Saturday, January 9, 2021

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - இயேசுவின் திருமுழுக்கு திருவிழா- (ஆண்டு- B)- 10-01-2021- ஞாயிற்றுக்கிழமை

  விவிலிய விதைகள்

இயேசுவின் திருமுழுக்கு திருவிழா
(
ஆண்டு- B)

10-01-2021

ஞாயிற்றுக்கிழமை


 

அன்றாட வாழ்வில் திருமுழுக்கு



                       "
இன்று உலகம் முழுவதும் கோவித்-19  அல்லது கொரோனாவுடன்  போராடிக்கொண்டிருக்கிறது. எனவே, ஃபேஸ் கவர் அல்லது மாஸ்க்கை அணியும்போது மூக்கு மற்றும் வாய் நன்கு மூடி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியில் சென்று திரும்பும் போது கைகள் மற்றும் கால்களை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள்."

                   என்னும் கொரோனா காலர் டோன் டயலாக்கை கடந்த ஒரு ஆண்டாக கேட்டுக்கேட்டு நம் உள்ளங்கள் எல்லாம் அலுத்து போய் விட்டதுசிலர் வாழ்க்கையை வெறுத்தும் விட்டார்கள். இது கடந்த ஒரு ஆண்டு முழுவதும் நம்முடைய உலகின் நிலையாக இருக்கின்றதுஇதற்கு இன்று உலகமே தடுப்பூசியை பரிசோதித்து கொண்டிருக்கின்றது, அதற்காக காத்து கொண்டிருக்கின்றதுஅதற்கு எண்ணற்ற விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கின்றதுஇன்று உலகின் நிலையை மாற்ற ஒரு தடுப்பூசி தேவைப்படுவதை போலநமது வாழ்வின் நிலையை மாற்ற ஒரு கழுவுதல் அல்லது திருமுழுக்கு தேவைப்படுகின்றதுஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய திருமுழுக்கு பெருவிழாவை கொண்டாடுகின்ற இந்நாளிலே  இயேசுவின் திருமுழுக்கின் உண்மையான வெளிப்படுத்துதலை நாம் நமது வாழ்க்கையில் உணர்ந்து கொள்ளவும், நமது    திருமுழுக்கின் மதிப்பீடுகளை அறிந்து கொள்ளவும்,   நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும்   திருமுழுக்கு தரும் வெளிப்பாட்டை வாழ்ந்து காட்டவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.

1. இயேசுவின் திருமுழுக்கு

இயேசுவின் திருமுழுக்கு நமக்கு மூன்று விதமான வெளிப்படுத்துதலை உணர்த்துகின்றது.

A. பணி வாழ்வின் தொடக்கம்

                                             "
என் கடன் பணி செய்து கிடப்பதே"

                               என்னும் தமிழ்ப் புலவர்  திருநாவுக்கரசரின் கூற்றுக்கு ஏற்ப"தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டாற்றுவதற்கே வந்தேன்" என்னும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை வாழ்வாக்க, ஊற்றாக அமைந்தது தான் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இந்த திருமுழுக்கு. முப்பது ஆண்டுகள் தன்னுடைய பிரசன்னத்தால் நற்செய்தியை அறிவித்தவர், அடுத்த மூன்று ஆண்டுகள் ஆற்றும் மகத்தான வரலாற்று நினைவுக்கு தொடங்கியிருக்கும் பணிக்கு அச்சாணி தான் இந்த திருமுழுக்குஅவரின் இந்த மகத்தான பணியை போல எவரும் இம்மண்ணுலகில் செய்ததும் இல்லை, ஏன்? இவ்வாறு செய்ய போவதும் இல்லை என்று கூறலாம். அதற்காக தம்மை கடுமையாக தயாரித்து அளப்பெரிய இறைபணியாம் மீட்புப்பணியைஇறைமகன் இயேசு கிறிஸ்து செய்தார் என்பதை தான் அவரது இந்த திருமுழுக்கு நினைவுப்படுகின்றது. "ஜெபமின்றி ஜெயம் இல்லை, தூய ஆவியின்றி பணியில் நிறைவில்லை" என்பதை முற்றிலும் உணர்ந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, ஆவியின் துணைப்பெற்று பணி வாழ்வை தொடங்க முற்படுகின்ற ஒரு நினைவுச் சின்னம் தான் அவரது இந்த திருமுழுக்கு.

B. இறை மைந்தன்

                                என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” (மாற்கு 1:11) என இடிமுழக்கம் போன்ற சொல்லானது இயேசுவின் திருமுழுக்கின் போது ஒலிக்கப்படுகின்றது. அவரது மீட்புப் பணியை, பணி வாழ்வை  செய்யத் தூண்டிய திருமுழுக்கு, இயேசு இறை மைந்தன் என்பதையும் எடுத்துரைக்கின்றது. தான் வெறும் மனித சாயலை மட்டும் கொண்டவன் அல்ல, மாறாக இறை சாயலைக் கொண்ட இறை மைந்தன் என்பதை இயேசுவின் திருமுழுக்கு நமக்கு எடுத்துரைக்கின்றது.

C.  தாழ்ச்சி

                        பாவம் இல்லா வெண்புறாவான கிறிஸ்து என்னும் மலர் மாலை   சூடியவராய், ஆயிரம் மனிதர்கள் திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெறுகையிலே ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிய மனிதராய், முன்னுரிமையை தேடாமல் வரிசையில் சென்று திருமுழுக்குப் பெற்றுக் கொள்கின்றார். "தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" என்னும் வார்த்தைகள் இங்கு இயேசுவுக்கே உரியதாகும்திருவருட்சாதனமே இங்கு திருமுழுக்கு என்ற திருவருட் சாதனத்தை பெறுவதைப் பார்க்கின்றோம். தூய ஆவி நம்மில் செயல்படத் தொடங்கி விட்டால் நம்முடைய சொல், செயல், வாழ்வு, நடை, உடை மற்றும் பாவனை எல்லாம் தாழ்ச்சியையும், எளிமையையும் எடுத்து காட்டுகிறதுஇறைவனின் மகனே இறங்கி வந்து, சாதாரண மனிதனைப் போல திருமுழுக்கு பெறுவது அவரது தாழ்ச்சியை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

2. நமது திருமுழுக்கு

                   இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய இந்த திருமுழுக்கு மனிதர்களாகிய நம்முடைய திருமுழுக்கை நினைவுபடுத்துகின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய திருமுழுக்கு பெருவிழாவை நாம் கொண்டாடுகின்ற இந்த வேளையிலேநாம் ஒவ்வொருவரும் நமது திருமுழுக்கை  நினைவு கூற  அழைப்பு  பெறுகின்றோம். நம்முடைய திருமுழுக்கை பற்றி நாம் நினைவு கூறுகின்ற போது நம்முடைய திருமுழுக்கு உணர்த்துகின்ற உண்மைகளை, நாம் நம்மிலே மீண்டுமாய் புதுப்பித்துக் கொள்ள அழைப்பு பெறுகின்றோம். நமது திருமுழுக்கு நம்மிடையே ஐந்து விதமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

A. பாவம் போக்குதல்

                   ஜென்ம பாவ நிலையிலிருந்து மீண்டு மாசற்ற நிலையில் வாழ உதவுவது இந்த திருமுழுக்கு என்ற திருவருட்சாதனம். "பாவ நிலையிலே என் தாய் என்னை கருத்தரித்தாள்" என்ற திருப்பாடல் ஆசிரியரின் கூற்றுக்கு ஏற்ப, பாவ நிலையில் பிறந்த நாம் திருமுழுக்கு வழியில் புதுப் பிறப்பு எடுக்கிறோம்.

B. 
கிறிஸ்துவோடு இணைதல்

                     தாயையும் செய்ய இணைப்பது தொப்புள்கொடி உறவு போல, திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்களாக, அவரோடு நாம் இணைக்கப்படுகின்றோம். கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவர்களாக கிறிஸ்தவ வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றோம். இன்று நாம் கிறிஸ்தவராக மாறுகிறோம், தூய ஆவியின் வழியில் கிறிஸ்துவோடு இணைக்கப்படுகின்றது, இணைந்து அவர்களது அன்பின் வழி வாழ இறைவன் கொடுத்த அருட்கொடை தான் இந்த  திருவருட்சாதனம். திருமுழுக்கில் புதிய கிறிஸ்தவராக வாழ, இறைவனில் வளர மற்றும் இறை மதிப்பீட்டில் வாழ நம்மிடையே அழைப்பு விடுக்கப்படுகிறது .

C.  கடவுளின் பிள்ளைகள்

                     அன்று, கிறிஸ்து திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெறும்போது, இறைவன் வானத்திலிருந்து இடிமுழக்கம் போன்ற பெரும் ஒலி எழுப்பி 'இவரே என் அன்பார்ந்த மகன்' என்ற சான்று பகர்ந்தார். அன்று, கிறிஸ்து இயேசுவை பெற்ற அந்த அப்பா - மகன்  உறவை, இன்று நாமும் நமது திருமுழுக்கின் வழியாக பெறுகின்றோம். கடவுளின் பிள்ளை என்னும் முத்திரையை நாம் பெறும் பாக்கியம் பெறுகின்றோம். திருமுழுக்கின் வழியாக கடவுளே நம்மைத் தேடி வந்து நம்மை பிள்ளைகளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்றார்.

D. 
திருச்சபையின் உறுப்பினராகுதல்

           
அகில உலக திருச்சபையின்  உறுப்பினராக நாமெல்லோரும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் திருநாள் எதுவென்றால் அது நம்முடைய திருமுழுக்கு என்னும் திருநாளாகும். குடும்பத்தில் உறுப்பினராக்க தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட நாம், பெரிய திருஅவையின் உறுப்பினராக வாழ தேர்ந்தெடுத்துக் கொள்ளப்படுகின்றோம். திருஅவையின் உறுப்பினர் என்ற முறையில் பல கடமைகளை செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம். திருஅவையின் திருத்தந்தைக்காக ஜெபித்தல், கட்டளைகளைப் பின்பற்றுதல், நற்செய்தியை அறிவித்தல் மற்றும் திருப்பலியில் பங்கெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்ய அழைப்பு விடுக்கின்றது இந்த திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனம். எனவே திருஅவையோடு  இணைந்து, திருஅவையின் உறுப்பினராக அதன் வழிகாட்டுதலில் வாழ்வோம்.
 
E.  திருவருட்சாதனங்களின்  நுழைவுவாயில்

                 இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஏழு புனிதத் திருவருட்சாதனங்களில் முதன்மையானதும் தலைச்சிறந்ததுமாய் கருதப்படுவது இந்த திருமுழுக்கு என்னும் முதன்மையான திருவருட்சாதனம். இதுதான் மற்ற எல்லாத் திருவருட்சாதனங்களுக்கு நுழைவு வாயிலாக அமைகின்றது. திருமுழுக்கின் வழியில் நாம் கிறிஸ்துவில் இணைந்து விடுகிறோம். இணைப்பின் வழியாக திருவருட்சாதனங்கள் பெற நாம் உரிமையையும் பெற்றுக் கொள்ளுகின்றோம். உரிமை வாழ்வை பெற திருவருட்சாதனம் மிகப்பெரிய பலமாக திகழ்கின்றது.

                     கிறிஸ்துவினுடைய திருமுழுக்கு பெருவிழாவை கொண்டாடுகின்ற இந்த நாளிலே, நாம் நம்முடைய திருமுழுக்கை நினைவுகூர்ந்து திருமுழுக்கு நமக்கு எடுத்துரைக்கின்ற இந்த மேலான வெளிப்பாடுகளை நம்  வாழ்க்கையில் உணர்ந்து வாழ்வோம்.

3. நம் அன்றாட வாழ்வில் திருமுழுக்கு

                      இயேசுவினுடைய திருமுழுக்கு பெருவிழா நம்முடைய திருமுழுக்கை மட்டும் நினைவுபடுத்தாது, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கொண்டிருக்கின்ற பல சூழ்நிலைகளில் திருமுழுக்குப் பெற நமக்கு அழைப்பு பெறுகின்றோம். திருமுழுக்கு என்பது ஒரு  கழுவுதல், இன்றைய கொரோனா சூழ்நிலைக்கு தடுப்பூசி எப்படி ஒரு கழுவுதலாக தேவைப்படுகிறதோ, அதேப் போல நம் வாழ்க்கையின் பல நிலைகளில்  கழுவுதல்/திருமுழுக்கு நமக்கு தேவைப்படுகின்றது. மீள முடியாமல் துவண்டு கிடக்கும் பாவத்திலிருந்து விடுதலை பெற திருமுழுக்கு நமக்குத் தேவைஇன்று என்னுடைய நோய்களுக்கெல்லாம் ஒரு கழுவுதல்/ திருமுழுக்கு தேவை. எனது மன பிரச்சனைகளுக்கு ஒரு கழுவுதல்/ திருமுழுக்கு தேவைஎன் வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் நான் செய்கின்ற ஒவ்வொரு தவறுக்கும் ஒரு கழுவுதல்/திருமுழுக்கு தேவை. நான் மனம் நொந்து என்னுடைய வாழ்க்கையில் பிறரை இகழ்கின்ற பொழுது எனக்கு கழுவுதல்/திருமுழுக்குத் தேவை. நான் குற்ற உணர்வோடு இருக்கின்ற பொழுது எனக்கு கழுவுதல் தேவை. நான் பிறரை இகழ்ந்து பேசுகின்ற பொழுது எனக்கு கழுவுதல் தேவை.    பிறரை கஷ்டப்படுத்துகின்ற பொழுது, வேதனைபடுத்துகின்ற பொழுதுகோபப்படுகின்ற பொழுது, என்னில் தேவையில்லாத குணநலன்கள் வளருகின்ற பொழுது, என்னால் பிறர் கஷ்டப்படுகிற பொழுது என்னிடையே கழுவுதல் தேவை. ஆக திருமுழுக்கு என்பது வெறும் ஒரு சடங்கு அல்ல, குழந்தையாக ஒரு குறிப்பிட்ட ஒரு நாளில் நடக்கின்ற நிகழ்வு அல்ல, மாறாக நான் தவறு செய்கின்ற போதுவாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் நான் கிறிஸ்துவை விட்டு விலகி வருகின்ற பொழுதெல்லாம், நான் மீண்டும் கிறிஸ்துவோடு இணைப்பதற்கு, எனக்கு திருமுழுக்கு/கழுவுதல் தேவை. நான் கிறிஸ்துவில் வாழ, கிறிஸ்தவனாக வாழ, வாழ்வின் எல்லா நிலைகளிலும் இந்த திருமுழுக்கு அடித்தளமாக இருக்கின்றதுஇறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

                                                                     

 

 

 

 

 

 

 

                                                                Fr. குழந்தை யேசு ராஜன் CMF

                                                             கும்பகோணம்.  

 

Saturday, January 2, 2021

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவரின் திருக்காட்சி திருவிழா- (ஆண்டு- B)- 03-01-2021- ஞாயிற்றுக்கிழமை

  விவிலிய விதைகள்

ஆண்டவரின் திருக்காட்சி திருவிழா

(ஆண்டு- B)

03-01-2021

ஞாயிற்றுக்கிழமை


இறைவன் காட்டும் வாழ்வின் கருவிகள்



 1960-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்த கார் ஷோ ரூமில் ஒரு நோட்டீஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த ஷோ ரூமில் யார் அதிகமான காரை விற்பனை செய்கிறார்களோ, அவர்களுடைய பெயர் அந்த நோட்டீஸ் போர்டில் இடம் பெறும். இதற்காக பலரும் பல முயற்சிகளை எடுக்கின்றார்கள். அங்கு பணியாற்றிய ஜோ ஜெரால்டு என்பவர் எப்படியாவது அந்த நோட்டீஸ் போர்டில் தன்னுடைய பெயர் இடம் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றார். ஆனால் அதற்காக பல முயற்சிகள் எடுத்தும் ஒரு வாரம் கூட அவருடைய பெயர் அதில் இடம் பெறவில்லை.  ஒரு முறை அவர் அந்த கார் ஷோ ரூமின் முதலாளியிடம் சென்று அதற்கான வழிவகைகளை கேட்கின்றார். அவர் நீ அதிகமான காரை விற்பனை செய், உன்னுடைய பெயரும் இந்த நோட்டீஸ் போர்டில் இடம் பெறும், அதற்கு நீ உன்னுடைய தனித்திறமையை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றார். உடனே அவர் யோசிக்கின்றார்,  குழப்பமடைகின்றார்,  குழப்பமுற்று அருகே உள்ள ஒரு காபி ஷாப்பில் சென்று உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். எந்த வகையான  காபி  அவருக்கு தேவை என்பதை,  குழப்பத்திலிருந்த அவரிடம் கேட்க தயங்கிய அங்கிருந்த பணியாளன், அவரே காபியை எடுத்து வந்து கொடுக்கின்றார். இந்த கலவை காபி தான் எனக்கு பிடிக்கும் என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கின்றார். உடனே அந்த பணியாளன், ஐயா! தாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருக்கிறீர்கள், ஒவ்வொரு முறையும் நான் தான் உங்களுக்கு காபி கொடுக்கிறேன்.  முகமலர்ச்சியோடு எனக்கு நன்றி  சொல்வீர்கள், அதுமட்டுமல்லாது கிறிஸ்துமஸ்க்கு எனக்கு வாழ்த்து அட்டையை நன்றி சொல்லி அனுப்பி இருந்தீர்கள். அதனால் நீங்கள் எதை குடிப்பீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும் என்கின்றார்.  ஜோ ஜெரால்டுக்கு  இப்போது ஒரு உண்மை புரிகின்றது, தனது தனித்திறமையை உணர்கின்றார், உடனே யார் யாருக்கெல்லாம் காரை விற்பனை செய்கின்றாரோ, அவரைப் பற்றிய ஒரு குறிப்பையும் மற்றும் விலாசத்தையும்  டைரியில் எழுதுகின்றார்.  அவர்கள் கார் வாங்கிய ஒரே மாதத்தில் அவர்களுக்கு வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்புகின்ற பழக்கத்தை உருவாக்குகின்றார். அந்த பழக்கத்தின் வாயிலாக அவருக்கு எண்ணற்ற  நண்பர்கள் கிடைக்கின்றார்கள், அது மட்டுமல்லாது ஒவ்வொரு கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் ஈஸ்டர் விழாக்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றார்.  அவருடைய பயனாளர்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு, தெரிந்தவர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கார் வாங்க இவரையே தொடர்பு கொள்கின்றார்கள். இதன் பலனாக இவருக்கு நிறைய காரை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. அது ஷோ ரூமிலிருந்த நோட்டீஸ் போர்டில் மட்டுமல்ல கின்னஸ் புத்தகத்திலும், ஒரே ஆண்டில் அதிக காரை விற்பனை செய்த விற்பனையாளர் என்ற பெயரும் அவருக்கு கிடைக்கின்றது.

  அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஜோ ஜெரால்டுக்கு  வாழ்த்து அட்டை என்னும் ஒரு கருவி கிடைத்தது. அது அவருடைய இலக்கை அடைய,  வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழிவகை செய்தது, அது அவருடைய பெயரை நோட்டீஸ் போர்டில் மட்டுமல்லாது,  கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெயரச் செய்தது.  இன்றைய நாளிலே நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா  நம்முடைய வாழ்க்கைக்கு இறைவன் கொடுக்கின்ற மாபெரும் கருவிகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசுவை தேடி வந்த மூன்று ஞானிகளுக்கு விண்மீன் அவரை தேட, கண்டு கொள்ள மாபெரும் கருவியாக அமைந்தது, இயேசுவை அவர்கள் வணங்கியதையும், மதித்ததையும் அவர்கள் கொடுத்த காணிக்கைகள் என்னும் கருவிகள் எடுத்துரைக்கின்றது. மீண்டும் ஏரோதிடம் செல்லாது நாடு திரும்ப  கனவு  என்னும் கருவிகள் ‌பயன்பட்டது. நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா விண்மீன், காணிக்கைகள்  மற்றும் கனவு என்னும் மூன்று கருவிகளை சுட்டிக்காட்டுகின்றது. அவர்கள் தங்களுடைய இலக்கான இறைமகன் இயேசு கிறிஸ்துவைக் கண்டுகொள்ள அது அவர்களுக்கு உதவியது. இன்று  பிறந்து இருக்கின்ற இயேசு எண்ணற்ற கருவிகளை நம்முடைய வாழ்க்கைக்கு தருகின்றார். ஞானிகள் கிடைத்த கருவிகளை சரியான விதத்தில் பயன்படுத்தினார்கள்,  நாம் நம்முடைய வாழ்வின் கருவிகளை  சரியான விதத்தில் பயன்படுத்துகிறோமா என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. விண்மீன் என்னும் கருவி

“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்”. (மத்தேயு 2:2) என்னும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில்  ஞானிகளுக்கு விண்மீன் மாபெரும் கருவியாக இருப்பதை நாம் பார்க்கின்றோம். இந்த விண்மீன் தான் அவர்களுக்கு எங்கோ ஒரு அரசர் பிறந்திருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகின்றது,  அவர்களுக்கு வெளிச்சமாக மாறியது, அவர்கள் அரசராக,  தெய்வக் குழந்தையாக இறைமகன் இயேசு கிறிஸ்துவை காண்பதற்கு வழியாக இருக்கின்றது. ஆக ஒரு விண்மீன் அவர்களுக்கு தங்களுடைய வாழ்வில் ஒரு இலக்கை உருவாகியிருக்கின்றது. அரசர் பிறந்திருக்கின்றார், அவரை காண வேண்டும் என்று அந்த விண்மீனே  அவர்களுக்கு வெளிச்சமாகவும், வழியாகவும் மற்றும் மாபெரும் கருவியாக இருந்திருக்கின்றது.

2. காணிக்கைகள் என்னும் கருவி 

 ஞானிகளுக்கு கிடைத்த இரண்டாவது கருவியை அவர்கள் கொண்டு வந்த பேழைகளில் இருந்த காணிக்கைப் பொருட்களான பொன், தூபம் மற்றும் வெள்ளைப்போளம் எனும்  காணிக்கைகள். அவர்கள் பிறந்திருக்கின்ற இயேசுவை ஒரு தெய்வமாக, அரசராக மற்றும் குணமளிப்பவராக கண்டுகொண்டார்கள் என்பதன் அடையாளமாக கருதப்படுகிறது. அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளை தங்கள் மனதில் எழுந்த எண்ணங்களை வெளிப்படுத்த கருவியாக பயன்படுத்தினார்கள்.

"வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்".(மத்தேயு 2:11)  என்னும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறைவார்த்தையும் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றது.

3. கனவு எனும் கருவி

"ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்."

(மத்தேயு 2:12)  என்னும் நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி நலமோடு தங்களுடைய நாடு செல்வதற்கு தங்களுடைய இலக்கை முழுமையாக நிறைவு செய்வதற்கு கனவுகள் கருவியாக ஞானிகளுக்கு பயன்பட்டது.

4. நம் வாழ்வின் கருவிகள்

"உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்". (எபேசியர் 3:2) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தின்  அடித்தளத்தில், பல வேளைகளில் நாம் நம்முடைய வாழ்க்கையில் இறைவன் கொடுத்திருக்கின்ற கருவிகளை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  நம்முடைய வாழ்க்கையிலே இறைவன் நம்முடைய குணங்கள், திறமைகள், ஆற்றல்கள் என்னும் கருவிகளை கொடுத்திருக்கிறார். இவை நம்மை செம்மைப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் நம்முடைய இலக்கை அடைய வழிவகை செய்யும் வாய்ப்புகளாக இருக்கின்றது. பெரியவர்களின், அறிவுரைகளும், ஆலோசனைகளும், திருஅவையில் நமக்குக் கொடுத்திருக்கின்ற திருவருட்சாதனங்களும், பக்தி முயற்சிகளும் குறிப்பாக நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் நாம் பங்கேற்கின்ற திருப்பலியும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிரசன்னமாகி இருக்கின்ற நற்ருணையும்  இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்ற கருவிகள். இந்தக் கருவிகள் யாவற்றையும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே  உணர்ந்து வாழ்கின்றோமா? சிந்திப்போம். இது தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா நமக்கு கொடுக்கின்ற அழைப்பாக இருக்கின்றது.

"இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!" (எசாயா 60:2) என்னும் இன்றைய முதல் வாசகத்தின் இறைவார்த்தை அடித்தளத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்துவே நமக்கு ஒளி என்னும் கருவி, மண்ணுலகில் மானிடராகப்  பிறந்திருக்கின்ற இயேசு பாலனே  இறைவன் நம்முடைய வாழ்க்கைக்கு கொடுத்திருக்கின்ற மாபெரும் கருவி. எனவே இறைமகன் இயேசு கிறிஸ்துவும், அவர் நமக்குக் கொடுக்கின்ற வாழ்வின் கருவிகளையும் நாம் நம்முடைய வாழ்க்கையிலே உணர்வோம்.  வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்