Tuesday, June 23, 2020

Daily Tamil Homily - தினசரி தமிழ் மறையுரைகள் - மே மாதம் - 9ஆம் தேதி. பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் நற்செய்தி: யோவான் 14: 7-14

மே மாதம் - 9ஆம் தேதி.

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம்

நற்செய்தி: யோவான் 14: 7-14

 

இறை உறவென்னும் ஒளி ஏற்றுவோம் (மூன்றுவகை கோடுகளும்/ உறவுகளும்)

 

துறவி ஒருவரை பார்வையற்ற மனிதர் பார்க்கச் செல்கிறார். பேசி முடித்து வீடு திரும்பும்  போது மாலையாகி இருள் சூழ்கிறது. துறவி அவரிடம் விளக்கு ஒன்றை கொடுக்க, அவரோ நானோ பார்வையற்றவன் எதற்கு இந்த விளக்கு என வினவுகிறார். துறவியோ விளக்கு உனக்கு அல்ல, உன் எதிரில்  வருவோர்க்கு எனக் கூறுகிறார். விளக்கோடு பார்வையற்ற மனிதர் நடக்கின்றார், எதிரே வந்த  மனிதர் அவர்  மேல் மோத, பார்வையற்றவரோ,   எனக்குதான் பார்வை தெரியவில்லை. உனக்குமா  தெரியவில்லை என் கையில்தான் விளக்கு இருக்கிறதே என கேட்க, எதிரில் வந்தவர் உன் கையில் விளக்கு இருக்கிறது ஆனால் அது அணைந்து இருக்கிறது. அது ஒளியை பிரகாசிக்கவில்லை என்று கூறினார். அன்பார்ந்தவர்களே கிறிஸ்தவர்களாகிய நாமும் கிறிஸ்தவம் என்னும் விளக்கை எடுத்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது ஒளிர்வதில்லை அதில் கிறிஸ்து என்னும் ஒளி பிரகாசிப்பதில்லை. ஏனென்றால் நமக்கும் கிறிஸ்துவுக்கும் உண்டான உறவு இருளடைந்து கிடைக்கின்றது. இதை ஒளி கொண்டு ஏற்ற இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.

 

இன்றைய நற்செய்தியில் யோவான் 14 :7 "நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருக்கிறீர்கள்" எனவும், யோவான் 14: 11 "நான் தந்தையுள்ளும்  தந்தை என்னுள்ளும் இருக்கிறார்" எனவும், யோவான் 14: 13 "தந்தை மகன்  வழியாய் மாட்சி பெறுவார்" எனவும் சுட்டிக் காட்டி தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் அடித்தளத்தில் நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை வளர்க்க நாம் அழைக்கப்படுகின்றோம். பொதுவாக நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை மூன்று வகை கோடுகளுக்கு ஒப்பிடுவார்கள்

 

முதல்வகை -தண்ணீரிலே வரையப்பட்ட கோடு:

வரைந்தவுடன் மறைந்துவிடும். நகம், முடி, வெட்டுவது போல உண்டான உறவு. தண்ணீரில் வரையப்பட்ட கோட்டை போல நம்மில் சிலருக்கு திருமுழுக்கு பெற்றவுடன்   நமக்கும்   இறைவனுக்கும்   உண்டான உறவு மறைந்துவிடுகிறது. நாம் திருவருட்சாதனங்கள் பெற்றவுடன் நமக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள உறவு மறைந்து விடுகின்றது.

 

 இரண்டாவது வகை- மணலில் வரையப்பட்ட கோடு:

                இத்தகைய உறவு சில நேரம் இருக்கும், மழை வந்தால் மறைந்துவிடும், காற்றடித்தால் மறைந்துவிடும். கை, கால் இவையெல்லாம் நமக்கு நீரிழிவு நோயின் பொருட்டு வெட்டி எடுப்பது போல உண்டான உறவு. மணலிலே வரையப்பட்ட கோட்டை போல உள்ள உறவு நாம் கேட்பது கிடைக்கலன்னா முறிந்துவிடும் போன்ற உறவு

 

மூன்றாவது வகை-  பாறையில் செதுக்கப்பட்ட கோடு:

 இத்தகைய உறவு  இடி, மழை வந்தாலும் அழியவே அழியாத ஒரு உறவு . இது இதயத்திற்கும் உடலுக்கு உண்டான உறவைப் போல உள்ள உறவு.  தந்தைக்கும் மகனுக்கு இடையேயான ஒரு உறவு.

 

இன்று நம்முடைய உறவு எப்படி இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். எனக்கும் இறைவனுக்கும் உண்டான உறவு வெறும் தண்ணீரில் வரையப்பட்ட கோட்டை போல, மணலிலே வரையப்பட்ட கோட்டை போல, இருக்கின்றதா அல்லது பாறையில் செதுக்கப்பட்ட கோட்டை போல இருக்கின்றதா சிந்தித்துப் பார்ப்போம்.

 

 

 

 

 

யோவான் 14: 14 "என் பெயரால் எதை கேட்டாலும் தருவேன்" என்னும்   இறை வசனத்திற்கு ஏற்ப அவருடைய பெயரால் நாம் அவரில்  இறை உறவோடு வாழ இறையருள் வேண்டி மன்றாடுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.