🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(23 ஜூலை 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 12: 13, 16-19
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8: 26-27
நற்செய்தி: மத்தேயு 13: 24-43
பொறாமையா? பொறுமையா?
கங்கை நதிக்கரையில் துறவி ஒருவர் கடினமான தவத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடைய தவத்திற்கு பெரிய நோக்கங்கள் எதுவுமில்லை. மாறாக, தமக்குப் பயன்படாத இந்த உடல், பிராணிகளுக்காவது பயன்படட்டுமே என்ற எண்ணம்தான். அவரைச் சுற்றிலும் கழுகுகளும், பல உயிரினங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. சற்று தொலைவில் உள்ள நகரத்தின் அரசன், தன் ராணிகளுடன், ஆற்றுக்கு அருகிலிருந்த மலர்ச்சோலைக்குச் சுற்றுலா வந்து இருந்தான். அப்போது, அரசன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டிருந்தான். அரசனின் ராணிகள் மலர்ச் சோலையின் அழகை பார்த்துவிட்டு அருகில் துறவி தவத்தில் இருப்பதைக் கண்டனர். அவரை நெருங்கிப் பார்த்தபோது, அவருடைய முகப்பொலிவு, ராணிகளுக்கு மரியாதை உணர்வை ஊட்டியது. அதனால் அவர்கள் துறவியைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். ராணிகளைக் காணாமையால் தேடி வந்த அரசன். துறவியைச் சுற்றி, அவருடைய முகப் பொலிவைப் பார்த்து தங்களை மறந்தபடி இருந்த ராணிகளை கண்டு, துறவி மீது பொறாமை கொண்டு கோபத்தில் தன் வாளைக் கொண்டு துறவியின் அங்கங்களைச் சிதைத்தான். அந்தச் சமயத்தில் அங்கே ஒரு இறையுருவம் ஒன்று தோன்றியது. “துறவியே! உத்தரவிடு உன் அங்கங்களைத் துண்டித்த அந்தக் கொடுமைக்கார அரசனைக் கொன்று விடுகிறேன்.” என்றது. துறவி அதற்குச் பொறுமையோடு, “உன் கருணைக்கு நன்றி! அரசன் எனக்கு கெடுதல் செய்யவில்லை. என் அங்கங்களை அவன் வெட்டியதால், சுற்றிவட்டமிடும் பிராணிகளுக்குப் பேருதவி செய்திருக்கிறான். ஆகையால் அவனை ஒன்றும் செய்யாதே” என்று கனிவுடன் சொன்னார். இதைப் புரிந்த அரசன் மனம் வருந்தி மனம் மாறினான். பொறாமை ஒருபோதும் ஜெயிப்பதில்லை, பொறுமை ஒருபோதும் தோற்ப்பதில்லை. நம்முடைய வாழ்விலும் பொறாமை நம்மையும் பிறரையும் அழித்துவிடும். அதே வேளையில் பொறாமைக்கு பொறுமையை கடைபிடிக்கின்ற போது அது வாழ்வு கொடுக்கும் எனும் ஆழமான சிந்தனையை முன் வைக்கிறது பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிற்றுக்கிழமையின் இறைவார்த்தை வழிபாடு.
பொறாமை:-
நற்செய்தியில் நல்ல நிலத்தில் விதைகள் விதைக்கப்பட்டு, பயிர்கள் செழிப்புடன் வளர்வதை கண்டு பொறாமை கொண்ட தீயோர் வயலில் களைகளை விதைக்கின்றனர். இன்றைக்கு நாம் வயலில் களைகளை வீசிய பகைவரா? எத்தகைய உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? அடுத்தவர் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்கிறோமா? சிந்திப்போம். விவிலியத்தில் ஈசாக்கு செல்வந்தராக, ஏராளமான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் உடைமையாகக் கொண்டிருந்ததை பார்த்தபோது பெலிஸ்தியர்களுக்கு பொறாமை வருகிறது (தொநூ 26: 14). தங்களைவிட தங்களது சகோதரரான யோசேப்பை அவர்களின் தந்தை அதிகமாக நேசித்ததால் யோசேப்பின் சகோதரர்கள் அவர்மீது பொறாமை கொள்கின்றனர் (தொநூ 37:11). தனது சகோதரியான லெயாவுக்கு குழந்தைகள் பிறந்து தனக்கு பிறக்காததால் இராக்கேல் லேயா மீது பொறாமை கொள்கிறாள் (தொநூ 30:1). பொறாமை என்பது தீ போல அது நம்மிடையே இருந்தால், நம் உள்ளத்திலும் உடலிலும் பரவி நம்மையும் பிறரையும் அழிக்கும் எனவேதான் பொறாமை பகைமையின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றது. பிறருடைய செல்வம், புகழ் முதலியன கண்டு மகிழ முடியாத குணம் பொறாமை எனப்பெறும். பொறாமையைத் திருக்குறள் அழுக்காறு என்று கூறுகிறது, அதாவது அழுக்கு நிறைந்த வழி என்கிறது. ஒரு ஆய்வின்போது இரண்டு ஆறு மாதக் குழந்தைகளை ஒரே கட்டிலில் படுக்க வைத்தார்களாம். ஒன்றின் வாயில் ஒரு நிப்பிள் வைக்கப்பட்டது. மற்ற குழந்தை சில நிமிடங்கள் அதையே பார்த்துக்கொண்டிருந்த பிறகு, தன் கையை நீட்டி நிப்பிளைப் பறித்துத் தன் வாயில் வைத்துக்கொண்டதாம். இதுபோல அது ஆறு முறை நிப்பிளைப் பறித்துக் கொண்டேயிருந்ததாம். இதன் மூலம் புரிவது என்ன? பொறாமை சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வரும் ஒரு உணர்வாக இருக்கிறது. ஏன் இது விலங்குகளுக்கு மத்தியில் கூட இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். பொறாமை குணம் உள்ளவர்களுக்கு நிச்சயமாய் தன்னம்பிக்கை இருக்காது. பொறாமை என்னும் கண்ணாடி அணிந்து கொண்டால் உலகில் எல்லாமே நமக்கு வெறுப்பாகவும், நம்மை அனைவரும் ஒதுக்கி விட்டதாக நம்மையே நாம் தாழ்த்திக் கொள்வோம். ஆகையால் பொறாமையைப் புறக்கணித்து, பொறுமையை கைடிபிடிப்போம்.
பொறுமை:-
நிலத்தில் தீயோர் பயிர்களுக்கு மத்தியில் களைகளை விதைத்ததை பணியாளர்கள் நில உரிமையாளரிடம் சொல்லுகின்றனர். அவர்கள் அவசரத்தில் உடனடியாக களைகளை பிடுங்கி எறிய நினைத்தார்கள். நில உரிமையாளரும் பொறுமையுடன் காத்திருக்கிறார். இவர் களைகளை எடுப்பதால் பயிர்களை இழந்து விடக் கூடாது என நினைத்தார். அதாவது தீயோர்களை தண்டிப்பது ஒருபோதும் நல்லோரை பாதித்து விடக்கூடாது என நினைத்தார். எனவே அறுவடை நாளுக்காக பொறுமையோடு காத்திருந்தார். தக்க சமயத்தில் களைகளான தீயோரை தீயிலிட்டு எரித்தார். நாமும் பொறுமையோடு வாழ அழைப்பு பெறுகின்றோம். யோபு பல்வேறு துன்பங்களுக்கும் நோய்க்கும் உட்பட்ட போதும் பொறுமையோடு ஆண்டவருக்காய் வாழ்ந்தார். ஊதாரி மைந்தனுக்காக தந்தை பொறுமையாக காத்திருந்தார். பதறாத காரியம் சிதறாது’ என்பது போல நிதானத்தை உருவாக்கிக்கொள்ளும்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வாழ்க்கையின் சிக்கல்களைக் களையவும் பல வழிகள் பிறக்கும். ஒரு விதை விதைத்தால் அது பலன்தரும் வரையிலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதை விடுத்து உடனே பலன் எதிர்பார்த்து நிதானம் தவறி தோண்டி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால், விதை பலன் தராது. பயனற்று போய்விடும். அம்மா ஒரு மாம்பழம் வாங்கி வைத்திருக்கிறார். அது முழுமையாக பழுக்காமல் சற்று காயாக இருக்கிறது. குழந்தையின் பார்வையில் பட்டுவிடுகிறது. பழுத்து சுவையாக இன்னும் இருநாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால்... அது பழுக்கும்வரை பொறுத்திருக்காத அந்தக் குழந்தை, உடனே சாப்பிடத் தொடங்கினால் புளிக்கத்தான் செய்யும். அதை இனிப்பாக சாப்பிட வேண்டுமென்றால் பொறுமையாகக் காத்திருந்து தான் ஆக வேண்டும். குழந்தைக்கு பொறுமையை நாம் தான் கற்றுத்தர வேண்டும். ‘A man who is a master of Patience is the master of everything else’ என்கிறார் முன்னாள் அமெரிக்க அரசியல் தலைவர் ஜியோர்ஜ் சேவில். நாம் ஜெபிக்கும் போது கூட நம்முடைய வேண்டுதல் உடனே நிறைவேற வேண்டும் என பொறுமையிழந்து வாழ்கின்றோம். எனவே காத்திருப்போம், பொறுமையை தமதாக்கி வாழ்க்கையில் சாதிக்க முயல்வோம்.
இன்றைக்கு நாணயத்தை போல நமது வாழ்வின் பக்கங்களும் இரண்டு. அதாவது இந்த உலகம் நன்மை மற்றும் தீமை என இரண்டையும் தாங்கி நிற்கிறது. கடவுள் முதல் பெற்றோருக்கு தந்த தோட்டத்தில் எல்லா விதமான மரங்களோடு தொடக்கூடாது என்று கொடுத்த மரமும் இருந்தது. அதேபோல இவ்வுலகில் நன்மைகளுக்கு மத்தியில் தீமையும் கலந்திருக்கிறது. இன்றைக்கு நற்செய்தியில் இயேசு கூறிய முதல் உவமையில் நிலத்தில் விதைகளும் வீசப்படுகின்றன மற்றும் களைகளும் வீசப்படுகின்றன. நாம் பொறாமையில் களைகளை வீசிய தீயவர்களாக அல்லாது, அவசரத்தில் களைகளை உடனடியாக எடுக்க விரும்பிய பணியாளர்களாகவும் அல்லாது பொறுமையோடு இருந்த நில உரிமையாளராக வாழ அழைப்பு பெறுகின்றோம். பொறுமை நம்மை வானளவு உயர்த்தும். பிறருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைபடாது பொறுமையோடு வாழுகின்ற போது நல்வாழ்வு அமையும். இன்றைக்கு நாம் கடுகு விதையைப் போல சிறியவர்களாக இருந்தாலும் நம்முடைய பொறுமை பெரிய மரமாக நம் வாழ்வை வளர்த்தெடுக்கும். குறைந்த புளிப்பு மாவு பல மரக்கால்களின் புளிப்பற்ற மாவை மாற்றுவதைப் போல, பொறாமையிலும் பொறுமையோடு வாழுகின்ற பொழுது நமது சிறிய வாழ்வு பெரிய மகிழ்ச்சியை நமக்கும் பிறருக்கும் தரும். பொறுமை கடலினும் பெரிது, பொறுத்தாரே பூமியாள்வார் என்னும் பழமொழிக்கு ஏற்ப பொறுமையாய் செயல்படுகிறவன் ஒருசெயலை நேர்த்தியாய், சரியான நேரத்தில் செய்து முடிப்பான். அதுவே பொறுமையில்லாதவனிடம் இராது. குறித்த நேரத்தில் எதையும் செய்யவும் முடியாது. எனவே கிறிஸ்தவ வாழ்வின் எல்லா தருணங்களிலும் பொறாமை படாது பொறுமையோடு வாழ்வோம், இறையருளை நிறைவாய் பெறுவோம்.
No comments:
Post a Comment