Saturday, August 1, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 02-08-2020 - பொதுக்காலம் 18ஆம் வாரம் ( ஆண்டு- A)

பொதுக்காலம் 18ஆம் வாரம்

(ஆண்டு- A)

02-08-2020

ஞாயிற்றுக்கிழமை



பலுகிப்பெருகுவோம்





"அன்பை பகிரும்போது மகிழ்ச்சி பலுகிப்பெருகும்.
 இரக்கத்தை பகிரும் போது ஆறுதல் பலுகிப்பெருகும்.
 அறிவை பகிரும்போது ஆற்றல் பலுகிப்பெருகும். 
தன்னம்பிக்கையை பகிரும்போது பலம் பலுகிப்பெருகும்.
 நேரத்தை பகிரும்போது நம் வாழ்வே பலுகிப்பெருகும்".



           ஆக வாழ்வில் பகிர்தல் என்றுமே பலுகிப் பெருகச் செய்யும். இதைத்தான் திருத்தூதர் பணிகள் 20:35-ல் பவுலடிகளார் "பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள்" என்று கூறுகின்றார். இன்றைய இறைவார்த்தை வழிபாடு  நமது பரிவும் பகிர்தலும் நம் வாழ்வை பலுகிப் பெருக்கும் என்னும் சிந்தனையை முன் வைக்கின்றது.



இயேசுவின் பரிவும் - சீடர்களின் பார்வையும்

                பகிர்தலுக்கு அடிப்படையாக இன்றைய நற்செய்தியில்  இயேசுவின் பரிவு காணப்படுகின்றது.  இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு பரிவு கொண்டவுடன்  பகிர்வு ஏற்படுகின்றது. அங்கு நோயாளிகள் குணமாக்கபடுகின்றார்கள். ஆனால் சீடர்களின் எண்ணங்களோ பரிவில் அல்ல,  மாறாக அவர்களை அனுப்பி விட வேண்டும் என்ற ஒரு பார்வையில் மட்டுமே  இருந்தது. பார்வை வெளிப்புற அடையாளம், பரிவு உட்புற அடையாளம். இயேசு உட்புற அடையாளத்தை கண்டுகொண்டார் சீடர்கள் வெளிப்புற அடையாளமான பார்வையிலே  இருப்பதைப் பார்க்கின்றோம் அதனால்தான் சீடர்களின் பார்வை அவர்களை அனுப்பி விடவேண்டும் என இருந்தது.  இயேசுவின் இயேசுவின் பரிவு பகிர்தலை உண்டாக்கியது.



இயேசுவின் அக்கறையும்- ஏரோதின் அநீதியும்

        இன்றைய நற்செய்தி காணப்படும் மத்தேயு பதினான்காவது அதிகாரத்தில் ஏரோது ஒரு விருந்து ஒன்று தருவதை பார்க்கின்றோம். இன்றைய நற்செய்தியிலும் இறைமகன் இயேசு கிறிஸ்து விருந்து ஒன்றை தருகின்றார். ஏரோது தந்த விருந்து மாளிகையில், இயேசு தந்த விருந்து புல்தரையில். ஏரோது தந்த விருந்து அநீதியின் அடையாளமாக அமைந்தது. இயேசு தந்த விருந்து அவர் அக்கறையின் அடையாளமாக அமைந்தது.  அநீதி ஒருவரைக் கொன்றது, இயேசுவின் அக்கறை பலரை வாழ வைத்தது. ஏரோதின் விருந்து அநீதியில் முடிந்தது, இயேசுவின் விருந்து பரிவில், பகிர்வில் நிறைவேறியது,   பலரை வாழ வைத்தது.



பலுகிப் பெருகிட அழைப்பு

                 பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் கொண்ட நம்பிக்கை, ஆபிரகாம் என்னும் ஒரு மனிதர் ஒரு இனமாக உருவாகும் அளவுக்கு பலுகிப் பெருகச் செய்தது. கிறிஸ்து என்னும் ஒரு மனிதனின் வாழ்வு, ன்று 2.4 மில்லியன் கிறிஸ்தவர்களை உலகமெங்கும் பலுகிப் பெருகச் செய்திருக்கின்றது. அன்னை தெரேசா என்னும் ஒரு சகோதரியின் வாழ்வு, இன்று ஆயிரக்கணக்கான அருட் சகோதரிகளாக பலுகிப் பெருக செய்திருக்கின்றது. அவருடைய சேவை, இன்று பல சேவைகளாக அகில உலகமெங்கும் பலுகிப் பெருகி இருக்கின்றது. இன்று நமது வாழ்வும் நம்முடைய குணங்களும் பலுகிப் பெருக நாம் அழைப்பை  பெறுகின்றோம்.நிலத்தில் விதைத்த விதைகள் 30, 60 மற்றும் 100  மடங்குகளாக பலுகிப் பெருகுவதை பார்க்கின்றோம். 5 மற்றும் 2 தாலந்தை பெற்றவர்கள் அதை இன்னும் அதிகமாக பலுகிப் பெருக்கியதை  பார்க்கின்றோம். எனவே நாம் நம்மிலே இருப்பதை பயன்படுத்துகின்ற போது, அதை பகிர ஆரம்பிக்கின்ற போது, அது மென்மேலும் பலுகிப் பெருகுவதை   நாம் பார்க்கின்றோம்.
    
            அன்பார்ந்தவர்களே,  நம்மிடையே இருப்பதை பகிரும் பொழுது அது பலுகிப் பெருகும்.   தொடக்கநூல் 18: 1-4 -ல் ஆபிரகாம் உணவு அளிக்கின்ற போது குழந்தை பாக்கியம்  பெறுகின்றார்.  1 அரசர்கள் 17 :8 -16 -ல் சாரிபாத்து கைம்பெண்  உணவு அளிக்கின்ற போது தொடர்ந்து எண்ணையும், மாவும் குறைபடாமல்  பலுகிப் பெருகுகின்றது.  இறைவன் நமக்கு எண்ணற்ற திறமைகளை,  திறன்களை மற்றும் குணநலன்களை கொடுத்திருக்கின்றார். இவை அனைத்தும்  நாம் மற்றவர் இடையே பகிர்கின்ற போது அது பலுகும். இன்று, நாமும், நம் வாழ்வும், குணங்களும், திறன்களும் மற்றும் திறமைகளும் பலுகிப் பெருக இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகின்றது. நம்மையும் நம் வாழ்வையும்  பலுகிப் பெருகுவோம்.

இறை ஆசிர் பெறுவோம்.




Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.

Saturday, July 25, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 26-07-2020 - பொதுக்காலம் 17ஆம் வாரம் ( ஆண்டு- A)

பொதுக்காலம் 17ஆம் வாரம்

(ஆண்டு- A)

26-07-2020

ஞாயிற்றுக்கிழமை

 

வாழ்க்கையில்

எதைத் தெரிவு செய்கிறாய்?

 

                ஒரு கிராமத்தில் அண்ணன் தம்பி என இருவர் இருந்தார்கள். இருவரும் திருமணம் ஆகி தங்களுடைய குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அண்ணனுக்கு அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தது. அதற்கு மாறாக தம்பி நல்ல ஒரு வக்கீலாக  இருந்தான். ஒருவன் குடிகாரராகவும், மற்றொருவன் ஊர் மதிக்கும் அளவுக்கு ஒரு வக்கீலாகவும்  இருப்பது, ஊர் மக்களுக்கு ஒரே ஆச்சரியத்தை அளித்தது. எப்படி ஒரு தாய் பிள்ளைகள் இருவரும் இரு கோணங்களில் இருக்கிறார்கள் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்ஊர் மக்கள் அண்ணனிடம் நீ எப்படி குடிகாரனாக மாறினாய் என்று கேட்டார்களாம். அண்ணனோ, என்னுடைய தந்தை ஒரு குடிகாரன் அவர் ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வந்து என் தாயையும் எங்கள் இருவரையும் அடிப்பார். அதை பார்த்து  என்னுள்ளும் அதே உணர்வு ஒட்டிக்கொண்டது, அதனால் தான் நான் குடிக்க ஆரம்பித்தேன், நான் குடிப்பதற்கு என் தந்தைதான் காரணம் என்று கூறினாராம்.

 தம்பியை ஊர்மக்கள்  நீ எப்படி ஒரு நல்ல வக்கீலாக மாறி இருக்கின்றாய்  என்று கேட்ட பொழுது அதற்கு என் தந்தை தான் காரணம், என் தந்தை ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வந்து என் தாய்யையும், எங்களையும் அடிப்பார். அப்போது, நான் முடிவு எடுத்தேன், என் தந்தையைப் போல ஒரு போதும் நான் மற்றவரை துன்புறுத்துபவனாக மாறக்கூடாது. நீதிக்காகப் போராடுபவனாக மாற வேண்டும். அதனால் தான் நான் நல்ல ஒரு வக்கீலாக மாறினேன். நான் இந்நிலை வருவதற்கு என் தந்தையின் நிலை தான் காரணம் என்று கூறினாராம். ஆம் அன்பார்ந்தவர்களே, இருவரும் ஒரு தந்தையின் பிள்ளைகள், ஒரே சூழலில் வளர்ந்தவர்கள் ஆனால் இருவரும் தங்களுடைய சூழலை, தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திய விதம் தான் அவர்களை வெவ்வேறாக மாற்றி இருக்கின்றது. இன்று நம்முடைய வாழ்க்கையிலும் பல விதமான சூழல்கள்பல விதமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது மிக அவசியமானதாகும். இன்றைய இறைவார்த்தை பகுதியும் நாம் பல்வேறு சூழல்களில் வளர்ந்தாலும், பலவிதமான வாய்ப்புகள் நமக்குக் கிடைத்தாலும் நாம் எதனை தேர்வு செய்கின்றோம், அவற்றை எவ்வாறு பெறுகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க நம்மை அழைக்கின்றது.

                 இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசன் தேவையென யாவற்றையும் கேட்காமல் எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருக்கின்ற ஞானத்தை தேர்வு செய்வதை பார்க்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் வணிகர் எதையும் தேடாமல் தேவையான விலை உயர்ந்த முத்துக்களைத் தேடி செல்வதை நாம் பார்க்கின்றோம். நிலத்தில் புதையலை கண்ட ஒருவன் தனக்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்து அதனை பெற்றுக் கொள்கின்றான். வலையில் மாட்டிய மீன்கள் நல்ல மீன்கள், கெட்ட மீன்களாக இருக்கின்ற போது நல்ல மீன்களை  மீனவர் தேர்ந்தெடுப்பதை  பார்க்கின்றோம்நம்முடைய வாழ்க்கையில் நாம் எதனை தேர்வு செய்கின்றோம் என்பதை இன்றைய நாளில் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 இன்று மனிதனுக்கு எண்ணற்ற தேவைகள் இருக்கின்றது, அவற்றில் நாம் எத்தகைய ஒரு தேவையை தேர்வு செய்கின்றோம்நமக்கு உணவு, உடை, உறைவிடம் என்னும் அடிப்படை தேவைகளும், உளவியல் தேவைகளும், உடல் சார்ந்த தேவைகளும் இருக்கின்றது. இவற்றில்  எதனை, எத்தகைய ஒரு சூழ்நிலையில், எப்படி நாம் தேர்வு செய்கின்றோம் என்பதை  சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 இன்று நமது அன்றாட வாழ்க்கையில் தங்களுடைய தேவையை தேர்வு செய்கின்ற வழிகளிலே மனிதர்களை நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள்

  1. தேவையை கேட்டுப் பெறுதல்.

  2. தேவையை தேடிப் பெறுதல்.

 3.  தேவையானது கிடைக்கும் போது முயற்சித்து பெறுதல்.

 4. தேவையைப் பற்றி கவலையின்றி இருத்தல்.

 

1. தேவையை கேட்டுப் பெறுதல்.

                 இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசன் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்த போது அதிலே ஞானத்தை தேர்வு செய்வதை பார்க்கின்றோம். தனக்கு தேவையாய் இருப்பதை இவர் கேட்டுப் பெறுவதை நாம் பார்க்கின்றோம். விவிலியத்தில் நூற்றுவ தலைவன் தனக்கு தேவை என   தன்னுடைய பணியாளருக்காக இறைமகன் இயேசு கிறிஸ்துவிடம் குணமாக்கும்படி கேட்டுப் பெறுவதை நாம் பார்க்கின்றோம். தேவையை கேட்டுப் பெறுகின்ற மனிதர்கள் அச்சம் இல்லாதவர்கள், சிறப்பான தேர்வு செய்பவர்கள், நினைத்ததை சாதிப்பவர்கள் மற்றும் மகிழ்வாக என்றும் இருப்பவர்கள்.

 2. தேவையை தேடிப் பெறுதல் 

 இன்றைய நற்செய்தியில் நல்ல முத்துக்காக  மனிதன் பல இடங்களில் தேடி அலைந்து அதனைப் பெற்றுக் கொண்டதை பார்க்கின்றோம். நற்செய்தி நூல்களிலும் இறைமகன் இயேசு கிறிஸ்துவை பலர் தங்களுடைய வாழ்க்கையிலே தேடியதை பார்க்கின்றோம். இயேசுவைத் தேடிய சக்கேயு மரத்தில் ஏறி அவரைக் காண்பதற்காக காத்திருப்பதை  பார்க்கின்றோம். முடக்குவாதமுற்ற மனிதனை அவர்கள் கட்டிலோடு இயேசுவைத் தேடி   தூக்கிக்கொண்டு சென்றதை பார்க்கின்றோம். எப்பொழுதும் தேடுகின்ற மனிதர்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்பவர்கள், தன்னம்பிக்கையோடு இருப்பவர்கள், தேடி அலைந்து சாதிப்பவர்கள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள்.

 3. தேவை கிடைக்கும்போது முயற்சித்து பெறுதல்

                 நிலத்தை தோண்டுகின்ற பொழுது புதையலை காண்கிறான். உடனே புதையல் இருக்கிறது என்பதை அறிந்தவுடன் அதை பயன்படுத்த வேண்டும் என்று ஓடிச் சென்று தன்னுடைய  சொத்துகள் அனைத்தையும் விற்று அதனை பெற்று கொள்வதைப் பார்க்கின்றோம். பார்வையற்ற பார்த்திமேயு இயேசு வருகின்றார் என அறிந்தவுடன், இயேசுவை பெற்றுக்கொள்வதற்காக, சத்தமிட்டு, முயற்சித்து இயேசுவின் வழியாக  பார்வை பெறுவதைப் பார்க்கின்றோம். தன்னுடைய அரசன் கொடுத்த 5 மற்றும் 3 தாலந்து பெற்ற பணியாளர்கள் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். தேவையானது கிடைக்கும்போது முயற்சி செய்து பெறுகின்ற மனிதர்கள் புத்திசாலிகள், அதிகம் முயற்சி செய்பவர்கள், இலக்கை அடைய எதையும் இழப்பவர்கள், தியாக உணர்வு கொண்டவர்கள் மற்றும் இத்தகையோர் வாய்ப்பை நழுவ விடமாட்டார்கள்.

 4. தேவையைப் பற்றி கவலையின்றி இருக்கின்ற மனிதர்கள்

                உலகத்தின் போக்கில் இருப்பவர்கள் இவர்கள்நல்ல மீன்கள் மற்றும் கெட்ட மீன்கள் என கடலிலே வாழுகின்ற மீன்களைப் போல எதற்கும் கவலையின்றி, இந்த உலகத்தின் போக்கிலேயே வாழுகின்ற மனிதர்கள். இத்தகைய மனிதர்கள் தங்களுடைய தேவையை பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதை எப்படி பெறுவது என்று கவலைப்பட மாட்டார்கள். ஒரு தாலந்து பெற்ற பணியாளனை போல தனக்கு கிடைத்த வாய்ப்பையும் மண்ணிலே புதைக்கின்ற மனிதர்கள். ஊதாரி மைந்தன் போல தனக்கு கிடைத்த சொத்துகள் அனைத்தும் ஊதாரித்தனமாக செலவு செய்தவர்கள். இத்தகைய மனிதர்கள் சோம்பேறிகள், வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்தமாட்டார்கள், பிரச்சனைகளில் மாட்டிக் கொள்பவர்கள் மற்றும் சவால்களை சந்திக்க மாட்டார்கள்.

இந்த நான்கு விதமான மனிதர்களில் நாம் எத்தகைய மனிதர்களாக இருக்கின்றோம். நமக்குத் தேவை என்று ஒன்று இருக்கின்ற போது எத்தகைய தேவையை நாம் தேர்வு செய்கின்றோம். நம்முடைய தேவைகளை தேர்வு செய்வதில் எத்தகைய ஒரு  வழியை நாம் கையாளுகின்றோம். நமக்கு வாய்ப்புகள் வருகின்ற போது, சூழ்நிலைகள் ஏற்படுகின்ற போது, அதனை சரியான முறையில் பயன்படுத்தி நம்முடைய தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்கின்றோமா? சாலமோன் போல அடிப்படையாக இருக்கின்ற தேவையை நாம் கேட்டு பெற்றுக் கொள்ளுகின்றோமா?வணிகனைப் போல என்னுடைய தேவை இதுதான் என்று அதனைத் தேடி நம்முடைய வாழ்க்கையிலே நாம் தேடலோடு இருக்கின்றோமா? நமது வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்த ஒரு தேடலை நாம் நம் முன்னே நமக்கு வாய்ப்பாக  கிடைக்கின்ற போது எதையும் தியாகம் செய்து அதை நாம் பெற்றுக் கொள்கின்றோமா அல்லது தேவையைப் பற்றி கவலை இல்லாத மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம். இன்றைய நாளிலே தேவைகளை தேர்வு செய்கின்ற முதல் மூன்று வகைச் சார்ந்த மனிதர்களாக நாம் இருப்போம். அப்போது நாம் நம்முடைய தேவைகளை தேர்வு செய்கின்ற, வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து வாழுகின்ற  கிறிஸ்தவர்களாக நாம் வாழ முடியும். அத்தகைய இறையருளை வேண்டி மன்றாடுவோம். இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.


















Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.