இயேசுவின் விண்ணேற்ற பெருவிழா ( ஆண்டு- A)
24-05-2020
ஞாயிற்றுக்கிழமை
இயேசுவின் விண்ணேற்றமும் நமது சாட்சிய வாழ்வும்
விண்ணிலிருந்து மண்ணகத்தை நோக்கிக் பொழியும் மழையானது ஒர் இலக்கோடு வருகிறது. வாடி, வறண்டு ஏங்கியிருக்கும் இம்மண்ணுலகத்திற்கும், மண்ணுலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் நீரளித்து வாழ்வு கொடுத்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீண்டும் நீராவியாய் விண்ணேற்றம் அடைகிறது. ஆனால், மண்ணில் பொழிந்த இந்த மழை செய்த மாற்றம் தொடர்ந்து பல மாற்றங்களை மண்ணுலகத்தில் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. விதை முளைத்து, செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து கனி கொடுக்கிறது. இதைத்தான் மீட்பின் வரலாற்றிலும் வெளிப்படுவதை நாம் பார்க்கின்றோம். பாவம் எனும் வறட்சியில் மூழ்கிக் கிடந்த மானுட குலத்திற்கு மழையாய் வந்து தன் உயிரைத் தந்து புது வாழ்வு கொடுத்தவர் இறைமகன் இயேசு கிறிஸ்து. இவர் உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவினை இன்று நாம் கொண் டாடுகின்றோம்.
இந்த மீட்பர் விண்ணேற்றம் அடைந்தாலும், இவர் ஏற்படுத்திய மாற்றம் கிறிஸ்தவமாக இன்றும் துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றும் இந்த கிறிஸ்து ஏற்படுத்திய கிறிஸ்தவம் துளிர் விட்டு வளர, நாம் அவர் சாட்சிகளாய் வாழ, இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவும், இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நமக்கு அழைப்பு தருகிறது.
" நற்செய்தியை அறிவியுங்கள், திருமுழுக்குக் கொடுங்கள், மக்களினத்தாரையும் சீடராக்குங்கள், நான் உங்களோடு இருக்கிறேன்" எனும் விண்ணேற்றத்திற்கு முன் இயேசு கூறிய இந்த வார்த்தைகள் நம்மை சாட்சிய வாழ்வு வாழ அழைக்கிறது. ஆக, இயேசுவின் விண்ணேற்றம் நம்மை சாட்சிய வாழ்வுக்கு அழைக்கின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் இத்தகைய சாட்சிய வாழ்வுக்கு அழைப்பு பெறுகின்றோம். அதுவே விண்ணேற்றம் அடைந்த இயேசு கொடுக்கும் செய்தியாகவே இருக்கிறது.
1. சாட்சிய வாழ்வு என்பது சீடத்துவ வாழ்வு.
சாட்சிய வாழ்வு வாழ நாம் சீடத்துவ வாழ்வு வாழவேண்டும். பண்டைய குருகுல கல்வி முறையில் சீடர்கள் குருக்களோடு தங்கி கல்வி பயின்றனர். அவர்கள் குருக்களோடு உடனிருந்து, அவர்களுக்குச் செவிகொடுத்து, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கல்வியை பயின்றனர். இதிலிருந்து மூன்று விதமான பண்புகள் வெளிப்படுகிறது.
A. உடனிருத்தல்
B. செவி கொடுத்தல்
C. நிறைவேற்றுதல்
இதைத்தான் இயேசுவின் சீடர்கள் அவரோடு உடனிருந்து, அவருக்கு செவிகொடுத்து, அவர் சொல்வதை நிறைவேற்றி வாழ்ந்து வந்தார்கள். இது வெறும் அவருடைய இறப்புக்கு முன்பு மட்டுமல்ல, மாறாக அவருடைய உயிர்ப்பு, விண்ணேற்றத்திற்குப் பிறகும் உண்மை சீடர்களாக, அவருக்கு சாட்சிய வாழ்வு வாழ்ந்தார்கள். அவர்கள் இயேசுவினுடைய இறை பிரசன்னத்தில் உடனிருந்ததையும், அவருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுத்ததையும், உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவித்தது, அவர்களுடைய சீடத்துவ வாழ்வை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த இயேசு விட்டுச்சென்ற அவருடைய இறை பிரசன்னத்தில் உடனிருந்து, அவருடைய இறை வார்த்தைக்குச் செவிகொடுத்து, அதன்படி வாழுகின்ற பொழுது நம்முடைய வாழ்வு சீடத்துவ வாழ்வாக மாறுகிறது. நம்முடைய வாழ்வு சீடத்துவ வாழ்வாக மாறும் பொழுது அது சாட்சிய வாழ்வாக மாறுகின்றது. இதுதான் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு கொடுக்கின்ற அழைப்பாக இருக்கின்றது.
2. சாட்சிய வாழ்வு என்பது அர்ப்பண வாழ்வு.
சாட்சிய வாழ்வு வாழ, நாம் அர்ப்பண வாழ்வை வாழவேண்டும். பொதுவாக அர்ப்பண வாழ்வு என்பது மூன்று பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றது.
A. தியாகம்
B. அன்பு
C. சேவை
தியாகம், அன்பு, சேவையின்றி நாம் அர்ப்பண வாழ்வு வாழ இயலாது. இதைத்தான் இறைமகன் இயேசு கிறிஸ்து “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்”( மத்தேயு 19:21) என தியாக வாழ்வு வாழவும், ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.அவர், ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’(மத்தேயு 22:39,37) என அன்பு வாழ்வு வாழவும், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’(மத்தேயு 25:40) என பிறருக்கு சேவை வாழ்வு வாழவும் அழைப்பு தருகிறார்.
இதுதான் அன்னை மரியாவின் அனுபவமாக இருக்கின்றது "இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்" (லூக்கா: 1:38 ) என அன்னை மரியாள் தன்னை முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணித்ததை நாம் பார்க்கின்றோம். இந்த அர்ப்பணிப்பில் அன்னையின் தியாகமும், அன்பும், சேவை மனப்பான்மையும் இருப்பதை நாம் பார்க்க முடிகின்றது. அன்னையை போல விண்ணேற்றம் அடைந்த இயேசுவின் அழைப்பை நாம் ஏற்று வாழ அழைக்கப்படுகின்றோம். அன்னை மரியாள், இயேசுவின் திருத்தூதர்கள், சீடர்கள் மற்றும் திருஅவையின் புனிதர்கள் இத்தகைய ஒரு சாட்சிய வாழ்வு வாழ்ந்தார்கள் என்றால் அவர்களின் தியாகமும், அன்பும், சேவை மனப்பான்மையும் காரணமாக இருக்கின்றது.
நாம் ஒவ்வொருவரும் சாட்சிய வாழ்வு வாழ நமக்கு தியாகம், அன்பு, சேவையுணர்வு எனும் பண்புகள் தேவை. சீடர்கள் தங்களுடைய வாழ்வில் இத்தகைய ஒரு சாட்சிய வாழ்வு வாழ இயேசுவின் உயிர்ப்புக்கு முன்பும், பின்பும், தங்களையே முழுவதுமாக அர்ப்பணித்தார்கள். அதனால் தான் இன்று திருஅவை மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய சாட்சிய வாழ்வு வாழ, இந்தத் தியாகம், அன்பு, சேவை என்னும் பண்புகளோடு வாழ, வளர நம்மை முழுவதுமாக இறைவனில் அர்ப்பணிக்க வேண்டும். இதைத்தான் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு தருகின்ற அழைப்பாக இருக்கிறது.
3.சாட்சிய வாழ்வு என்பது கிறிஸ்துவில் வாழ்வு.
நமது வாழ்க்கையின் மையமாகவும் அடித்தளமாகவும் கிறிஸ்து இருக்க வேண்டும். அப்பொழுது என்னுடைய இந்த கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்துவில் உண்டான வாழ்வாக இருக்கும். கிறிஸ்துவில், கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுடன் என்னுடைய வாழ்வு அமைகின்ற போது, நாம் வாழ்கின்ற வாழ்வு சாட்சிய வாழ்வாக அமையும். "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்." (பிலிப்பியர் 3:8) என்று கிறிஸ்துவில் என்னுடைய வாழ்வு இருக்கின்றது என்பதை அப்போஸ்தலரான பவுல் அடிகளார் காட்டியதை போல, நாமும் கிறிஸ்துவில் நம் வாழ்வு இருக்கின்றது என்பதை வாழ்ந்து காட்டுகின்ற பொழுது நம்முடைய வாழ்வானது சாட்சிய வாழ்வாக இருக்கும். அதுதான் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு கொடுக்கின்ற அழைப்பாகும்.
"ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்". (1 கொரிந்தியர் 3:23) என கிறிஸ்துவுக்கு உரியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வை கிறிஸ்துவோடு இணைக்க வேண்டும் என்றால், நம்முடைய வாழ்வு அவருடைய இந்த அழைப்புக்கு ஏற்றவாறு சாட்சிய வாழ்வாக மாற வேண்டும். நம்முடைய வாழ்வானது பாவ நிலையிலிருந்து, கஷ்டத்திலிருந்து, பாரத்திலிருந்து, துன்பத்திலிருந்து இந்த மண்ணுலகில் இருந்து மேலோங்கி, இயேசுவின் விண்ணேற்றத்தை போல விண்ணுலகம் செல்ல வேண்டும் என்றால் நான் கிறிஸ்துவோடு என்னுடைய வாழ்வை இணைத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வை தான் சாட்சிய வாழ்வு என்கின்றோம். இயேசு தருகின்ற சாட்சிய வாழ்வு என்னும் அழைப்பையேற்று திருஅவை நமக்குத் தருகின்ற திருவருட் சாதனங்கள் வழியாக திருவழிபாட்டின் பக்தி முயற்சிகளின் வழியாக நாம் கிறிஸ்துவோடு, நம்மை இணைத்து இந்த சாட்சிய வாழ்வு வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.