மே மாதம் - 6ஆம் தேதி.
பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம்
நற்செய்தி: யோவான் 12: 44-50
நம்பிக்கை, தேடல் எனும் வாழ்வின் தண்டவாளங்கள்.
நிலவு விண்ணைத் தேடுகிறது,
நீர் நிலத்தை தேடுகிறது,
வண்டு மலரை தேடுகிறது,
கன்று பசுவைத் தேடுகிறது,
நான் உன்னை தேடுகிறேன்,
நீ என்னை தேடுகிறாய்,
என உயிர்களுக்கெல்லாம் தேடல் வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது. வாழ்வின் ஒவ்வொரு நிலையும் தேடலில் தொடங்கி தேடலில் நிறைவு பெறுகிறது.
குழந்தையாய் இருக்கும்போது தாயை தேடுகிறோம்.
சிறுவர்களாக இருக்கும்போது நண்பர்களை தேடுகிறோம்.
மாணவர்களாக இருக்கும் போது காதலை தேடுகிறோம்.
இளைஞர்களாக இருக்கும்போது வாழ்க்கைத் துணையைத் தேடுகிறோம்.
பின் குடும்பம், குழந்தை, வேலை, சொத்து, உறவு, சுகம் என வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், தேடல் நம் வாழ்வாகவே மாறிவிட்டது. எந்த நிலையிலும், எதை தேடினாலும், எல்லா நிலையிலும் இறைவனை தேட , நமது நம்பிக்கையால் அவரைத் தேட, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு தருகிறது.
நம் வாழ்வில் கஷ்டம், துன்பம், பிணி, நோய், கவலை, பிரச்சினைகள், சவால்கள் என்னும் இருள் மறைய வேண்டுமென்றால் ஒளியாம் இறைவனை நாம் தேட வேண்டும். நமது தேடல், நம்பிக்கை என்னும் பாதையில் பயணிக்க வேண்டும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் 12: 46 "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்" என இயேசு கூறுகின்றார். நம்பிக்கையில் இறைவனைத் தேடி செல்லுகின்ற நமது வாழ்வு, இருளிலிருந்து ஒளிக்கு செல்லும் கிறிஸ்து என்னும் ஒளிக்கு செல்லும்.
நமது வாழ்க்கை பயணம் ரயில் பாதை போன்றது. தேடலும், நம்பிக்கையும் ரயில் பாதையின் இரு தண்டவாளங்கள். வாழ்வின் பயணம் தேடலோடு மட்டும் இருந்தால், அங்கு இலக்கு இருக்கும். அதை அடையும் வழி பாதியில் நின்ற கட்டிடம் போல் ஆகிவிடும். ஏனென்றால் அங்கு நம்பிக்கை இல்லை. வாழ்வின் பயணம் நம்பிக்கை என்னும் ஒற்றை தண்டவாளத்தோடு நின்றுவிட்டால் பயணத்தில் தெளிவு இருக்கும், ஆனால் அங்கு இலக்கு இருக்காது. ஆக நம் வாழ்வின் பயணம் ரயில் பாதையை போல நம்பிக்கையோடு கூடிய தேடலாக தண்டவாளப் பாதையாக அமையும் போது அங்கு நாம் கிறிஸ்து என்னும் ஒளியை பெற்றுக்கொள்வோம்.
இறைமகன் இயேசு கிறிஸ்து குழந்தையாக இருந்த பொழுது ஞானிகளும் அவரை தேடினார்கள். ஏரோதும் அவரை தேடினான். ஞானிகள் தேடியது அவரை ஆராதிக்க, அரசர் எனும் ஒளியில் திளைக்க. ஏரோது தேடியது அவரை கொல்ல. இயேசுவை பரிசேயர்கள், சதுசேயர்கள், மற்றும் மறைநூல் அறிஞர்கள் தேடினார்கள். நோயாளிகளும் தேடினார்கள். பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தேடியது அவரை சூழ்ச்சியில் சிக்க வைக்க, அவரை பழிவாங்க, அவரை கொலை செய்ய. நோயாளிகள் தேடியது இருள் என்னும் அவர்களுடைய நோயிலிருந்து ஒளி என்னும் விடுதலையை பெற்றுக் கொள்ள, இவர்கள் நம்பிக்கையில் தேடினார்கள்.
லூக்கா 5:12 தொழுநோயாளி ஒருவர் "ஆண்டவரே நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்கின்றார்.
லூக்கா 7:7 நூற்றுவர் தலைவர் தன் பணியாளருக்காக "நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும்" என்கின்றார்.
மத்தேயு 9 :21 12 ஆண்டுகளாக இரத்தப் போக்குடைய ஒரு பெண் "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும் நலம் பெறுவேன்" என்கிறார்.
மாற்கு 9:46 பார்வையற்ற பார்த்திமேயு "தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்கின்றார்.
இவர்கள் அனைவரும் இயேசுவை தேடினார்கள், நம்பிக்கையில் தேடினார்கள். நோய் என்னும் இருளில் இருந்து ஒளியாம் கிறிஸ்துவை பெற்றுக்கொள்ள தேடினார்கள். நாமும் இந்த ஒளியாம் கிறிஸ்துவை பெற்றுக்கொள்ள நம்முடைய தேடல் நம்பிக்கை நிறைந்த தேடலாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை பயணம் நம்பிக்கை, தேடல் என்னும் ரயில் தண்டவாளங்களில் பயணிக்கவேண்டும். அப்போது நாம் கிறிஸ்து என்னும் ஒளியை பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF கும்பகோணம். |