Saturday, January 2, 2021

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவரின் திருக்காட்சி திருவிழா- (ஆண்டு- B)- 03-01-2021- ஞாயிற்றுக்கிழமை

  விவிலிய விதைகள்

ஆண்டவரின் திருக்காட்சி திருவிழா

(ஆண்டு- B)

03-01-2021

ஞாயிற்றுக்கிழமை


இறைவன் காட்டும் வாழ்வின் கருவிகள்



 1960-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்த கார் ஷோ ரூமில் ஒரு நோட்டீஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த ஷோ ரூமில் யார் அதிகமான காரை விற்பனை செய்கிறார்களோ, அவர்களுடைய பெயர் அந்த நோட்டீஸ் போர்டில் இடம் பெறும். இதற்காக பலரும் பல முயற்சிகளை எடுக்கின்றார்கள். அங்கு பணியாற்றிய ஜோ ஜெரால்டு என்பவர் எப்படியாவது அந்த நோட்டீஸ் போர்டில் தன்னுடைய பெயர் இடம் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றார். ஆனால் அதற்காக பல முயற்சிகள் எடுத்தும் ஒரு வாரம் கூட அவருடைய பெயர் அதில் இடம் பெறவில்லை.  ஒரு முறை அவர் அந்த கார் ஷோ ரூமின் முதலாளியிடம் சென்று அதற்கான வழிவகைகளை கேட்கின்றார். அவர் நீ அதிகமான காரை விற்பனை செய், உன்னுடைய பெயரும் இந்த நோட்டீஸ் போர்டில் இடம் பெறும், அதற்கு நீ உன்னுடைய தனித்திறமையை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார். உடனே அவர் யோசிக்கின்றார்,  குழப்பமடைகின்றார்,  குழப்பமுற்று அருகே உள்ள ஒரு காபி ஷாப்பில் சென்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். எந்த வகையான  காபி  அவருக்கு தேவை என்பதை,  குழப்பத்திலிருந்த அவரிடம் கேட்க தயங்கிய அங்கிருந்த பணியாளன், அவரே காபியை எடுத்து வந்து கொடுக்கின்றார். இந்த கலவை காபி தான் எனக்கு பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கின்றார். உடனே அந்த பணியாளன், ஐயா! தாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் நான் தான் உங்களுக்கு காபி கொடுக்கிறேன்.  முகமலர்ச்சியோடு எனக்கு நன்றி  சொல்வீர்கள், அதுமட்டுமல்லாது கிறிஸ்துமஸ்க்கு எனக்கு வாழ்த்து அட்டையை நன்றி சொல்லி அனுப்பி இருந்தீர்கள். அதனால் நீங்கள் எதை குடிப்பீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும் என்கின்றார்.  ஜோ ஜெரால்டுக்கு  இப்போது ஒரு உண்மை புரிகின்றது, தனது தனித்திறமையை உணர்கின்றார், உடனே யார் யாருக்கெல்லாம் காரை விற்பனை செய்கின்றாரோ, அவரைப் பற்றிய ஒரு குறிப்பையும் மற்றும் விலாசத்தையும்  டைரியில் எழுதுகின்றார்.  அவர்கள் கார் வாங்கிய ஒரே மாதத்தில் அவர்களுக்கு வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்புகின்ற பழக்கத்தை உருவாக்குகின்றார். அந்த பழக்கத்தின் வாயிலாக அவருக்கு எண்ணற்ற  நண்பர்கள் கிடைக்கின்றார்கள், அது மட்டுமல்லாது ஒவ்வொரு கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் ஈஸ்டர் விழாக்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றார்.  அவருடைய பயனாளர்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு, தெரிந்தவர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கார் வாங்க இவரையே தொடர்பு கொள்கின்றார்கள். இதன் பலனாக இவருக்கு நிறைய காரை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. அது ஷோ ரூமிலிருந்த நோட்டீஸ் போர்டில் மட்டுமல்ல கின்னஸ் புத்தகத்திலும், ஒரே ஆண்டில் அதிக காரை விற்பனை செய்த விற்பனையாளர் என்ற பெயரும் அவருக்கு கிடைக்கின்றது.

  அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஜோ ஜெரால்டுக்கு  வாழ்த்து அட்டை என்னும் ஒரு கருவி கிடைத்தது. அது அவருடைய இலக்கை அடைய,  வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிவகை செய்தது, அது அவருடைய பெயரை நோட்டீஸ் போர்டில் மட்டுமல்லாது,  கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெயரச் செய்தது.  இன்றைய நாளிலே நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா  நம்முடைய வாழ்க்கைக்கு இறைவன் கொடுக்கின்ற மாபெரும் கருவிகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசுவை தேடி வந்த மூன்று ஞானிகளுக்கு விண்மீன் அவரை தேட, கண்டு கொள்ள மாபெரும் கருவியாக அமைந்தது, இயேசுவை அவர்கள் வணங்கியதையும், மதித்ததையும் அவர்கள் கொடுத்த காணிக்கைகள் என்னும் கருவிகள் எடுத்துரைக்கின்றது. மீண்டும் ஏரோதிடம் செல்லாது நாடு திரும்ப  கனவு  என்னும் கருவிகள் ‌பயன்பட்டது. நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா விண்மீன், காணிக்கைகள்  மற்றும் கனவு என்னும் மூன்று கருவிகளை சுட்டிக்காட்டுகின்றது. அவர்கள் தங்களுடைய இலக்கான இறைமகன் இயேசு கிறிஸ்துவைக் கண்டுகொள்ள அது அவர்களுக்கு உதவியது. இன்று  பிறந்து இருக்கின்ற இயேசு எண்ணற்ற கருவிகளை நம்முடைய வாழ்க்கைக்கு தருகின்றார். ஞானிகள் கிடைத்த கருவிகளை சரியான விதத்தில் பயன்படுத்தினார்கள்,  நாம் நம்முடைய வாழ்வின் கருவிகளை  சரியான விதத்தில் பயன்படுத்துகிறோமா என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. விண்மீன் என்னும் கருவி

“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்”. (மத்தேயு 2:2) என்னும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில்  ஞானிகளுக்கு விண்மீன் மாபெரும் கருவியாக இருப்பதை நாம் பார்க்கின்றோம். இந்த விண்மீன் தான் அவர்களுக்கு எங்கோ ஒரு அரசர் பிறந்திருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகின்றது,  அவர்களுக்கு வெளிச்சமாக மாறியது, அவர்கள் அரசராக,  தெய்வக் குழந்தையாக இறைமகன் இயேசு கிறிஸ்துவை காண்பதற்கு வழியாக இருக்கின்றது. ஆக ஒரு விண்மீன் அவர்களுக்கு தங்களுடைய வாழ்வில் ஒரு இலக்கை உருவாகியிருக்கின்றது. அரசர் பிறந்திருக்கின்றார், அவரை காண வேண்டும் என்று அந்த விண்மீனே  அவர்களுக்கு வெளிச்சமாகவும், வழியாகவும் மற்றும் மாபெரும் கருவியாக இருந்திருக்கின்றது.

2. காணிக்கைகள் என்னும் கருவி 

 ஞானிகளுக்கு கிடைத்த இரண்டாவது கருவியை அவர்கள் கொண்டு வந்த பேழைகளில் இருந்த காணிக்கைப் பொருட்களான பொன், தூபம் மற்றும் வெள்ளைப்போளம் எனும்  காணிக்கைகள். அவர்கள் பிறந்திருக்கின்ற இயேசுவை ஒரு தெய்வமாக, அரசராக மற்றும் குணமளிப்பவராக கண்டுகொண்டார்கள் என்பதன் அடையாளமாக கருதப்படுகிறது. அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளை தங்கள் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்த கருவியாக பயன்படுத்தினார்கள்.

"வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்".(மத்தேயு 2:11)  என்னும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறைவார்த்தையும் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றது.

3. கனவு எனும் கருவி

"ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்."

(மத்தேயு 2:12)  என்னும் நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி நலமோடு தங்களுடைய நாடு செல்வதற்கு தங்களுடைய இலக்கை முழுமையாக நிறைவு செய்வதற்கு கனவுகள் கருவியாக ஞானிகளுக்கு பயன்பட்டது.

4. நம் வாழ்வின் கருவிகள்

"உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்". (எபேசியர் 3:2) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தின்  அடித்தளத்தில், பல வேளைகளில் நாம் நம்முடைய வாழ்க்கையில் இறைவன் கொடுத்திருக்கின்ற கருவிகளை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  நம்முடைய வாழ்க்கையிலே இறைவன் நம்முடைய குணங்கள், திறமைகள், ஆற்றல்கள் என்னும் கருவிகளை கொடுத்திருக்கிறார். இவை நம்மை செம்மைப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் நம்முடைய இலக்கை அடைய வழிவகை செய்யும் வாய்ப்புகளாக இருக்கின்றது. பெரியவர்களின், அறிவுரைகளும், ஆலோசனைகளும், திருஅவையில் நமக்குக் கொடுத்திருக்கின்ற திருவருட்சாதனங்களும், பக்தி முயற்சிகளும் குறிப்பாக நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் நாம் பங்கேற்கின்ற திருப்பலியும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிரசன்னமாகி இருக்கின்ற நற்ருணையும்  இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்ற கருவிகள். இந்தக் கருவிகள் யாவற்றையும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே  உணர்ந்து வாழ்கின்றோமா? சிந்திப்போம். இது தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா நமக்கு கொடுக்கின்ற அழைப்பாக இருக்கின்றது.

"இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!" (எசாயா 60:2) என்னும் இன்றைய முதல் வாசகத்தின் இறைவார்த்தை அடித்தளத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்துவே நமக்கு ஒளி என்னும் கருவி, மண்ணுலகில் மானிடராகப்  பிறந்திருக்கின்ற இயேசு பாலனே  இறைவன் நம்முடைய வாழ்க்கைக்கு கொடுத்திருக்கின்ற மாபெரும் கருவி. எனவே இறைமகன் இயேசு கிறிஸ்துவும், அவர் நமக்குக் கொடுக்கின்ற வாழ்வின் கருவிகளையும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே உணர்வோம்.  வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்

Tuesday, December 22, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -திருக்குடும்பத் திருவிழா- (ஆண்டு- B)- 27-12-2020- ஞாயிற்றுக்கிழமை

                             

திருக்குடும்பத் திருவிழா
(
ஆண்டு- B)

27-12-2020

ஞாயிற்றுக்கிழமை



திருக்குடும்பத்தின் முக்கனிகள்




              வேடிக்கையாக  இளைஞர்களின் வாழ்க்கை நிலையை நான்கு வகையாக கூறுவார்கள். அதில் திருமணத்திற்கு முன்பு இரண்டு பருவங்கள், திருமணத்திற்கு பிறகு இரண்டு பருவங்கள். முதலாவதாக ஸ்பைடர்மேன் பருவம், இது ஏறக்குறைய எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்க கூடிய ஒரு பருவம். இந்த பருவத்திலே பையனுக்கு வீட்டிலே இருக்க முடியாது, நண்பர்களிடையே ஊர் சுற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகம் வரும், மொபைல் மற்றும் சோஷியல் நெட்வொர்க் போன்றவற்றை பயன்படுத்துவதற்காக மனம் அலையும், வீட்டில் யார் எதைச் சொன்னாலும் கேட்க காது கொடுக்க இயலாத ஒரு பருவம், ஸ்பைடர் மேனை போல மனம் சுற்றி சுற்றி பல இடங்களுக்கும் செல்லுகின்ற ஒரு பருவம்.
                  இரண்டாவது பருவம் சூப்பர்மேன் பருவம். கல்லூரி படிக்கக்கூடிய காலத்திலே  உருவாகும் ஒரு பருவம், காதல் வசப்படும் ஒரு பருவம், மோட்டார் சைக்கிளில் சுற்றி திரியும்  ஒரு பருவம், வித்தியாசமாக  முடி வெட்டி, அழகாக இருக்க வேண்டும்ஸ்டைலாக உடை அணியவேண்டும் என என்னும் ஒரு பருவம். சூப்பர்மேன் போல சுற்றுவதால் இதனை சூப்பர்மேன் பருவம் என்று கூறுவார்கள்.

                       திருமணத்திற்கு முன்பு இந்த இரண்டு பருவங்களை கடக்கின்ற போது மூன்றாவது பருவமான ஜென்டில்மேன் பருவத்திற்குள் நுழைகின்றோம். இது திருமணமான பிறகு உருவாகின்ற ஒரு பருவம். திருமணத்திற்கு முன்பு  காலை 10 மணி வரை உறங்கிய ஒருவனை, திருமணத்திற்குப் பிறகு காலை 6 மணிக்கே எழ வைக்கும் பருவம். திருமணத்திற்கு முன்பு வித்தியாசமான ஸ்டைலான உடைகளை அணிந்த ஒருவன் திருமணத்திற்குப் பிறகு ஃபார்மலான உடைகளை அணிகின்ற பருவம். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு முன்பு வீடு வந்து சேருகின்ற பருவம். பொறுப்பாக வேலை செய்து, தான், தன் குடும்பம் என்று வாழ்வது இந்த  ஜென்டில்மேன் பருவம்.

           இறுதியாக திருமணத்திற்குப் பின்பு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லாவற்றையும் அனுபவித்த பிறகு உருவாகுவது டாபர்மேன் பருவம் என்று கூறலாம். நாய்ப்படாத வாழ்க்கைசோறு கேட்பதற்குக் கூட மனைவியிடம், பிள்ளைகளிடம் அஞ்சுகின்ற ஒரு நிலை, வேலைக்கெல்லாம் ஒய்வு கொடுத்து விட்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பருவம், இந்த டாபர்மேன் (நாய்) பருவம்.
         இவ்வாறாக மனிதனுடைய   வாழ்வின் நிலையை திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு என வேடிக்கையாக இத்தகைய பருவங்களில் கூறினாலும், இது இன்றைய குடும்பங்களின் நிலையையும் அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தையும் எடுத்துக் கூறுகிறதுதிருமணம், திருமண வாழ்வு, குடும்பம் மற்றும் குடும்ப வாழ்வு என்றாலே அது ஒரு மகிழ்வற்ற வாழ்வு, பாதாள கிணறு மற்றும் கொலைக்களம் என்ற ஒரு மனநிலை ஏற்படுகிறது. நம் குடும்பங்களின் இத்தகைய நிலை மாற  திருக்குடும்பமே நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றது, அதுவே நம் குடும்பங்களுக்கு முக்கனிகளை கொடுக்கின்றது.

                     இன்று நமது குடும்பங்களிலே திருக்குடும்பத்தின் இத்தகைய முக்கனிகள் காணப்பட வேண்டும். கிறிஸ்துவின் அன்பு என்னும் கனியும், அன்னை மரியாவின் பணிவு/ கீழ்ப்படிதல் என்னும் கனியும் மற்றும் யோசேப்பின் அமைதி என்னும் கனியும், இன்று நம்முடைய குடும்பங்களில் நிலவுகின்ற போது, நமது குடும்பங்கள் என்றும் குன்றின் மீது எரிகின்ற ஒளியாக அமையும்.

1. மரியாவின் பணிவு /கீழ்ப்படிதல்

               அன்னை மரியாள் இன்று கீழ்ப்படிதல் என்னும் கனியை நம்முடைய குடும்பங்களுக்கு தருகிறார். "இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்" (லூக்கா. 1:38) என தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து   கீழ்ப்படிதலிலும் மற்றும் பணிவிலும் சிறந்து விளங்கினார்.   கிறிஸ்து பிறப்புக்கு பிறகு எகிப்துக்கு செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலையின் போது அன்னை மரியாள் தன்னுடைய கணவரான யோசிப்புக்கு கீழ்ப்படிந்து நடந்தார். அவர் அழைக்கின்ற இடத்திற்கெல்லாம் தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதை பார்க்கின்றோம், இது அன்னையின்  கீழ்ப்படிதலை நமக்கு எடுத்தியம்புகிறது. நம்முடைய குடும்பங்களில் இத்தகைய பணிவு/ கீழ்ப்படிதல் என்னும் பண்புகள் தேவைப்படுகின்றது. கணவருக்கு பணிந்திருக்க வேண்டும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கூறுகின்ற போது இது வெறும் அடிமைத்தனம் அல்ல. மாறாக அர்ப்பணிப்பு உங்களுடைய வாழ்வில் ஒருவர் மற்றவருக்காக உங்களையே அர்ப்பணிப்பது. "திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும்".(கொலோசையர் 3:18) மேலும் "பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது." (எபேசியர் 6:1) என்னும் பவுலடிகளாரின் வார்த்தைக்கு ஏற்ப பணிவு நம் குடும்பங்களுக்கு அவசியமானது"திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்". (எபேசியர் 5:24) மேலும் "பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்".(லூக்கா 2:51) என இறைமகன் இயேசுவும் நமக்கு முன் உதாரணமாக இருக்கின்றார். எனவே அன்னையின் வழியில் கீழ்படிதல்/பணிவு என்னும் கனியை நம் குடும்பங்களுக்கு எடுத்து கொள்வோம்.

2. சூசையின் அமைதி

                   "விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை" எனும் பழமொழிக்கேற்ப அமைதி நிலவ விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.  "மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது". (1 பேதுரு 3:4) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் அமைதி மற்றும் விட்டுக் கொடுத்தல் இறைவனின் பார்வையில் விலை உயர்ந்தது. புனித சூசையப்பர் அமைதியானவராக, பொறுமையானவராக இருந்தார் என்பதை விவிலியம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. புனித சூசையப்பரின் வார்த்தைகள் விவிலியத்தில் காணப்படவில்லை, ஆனால் அவரின் அமைதி எண்ணற்ற வார்த்தைகளையும், நம் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும்  சுட்டிக் காட்டுகிறதுஇறைவனுடைய வார்த்தைகளை அமைதியான முறையிலே அவர் ஏற்றதை பார்க்கின்றோம்.

   நூலின் இரு புறத்தையும் இருவர் இழுத்துப் பிடித்துக் கொண்டே இருந்தால்  நூலானது அறுபடும். திருமண வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் அப்படி தான், கணவனும் மனைவியும், பிள்ளைகளும் பெற்றோர்களும் நூலைப்போல தங்களுடைய வாழ்க்கையில் இருவரும் இரு புறத்தையும் பிடித்து இழுத்துக் கொண்டே இருந்தால், நூலானது அதாவது வாழ்க்கையானது அழிந்துபோகும். மாறாக ஒருவர் மற்றவர் விட்டுக் கொடுத்து வாழும் போது வாழ்க்கையானது ஒருபோதும் அறுபடாது. வாழ்க்கையை தொலைத்து நிற்கும் நமது குடும்பங்களுக்கு புனித சூசையப்பர் அமைதி என்னும் கனியை தருகின்றார். புனித சூசையின் அமைதி என்னும் கனியை நம்முடைய குடும்பங்களில் என்றுமே நிலவச் செய்வோம்.

3. கிறிஸ்துவின் அன்பு

         "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
                                               பண்பும் பயனும் அது"

     என்னும் வள்ளுவரின் வாய்மொழிகேற்ப  அன்பும் அறமும் நம்முடைய குடும்ப வாழ்க்கையில் இருக்கின்ற போது அது நம்மை மகிழ்வான வாழ்வுக்கு அழைத்து செல்லும்"திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்". (எபேசியர். 5:25)  இறைவன் தன்னுடைய ஒரே மகனையே சிலுவையிலே அர்ப்பணித்து, இந்த மானிட குலத்தின் மீது அன்பு காட்டியது போல, குடும்பத்தில் ஒருவர் மற்றவருக்கு இடையே அன்பு நிலவ வேண்டும். கணவன் - மனைவி இடையே  மற்றும் பெற்றோர்- பிள்ளைக்கு இடையே அன்பு எப்பொழுதும் ஒளியாய் பற்றி எரிய வேண்டும். "அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது".(1 கொரிந்தியர் 13:4) எனவே இந்த அன்பு கிறிஸ்துவின் அன்பைப் போல தன் உயிரையே தருகின்ற முழுமையான அன்பாக இருக்க வேண்டும். இன்று நமது குடும்பங்களுக்கு கிறிஸ்து இந்த அன்பு என்னும் கனியை தருகின்றார்.

  ஒருமுறை ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும்  இணைந்து தன்னுடைய மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அவர்கள் தங்களுடைய மகனிடம் உனக்காக நாங்கள் ஒரு பெண் பார்த்து இருக்கின்றோம் என்று கூறுகின்ற போது, அவனோ எனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றான். அப்பொழுது மனைவி கணவனிடம், பாருங்கள்  பிள்ளைக்கு நம்மை விட்டு பிரிந்து போக மனமில்லைநம்மீது எவ்வளவு அன்பு, திருமணமே வேண்டாம்  என்று கூறுகின்றான் என்றாள். அதற்கு கணவனோ  அப்படியெல்லாம் ஒன்றுமில்லைகாலை முதல் இரவு வரை நம்மிடையே நடக்கும் சண்டையை பார்த்து விட்டு தான் இவன் இப்படி சொல்கின்றான் என்றார். இதுதான் இன்று நம்முடைய குடும்பங்களின் நிலையாக இருக்கின்றது. குடும்பங்களை பற்றிய எண்ணங்களாக இருக்கின்றது. திருக்குடும்பமாக இருக்க வேண்டிய நம்முடைய குடும்பங்கள், தெரு குடும்பங்களாக, திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களாக இருந்து கொண்டிருக்கிறது. நூலைப் போல சேலைதாயைப் போல பிள்ளை என்று கூறுவார்கள். ஆனால், இன்று   இத்தகைய பழமொழி நம்முடைய சமுதாயத்தில் அப்பா வட்டம் வட்டமாக சிகரெட் பிடித்தால், பிள்ளை மாவட்டம் மாவட்டமாக சிகரெட் பிடிப்பான் என்ற ஒரு நிலைக்கு தள்ளி காணப்படுகிறது. பெற்றோர்களைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்ள கூடிய ஒரு சமுதாயத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
தனி மரம் தோப்பாகாது, தனிமனிதன் சமுதாயமாக மாற முடியாது. பலபேர் சேர்ந்து வாழ்ந்தால் அது குடும்பம் பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்ந்தால் அது சமுதாயம். எனவே, நாம் அனைவரும் ஒரே குடும்பமாக அதுவும் திருகுடும்பமாக வாழ, இன்று நாம் கொண்டாடும் திருக்குடும்ப திருவிழா நம்மை அழைக்கிறது.

                           "மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது." (மத்தேயு. 7:25) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நம் குடும்பங்கள் என்றும் பாறையின் மீது கட்டிய வீடாக அமைய, மழை, காற்று மற்றும் வெள்ளம் என்னும் கஷ்டங்களின்றி  நிலைத்து நிற்க திருக்குடும்பத்தின் கனிகள் நம் குடும்பங்களுக்கு அடித்தளமாக தேவைப்படுகிறது.         

   "இல்லறம் நல்லறமாகட்டும்"
"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க"
   "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன"
  "கூடி வாழும் குடும்பம் கோடி நன்மை பெறும்"
     "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"

                       என்னும்  குடும்பங்கள் சார்ந்த இத்தகைய பழமொழிகள் அனைத்தும், குடும்பத்தின் மேன்மையை நமக்கு எடுத்துரைக்கின்றன. துன்பத்தில் துடிக்கின்ற, வறுமையில் வாடுகின்ற, சந்தேகத்தில் சாகின்ற, அலைகடலில் அலைக்கழிக்கப்படுகின்ற குடும்பங்களாக நம்முடைய குடும்பங்கள் அல்லாது, திருக்குடும்பத்தின் மாதிரியை பின்பற்றி என்றுமே நிலைத்து நின்று கிறிஸ்துவின் வழியிலே  வளர்கின்ற குடும்பங்களாக வளர திருக்குடும்பம் தரும் கனிகளை நம்முடைய குடும்பங்களில் நிலவச் செய்வோம்  இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்

                                                                   Fr. குழந்தை யேசு ராஜன் CMFகும்பகோணம்.