🌱விவிலிய விதைகள்
புனித வாரம்
குருத்து ஞாயிறு
பயணம்
எனது மொபைலுக்கு நேற்று (சனிக்கிழமை) வந்த ஒரு whatsapp செய்தி இது. "வேலைக்கு ஆட்கள் தேவை, நாளை அரசர் வருகிறார், அரசரை சுமக்கும் கழுதையெல்லாம் ஒரு நாள் ஸ்டிரைக். அரசரை சுமக்க கழுதை தேவை, நாளை இந்த வேலைக்கு நீங்கள் தயாரா?"
கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இது ஒரு வேடிக்கையான செய்தியாக இருந்தாலும் இவை இன்றைய குருத்து ஞாயிறை நமக்கு நினைவுபடுத்துகின்றன. குருத்து ஞாயிறு இயேசுவினுடைய பயணத்தை நினைவுபடுத்துகிறது. இது எருசலேம் நகருக்குள் இறைமைந்தனின் பயணம்,
சிலுவை சுமப்பதற்கான பயணம், மீட்பின் பயணம், விடியலுக்கான பயணம், நாம் மீட்புப் பெற தன்னை அர்ப்பணித்த பயணம், சுமைகளை ஏற்றுக்கொள்ள தயாரான பயணம், நிறைவாழ்வை நோக்கிய பயணம், இறைமகன் தன் இறப்பை நோக்கி செல்லும் பயணம் மற்றும் நம் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருகின்ற பயணம். பொதுவாக எருசலேமில் இது போன்ற பயணங்கள் அரசருக்கு, அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும் ஏற்பாடு செய்வதுண்டு ஆனால் இது எதிர்பாராத விதமாக மக்களே ஒன்று கூடி மக்களாக ஏற்பாடு செய்யப்பட்ட மக்களின் பயணம். இந்த பயணம் அதிகார வர்க்கத்திற்கு பயத்தை அளித்த, அவர்களுக்கு எதிரான பயணமாக அமைந்தது.
(A)-வரலாற்றில் இரண்டு பயணங்கள்:
(1)-காந்தியின் தண்டியாத்திரை பயணம்:-
அன்று காந்தியின் தண்டியாத்திரை பயணம், ஆங்கிலேயருக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக அமைந்தது.
(2)-கிறிஸ்டோபர் கொலம்பஸின் பயணம்:-
அன்று கிறிஸ்டோபர் கொலம்பஸின்
பயணம், அமெரிக்கா என்னும் புதிய நாட்டை உலகிற்கு தந்தது.
(B)-விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இரண்டு பயணங்கள்:
(1)-மோசேயின் பயணம்:-
அன்று மோசே எகிப்து நோக்கி பயணித்தது இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது.
(2)-பாலைவன பயணம்:-
இஸ்ராயேல் மக்களின் நாற்பது ஆண்டு பாலைவன பயணம், பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு, இறைவனுடைய மக்களாக அழைத்துச் சென்றது.
(C)-விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இரண்டு பயணங்கள்:
(1)-அன்னை மரியாவின் பயணம்:- அன்னை மரியாள் எலிசபெத்தை நோக்கி அவர் வீடு தேடிச் சென்ற பயணம். இந்த பயணம் எலிசபெத்துக்கும், அவருடைய வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பரிசுத்த ஆவியையும், அன்னையின் உதவியையும் தந்தது.
(2)- திருத்தூதர் பவுலின் பயணம்:- திருத்தூதர் பவுலின் மூன்று திருத்தூது பயணங்கள், இயேசுவை பலருக்கும் குறிப்பாக பிற இனத்தாருக்கு தந்தது.
விவிலியத்திலும் மற்றும் வரலாற்றிலும் பயணங்கள் எதையோ வெளிப்படுத்தி அது புது மாற்றத்தை மற்றும் புது வாழ்வை தருகின்றது. இன்று இயேசுவின் இந்தக் கழுதை பயணம் மற்றும் மக்களின் குருத்தோலை பயணம் எதை நமக்கு காட்டுகின்றது என்று சிந்திப்போம்.
இந்தப் பயணங்கள் மூன்று விதமான செய்திகளை நமக்கு வெளிப்படுத்துகின்றது.
1. இயேசுவின் இறப்பு மற்றும் பாடுகள் 2. தந்தைக்கு கீழ்ப்படிதல்
3. இறைவனின்அன்பு
இயேசுவின் பயணம் வெளிப்படுத்தும் இந்த செய்திகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இவை வெளிப்படுத்துகின்ற அடையாளங்களை சற்று சிந்திப்போம்.
1. எருசலேம் நகர்
எருசலேம் ஒரு பழமையான பெரும் நகர். பணம் படைத்தவர்கள் அதிகம் வாழ்கின்ற ஒரு நகரம். நற்செய்தி நூல்களில் இயேசு எருசலேம் நகருக்கு மூன்று முறை செல்வேன், அங்கு பாடுகள் படுவேன் என்கின்றார்.(லூக்கா. 22:15,24:46, 25:26) ஆக, எருசலேம் நகரை நோக்கி இயேசு பயணிப்பது அவரது இறப்பு மற்றும் பாடுகளை தான் ஏற்கனவே அறிந்திருந்ததை நமக்கு வெளிப்படுத்துகிறது.
2. கழுதை
யூதர்களுக்கு கழுதை தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. பாலஸ்தீனத்தில் கழுதையை மரியாதையோடு பார்த்தனர். அரசர்கள் போருக்குப் போகும் போது குதிரையில் போவார்கள், ஆனால் வரும் போது அமைதியின் மற்றும் வெற்றியின் அரசராக கழுதை மீது வருவார்கள். கழுதை பொதி சுமக்க மட்டுமல்ல, கழுதையின் தாடை எதிரியை அழிக்க பயன்பட்டது. இறைமைந்தன் இயேசுவின் இந்த எருசலேம் பயணம் மீட்பை பெறும் வெற்றி அரசரின் பயணம்.
3. குருத்து
யூதர்களுக்கு குருத்து என்பது சமாதானத்தைத் தந்தது, அது வெற்றியின் அடையாளம். இயேசுவின் எருசலேம் பயணம் மகிழ வேண்டிய தருணம். ஆதி கிறிஸ்தவர்கள் கல்லறையில் குருத்தை வைத்தார்கள், குருத்து மேலோங்கி உயர்ந்து நிற்பது போல இறந்தவர்கள் உயிர் பெற்று எழுவார்கள். இன்று நம் மனங்களும் குருத்தை போல இறைவனை நோக்கி உயர வேண்டும். கிறிஸ்து சாவை வெற்றிகொண்டு உயிர்த்தெழுவார் என்பதை கரங்களில் ஏந்தியிருக்கும் இந்த குருத்துகள் நமக்கு காட்டுகிறது.
4. ஓசன்னா முழக்கம்
"தாவீது அரசரின் மகன் வாழ்க" - பாஸ்கா திருவிழாவிற்கு மக்கள் எருசலேமில் நுழைந்தவுடன் அவர்களை வரவேற்கும் வரவேற்பு கீதம் இது. அரசர்களின் பிடியிலிருந்து விடுபட கடவுளை நோக்கி உதவியை நாடும் கூக்குரல் இந்த முழக்கம். இயேசுவை "சிலுவையில் அறையும்" என்று மக்கள் முழங்குவதற்கான முன் அடையாளம் இந்த ஓசன்னா முழக்கம்.
இவையனைத்தும் இயேசுவின் பொதுநல உணர்வோடு கூடிய பாடுகளை மற்றும் இறப்பை நமக்கு எடுத்து இயம்புகிறது. தந்தையின் மீதுள்ள கீழ்ப்படிதல், தந்தை நம்மீது கொண்ட இறையன்பை நமக்கு இவை வெளிப்படுத்துவனவாக இருக்கிறது.
நமது வாழ்வின் பயணங்கள்:-
இன்று நமது வாழ்வின் பயணங்கள் எப்படி இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் பயணம் ஒரு பொதுநல பயணம், அன்பை மையப்படுத்திய பயணம், மீட்புக்கான பயணம், பிறரை வாழ வைக்கின்ற பயணம். இன்று நம்முடைய பயணங்கள் எப்படி இருக்கிறது? சுயநலத்தோடு கூடிய பயணமாக இருக்கிறதா? நமது பயணங்கள், நமக்காக, நம் வாழ்விற்காக, நம் குடும்பத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கின்ற பயணங்களாக இருக்கிறது. ஆனால், இறைமைந்தனின் இந்த கழுதை பயணம், பிறருக்காக பொதுநலத்தோடு கூடிய பயணமாக இருந்தது. இறை மைந்தனை போல நமது வாழ்வின் சிலுவைகளை ஏற்கும் பிறர்நல மற்றும் பொதுநல பயணத்தை நம் வாழ்வின் பயணங்களாக ஆக்குவோம். நம் வாழ்வின் பயணங்கள் இனிதே தொடங்கட்டும்.
No comments:
Post a Comment