Saturday, June 26, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 13-ஆம் வாரம் - ( ஆண்டு- B)- 27-06-2021- ஞாயிற்றுக்கிழமை

🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 13-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி:- மாற்கு. 5:21- 43

தன்னிலையிலிருந்து
இயேசுவின் நிலைக்கு செல்ல....



உலகம் ஆரம்பித்த தொடக்கம் அது, கடவுள் எந்த மிருகங்களுக்கும் மற்றும் பறவைகளுக்கும் நிறம் கொடுக்கவே இல்லை. கடவுள் அனைத்து மிருகங்களுக்கும் மற்றும் பறவைகளுக்கும் நிறம் கொடுப்பதாக முடிவு செய்கின்றார். எனவே கடவுள் அவைகளிடம், நான் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு நாள் ஒதுக்குகிறேன், நீங்கள் வந்து என்னிடம் நிறத்தை பெற்றுச் செல்லுங்கள் என்று கூறுகின்றார். இவ்வாறாக மீன்கள் ஒரு நாளும், மிருகங்கள் மற்றொரு நாளும் நிறத்தைப் பெற்று செல்கின்றனர். அது பறவைகளுக்கான நாள், அவைகள் தங்களுடைய இனத்தோடு ஒன்றன்பின் ஒன்றாக கடவுளிடம் நிறத்தைப் பெற்று சென்றன. ஒரு குறிப்பிட்ட இனப்பறவைகள் மட்டும் நெடுந்தொலைவிலிருந்து வர வேண்டியதாக இருந்தது. அவைகள் வரும் வழியில் மழை, புயல் மற்றும் வெயில் அடித்தது. பல பறவைகள் நமக்கு இந்த நிறமே தேவையில்லை, நாம் மீண்டும் சென்று விடுவோம் என்று கூறுகின்றன. இவ்வாறாக பல சோதனைகளுக்கும் மற்றும் துன்பங்களுக்கும் மத்தியில் இந்த பறவை இனம் கடவுளிடம் வந்தபோது, அவரிடமிருந்த பெயிண்டுகள் எல்லாம் காலியாகின. இப்போது அந்த பறவைகளோ, "எங்களுக்கு வெள்ளை நிறம் தேவையில்லை, புது நிறத்தை அதாவது எங்களுக்கு புது அடையாளத்தை கொடுங்கள். இதற்காகத்தான் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இங்கு வந்திருக்கின்றோம்". என்று கூறுகின்றன. கடவுளின் பெயிண்ட் டப்பா காலி ஆகிவிட்ட நிலையில், எல்லா நிறத்திலும் சிறிது மட்டுமே இருந்த நிலையில், கடவுள் எல்லா நிறத்திலும் சிறிது எடுத்து இந்தப் பறவைகள் மீது தெளிக்க ஆரம்பிக்கின்றார். அவர் சிவப்பு கொஞ்சம், மஞ்சள் மற்றும் பச்சை கொஞ்சம் என்று பல நிறங்கள் இந்த பறவைகள் மீது தெளிக்க, அவைகள் அழகிய பஞ்சவர்ண கிளியாக தோற்றமளித்தது.

இந்தக் கிளிகள் தங்களின் வெண்மை நிறமே போதும், வேறு எந்நிறமும் தேவையில்லை. நாம் ஏன் இந்த மழையிலும், புயலிலும் மற்றும் வெப்பத்திலும் கஷ்டப்பட வேண்டும், அதுவும் கடவுளிடம் பெயிண்ட் டப்பாவில் நிறம் இல்லாத போது, அவைகள் தங்களது நிலையிலிருந்து மாறுவதற்கு தொடர்ந்து முயன்றார்கள், இறைவனிடம் வந்தார்கள் மற்றும் அழகிய பஞ்சவர்ண நிறத்தை பெற்றார்கள். நாமும் நம்முடைய வாழ்க்கையில் நமது நிலையிலிருந்து மாற, இயேசுவின் நிலைக்கு வருவோம், புதுவாழ்வு பெறுவோம்.
இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இத்தகைய ஒரு அழைப்பை தான் தருகின்றது.
நாம் நமது வாழ்வில் மாற்றத்தை பெற, புது வாழ்வு அடைய, நமது நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு கடந்து செல்வோம். நற்செய்தி வாசகத்தின் இரண்டு நிகழ்வுகளில் இருவர் தங்கள் நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு கடந்து செல்வதை பார்க்கிறோம்.


1. உயர்ந்த நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு......(யாயீர்)

இன்றைய நற்செய்திப் பகுதியில் தொழுகை கூட தலைவர் யாயீர் என்பவர் சாகும் தருவாயில் இருக்கின்ற தன்னுடைய 12 வயது மகளுக்காக இயேசுவை நோக்கி வருவதை பார்க்கின்றோம். யூத சமுதாயத்தில் தொழுகை கூட தலைவர் என்பவர் அனைவராலும் மதிக்கதக்க தன்னுடைய நிலையிலிருந்து இயேசுவை நோக்கி அவர் நிலைக்கு செல்வதை பார்க்கின்றோம். தொழுகை கூட தலைவர் தனது உயர்ந்த மற்றும் மதிக்கத்தக்க நிலையிலிருந்து, மேலும் ஆணவத்திலிருந்து மற்றும் அதிகாரத்திலிருந்து இறங்கி இயேசுவின் நிலைக்கு சென்றார் என்பதை மூன்று எடுத்துக்காட்டுகளில் புரிந்து கொள்ளலாம்.
1). இயேசுவிடம் வந்தார்

யாயீர் தன்னுடைய மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள் என்ற நிலை அறிந்தவுடன் அவர் வேறு யாரிடமும் செல்லவில்லை. அவர் நினைத்திருந்தால் மருத்துவரிடமோ, தனது நண்பர்களிடமோ மற்றும் உற்றார் உறவினர்களிடமோ சென்றிருக்கலாம், ஆனால் அவர் இயேசுவை நோக்கி சென்றதை பார்க்கின்றோம். இது அவர் தன்னிலையிருந்து இயேசுவின் நிலைக்கு கடந்து சென்றதன் அடையாளம்.
2). எவரையும் அனுப்பவில்லை

தொழுகை கூட தலைவர் யாயீர் தன் மகளுக்காக பரிந்து பேச, தனது பணியாட்களை இயேசுவிடம் அனுப்பியிருக்கலாம். ஆனால், அவரே இயேசுவிடம் செல்வதை பார்க்கின்றோம். இதுவும் யாயீர் தன் நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு கடந்து சென்றதன் அடையாளம்.
3). காலில் வீழ்ந்தார்

சமுதாயத்தில் உயர்ந்த நிலையில், அதுவும் அனைவராலும் மதிக்கதக்க நிலையிலிருந்த தொழுகைக் கூடத் தலைவர், தன் நிலையிலிருந்து இறங்கி இயேசுவிடம் வந்தது மட்டுமல்லாது, அவரது காலில் விழுந்து மன்றாடுவதை பார்க்கின்றோம். அதற்கும் மேலாக காலில் விழுந்து தன்னுடைய மகளுக்காக பரிந்து பேசுவதும் அவர் தன்னிலையிலிருந்து கடந்து சென்றதன் அடையாளம் தான்.

2. தாழ்ந்த நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு......(பெண்)

சமுதாயத்தில் உயர்ந்து, அனைவராலும் மதிக்கதக்க நிலையிலிருந்த ஒருவர் இயேசுவின் நிலைக்கு வந்தது மட்டுமல்லாது, மேலும் நற்செய்தி வாசகத்தில் சமுதாயத்தில் தாழ்ந்த, மாசுபட்ட மற்றும் அனைவராலும் வெறுக்கத்தக்க ஒரு நிலையிலிருந்த மற்றும் துன்பப்பட்ட ஒரு பெண்ணானவளும் இயேசுவின் நிலைக்கு வருவதை பார்க்கின்றோம். இப்பெண் 12 ஆண்டுகளாக துன்பப்பட்ட ஒரு நிலையில், சமுதாயத்தில் மாசுபட்ட ஒரு நிலையில் மற்றும் அனைவராலும் வெறுக்கத்தக்க ஒரு நிலையில் இருந்தாலும், அனைவர் முன்பாகவும் தைரியமாக நம்பிக்கையோடு இயேசுவின் நிலைக்கு பயணித்து வருவதை பார்க்கின்றோம். இப்பெண்ணின் மூன்று நிலைகள் இவர் தன்னிலிருந்து இயேசுவின் நிலைக்கு பயணிப்பதை சுட்டிக்காட்டுகிறது.

1). துன்பப்பட்ட நிலை

12 ஆண்டுகளாக இரத்த போக்குடைய பெண்ணின் நிலை, அவளின் நீண்ட கால துன்பத்தை சுட்டிக்காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது, இவள் அனைத்து விதமான மருத்துவர்களையும் சந்தித்ததாகவும், அதற்காக எண்ணற்ற பணத்தை செலவு செய்ததாகவும் நற்செய்தி குறிப்பிடுகின்றது. இதுவும் இவரது நீண்ட கால துன்ப நிலையை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.
2). மாசுபட்ட நிலை

யூத சமுதாயத்தில் இரத்தப் போக்கால் அவதியுற்றவர், தொழுநோயுடையவர் போல ஒரு மாசுபட்ட நிலையிலிருப்பவராக கருதப்படுகின்றார் (லேவியர்.15: 25 - 30). தனது வாழ்க்கையில் மாசுபட்ட நிலையிலிருக்கும் ஒருவர் யாவற்றையும் மறந்து அனைவர் முன்பாக தன் நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு கடந்து செல்கின்றார்.
3). வெறுக்கத்தக்க நிலை

துன்பப்பட்ட மற்றும் மாசுபட்ட நிலையிலிருக்கும் ஒருவரை யூத சமுதாயம் ஏற்றுக் கொள்ளவே இல்லை. 12 ஆண்டுகளாக சமுதாயத்திலே வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்த ஒரு பெண், சமுதாயத்தில் அனைவரும் சூழ்ந்து இருக்கும் நேரத்தில், ஒரு மனிதரின் ஆடையை தொட்டாலே போதும் என்று கூறி, அவரது ஆடையை தொடுகின்றார். அதுமட்டுமல்லாது, "சமுதாயத்தில் இத்தகைய ஒரு நிலையில் இருந்தேன்" என்பதை அனைவர் முன்பாக, இயேசுவின் காலில் விழுந்து கூறுவதைப் பார்க்கின்றோம். இப்பெண் தன் நிலையை ஏற்றுக்கொண்டு, தன் நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு கடந்து வந்து புதுவாழ்வு பெறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இவ்விரு நிகழ்வுகளிலும், இரண்டு மனிதர்களின் வெவ்வேறு நிலையை பார்க்கின்றோம். ஒருவர் உயர் நிலையிலிருந்து அதாவது மதிக்கத்தக்க நிலையிலிருந்து மற்றும் அதிகார நிலையிலிருந்து தாழ்ந்து இயேசுவின் நிலைக்கு மாறி தன் மகளுக்கு புதுவாழ்வு வழங்குகின்றார். மற்றொரு பெண் தாழ்ந்த நிலையிலிருந்து அதாவது தனது துன்ப நிலையிலிருந்து மாசுபட்ட மற்றும் வெறுக்கத்தக்க நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு கடந்து புதுவாழ்வு பெறுவதை பெறுகின்றார்.

இன்று, நமது வாழ்க்கையிலும் இரண்டு விதமான நிலைகளிலும் மனிதர்கள் வாழ்வதை பார்க்கின்றோம். தன்னுடைய வாழ்க்கையில் நான் தான் எல்லாம் என்று சுயநலத்தால் சுழன்று கொண்டிருக்கின்ற மனிதர்களை பார்க்கின்றோம். பணம், பதவி, பட்டம் மற்றும் அதிகாரம் என தனது உயர் நிலையிலிருந்து ஒரு போதும் தாழ்ச்சியான நிலைக்கு மாறாத சில மனிதர்களை பார்க்கின்றோம். நான் ஏழை, நோய்ப்பட்டவன் மற்றும் அனைவராலும் வெறுக்கப்பட்டவன் என்று தாழ்ந்த நிலையிலிருந்து ஒரு போதும் உயர் நிலைக்கு செல்வதற்கு ஒரு முயற்சியும் எடுக்காமல் தன்னையே தள்ளி பின்தள்ளி வாழ்கின்ற சில மனிதர்களையும் பார்க்கின்றோம். இவ்விரு நிலைகளில் இருந்தும் மாறி இயேசுவின் நிலைக்கு கடந்து புதுவாழ்வு பெறுவதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகின்றது. இத்தகைய மேலான வாழ்வை பெற்றவர்களாக வாழ நம் நிலையிலிருந்து இயேசுவின் நிலைக்கு கடந்து செல்வோம், புது வாழ்வு பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


-அருட்பணி. அ.குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்








Friday, June 18, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 12-ஆம் வாரம் - ( ஆண்டு- B)- 20-06-2021- ஞாயிற்றுக்கிழமை

                  🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 12-ஆம் வாரம்
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

புயலான நம் வாழ்வு




மாம்பழத்தின் மீது மிகுந்த ஆசை கொண்ட தன் மகனை அப்பா ஒரு மாந்தோப்புக்கு அழைத்துச் செல்கிறார். 'இந்த தோப்பில் நிறைய மாமரங்கள் உள்ளன, அதிலே நிறைய மாம்பழங்கள் இருக்கின்றது உனக்கு தேவையானவற்றை நீ பறித்து சாப்பிடு' என்று மகனை மாந்தோப்பில் விட்டு விட்டு ஒரு மரத்தின் அருகே ஓய்வெடுக்கிறார். நான்கு வயது சிறுவன் தோப்பு முழுவதும் இருந்த மாமரங்களையும் மற்றும் அதிலுள்ள மாம்பழங்களையும் பார்த்துவிட்டு, அதனைப் பறிக்க பலமுறை முயற்சி செய்து விட்டு, அது தனக்கு எட்டாத ஒரு நிலையில் இருப்பதை அறிந்து, இறுதியாக அழுதுகொண்டே தன் தந்தையிடம் வருகின்றான். தந்தை தன் மகனை பார்த்து 'நீ தொடக்கத்திலேயே இதை கேட்டிருக்கலாமே, அதன் மேல் கொண்ட ஆசையின் நிமித்தமாக நீ என்னை விட்டு விட்டு ஓடிச் சென்றாய்' என்று கூறி அவர் தோள் மீது தன் மகனை ஏற்றி மாம்பழங்களை பறிக்க உதவுகின்றார். இன்று மனிதனுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கின்றது, கடவுள் நமக்கு மாந்தோப்பை போல அழகிய வாழ்வை கொடுத்திருக்கின்றார். அவ்வாழ்வை கண்டவுடன், கடவுளை மறந்து, அவ்வாழ்வை சுவைக்க ஓடி கொண்டிருக்கின்றோம். பின்பு வாழ்வில் எண்ணற்ற துன்பங்கள் புயலாக வருகின்றபோது, அந்த மகனைப் போல முடியாத நிலையில் கடவுளை நோக்கி வருகின்றோம். இங்கு தந்தையும் 'எப்படியும் மகன் வருவார்' என நமக்காக காத்திருப்பதையும் பார்க்கின்றோம். தந்தையிடம் நாம் நம்பிக்கையோடு பரிந்துரைக்கின்ற ஜெபம் நமது வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்கும் என்பது தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு கொடுக்கின்ற அழைப்பாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு காற்றையும் கடலையும் கடிந்து கொள்ளும் நிகழ்விலிருந்து இறைவன் நமக்கு இத்தகைய ஒரு வாழ்வின் செய்தியை எடுத்துரைக்கின்றார். நம் வாழ்வின் சோதனை, துன்பம், குடும்ப பிரச்சினைகள், நோய், வேலையின்மை, வறுமை மற்றும் வாழ்க்கையில் ஒரு பிரச்சினையாக நாம் காணும் வேறு எந்த செயலையும் ஒரு புயல் என குறிக்கலாம். 'இயேசு புயலை அமைதிப்படுத்துகிறார்' என்பது வாழ்க்கையின் புயல்களுக்கு கடவுள் ஒரு விடுதலையை தருகிறார் என்பதை குறித்து காட்டுகிறது.

புயலின் போது, ​​சில சீடர்கள், மீனவர்களாக இருந்ததால், தங்கள் படகையும் உயிரையும் காப்பாற்றும் முயற்சியில் தங்கள் ஆண்டு அனுபவத்தையும் பலத்தையும் பயன்படுத்தினர், ஆனால் புயல் அவர்கள் மீது நிலவியது, அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர் அவர்கள் இயேசு இருப்பதை உணர்ந்தார்கள், நம்பிக்கை கொள்கின்றார்கள், அவரிடம் ஜெபிக்கின்றார்கள், அதன்பின் அவர் “அமைதியாய் இருக்க கடிந்து கொள்கின்றார்”. உடனே, சக்திவாய்ந்த புயல் அமைதியானது. நாம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு ஜெபிக்கின்ற பொழுது வாழ்வில் புயல்களிலிருந்து விடுதலை பெறுவோம் என்னும் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் அழைப்பினை இன்றைய நற்செய்தி வாசகம் நான்கு நிலைகளில் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

1. இயேசுவோடு இருப்பதை உணர்வோம்.

"இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”.(மத்தேயு 28:20) எனும் இயேசுவின் வார்த்தைகள் முன்னதாகவே இன்றைய நற்செய்தியில் வாழ்ந்து காட்டப்படுகின்றது. இதை சீடர்கள் உணர வேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். அதனால் தான் அவர் ஒரு படகின் ஓரத்தில் உறங்குவது போல இருக்கின்றார். இங்கு இயேசுவின் பிரசன்னத்தை சீடர்கள் உணர்வதற்கான ஒரு அழைப்பு தரப்படுகின்றது. நமது வாழ்க்கையிலும் இயேசு ஒவ்வொரு நாளும் நற்கருணையின் வடிவிலும், இறைவார்த்தையின் வடிவிலும் மற்றும் நமது சகோதர சகோதரிகளிடத்திலும் பிரசன்னமாகி இருக்கின்றார் என்பதை நாம் உணர வேண்டும். அந்த இயேசுவினுடைய பிரசன்னத்தை உணர்கின்ற போது அவரில் நம்பிக்கை வளரும். அந்த நம்பிக்கை தான், நம்மை ஜெபத்தில் அவரை அழைக்க, வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற உதவும், எனவே இயேசுவின் பிரசன்னத்தை உணர்வோம்.

2. இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோம்.

நம்மிடம் உள்ள அனைத்து வளங்களும் நம் வாழ்வில் சில புயல்களை சமாளிக்க முடியாது. நாம் சந்திக்கும் சில சிக்கல்களை நம் அனுபவம், ஞானம், பணம்,பட்டம் மற்றும் பதவி போன்றவற்றால் தீர்க்க முடியாது. நாம் ஒரு வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு வரும்போது, ​​சிகிச்சை, வேலை, அல்லது சிறந்த வாழ்க்கை தோல்வியடைகிறது, ஆனால் நமது இறைநம்பிக்கை நமக்கு உதவுகிறது. "ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது". (சீராக் 2:8) எனும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் தங்களோடு இயேசு இருப்பதை உணர்ந்து, அவர் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள். இவரை அழைத்தால் நாம் நிச்சயம் புயலிலிருந்து விடுபடுவோம் என்பதை அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் நமது வாழ்வின் புயல்கள் விடுபட இறைவன் நம்மோடு இருப்பதை உணர்ந்து அவர் மீது இறைநம்பிக்கை கொள்ள வேண்டும்.

3. இயேசுவிடம் ஜெபிப்போம்.

எல்லாவற்றையும் அறிந்த கடவுள் தம்மிடம் கேட்பதற்கு முன்பே நமது தேவைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்று இயேசு கற்பித்தார் ( மத் 6:32 ), ஆனாலும் கடவுள் அவரிடம் ஜெபிக்க வேண்டும் என்று சொல்கிறார், நாம் ஜெபம் செய்யும் வரை நாம் கடவுளிடமிருந்து எதையும் பெற மாட்டோம் ( யாக்கோபு 4: 2 ). நமது கைகளில் மற்றும் வாழ்க்கையில் பயங்கர புயல் இருப்பதை இயேசு நன்கு அறிந்திருக்கிறார், ஆனாலும் நாம் உதவிக்காக அவரை அழைக்கும் வரை அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார், பின்னர் அவர் பதிலளிப்பார். புயலின் போது இயேசு தூங்கிய நிகழ்வு நம் வாழ்வில் புயல்களைப் பற்றிய கடவுளின் அணுகுமுறையின் ஒரு படம். நம்முடைய சூழ்நிலைகளை அவர் அறிந்திருக்கிறார், பார்க்கிறார் என்றாலும், நாம் அவரை ஜெபத்தில் அழைக்கும் வரை, அவர் மட்டுமே பார்க்கிறார். அவர் செயல்படும்படி அவரை அழைக்கும்படி கடவுள் எப்போதும் கோரியுள்ளார்; எனவே "என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்." (எரேமியா 33:3) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நம் வாழ்வில் புயல்களாக பிரச்சினைகள் மற்றும் துன்பங்கள் வருகின்ற போதெல்லாம், இயேசு இருப்பதை உணர்ந்து நம்பிக்கையோடு அவரிடம் ஜெபம் செய்வோம். வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவோம்.

4. வாழ்வின் புயல்களிலிருந்து விடுதலை பெறுவோம்.

இயேசுவின் பிரசன்னத்தை உணர்தல், அவர்மேல் நம்பிக்கை கொள்ளுதல் மற்றும் அவரிடம் ஜெபத்தில் இணைதல் என்னும் மூன்று நிலைகளை நாம் கடக்கின்ற போது சீடர்கள் புயலில் இருந்து மீண்டு புதுவாழ்வு பெற்றதைப் போல, நமது வாழ்வின் புயலாக இருக்கின்ற சோதனைகளும் மற்றும் கஷ்டங்களும் நம்மை விட்டு விலகும் மற்றும் நாமும் புது வாழ்வு பெறுவோம்.

"துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்." (திருப்பாடல்கள் 50:15) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் வாழ்வின் எல்லா கஷ்டமான சூழ்நிலைகளிலும், நம்பிக்கையோடு இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்து, அவரிடம் நாம் ஜெபிப்போம், புதுவாழ்வு பெறுவோம்.

-அருட்பணி. அ.குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்






Friday, June 11, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 11-ஆம் வாரம் - ( ஆண்டு- B)- 13-06-2021- ஞாயிற்றுக்கிழமை

             🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 11-ஆம் வாரம்
தமிழ் திருவழிபாட்டு மறையுரை


"கடுகு செயல்கள் தரும் பெரும் வாழ்வு"



"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்ற பழமொழியை நாம் எல்லோரும் கேட்டு இருப்போம். கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால் தான், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும். கடுகு ஒரு சிறந்த எண்ணெய் வித்து. கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் வலி நீங்கும். குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும். கடுகு சிறிய உருவம் கொண்டதாக இருந்தாலும் அதில் பல்வேறு நன்மைகள் உள்ளதால் தான் இத்தகைய பழமொழியை பயன்படுத்துகின்றனர். இத்தகைய பழமொழி கூறும் செய்தியை தான், இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு எடுத்துரைக்கின்ற தருகின்ற அழைப்பாக இருக்கின்றது. குறிப்பாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்து கடுகு உவமையைக் கூறி இறையாட்சியைப் பற்றி எடுத்துரைக்கின்றார்.


இயேசுவின் காலத்திலேயே கடுகானது இன்றைய காலத்தில் நாம் பார்க்கின்ற சிறிய செடி அல்ல, மாறாக பெரும் மரமாக வளர்ந்து வானத்துப் பறவைகள் அனைத்தும் தங்குவதற்கான இடமாகும். இத்தகைய பின்னணியிலே இயேசு நற்செய்தியில் கடுகு உவமையை குறிப்பிடுகின்றார். யூதர்களுக்கு இன்றைய நற்செய்தியின் கடுகு உவமை இரண்டு விதமான அர்த்தங்களை காட்டுகின்றது.

ஒன்று, கடுகு சிறிய விதையாக இருந்தாலும் அது மிகப் பெரிய மரமாக வளர்வதை போல நம்முடைய விசுவாசம் சிறிதாக இருந்தாலும் அது நமக்கு மிகப் பெரிய பலனை தரும். இரண்டாவதாக கடுகு உவமையானது ஒரு பேரரசோடு ஒப்பிடப்படுகிறது. எவ்வாறு, கடுகு மரத்தில் எல்லா விதமான பறவைகளும் தங்கி தங்களுடைய வாழ்வை அமைத்து கொள்கின்றதோ, அதே போல ஒரு பேரரசர் என்பவர் ஒரு மரத்தைப் போல் இருந்து தன்னுடைய அரசாட்சியில் பறவைகளாக இருக்கின்ற மக்களை பாதுகாத்து வருகின்றார்.

ஆக இன்றைய நற்செய்தி வாசகம் சிறு தொடக்கம் பெருவாழ்வு தரும் என்ற ஒரு மைய சிந்தனையை நம்முன் வைக்கின்றது. பழைய ஏற்பாட்டிலே தாவீது பயன்படுத்திய சிறு கல் மிகப்பெரிய அரக்கனாக விளங்கிய கோலியாத்தை விழுத்தியது. சிறிய பையன் மற்றும் சிறிய கல் பெரிய பலனை தந்ததை பார்க்கின்றோம். நற்செய்தியில் மூன்று மற்றும் ஐந்து என்னும் குறைவான எண்ணிக்கை தாலந்துகள் தான், கூடுதல் எண்ணிக்கையில் தாலந்தை பெறுவதற்கு காரணமாக அமைகின்றன. வெறும் ஐந்து அப்பங்களும் மற்றும் இரண்டு மீன்களும் தான் ஐயாயிரம் பேருக்கு மேலாக உணவளிக்க காரணமாக இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக இயேசு எனும் ஒரு மனிதர் தான் இன்று கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களை உருவாக்கியிருக்கின்றது. ஆகவே 'சிறுதுளி பெருவெள்ளம்' என்கின்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வில் நாம் செய்கின்ற சிறிய சிறிய கடுகை போன்ற செயல்கள் தான் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.


ஒற்றை மெழுகு திரி ஒரு அறைக்கு ஒளியை தருவதைப் போல, வாழ்வில் நமக்கு கிடைக்கின்ற சிறு சிறு வாய்ப்புகள் பெரிய பலனை நமக்கு தரும். ஆக இன்றைய நற்செய்தி வார்த்தையின் அடித்தளத்தில், நாம் நமது வாழ்க்கையில் கிடைக்கின்ற சிறு சிறு வாய்ப்புகளை உதாசினப்படுத்தாமல் அவற்றைப் பயன்படுத்தி, நமது வாழ்க்கையில் பெரும் பலனை பெறவும் அழைப்பு தருகின்றது. நம் வாழ்வில் எத்தகைய ஒரு பெரும் நிலையை அடைவதற்கும் சிறு நிலை அடித்தளமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். எனவே, வாழ்வில் நமக்கு கிடைக்கின்ற சிறு சிறு வாய்ப்புகளை முறையாக பயன்படுத்துவோம். சிறு சிறு செயல்களை செய்ய பழகுவோம். அது கடுகு போல இருந்தாலும், வாழ்வில் நமக்கு மிகப் பெரிய மரமாக நமக்கும், எல்லோருக்கும் பயன் தரக்கூடியதாக அமையும். நாம் நம்மிலே ஏற்படுத்துகின்ற சிறு சிறு நற்செயல்கள் தான், பெரிய குணங்களாக நம்மிடையே வெளிப்படும். எனவே நமது வாழ்க்கையில் நமக்கு கிடைக்கின்ற சிறு வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தி பெரும் வாழ்வை அமைத்துக் கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அருட்பணி. அ.குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்





Friday, June 4, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழா- ( ஆண்டு- B)- 06-06-2021- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்🌱

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை



கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்
ஒரு அன்பின் உடன்படிக்கை

தாயாம் திருஅவையானது இன்று கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. கிறிஸ்துவின் திருவுடலும், திருஇரத்தமும் இயேசு தன் சீடர்களுக்கு அளித்த அன்பின் உடன்படிக்கையாகும். இந்த அன்பின் உடன்படிக்கையை பின்பற்றி அவர் அன்பில் இணைந்திருக்க இவ்விழா நமக்கு அழைப்பு தருகிறது.

உடன்படிக்கையின் அடையாளம்:-
          எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து தம் மக்களான இஸ்ராயேலை விடுவித்த போது இறைவன் சீனாய் மலையில் ஏற்படுத்தியது பழைய உடன்படிக்கை. பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க நிலை வாழ்வை தரும் வாக்குறுதியை குறிப்பிட இயேசுவின் இந்த புதிய உடன்படிக்கை. திருப்பலியில் அர்ப்பணிக்கப்படும் கோதுமை அப்பமும், திராட்சை இரசமும் கிறிஸ்துவின் உண்மையான உடலும் இரத்தமுமாக நம் வாழ்வில் இறைவனோடு புதிய உடன்படிக்கையாகுகிறது. "கோதுமை அப்பம் எடுக்கப்படுகிறது, ஆசீர்வதிக்கப்படுகிறது மற்றும் உடைக்கப்படுகிறது". இந்த மூன்று செயல்களிலும் கிறிஸ்து திருஅவையின் வாழ்வில் நிரப்பப்படுகின்றார் மற்றும் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றார்.

        உடன்படிக்கை என்பது இரு தரப்பினருக்கும் இடையிலான ஒரு உறுதியான ஒப்பந்தமாகும், இது ஒருவரின் கடமைகள் மற்றும் நன்மைகளை விவரிக்கிறது. கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான உடன்படிக்கைகளை விவிலியம் நமக்கு எடுத்தியம்புகிறது. முதலாவது நோவாவுடன் இருந்தது, அவரையும், அவரது குடும்பத்தினரையும் பேழையில் நுழைத்து வெள்ளத்தின் நீரிலிருந்து காப்பாற்றும்படி அழைத்தார். "உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்."(தொடக்க நூல் 6:18) அடுத்த உடன்படிக்கை தொடக்க நூல். 12: 1–9-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி ஆபிரகாமுடன்; 15: 1–21; 17: 1–27. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.(தொடக்க நூல் 15:5). விருத்தசேதனம் என்பது இவ்வுடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது. ஈசாக்கு மற்றும் யாக்கோபுடனான உடன்படிக்கையை கடவுள் புதுப்பித்தார். (தொடக்க நூல் 26: 1–5; 28; 10–22).
            கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையில் சீனாய் மலை மீது ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை குறிப்பாக முக்கியமானது. (விடுதலைபயணம்.19) மலையில் இறைவன் மோசேயின் வழியாய் தன் மக்களுக்கு பத்து கட்டளைகளை தந்து உடன்படிக்கை செய்து கொண்டார். மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார் (விடுதலைப் பயணம் 24:8). இந்த இரத்தம் தெளிப்பது கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான உடன்படிக்கையை குறிக்கிறது; அவர்கள் 'இரத்த சகோதர சகோதரிகள்' ஆனார்கள். கடவுள் தம் மக்களை எகிப்திலிருந்து மீட்பதன் மூலம் தனது அன்பைக் காட்டினார். ஒரு 'புதிய உடன்படிக்கை' இருக்கும் என்று கடவுள் வாக்குறுதி அளித்தார்.

         இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர் (எரேமியா 31:31,32,33). இயேசு தம்முடைய இரத்தத்தை சிலுவையில் சிந்தியபோது இந்த புதிய உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. அவர் கடைசி இராவுணவில் இதை முன்னறிவித்தார், அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை (லூக்கா 22:20). இந்த புதிய உடன்படிக்கையில் இயேசுவின் இரத்தம் சிந்தப்படுகிறது, இயேசு தம் மக்களுக்கு மீட்பு தருகின்றார்.

அன்பின் அடையாளம் :-

நற்கருணை ஆன்மீகம் என்பது அன்பின் ஆன்மீகம். இது இறை அன்பின் நிமித்தமாக நமக்கு வழங்கப்பட்டது. நற்கருணையில், கடவுள் நம்மீது தனது அன்பைக் காட்டுகிறார். கடவுள் நம்மை மிகவும் நேசிக்கிறார். அவர் தன் உடலாலும் மற்றும் இரத்தத்தாலும் தம்மை நம்மோடு இணைத்து, நாம் அவருடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நம் வாழ்வாகவே இருக்க விரும்புகிறார். இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறுவது கிறிஸ்துவுடன் நம்மை இணைக்கக்கூடிய சிறந்த வழிகளில் ஒன்றாகும். நற்கருணை இயேசுவைப் பெறுவதில், நாம் அணைத்தையும் பெறுகிறோம்; அவருடைய உடல், இரத்தம், ஆன்மா மற்றும் புனிதத்தன்மை. நாம் அவரைப் பெறும்போது இயேசு உண்மையிலேயே நமக்குள் உயிரோடு பிரசன்னமாகிறார். இயேசு தன்னை இறைமகனாக வெளிப்படுத்தவும், நிலைவாழ்வின் வழியை நமக்கு காட்டவும், என்றும் அவர் இறைபிரசன்னத்தை நம்முடன் இருக்கச் செய்யவும், தனது அன்பை முழுமையாக நற்கருணையில் வெளிப்படுத்துகின்றார். இயேசு தன் சீடர்களிடம், “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” (லூக்கா 22:19) என்று சொல்லும் போது தன் அன்பை பிறரோடு பகிர்ந்து வாழ அழைப்பு தருகின்றார். நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இந்த அன்பை பிறரோடு காட்ட நாம் அவரை நம் உள்ளங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் மீதான நம் அன்பை நற்கருணையில் காட்டுவோம். நற்கருணை இயேசுவைப் பெறுவதற்கு நம்முடைய உள்ளத்தை தயார் செய்வதன் மூலம் அவர்மீது வைத்திருக்கும் அன்பைக் காண்பிப்போம்.

ஒவ்வொரு முறையும் நற்கருணையில் நாம் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் எடுத்துக் கொள்ளும்போது, ​​இறைவனுடனான உடன்படிக்கையை புதுப்பித்துக்கொண்டிருக்கிறோம், இயேசுவைப் பின்பற்றுவதற்கான பொறுப்பை நம்முடைய திறனுக்கு ஏற்றவாறு ஏற்றுக்கொள்கிறோம். இது இதயங்களில் எழுதப்பட்ட உடன்படிக்கை, அன்பின் உடன்படிக்கை. ஒவ்வொரு முறையும் நாம் திருப்பலியில் கலந்து கொள்ளும்போது, ​​இறைவார்த்தைகளைக் கேட்கிறோம். இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகின்ற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை, இது உங்களுக்காகவும் பலருக்கும், பாவ மன்னிப்புக்காகவும் ஊற்றப்படும். இயேசுவின் பலியில் அப்பத்தையும் கிண்ணத்தையும் பருகுவது இயேசு தம்முடைய இரத்தத்தை சிலுவையிலிருந்து நமக்கு தருவது ஒரு புதிய நினைவூட்டலாகும். இறைவன் தன் மகன் இயேசுவின் மூலமாக தனது உடன்படிக்கையை புதுப்பிக்கிறார் என்பதை நன்கு அறிந்த பின்னர், நாம் எவ்வாறு நமது உடன்படிக்கையில் வளர்கின்றோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது இதயத்திலிருந்து அவர் நமக்காக தரும் உடன்படிக்கையின் உணவு. இதை உணர்ந்து, ஏற்று அன்பின் உடன்படிக்கையில் நாளும் நிலைத்திருப்போம்.


அருட்பணி. அ.குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.




Friday, May 28, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - மூவொரு இறைவன் பெருவிழா- ( ஆண்டு- B)- 30-05-2021- ஞாயிற்றுக்கிழமை

                         🌱விவிலிய விதைகள்🌱 

மூவொரு இறைவன் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை


உறவை வளர்க்கும் தமதிரித்துவம்

   தாயாம் திருஅவையானது இன்று மூவொரு இறைவனின் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. இது விசுவாசத்தின் விழா, தந்தை, மகன், தூய ஆவி என்னும் தமதிரித்துவத்தின் விழா, ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருந்தாலும், ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமையாய் இருக்கிறார் என்னும் நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும் விழா.

             தந்தை மகன் தூய ஆவி என மூவரும் மூன்று கடவுள் அல்ல மாறாக ஒரே கடவுள். தந்தை மகன் அல்ல, மகன் தந்தை அல்ல, தந்தை தூய ஆவி அல்ல, தூய ஆவி தந்தையும் அல்ல, மகனும் அல்ல ஆனால் அவர்கள் மூவரும் ஒரே கடவுள் என்னும் இத்தகைய இறையியலை புரிந்து கொள்வது நமக்கு சற்று கடினம்தான். யூத மதத்தினர் தந்தையாகிய கடவுளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள், இறைமகன் இயேசு கிறிஸ்துவை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இஸ்லாமிய மதத்தினர் இயேசுவை மட்டும் தான் ஏற்றுக் கொள்கிறார்கள் அவர் இறைமகன் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் தந்தை கடவுளையும் ஏற்றுக்கொள்வதில்லை. தூய ஆவி மட்டுமே போதும் என்று தூய ஆவியை மட்டுமே ஏற்றுக் கொள்ளுகின்ற சில பிரிவினை சபைகளும் உண்டு. இத்தகைய சூழலில் தான் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தந்தை மகன் தூய ஆவி என்னும் மூவொரு இறைவனின் திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம், நமது விசுவாசத்தை அறிக்கையிடுக்கின்றோம். இத்தகைய ஒரு இறையியலை எவ்வாறு புரிந்து கொள்வது? மிகவும் எளிது தான், ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவிக்கு கணவராகவும், தன்னுடைய பிள்ளைகளுக்கு தந்தையாகவும், தன்னுடைய தாய்க்கு பிள்ளையாகவும் என, ஒரு ஆள் மூன்று உறவு முறையோடு வாழ்வதைப் போல, ஒரே இறைவன் மூன்று ஆட்களாக இருக்கின்றார். இதுவே நம்முடைய விசுவாசம், இதனைத்தான் நாம் இன்று விழாவாக கொண்டாடி மகிழ்கின்றோம்.

இத்தகைய மூவொரு இறைவனின் பெருவிழாவை கொண்டாடுகின்ற இந்த நாளிலே அவர் நம்முடைய உறவுகளுக்கு அடித்தளமாக உறவுகளோடு ஒன்றித்து வாழ்வதற்கு முன்மாதிரியாக இருக்கிறார். இறைவன் மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே ஞானம், ஒரே சித்தம் மற்றும் ஒரே வல்லமை என்பதிலும் Reciprocal என்று சொல்லக் கூடிய சரிசமமான கொடுக்கல் - வாங்கலிலும் (Mutual Self-giving and reciving), நம்முடைய உறவுகளுக்கு முன் அடையாளமாக இருப்பதை நாம் பார்க்கின்றோம். நம் குடும்பங்களில் நாம் தமதிரித்துவ ஒன்றிப்பை பின்பற்றி உறவுகளோடு ஒற்றுமையோடு வாழுவோம். திருவிவிலியத்தில் தந்தையின் படைப்பிலும், இறைமகன் இயேசுவின் மீட்புப் பணியிலும் மற்றும் தூய ஆவியின் வழிநடத்துதலிலும் மூவொரு இறைவனின் வெளிப்பாட்டை நாம் பார்க்கின்றோம். இத்தகைய இறை ஒன்றிப்பு நம்முடைய உறவுக்கு ஒற்றுமையை கற்றுத் தருகின்றது.
1.தந்தையின் படைப்பில்...

படைப்பின் தொடக்கத்திலும் மூவொரு இறைவன் இணைந்து உலகினை படைப்பதை பார்க்கின்றோம். உலகை படைத்த தந்தையையும், படைப்பின் போது அவர் வார்த்தையாக இருந்த இயேசு கிறிஸ்துவையும், நீரின் மீது அசைந்தாடி வழிநடத்தும் தூய ஆவியையும் பார்க்கின்ற போது படைப்பின் தொடக்கத்திலேயே மூவொரு இறைவனின் ஒன்றிப்பு வெளிப்படுகின்றது.

2. இயேசுவின் மீட்புப்பணியில்...

இறைமகன் இயேசுவின் பிறப்பிலும் மூவொரு இறைவன் இணைந்து செயல்படுவதை பார்க்கின்றோம். தந்தையாகிய கடவுள் தன்னுடைய ஒரே மகனான இயேசு இவ்வுலகிற்கு அனுப்ப தூய ஆவி அன்னையின் மீது நிழலிடுவதையும், இயேசு பிறப்பதையும், இயேசு என்றால் "கடவுள் நம்மோடு" என்று குறிப்பிடப்படுவதையும் மூவொரு இறைவனின் இறைஒன்றிப்பை காட்டுகிறது. அவர்கள் மூவரும் இணைந்து மீட்புத் திட்டத்தை நிறைவேற்றுவதை காண்கின்றோம். அதனால் தான், இயேசுவினுடைய பணி வாழ்விலும், தமதிரித்துவத்தின் வெளிப்பாடு பல இடங்களில் நாம் பார்க்கின்றோம். இறைமகன் இயேசு கிறிஸ்துவே தன்னுடைய திருமுழுக்கின் போதும், உருமாற்றம் அடைந்த போதும், அவர் வார்த்தைகளிலும், இறுதியாக தன்னுடைய சீடர்களிடம் "தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்" என்று சொல்லுவதிலும் மூவொரு இறைவனின் வெளிப்பாட்டை பார்க்கின்றோம்.

3. தூய ஆவியின் வழிநடத்துதலில்...

பெந்தகோஸ்தே பெருவிழாவின் போது இறங்கி வந்த தூய ஆவியானவர், அன்னையின் மீதும் அப்போஸ்தலர்கள் மீதும் இறங்கி வந்தது, தந்தை அனுப்பிய இறைமகன் இயேசு கிறிஸ்துவை உலகெங்கும் சென்று பறைசாற்றுவதற்காக தான். தூய ஆவியானவர் இயேசு அனுப்பிய துணையாளர், இன்றும் திருஅவையில் நம்மை வழி நடத்தி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியில் நாம் நடந்து தந்தை கடவுளின் இறையாட்சியை பெற செய்கின்றார்.

அன்பார்ந்தவர்களே, தந்தை மகன் தூய ஆவியில், மூவொரு இறைவனின் ஒன்றிப்பு வெளிப்படுகின்றது. இத்தகைய இறை ஒன்றிப்பு நம்முடைய குடும்பங்களுக்கு, சமூகங்களுக்கு மற்றும் சமுதாயத்திற்கு ஒற்றுமையையும் உறவின் அடித்தளத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. இன்று நம்முடைய குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் எவ்வாறு இருக்கின்றது. மூவொரு இறைவனின் ஒன்றிப்பு நம்முடைய குடும்பங்களில் இருக்கின்றதா? ஒற்றுமையோடு நாம் வாழ்கின்றோமா? ஒருவர் மற்றவரின் பணிகளில் நாம் உதவி செய்கின்றோமா? இறைவன் கொடுத்த அழகிய சமூக மற்றும் குடும்ப வாழ்வில் ஒருவர் மற்றவரோடு ஒன்றித்து, ஒற்றுமையோடு, அமைதியோடு, நல்உறவோடு வாழ்வோம். மூவொரு இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அருட்பணி. அ.குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.





Friday, May 21, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தூய ஆவியார் பெருவிழா- ( ஆண்டு- B)- 23-05-2021- ஞாயிற்றுக்கிழமை

             🌱விவிலிய விதைகள்🌱   

           தூய ஆவியார் பெருவிழா
     தமிழ் திருவழிபாட்டு மறையுரை

     முக்காலத்துக்கும் துணையாளர்



           தாயாம் திரு அவையானது இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இது கிறிஸ்தவத்தின் பிறப்பு விழா. இயேசுவின் விண்ணேற்புக்கு பிறகு இயேசு துணையாளராம் தூய ஆவியானவரை அனுப்பிய விழா. சீடர்கள் தூய ஆவியால் புத்துணர்வு பெற்று உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க தூண்டிய விழா. சீடர்களின் அச்சத்திற்கு விடுதலை தந்த விழா. இன்றைய நற்செய்தி வாசகத்தில்  இயேசு கிறிஸ்து தூய ஆவியானவரின் ஐந்து குணநலன்களை வெளிப்படுத்துகின்றார்.

1. துணையாளர். (15:26)
2. உண்மையை வெளிப்படுத்துபவர். (15:26)
3. உண்மையில் வழி நடத்துபவர். (16:13)
4. வருவதை முன்னறிவிப்பவர். (16:13)
5. இயேசுவை மாட்சிபடுத்துபவர்.(16:14)

         தூய ஆவியானவருக்கு எண்ணற்ற பண்புகளை எடுத்துரைத்து கொண்டே இருந்தாலும் அவர் நம் வாழ்வின் துணையாளர் என்பது மறுக்க முடியாத உண்மை. துணையாளர் என்னும் தூய ஆவியானவரை உமக்காக அனுப்புவேன் எனும் இயேசுவினுடைய வாக்கிற்கு ஏற்ப  ஆவியானவர் திருத்தூதர்கள் மீதும், அன்னை மரியாவின் மீதும் இறங்கி வந்தார் (திருத்தூதர் பணிகள் 2:3). ஆவியானவர் அவர்களில் இறங்கி வந்தது மட்டுமல்லாது, அவர்களின் வாழ்வில் துணையாய் இருந்து, அன்று மட்டுமல்லாது, இன்றும், என்றும், எக்காலத்திலும் நமது வாழ்வில் துணையாளராக ஆவியானவர் இருப்பார் என்பதை இன்றைய பெருவிழா எடுத்துரைக்கிறது.

1. இறந்த காலத்தில் துணையாளர்

(1)-படைப்பில்...

       படைப்பின் தொடக்கத்திலேயே ஆவியானவர் புது படைப்பின் ஊற்றாக  இருக்கின்றார். "மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" (தொடக்க நூல். 1:2). ஆக, இறைவன் உலகை படைத்த போதே ஆவியானவர் துணையாளராக இருந்திருப்பதை இது தெளிவுப்படுத்துகிறது.

(2)-இயேசுவில்...

   இயேசுவின் வாழ்வு முழுவதும் ஆவியானவர் நிறைந்திருந்திருக்கின்றார். அவரது பிறப்பு ஆவியானவரின் துணையால் நிகழ்ந்திருக்கின்றது. வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்".(லூக்கா 1:35)  இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தின் அடித்தளத்தில் கூட ஆவியானவர் இருந்திருக்கின்றார். அதனால் தான் இயேசு திருமுழுக்கு பெற்ற போது தூய ஆவியானவர் புறா வடிவில் பிரசன்னமாக இருந்ததை காண்கிறோம். "மக்களெல்லோரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது" (லூக்கா 3:21,22). அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்படுகின்றார். (மத்தேயு. 4:1) இயேசு இறையாட்சியை பறைசாற்றிய போது கூட "ஆண்டவருடைய ஆவி என் மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்".
(லூக்கா 4:18) என்று கூறுவதை காண்கிறோம்.

(3)-திருத்தூதர்களிடத்தில்...

         இயேசுவின் விண்ணேற்புக்கு பிறகு திருத்தூதர்களின் வாழ்வில் எல்லாமாய் இருந்தது தூய ஆவியானவர்‌. இது பெந்தகோஸ்து நாளில் அவர்கள் தூய ஆவியானவரை பெற்றதிலிருந்து, தங்களுடைய வாழ்வில் அவரை தாங்கியவர்களாக உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்றுவதிலும், செய்த யாவற்றையும் துணையாளராம் தூய ஆவியின் துணையோடு செய்வதிலும் வெளிப்படுகின்றது. "இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம்". (திருத்தூதர் பணிகள் 15:28) ஆக படைப்பின் தொடக்கத்திலிருந்து இயேசுவிலும், திருத்தூதர்களின் பணி வாழ்விலும் துணையாளர் தூய ஆவியானவர் நிறைந்திருக்கின்றார். அன்று (இறந்த காலம்) அவர் அவர்களை காத்து வழிநடத்தியிருக்கின்றார்.

2. நிகழ்காலத்தில் துணையாளர்

துணையாளர் தூய ஆவியானவர் அன்று மட்டுமல்லாது, இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

(1)-திருஅவையில்...

   திருஅவையின்  பிறப்பிலிருந்து  இன்று வரை வழி நடத்திக் கொண்டிருப்பது தூய ஆவியானவர்.  திருஅவையை வழிநடத்துகின்ற ஒவ்வொரு திருத்தந்தையர்களும் தேர்ந்தெடுக்கப்படுவது தூய ஆவியானவரின் துணையால் தான். திருஅவையை வழிநடத்துகின்ற திருத்தந்தையர்கள் மட்டுமல்லாது, ஆயர்கள் மற்றும் குருக்களும்  ஆவியானவரால் திருநிலைப்படுத்தப்படுகின்றனர்.  ஆவியானவர்  இவர்களில் நாளும் வெளிப்படுகின்றார். திருஅவையில் எங்கெங்கெல்லாம் நன்மை நடந்துக் கொண்டிருக்கின்றதோ,  அங்கே ஆவியானவர் நிறைந்திருக்கின்றார்.
 
(2)-திருவருட்சாதனங்களில்...
 
   திருஅவையில் திருவருட்சாதனங்கள் வழியாக ஆவியானவர்  துணையாளராக ஒவ்வொருவரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். திருஅவையின் திருவருட்சாதனங்களில் ஆவியானவரை  பார்க்கின்றோம். குறிப்பாக திருமுழுக்கு, உறுதிபூசுதல் மற்றும் குருத்துவம் ஆகிய திருவருட்சாதனங்களின் வழியாக ஆவியானவரின் ஆற்றல் மற்றும் கொடைகளை நாம் பெறுகின்றோம்.

(3)-மனிதர்களிடத்தில்...

    இயேசு பிலிப்பிடம், "அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்". (யோவான் 14:17) என்னும் வார்த்தைகள் இயேசு நமக்காக அனுப்பும் தூய ஆவியானவரை மட்டுமல்லாது, அவர் நம்மோடு, நம்முள்ளும் தங்கியிருக்கிறார் என்பதை காட்டுகிறது. இதைத்தான் பவுலடிகளார் "உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?".(1 கொரிந்தியர் 6:19) என குறிப்பிடுகின்றார். நம்மோடு மற்றும் நம்முள் இருக்கும் தூய ஆவியானவர் இன்றும் மற்றும் என்றும் நம்முடன் துணையாளராக இருப்பார்.

3. எதிர்காலத்தில் துணையாளர்

      முற்காலத்தில் துணையாளராக இருந்து வழிநடத்திய ஆவியானவர், இக்காலத்தில் துணையாளராக இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் ஆவியானவர், வரும் காலங்களிலும் நம்மோடு துணையாளராக இருந்து வழிநடத்துவார். எதிர்காலத்திலும் உண்மையை, நன்மையை மற்றும் வரப்போவதை அறிவிப்பவராய் ஆவியானவர் நமக்கு துணையாயிருப்பார்.

(1)-வரப்போவதை அறிவிப்பவராய்...

   இயேசு வாக்களித்த தூய ஆவியானவர் நம் எதிர்காலத்தில் வரப்போவதை அறிவிப்பார். "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்". (யோவான் 16:13) ஆக, வரும் காலங்களிலும் நிகழ்வதை சுட்டிக் காட்டி, எக்காலத்திலும் நம்மை காப்பவராக தூய ஆவியானவர் இருப்பார். "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!" (எபேசியர் 1:17) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நம் எதிர்காலத்திற்கு ஞானத்தை தருபவராக ஆவியானவர் இருக்கிறார்.

(2)-உண்மையை வெளிப்படுத்துபவராய்...

         "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்".(யோவான் 15:26) என்னும் இயேசுவின் வார்த்தைகள் வரும் காலத்தில் எவை சரி என்னும் உண்மையை காட்டி நம்மை காக்கும் ஆவியானவரை வெளிப்படுத்துகிறது.

(3)-கனிகளை தருபவராய்...

       மனித வாழ்வு என்றும் மகிழ்வு பெற அடிப்படையாக எண்ணற்ற பண்புகள் நம்மில் வளர வேண்டும். "தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்" (கலாத்தியர் 5:22,23). ஆவியானவரின் இத்தகைய கனிகள் தான் மனித வாழ்வு மகிழ்ந்திருக்க உதவும் கருவிகள்.

         இயேசுவின் வார்த்தைகள் அன்று ஆவியானவர் அவரோடு துணையாக நின்றது மட்டுமல்லாது, அதன் பின்பு திருத்தூதர்களின் வாழ்விலும், இன்றும் பாதுகாத்து கொண்டு இருக்கின்றார். இது இறை சித்தம் ஏனென்றால் துணையாளர் ஆவியானவரை, நம்மை காப்பதற்காகவே, வழி நடத்துவதற்காகவே இறைவன் அனுப்பி இருக்கிறார். அது மட்டுமல்லாது இன்னும் வரும் காலத்திலும் அவர் நம்மை காப்பார் என்பது இயேசுவினுடைய வார்த்தைகள் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆவியானவர் நம்மை அழைக்கின்றார் மற்றும் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாம் உணர கூடிய ஒரு தருணம் தான் நாம் கொண்டாடக் கூடிய இந்த ஆவியானவர் பெருவிழா. எனவே, ஆவியானவர் என்னுள் இருக்கின்றார் என்னோடு இருக்கின்றார் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வோம்.  ஆவியானவர் எக்காலத்திற்கும் என்னோடு துணையாளராக வாழ்கிறார் என்பதை உணர்ந்து, அவருடைய கனிகளை பெற்று, மகிழ்வோடு இறைவனின் வழியில் செல்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்
 




Friday, May 14, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -ஆண்டவரின் விண்ணேற்பு பெருவிழா- ( ஆண்டு- B)- 16-05-2021- ஞாயிற்றுக்கிழமை

  🌱விவிலிய விதைகள்🌱    

  இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா

    தமிழ் திருவழிபாட்டு மறையுரை


 தன்னை அடையாளப்படுத்திய 

விதை - இயேசு



  "மண்ணில் மடிந்த விதை 

  முளைத்தது மட்டுமல்ல,

   விருட்சமாக வளர்ந்து,

    பூத்து, காய்த்து, கனி தந்து,

     அந்த கனியின் வழியாக

   தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது."

    இயேசு எனும் விதை தன்னுடைய பாடுகளால் மற்றும் இறப்பால் மடிந்தது மட்டுமல்ல, மூன்றாம் நாள் விருட்சமாக மீண்டும் முளைத்து, பூத்து, காய்த்து, கனி தந்து அதாவது தன்னுடைய சீடர்களுக்கு காட்சி அளித்து, அவரோடு பேசி, உண்டு, விண்ணேற்றம் அடைந்து மற்றும் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து தன்னை இறைமகன் என அடையாளப்படுத்திக் கொண்டது. இயேசுவினுடைய விண்ணேற்ற பெருவிழாவை கொண்டாடுகின்ற இந்த நாளிலே இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு காட்டும் வெளிப்பாடுகளை தியானிப்போம்.


 இயேசுவினுடைய விண்ணேற்றம் நமக்கு நான்கு வெளிப்பாடுகளை தருகின்றது.

1. இறை வல்லமை  

2. கிறிஸ்தவத்தின் தொடக்கம்

3. சீடர்களின் பணிவாழ்வின் அடித்தளம்

4. இறை நம்பிக்கையின் வளர்ச்சி 

1. இறை வல்லமை  

 இயேசு எனும் விதை தனது உயிர்த்தெழுதலுக்கு பிறகு விண்ணேற்றம் அடைந்து இறை வல்லமையை நமக்கு காட்டியிருக்கின்றது. இயேசு விண்ணேற்றம் அடைந்தது இறை ஆற்றலையும் மற்றும் தந்தையின் வலப்புறம் அமர்ந்தது அவர் இறைமகன் (மாற்கு. 16.19) என்பதையும் நமக்குச் வெளிப்படுத்துகின்றது. இயேசுவை இறைவல்லமை கொண்ட தந்தையின் மைந்தன் என்பதை அவரது விண்ணேற்றம் வெளிப்படுத்துகின்றது.

2. கிறிஸ்தவத்தின் தொடக்கம்

 இயேசுவினுடைய விண்ணேற்றம் கிறிஸ்தவத்தின் தொடக்கமாக இருப்பதை பார்க்கின்றோம். இயேசு விண்ணேற்றம் அடைந்த பிறகு தான் தூய ஆவியாரின் வழியாய் சீடர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று, தங்களுடைய பணி வாழ்வை துவங்கி, கிறிஸ்தவத்தை மலர செய்வதை பார்க்கின்றோம். இயேசு விண்ணேற்றம் பெறாவிடில் கிறிஸ்தவம் மலர்ந்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான், ஆக விண்ணேற்றத்தின் வெளிப்பாடாக கிறிஸ்தவத்தின் தொடக்கம் அமைவதை பார்க்கின்றோம்.

3. சீடர்களின் பணிவாழ்வின் அடித்தளம்

இயேசுவினுடைய விண்ணேற்றத்திற்கு பிறகு தான் சீடர்கள் தங்களுடைய நிரந்தர பணி வாழ்வை துவங்குகிறார்கள். இயேசுவோடு உடனிருந்து தங்களை இந்தப்பணி வாழ்விற்காக, அவரால் தயார்படுத்தப்பட்ட இவர்கள் தொடர்ந்து இயேசுவினுடைய அழைப்புக்கு ஏற்றவாறு உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்றுகின்றனர். சீடர்கள் பணி வாழ்வை துவங்கி, நற்செய்தியை பறைசாற்றியதற்கு, இயேசு விண்ணேற்றத்திற்கு முன்பு அவர் பேசிய “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு. 28:18-20) என்னும் வார்த்தைகளே காரணமாக இருக்கிறது.

4. இறைநம்பிக்கையில் வளர்ச்சி 

 இயேசுவின் விண்ணேற்றம் வெளிப்படுத்தும் மற்றொரு வெளிப்பாடு இறைநம்பிக்கையின் வளர்ச்சி. இயேசுவின் உயிர்ப்பு இறைநம்பிக்கையின் பிறப்பு என்றால் இயேசுவின் விண்ணேற்றம் பிறந்த நம்பிக்கையை மென்மேலும் வளர செய்திருக்கின்றது. இன்றைய நற்செய்தியின் அடித்தளத்தில் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால் நாம் பெறும் கனிகளை நாம் தொடர்ந்து காண்போம்.

1. மீட்புப் பெறுவர் (மாற்கு. 16:16)

 இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால் நாம் மீட்புப் பெறுவோம், நமது அன்றாட வாழ்வின் தீமைகளிலிருந்தும், சோதனைகலிருந்தும் மற்றும் பாவத்திலிருந்தும் நாம் மீட்பு பெறுவோம்.

2. பேய்களை ஓட்டுவர் (மாற்கு. 16:17)

 இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பேய்களை ஓட்டுவர், இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் வருகின்ற தீய சக்திகளை, பாவ மற்றும் தீய வழிக்கு அழைப்பவர்களை, நம் ஆசைகளை பேய்களாக எண்ணி ஓட்டுவார்கள் என்பதே நம்பிக்கையின் சக்தி.

3. புது மொழி பேசுவர் (மாற்கு. 16:17)

 இயேசுவின் மீது நம்பிக்கை கொள்பவர்கள் புது மொழியில் பேசுவர், இங்கு புது மொழி என்பது இயேசு மொழி. நாம் பல தருணங்களில் உலக மொழி பேசிக் கொண்டிருக்கின்றோம். நமது ஆசைகளான மொபைல்கள், மடிகணினி, பணம், பொருள், பதவி, அதிகாரம் மற்றும் வேலை என அணைத்தும் உலக மொழிகளாக இருக்கின்றன. நிரந்தரமற்ற இத்தகைய உலக மொழிகளிலிருந்து மாறுபட இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுவோம். அவர் மொழி பேசுவோம்.

4. பாம்புகளைப் பிடிப்பர்(மாற்கு. 16:18)

 இயேசுவின் மீது நம்பிக்கை கொள்பவர் பாம்புகளை பிடிப்பார்கள். பாம்பானது பழைய ஏற்பாட்டில் சாத்தானாக உருவகம் செய்யப்படுகின்றது. நம்மை தீய வழிக்கு தவறு செய்ய தூண்டுகின்ற எந்த ஒரு செயலாக, ஆசையாக மற்றும் நபராக இருந்தாலும் அது பாம்பாக நமது வாழ்க்கையில் வருகின்ற சாத்தான்கள். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுகின்ற பொழுது அந்த சாத்தான்களை என்னும் பாம்புகளை நாம் பிடித்து எரிபவர்களாக மாறுவோம்.

5. நச்சு குடித்தாலும் ஏதும் ஆகாது (மாற்கு. 16:18)

 நம்பிக்கை கொள்கின்றவர்கள் நச்சு குடித்தாலும் ஏதும் ஆகாது என்னும் வார்த்தைகள் இறைநம்பிக்கையில் நாம் வாழுகின்ற போது நம்மை அறியாமல் நாம் செய்கின்ற தவறுகள் மற்றும் பாவம் என்னும் பள்ளங்களை குறிக்கிறது. நச்சு போல நம்முடைய வாழ்க்கையில் பாவம், துன்பம், வேதனை மற்றும் சோதனை சூழ்ந்து கொண்டாலும் இறைவன் நம்மை மீட்பார். நமக்கு எதுவும் ஆகாது ஏனெனில் இறை நம்பிக்கை நம்மிடையே இருக்கிறது.

6. உடல்நலமற்றோர் மீது கை வைக்க குணமாவர். (மாற்கு. 16:18)

 நம்பிக்கை கொள்வோர் உடல்நலமற்றோர் மீது கைகளை வைக்க அவர்கள் குணமாவர் என்று குறிப்பிடப்படுவது, நாம் நம்பிக்கையோடு வாழ்கின்ற பொழுது யாராவது தவறான வழியில் செல்கையில் நாம் அவர்களை சுட்டிக்காட்டி, இறைவனுடைய பாதையிலே அவர்கள் வளர்வதற்கு மற்றும் பயணிப்பதற்கு உதவுபவராக மாறுகிறோம் என்பதை காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அன்று திருத்தூதர்கள் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால் அவர் பெயரால் நோய்களை குணமாக்கினர் மற்றும் பேய்களை ஓட்டினார்கள். அதேபோல நாமும் இறை நம்பிக்கையோடு வாழுகின்ற பொழுது நமது வாழ்க்கையில் அனைத்து நோய்களையும் மற்றும் வாழ்வின் பேய்களையும் நம்மால் குணப்படுத்த முடியும் முடியும்.

 இயேசு இறை வல்லமை நிறைந்த இறை மைந்தன் என்பதையும், அவர் சீடர்கள் இறைப்பணியை துவங்கியதையும், அதனால் கிறிஸ்தவம் என்ற மலர் மலர்ந்ததையும், அதில் இறைநம்பிக்கை வளர்வதையும் எடுத்துரைக்கும் இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவில் நாமும் இறைநம்பிக்கையில் நாளும் வளர்ந்து வாழ முயற்சிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்