Saturday, October 15, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 29-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 16 -10-2022- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(16 அக்டோபர் 2022)

முதல் வாசகம்: விப 17: 8-13
இரண்டாம் வாசகம்: 2 திமொ 3: 14- 4: 2
நற்செய்தி: லூக் 18: 1-8


விடாமுயற்சி தரும் மாற்றம்

படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த மனிதருக்குப் பேசவோ, நடக்கவோ முடியாது. உடலில் ஒரு விரலைத் தவிர வேறெந்த பாகத்தையும் அசைக்க முடியாது. அந்த நிலையில் இருக்கும் மற்ற எவருமே மரணம் சீக்கிரமாக தன்னிடம் கருணை காட்டாதா என்று ஏங்குவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது. ஆனால் வாஷிங்டன் ரோப்ளிங் (Washington Roebling) என்ற அந்த மனிதரின் உடலைத் தான் விதியால் தொட முடிந்ததே தவிர அவருடைய கனவையும், மன உறுதியையும் அந்த ஒரு பரிதாப நிலையிலும் தொட முடியவில்லை. இத்தனைக்கும் அவர் தன் கனவை நிறைவேற்றும் முயற்சியில் தன் தந்தையை இழந்திருந்தார். தன் உடல் இயக்கத்தையும் இழந்திருந்தார். ஆனால் அவரால் தன் கனவை இழக்க முடியவில்லை. நியூயார்க் நகரத்தில் மன்ஹட்டன் பகுதியையும், லாங் ஐலேண்ட் ப்ரூக்ளின் பகுதியையும் இணைக்க கிழக்கு நதியின் குறுக்கே 5989 அடி நீளமுள்ள தொங்குபாலம் கட்ட தன் தந்தையோடு சேர்ந்து எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் (1870 ஆம் ஆண்டில்) அது போன்ற பாலம் சாத்தியமே அல்ல என்று வல்லுனர்கள் கருதினார்கள். வாஷிங்டன் ரோப்ளிங்கும், அவர் தந்தை ஜான் ரோப்ளிங்கும் இருவருமே இஞ்சீனியர்கள். அவர்கள் சாத்தியம் என்று நம்பினார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியைத் தொடங்கவும் செய்தார்கள். பாலம் கட்டும் பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கட்டுமானப் பணி நடந்த இடத்திலேயே ஒரு விபத்தில் தந்தை ஜான் ரோப்ளிங்க் இறந்து போனார். அந்தப் பணியைத் தொடர்ந்த மகன் வாஷிங்டன் ரோப்ளிங்கும் ஒரு விபத்தில் அடிபட்டு மூளையின் சில பாகங்கள் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எல்லோரும் அந்தப் பாலம் முட்டாள்தனமான முயற்சி என்றும், ராசியுமில்லாதவை என்றும், அந்த விபத்துகள் அதற்கான ஆதாரம் என்றும் விமரிசித்தார்கள். சிகிச்சைக்குப் பின் வாஷிங்டன் ரோப்ளினுக்கு அசையும் ஒரு விரலும், அசையாத மனமும் மட்டுமே எஞ்சி இருந்தன. அவர் அந்த பரிதாப நிலையிலும் உள்ளதை வைத்து முடிந்ததைச் செய்ய எண்ணினார். சில நாட்களில் மனைவி எமிலியுடன் விரலாலேயே தன் கருத்துகளைத் தெரிவிக்கும் ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு பாலம் கட்டும் எஞ்சீனியர்களை வரவழைக்கச் சொன்னார். அவர்களும் வந்தனர். மனைவி மூலம் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கினார். மீண்டும் பாலம் கட்டும் பணி ஆரம்பித்தது. கணவருக்காக எமிலி தானும் கணிதம், கட்டிடக் கலை ஆகியவற்றைக் கற்று அந்தப் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அவர் மேற்பார்வையில் 11 ஆண்டுகளில் அந்தப் பாலம் நிறைவு பெற்றது. வாஷிங்டன் ரோப்ளினின் அந்தக் கனவு 1883ல் ப்ரூக்ளின் பாலம் என்ற பெயரில் நனவாகி வரலாற்றுச் சின்னமானது. அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தார் அமெரிக்க ஜனாதிபதி. விடாமுயற்சி மனித வாழ்வின் கனவுகளையும் மற்றும் இலட்சியங்களையும் அடைய இறைவன் தந்த மாபெரும் கருவி. இதை கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது ஜெப வாழ்வில் பயன்படுத்திட இன்றைய இறைவார்த்தைகளின் வழியாய் இறைவன் நம்மை அழைக்கிறார்.

"இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்." (1 தெசலோனிக்கர் 5:17) என்னும் பவுல் அடிகளாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப இன்றைய நற்செய்தி வாசகம் இடைவிடாது ஜெபிக்க அழைப்பு தருகிறது. இடைவிடாது தொடர்ந்து நீதிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்ற கைம்பெண் மற்றும் நேர்மையற்ற நடுவரின் உவமையை இறைமைந்தன் இயேசு எடுத்துரைத்து அதே விடாமுயற்சியை நம்முடைய வாழ்விலும் கொண்டிருக்க அழைக்கிறார். இன்றைய நற்செய்தி விடாமுயற்சி தரும் இரண்டு வகையான மாற்றத்தை எடுத்துரைக்கிறது.

1. தன்னில் மாற்றம்
2. பிறரில் மாற்றம்

1. தன்னில் மாற்றம்

இன்றைய நற்செய்தியில் விடாமுயற்சியோடு நீதி கேட்டு போராடிக் கொண்டிருந்த கைம்பெண்ணுக்கு விடாமுயற்சியின் பலனாக நீதி கிடைக்கிறது. இது தன்னில் அவர் கண்ட மாற்றத்தை காட்டுகிறது.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் "

என்ற வள்ளுவரின் வரிகள் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். முயற்சி செய்ய செய்ய நமக்குள்ளேயே ஒரு ஆர்வம் வந்துவிடும். நம்மில் ஏற்படுகின்ற இந்த நம்பிக்கையும் ஆர்வமும் நாம் நமது இலக்குகளை மற்றும் இலட்சியங்களை அடைவதற்கு வழி வகுக்கும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் மற்றும் மனம் தளராமல் ஜெபிக்கின்ற பொழுது நிச்சயம் நாம் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகின்றோம். அவருடைய பிள்ளைகளாக மாறுகின்றோம்.

2. பிறரில் மாற்றம்

விடாமுயற்சி நம்மில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. நம்மைச் சார்ந்த மற்றும் நமக்காக உதவி செய்தவர்களையும் மாற்றுகிறது. நற்செய்தியில் நேர்மையற்ற நடுவர் தன்னுடைய நேர்மையற்ற தன்மையிலிருந்து மாறுபட்டு செயல்படுகிறார். கடவுளுக்கு அஞ்சாதவன் மற்றும் மக்களை மதிக்காதவன் தன்னுடைய நேர்மையற்ற தன்மையிலிருந்து மாறி, நேர்மையாக அந்த பெண்ணுக்கு நீதி வழங்குவது அவளது விடா முயற்சியால தான். இன்றைக்கு நமது வாழ்விலும் விடாமுயற்சியுடன் இறைவனை நோக்கி ஜெபிக்கின்ற பொழுது அது நம்முடைய குடும்பங்களுக்கும் ஆசீர்வாதமாக அமையும்.

                    லூக்கா நற்செய்தி 11:5-10-ல் நண்பன் வந்து கதவை தட்டிக் கொண்டே இருக்கின்றான், அவனுடைய தொல்லையின் பொருட்டு அவன் எழுந்து அவனுக்கு தேவையான ரொட்டியை கொடுக்கின்றான், விடா முயற்சி வெற்றி தருகிறது. மத்தேயு நற்செய்தி 15:27-28-ல் இஸ்ராயேல் குலத்தை சாராத கானானிய பெண் விடாமுயற்சியுடன் தொடர்ந்து இயேசுவிடம் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார், இறுதியாக மாற்றத்தை உணர்கிறாள். மாற்கு நற்செய்தி 10:46-52 -ல் பார்வையற்ற பர்த்திமேயு 'இயேசுவே தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று விடாமுயற்சியோடு நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டே இருக்கின்றான், இறுதியாக பார்வையைப் பெறுகிறான். இன்றைக்கு நமது வாழ்விலும் கிறிஸ்தவர்களாகிய நாம் பல வேளைகளில் ஜெபிக்கின்ற போது மனம் தளர்ந்து விடுகின்றோம். விடாமுயற்சியோடு தொடர்ந்து இறைவனிடம் ஜெபிக்க மறந்து விடுகின்றோம். குறிப்பாக, நமது சோதனை மற்றும் துன்பமான காலகட்டங்களில் நாம் இறைவனிடம் நம்பிக்கையோடு தொடர்ந்து ஜெபிக்க தவறி விடுகின்றோம். நான் இறைவன் மீது நம்பிக்கையாக இருக்கின்றேன் மற்றும் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கின்றேன் ஆனால், எனக்கு இறைவன் எதையும் செய்யவில்லை என்று நாம் மனம் தளர்ந்து விடுகின்றோம். நாம் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கின்ற பொழுது இறைவன் அருகே சென்று கொண்டிருக்கிறோம். இறைவனுடைய அருள் வரங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றோம். இது நம்முள் ஏற்படுகின்ற நாம் அறியாத ஒரு மாற்றம். எனவே நாம் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கின்ற பொழுது இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்தவர்களாக ஒவ்வொரு நாளும் இடைவிடாது நம்பிக்கையோடு ஜெபத்தில் அவரோடு இணைவோம்.

மனம் தளராது விடாமுயற்சியோடு செயல்படுவது வெறும் நமது ஜெப வாழ்விற்கு மட்டுமல்லாது, நமது அன்றாட வாழ்வில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் விடாமுயற்சி அடிப்படையாக தேவைப்படுகிறது. நாள்தோறும் குறைந்தபட்சம் ஐந்து பக்கங்களாவது எழுதிவிட வேண்டும் என்று விடாமுயற்சியோடு எழுதியதுதான் பெர்னாட்ஷாவைத் தலைசிறந்த எழுத்தாளர் என்ற வரிசையில் கொண்டு நிறுத்தியது. வெற்றி சாதாரணமாக யாருக்கும் கிடைத்து விடுவதில்லை. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம். அவர் அந்த வெற்றியை அடையும்முன் ஆயிரம்முறை தோற்றிருக்கிறார். அதற்காக அவர் அவருடைய முயற்சியைக் கைவிட்டுவிடவில்லை. தொடர் ஆராய்ச்சி செய்ததன் விளைவாகவே ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் என்னும் உயர்நிலையை தாமஸ் ஆல்வா எடிசன் அடைய முடிந்தது. "அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் " வெற்றி பெற வேண்டுமா? விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழைத்துக் கொண்டு கை கோர்த்து நடந்து பாருங்கள். ஜெபத்தில் மட்டுமல்ல வாழ்விலும் தோள்கொடுக்கும் விடாமுயற்சி, சுவைத்து பாருங்கள்‌. இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

Frகுழந்தை யேசு ராஜன் CMF 

Saturday, October 8, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 28-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 09 -10-2022- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை


திரும்பி வருவோம்...

சில நாட்களுக்கு முன்பு பாலைநிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவையின் கதையைக் வாசித்தேன். அப்பறவை பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு வானத்தூதர் அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "இறைவனைச் சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினார். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று இறைவனைக் கேட்டு சொல்லுங்கள்" என்று வானத்தூதரைக் கேட்டது. "கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று வானத்தூதர் கூறிச் சென்றார். இறைவனை அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "அப்பறவை அதன் இறுதி நாள் வரை இத்துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று இறைவன் பதில் கூறினார். இதைக்கேட்டால் ஏற்கனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய வானத்தூதர், "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள்" என்று இறைவனைப் பணிந்து வேண்டினார். இறைவன் மனமிரங்கி ஒரு ஜெபத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை விளையும் என்று சொல்லி அந்த ஜெபத்தையும் கற்பித்தார். 'இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி' என்பதுவே அந்த ஜெபம். இறைவன் கற்பித்த மந்திரத்தை வானத்தூதரும் அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த வானத்தூதர் அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார். அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது. வானத்தூதருக்கோ மகா ஆச்சர்யம். இதன் வாழ்வின் இறுதி வரை இன்பமே இல்லையென இறைவன் கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் இறைவனைப் பார்க்கச் சென்றார். இறைவனிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். வாழ்வின் இறுதி நாள் வரை அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற நிலை இருந்தது உண்மைதான். ஆனால் 'இறைவா, நீர் அளித்த அனைத்திற்கும் நன்றி' என்ற ஜெபத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி ஜெபித்ததால் நிலைமை மாறியது. பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது. வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது. சூழல் எதுவாயினும் நன்றி சொன்னது. எனவே வாழ்வின் இறுதி வரை பெற வேண்டிய துன்பம் கரைந்து மறைந்தது" என்று இறைவன் பதில் கூறினார். வானத்தூதரின் வழியாக வந்த இறைவனின் வார்த்தையை ஏற்று அதை நாள்தோறும் ஜெபித்ததால் இப்பறவை தன் துன்பத்திலிருந்து விடுதலை அடைந்தது. திரும்பி தன் பழைய நிலையை பெற்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து மற்றும் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் ஜெபித்து, நமது பழைய பாவ நிலையிலிருந்து திருந்தி - திரும்பி இறைவனை நோக்கி வர பொதுக் காலத்தின் 28-ஆம் ஞாயிறு இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு தருகிறது.

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் வந்த பத்து தொழு நோயாளிகள் நலம் பெற்றதற்கு இரண்டு காரணங்களை நாம் கூற முடியும்.

1. ஜெபித்தார்கள்

    பத்து தொழுநோயாளிகளும் இயேசுவிடம் வந்து "ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்று ஜெபிக்கிறார்கள். இந்த ஆழமான ஜெப உணர்வே, தொழுநோயிலிருந்து இவர்கள் விடுதலை பெறுவதற்கு முதல் காரணமாகவும் மற்றும் அடித்தளமாகவும் அமைகின்றது.

2. இறைவார்த்தையின்படி செயல்பட்டார்கள்

பத்து தொழுநோயாளிகளும் இயேசுவிடம் ஜெபித்தது மட்டுமல்லாது அவரது வார்த்தைகளை கேட்டு அதன்படி செயல்பட்டார்கள். "நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காண்பியுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தையை கேட்டு அதை நிறைவேற்றினார்கள். இன்றைய முதல் வாசகத்திலும் அடியவரது வழியாக வந்த இறைவார்த்தையை கேட்டு அதன்படி நடந்த நாமான் குணமடைந்தார்.

"ஜெபமே வாழ்வு" மற்றும் "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" (லூக் 11:28) என்னும் வரிகளுக்கேற்ப இறையாசீரையும், வல்லமையும் பெற்றுக் கொள்வதற்கு ஜெபத்தையும் மற்றும் இறைவார்த்தையையும் நமது வாழ்வாக மாற்ற வேண்டும். இந்த இரு கருவிகளும் தொலைந்து போன நம் வாழ்விலிருந்து, நம்மை, இறைவனை நோக்கி திரும்பி வர வைக்கும். கதையில் வருகின்ற பறவையும், முதல் வாசகத்தில் வாசிக்க கேட்ட நாமானும் மற்றும் நற்செய்தியில் பார்க்கின்ற தொழு நோயாளிகளும் இவ்விரண்டையும் தங்களது வாழ்வாக்கினார்கள். இதனால் இவர்கள் எண்ணற்ற பலனை அடைந்தார்கள். குறிப்பாக, பத்து தொழுநோயாளிகளுள் ஒருவன் மட்டும் இறைவனை நோக்கி திரும்பி வருகின்றான். ஜெபத்தையும் மற்றும் இறைவார்த்தையையும் நாம் வாழ்வாக்கினாலும் அந்த ஒரு தொழுநோயாளியை போல மீண்டும் இறைவனை நோக்கி வருபவர்களாக மாறுவோம். இறைவனை நோக்கி திரும்பி வர வேண்டும் என்ற அந்த ஒருவனின் எண்ணம், அவனை எண்ணற்ற குணங்களில் வளர்த்தது.

1. புகழ் பாடலோடு...

இன்றைய நற்செய்தியில் பத்து தொழுநோயாளிகளுள் "ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்." இயேசுவிடம் திரும்பி வரவேண்டும் என்று ஒரு உணர்வு நம்மிடைய ஏற்படுகின்ற பொழுது நம்முடைய உள்ளங்கள், இறைவனை புகழ்கின்ற உள்ளஙகளாக மாறும் என்பதற்கு இம்மனிதர் ஒரு சாட்சி.

2. நன்றியுணர்வோடு...

அம்மனிதர் ஆண்டவரை நோக்கி திரும்பி வந்தது மட்டுமல்லாது, அவரை போற்றிப் புகழ்ந்து வந்து "அவருக்கு நன்றி செலுத்தினார்."

'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'

என்னும் வள்ளுவரின் குரலுக்கு ஏற்ப நன்றி உணர்வோடு நாம் வாழ்கின்றோம் என்பதன் அடையாளம் தான் இறைவனை நோக்கி திரும்பி வருகின்ற உணர்வு. இன்று நாமும் இறைவன் செய்த அனைத்து நன்மைகளுக்கும் அவர் பால் நன்றி உணர்வோடு, அவரை நோக்கி மீண்டும் வருவோம்.

3. தாழ்ச்சியோடு...

இறைவனை நோக்கி மீண்டும் வந்த மனிதர் சாதாரணமாக நன்றியை கூறாது, அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றி செலுத்துகிறார். இது அவர் நன்றியுணர்வோடு தன்னில் தாழ்ச்சியையும் கொண்டிருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றது. இறைவனை நோக்கி நாம் வருகின்ற பொழுதெல்லாம், இறைவன் நம் வாழ்விற்கான குணங்களையும் மற்றும் கொடைகளையும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார் என்பதன் அடையாளம் தான் இது. தாழ்ச்சி இன்றைக்கு ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையாக தேவைப்படுகின்ற ஒரு நற்குணம், அதை நமது வாழ்வாக்க முயலுவோம்.

4. நம்பிக்கையோடு...


“எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்னும் இயேசுவின் வார்த்தைகள் அம்மனிதர் கொண்டிருந்த இறை நம்பிக்கையை எடுத்துரைக்கின்றது. நாம் கொண்டிருக்கின்ற நமது நம்பிக்கை தான் நம்மை நமது இலக்குகளில் வெற்றி அடைய செய்யும் இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதை நாம் இம்மனிதரின் வாழ்விலிருந்து உணர்ந்து கொள்ளலாம். கிறிஸ்தவர்களாகிய நாமும் நமது கிறிஸ்தவ பயணத்தில் இறை நம்பிக்கை என்னும் படகில் பயணித்தால் நம் வாழ்வு பயணம் மகிழ்வாக அமையும்.

5. சாட்சிய உணர்வோடு...

"கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!" என்னும் இயேசுவின் வார்த்தைகள் இம்மனிதர் ஒரு சமாரியனாக இருந்தாலும் தான் பெற்ற பலனுக்கு நன்றி கூற வேண்டும் மற்றும் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தி அவருக்கு சாட்சியம் பகிர வேண்டும் என்ற ஒரு உணர்வு கொண்டிருந்ததை காட்டுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு சாட்சியம் பகர அழைப்பு பெறுகின்றோம். அவரிடம் திரும்பி வருவது என்பது நமது சாட்சிய வாழ்வை எடுத்துரைப்பதாக அமைகின்றது.

இயேசுவிடமும் மற்றும் இறைவனின் அடியாரிடமும் திரும்பி வந்த தொழுநோயால் குணமடைந்த அந்த நபரும் மற்றும் நாமானும், இன்றைக்கு நாமும் இறைவனை நோக்கி திரும்பி வர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறார்கள். இறைவனை நோக்கி நாம் திரும்பி வருகின்ற போது நாமும் இவர்கள் பெற்ற அதே குணங்களில் வளர்வோம். தாழ்ச்சியோடு இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, அவரை போற்றி புகழ்ந்து நன்றியுணர்வோடு அவருக்கு சாட்சியம் பகர்பவர்களாக மாறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

Frகுழந்தை யேசு ராஜன் CMF 


Friday, September 30, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 27-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 02 -10-2022- ஞாயிற்றுக்கிழமை

 


கடுகளவு நம்பிக்கை கடலளவு மாற்றம்


ஸ்டாலின் என்ற இளைஞன் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தான். நம்பிக்கை இல்லாத அவன் மனதில் விரக்தி குடியிருந்தது. அவனுக்கு போஸ்கோ என்றொரு நல்ல நண்பன் இருந்தான். அவனும் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒருநாள் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சாலையோரப் பூங்காவில் நிழலுக்காக நண்பர்கள் இருவரும் ஒதுங்கினர். ஒரு பட்ட மரம் காய்ந்து போன நிலையில் நின்று கொண்டிருந்தது. ஒரு இலை கூட இல்லை. அதைக் கண்டதும் ஸ்டாலினுக்கு வருத்தம்! மரமே! நீயும் என்னைப் போலவே இருக்கிறாயே!என்னாலும் உன்னாலும் யாருக்கும் பயனில்லை என்று சொல்லி தடவிக் கொடுத்தான். போஸ்கோ அவனிடம், ஏண்டா! இப்படி புலம்ப ஆரம்பிச்சுட்ட! கோடை மழை வந்து விட்டால், இந்த மரம் துளிர் விட ஆரம்பிச்சுடும்! என்றான். சற்று நேரம் கழித்து அவர்கள் வீடு சென்று விட்டனர். நண்பன் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும், ஸ்டாலினின் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நண்பன் சொன்னது போலவே, ஒரிரு நாளில் கோடை மழையும் பெய்தது. பூமி குளிர்ந்ததால் ஆங்காங்கே புல்முளைத்தது. பூங்காவில் இருக்கும் பட்ட மரத்தைப் பார்க்கும் ஆவல் ஸ்டாலினுக்கு வந்தது. அவன் அங்கு சென்று பார்த்த போது, நண்பன் சொன்னது போலவே, பட்டமரத்தில் ஆங்காங்கே இளந்தளிர்கள் முளைத்திருந்தது. ஸ்டாலினின் மனதிற்குள்ளும் நம்பிக்கை துளிர் விட்டது. மரம் தந்த சிறு நம்பிக்கையோடு வேலையை தேட ஆரம்பித்தான். பொதுக்காலம் 27-ஆம் ஞாயிற்றுக்கிழமையின் இன்றைய இறைவார்த்தை வழிபாடு கடுகளவு நம்பிக்கை கொண்டு கடலளவு சக்தியை நம் வாழ்வில் உணர அழைப்பு தருகிறது.

சிறு நம்பிக்கை இருந்தால் மட்டுமே நம் வாழ்வில் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண முடியும் என்ற ஆழமான சிந்தனையை இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது. திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்திமரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என்றார். இன்றைக்கு நமது வாழ்வில் நாம் கொள்கின்ற சிறு சிறு நம்பிக்கை தான் நம்மை வாழ்வில் ஒரு உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். இயேசு தன்னுடைய சீடர்களுக்கு எடுத்துரைக்கின்ற கடுகளவு நம்பிக்கை இன்றைக்கு நமது வாழ்க்கைக்கும் தேவைப்படுகிறது. கடுகளவு நம்பிக்கை என்றால் என்ன? விவிலியத்தில் பல்வேறு பகுதிகளின் பின்னணியில் கடுகளவு நம்பிக்கையின் குணங்களை சிந்திப்போம்.

தியாக நம்பிக்கை:

பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமை இறைவன் தன்னுடைய ஒரே மகனான ஈசாக்கை பலியிட கேட்ட போது அவர் தன் மகனை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்தார். ( தொ. நூல் 21:2-3) ஆக ஆபிரகாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கை தியாக நம்பிக்கை அவருக்காக தன்னுடைய ஒரே மக்களை தியாகம் செய்ய தயாராக இருந்த நம்பிக்கை. நமது வாழ்விலும் நம்பிக்கையின் பொருட்டு எதையும் இழக்க மற்றும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

விடாமுயற்சியோடு நம்பிக்கை:

இயேசுவைத் தேடி வந்த கானானியப் பெண் அவரை நோக்கி "ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" என தன் மகளை குணப்படுத்த தொடர்ந்து கேட்கின்ற பொழுது, இயேசு முதலில் அமைதியாகவும், பின்பு தான் இஸ்ராயேல் குலத்தாருள் காணாமல் போன ஆடுகளாய் இருப்போரிடமே அனுப்பப்பட்டேன். என்றும், அதன் பின்பு பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது முறையல்ல என்றும் சொல்கிறார். ஆனால் அப்பெண் "மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்கள் தின்னுமே" என ஆழமான விசுவாசத்தை வெளிப்படுத்தி இயேசுவின் புதுமையை கண்டுணர்ந்தார். (மத்தேயு 15:21-28) நமது நம்பிக்கையில் விடா முயற்சி என்னும் குணம் இருக்க வேண்டும். கானானிய பெண்ணைப் போல நமது இலக்குகளை அடைவதற்காக தொடர்ந்து நம்பிக்கையோடு முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். கடுகளவு நம்பிக்கை என்பது வெறும் சந்தோஷமான சூழலில் மட்டுமல்லாது கஷ்டமான மற்றும் எத்தகைய சூழலிலும் இருத்தல் வேண்டும்.

முழுமையான நம்பிக்கை:

12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட பெண் இயேசுவின் ஆடையின் விளிம்பை தொட்டால் போதும் என்ற கடுகளவு நம்பிக்கை கொண்டு கடலளவு குணமாக்கும் சக்தியை பெற்று புது வாழ்வை தொடங்கினார். (மத்தேயு 9:20-22) ஆக, நமது நம்பிக்கை வெறும் உடலளவில் அல்லது பேச்சளவில் மட்டும் அல்லாது நமது உள்ளத்தளவில் இருத்தல் வேண்டும். உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்ற நம்பிக்கை என்றும் நிலைத்திருக்கின்ற ஒன்றாகும். நாம் கொள்கின்ற நம்பிக்கை சிறிதளவு இருந்தாலும் அது 100% முழுமையாக இருத்தல் வேண்டும்.

ஆழமான நம்பிக்கை:

இயேசு கப்பர்நாகுமுக்கு சென்றபோது நேற்று தலைவர் ஒருவர் தன்னுடைய மகன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்து கொண்டிருக்கிறான். அப்போது இயேசு, "நான் வந்து அவனை குணமாக்குவேன்" என்று கூற நூற்றுவர் தலைவன் "ஐயா! நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்." என தனது ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தி இயேசுவின் புதுமையை கண்டு கொள்கிறார்.(மத்தேயு 8:5-13) கடுகளவு நம்பிக்கையின் மிக முக்கியமான குணம் ஆழமான நம்பிக்கையாகும்.

இறைவாக்கினர் அபகூக்கு முதல் வாசகத்தில் இறைவனின் வாக்குறுதிகளை குறித்து நம்மிடம் பேசுகிறார். இந்த வாக்குறுதிகளுக்கு உரியவர்களாக நாம் தகுதி பெற வேண்டுமெனின் நம்மிடம் கடுகளவாவது நம்பிக்கை இருத்தல் வேண்டும் என்கிறது இன்றைய இறைவார்த்தை. கடுகளவு நம்பிக்கை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதே ஆண்டவர் நமக்கு கற்றுத் தரும் பாடம்.

நாம் நமது வாழ்வில் எதை சாதிக்க நினைத்தாலும் அதன் மீது முழுமையான, ஆழமான, தியாகம் நிறைந்த மற்றும் விடா முயற்சியோடு கூடிய நம்பிக்கையை வைப்போம். அது நமது வாழ்வின் இலட்சியங்களில் நமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். இவ்வுலகில் யார் யார் மீதோ நாம் வைக்கின்ற நம்பிக்கையை முதலில் நம்முடைய கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளின் மீது வைப்போம். கடுகளவு நம்பிக்கை என்பது நம்முடைய இலட்சியங்களை அடைவதற்கு மட்டுமல்லாது நம்முடைய உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கும் அடித்தளம். சிறு சிறு செயல்களில் நமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் மீது கடுகளவு நம்பிக்கையையாவது வைப்போம். அது அழகான கடலளவு கொண்ட உறவுகளை நம் வாழ்க்கைக்கு தரும். நிலமொன்றை துளைத்துக்கொண்டு முளைக்கும் சிறு துளிரை போல நமது நம்பிக்கை நமக்கு புதுவாழ்வு தரும் என்று நாம் நம்ப வேண்டும்.

அன்புடன்:-

Frகுழந்தை யேசு ராஜன் CMF 

Saturday, September 24, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 26-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 25 -09-2022- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : ஆமோஸ் 6: 1, 3-7 இரண்டாம் வாசகம் : 1 திமொத்தேயு 6: 11-16 நற்செய்தி : லூக்கா 16: 19-31

இடைவெளியில்லா உறவு


                குளக்கரை ஒன்றில் இருவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் மீன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. மற்றொருவருக்கு மீன் எதுவும் கிடைக்கவில்லை, அதை கவனித்த அவர் ஆச்சரியப்பட்டு அவருடைய தூண்டிலை வாங்கி பார்க்கிறார். அதில் புழுவுக்கு பதிலாக ஸ்ட்ராபெரி (Strawberry) பழம் இருந்தது. ஏன் இந்த பழத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது எனக்கு புழு பிடிக்காது அதனால் தான் தூண்டிலில் இந்த பழத்தை வைத்திருக்கிறேன் என்றார். இன்றைக்கு பல வேளைகளில் நாம் கூட, நமக்கு பிடித்தவற்றில் கவனத்தை செலுத்தி கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்மை சார்ந்தவர்களுக்கோ, நம்மை சார்ந்த சூழலுக்கோ மற்றும் நமது இலக்குகளை அடைவதற்கோ, எது தேவை என்பதை பார்க்க மறந்து விடுகின்றோம், இதனால் நமக்கும் பிறருக்கும், நமக்கும் நமது சூழல்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உருவாகி, நம்முடைய இலக்குகளிலும் வாழ்க்கையிலும் தோல்வியை பெறுகின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு எடுத்துரைக்கின்ற உவமையில் வருகின்ற செல்வந்தர் கூட தனக்கென்று ஒரு இடைவெளியை உருவாக்கிக் கொள்கிறார். இது அவருக்கும் அவரது சூழலுக்கும் இடையே உருவான இடைவெளி. விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்ற செல்வந்தர் தன்னிலையை மட்டுமே கவனித்தார். தன் வீட்டின் வாயிலில் நோயுற்று, அவர் மேசையிலிருந்து விழுகின்ற சிறு துண்டுகளால் தன்னுடைய வயிற்றை நிரப்ப விரும்பிய ஏழை இலாசரை கண்டு கொள்ளாமல் பெரும் இடைவெளியை உருவாக்கி விட்டார். இன்றைக்கு நான் எனது வாழ்வில் இத்தகைய இடைவெளியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றேனா? சிந்தித்து பார்க்க அழைப்பு கொடுக்கின்றது பொதுக்காலத்தின் 26-வது ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடு.

உறவு இடைவெளி:
    நற்செய்தியில் வரும் செல்வந்தர் தன் வீட்டு வாயிலிலிருந்த இலாசருக்கு எந்த தொந்தரவும், கஷ்டமும் மற்றும் துன்பமும் தரவில்லை. இங்கு அவர் செய்தது எல்லாம் அவர் உருவாக்கிய இடைவெளி தான். இறைவன் கொடுத்த சொத்துகளோடு மகிழ்வாக, உயர்ந்த ஆடை அணிந்து மற்றும் சுவையான விருந்துண்டு வாழ்ந்த அச்செல்வந்தர் தன் வீட்டு வாயிலிலிருந்த ஒரு சகோதரனை பார்க்க மறந்து விடுகின்றான். அவர் தீமை எதுவும் செய்யவில்லை, ஆனால் அதே வேளையில் நன்மையும் செய்யவில்லை. எனவே இங்கு பெரும் சமுதாய உறவு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. அவர் இறந்த பிறகும் இந்த உறவு இடைவெளி தொடர்கிறது, பாதாளத்திலிருந்து தான் செய்த தவறை உணர்கின்ற பொழுதும், அவர் இலாசரை தன்னுடைய பணியாளனாக பயன்படுத்த நினைக்கின்றான். எனவே, இலாசரை அவரின் சகோதரர்களுக்கு அனைத்தையும் குறித்து எச்சரிக்க அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறான். மீண்டுமாக அவருக்கும் இலாசருக்கும் இடையே உறவு இடைவெளி உருவாகிறது. இன்றைக்கு நாம் எல்லோரும் உறவுகளை வளர்க்க இச்சமுதாயத்தில் வளர்த்தெடுக்கப்படுகிறோம். அப்படியென்றால் இச்சமுதாயத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் நமது சகோதர சகோதரிகளாக நினைத்து மனித நேயம் பேணுவது, அவர்களை மதிப்பது மற்றும் அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வது என்னும் பொறுப்பை நம் சமுதாயம் நம்மிடையே இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நான், எனது குடும்பம், எனது வேலை, எனக்கான பணம் மற்றும் சொத்து என நமக்கு தேவையானவற்றில் அதிக கவனம் செலுத்தி இச்சமுதாயத்திற்கும் நமக்குமிடையே உறவை வளர்க்காத பெரும் இடைவெளியை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்

இடைவெளியின் எச்சரிக்கை:
         இன்றைய முதல் வாசகத்தில் இடைவெளியோடு அதாவது கண்டுகொள்ளாத தன்மையோடு வாழுகின்ற தன் காலத்து செல்வந்தர்களை சாடுகிறார் ஆமோஸ் இறைவாக்கினர். மேலும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் செல்வ ஆசைகளால் வரும் ஆபத்து பற்றியும், அதனால் அதனை விட்டு உனது இடைவெளியை குறைத்து வாழ்வதற்கு முயற்சி செய் என்னும் அழைப்பையும் திருத்தூதர் பவுல் தருகின்றார். இன்னும் இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் உவமையில் வருகின்ற செல்வந்தர் மனித நேயமற்று, தனது வாழ்வில் மட்டும் கவனம் கொண்டு, பிறரை கண்டு கொள்ளாது மற்றும் பிறருக்கு எதையும் பகிராது இடைவெளியை உருவாக்கியதால் அவருக்கு பாதாளம் என்னும் பரிசு தரப்படுகிறது. மேலும், செல்வந்தர் இலாசரை தன்னுடைய சகோதரர்களை எச்சரிக்க அனுப்ப கேட்டுக் கொள்கின்ற பொழுது, மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு என்று ஆபிரகாம் குறிப்பிடுகின்றார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் நாம் உறவுகளை மதிக்காது தவற விடுகின்ற பொழுது எச்சரிக்கை நமக்கும் விடுக்கப்படுகிறது மற்றும் அதற்கான துன்பங்களையும் நாம் அனுபவிக்கின்றோம். நமக்கு சொத்து, பணம் மற்றும் வேலை தான் முக்கியம் என்று பணத்தைச் சார்ந்தவர்களாக வாழுகின்ற பொழுது நம்முடைய குடும்ப உறவுகளுக்கும் நமக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்படுகிறது. நமது வயதான பெற்றோரை விட்டு நாம் தனி குடும்பமாக வாழுகின்ற பொழுது நமது பிள்ளைகள், தாத்தா மற்றும் பாட்டி என்னும் பெரும் உறவு இடைவெளியை குழந்தைகள் பெறுகிறார்கள். இதனால் அவர்களின் அனுபவ கல்வியை இவர்கள் பெறாமலே போய் விடுகிறார்கள். இன்னும் நம்முடைய அன்றாட வேலையும்-குடும்பமும் என்று வாழ்கின்ற பொழுது, நம் அக்கம் பக்கம் வீட்டில் கூட யார் வாழ்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பெரும் இடைவெளியை நாம் உருவாக்கி விடுகின்றோம். எனவே, இத்தகைய எச்சரிக்கையிலிருந்து கவனமாய் இருக்க வாழ்வின் உறவு இடைவெளியை குறைப்போம்.

இடைவெளியில்லா உறவு வாழ்வு:
                     உறவுகள் இல்லாத நிலையில் நாம் செல்வம் அற்றவர் ஆகிவிடுகிறோம்,
பணம் இருந்தும் ஏழையாகி நிற்போம். உறவுகள் சூழ வாழாதவருக்கு மனமகிழ்ச்சி இருக்காது. நமது வாழ்க்கைப் பயணம் முழுக்க உடனிருக்கக்கூடியவர்கள் நம் உறவுகள். கடினமான நேரங்களில் ஆறுதலும் உதவியும் அளிக்கக்கூடியவர்கள். எனவே, தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி, பிள்ளைகள், உறவுகள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் உங்கள் உறவில் இடைவெளி இல்லாமல் போகட்டும். மனிதனின் வாழ்க்கை மனித உறவுகளால் வரையறுக்கப்படுகிறது. நல்ல உறவுகள் எண்ணற்ற பரிசுகளை அள்ளித்தரும். அது உங்களின் பணியில் வெற்றிகள் பெற உதவும். நல்ல உறவினர்களும் நண்பர்களும் உள்ளவர்களே  உலகில்  நிறைவான,  மகிழ்வான  வாழ்க்கை  வாழ்பவர்கள்.  அவ்வாழ்வை 
வாழ இடைவெளி இல்லா உறவை வளர்ப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

Frகுழந்தை யேசு ராஜன் CMF