மே மாதம் - 10ஆம் தேதி.
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் ஞாயிற்றுக்கிழமை
நற்செய்தி: யோவான் 14: 1-12
நம்பிக்கை என்னும் நங்கூரம். (நம்பிக்கையற்ற இரு நபரும்/ இரு பேச்சுகளும்)
Six hours one Friday அதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் ஆறு மணிநேரம் என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியவர் மேக்ஸ் லுகாதோ. இவர் இந்த புத்தகத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தான் கடலில், படகில் பயணித்த போது, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து இருக்கின்றார். தான் தனியாக படகில் பயணித்த போது, திடீரென்று பெரும் புயல் காற்று வீசி பெரும் அலைகள் வந்துவிட்டன. அப்பொழுது ஒரு நிமிடம் என்ன செய்வது என்று அறியாது இருந்தவர், திடீரென்று சற்றே யோசித்து, படகில் இருந்த நான்கு நங்கூரங்களை எடுத்து, படகை ஒரு ஆழமான பகுதிக்கு எடுத்துச் சென்று, நாற்புறமும் நான்கு நங்கூரங்களை இட்டு, தன்னுயிரையும் படகையும் காத்து இருக்கின்றார். இவர் இறுதியாக இந்த புத்தகத்தில் குறிப்பிடுவது நம்முடைய வாழ்க்கையிலும் கஷ்டம், துன்பம், எனும் பெரும் காற்றும், பேரலையும் வரும் பொழுதெல்லாம் நம்மிடையே நம்பிக்கை என்னும் நங்கூரம் தேவைப்படுகின்றது என்று கூறுகின்றார். இன்றைய நற்செய்தியின் வழியாக நமது கிறிஸ்தவ வாழ்வில் இறை நம்பிக்கை என்னும் நங்கூரம் கொண்டவர்களாக நாம் வாழ அழைக்கப்படுகிறோம்.
நற்செய்தியில் நம்பிக்கையற்ற இரு நபர்களையும், இரு பேச்சுகளையும் நாம் காண்கின்றோம்.
ஒன்று தோமா, "ஆண்டவரே நீர் எங்கு போகிறீர் என்று எங்களுக்கு தெரியாது" யோவான் 14 :5 என தோமா நம்பிக்கையற்ற நபராக, நம்பிக்கையற்ற பேச்சை பேசுவதைப் பார்க்கின்றோம். அதற்கு இறைவன் "வழியும் உண்மையும் வாழ்வும் நானே" என நம்பிக்கை தரும் நங்கூரத்தை கொடுப்பதைப் பார்க்கிறோம்.
இரண்டாவதாக பிலிப்பு, "ஆண்டவரே தந்தையை எங்களுக்குக் காட்டும்" யோவான் 14: 11 -2 என பிலிப்பு நம்பிக்கையற்ற இரண்டாவது நபராக, அவருடைய பேச்சை பார்க்கின்றோம். அதற்கு இயேசு "நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கின்றார்" என்ற நம்பிக்கை நங்கூரத்தை கொடுப்பதை பார்க்கின்றோம்.
தொடக்கநூல் 12-ல் ஆபிரகாம் இறைவன் அழைத்தவுடன் சென்றார். தொடக்கநூல் 22-ல் தன்னுடைய ஒரே மகனை பலியிட கேட்டவுடன் செல்கின்றார். இது ஆபிரகாமின் நம்பிக்கையை குறிக்கின்றது. லூக்கா 1:38 -ல் அன்னை மரியாள் "இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்" என்று குறிப்பிடுகின்றார். இது அன்னை மரியாளின் நம்பிக்கை. பிலிப்பியர் 3 :8 'கிறிஸ்துவே என் ஒப்பற்ற செல்வம், கிறிஸ்துவை ஆதாயமாக அனைத்தையும் குப்பையென கருதுகிறேன்" என்கிறார். இது பவுலடிகளாரின் நம்பிக்கை.
நாமும் பல வேளைகளில், தோமா மற்றும் பிலிப்பு போல நம்பிக்கையற்ற மனிதர்களாக, நம்பிக்கையற்ற பேச்சுகளை பேசிக் கொண்டிருக்கின்றோம். எப்படி இருக்கீங்க? என்று யாராவது கேட்கின்ற பொழுது, ஏதோ இருக்கின்றோம் என்ற பதிலை கூறுகிறோம். பிள்ளைங்க என்ன செய்யறாங்க? சும்மா தான் இருக்கிறார்கள். பிள்ளைகள் எப்படி இருக்காங்க? சும்மா தருதலையா சுத்திகிட்டு இருக்காங்க. விவசாயம் எப்படி போகுது? சும்மா ஒண்ணுமே இல்ல. கோவிலுக்கு போகலையா? போய் என்னத்தை சாதிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையற்ற பேச்சுகள் தான் இன்று நம்முடைய வாழ்க்கையாக மாறிக் கொண்டிருக்கின்றது. நம்பிக்கையற்ற பேச்சுகளால் தான் நம்பிக்கையற்ற மனிதர்களாக இருக்கிறோம்.
நம்பிக்கையற்ற மனிதர்களாக இருக்கின்ற பொழுது தான் கஷ்டம், துன்பம், கவலை என்னும் பேரலைகளும், புயல் காற்றும் நம்முடைய வாழ்க்கையை தாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இறை நம்பிக்கை என்னும் நங்கூரத்தை நாம் நம்முடைய வாழ்க்கையில் இடுகின்ற போது நம்முடைய வாழ்வு இறையருள் நிறைந்த வாழ்வாக மாறும். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.