Thursday, October 14, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 29-ஆம் வாரம் - ( ஆண்டு- B) ----- 17 -10-2021- ஞாயிற்றுக்கிழமை



நற்செய்தி:-

மாற்கு 10:35-45

விவிலிய விளக்கம்:-

    1. யூதர்களின் சிந்தனைப்படி அரசரின் வலது புற இருக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அரசரின் இடதுபுற இருக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செபதேயுவின் மக்களான யாக்கோபு மற்றும் யோவான் யூதர்களைப் போலவே இயேசு ஒரு அரசராக இருப்பார், அவர் எருசலேம் சென்று தனது அரசாட்சியை அமைப்பார். அப்பொழுது தங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு இத்தகைய கேள்வியைக் கேட்கின்றார்கள். (1அரசர்கள் 2:19 / திருப்பாடல்கள் 110:1)

    2. இன்றைய நற்செய்தி பகுதி ஒத்தமை நற்செய்தி நூலான மத்தேயு நற்செய்தியிலும் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அங்கு யாக்கோபு மற்றும் யோவானின் தாய் இயேசுவிடம் இதே கோரிக்கையை வைக்கிறார். (மத்தேயு 20: 20,21)

    மறையுரை:-

    தலைமைத்துவம் பணியாளனாய்...

       ஒருமுறை தன்னுடைய வாழ்க்கையில் உயர்ந்த நிலையிலிருந்த ஒரு மனிதன் தன்னுடைய பள்ளி ஆசிரியரை சந்திக்க செல்கிறார். அவர் தனது ஆசிரியரை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திய போது அவருக்கு துவும் நினைவுக்கு வரவே இல்லை. பின்பு அவர் ஆசிரியரிடம் நீங்கள் அன்று செய்த ஒரு செயல் தான் என் வாழ்வையே முற்றிலும் மாற்றியது என்று கூறி நடந்த யாவற்றையும் எடுத்து கூறுகின்றார். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, ஒருமுறை என் அருகிலிருந்த மாணவனுடைய கைக்கடிகாரத்தை நான் திருடி விட்டேன், அவனும் உங்களிடம் அதைப் பற்றி புகார் தெரிவித்தான். அப்பொழுது நீங்கள் செய்த செயல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, நீங்கள் எங்கள் எல்லோரையும் சுவற்றின் பக்கம் திரும்பி, கைகளை உயர்த்தி, கண்களை மூட சொன்னீர்கள். பின்பு எங்களுடைய சட்டை, கால்சட்டை மற்றும் பைகளில் தேடினீர்கள். 
    எனது கால் சட்டையிலிருந்த அந்த கைக்கடிகாரத்தை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டீர்கள். அந்த நாள் முதல் இன்று வரை அதை நான் தான் எடுத்தேன் என்று உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது, நீங்களும் யாரிடமும் கூறவில்லை, அவனும் என்னிடம் இயல்பாகவே பழகி வந்தான். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் என் வாழ்வையே நான் முற்றிலும் மாற்றி கொண்டேன் என்று கூறினார். அப்போது ஆசிரியருக்கு அனைத்தும் நினைவுக்கு வருகிறது. அந்த ஆசிரியர் அவரிடம், அன்று உங்கள் பைகளில் தேடிய பொழுது நானும் என்னுடைய கண்களை மூடி தான் ஆய்வு செய்தேன். அதனால் நீ தான் அந்த கடிகாரத்தை எடுத்தாய் என எனக்கே தெரியாது என்று கூறுகிறார். அதை கேட்ட அவருக்கு இன்னும் ஆசிரியர் மேல் மதிப்பு வருகிறது, இது தான் ஒரு சிறந்த தலைவரின் பண்பு என்கிறார்.

    கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, ஒரு நல்ல தலைவன், தான் யாருக்கு பொறுப்பாளராக மற்றும் தலைவராக இருக்கின்றாரோ அவர்களுடைய மன நிலையை அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு செயலையும் செய்வதே சிறந்த தலைமைத்துவ பண்பாகும். நான் ஆசிரியராக இருக்கின்றேன் என்றால், வெறும் ஆசிரியராகவே மட்டும் இல்லாது மாணவரின் நிலைக்குச் சென்று அவர்களை புரிந்து கொள்வது ஆகும். நான் தலைவராக இருக்கின்றேன் என்றால், வெறும் தலைவராக இல்லாது பணியாளரின் நிலைக்குச் சென்று அவர்களுடைய மனநிலையை புரிந்து அதற்கு ஏற்றவாறு நடப்பது தான் சிறந்த தலைமைத்துவ பண்பாகும். இன்றைய நற்செய்தி வாசகமும் இத்தகைய கருத்தை தான் "தலைமைத்துவம் பணியாளனாய்" (Servant Leadership) என்னும் சிந்தனையை தருகிறது. செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவிடம் தங்களுக்கு அவரது அரசாட்சியின் அரியணையில் இடது புறமும் வலது புறமும் அமரக்கூடிய வாய்ப்பை தாரும் என கேட்கிறார்கள்.
    யூதர்களின் சிந்தனைப்படி அரசரின் வலது புற இருக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அரசரின் இடதுபுற இருக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செபதேயுவின் மக்களான யாக்கோபு மற்றும் யோவான் யூதர்களைப் போலவே இயேசு ஒரு அரசராக இருப்பார், அவர் எருசலேம் சென்று தனது அரசாட்சியை அமைப்பார். அப்பொழுது தங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு இத்தகைய கேள்வியைக் கேட்கின்றார்கள். இது அவர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் மெசியாவின் உண்மையான தன்மையை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்பதை காட்டுகிறது. மெசியாவின் தலைமைத்துவம் அரசாட்சியை அடிப்படையாய் கொண்ட தலைமைத்துவம் அல்ல மாறாக, பணியாளரை அடிப்படையாய் கொண்ட தலைமைத்துவமாக இருக்கின்றது என்பதை இயேசு அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். ஒரு தலைவன் பணியாளரின் மனநிலையையை உணர்ந்து அதற்கேற்றவாறு நடக்க வேண்டும் என்பதற்காக இறைமகன் இயேசு கிறிஸ்து தலைமைத்துவம் பணியாளனாய் என்னும் புதிய வகை தலைமைத்துவ பண்பை நமக்கு எடுத்துரைக்கின்றார்.
    இத்தகைய ஒரு பண்பில் நாம் வளர்வதற்கு நாம் மூன்று விதமான உணர்வுகளில்(Three 'S'-ல்) வளர வேண்டும் என்பதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறுகின்றார்.
    1. துன்பத்தை ஏற்கும் உணர்வு- Suffering (10:38)
    2.சேவை உணர்வு- Service (10: 45a)
    3. தியாக உணர்வு- Sacrifice (10: 45b)


    1. துன்பத்தை ஏற்கும் உணர்வு- Suffering (10:38)

              செபதேயுவின் மக்களான யோவானும் யாக்கோப்பும் இயேசுவை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” (மாற்கு 10:37) என்று கேட்க இயேசு அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.(மாற்கு 10:38) இது இயேசு அவர்களின் பதவி ஆசையை உள்ளுணர்ந்து பதவியில் இருப்பவன் துன்பங்களை ஏற்றுக் கொள்பவனாக இருக்க வேண்டும் எனும் உணர்வை அவர்களுக்கு எடுத்துரைப்பதை காட்டுகிறது. இதைத் தான் இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். (மத்தேயு 16:24) என்கிறார்.

    துன்பங்களை ஏற்க இயலாதவன் ஒரு சிறந்த மனிதனாக வாழ இயலாது, பின் எப்படி நல்ல தலைவனாக இருக்க முடியும். நல்ல தலைவனாக இருக்க விரும்புகின்றவர் துன்பங்களை ஏற்பவனாகவும் இருக்க வேண்டும், இதுவே சிறந்த தலைமைத்துவ பண்பும் ஆகும். அதனால் தான் இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் இதை எடுத்துரைத்தது மட்டுமல்லாது அதை தன்னுடைய வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியிருக்கின்றார். கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்து, முள்முடி சுமந்து, கசையடிகள் வாங்கி, சிலுவை சுமந்து, அதே சிலுவையில் ஆணிகள் கொண்டு அறையப்பட்டு தன் சீடர்களுக்கும், இந்த உலகிற்கும் துன்பங்களை ஏற்று நல்ல தலைவராக வாழ்ந்து காட்டிருக்கின்றார்.

    2.சேவை உணர்வு- Service (10: 45a)

    சேவை உணர்வு மிக முக்கியமான பொது உணர்வு. தலைவராக மாறுகின்றவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பிறருடைய சேவையை பெறுபவர்களாக மட்டுமல்லாது பிறருக்கு சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இறைமகன் இயேசு கிறிஸ்து "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும்"(மாற்கு 10:45a) எனும் வார்த்தைகளில் நமக்கு எடுத்துரைக்கிறார்.
    இயேசுவும் தனது
    மூன்று ஆண்டு பணி வாழ்வில் சேவை உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். நோயாளிகளை சந்தித்து அவர்களை குணப்படுத்தியிருக்கிறார், வீடுகளை சந்தித்திருக்கிறார், ஆதரவற்றவருக்கு ஆதரவு தந்திருக்கிறார், பேய்களை ஓட்டியிருக்கிறார் மற்றும் இறையாட்சியை பறைசாற்றி இருக்கிறார், இவ்வாறாக சேவை உணர்வோடு கூடிய நல்ல தலைவராக இருந்திருக்கிறார். இந்த உலகில் சிறந்த தலைவர்களை அடையாளம் காட்டுவது அவர்களுடைய சேவையாகும். வரலாற்றில் நாம் காணும் ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, அன்னை தெரேசா மற்றும் அப்துல் கலாம் இவர்கள் அனைவரும் இவர்களின் சேவையில் சிறந்த தலைவர்களாக வாழ்ந்து காட்டியவர்கள் ஆவர்.

    3. தியாக உணர்வு- Sacrifice (10: 45b)

    ஒவ்வொரு தலைவனுக்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய ஒரு உணர்வு தான் தியாக உணர்வு. இதைத் தான் தன்னைப் பற்றி தன் சீடர்களிடம் "மானிடமகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற்கு 10:45b) என கூறி அதை கல்வாரி மலையில் நிகழ்த்தியும் காட்டியிருக்கின்றார். இது மட்டுமல்லாது இயேசு தனது மூன்று ஆண்டு பணி வாழ்வில் எண்ணற்ற சிறு சிறு தியாகங்களை செய்திருக்கின்றார்.
    பழைய ஏற்பாட்டில் மோயிசன் இஸ்ராயேல் மக்களை வழிநடத்திய போது அவர் அவர்களுக்காக பல தியாகங்களை செய்திருக்கிறார். திருமுழுக்கு யோவானும் தனது பணி வாழ்வில் எண்ணற்ற தியாகங்களை செய்து இறுதியில் தன் உயிரையே அர்ப்பணித்ததை நாம் அறிவோம். திரு அவையிலே பல புனிதர்களும் மற்றும் மறை சாட்சியர்களும், இன்று நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல குருக்களும் மற்றும் கன்னியர்களும் இறைவனுக்காக பல தியாகங்களை செய்து நல்ல தலைவனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தியாக உணர்வு ஒரு தலைவனுக்குரிய தலைமைத்துவப் பண்பின் அடித்தளமாகும்.

    இன்று நமது சமுதாயத்தில் மற்றும் குடும்பங்களில் யாக்கோபு மற்றும் யோவானை போல பதவி ஆசை நிறைந்தவர்கள் எண்ணற்றோர். நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தலைவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். இன்று எத்தகைய ஒரு தலைவராக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? நான் தான் எல்லாமே என அதிகாரமும் ஆணவமும் கொண்ட தலைவராக இருக்கின்றோமா? நமது பணியாளர்களை புரிந்துகொண்டு, பணியாளர் தன்மையோடு கூடிய தலைமைத்துவ பண்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம். இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்ற இந்த மூன்று உணர்வுகளையும் நமது வாழ்க்கையில் நாம் ஏற்றுக் கொள்கின்ற பொழுது, நாமும் பணியாளத்துவ தன்மையோடு தலைமைத்துவ பண்புகளில் வளர்வோம்.

    இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

    ஆடியோவாக கேட்க...

                             https://youtu.be/N90K2Mvjk40

    அன்புடன்,

    அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF






    Friday, October 8, 2021

    🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 28-ஆம் வாரம் - ( ஆண்டு- B) ----- 10 -10-2021- ஞாயிற்றுக்கிழமை



    🌱விவிலிய விதைகள்🌱

    பொதுக்காலம் 28-ஆம் வாரம்

    தமிழ் திருவழிபாட்டு மறையுரை

    ஞாயிற்றுக்கிழமை

    நற்செய்தி: - மாற்கு 10: 17-30



    அவசர உலகம்

        

    அவசரம்... அவசரம்... அவசரம்...எல்லாமே அவசரம் தான்.  நாம் பயணித்து கொண்டிருக்கின்ற இந்த சமுதாயமும் சமுதாயத்தில் வாழும் நாம் அனைவரும் அவசர உலகத்தின் பிறப்புகளாகவே இருக்கின்றோம். நாம் அனைவரும் அவசரத்தில் பிறந்து, அவசரத்தில் வாழ்ந்து மற்றும் அவசரத்திலே முடிந்து போகின்றோம். எதற்கும் எதிலும் நமக்கு அவசரம் தான், சிந்தனையற்ற பேச்சு, செயல், துறு துறுவென அலையும் ஆர்வக் கோளாறு, தன்னிலையை அறியா நிலை, உணர்ச்சிவசப்படுதல் என இவையனைத்தும் அவசரத்தின் வெளிப்பாடுகள். இத்தகைய ஒரு நிலையிலிருந்து நாம் மாறுபட்டு வாழ இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசுவை பின்பற்ற விரும்பிய இளைஞர் இத்தகைய நிலையில் இருப்பதை பார்க்கின்றோம். அவர் ஒடி வந்து காலில் விழுவது முதல் இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்என்று அவரிடம் கூற, அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். (மாற்கு 10:21,22) என்பது முடிய அவரின் வருகை, பேச்சு, செயல் மற்றும் மீண்டும் செல்லுதல் என அனைத்தும் அவசரமாக தொடங்கி அவசரமாகவே முடிந்து போய் விட்டது. இன்று நாமும் அவசர உலகத்தின் பிறப்புகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.

           சாதாரணமாக நமது வாழ்க்கையில் அவசரத்தின் வெளிப்பாடுகளாக மூன்று நிலையை கூறலாம்.

    1. உணர்ச்சிவசப்படும் நிலை
    2. தன்னிலை அறியா நிலை
    3. சிந்தனையற்ற நிலை
    1. உணர்ச்சிவசப்படும் நிலை

         விவிலியத்திலும் அவசரத்தில் ஆர்வக் கோளாறாக உணர்ச்சிவசப்பட்டு சிந்தனையற்ற நிலையில் பல நிகழ்வுகளையும் பலரையும் பார்க்கின்றோம். தொடக்கத்தில் பாம்பு, “நீங்கள் சாகவே மாட்டீர்கள்;ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” (தொடக்க நூல் 3:4-6) என பெண்ணிடம் கூறிய வார்த்தைகளை கேட்டு எதையும் சிந்திக்காமல் முதல் பெற்றோர்கள் செய்த செயல் தான் மனிதகுலத்திற்கு ஜென்ம பாவத்தை உருவாக்கித் தந்தது. லோத்தின் மனைவி உணர்ச்சிவசப்பட்டதால் உப்பு சிலையாகி அவள் உயிரை இழந்தாள். (தொடக்க நூல் 17) புதிய ஏற்பாட்டில் இயேசுவோடு உடனிருந்த பேதுருவும் பல்வேறு சூழலில் உணர்ச்சிவசப்படுகின்றார். இயேசுவை கைது செய்ய வந்த படைவீரனின் காதை வெட்டுதல், இயேசுவை மூன்று முறை மறுதலித்தல், கடல் மீது நடத்தல் மற்றும் கரையில் இயேசு தான் இருக்கிறார் என்று படகிலிருந்து குதித்து நீந்தி கரையை நோக்கி செல்லுதல் என அவரின் நிலையை நன்கு அறிவோம்.

                  மனிதனின் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தான் உணர்வுகளும் உணர்ச்சிகளும். இவை மனிதனை ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். அவசரத்தில் வாழ்பவர்கள் இத்தகைய நிலையில் தங்களை அறியாமலே நுழைந்து விடுகிறார்கள். நற்செய்தியில் வருகின்ற நபரின் மூன்று விதமான செயல்பாடுகள் அவரின் உணர்ச்சிவசப்படும் நிலையை எடுத்துரைக்கிறது.

    1. ஓடி வருதல்

    2. முழந்தாள்படியிடுதல்

    3. 'நல்ல போதகரே' என்று கூறுதல்

    இயேசுவைப் பின்பற்ற விரும்பும் நபர் ஏன்? ஓடி வர வேண்டும், முழந்தாளிட வேண்டும் மற்றும் இயேசுவை பற்றி பிறர் கூற கேட்டறிந்தவர் அவரை 'நல்ல போதகரே' என்று அழைக்க வேண்டும். (மாற்கு 10:17) இவை அனைத்தும் அவரின் உணர்ச்சிவசப்பட்ட நிலையை நமக்கு எடுத்துக்கூறுகிறது. உணர்ச்சிவசப்படுதல் அவசரத்தின் மிக முக்கியமான நிலை.

    2. தன்னிலை அறியா நிலை

    அவசரம் மனிதனை வெறுமையின் நிலைக்கு தள்ளி விடுகிறது. அந்நிலையில் அவன் அவனைப் பற்றி சிந்திப்பதும் இல்லை, தன்னிலையை அறிவதும் இல்லை. நற்செய்தியில் கட்டளைகளைக் கடைப்பிடி என இயேசு கூறியவுடன் சற்றும் யோசிக்காமல்போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்”(மாற்கு 10:20) என்று கூறியது அவரின் தன்னிலையை உணரா நிலையை காட்டுகிறது. அதனால் தான் இயேசு உன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குக் கொடு என்று அவரின் நிலையை உணர வைக்கிறார்.

    3. சிந்தனையற்ற நிலை                 

    அவசரத்தில் மனிதன் சிந்திப்பதே இல்லை என்பது எவரும் மறுக்க இயலாத உண்மையாகும். இன்றைய நற்செய்தியில் இயேசுவை சந்திக்கும் பணக்கார இளைஞரின் சிந்தனையற்ற நிலையை பார்க்கின்றோம். தன்னால் எது செய்ய முடியும்? செய்ய இயலாது? தனது இலக்கு எப்பேற்பட்டது? எதனை நோக்கி எனது வாழ்வு சென்று கொண்டிருக்கின்றது? என எதையுமே சிந்திக்காமல் அவசரத்தோடு வேகமாக ஓடி வந்து இயேசுவிடம் நிலைவாழ்வை பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்று அந்த இளைஞன் கேட்பது சிந்தனையற்ற நிலை தான்.

    நிலை வாழ்வு என்னும் நிரந்தரம்    

    இன்று நாம் உண்ணும் உணவிலிருந்து ஏற்படுத்தி கொள்ளும் நமது வாழ்க்கை வரை நாம் அவசர அவசரமாகவே முடிவு செய்து, உணர்ச்சிவசப்பட்டு யாவற்றையும் செய்கின்றோம். இத்தகைய ஒரு நிலையிலிருந்து வெளிவர தான் இறைமகன் இயேசு கிறிஸ்து நிலை வாழ்வை பற்றி தெளிவுபடுத்துகிறார்.

    இன்று நாம் நிலையானவற்றை பற்றி வாழ அழைப்பு பெறுகின்றோம். ஒரு நிமிடத்தில் நாம் உணர்ச்சிவசப்பட்டு மற்றும் கோபப்பட்டு அவசர அவசரமாக எடுக்கின்ற பல முடிவுகள் தான் பலரை அவர்களது வாழ்வை இழக்க வைக்கின்றன. இதனால் பல தற்கொலைகளும் கொலைகளும் நடந்திருக்கின்றன. இங்கு கோபமும் மற்றும் உணர்ச்சிவசப்படுதலும் நிரந்தரம் இல்லை. அமைதியும், நிம்மதியும், சிந்திப்பதும் மற்றும் தன்னிலை அறிவதும் தான் நிரந்தரம். இன்று எதுவும் நினைத்தவுடனே கிடைத்துவிட வேண்டும் என்னும் அவசரம். அதனால் தான் துரித உணவு என்னும் Fast Food-க்கும், Online Food-க்கும், Hybrid காய் மற்றும் கனிகளுக்கும் அடிமையாகி கிடக்கின்றோம். எதையுமே வேகமாக செய்து பெற்று விட வேண்டும் என்ற அவசரத்தால் இத்தகைய உணவுகளை நாம் உண்டு, பல்வேறு நோய்களுக்கும் நாம் அடிமையாகி கிடக்கின்றோம். அவசரத்தால் நாம் பெற்றுக் கொள்ளுகின்ற இத்தகைய துரித உணவுகள் நிரந்தரமில்லை. இதற்கு மாறாக நிலைவாழ்வு தருகின்ற இயற்கை உணவுகளை நாம் பெறுவதற்கு முயற்சிப்போம். செல்வத்தை ஒதுக்கி நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வோம் என்னும் நற்செய்தியின் சிந்தனையில் நம் வாழ்வின் அவசரங்களையும் ஆபத்துக்களையும் ஒதுக்கி இறைவனையும் இறைவன் தரும் நிலை வாழ்வையும் பெற்றுக் கொள்ள முயலுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

    ஆடியோவாக கேட்க.......

    https://youtu.be/M-b_J6f8hUI 

    அன்புடன்

    அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF