Thursday, November 11, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 33-ஆம் வாரம் - ( ஆண்டு- B) ----- 14-11-2021- ஞாயிற்றுக்கிழமை


 
முதல் வாசகம் : 

             தானியேல் 12: 1-3

இரண்டாம் வாசகம் : 

             எபிரேயர் 10: 11-14, 18

நற்செய்தி:-

மாற்கு 13:24-32


விவிலிய விளக்கம்:-

1. இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகள் இரண்டு காரணங்களின் பிண்ணனியில் கொடுக்கப்படுகிறது.
1. எருசலேமின் அழிவு
2. இயேசுவின் இரண்டாம் வருகை
2. "கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது" (மாற்கு 13:24) என்னும் இறைவார்த்தை இயேசுவின் இரண்டாம் வருகையில் அவரது மாட்சியால் எவ்விதமான ஒளியும் தெரியாது என்பதன் அடையாளம் (எசாயா 24:23).

3. "அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்"(மாற்கு 13:26). என்பது தந்தையின் வலப்பக்கம் அமர்ந்த இறைமைந்தன் இயேசு, நம்மை நோக்கி இரண்டாம் முறையாக வருவதைத்தான் மேகங்கள் மீது வருவார் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

4. "வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்" (மாற்கு 13:27). என்னும் வார்த்தைகள் இயேசு வானதூதர்களின் வழியாய் தேர்ந்து கொள்ளப்பட்ட நம் ஒவ்வொருவரையும் அழைப்பார் மற்றும் தீர்ப்பிடுவார் என்பதை சுட்டிக்காட்டுகிறது (1 தெச.4:17).

5. எருசலேமின் அழிவும் மானிட மகனின் வருகையும் அத்திமர உருவகம் கொண்டு விளக்கப்படுகிறது.

மறையுரை:-

நிகழ்காலத்தில் வாழ்வோம்
(தீர்ப்பும் - வாழ்வும்)

ஒரு முதலாளி தன்னுடைய தொழிலாளியை அடிக்கடி துன்புறுத்தி அதிக வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றான். இதனால் மனம் நொந்து போன அந்த தொழிலாளி, ஒரு நாள் முதலாளியின் வீட்டை விட்டு 'இந்த வேலையே எனக்கு வேண்டாம்' என்று சென்று விடுகிறான். சென்றவன், எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் சென்று ஒரு குகையில் வாழ்கின்றான். அந்தக் காட்டில் கிடைக்கும் பழங்களை உண்டு, நீரை அருந்தி உயிர் வாழ்கின்றான். ஒரு நாள் இரவு அவன் குகைக்குள் வருகின்றான், அவனுக்கு ஒரே ஆச்சரியமும், அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அங்கு ஒரு சிங்கம் காலில் அடிப்பட்டு அவதியுற்று கொண்டிருப்பதை பார்க்கின்றான். அதைக் கண்ட அவன் அந்த சிங்கத்தின் அருகே சென்று அதன் காலுக்கு மருந்து வைத்து அதற்கான முதலுதவியை செய்கின்றான். ஓரிரு நாட்களில் அந்த சிங்கம் நலம் பெற்று அந்த குகையை விட்டு சென்று விடுகின்றது. எவ்வளவு நாள் தான் இந்த குகையிலேயே இருப்பது என்று எண்ணி ஊருக்குள் செல்கின்றான். அங்கு அவன் தன் முதலாளியிடம் மாட்டிக் கொள்கின்றான். முதலாளி அவன் மீது பொய் குற்றம் சுமத்தி அந்த நாட்டு அரசரிடம் ஒப்படைத்து விடுகின்றான். அரசரோ அவனுக்கு மரண தண்டனை விதிக்கின்றான், அந்த நாட்டின் முறைப்படி மரண தண்டனை குற்றவாளிகள் சிங்கத்தின் முன் மைதானத்தில் விடப்படுவர், சிங்கம் அவர்களை கொல்ல அதை அனைவரும் பார்ப்பர், இந்த தொழிலாளியும் அவ்வாறே விடப்பட்ட பொழுது, அங்கு வந்த சிங்கம் அவனை கொல்லாமல் அவனருகே வந்து, அவன் காலை நக்கி கொடுக்கின்றது. சிறிது நேரம் கழித்த பிறகு தான் அவனுக்கு புரிந்தது, அந்த சிங்கத்திற்கு தான் அன்று அவன் முதலுதவி செய்திருந்தான். இதைக் கண்ட அரசனுக்கும் மக்களுக்கும் ஒரே ஆச்சரியம், அதன் பின் அரசர் அவனை அழைத்து நடந்த யாவற்றையும் கேட்டறிகின்றான். அவனும் நடந்த யாவற்றையும் எடுத்துரைக்கின்றான். அரசர் அவனுக்கு பொற் காசுகளை பரிசாக கொடுத்து, அந்த முதலாளியை சிறையில் அடைக்கின்றான். நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல மற்றும் இரக்க செயல்கள், நிச்சயம் ஒரு நாள் நம்மை வாழ வைக்கும். இதைத்தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு சொல்கின்ற செய்தியாக இருக்கின்றது.
நிகழ்காலத்தில் நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல செயலுக்கும், பிற்காலத்தில் புது வாழ்வு கிடைக்கும், நிகழ்காலத்தில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் பிற்காலத்தில் நம்மை தீர்ப்புக்கு உள்ளாக வைக்கும்.
திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கின்ற நமக்கு உலக முடிவு மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிய வாசகம் திருஅவையால் தரப்பட்டிருக்கிறது. இது திருவருகைக் காலம் மற்றும் கிறிஸ்து பிறப்புக்கு நம்மை தயாரிப்பதாக அமைகிறது. கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கின்ற இயேசு 'வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்குவார்' என நம்பிக்கை அறிக்கையில் நாம் அறிக்கையிடும் வார்த்தைகளுக்கு இன்றைய நற்செய்தி வாசகம் பின்னணியாக அமைகின்றது. நமது எல்லா துன்பமான மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளிலிருந்து நம்மை மீட்க இயேசு மீண்டும் வருவார் என்பதை இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் எடுத்துரைக்கின்றது.
இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது கஷ்டமும் துன்பமுமே வாழ்க்கையாக மாறிப்போன யூத மக்களுக்கு வரவிருக்கும் மெசியாவால் புதுவாழ்வு பிறக்கும் என்னும் நம்பிக்கை செய்தியை தருகிறது. இன்றைய இறைவார்த்தை வழிபாடு நிகழ்காலத்தில் நாம் படுகின்ற துன்பங்களுக்கு எதிர்காலத்தில் புது வாழ்வும் மற்றும் நிகழ்காலத்தில் நாம் செய்கின்ற பாவங்களுக்கு எதிர்காலத்தில் தீர்ப்பும் கிடைக்கும் என்பதையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது. ஆக இயேசுவின் வருகை வாழ்வையும் தீர்ப்பையும் நமக்கு கொடுக்கும். எதிர்காலத்தில் நாம் தீர்ப்பை பெற போகின்றோமா? வாழ்வைப் பெற போகின்றோமா? என்பதை சிந்தித்து நிகழ்காலத்தில் அர்த்தமுள்ள வாழ்வை வாழ அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

தீர்ப்பு:

     நாம் ஒவ்வொருவரும் இந்த மண்ணுலக வாழ்வின் முடிவில் அவரவர் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவோம். இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான வெகுமதிகள் அல்லது தண்டனைகள் உண்டு. “நமது வேலை மற்றும் நேரத்தின்படி அல்ல, மாறாக நமது அன்பின் செயல்களின்படியே நமக்கு வெகுமதி அளிப்பார்” என்கிறார் புனித சியன்னா கேத்தரின். நற்செயல்களுக்கு நிரந்தரமான வெகுமதி உண்டு. இன்று நாம் செய்யும் தீய செயல்களுக்கு அதாவது பாவங்களுக்கு நிச்சயம் ஒரு நாள் அவரால் தீர்ப்பிடப்படுவோம். “நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்வோம்” (கலாத்தியர் 6:7.) நம்மை சோதித்தறிய வேண்டிய நேரம் இது. செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் இது. நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போம், அதற்காக நம்மால் முடிந்த இரக்க செயல்களை செய்வோம். எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் அர்த்தமுள்ள முறையில் வாழ்வோம்.

வாழ்வு:

"துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது." (மத்தேயு 5:4,10) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நிகழ்காலத்தில் இறைவனுக்காக, இறையாட்சிக்காக, திருஅவையின் எல்லா நலனுக்காக மற்றும் இறைவார்த்தையின்படி வாழ்வதற்காக துன்பங்களை ஏற்றுக்கொள்கின்ற நாம் இறைவனால் இறையாட்சி என்னும் புது வாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுவோம். இயேசுவின் தீர்ப்பு உண்மை, அன்பு மற்றும் நீதியின் அடிப்படையில் அமையும். நாம் எப்பொழுதும் நமது தீர்ப்பை எதிர்கொள்ள நன்கு தயாராக இருக்க வேண்டும், நமது அன்றாட வாழ்வில் நாம் இரக்கச் செயல்களோடு, பிறர் மீது அன்பு செலுத்தும் போது நிச்சயம் நாம் இறைவனால் வாழ்வுக்கான நீதித் தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவோம்.

        இன்று நாம் வாழும் நமது வாழ்க்கை தான் நாளைய வாழ்வையும் தீர்மானிக்கும். இது தான் உண்மை, ஒவ்வொரு நாளையும் நம் கடைசி நாளாக எண்ணுவோம். இன்று நம்மால் முடிந்த நல்லதைச் செய்வோம், நாளை நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எல்லா விதமான கவலை, துன்பம் மற்றும் வருத்தம் என யாவற்றையும் விட்டு விடுவோம். அதிலிருந்து மீண்டு வருவோம். ஒவ்வொரு நாளும், கடந்து செல்லும், ஒவ்வொரு மணி நேரமும் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது; ஒவ்வொரு நாளையும் கணக்கிடுவோம். வாழ்வின் சாதாரண நிகழ்வுகளில் நாளும் இயேசு நம்மிடம் வருகிறார், நற்கருணையில் மற்றும் நமது சகோதர சகோதரிகளிடத்தில் அவரை வரவேற்போம். நமது அன்பை காட்டுவோம். நம்பிக்கையுடனும் அமைதியுடனும் எதிர்காலத்தை நோக்குவோம், ஏனென்றால் கடவுளின் வலது பக்கத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இயேசு, இரண்டாம் வாசகத்தில் நாம் கேட்டது போல் சிலுவையில் தம்முடைய பலியின் மூலம் நம்முடைய பாவ மன்னிப்பையும், நம்முடைய தூய மற்றும் புது வாழ்வையும் உறுதி செய்கிறார்.

இறைவன் நம் வாழ்க்கையை வாழ அருள்புரிவாராக; ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு நன்மை செய்ய, மகிழ்ச்சியான புதுவாழ்வு வாழ முயலுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


ஆடியோவாக கேட்க...

             https://youtu.be/wAVfzx-MWDI

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF




Friday, November 5, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 32-ஆம் வாரம் - ( ஆண்டு- B) ----- 07-11-2021- ஞாயிற்றுக்கிழமை




 

நற்செய்தி:-

மாற்கு 12:38-44


விவிலிய விளக்கம்:-

1. ஏழைக் கைம்பெண் காணிக்கைப் பெட்டியில் போட்ட நாணயங்கள், எல்லா நாணயங்களை காட்டிலும் மிகக் குறைவான மதிப்பு கொண்டது.

2. எருசலேம் தேவாலயத்தில் பெண்களுக்கான பகுதியில் மொத்தம் பதிமூன்று காணிக்கை பெட்டிகள் இருந்தன. அவை வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டன.

3. யூதர்கள் மத்தியில் ஏழைகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் பழக்கம் இருந்தது அதற்காக வைக்கப்பட் காணிக்கைப் பெட்டியில் தான் இந்த இந்தப் பெண் காசுகளை போட்டிருக்கிறார்.

4. ஒத்தமை நற்செய்தி நூல்களான மத்தேயுவில் இந்தப்பகுதி குறிப்பிடவில்லை, மாறாக லூக்கா நற்செய்தியாளர் இதை பற்றி எடுத்துரைக்கிறார். (லூக்கா 21:1-4)


மறையுரை:-

...இறைவன் நம் உள்ளத்தை பார்க்கிறார்...

"கடற்கரை மணலில் அவர் பாதங்கள்" என்பது ஒரு ஆங்கில கவிதை. இந்த கவிதையின் அடிப்படையில் கதை ஒன்று இவ்வாறாக கூறப்படுகிறது. இறைவன் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஒருவர் ஒருநாள் உறங்குகின்ற போது கனவு ஒன்றை கண்டார். அந்தக் கனவில் அவர் கடற்கரை மணலில் நடந்து கொண்டிருக்கின்ற பொழுது அவர் அருகே மற்றொருவரின் பாதங்களும் காணப்படுகிறது. இருவர் செல்லும் அந்த பாத சுவடுகளில் மற்றொன்று இறைவனுடையது, அவர் என்னோடு நடந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்பதை அவர் உணர்கின்றார். இது அவருடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருப்பதையும் அவர் உணர்கின்றார். ஆனால், அவரது வாழ்வின் துன்பமான சூழலில் இறைவனது பாத சுவடுகள் மறைந்து போவதை நினைத்து வருத்தமுற்றவராய் தன்னுடைய செபத்தில் இறைவனிடம் கேட்கின்றார். 'என் வாழ்வின் எல்லா நிலைகளிலும் என்னுடன் இருந்து என்னைப் பார்க்கும் இறைவன் என் துன்பத்தில் என்னை விட்டு விலகுவது ஏன்?' என்கிறார். அதற்கு இறைவன் 'உனது வாழ்வின் எல்லா நிலைகளிலும் நான் உன்னோடு இருக்கிறேன், உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனது துன்பமான காலத்தில் நீ பார்க்கும் அந்த ஒற்றை நபரின் பாதம் உன்னுடையது தான் ஆனால் அச்சூழலில் நான் உன்னோடு பயணிக்கவில்லை மாறாக உன்னிலிருந்து பயணித்தேன். உனது வாழ்வில் நான் உன்னோடு உன்னிலிருந்து உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ தான் என் பிரசன்னத்தை உணரவில்லை' என்றாராம். இன்று, இறைவன் நம்மோடு நம்முள் வாழ்கின்றார், நம்மை பார்க்கிறார் என்பதை பல வேளைகளில் உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இறைவன் நம்மை அதிலும் நம் உள்ளங்களை பார்க்கிறார் என்பதை உணர்ந்து வாழ்வதற்கு இன்றைய இறைவார்த்தை வழிபாடு அழைப்பு தருகிறது.

அவர் நம்மை பார்க்கிறார்:-

"ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்; நல்லாரையும் பார்க்கும், பொல்லாரையும் பார்க்கும்" (நீதிமொழிகள் 15:3) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நம்மைப் படைத்த கடவுள் நாம் செய்யும் ஒவ்வொன்றையும் அறிந்து நம்மை கண்ணோக்கி கொண்டிருக்கிறார். இன்றைய நற்செய்தி பகுதியில் இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். (மாற்கு 12:41) இங்கு இயேசுவின் பார்வை ஆலயத்தில் காசுகளை போட்ட ஒவ்வொருவர் மேலும் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் சாராவின் பணிப்பெண்ணான ஆகார் பாலைவனத்திற்கு செல்லும்பொழுது ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றி குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிடவும், மீண்டுமாக சாராவிடம் செல்லவும் கட்டளையிடுகின்றார்.
அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள். (தொடக்க நூல் 16:13) இதே காண்கின்ற இறைவன் தான், அன்று ஆதாம்-ஏவாள் பாவம் செய்த போதும், காயின் ஆபேலை கொன்ற போதும், ஆபிரகாம் குழந்தையின்றி இருந்த போதும், யோசேப்பை அவருடைய சகோதரர்கள் கொல்ல நினைத்த போதும், இஸ்ராயேல் மக்கள் எகிப்திலும் பாலைவனத்திலும் மற்றும் பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தில் இருந்த போதும் கண்ணோக்குகின்றார். தொடர்ந்து அரசர்களின் வழியாகவும், இறைவாக்கினர்களின் வழியாகவும், தம் ஒரே மகனாம் இயேசுவின் வழியாகவும் கண்ணோக்கி கொண்டிருந்தார். இன்றும் நமது திருச்சபையை தூய ஆவியின் நிழல் கொண்டு கண்ணோக்கி கொண்டிருக்கிறார். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சும் இறைவனால் பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. தன்னுடைய சாயலாக, நாம் கருவில் உருவாவதற்கு முன்பே நம்மை அறிந்த, நமக்காக நம்முடைய மீட்பிற்காக தன்னுடைய ஒரே மகனையே அனுப்பி சிலுவையில் தன் உயிரை அர்ப்பணிக்க வைத்த இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார். நமது மகிழ்வான மற்றும் துன்பமான தருணங்களிலும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவர் நம் உள்ளத்தை பார்க்கிறார்:-

இறைவன் யாரை பார்க்கின்றார்? எதை பார்க்கின்றார்? நம்மை காண்கின்ற இறைவன் நம்மை ஒரு நாள் தீர்ப்பிடுவார். இறைவனது தீர்ப்பு நமது செயல்களை வைத்து அல்ல மாறாக நம்முடைய உள்ளத்தை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாய் வைத்து தான் அமையும். இதைத் தான் ஆண்டவர் சாமுவேலிடம், மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். (1 சாமுவேல் 16:7) இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டு விட்டார்” (மாற்கு 12:43,44) என்று அவர்களிடம் இயேசு அப்பெண்ணின் உள்ளத்தைப் பார்த்ததை எடுத்துரைக்கின்றார். அங்கிருந்தவர்களில் மிகவும் குறைவான மதிப்பு கொண்ட காசை அப்பெண் போட்டிருந்தாலும், அந்த பெண் தன்னிடம் இருந்த யாவற்றையும் போட்டிருக்கிறார். இது ஏழை கைம்பெண் இறைவன் மீது கொண்ட அன்பையும் அவர் இறைவனுக்காக செய்த தியாகத்தையும் எடுத்துரைக்கின்றது. இங்கு அப்பெண்ணின் உள்ளத்திலிருந்த இறை அன்பையும், தியாகத்தையும் இறைவன் பார்க்கின்றார்.

உள்ளத்திலிருந்து செயல்படுவோம்:-

"உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றன". (2 குறிப்பேடு 16:9) ஆக இறைவனது பார்வையில் எதுவும் மற்றும் எவையும் மறைந்து போகலாகாது. மனிதன் அறிந்ததையும் மற்றும் அறியாததையும் இறைவன் அறிந்திருக்கின்றார். மனிதனது முக்காலத்தையும், முக்காலத்தின் செயல்பாடுகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் அறிந்தவர் இறைவன், இவை அனைத்தையும் செய்வதற்கு இறைவன் நம்மை அனுமதிக்கின்றார். ஆனால், அவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார் நமது செயல்களை அல்ல மாறாக நம் உள்ளத்தை பார்த்து கொண்டிருக்கின்றார். "உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது".(மத்தேயு 10:30) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நமது ஒவ்வொரு செயலும் இறைவனால் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. எனவே நமது செயல்கள் பிறருக்காக மற்றும் பெயருக்காக இல்லாது இறைவனுக்காய் நம் உள்ளத்திலிருந்து அமையட்டும். "உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்; ஏனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்; எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்; நீ அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால் அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார்". (1 குறிப்பேடு 28:9) எனவே முழுமனதோடு வாழ்வின் எல்லா நிலைகளிலும் உள்ளத்திலிருந்து அவரை தேடுவோம். இறைவன் எனது வாழ்வில் எண்ணை பார்க்கின்றார், என்னோடு இருக்கின்றார் மற்றும் என்னுள் இருக்கின்றார் என்பதை நாம் முழுமையாக நமது வாழ்வில் உணர்வோம். நமது ஒவ்வொரு செயலும் உள்ளத்திலிருந்து வெளிப்பட இறைவனுக்கு உகந்த வாழ்வை வாழ்வோம்.


இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

ஆடியோவாக கேட்க...

 https://youtu.be/u5vlkXKgaII                

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF





Thursday, October 28, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 31-ஆம் வாரம் - ( ஆண்டு- B) ----- 31 -10-2021- ஞாயிற்றுக்கிழமை

 



நற்செய்தி:-

மாற்கு 12:28-34


விவிலிய விளக்கம்:-

1. யூதர்கள் மத்தியில் இரண்டு விதமான விவாதங்கள் மற்றும் பேச்சுகள் பழக்கத்தில் இருந்து வந்தது. ஒன்று இருக்கின்ற கட்டளைகளை தங்கள் விருப்பப்படி பல நூறு கட்டளைகளாக பலுகி பெருக்குவது. மற்றொன்று இருக்கின்ற கட்டளைகளில் எது முதன்மையான கட்டளை? என வாக்குவாதம் எழுப்புவது. இத்தகைய பின்னணியில் தான் இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர் இயேசுவிடம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கிறார்.

2. "உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக " ன்து யூதர்களின் செமா எனப்படுகின்ற ஜெபமாகும். இந்த ஜெபம் மூன்று பழைய ஏற்பாட்டு பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (இணைச் சட்டம் 6: 4-9, 11: 13-21/எண்ணிக்கை 15: 37-41). எனவே இந்த முதல் கட்டளையை யூதர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

3. ‘உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ ன்து பழைய ஏற்பாட்டில் எண்ணிக்கை நூலில் 19: 18 பகுதியின் அடிப்படையில் உள்ளது. யூதர்களுக்கு பிறரன்பு என்பது வெறும் யூதர்களை மட்டுமே அன்பு செய்வது ஏனெனில் அவர்கள் பிற இனத்தாரை ஏற்றுக்கொள்வதில்லை.


மறையுரை:-

அன்பில் வளர...

1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் அன்னை தெரேசாவின் இறுதி அடக்க திருப்பலி நடைபெற்றது. அப்பொழுது திருத்தந்தையாக இருந்த மறைந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தனது பிரதிநிதியாக கர்தினால் ஆஞ்சலோ சொதோனோவை அனுப்பினார். இவர் இறுதி அடக்க திருப்பலியின் மறையுரையில், "இன்று அன்னையின் இந்த இறுதி அடக்க நிகழ்வுக்கு பல நாடுகளிலிருந்தும், பல மதங்களிலிருந்து ஒன்றாகக் கூடி வந்திருக்கிறார்கள். எல்லா மதத்தின் முறைப்படியும் இந்த இறுதி அடக்க நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. உலகமே ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் இந்த அன்னை தனது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட, வெளிப்படுத்திய முழுமையான அன்பு தான். இந்த அன்பு நற்செய்தியின் அன்பு, இறைவன் மீது அன்னை தெரேசா கொண்ட இறையன்பு, அதை அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்திய பிறர் அன்பு" என்று கூறினார். கிறிஸ்தவ வாழ்வின் இரண்டு கண்களான இறையன்பையும், பிறர் அன்பையும் அன்னை தெரேசா தனது வாழ்க்கையில் வெளிப்படுத்தியதால் தான் இன்று திருஅவையில் புனிதையாக உயர்த்தப்பட்டிருக்கிறார். அன்னை தெரேசா தனது வாழ்க்கையில் அன்பை முழுமையாக வெளிப்படுத்தினார். இறைவன் மீது அவர் கொண்ட அன்பு சாலையோரங்களில் இருந்த ஒவ்வொரு நோயாளிகள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள் மீது பிறர் அன்பாக வெளிப்பட்டது. இன்று நமது வாழ்க்கையிலும் முழுமையான இறையன்பும், பிறர் அன்பும் என்றும் வெளிப்பட வேண்டும் என்பது தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு தருகின்ற மையச் சிந்தனை.

யூதர்கள் மத்தியில் இரண்டு விதமான விவாதங்கள் மற்றும் பேச்சுகள் பழக்கத்தில் இருந்து வந்தது. ஒன்று இருக்கின்ற கட்டளைகளை தங்கள் விருப்பப்படி பல நூறு கட்டளைகளாக பலுகி பெருக்குவது. மற்றொன்று இருக்கின்ற கட்டளைகளில் எது முதன்மையான கட்டளை? என வாக்குவாதம் எழுப்புவது. இத்தகைய பின்னணியில் தான் இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர் இயேசுவிடம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கிறார்.(மாற்கு 12:28), மோயீசன் பெற்ற பத்து கட்டளைகளை யூதர்கள் 613 கட்டளைகளாக பலுகிப் பெருகினார்கள். தாவீது இதை வெறும் பதினோரு கட்டளைகளாக திருப்பாடல்கள் 15-ல் தருகிறார்.

1. மாசற்றவராய் நடத்தல்
2. நேரியவற்றை செய்தல்
3. உளமார உண்மை பேசுதல்
4. தம் நாவினால் புறங்கூறாதிருத்தல்.
5. தம் தோழருக்குத் தீங்கிழையாதிருத்தல்.
6. அடுத்தவரைப் பழிந்துரையாதிருத்தல்.
7. நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதாதிருத்தல்.
8. ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதித்தல்.
9. தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறாதிருத்தல்.
10. தம் பணத்தை வட்டிக்குக் கொடாதிருத்தல்.
11. மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறாதிருத்தல்.

எசாயா இறைவாக்கினர் இதை ஆறு கட்டளைகளாக கூறுகின்றார். (எசாயா 33:15)
1. நீதிநெறியில் நடத்தல்
2. நேர்மையானவற்றைப் பேசுதல்.
3. கொடுமை செய்து பெற்ற வருவாயை வெறுத்தல்.
4. கையூட்டு வாங்கக் கை நீட்டாதிருத்தல்.
5. இரத்தப் பழிச் செய்திகளைச் செவி கொடுத்துக் கேளாதிருத்தல்.
6. தீயவற்றைக் கண்கொண்டு காணாதிருத்தல்.

மீக்கா இறைவாக்கினர் இதை ஆறிலிருந்து மூன்றாக தருகின்றார்.(மீக்கா 6:8)

1.நேர்மையைக் கடைப்பிடித்தல்.
2. இரக்கம் கொள்ளுதல்.
3. தாழ்ச்சியோடு நடந்து கொள்ளுதல்.

இது அபக்கூக்கு 2:4-ல் நேர்மையுடையவர் தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் என ஒற்றை கட்டளையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு காலத்தில் சிறந்த கட்டளைகள் என சிலவற்றை குறிப்பிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. எனவே தான் அவர்கள் இயேசுவிடம் முதன்மையான கட்டளை எது? என்று கேட்கிறார்கள். இயேசு அதை இரண்டு கட்டளைகளில் எடுத்துரைக்கின்றார்.

1. இறையன்பு

"இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை" (மாற்கு 12:29-30) என முழுமையான இறையன்பில் வளர அழைப்பு தரப்படுகிறது. இது யூதர்களின் செமா எனப்படுகின்ற ஜெபமாகும். இந்த ஜெபம் மூன்று பழைய ஏற்பாட்டு பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (இணைச் சட்டம் 6: 4-9, 11: 13-21/எண்ணிக்கை 15: 37-41). எனவே இந்த முதல் கட்டளையை யூதர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இயேசு கொடுக்கும் இந்த அழைப்பு சாதாரண அன்பிற்கானது அல்ல, மாறாக முழுமையான அன்பிற்கான அழைப்பு. இங்கு முழுமை என்பது நமது உடல், மனம், உள்ளம் மற்றும் அறிவு என மனிதனின் எல்லா நிலைகளையும் உள்ளடக்கியதாகும். இன்று நான் இறைவனிடத்தில் காட்டுகின்ற அன்பு எனது தேவைகளுக்காக காட்டுகின்ற அன்பா? நான் ஆலயம் செல்வதும், இறைவனை வணங்குவதும், திருப்பலியில் பங்கேற்பதும், நேர்த்திக் கடன்களையும் பொருத்தனைகளையும் செய்வதும், ஜெபிப்பதும், நோன்பிருப்பதும் எதற்காக? இறைவன் நான் கேட்டதை தர வேண்டும் என்பதற்காகவா? அல்லது நான் இறைவனிடத்தில் கொண்டிருக்கின்ற அன்பின் நிமித்தமாகவா? பரிசேயர்களும், சதுசேயர்களும் சுயநலத்திற்காக இறைவனுடைய கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்தது போல அல்லாது, நாம் முழுமையான அன்போடு அவரில் அன்பு கொண்டு வாழ அழைப்பு பெறுகின்றோம். எனது உடல், உள்ளம், அறிவு, மனம், ஆன்மா ஆகியவற்றின் தேவைகளுக்காக நாம் இறைவனை அன்பு செய்யாமல், இவை அனைத்திலும் முழுமையாக நாம் இறைவனில் அன்பை காட்ட வேண்டும் என்கிற ஒரு அழைப்பை இயேசு நமக்கு கொடுக்கின்றார். இறையன்பில் வளர தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்!

2. பிறர் அன்பு

‘உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” (மாற்கு 12:31) என இறையன்பின் வெளிப்பாடாக பிறர் அன்பிலும் வளர அழைக்கின்றார். இப்பகுதி பழைய ஏற்பாட்டில் எண்ணிக்கை நூலில் 19: 18 பகுதியின் அடிப்படையில் உள்ளது. யூதர்களுக்கு பிறரன்பு என்பது வெறும் யூதர்களை மட்டுமே அன்பு செய்வது ஏனெனில் அவர்கள் பிற இனத்தாரை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இயேசு கொடுக்கும் அழைப்பு எல்லோரையும் ஏற்றுக் கொள்கின்ற முழுமையான அன்பு. இதைத்தான் இயேசு நம் ஒவ்வொருவரிடத்திலும் எதிர்பார்க்கின்றார். இன்று நமது வாழ்க்கையிலும் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களை போல என் இனம், மதம், மொழி, நாடு, மாநிலம், ஊர் மற்றும் குடும்பம் என என்னைச் சார்ந்தவர்களை தான் நான் அன்பு செய்வேன் என்று வாழாது யாவரையும் ஏற்றுக்கொள்வது தான் முழுமையான அன்பு. அத்தகைய ஒரு முழுமையான பிறர் அன்பில் வளர தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்!

இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

ஆடியோவாக கேட்க...

  https://youtu.be/jDKN8gg_mSo                    

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF




Tuesday, October 19, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 30-ஆம் வாரம் - ( ஆண்டு- B) ----- 24 -10-2021- ஞாயிற்றுக்கிழமை






நற்செய்தி:-

மாற்கு 10:46-52


விவிலிய விளக்கம்:-


  1.  பார்த்திமேயுவின் தந்தையான திமேயுவும் பார்வையற்றவர்.
  2. எருசலேம் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது எரிகோ, இயேசு பாஸ்காவிற்காக எருசலேம் செல்ல எரிகோவை கடந்து தான் செல்ல வேண்டும். பொதுவாக குருவோ அல்லது ரபியோ சென்றால் மக்கள் கூட்டமாக வந்து, அவர் சொல்வதை கேட்பதும் அவரோடு செல்வதும் வழக்கம்.
  3. திமேயுவின் மகனான பார்த்திமேயு வடக்குபுற வாயிலில் அமர்ந்திருந்தான்.
  4. இன்றைய நற்செய்தி பகுதியின் ஒத்தமை நற்செய்தி நூல்களின் பகுதிகளாக மத்தேயு 20:29 மற்றும் லூக்கா 18:35 ஆகியவை உள்ளன.
மறையுரை:-

மூவர்ண - மூப்பரிமான நம்பிக்கை




நமது நாட்டினுடைய தேசிய கொடியாம் மூவர்ணக் கொடியை நாம் நன்கு அறிவோம். அனைவரும் மதிக்கத்தக்க, அனைவருக்கும் பொதுவாக மற்றும் நம் நாட்டினுடைய தேசப்பற்றின் ஒரு அடையாளமாக இருப்பது தேசிய கொடிஇந்த கொடியில் இருக்கின்ற மூன்று நிறங்களை நாம் நன்றாக அறிவோம். மேலே காவி நிறம். அதற்கடுத்து வெள்ளை நிறம்கடைசியாக பச்சை நிறம் இதனுடைய அர்த்தங்களையும் நாம் நன்கு அறிவோம். காவி நிறம் விடுதலைக்காய் தேசத்தினுடைய தலைவர்களின் தியாகத்தை வெளிப்படுத்துவதாகவும், வெள்ளை நிறம் நம் நாட்டினுடைய தூய்மையை வெளிப்படுத்துவதாகவும், பச்சை நிறம் நாட்டின் பசுமையையும், இயற்கை வளத்தையும் மற்றும் நம்பிக்கையை குறிக்கும் விதமாகவும் இருக்கின்றது. இந்த மூவர்ணக் கொடியை இன்றைய நற்செய்தி பகுதியில் வரும் பார்வையற்ற பார்த்திமேயுவிலே பார்க்க முடிகின்றது. இயேசுவில் இவன் கொண்ட நம்பிக்கையை மூவர்ண கொடியின் நிறத்தோடு ஒப்பிட முடிகின்றது. மூவர்ண கொடியின் நிறங்களின் குணங்களும், பார்வையற்ற பார்த்திமேயுவின் நம்பிக்கையும் ஒத்து போகின்றது. பார்த்திமேயுவின் நம்பிக்கை ஒரு மூவர்ண கொடியின் நிறங்களை போல மூவர்ண நம்பிக்கையாக இருக்கின்றது. இதனை மூப்பரிமான நம்பிக்கை என்றும் அழைக்கலாம்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் பார்வையற்ற பர்த்திமேயு யாரோ வருவதாக கேள்விப்படுகின்றார்.

உடனே யாரென்று வினவுகின்ற  பொழுது நாசரேத்து இயேசு தான் வருகின்றார் என்று உணர்ந்து, உடனடியாக அவரை கூவி அழைப்பதாக நாம் பார்க்கின்றோம். நாசரேத்து இயேசு தான் வருகின்றார் என அறிந்து அவரை கூவி அழைத்தது தேசிய கொடியின் காவி நிறத்தோடு ஒப்பிட முடிகின்றது. இங்கு காவி நிறம் தியாகத்தின் அடையாளம் என்கின்ற பொழுது இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்காக தன்னுடைய இரத்தத்தை சிந்தி தியாகம் செய்தார் என்பதை காட்டுகின்றது. ஆக காவி நிறம் இறை நம்பிக்கையை உணர்த்துகின்றது, பார்வையற்ற பர்த்திமேயு கொண்டது இறைநம்பிக்கை, அதனால் தான் பார்வையற்றவன் இறைநம்பிக்கையோடுஇயேசுவே, தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” (மாற்கு 10:47b) என்கிறான். இறைநம்பிக்கை மூப்பாரிமான நம்பிக்கையின் முதல் நம்பிக்கை.

இரண்டாவதாக பார்வையற்றவன் யாரோ இயேசு தான் வருகின்றார் என சொல்வதை கேட்டு அதை உண்மை என்று நம்புகின்றான் (மாற்கு 10:47a) அவனிடம் பிறர் நம்பிக்கை அதிகமாக இருந்தது என்று குறிப்பிடலாம். பிறர் நம்பிக்கை நம் மூவர்ண கொடியின் பச்சை நிறத்தை சுட்டிக்காட்டுகின்றது. பச்சை நிறம் இயற்கை வளத்தை அதாவது நம் நாட்டினுடைய முதுகெலும்பான விவசாயத்தை சுட்டிக்காட்டுகின்றது, எவ்வாறு ஒரு விவசாயி இயற்கையை  நம்புகின்றாரோ, அதே போல இந்த பர்த்திமேயு  பிறரை நம்புவதை நாம் பார்க்கின்றோம்ஆக பார்த்திமேயுவின் நம்பிக்கை பச்சை நிறத்தை உணர்த்துகின்றது. பிறர் நம்பிக்கை மூப்பாரிமான நம்பிக்கையின் இரண்டாவது நம்பிக்கை.

 மூன்றாவதாக பார்வையற்றவன் அனைத்தையும் கேள்விப்பட்ட பிறகுஇயேசுவே, தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று தன்னிலே நம்பிக்கையோடு கூறுவதை பார்க்கின்றோம். யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு அதை நம்புவது  அவர் அவரில் கொண்ட நம்பிக்கையையும் காட்டுகின்றது.


இயேசுவால் நான் குணம் பெறுவேன் என்ற தன்னம்பிக்கை அவரில் இருந்தது. இந்த நம்பிக்கையின் விளைவாக தான் அவன் இயேசுவே என கூவி அழைக்கின்றான். நம் தேசிய கொடியின் வெண்மை நிறம் தூய்மையையும் வெண்மையையும் குறிப்பதாக இருக்கின்றது. ஒரு தனிப்பட்ட மனிதனின் நல்ல குணங்கள் தன்னம்பிக்கையை காட்டுகின்றது என்றால் அது வெண்மை நிறத்தை குறிக்கின்றது. தன்னம்பிக்கை மூப்பாரிமான நம்பிக்கையின் மூன்றாவது  நம்பிக்கை.

பார்வையற்ற பார்த்திமேயு கொண்ட நம்பிக்கை ஒரு மூவர்ண மற்றும் மூப்பரிமான நம்பிக்கை. இன்றைய நாளிலே இந்த மூவர்ண மற்றும் மூப்பரிமான நம்பிக்கை நம்முடைய வாழ்க்கையிலும் வெளிப்பட வேண்டும். நாம் நம்முடைய வாழ்விலும், இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் (இறைநம்பிக்கை). நமது குடும்பங்களிலும்  குறிப்பாக நமது தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள் மீது நம்பிக்கை கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும் (பிறர் நம்பிக்கை). நாம் நம்மீது தன்னம்பிக்கை கொண்டவர்களாக வாழ வேண்டும், நமது தன்னம்பிக்கை தான் நம் வாழ்வின் இலக்குகளை அடைய நமக்கு வழி வகுக்கும். தன்னம்பிக்கை இல்லா மனிதன் அரை மனிதன் ஆவான், எனவே வாழ்வின் எல்லா நிலைகளிலும் தன்னம்பிக்கையோடு வாழ்வோம். ஆக, இறை நம்பிக்கை, பிறர் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை என்னும் மூப்பரிமான நம்பிக்கையை நாம் ஏற்றுக் கொள்கின்ற பொழுது நமக்கு வாழ்வும், மகிழ்ச்சியும் கிடைக்கும். எவ்வாறு இந்த பார்வையற்ற பார்த்திமேயு தான் நினைத்ததை வாழ்க்கையில் சாதித்தானோ, அதே போல நாமும் நம்முடைய வாழ்க்கையில் நம்பிக்கையோடு நினைக்கின்ற  ஒவ்வொன்றையும் சாதிக்க இயலும். பார்வையற்றவனாக இருக்கும் பார்த்திமேயு தனது வாழ்வின் இருளை நீக்க நம்பிக்கை என்னும் நிறங்களை பயன்படுத்தி ஒளி என்னும் புது வாழ்வை பெறுகின்றார். இன்று நமது வாழ்விற்கும் இத்தகைய நம்பிக்கை என்னும் நிறங்கள் தேவைப்படுகிறது. நம் வாழ்வின் இருளான துன்பம்கஷ்டம், கவலை, வேதனை  இவை அனைத்தும் தீர்ந்திட, மீண்டும் புது ஒளி பெற்றிட இறை, பிறர் மற்றும் தன்னம்பிக்கை என்னும் நிறங்கள் தேவைப்படுகிறது. எனவே வாழ்வின் வளர்ச்சிக்கு அடித்தளமான மூப்பரிமான நம்பிக்கையை நமது வாழ்க்கையாக்குவோம்.   


இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

ஆடியோவாக கேட்க...

    https://youtu.be/8p94KCGx5Fw                    

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF