Friday, September 2, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 23-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 04 -09-2022- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : சீராக்கின் ஞானம் 9: 13-18
இரண்டாம் வாசகம் : பிலமோன் 9b-10, 12-17
நற்செய்தி : லூக்கா 14: 25-33

இயேசுவின் சீடத்துவத்தில் பங்கேற்க …|

பள்ளிக்கூடத்தின் வாயிலில் ஒருவர் பலூன் விற்று கொண்டிருக்கின்றார். அதை ஒரு சிறுமி நிறைய நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். மெதுவாக அந்த சிறுமி பலூன் விற்பவரிடம் சென்று இங்கிருக்கின்ற எல்லா பலூன்களும் பறக்குமா? என்று கேட்கின்றாள். அதற்கு அவர் 'ஆம்' என்கிறார். அந்த சிறுமி மீண்டுமாக எல்லா கலர் பலூன்களும் பறக்குமா? என்று கேட்கின்றாள். அதற்கு அவர் மீண்டுமாக 'ஆம் பறக்குமே' என்கின்றார். அந்த சிறுமி கருப்பு நிற பலூனாக இருந்தாலும் பறக்குமா? என மீண்டும் கேட்கின்றாள். அந்த சிறுமி தான் கருப்பு நிறமாக இருப்பதை நினைத்துக் கொண்டு தான் இவ்வாராக கேட்கின்றாள் என்பதை உணர்ந்த அந்த பலூன் வியாபாரி, அந்த சிறுமியை பார்த்து பலூன் பறப்பது வெளியே உள்ள நிறத்தினால் அல்ல, மாறாக உள்ளே உள்ள கேஸினால் மட்டுமே என்றார். இன்றைக்கு நாமும் பல வேளைகளிலே வெளித்தோற்றத்தை வைத்து, அதை மதிப்பீட்டு அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இயேசு செய்த வெளிப்புற வல்ல செயல்களை பார்த்து பலர் இயேசுவை பின்பற்ற முயன்ற போது, அவரது சீடத்துவத்தில் நுழைவதற்கான நிபந்தனைகளை இயேசு முன்வைப்பதே இன்றைய நற்செய்தி வாசகமாகும். வெறும் வெளிப்புற வல்ல செயல்களை பார்த்து அல்லாது, நமது உட்புற குணங்களை வைத்து மட்டுமே இயேசுவின் சீடத்துவம் சாத்தியமாகும் என்பதை உணர்ந்து கொள்ள அழைப்பு பெறுகின்றோம். கிரேக்க மொழியில் சீடன் என்பதற்கு கொடுக்கப்பட்ட பதம் மதட்டஸ் (mathetes), இதன் பொருள் மாணவன், பயிலுனன் என்பவையாகும். சீடன் என்பவன் குருவோடிருந்து, அவர் எடுத்துரைக்கின்ற யாவற்றையும் கேட்டு, அதன்படி செயல்படுகின்றவன். சீடத்துவத்தின் நிபந்தனைகளை அறிந்து, அதை பின்பற்ற இயலுமா என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
"The Seven Habits of Highly effective people" என்பது Stephen Covey எழுதிய புத்தகம், இவர் இந்த புத்தகத்திலே மனிதனுக்கு தேவையான ஏழு முக்கியமான பழக்கங்களை குறிப்பிடுகின்றார். அதிலே ஏழாவது பழக்கமான 'ரம்பத்தை கூர்மைப்படுத்து' அதாவது Sharpen the saw என்னும் பழக்கத்தை விவரிப்பதற்காக நான்கு விதமான கூர்மைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
1. உணர்வு கூர்மை
2. ஆன்மீக கூர்மை
3. உள்ளத்து கூர்மை
4. உடற் கூர்மை

இந்த நான்கு கூர்மைகளும் மனிதன் தன்னுடைய வாழ்வில் தன்னையே செதுக்கிக் கொள்ள அடிப்படையாக தேவைப்படுகிறது. இயேசுவின் சீடர்களாக வாழ நமக்கும் சில நிபந்தனைகள் தேவைப்படுகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு சீடத்துவ வாழ்விற்கு எடுத்துரைக்கும் நிபந்தனைகளை இந்த நான்கு கூர்மைகளின் அடித்தளத்தில் எடுத்துரைக்கின்றார்.
1. உணர்வு கூர்மை (உணர்வுகளை கடந்து வருதல்...)
“என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது." (லூக்கா 14:26) என நம் உறவுகளின் உணர்வுகளைக் கடந்து, ஏன் நம் உயிரையும் கடந்து, இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரின் சீடர்களாக வாழ நம் உணர்வுகளை கூர்மைப்படுத்த அழைப்பு பெறுகின்றோம். இன்றைக்கு நான் எனது வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்? இந்த உலகில் நம் உறவுகளின் உணர்வுகளைக் காட்டிலும் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம். பல நேரங்களில் எங்கள் வீட்டிற்கு நண்பர்கள் மற்றும் உறவுகள் வந்திருக்கின்றார்கள் என்று இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதாவது ஞாயிறு திருப்பலியில் பங்கேற்காமல், குடும்ப ஜெபமாலையில் செய்யாமல், அதற்கான தயாரிப்பிற்கும், அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையிலும் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே உண்மையான கிறிஸ்தவ சீடத்துவ வாழ்வு. இன்று நம்முடைய உணர்வுகளை கூர்மைப்படுத்தி இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக நாம் மாறுவோம்.

2. ஆன்மீக கூர்மை ( துன்பங்களை கடந்து வருதல்...)
"தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14:27) என்னும் இயேசுவின் வார்த்தைகள் நாம் நமது வாழ்வின் துன்பங்களை மற்றும் சோதனைகளை ஏற்றுக்கொள்ள அழைப்பு தருகிறது. இன்று தன் துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றவனே நாளைய சாதனையாளனாகவும் மாறுகின்றான். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும். எனது சொல்லால், செயல்களால் மற்றும் நான் செய்கின்ற பாவங்களால் ஏற்படுகின்ற துன்பங்கள் என்னும் சிலுவைகளை நானே சுமக்க வேண்டும். இதுவே சீடத்துவத்திற்கான வழியாகவும் அமைகின்றது என்கின்றார் இறைமகன் இயேசு. நாம் நமது வாழ்வின் அன்றாட சிலுவைகளை சுமத்தல் என்பது நம்மை ஆன்மீக கூர்மைக்கு அழைப்பு விடுக்கின்றது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற இந்த மாய உலகிலே எல்லாம் எனக்கு கஷ்டமில்லாமல் கிடைக்க வேண்டும் என்ற ஒரு உணர்வு நம்மிடையே இருக்கின்றது. இப்புதிய சமுதாயத்தின் நாகரீக வளர்ச்சியில் எதுவும் நமக்கு எளிமையாக கிடைப்பதில்லை. உழைப்பும் விடாமுயற்சியும் மற்றும் துன்பங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற மனமும் தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளுகின்ற மனமாகும். இறைமைந்தன் இயேசு கிறிஸ்து அத்தகைய மனதோடு தான் சிலுவையை சுமந்து நமக்கு மீட்பை அளித்தார். தொடக்க கிறிஸ்தவர்களும் அன்று துன்பம் என்னும் சிலுவைகளை ஏற்றுக்கொண்டதால் தான் இன்று கிறிஸ்தவம் வளர்ந்தெழ செய்திருக்கின்றது. எனவே நமது கிறிஸ்தவ வாழ்வில் நாம் அனுபவிக்கும் அன்றாட சோதனைகளையும் மற்றும் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு நமது ஆன்மீக வாழ்வை கூர்மைப்படுத்துவோம்.
3. உள்ளத்து கூர்மை (திட்டமிடுதலும், சிந்தனையும்)
நற்செய்தியில் திட்டமிடுதலையும் சிந்தனையையும் எடுத்துரைப்பதற்காக இயேசு இரண்டு விதமான உவமைகளை எடுத்துரைக்கின்றார். கட்டிடம் கட்டுபவன் அதற்காக திட்டமிடுகின்றான் மற்றும் அதற்கான செலவினங்களை பற்றி யோசிக்கின்றான். போருக்கு செல்லும் அரசன் தான் கொண்டிருக்கின்ற படைவீரர்களைக் கொண்டு எதிர் நாட்டு அரசின் படைகளோடு போராட முடியுமா என சிந்திக்கின்றான் (லூக்கா 14:28-32). இதே போல இயேசுவினுடைய சீடராக மாறுவதற்கு முன், என்னால் இந்த சீடத்துவ வாழ்க்கையை வாழ முடியுமா என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் மற்றும் சீடத்துவ வாழ்விற்கான திட்டமிடலை செய்ய வேண்டும். ஆக திட்டமிடுதலும் ஆழ்ந்த சிந்தனையும் நமது உள்ளத்தில் பிறப்பவையாகும், அதை கூர்மையாக்குதலிலே இவை சாத்தியமாகும். ஆழம் தெரியாமல் காலை விடாதே என்னும் பழமொழிக்கு ஏற்ப நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் யோசித்து சரியாக திட்டமிட்டு செய்ய முயல வேண்டும். நமது வீடுகளில் நடக்கும் திருமணத்திற்கும் மற்ற விசேஷங்களுக்கும் திட்டமிட்டு யோசித்து செயல்படுகின்ற நாம், தனிப்பட்ட ஆன்மீக வாழ்விற்காக சிந்திப்பதும் கிடையாது, திட்டமிடுவதும் கிடையாது. நாம் என்ன படிக்க வேண்டும்? எந்த வேலை செய்ய வேண்டும்? என்னுடைய குடும்பத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை திட்டமிடுகின்ற நாம் நமது ஆன்மீக வாழ்விற்கு எவ்விதமான திட்டமிடுதலையும் சிந்திப்பதையும் செய்வது கிடையாது. ஒவ்வொரு நாளும் நான் அரை மணி நேரம் இறைவார்த்தையை வாசிப்பதற்கு செலவிடுவேன், குடும்ப ஜெபமாலை ஜெபிப்பேன், திருப்பலியில் பங்கேற்பேன், ஆலய நிகழ்வுகளிலும் மற்றும் பக்த சபைகளிலும் முழுமையாக பங்கேற்பேன என பலவிதமான திட்டமிடுதல்கள் நமது கிறிஸ்தவ சீடத்துவம் வாழ்வை ஆழப்படுத்தும்.

4. உடற்சார்ந்த கூர்மை (உடல் ஆசைகளை கடந்து)
"உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14:33) என நம் உடலை அலங்கரிக்கின்ற ஆடைகளை அதாவது நம் உடமைகளை கடந்து, இன்னும் குறிப்பாக உடல் ஆசைகளைக் கடந்தால் தான் இயேசுவின் சீடர்களாக வாழ முடியும் என்கின்றார். இது உடை, நகை, அழகு சாதனங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என உடலை அழகூட்ட மற்றும் அலங்கரிக்க பயன்படுவதில் ஆசை கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகம். அதுவே நமது கிறிஸ்தவ சீடத்துவ வாழ்விற்கு மிகப்பெரிய தடைக்கல்லும் ஆகும். இத்தகைய உடல் ஆசைகளை கடந்து இறைவனுக்கும் மனிதருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ இறைவன் அழைப்பு விடுக்கின்றார்.

ஆக, நம்முடைய உறவுகளை கடந்து நம் உணர்வுகளை கூர்மைப்படுத்தி, துன்பங்களைக் கடந்து ஆன்மீகத்தை கூர்மைப்படுத்தி, ஆழ்ந்த சிந்தனை கொண்டு உள்ளத்தை கூர்மைப்படுத்தி மற்றும் நம்மை அழகுப்படுத்துவதை கடந்து உடலைக் கூர்மைப்படுத்தி இயேசுவின் சீடத்துவத்திற்குள் நுழைவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

                     

காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)



காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)

Thursday, August 25, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 22-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 28 -08-2022- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : சீராக்கின் ஞானம் 3: 17-18, 20, 28-29
இரண்டாம் வாசகம் :
எபிரேயர் 12: 18-19, 22-24a
நற்செய்தி : லூக்கா
14: 1, 7-14

தாழ்ச்சியுடையோர் மாட்சியடைவர்

பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ‘‘ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?’’ என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி ‘‘அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து ‘‘ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?’’ என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் ஒருவன் கேட்டு சென்றான்” என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் ‘‘வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?’’ என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி ‘‘மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்” என்று சொன்னார். அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் தாழ்ச்சியும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார். இன்று தாழ்ச்சியே நமது வார்த்தையாக, வாழ்வாக மற்றும் அடையாளமாக மாறி நம்மை வானளவு உயர்த்துகிறது. பொதுக்காலம் 22வது ஞாயிற்று கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கும் நம் அனைவரையும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு தாழ்ச்சியோடு வாழ அழைப்பு தருகின்றது. 'தாழ்ச்சியுடையோர் மாட்சியடைவர் மற்றும் தாழ்ச்சியுடையோர் இகழ்ச்சியடையார்' என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப தாழ்ச்சியான நமது வாழ்வே நம்மை வானளவு உயர்த்தி, இச்சமுதாயத்தில் நமக்கென ஒரு அடையாளத்தை கொடுக்கிறது.
'Humility' என்னும் தாழ்ச்சிக்கான ஆங்கில வார்த்தையின் மூல வார்த்தை 'humilis' என்னும் இலத்தின் மொழியிலிருந்து பிறப்பெடுக்கிறது. தமிழில் அதன் அர்த்தம் 'நிலம்' அல்லது 'மண்' ஆகும். பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது மண் தான், இது ஒரு போதும் தன்னை உயர்த்தி காட்டாமல் தாழ்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைகிறது. "தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.” (லூக்கா 14:11) என இன்றைய நற்செய்தி வாசகமும், "குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்." (சீராக் 3:17) என இன்றைய முதல் வாசகமும் நம்மை தாழ்ச்சியோடு வாழ அழைப்பு தருகிறது. தாழ்ச்சியோடு வாழ்தலே நம்மை மாட்சிப்படுத்தும் என்கின்றது இறை வார்த்தை. பழைய ஏற்பாட்டில் கோலியாத்து தாவீதை எதிர் கொண்டு வந்த போது ஆணவத்தோடும் தற்பெருமையோடும் வந்தான். ஆனால், தாவீது பணிவோடு தன்னையே தாழ்த்தி, இறைவனை நம்பி கோலியாத்தை வென்றார் (1 சாமுவேல் 16:17). இறைவன் முன்பு தன்னையே தாழ்த்தி கொள்பவர் இறைவனால் உயர்த்த பெறுவார். புதிய ஏற்பாட்டில் "இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" (லூக்கா 2:51-52) ஆக, இயேசு 30-ஆண்டுகள் தாழ்ச்சி என்னும் பண்பில் வளர்ந்தார். அது மட்டுமல்லாது இயேசுவின் இரண்டு முக்கிய செயல்கள் அவரது தாழ்ச்சி என்னும் பண்பை எடுத்துரைக்கிறது‌.
1. மனித உருவெடுத்து சிலுவை சாவை ஏற்றது:-
"அவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்." (பிலிப்பியர் 2:7-9)

2. இயேசு சீடர்களின் பாதங்களை கழுவியது:-
ஒரு சமுதாயத்தில் குருவாக மற்றும் போதகராக இருக்கின்ற ஒரு மனிதர் அவருடைய சீடர்களின் பாதங்களை கழுவி, துடைத்து மற்றும் முத்தமிடுவது அவரில் விளங்கிய தாழ்ச்சி என்னும் பண்பை நமக்கு சுட்டிக் காட்டுகிறது(யோவா 13:14). இயேசு தாழ்ச்சியோடு வாழ்ந்தார், அதனால் எப்பெயருக்கும் மேலாக இறைவன் அவரை உயர்த்தினார். நாமும் அவரை போல இறைவனால் உயர்த்தப்பட தாழ்ச்சியோடு வாழ நம்மையும் அழைக்கிறார். ஆலயத்தினுள் நுழைந்து தன்னையே பெருமையாய்ப் பேசிய பரிசேயனின் வேண்டுதல் கேட்கப்படவில்லை. மாறாக, ஆண்டவரே நான் பாவி. என் மேல் இரக்கமாயிரும் என தாழ்ச்சியோடு செபித்த ஆயக்காரனின் வேண்டுதல் தான் இறைவனால் கேட்கப்படுகிறது (லூக் 18:11-13). தாழ்ச்சியும் பணிந்த மனமும் மிகுதியான ஆசீர்வாதங்களை இறைவனிடமிருந்து நமக்கு பெற்றுத்தருகிறது.

அன்னை மரியாவும், “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என இறைவன் முன்பு தன்னை முழுவதுமாக தாழ்த்தினார். இதைத்தான் "நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார். ஆண்டவர் வலியாரை அரியணியினின்று அகற்றினார். தாழ்ந்தோரை உயர்த்தினார்” என மரியா தான் அடைந்த பேற்றைப் பாடுகிறார் (லூக் 1:51). பிரான்ஸ் நாட்டின் பிரன்னீஸ் மலைத்தொடரில் லூர்து என்ற இடத்திலுள்ள மசபியேல் குகையில் “நாமே அமலோற்பவம்” எனக் கூறிய மாதா, 1958 பிப்ரவரி 11 ஆம் நாள் முதல் பெர்னதெத் என்ற 14 வயது சிறுமிக்கு 18-முறை காட்சி கொடுத்து உலகிற்கு மீட்புச் செய்தியை அறிவித்தார். ஒரு முறை மாதா காட்சி கொடுத்தபோது பெர்னதெத்திடம் “உன் விரலை நீ மண்டியிட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் தரையில் விடு” என்றார். அப்படியே செய்யும் போது நீருற்று கொப்பளித்துக் கொண்டு வெளியே வந்தது. சேறும் சகதியுமான அத்தண்ணீரை நீ குடி” என்றார் மாதா. எந்த வெறுப்பையும் காட்டாதபடி அந்தக் கலங்கிய நீரைக் குடித்தாள் சிறுமி. இதுபற்றி ஒரு காட்சியில் பெர்னதெத் மாதாவிடம் விளக்கம் கேட்டபோது மாதா இவ்வாறு குறிப்பிட்டார். “உனக்குத் தாழ்ச்சி இருக்கிறதா என அறியவே உன்னைக் கலங்கிய நீரைக் குடிக்கச் சொன்னேன். நீ மகிழ்வோடு நான் சொன்னவாறே நடந்து கொண்டதால் உன்னிடம் மிகப்பெரிய இரகசியங்களையும் சொல்ல முன்வந்தேன்” என்றார். தாழ்ச்சி நிறை உள்ளமே இறைவனுக்கு உகந்த இதயம், அவ்விதயத்தை அன்னையை போல நாமும் பெறுவோம்.

"உண்மையில் வாழ்வதே தாழ்ச்சி" என்கிறார் புனித அவிலா தெரசா. "எல்லா நற்பண்புகளையும் இணைக்கும் மாபெரும் நற்பண்பு தான் தாழ்ச்சி, அது இல்லையென்றால் மாலையாகத் கோர்த்த மற்ற நற்பண்புகள் அனைத்தும் சிதறிவிடும்" என்கிறார் புனித ஜான் மரிய வியான்னி. "தாழ்ச்சி எல்லா நற்பண்புகளையும் விட மேலானது" என்கிறார் புனித வின்சென்ட் தெ பவுல். வாழ்க்கையில் எல்லா மனிதருக்கும் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் உண்டு. அதை அடைய பிறரை அவமானப்படுத்துவதும் மற்றும் காயப்படுத்துவதும் சரியான வழி அல்ல. இறைவனில் சரணடைந்து தாழ்ச்சி என்னும் பண்பில் வாழும் போது அவர் நம்மை உயர்த்துவார். இதைத்தான் "ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்" (யாக்கோபு 4:10) என்கிறது இறைவார்த்தை. இன்றைக்கு தாழ்ச்சியோடு வாழ்தலை அடிமைத்தனம் மற்றும் பலவீனம் என்று நினைக்கின்றோம். ஆனால் அது தான் நம்மை வளர்த்தெடுக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. தாழ்ச்சியோடு வாழும் குடும்பங்கள் பிரச்சனைகளை எளிதாக தீர்க்கும் குடும்பங்களாக மாறுகிறது. "தாழ்ச்சியோடு வாழ்தலே இறைவனை அடையும் வழி" என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே நம்மையும் நம் குடும்பங்களையும் உயர்த்தி, நம்மை இறைவனை நோக்கி அழைத்து செல்லும் தாழ்ச்சியை நம் ஆடையாக அணிந்து வாழ இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

                காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)



காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)



Saturday, August 20, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 21-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 21-08-2022- ஞாயிற்றுக்கிழமை

 


இடுக்கமான வாயில் 

(சிலுவை, பொறுமை, தாழ்ச்சி, இயேசு, மீட்பின் வழி)

முதல் வாசகம் : எசாயா 66: 18-21
இரண்டாம் வாசகம் :
எபிரேயர்12: 5-7, 11-13
நற்செய்தி : லூக்கா
13: 22-30

கிரிக்கெட் மற்றும் கால்பந்து என முக்கியமான போட்டிகளை பார்க்க மைதானத்திற்கு செல்லுவதற்கும், வெளிநாட்டவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள் பங்கேற்கும் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் அரங்கிற்கு செல்லுவதற்கும் பொதுவாக ஒரே ஒரு வழியை ஏற்பாடு செய்வதில்லை. விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் செல்லுவதற்கு ஒரு வழியும், பார்வையாளர்கள் செல்லுவதற்கு மற்றொரு வழியும் என பல்வேறு விதமான மனிதர்களுக்கு ஏற்றவாறு பல வழிகள் அமைப்பதை நாம் அறிவோம். ஆனால் இறைவன் தரும் இறையாட்சிக்குள் நுழைய, அவர் தரும் மீட்பை பெற்றுக் கொள்ள நம் எல்லோருக்கும் ஒரே வழியாம் இடுக்கமான வாசல் மட்டுமே உள்ளது, அதில் நாம் நுழைய வருந்தி முயல அழைக்கப்படுகின்றோம். இன்றைய நற்செய்தியில் ஒருவர் இயேசுவிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” (13:23) என யூதர்கள் தான் கட்டளைகளை கடைபிடிக்கிறார்கள், அவர்கள் மட்டுமே மீட்பு பெற தகுதியானவர்கள், அதை இயேசுவே சொல்லட்டும் என்னும் விவிலிய பின்னணியில் கேட்கின்றார். ஆனால் இயேசு அவரிடம் எல்லோருக்கும் மீட்புக்கு ஒரே வழி "இடுக்கமான வாயில்" என்பதை எடுத்துரைகின்றார். இன்றைக்கு நாமும் நமது வாழ்வில் இடுக்கமான வாயில் வழியாய் நுழைய அதன் ஜந்து முக்கிய குணங்களை புரிந்து அதை தமதாக்க வேண்டும்.

1. சிலுவையின் வழி
2. பொறுமையின் வழி
3. தாழ்ச்சியின் வழி
4. இயேசுவின் வழி
5. மீட்பின் வழி

1. சிலுவையின் வழி

இடுக்கமான வாயிலில் எல்லோரும் அவ்வளவு எளிமையாக நுழைய முடியாது, மாறாக கஷ்டப்பட்டு தான் நுழைய இயலும். இறைவன் பயன்படுத்தும் உருவகமான இடுக்கமான வாயில் நம்மை சிலுவைகளை அதாவது நம் வாழ்வின் துன்பங்களை ஏற்றுக் கொள்ள அழைப்பு தருகிறது. அதனால் தான் இயேசு "என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின்பற்றட்டும்" என்கிறார். அதுமட்டுமல்லாது என்னோடு இந்த துன்பக்கிண்ணத்தில் பருகுவதற்கு தயாரா? எனவும் கேட்கிறார். இன்றைக்கு நமது வாழ்வில் நாம் மீட்பை பெற வாழ்வின் சிலுவைகளை அதாவது துன்பங்களை, அவமானங்களை, சோதனைகளை மற்றும் கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு இயேசுவே முன்னுதாரணமாக சிலுவை சுமந்து, பாடுகளை ஏற்று மற்றும் தன்னுயிரை தந்திருக்கிறார். இவையனைத்தும் இயேசு நம் ஒவ்வொருவருக்கும் சிலுவையின் வழியில் வாழ கொடுக்கும் அழைப்பாகும்.

2. பொறுமையின் வழி

பொறுமை கடலினும் பெரியது என்னும் சொல்லாடலுக்கு ஏற்றவாறு இடுக்கமான வாயில் நமக்கு பொறுமை என்னும் நற்குணத்தை கற்றுத் தருகிறது. இடுக்கமான வாயிலில் நாம் நினைத்தவுடன் எல்லோரும் நுழைந்து விட முடியாது. அதற்காக காத்திருந்து ஒருவர் ஒருவராக தான் செல்ல வேண்டும் மற்றும் முழுவதுமாக நம்மை தயாரிக்க வேண்டும். இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றுவதற்கு முன்பு தன்னுடைய தாயிடம் என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை என்கின்றார். மேலும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய சீடர்களிடம் தான் எருசலேம் செல்ல வேண்டும் மற்றும் பாடுகள் பட வேண்டும் என கூறும் போதெல்லாம் அவர் அதற்காக பொறுமையோடு காத்திருந்தது வெளிப்படுகிறது. இவ்வாறு இயேசு கல்வாரி மலையில் தன்னை சிலுவையில் அர்ப்பணித்து மானுடத்திற்கு மீட்பை அளிக்க முப்பத்து மூன்று ஆண்டுகள் காத்திருந்தார். மாறிவரும் இந்த மாய உலகில் எதுவும் துரிதமாக நடந்து விட வேண்டும் என எண்ணுகிறோம், ஆனால் பொறுமையாக காத்திருக்கும் போது நம் இலக்குகளை அடைய இயலும், குடும்பத்தின் பிரச்சனைகளை சரி செய்ய இயலும் மற்றும் நம் வாழ்வு வசந்தமாகும். எனவே பொறுமையோடு நம் நேரத்திற்காக விழிப்பாய் காத்திருப்போம்.

3. தாழ்ச்சியின் வழி

இடுக்கமான வாயிலில் பணிந்து மற்றும் குணிந்து தான் செல்ல இயலும், ஆக இடுக்கலான வாயில் என்னும் உருவகம் நம்மை தாழ்ச்சியோடு வாழ கொடுக்கும் அழைப்பாகும். பெத்லகேமில் இயேசு பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கின்ற ஆலயத்தின் நுழைவு வாயிலானது மிக இடுக்கலான வாயிலாக கட்டப்பட்டிருக்கிறதாம். இது எல்லோரும் சிரம் தாழ்த்தி தாழ்ச்சி என்னும் குணத்தோடு இறைவனிடம் செல்வதற்காக அமைக்கப்பட்டதாம். இயேசு தன்னையே சிலுவையில் தாழ்த்தி நமக்கு மீட்பை கொடுத்தார். அன்னை மரியாள் "இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்." என தன்னை முழுவதுமாக தாழ்த்தினார். இன்றைக்கு நாமும் தாழ்ச்சி என்னும் ஆடையை அணிந்து இறைவன் அருளும் மீட்பை பெற்றுக் கொள்வோம்.

4. இயேசுவின் வழி

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." (யோவான் 14:6) என்னும் வார்த்தைக்கேற்ப இயேசுவே நமக்கு வழியாக இருக்கிறார். அப்படியென்றால் அவரை பின்பற்றுகின்ற சீடர்களாக வாழ நாம் அழைப்பு பெறுகின்றோம். இங்கு இயேசுவின் வழி என்பது சீடத்துவத்தின் வழியாகும், இயேசுவை பின்பற்றும் சீடத்துவமே நமக்கு மீட்பை தரும்.

5. மீட்பின் வழி

இடுக்கலான வழி மீட்பின் வழியாகும், ஆக மேற்கண்ட நான்கு நற்குணங்களை கொண்டு இடுக்கலான வாயிலில் நுழையும் போது நாம் இறையாட்சிக்குள் நுழைகின்றோம், அவர் தரும் மீட்பை பெறுகின்றோம். அத்தகையோராய் வாழ்வோம்.

இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

                     

காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)


காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)




Saturday, August 13, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 20-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 14 -08-2022- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : எரேமியா 38: 4-6, 8-10
இரண்டாம் வாசகம் :
எபிரேயர் 12: 1-4
நற்செய்தி : லூக்கா 12:49-53

"மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்"

ஆதிமனிதனின் முதல் கண்டுபிடிப்புக்கு அடித்தளமாக இருந்தது கற்கள். கற்களைக் கொண்டுதான் மனிதன் அன்று முதல் கருவிகளை மற்றும் சக்கரத்தை கண்டுபிடித்தான். மேலும் இந்த கற்களை உரசுகின்ற போது அவன் நெருப்பையும் கண்டு கொண்டான். நெருப்பு மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, ஏனென்றால் இந்த நெருப்பு தான் மனிதன் தன்னை விலங்குகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்பட்டது, மனிதனின் வாழிடத்தை காட்டிக் கொடுத்தது, இரவிலும் பணி செய்ய விளக்கை கண்டுபிடிக்க காரணமாயிருந்தது மற்றும் இதே நெருப்பு தான் மனிதன் உண்ட இறைச்சியையும் மற்றும் காய்களையும் சுட்டு மற்றும் சமைத்து சாப்பிடுவதற்கு அடிப்படையாக இருந்தது. ஆக, நெருப்பு ஆதிமனிதனுக்கு நாகரிக வளர்ச்சியின் துவக்கமாக அமைந்தது என்று கூறலாம். இன்றைக்கு இதே நெருப்பு தான் நம்முடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது. பொதுக்காலத்தின் 20-வது ஞாயிற்று கிழமையாகிய இன்றைய இறைவார்த்தை வழிபாடு கிறிஸ்தவ வாழ்வை புதுப்பிக்க கிறிஸ்து அளிக்கும் நெருப்பை அதாவது தீயை நம்முன் வைக்கின்றது.

இன்றைய நற்செய்தியை வாசிக்கின்ற போது இயேசுவின் வார்த்தைகள் நம் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகிறது. இயேசுவின் பிறப்புக்குப் பிறகு "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!" என்று வானதூதர்கள் புகழ்ந்து பாடினார்கள் (லூக்கா 2: 13-14). இயேசு தம் சீடர்களை இருவர் இருவராக பணிக்கு அனுப்புகின்ற பொழுது, நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் அவர்களுக்கு வாழ்த்து கூறுங்கள். நீங்கள் கூறும் அமைதி அவர்கள் மேல் தங்கட்டும் என்கிறார் (மத்தேயு 10:12-13). இயேசு"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்." (யோவான் 14:27) மற்றும் "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்"( மத்தேயு 5:9) என்று பறைசாற்றுகிறார். இயேசு தன் உயிர்ப்புக்கு பிறகு சீடர்களை சந்திக்கின்ற பொழுதெல்லாம் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்கிறார். இவ்வாறாக அவருடைய பிறப்பு, பணி வாழ்வு மற்றும் உயிர்ப்புக்கு பிறகு உள்ள காட்சிகள் அனைத்தும் இயேசு அமைதியை பறைசாற்றுபவர் என்பதை காட்டுகிறது. பிறகு ஏன் இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகள் "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்", "அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்" என்கிறது. இன்றைய நற்செய்தியின் பகுதிக்கும் அதனைத் தொடர்ந்துள்ள மற்ற பகுதிகளுக்கும், இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மூன்று தவறான எண்ணங்கள் காரணங்களாக அமைகின்றது.
1. மெசியா மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த மட்டுமே வந்தார்.
2. மெசியா இன்னும் வரவே இல்லை.
3. மனிதன் கடவுளோடு அமைதி ஏற்படுத்த தேவையில்லை.

அதுமட்டுமல்லாது, இயேசு இம்மண்ணுலகில் நீதியை நிலைநாட்டி இறையாட்சியை அறிவிக்க விரும்பினார்‌, எனவே தான் தீ மூட்ட வந்தேன் என்கிறார். இங்கு இயேசு எடுத்துரைக்கின்ற தீ, நன்மையிலிருந்து தீமையை பிரித்தெடுக்கும் மற்றும் பயனுள்ளதிலிருந்து பயனற்றவையை பிரித்தெடுக்கும், இது தான் இயேசு எடுத்துரைக்கும் பிளவுமாகும். இறுதி நாளில் நீதியின் அரசராக நன்மை செய்தோரையும் மற்றும் தீமை செய்தோரையும் பிரித்தெடுத்து நீதியை நிலைநாட்டி, உண்மையான அமைதியை தரும் இறையாட்சியை அமைக்கின்றார்.

விவிலியத்தில் "தீ" என்னும் வார்த்தை பல அர்த்தங்களை எடுத்துரைக்கிறது.

1. இறை பிரசன்னம்:
பழைய ஏற்பாட்டில் இறைவன் மோயீசனை அழைக்கின்ற போது எரியும் முட்புதரில் தன்னுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறார் (விப 3:1-10). இங்கு "தீ" இறைபிரசன்னத்தின் அடையாளமாக மாறுகிறது.
2. இறைத்தூய்மை:
இறைவன் எசாயாவை அழைத்த போது நான் தூய்மையற்ற உதடுகளை கொண்டிருக்கின்றேன் என்று அவர் கூறியபோது, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார் ஆண்டவர் (எசாயா 6:7). இங்கு "தீ" இறைத்தூய்மையின் அடையாளமாக இருக்கிறது.

3. இறை வல்லமை(தூய ஆவி)
புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்." (லூக்கா 3:16) என கூறுவது "தீ" தூய ஆவியின் இறைவல்லமையின் அடையாளமாக இருக்கிறது. பெந்தகோஸ்து பெருவிழாவின் போது நெருப்பு நாவுகளின் உருவில் இறங்கி வந்த தூய ஆவி சீடர்களுக்கும், அன்னை மரியாவுக்கும் இறை வல்லமையை தருவதை பார்க்கின்றோம். ( திபணி 2:3)

4. இறைத்தீர்ப்பு:
"தீ" இறைத்தீர்ப்பின் அடையாளமாகவும் அமைகிறது. "நற்கனி தரா மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்” (லூக்கா 3:9) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் இறைவன் தீமையை, பயனற்றதை, நற்கனி தரா மனிதர்களை என யாவற்றையும் தீயிலிட்டு அழித்து நீதியையும் மற்றும் நிரந்தர நிலையான அமைதியையும் மண்ணுலகில் நிலைநாட்டுவார்.

கிறிஸ்து ஏற்படுத்தும் தீயும் நமது வாழ்வும்

ஆக கிறிஸ்து இம்மண்ணில் தீயை மூட்ட வந்தேன் என்று கூறுகின்ற பொழுது, மண்ணுலகம் எங்கும் இறைபிரசன்னத்தை பரப்புவதற்காக, மனிதர்களின் பாவங்களை மற்றும் தீமைகளை நீக்கி தூய்மை படுத்துவதற்காக, தூய ஆவியின் இறைவல்லமையை நமக்கு தருவதற்காக மற்றும் நமது வாழ்வை நீதித் தீர்ப்பீடுவதற்காக வந்திருக்கிறார் என்பது அர்த்தமாகும். எனவே, இன்றைக்கு நமது வாழ்வை சோதித்தறிவோம். நமது வாழ்வில் நாம் செய்த பாவங்களை, தீமைகளை நமது தவறான எண்ணங்களை, பேச்சுகளை மற்றும் செயல்களை இறைவன் பாதத்தில் அர்ப்பணித்து, கிறிஸ்துவின் "தீ" நம்மை தூய்மைப்படுத்தவும், இறை வல்லமையும் இறைபிரசன்னமும் நமது வாழ்வை நிறைக்க, அதனால் நாம் இறைவனின் நீதி தீர்ப்புக்கு உள்ளாக நம்மையும் நம் குடும்பத்தாரையும் முழுவதுமாக தயார் செய்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

       காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)


காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)