Sunday, June 21, 2020

Daily Tamil Homily - தினசரி தமிழ் மறையுரைகள் - மே மாதம் - 1 ஆம் தேதி - தொழிலாளரான புனித யோசேப்பு திருவிழா - நற்செய்தி: மத்தேயு 13:54-58

மே மாதம் -  1 ஆம் தேதி.

தொழிலாளரான புனித யோசேப்பு திருவிழா

நற்செய்தி: மத்தேயு 13:54-58

 

 

இறைவனின் இடையூறுகளை உணர்வோம் 

(இரண்டு தயக்கங்கள்)

 

 

நமது வாழ்க்கையில்  நாம் எண்ணற்ற இடையூறுகளை  சந்தித்து வருகிறோம். பல இடையூறுகள் நம்மைச் சார்ந்த மனிதர்களால் நமக்கு வருகின்றன. சில இடையூறுகள் நமக்கு நன்மை பயக்கின்றன. சில தீமையையும், அழிவையும் நமக்கு காட்டுகின்றன.  எத்தகைய இடையூறுகள் நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து நாம் செயல்படுகின்ற  போது நமக்கு என்றும் நன்மையே கிடைக்கும்.  நம் வாழ்வு வளர்ச்சியின் பாதையில் செல்லும்.   இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே, இயேசுவின் வழியில் பயணிக்கும் நாம்,  நம் வாழ்வில் இறைவனின் இடையூறுகளை உணர்ந்து வாழ புனித யோசேப்பின் திருவிழாவும்,  இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு அழைப்பு தருகிறது. இவற்றிலிருந்து இரண்டு விதமான தயக்கங்களை நாம் பார்க்கின்றோம்.

 

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள காட்டும் முதல் தயக்கம். (மத்தேயு 13 : 57)

 

புனித யோசேப்பின் வாழ்வில் இயேசுவை அதாவது இயேசுவை வயிற்றில் சுமந்த அன்னை மரியாவை ஏற்றுக்கொள்ள யோசிப்பு காட்டும் இரண்டாவது தயக்கம்.

 

இரண்டிலும் ஒரே ஒரு வித்தியாசம் தான்  யோசேப்பு இறைவனின் இடையூறுகளை உணர்ந்தார்.  இயேசுவை தாங்கிய அன்னையை ஏற்றுக் கொண்டார். தொடக்கநூல் 37: 21- 22 -ல் யோசேப்பு கொல்லப்பட வேண்டியவர்,  ஆனால் விற்கப்படுகிறார்.  அவருடைய சகோதரன் ரூபன் வழியாக இறைவனுடைய இடையூறு அங்கு இருந்தது. யோனா 10: 3 -ல்  யோனா நினிவே நகர் செல்லாமல் தார்சுஸ் நகர் செல்ல முயன்ற போது,  இறைவனின் இடையூறு அங்கு இருந்தது, அவர் நினிவே சென்றார்.   மத்தேயு 2:12-ல் ஏரோதிடம் செல்ல வேண்டிய ஞானிகள், வேறு வழியாக தங்களுடைய ஊர் செல்லுகின்றனர் ஏனென்றால் இறைவனின்   இடையூறு அங்கு  இருந்தது. மத்தேயு 2: 13-ல் குழந்தையையும் தாயையும் எகிப்துக்கு எடுத்து செல்ல அழைக்கப்பட்டது, மத்தேயு 2:19-ல் மீண்டும் இஸ்ராயேல் நாட்டுக்கு குழந்தையையும் அதன் தாயையும் அழைத்து வந்தது,  இறைவனின் இடையூறு அங்கு இருந்ததால் தான்.  லூக்கா 24 : 30 -ல் எம்மாவுஸ்  நோக்கி சென்ற சீடர்கள் மீண்டுமாக வந்தது இறைவனின் இடையூறு அங்கு இருந்ததால் தான்.  

 

நம் வாழ்வில் இறைவனின் இடையூறுகளை உணர்வோம்.  நம் வாழ்க்கையில் இறைவனின் இடையூறு குருக்கள் வழியாகவும்,  துறவியர்கள் வழியாகவும், பெரியவர்கள் வழியாகவும், ஆசிரியர்கள் வழியாகவும் மற்றும் உறவினர்கள் வழியாகவும் வரக்கூடும், அது இறைவனின் இடையூறு என்பதை உணர்ந்து வாழ்வோம்.  இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.