பாஸ்கா காலம் 6 -ஆம் ஞாயிறு ( ஆண்டு- A)
17-05-2020
ஞாயிற்றுக்கிழமை
துணையாளர் தூய ஆவியாரோடு (தூய ஆவியாரில்) வாழ்வோம் .
மனிதர்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் பிறரை சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களுடைய துணை நாம் இந்த உலகில் வாழ்வதற்கு அவசியமாக தேவைப்படுகின்றது. இந்த உலகில் நாம் ஒருவர் மற்றவரை சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பிறர் துணை நமக்கு தேவை, அதனால்தான் வாழ்க்கையின் எல்லா நிலையிலும், நாம் யாரையாவது சார்ந்து அவர் துணையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அது நம்முடைய பெற்றோர்களாக இருக்கலாம், கணவன் மனைவியாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், நம்முடைய முதலாளியாக இருக்கலாம் அல்லது
சொந்தபந்தங்களாக கூட இருக்கலாம். இவ்வாறாக யாரையாவது நாம் சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொருவரும், வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பிறரை சார்ந்தே அவர்களின் துணையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இன்று மனிதன், மனிதனுடைய துணையோடு மட்டுமல்லாது இறைவனுடைய துணையோடு வாழ ஆசைப்படுகிறான். இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இறைவனுடைய துணை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இந்த நாளிலே, இறைவன் நமக்குத் தருகின்ற துணையாளராம் தூய ஆவியின் துணையோடு, தூய ஆவியாரில் வாழ இன்றைய இறைவார்த்தை பகுதி நமக்கு அழைப்பு தருகிறது.
இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னுடைய உயிர்ப்புக்கு பிறகு தன்னுடைய சீடர்களுக்கு காட்சி அளித்தபோது தன்னுடைய வார்த்தைகளின் வழியாக அவர்களுக்கு ஏழு செய்திகளை தருகிறார்.
1.அமைதி
2. தூய ஆவி
3.ஆறுதல்
4. அன்பு
5.மனமாற்றம்
6. நம்பிக்கை
7. சீடத்துவம்
இயேசு கொடுத்த இந்த ஏழு செய்திகளில் தூய ஆவி என்னும் செய்தி இன்றைய நற்செய்தியில் வெளிப்படுத்தப்படுகிறது. தூய ஆவி என்னும் துணையாளர் நம்முடைய வாழ்க்கையில் துணையாக, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு துணையாக வருவார் என்பதை இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்கு கூறுகின்றார். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, பணிவாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு என அனைத்திலும் தூய ஆவியின் பிரசன்னம் மற்றும் துணை இருப்பதை நாம் பார்க்கின்றோம்.
1. தூய ஆவி: இயேசுவின் மண்ணுலக வாழ்வு என்னும் படைப்பு.
இறைமகன் இயேசு கிறிஸ்து இம் மண்ணுலகத்தில் மனித அவதாரம் எடுப்பதற்கு அடித்தளமாக, அடிப்படையாக இருந்தது தூய ஆவி தான். வானதூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை கூறியபோது, "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே" என்று அன்னை மரியா வானதூதரிடம் வினவியபோது, "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்". (லூக்கா 1:35) ஆக இயேசுவின் மண்ணுலக வாழ்வு என்னும் படைப்புக்கு தூய ஆவியே காரணமாய் இருக்கின்றார்.
2. தூய ஆவி: இயேசுவின் பணி வாழ்வு என்னும் உருவாக்கத்தின் அடித்தளம்.
தூய ஆவி இயேசுவின் பணி வாழ்வின் உருவாக்கமாக இருப்பதை நாம் பார்க்கின்றோம். அதனால் தான் இயேசு திருமுழுக்கு பெற்ற பொழுது தூய ஆவியார் புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கி, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒலித்ததையும் நாம் பார்க்கின்றோம். இயேசு தனது பணி வாழ்வை துவங்குவதற்கு, அந்த பணி வாழ்வின் உருவாக்கத்திற்கு தூய ஆவியே அடித்தளமாக இருக்கின்றார் என்பதை இது நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. (லூக்கா 3 :21- 22)
3. இயேசுவின் பணி வாழ்வில் தூய ஆவியின் பிரசன்னம்.
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பணி வாழ்வு முழுவதும் தூய ஆவியின் பிரசன்னம் இருப்பதை நாம் பார்க்கின்றோம். அதனால் தான் இயேசு சோதிக்கப்பட்டபோது பாலை நிலத்திற்கு தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார் (லூக்கா 4:1). இயேசு பணி வாழ்வின் தொடக்கத்தில் தொழுகைக் கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சுருளோடு எடுத்து வாசித்த போதும், "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்" என்று கூறுவதை நாம் பார்க்கின்றோம். (லூக்கா 4:18) தூய ஆவியின் பிரசன்னம் இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய பணிவாழ்வு முழுவதிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். அதனால்தான் ஒவ்வொரு முறையும் அவர் தூய ஆவியின் துணையோடு நோயாளிகளை குணப்படுத்தியதை நாம் பார்க்கின்றோம். அதனால்தான் "கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளே பேசுகிறார். கடவுள் அவருக்கு ஆவிக்குரிய கொடைகளை அளவின்றி கொடுக்கின்றார்". என காண்கின்றோம். (யோவான் 3 :34 ) கடவுள் ஆவிக்குரிய கொடைகளை அவருக்கு வழங்கி இருக்கின்றார், அந்த ஆவியின் பிரசன்னம் அவரது வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருக்கின்றது.
4. இயேசுவின் இறப்பில் தூய ஆவியின் பிரசன்னம்.
இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு மட்டுமல்லாது அவரது இறப்பிலும் தூய ஆவியின் பிரசன்னம் இருப்பதைப் பார்க்கின்றோம். இதைத்தான் எபிரேயர் 9 :14-ல் "ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில், என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே" என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆக இது தூய ஆவியினாலே, அவர் தன்னை முழுமையாக சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். அதனால்தான் இறைமகன் இயேசு கிறிஸ்து சிலுவையில் தன் உயிரை ஒப்படைக்கும் பொழுது "தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று கூறுகின்றார். (லூக்கா 23 : ;46) இயேசுவினுடைய சிலுவை சாவிலும் தூய ஆவியின் பிரசன்னத்தை நாம் இவ்வாறாக பார்க்கின்றோம்.
5. இயேசுவின் உயிர்ப்பில் தூய ஆவியின் பிரசன்னம்.
"மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்." (உரோமையர் 8:11) " மனித இயல்போடு இருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்". (1 பேதுரு 3:18) எனும் இந்த இறை வார்த்தைகள் இயேசுவினுடைய உயிர்ப்பு ஆவியின் அருளால் ஏற்பட்டது என்பதை நமக்கு காட்டுகின்றது. ஆக இயேசுவின் உயிர்ப்பு தூய ஆவியின் துணையோடு நடந்திருக்கிறது.
இயேசுவினுடைய பிறப்பு முதல் இறப்பு, உயிர்ப்பு வரை தூய ஆவியாருடைய துணையும் பிரசன்னமும் நிறைந்திருக்கின்றது. இன்றைய நற்செய்தி தூய ஆவியாரின் நான்கு பண்புகளை எடுத்துரைக்கிறது.
1. தந்தை அருளும் துணையாளர். (14:16b)
2. உண்மையை வெளிப்படுத்தும் துணையாளர். (14:17a)
3.நம்மோடு தங்கியிருக்கும் துணையாளர். (14:17c)
4. நம்முள் இருக்கும் துணையாளர். (14:17c)
இன்றைய நற்செய்தி தூய ஆவியானவர் தந்தை அருளுகின்ற துணையாளர் என்றும், தூய ஆவியானவர் எப்பொழுதுமே உண்மையை வெளிப்படுத்துகின்றவர் என்றும், அவர் நம்மோடு தங்கியிருக்கின்றவர் என்றும், அவர் நம்முள், தூய ஆவியாரின் ஆலயமாக நாம் இருப்பதற்கு அடிப்படையாக இருக்கின்றார் என்றும் துணையாளரின் நான்கு பண்புகளாக நமக்கு சுட்டிக் காட்டி, இந்த துணையாளரோடு வாழ அழைப்பு தருகின்றார்.
இந்த துணையாளர் எனும் தூய ஆவியை நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்பொழுதும் பெற்றுக்கொள்ள, நாம் இறை வேண்டலில் முழுமையாக ஈடுபட வேண்டும். இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் பார்க்கின்றோம், பேதுருவும், யோவானும் அப்போஸ்தலர்களால் சமாரியர் இந்தத் தூய ஆவியை பெறுவதற்காக அனுப்பப்பட்டு, தங்களுடைய இறை வேண்டலின் வழியாக சமாரியருக்கு இந்த துணையாளராம் ஆவியானவரை அவர்கள் பெற்று தருவதை பார்க்கின்றோம். நாமும் நம்முடைய வாழ்க்கையில் இந்த துணையாளராம், தூய ஆவியானவரை பெற்றுக்கொள்ள இறை வேண்டலில் நம்மை முழுவதுமாக உட்படுத்த வேண்டும்.
கலாத்தியர் 5:22,23-ல் "ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தூய ஆவியின் கனிகள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ, மற்ற மதங்களில் இருந்தாலும் சரி, இந்தத் தூய ஆவியின் கனிகள் எங்கெங்கெல்லாம் வெளிப்படுகின்றதோ, அங்கெல்லாம் தூய ஆவியானவர் இருக்கின்றார் என்பதை இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் நமக்கு குறிப்பிடுகின்றது. எங்கெங்கெல்லாம் நன்மை நடக்கின்றதோ, நல்லது பயக்கின்றனதோ, அங்கெல்லாம் தூய ஆவியானவர் இருக்கின்றார். ஆக இந்த உலகமே தூய ஆவியானவர் சூழ்ந்து இருக்கின்றார். நாம் ஒவ்வொருவருமே தூய ஆவியின் ஆலயங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். திருஅவையின் திருவருட்சாதனங்களின் வழியாய், தூய ஆவியானவரை நாம் பெற்று வாழ்கின்றோம். ஆனால் பல நேரங்களில் இதை நாம் உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். துணையாளர் எனும் தூய ஆவியானவர் நம்முள் இருக்கின்றார், நம்மோடு இருக்கின்றார், நம்மை சுற்றிலும் ஆக இருக்கின்றார் என்பதை உணர்ந்து வாழ திருத்தூதர்கள் போல இறை வேண்டலில் நிலைத்திருப்போம். துணையாளராம் தூய ஆவியோடு நம் வாழ்க்கை பயணத்தை தொடர்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.
|
||