Friday, April 16, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்காகாலம் 3-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 18-04-2021- ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱  

பாஸ்கா காலம் 3-ஆம் வாரம் ( ஆண்டு- B)

18-04-2021

ஞாயிற்றுக்கிழமை



உயிர்த்த இயேசு தரும் அனுபவமும் - மாற்றமும்



"வீசுகின்ற காற்று தான்
தென்றலாக மாறுகின்றது,
கூடுகின்ற கருமேகங்கள் தான் 
மழையாகப் பொழிகின்றது,
ஓடுகின்ற நதிகள் தான்
கடலாக சங்கமிக்கின்றது,
நாம் பேசுகின்ற வார்த்தைகளும் செயல்களும் தான்
பிறரில் புது மாற்றத்தை உருவாக்குகின்றது.

        மனித வாழ்க்கையில் எல்லா அனுபவங்களும், அதனால் வரும் மாற்றங்களும்  ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரு மனிதரால், அவர்  வார்த்தைகளால் மற்றும் செயல்களால் நடைபெறுகிறது. இன்றைய இறைவார்த்தை பகுதியும்  இயேசுவின் இறப்புக்கு பிறகு சீடர்கள் இருந்த சூழலில், ஒரு குறிப்பிட்ட இயேசு என்னும் மனிதருடைய காட்சியால், அவர் வாழ்த்தால், வார்த்தைகளால் மற்றும் செயலால் சீடர்கள் பெற்ற அனுபவத்தையும், அதனால் அவர்களில் ஏற்ப்பட்ட மாற்றத்தையும் சுட்டிக்காட்டிநாமும் இறைவார்த்தையால் புது அனுபவம்  பெற்று, இறைச்செயலால் நமது வாழ்வில் புது மாற்றம் பெற அழைப்பு தருகிறது.

1. காட்சியால்)....லூக்கா.24:35a)

 
    இயேசுவின் காட்சிகள் அனைத்தும் சீடர்களின் வாழ்வில் மாற்றத்தையும் அனுபவத்தையும் தந்தது. அவர் இறப்புக்கு பிறகு வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்று அறையில் முடங்கி கிடந்தவர்கள் புதுவாழ்வு பெற்று வந்தது இயேசுவின் காட்சியால் தான். இன்று நாம் எல்லோரும் வீடியோ கால் கலாச்சாரத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அருகில்  இருப்பதை போல பேசிக் கொண்டிருக்கின்றோம். என்னதான் வீடியோ கால் கலாச்சாரத்தின் வசதியில் வாழ்ந்தாலும், ஒருவரை நேரில் சென்று சந்தித்து பேசி, உரையாடுவது ஒரு புது உணர்வு தான். இயேசுவினுடைய நினைப்பில், வாழ்ந்தவர்களுக்கு  மற்றும் அவருடைய எம்மாவுஸ் காட்சியை பற்றி பேசிக்கொண்டிருந்த  சீடர்களுக்கு ஒரு மாபெரும் அச்சமும், அதிர்ச்சியும் தான் இயேசுவின் காட்சி. ஆனால்  அவர்களுடைய வாழ்க்கையில்  ஒரு புது அனுபவத்தையும் மாற்றத்தையும்  கொடுக்கப் போகின்றது என்பதன் முன் அடையாளமாக இது திகழ்கின்றது.
  
2. வாழ்த்தால் ....( .லூக்கா24:35b)

        இயேசுவின் காட்சி "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்னும் வாழ்த்தோடு துவங்குவதை பார்க்கின்றோம். இது வெறும் வாழ்த்து அல்ல, வார்த்தையும் அல்ல மாறாக சீடர்களின் வாழ்க்கை. அன்று, அன்னை மரியாவுக்கு வானதூதர் தோன்றிய போது "அருள் நிறைந்த மரியே வாழ்க" என வாழ்த்தினார். அன்னைமரியாள் எலிசபெத்தை சந்தித்த போது அவருக்கு வாழ்த்து கூறினார்.  வாழ்த்து என்பது உறவுகளின் தொடக்கமாக, சந்திப்பின்  அடையாளமாக அமைகின்றது. இயேசு மீண்டும் சீடர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகின்ற மாற்றத்தின்  அடையாளம் தான் இந்த வாழ்த்து.

3. வார்த்தைகளால்... (லூக்கா.24:37-39)

        இயேசுவினுடைய காட்சியும் வாழ்த்தும் சீடர்களுக்கு அச்சத்தையும் கலக்கத்தையும் கொடுத்தது. தங்கள் முன் வந்து நின்றது  இயேசுவா? அல்லது ஆவியா? என்ற ஒரு கேள்வி அவர்களில் இருந்தது. இது வெறும் இயேசு தோன்றிய காட்சியால் வந்த அச்சம் அல்ல, மாறாக அவருடைய இறப்புக்கு பிறகு அவர்களுடைய உள்ளங்களில் பெரும் தடைக்கல்லாக இருந்த கவலைகளும், அச்சங்களும்தாக்கங்களும் தான். இவை அனைத்தும் இயேசுவினுடைய வார்த்தைகளால் மாற்றம் பெறுகின்றன. இயேசுவினுடைய வார்த்தைகள் அவர்களுடைய அச்சத்தின் தீர்வாக, மருந்தாக மற்றும் விளக்கமாக மாறுகின்றது. 'நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம்,' 'தொட்டுப் பாருங்கள்' எனும் இயேசுவின் வார்த்தைகள் சீடர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை எனும் இரண்டு உன்னதமான உணர்வுகளை உருவாக்கி தருகின்றது. இதுவே அவர்களுக்கு  இறை அனுபவத்தை தருகின்றது.

4. செயல்களால்...(லூக்கா.24:41-43)
       
        மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை என்னும் உணர்வுகளோடு கலந்து வியப்பு என்னும் மற்றொரு உணர்வும் அவர்களில் உருவாகுவதை இயேசு கவனிக்கிறார். அதனால் தான் வார்த்தையால் மாற்றத்தை ஏற்படுத்திய இயேசு, தொடர்ந்து செயலால் மாற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றார்.  'உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?' என்று வினவி வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவர் அவர்கள்முன் அமர்ந்து உண்பதை இறைவார்த்தை எடுத்துரைக்கின்றது. இயேசுவின் மனிதத்தன்மையை இது எடுத்துரைத்து உங்களோடு வாழ்ந்த இறைமகன் நானே என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

5. மறைநூலால்....(லூக்கா.24:44)

        இயேசு தனது காட்சியால், வாழ்த்தால், வார்த்தைகளால் மற்றும் செயல்களால் இறையனுபவத்தையும், மாற்றத்தையும் சீடர்களுள் ஏற்படுத்த விரும்பினார். அதனோடு மீண்டுமாக  சீடர்கள் நம்பிய மறைநூல் வார்த்தைகளால் அவர்களுக்கு இவையனைத்தும் இறைவனின் சித்தம் என்பதையும், மோசேயின் சட்டமும், இறைவாக்கினர் நூல்களும் இதைத்தான் குறிப்பிடுகின்றது என்பதையும், மேலும் இயேசுவின் பாடுகள்இறப்பு மற்றும் உயிர்ப்பு  இறைவனுடைய சித்தம், இதற்கு நீங்களே சாட்சிகள் என்னும் புது அழைப்பை அவர்களுக்கு தருகின்றார்.

சீடர்களின் அனுபவமும்/மாற்றமும்:-

        இயேசுவின் பிரசன்னமும், வார்த்தையும்  மற்றும் செயலும் தந்த மாற்றத்தை மற்றும் இறையனுபவத்தை தான் இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றது. பேதுரு இயேசுவை பறைசாற்றி அவருக்கு சாட்சியம் பகிர்வதை இன்றைய முதல் வாசகமும், யோவான் இயேசுவுக்கு சாட்சியமாக பகர்ந்து, அனைவரும் பாவத்தை விட்டு மனமாற்றம் பெற்றவர்களாக  வாழ அழைப்பு தருவது இன்றைய இரண்டாம் வாசகமாக இருக்கின்றது. இந்த வார்த்தைகளே அவர்கள் கண்ட இறையனுபவத்தின் விழுமியங்கள்அவர்கள் பெற்ற மாற்றத்தின் சாட்சியங்கள் ஆகும். இன்றைய நற்செய்தியின் இறுதிப்பகுதியிலும் 'அவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டது' (லூக்கா.24:45) என குறிப்பிடப்பட்டிருப்பது சீடர்களின் இறையனுபவமாக இருக்கின்றது.

        இன்று நமது வாழ்க்கையிலும் நாம் இயேசுவின் வார்த்தைகளை மற்றும் அவர் செயல்களை ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம், வாசிக்கின்றோம் மற்றும் தியானிக்கிறோம். இயேசுவின் செயல்களும் மற்றும் வார்த்தைகளும் நமது வாழ்க்கையில் இறையனுபவத்தை தருகின்றனதாபுதுமாற்றத்தை ஏற்படுத்துகின்றதா? சிந்திப்போம்...
மாற்றம் பெறுவோம்...

 

அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF
                                    கும்பகோணம்

Saturday, April 10, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 11-04-2021- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்🌱  

பாஸ்கா காலம் 2-ஆம் வாரம் ( ஆண்டு- B)

11-04-2021

ஞாயிற்றுக்கிழமை

உயிர்த்த ஆண்டவர் தரும் அமைதி



                           அர்ஜென்டினாவிற்கும் சிலேக்கும் இடையிலான எல்லையில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் லா கம்ப்ரே பாஸின் உச்சியில் உயிர்த்த ஆண்டவரின் சுரூபம் அமைக்கப்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையின் விளைவாக போர் எழலாம் என்னும் சூழலில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அது அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முடிவாக அமைந்தது, இதன் கொண்டாட்டமாக 1904-ஆம் ஆண்டு மார்ச் 13- அன்று போருக்கு பயன்படுத்தப்படும் பீரங்கியை உருக்கி உயிர்த்த ஆண்டவரின் சுரூபம் செய்யப்பட்டு, அமைதியின் சின்னமாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆண்டிஸ் என்னும் மலைப்பகுதியில் நிறுவப்பட்டது.   அன்று மட்டுமல்லாது இன்றும், இரு நாடுகளுக்கு மட்டுமல்லாது உலகம் அனைத்திற்கும், உயிர்த்த ஆண்டவர்  அமைதியை அளிக்கின்ற அமைதியின் சின்னமாக திகழ்கின்றார் என்பதைத்தான் இன்றைய இறைவார்த்தை நமக்குத் தருகின்ற செய்தியாக இருக்கின்றது.

அமைதி:-

               அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். குடிசார் ஒழுங்கின்மை இல்லாத நிலை எனவும் இதனை வரையறுப்பது உண்டு. தனிப்பட்டவர்கள் சார்பிலும் அமைதி என்னும் சொல் பயன்படுகிறது. இது, வன்முறை சாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளதுஎனினும் கிறிஸ்தவத்தில் அமைதி என்னும் சொல் 'ஷாலோம்' என்னும் எபிரேயச் சொல், இது 'நல்வாழ்வு' என பொருள்படும்.  இன்று நம்முடைய சமுதாயம், குடும்பங்கள் மற்றும் மனித  உள்ளங்கள் என அனைத்தும் அமைதியற்ற சூழலில் இருக்கின்றது. இன்று, நம் நாட்டுக்கும், வீட்டுக்கும் மற்றும் உள்ளத்துக்கும்  உயிர்த்த ஆண்டவர் தருகின்ற அமைதி தேவைப்படுகின்றது.

இயேசு தரும் அமைதி:-

            மீட்பின் வரலாற்றில் உயிர்த்த ஆண்டவர் அமைதியைத் தருபவராக இருக்கின்றார். உயிர்ப்புக்கு பிறகு அவர் சீடர்களை சந்திக்கும் நிகழ்வுகளில் எல்லாம் அவர்களிடம் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்று கூறியிருக்கின்றார். இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு என அனைத்தும் இயேசுவே அமைதியை  தருபவராக இருக்கின்றார், இவரே  அமைதியின் சின்னம் என்பதை அவரது வாழ்வே நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றது. இயேசுவின் பிறப்பின் போது வானதூதர்கள் 'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக'(லூக்கா. 2:14) என்று பாடியிருக்கிறார்கள். இயேசு தன்னுடைய பணி வாழ்வில் அமைதியை எடுத்துரைக்கின்றார். மழைப்பொழிவில் "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" (மத்தேயு.5:9) என்று குறிப்பிடுகின்றார். இயேசு சீடர்களிடம் 'நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக'(மத்தேயு.10:5) என்று கூறுகின்றார். இயேசுவை கைது செய்ய வருகின்ற போது பேதுரு படைவீரரின் காதை துண்டித்தார், அப்பொழுது 'உனது வாளை அதன் உறையில் திரும்பப்போடு' (மத்தேயு.26:52) என்று வன்முறையைக் கண்டித்து அமைதியை ஏற்படுத்துகின்றார். சிலுவையில் தான் இறப்பதற்கு முன்பு கூட "தந்தையே இவர்களை மன்னியும்"(லூக்கா.23:34) என்று பகைமை உணர்வை நீக்கி அமைதி ஏற்படுத்துபவராக இருக்கின்றார். உயிர்ப்புக்கு பிறகு இதே அமைதியை அவர் உலகெங்கும் நிலைநாட்ட குறிப்பாக அமைதியற்று, கலங்கிப்போய், குழப்பத்திலிருந்த சீடர்கள் மனதில்  அமைதியை ஏற்படுத்துகின்றார்.

            இன்றைய நற்செய்தி பகுதி உயிர்த்த இயேசுவின் இரண்டு காட்சிகளை முன் வைக்கின்றது. இவ்விரு காட்சிகளிலும் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக'(யோவான். 20: 19, 21, 26) என்று இயேசு மூன்று முறை கூறியிருக்கின்றார். ஒவ்வொரு முறையும் அவர் கூறிய பிறகு மகிழ்ச்சி, தூய ஆவி மற்றும் நம்பிக்கை என மூன்று பண்புகள்  வெளிப்படுவதை இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது.


1. அமைதி தந்த மகிழ்ச்சி

           இன்றைய நற்செய்தியில் இயேசு தனது சீடர்களிடம் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" (யோவான். 20: 19)என்று கூறியவுடன்சீடர்கள் இயேசுவை கண்டு மகிழ்வதை பார்க்கின்றோம். இயேசுவின் அமைதி என்ற வார்த்தையை அவர்களுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுவரை அவர்கள் கலக்கத்தில், துக்கத்தில், வேதனையில் மற்றும் குற்றவுணர்வில் இருந்தார்கள், இயேசுவின் அமைதி என்ற வார்த்தை அவர்களுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை தந்தது. இன்று நம்முடைய வாழ்க்கையிலும் எப்பொழுதெல்லாம் நாம் கலக்கத்தோடு, துக்கத்தோடு, கஷ்டத்தோடு வாழ்கின்றோமோ அப்போதெல்லாம் உயிர்த்த ஆண்டவருடைய அமைதி, நம்முடைய உள்ளத்திலே நிலவினால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.

2. அமைதி தந்த தூய ஆவி

            நற்செய்தியில் இரண்டாவது முறையாக மீண்டும் சீடர்களைப் பார்த்து "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" (யோவான். 20: 21) என்று கூறி அவர்கள் மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்.   "என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்" (யோவான் 14:4, 26) எனும் இறைவாக்கு இவ்வாறு அமைதியில் வெளிப்படுகின்றது. சீடர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தற்கும் இயேசுவின் அமைதி தந்த தூய ஆவி தான் காரணம்.(திருத்தூதர் பணிகள்.2:1-12) இந்த அனுபவம் தான் சீடர்களை உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்றிதந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுக்க செய்தது. இன்றைய இரண்டாம் வாசகம் "தூய ஆவியாரே உண்மை" (1யோவான்.5:6) என்னும் செய்தியையும் நம்முன் வைத்து ஆவியார் நம் மத்தியில்  வாழுகின்ற போது நாம் இறைவனுக்கு ஏற்ற ஒரு வாழ்வை வாழ்வோம், தூய ஆவியாரின் கனிகளும், கொடைகளும் நம்மை அமைதியான, உன்னதமான மற்றும் மகிழ்வான ஒரு வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் என்பதை காட்டுகின்றது. ஆக ஆண்டவர் இயேசு கிறிஸ்து சீடர்களுடைய பணி வாழ்விற்கு, அமைதியின் வழியாய் ஆவியானவரை அனுப்பி, அவர்களை  வழிநடத்துவதை பார்க்கின்றோம். இன்று நம் வாழ்வின் வழிநடத்துதலுக்கும் இயேசுவின் அமைதி தரும் ஆவியானவர் தேவைப்படுகின்றார்.

3. அமைதி தந்த நம்பிக்கை

        "நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்"(திருத்தூதர் பணிகள். 4:32) என்னும் இன்றைய முதல் வாசகத்தின் வழியாய் உயிர்த்த இயேசு தந்த அமைதியின் வெளிப்பாடு அன்றைய தொடக்க கிறிஸ்தவர்களிடத்திலே நம்பிக்கை என்னும் விதையை விதைத்திருக்கின்றது.  இன்றைய நற்செய்தியில் இயேசு "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று கூறி வாழ்த்திய பின், தோமா நம்பிக்கை கொள்வதை பார்க்கின்றோம். நம்பிக்கையற்று இருந்த அவருக்கு இயேசுவின் அமைதி நம்பிக்கையை தந்தது. இன்றும் நமது குடும்பங்களில்  ஒருவர் மற்றவரிடம் நம்பிக்கையற்ற ஒரு சூழல் இருக்கின்றது என்றால், நாம் உயிர்த்த ஆண்டவரை நாடுவோம், அவர் தருகின்ற அமைதி நம்முடைய உள்ளங்களிலே விதைக்கப்படுகின்ற போது, நம் வாழ்வில் இறைவன் மீதும், ஒருவர் மற்றவர் மீதும் நம்பிக்கை வளரும்.

நம் வாழ்வில் அமைதி:-

                இன்று நாடுகளுக்கிடையே போர் எழக்கூடிய சூழல், தொடர் எல்லைப் பிரச்சினை, பொருளாதார மற்றும் வணிக பிரச்சனைகள் என அமைதியற்ற சூழலில் பல நாடுகள் இருக்கின்றன. நம் நாட்டிலும் மாநிலங்களுக்கிடையே தண்ணீர்வேலைவாய்ப்பு, மின்சாரம் மற்றும் வணிகம் என எண்ணற்ற பிரச்சனைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம்முடைய ஊர்களிலே  சாதி, மொழி மற்றும் சமயம் என ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். இதற்கிடையே அரசியல், தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகள் என எண்ணற்ற பிளவுகளையும், சண்டைகளையும், சச்சரவுகளையும் மற்றும் அமைதியற்ற சூழ்நிலையையும் இந்த நாடும், சமுதாயமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன.  நமது குடும்பங்களில் பிளவுகளை நாம் பார்க்கின்றோம். பெற்றோருக்கும் - பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் - மனைவிக்கும், சகோதர சகோதரிகளுக்கிடையே, உற்றார் உறவினர்களுக்கிடையே என  எண்ணற்ற பிளவுகள், அமைதியற்ற சூழல்கள், சமுதாயத்திலும், நம் குடும்பங்களிலும் நிலவி கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்லாது, தனி மனிதனுடைய மனங்களும் குழப்பமாகி, குற்ற உணர்வுகளுடன், கவலைக்குள்ளாகி துன்பமுற்று, கலக்கமுற்று, கோபத்தோடு அலைந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய ஒரு நிலை மாற  உயிர்த்த ஆண்டவரின் அமைதி தேவைப்படுகின்றது. அமைதியின் சின்னமாக விளங்கும் உயிர்த்த இயேசுவிடம் அவர் தருகின்ற அமைதியை பெற்று, அதனுடைய வெளிப்பாடுகளான மகிழ்ச்சி, தூய ஆவி மற்றும் நம்பிக்கையை நமது அன்றாட வாழ்க்கையிலே பெற்றுக்கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

 அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF

                                    கும்பகோணம்