவுகளையும், சண்டைகளையும், சச்சரவுகளையும் மற்றும் அமைதியற்ற சூழ்நிலையையும் இந்த நாடும், சமுதாயமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன.  நமது குடும்பங்களில் பிளவுகளை நாம் பார்க்கின்றோம். பெற்றோருக்கும் - பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் - மனைவிக்கும், சகோதர சகோதரிகளுக்கிடையே, உற்றார் உறவினர்களுக்கிடையே என  எண்ணற்ற பிளவுகள், அமைதியற்ற சூழல்கள், சமுதாயத்திலும், நம் குடும்பங்களிலும் நிலவி கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்லாது, தனி மனிதனுடைய மனங்களும் குழப்பமாகி, குற்ற உணர்வுகளுடன், கவலைக்குள்ளாகி துன்பமுற்று, கலக்கமுற்று, கோபத்தோடு அலைந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய ஒரு நிலை மாற  உயிர்த்த ஆண்டவரின் அமைதி தேவைப்படுகின்றது. அமைதியின் சின்னமாக விளங்கும் உயிர்த்த இயேசுவிடம் அவர் தருகின்ற அமைதியை பெற்று, அதனுடைய வெளிப்பாடுகளான மகிழ்ச்சி, தூய ஆவி மற்றும் நம்பிக்கையை நமது அன்றாட வாழ்க்கையிலே பெற்றுக்கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

 அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF

                                    கும்பகோணம்

Saturday, April 3, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 04-04-2021- ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱   
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

இயேசுவின் உயிர்ப்பு காட்டும் வெளிப்பாடுகள்



"உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார்,

இந்த உலகையே உயிர்த்து விட்டார்,

வென்றார் கிறிஸ்து வென்றார்,
இந்த அகிலத்தை வென்று விட்டார்,

ஆர்ப்பரிப்போமே... அல்லேலூயா,

ஆனந்திப்போமே... அல்லேலூயா,

அல்லேலூயா பாடுவோம்"

எனும் பாடல் வரிகளுக்கேற்ப ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்ப்பு பெருவிழா நம் ஒவ்வொருவருக்கும் ஆர்ப்பரிப்பையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய  விழா. இது நாம் பயணித்த தவக்காலத்தின் உச்சகட்ட விழா. இதை திருத்தந்தை முதலாம் சிங்கராயர் திருச்சபையின் எல்லா விழாக்களிலும் மேலான பெருவிழா என்று  குறிப்பிடுகின்றார். கிறிஸ்தவர்களுக்கு இது மிகப்பெரிய விழா.  இது பாஸ்கா விழா, யூதர்களின் பாரம்பரிய விழா பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய  விழா, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாழ்வுக்கு கடந்து வந்த ஒரு விழா. புதிய ஏற்பாட்டில் இயேசு இறப்பிலிருந்து உயிர்ப்புக்கு கடந்து வந்த விழா. நம்முடைய பாவங்களிலிருந்து நமக்கு மீட்பை தந்த விழா. வரலாற்றில் சாவை வென்ற ஒரு மனிதர் என்றால் அது இறைமகன் இயேசு கிறிஸ்து தான், ஆக இது வரலாற்றை ஊடுருவி உலுக்கிய ஒரு விழா.  வரலாற்றில் சாவை வென்ற ஒரே ஒரு மனிதர் என்றால் அது இயேசு கிறிஸ்து தான்.  இந்த உலகத்தில் பல தலைவர்கள், அரசர்கள், மதத்தலைவர்கள் என பலர் வாழ்ந்தனர், போதித்தனர், தங்களை கடவுள் எனக் கூறினர், ஆனால் யாரும் உயிர்த்தெழவில்லை.  எகிப்து நாட்டில் பிரமிடுகளில் இறந்தவர்களின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் யாரும் அதில் உயிர்த்தெழவில்லை. சொன்னவாறு உயிர்த்தெழுந்த ஒரே மனிதர் இறைமகன் இயேசு கிறிஸ்து மட்டுமே.

              இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா இன்று கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் நான்கு விதமான வெளிப்பாடுகளைத் தருகிறது.

1.
விசுவாசத்தின் பிறப்பு
2.
ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு
3.
பாவங்களுக்கு மீட்பு
4.
சாட்சிய வாழ்வின் அழைப்பு 

1. விசுவாசத்தின் பிறப்பு
                 

                 இயேசுவினுடைய பிறப்போ அல்லது இறப்போ நமக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை அளிக்கவில்லை, மாறாக அவருடைய உயிர்ப்பு தான் கிறிஸ்தவ விசுவாசத்தை தருகிறது.  இயேசுவின் பிறப்பு,   நற்செய்தி, சிலுவைஇறப்பு   மட்டுமே இருந்திருந்தால் இங்கு விசுவாசம் வளர்ந்திருக்காது மாறாக இயேசுவின் உயிர்ப்பு தான் கிறிஸ்தவ விசுவாசத்தை தருகின்றது. சீடர்கள் பயத்திலிருந்து வெளியே வந்ததுநற்செய்தியை அறிவித்தது இயேசுவினுடைய உயிர்ப்பால், எனவே இன்று நாம் நம் விசுவாசத்தை புதுப்பிக்க அழைக்கப்படுகின்றோம். "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்"( ( 1கொரிந்தியர் 15:14) எனும் பவுலடிகளாரின் வார்த்தைக்கெற்ப இயேசுவின் உயிர்ப்பு நம் விசுவாசத்தின் பிறப்பு.

இயேசுவினுடைய உயிர்ப்புக்கு இரண்டு அடையாளங்களை  எடுத்துக் கூறலாம், அதுவே விசுவாசத்தின் வித்துகளாக மாறுகிறது.

A. காலி கல்லறை

              "வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்"யோவான். 20:1 எனும் இறைவார்த்தைகள் காலியான கல்லறை இயேசுவினுடைய உயிர்ப்பை சுட்டிக் காட்டுகின்ற முதல் அடையாளம் என்பதை காட்டுகின்றது.

B. துணிகள்

                           பேதுருவும் இயேசுவினுடைய அன்புச் சீடரும் கல்லறைக்குள் நுழைந்து பார்த்தபொழுது கல்லறையில் சுருட்டி கிடந்த துணிகள், இயேசுவினுடைய உயிர்ப்பை சுட்டிக் காட்டுகின்ற இரண்டாம் அடையாளம்.  (யோவான் 20:6,7 )
  
2.
ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு

                
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்". (யோவான் 11:25) என்று கூறிய இயேசு தான் மட்டும் இறந்து உயிருக்கவில்லை மாறாக அவருடைய உயிர்ப்பில் நமக்கும் பங்கு கொடுத்திருக்கின்றார். இதைத் தான் பவுல் அடிகளார் "இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்". (1 கொரிந்தியர் 15:13) என்கின்றார். ஆக இயேசுவின் உயிர்ப்பு நம் ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு.

3. பாவங்களுக்கு மீட்பு

                   இயேசுவினுடைய இந்த உயிர்ப்பு நம் பாவங்களுக்கு மீட்பு தருகின்றது. நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள், கஷ்டங்கள், பாரங்கள், பிணி, நோய் மற்றும் பேய் அனைத்தும் இயேசு சாவைக் கடந்து வெற்றி பெற்று உயிர்த்ததை போல, இவை நம் வாழ்வை விட்டு மீட்கப்படுகின்றது.

4. சாட்சிய வாழ்வின் அழைப்பு

                    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய இந்த உயிர்ப்பு நம் ஒவ்வொருவரையும் சாட்சிய வாழ்வுக்கு   அழைப்பு தருகின்றது. "மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்". (யோவான். 20:18) எனும் இறை வார்த்தைகளுக்கு ஏற்ப  பெண்ணின் சாட்சியத்தை பெருமையாக ஏற்றுக்கொள்ளாத யூத சமுதாயத்தின் பெண் தான் கண்ட  காட்சியை சாட்சியாக பகிர்ந்து கொள்கின்றார். "இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்". (திருத்தூதர் பணிகள். 10:41) எனும் பேதுருவின் வார்த்தைகள் உயிர்த்த இயேசுவுக்கு அவர் சாட்சியம் பெற்றதை சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாறு மகதலா மரியாவும், பேதுருவும் மற்றும் சீடர்களும் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சி பகர்ந்தார்கள். அதைப்போல நாம் ஒவ்வொருவரும் சாட்சி பகர இந்த பெருவிழா நமக்கு அழைப்பு தருகின்றது.
 

                   கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்கள் என்னும் அடையாளத்தை தாங்கி நிற்கின்றோம்.  இயேசுவினுடைய  உயிர்ப்பை நம்பி, இந்த உயிர்ப்பு நமக்கு மீட்பையும், மறுவாழ்வுக்கான உயிர்ப்பையும் தருகின்றது என ஏற்றுக்கொண்டு அவருக்கு சாட்சிய வாழ்வு வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.
 

அருட்பணி குழந்தை யேசு ராஜன் CMF
                 
கும்பகோணம்