இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12: 18-19, 22-24a
நற்செய்தி : லூக்கா 14: 1, 7-14
பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ‘‘ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?’’ என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி ‘‘அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து ‘‘ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?’’ என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் ஒருவன் கேட்டு சென்றான்” என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் ‘‘வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?’’ என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி ‘‘மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்” என்று சொன்னார். அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் தாழ்ச்சியும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார். இன்று தாழ்ச்சியே நமது வார்த்தையாக, வாழ்வாக மற்றும் அடையாளமாக மாறி நம்மை வானளவு உயர்த்துகிறது. பொதுக்காலம் 22வது ஞாயிற்று கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கும் நம் அனைவரையும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு தாழ்ச்சியோடு வாழ அழைப்பு தருகின்றது. 'தாழ்ச்சியுடையோர் மாட்சியடைவர் மற்றும் தாழ்ச்சியுடையோர் இகழ்ச்சியடையார்' என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப தாழ்ச்சியான நமது வாழ்வே நம்மை வானளவு உயர்த்தி, இச்சமுதாயத்தில் நமக்கென ஒரு அடையாளத்தை கொடுக்கிறது.
'Humility' என்னும் தாழ்ச்சிக்கான ஆங்கில வார்த்தையின் மூல வார்த்தை 'humilis' என்னும் இலத்தின் மொழியிலிருந்து பிறப்பெடுக்கிறது. தமிழில் அதன் அர்த்தம் 'நிலம்' அல்லது 'மண்' ஆகும். பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது மண் தான், இது ஒரு போதும் தன்னை உயர்த்தி காட்டாமல் தாழ்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைகிறது. "தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.” (லூக்கா 14:11) என இன்றைய நற்செய்தி வாசகமும், "குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்." (சீராக் 3:17) என இன்றைய முதல் வாசகமும் நம்மை தாழ்ச்சியோடு வாழ அழைப்பு தருகிறது. தாழ்ச்சியோடு வாழ்தலே நம்மை மாட்சிப்படுத்தும் என்கின்றது இறை வார்த்தை. பழைய ஏற்பாட்டில் கோலியாத்து தாவீதை எதிர் கொண்டு வந்த போது ஆணவத்தோடும் தற்பெருமையோடும் வந்தான். ஆனால், தாவீது பணிவோடு தன்னையே தாழ்த்தி, இறைவனை நம்பி கோலியாத்தை வென்றார் (1 சாமுவேல் 16:17). இறைவன் முன்பு தன்னையே தாழ்த்தி கொள்பவர் இறைவனால் உயர்த்த பெறுவார். புதிய ஏற்பாட்டில் "இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" (லூக்கா 2:51-52) ஆக, இயேசு 30-ஆண்டுகள் தாழ்ச்சி என்னும் பண்பில் வளர்ந்தார். அது மட்டுமல்லாது இயேசுவின் இரண்டு முக்கிய செயல்கள் அவரது தாழ்ச்சி என்னும் பண்பை எடுத்துரைக்கிறது.அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)














