மே மாதம் - 4ஆம் தேதி.
பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம்
நற்செய்தி: யோவான் 10: 11-18
இயேசு: பாதுகாக்கும் நல்லாயன்
(மூன்று வகை பாதுகாப்பு)
பண்டைய ஐரோப்பியர்களின் நம்பிக்கையில் கொண்ட ஒரு பறவைதான் பெலிக்கான் பறவை. இது தன் குஞ்சுகளுக்கு உணவு பற்றாத போது தன் உடலை கொத்தி, தன் இரத்தத்தையே உணவாகக் கொடுக்கும். தன் உயிரைத் தந்து தன் குஞ்சுகளின் உயிரை காப்பாற்றுவது இதன் சிறப்பு. கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, இந்தப் பறவையைப் போல தன் உயிரைத் தந்து தன் ஆடுகளை காப்பாற்றுபவனே சிறந்த நல்லாயன். ஆடுகளான நம்மை பாதுகாக்கும் ஆயனாக இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்பதை உணர்ததுகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
யோவான் 10 :11 "நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பார்". தன் உயிரைத் தந்து நம்மை பாதுகாக்கும் நல்ல ஆயனாக இறைவன் இருக்கின்றார். பாதுகாத்தலில் மூன்று வகை உண்டு.
1. இருப்பதிலிருந்து கொடுத்து பாதுகாப்பது:
பஞ்சம், பேரிடர் காலத்தில் யார் வேண்டுமானாலும் மக்களுக்கு தங்களிடம் இருப்பதை கொடுத்து அவர்களை பாதுகாப்பது.
2. இருப்பதையெல்லாம் கொடுத்து பாதுகாப்பது:
கொடிய நோய், ஆபத்து விபத்து காலங்களில் தங்களிடம் இருப்பது அனைத்தையும் விற்று அவருடைய உயிரைக் காப்பாற்றுவது. பொதுவாக குடும்ப உறுப்பினர் இத்தகைய ஒரு பாதுகாப்பை தருவார்கள்.
3. இருப்பதையெல்லாம் கொடுத்து தன்னுயிரையும் கொடுத்து பாதுகாப்பது:
இத்தகைய ஒரு பாதுகாப்பை நல்ல ஆயனாக இயேசு நமக்கு தருகின்றார்.
பழைய ஏற்பாட்டில் பார்க்கின்ற பொழுது எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து, பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து அசீரிய அடிமைத்தனத்திலிருந்து, இஸ்ராயேல் மக்களை பாதுகாத்த இறைவனாக இருக்கின்றார். அதனால் தான் திருப்பாடல் 80:1-ல் இறைவனை இஸ்ராயேலின் ஆயர் என திருப்பாடல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். புதிய ஏற்பாட்டில் தன்னுடைய ஒரே மகன் வழியாக இறைவன் நம் ஒவ்வொருவரையும் பாதுகாக்கின்றார். யோவான் 3: 16 "தன் ஒரே மகனை இந்த உலகிற்கு கையளிக்கும் அளவுக்கு இந்த உலகின் மீது அன்பு கூர்ந்தார்" இங்கு அன்பு கூர்ந்தார் என்பது பாதுகாத்தார் என்பது பொருள். 2 சாமுவேல் 22: 2&3 நம்முடைய இறைவன் நம்மை பாதுகாப்பதாக இருக்கின்றார் என்பதற்கு அடையாளமாக, இறைவன் நமது கற்பாறை, கோட்டை, நாம் தேடும் புகலிடம், கேடயம், அரண், தஞ்சம், அவரே நம்மை பாதுகாக்கும் நல்ல ஆயன் என உருவப்படுத்தப்பட்டுள்ளது. இறைவன் நம்மை பாதுகாக்கும் நல்ல ஆயனாக இருக்கின்றார். இந்த நல்ல ஆயனிடம் நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்போம். அவரது பாதுகாவலில் வாழ்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்.