Tuesday, June 27, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 02-07-2023- ஞாயிற்றுக்கிழமை


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(02 ஜூலை  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: 2 அரசர்கள் 4: 8-11, 14-16a
இரண்டாம் வாசகம்: உரோமையர் 6: 3-4, 8-11
நற்செய்தி: மத்தேயு 10: 37-42 

இயேசுவுடையோராக வாழ்வோம் 

        ஒரு முறை சூஃபி ஞானியிடம் ஒருவன், உங்களுடைய வாழ்வின் வழியை உங்களுக்கு காட்டியது யார்? என்று கேட்கிறான். அதற்கு அவரோ ஒரு நாய் என்றார். என்ன நாய் உங்களது வாழ்வின் வழியை காட்டியதா? என்று ஆச்சரியத்தோடு கேட்க அதற்கு அந்த சூஃபி ஞானி, ஒரு நாள் தான் ஆற்றங்கரையில் ஒரு நாயை கண்டதாவும், அந்த நாய் தண்ணீர் தாகத்தோடு இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்ததாகவும் கூறினார். கண்முன் ஆற்றில் தண்ணீர் இருக்க, ஏன் இந்த நாய் இங்கும் அங்குமாக தாகத்தோடு அலைந்து கொண்டிருக்கிறது என்று சற்று அருகே சென்று அவர் பார்த்தாராம். அப்போதுதான் அவருக்குப் புரிந்தது அந்த நாய் தண்ணீரில் தன்னுடைய பிம்பத்தை பார்த்து விட்டு, தன்னை போலவே தண்ணீரில் மற்றொரு நாய் இருப்பதை கண்டு பயந்து தண்ணீர் குடிக்காமல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்ததென்று. ஒரு கட்டத்தில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் தான் இறந்து விடுவோம் என்று உணர்ந்த அந்த நாய், தன்னுடைய பயம் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு ஓடி வந்து தண்ணீரில் குதித்தது. தண்ணீர் குடித்து விட்டு மகிழ்ச்சியோடு சென்றது. இப்போது அந்த சூஃபி ஞானி அந்த மனிதரைப் பார்த்து கூறுகிறார். அந்த நாய்க்கு மிகப்பெரிய தடையாக அதுவே இருந்தது, இதைப் போலத்தான் இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் நாம் வெற்றி கொள்வதற்கு தடையாக இருப்பது நாமும் நம்மைச் சார்ந்தவைகளும்தான் என்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் இறைவனை அடைய, அவரில் சங்கமமாக மற்றும் அவருடையோராக மாற நமக்கு தடையாக இருப்பது நாமும் நம்மைச் சார்ந்தவைகளும்தான் என்கிறார் இயேசு கிறிஸ்து. 

இயேசுவுடையோராக வாழ தடைகள்

        இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இயேசுவுடையோராக வாழ அழைப்பு பெறுகிறோம். இயேசுவுடையோர் என்பது இயேசுவை கொண்ட வாழ்வாகும், அதாவது நமது வாழ்வு அவரை மையப்படுத்தியதாக மற்றும் அவர் பிரசன்னம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதாகும். நாம் பெற்ற திருமுழுக்கு இத்தகைய ஒரு வாழ்வை வாழவும், மற்ற திருவருட்சாதனங்கள் இவ்வாழ்வில் நிலைத்திருக்கவும் நமக்கு வழிகாட்டுகிறது. ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நவநாகரிக சமூக வாழ்வில் கிறிஸ்துவை உடைய ஒரு வாழ்வை வாழ்வதற்கு பல தடைகள் நமக்கு இருக்கின்றன. அவற்றுள் அதிகமான தடைகளுக்கு நாமும் நம்மைச் சார்ந்தவைகளுமே காரணமாக அமைகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு இத்தகைய மூன்று முக்கியமான தடைகளை எடுத்துரைக்கிறார். 

1. உறவுகளோடு வாழ்வு 
2. சிலுவையற்ற வாழ்வு
3. சுயநலமான வாழ்வு 

இத்தடைகளை உடைத்தெறிந்து இயேசுவுடையோராக வாழ அழைப்பு பெறுகின்றோம்.

1. உறவுகளோடு வாழ்வு

        பொதுவாக ஒரு மனிதன் நான்கு வகையான உறவுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவை,

அ. தன்னோடு உறவு
ஆ. பிறரோடு உறவு
இ. இயற்கையோடு உறவு
ஈ. இறைவனோடு உறவு

            இதில் முதல் மூன்று வகையான உறவுகளுக்கு அடித்தளமாக இருப்பது இறைவன். நாம் நம்மோடும், பிறரோடும் மற்றும் இயற்கையோடும் உறவு கொண்டு வாழ அடிப்படையும் அடித்தளமுமாக இருப்பது இறை உறவு. எனவேதான் இயேசு இத்தகைய உறவுகளைக் காட்டிலும் இறை உறவில் இணைந்திருக்க அழைப்பு தருகிறார். ஆனால் பல வேளைகளில் நாம் இறை உறவை காட்டிலும்  நம்மோடு நம்மைச் சார்ந்த உறவுகளோடும் அதிகம் நிலைத்திருக்கின்றோம். அதனால் அவைகள் இறை உறவுக்கு தடையாக அமைந்து விடுகின்றன. எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு, அவரைவிடத் தந்தையிடமோ, தாயிடமோ, மகனிடமோ மற்றும் மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோர் அவருடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர் (மத் 10:37) என்கிறார். அதாவது பிறரோடு உள்ள உறவுகளைக் காட்டிலும் இறை உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் போது இயேசுவுடையோராக வாழலாம். பன்னிரெண்டு வயதில்  இயேசு ஆலயத்தில் அறிஞர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது அவரைத் தேடி வந்த தாய் தந்தையரிடம் நீங்கள் ஏன் என்னை தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? (லூக் 2:49-50) என்று கேட்பதில் அவர் இறை உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெளிவாகிறது.

2. சிலுவையற்ற வாழ்வு

        நாம் வாழும் சமுதாயத்தில் எல்லோரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ ஆசை கொள்கின்றோம், அதனால் வாழ்வின் எத்தகைய சூழ்நிலைகளிலும் துன்பங்களை ஏற்க மறுக்கின்றோம். ஆனால் இயேசு தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர் (மத் 10:38) என்கிறார். இது சிலுவை அன்புக்கு நம்மை அழைத்துச் செல்கிறது, அதாவது துன்ப துயரங்களை, வாழ்வின் சவால்களை ஏற்று வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்வு இயேசுவைக் கொண்டதாக அமையும். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் 12:24) நாம் ஏற்கும் துன்பமும், சவால்களும் மற்றும் வேதனையும் நம் வாழ்வின் சிலுவைகள் அச்சிலுவையை சுமந்தால்தான் இயேசுவை நம் வாழ்வாக்க முடியும். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். (மத் 16:24) என்னும் இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப சிலுவையற்ற வாழ்விலிருந்து சிலுவையோடு வாழ்வு என்னும் நிலைக்கு கடந்து செல்வோம்.

3. சுயநலமான வாழ்வு

        இயேசுவுடையோராக வாழ தன்னலம் என்னும் சுயநலத்தை அகற்றி, பொது நலம் என்னும் பிறர் நலத்தோடு வாழ வேண்டும். அதனால்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தன் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர் என்கிறார். மேலும்,  இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (மத் 10:42) இது இவ்வுலகின் பொருள், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றைவிட இயேசுவை சார்ந்து வாழ அழைப்பு தருகிறது.
எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது என்பதை உணர்ந்து, வாழ்வின் எல்லா நிலைகளிலும் இவ்வுலகின் அழிந்து போகும் பொருட்களை காட்டிலும் நிலைவாழ்வு தரும் இயேசுவே வாழ்வென உணர்வோம்.

        இன்றைக்கு நம்மை அறியாமலே இறைஉறவுக்கு தடையாக இருக்கும் உறவுகளோடு, சிலுவையற்ற மற்றும் சுயநல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவும், மகிழ்வும் மற்றும் பொருளும் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை நிரந்தரமல்ல மாறாக இறைவனை கொண்ட வாழ்வே நிரந்தரம் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். கிறிஸ்துவே வாழ்வின் துவக்கமாகவும், மையமாகவும், முடிவாகவும் மற்றும்  முழுமையாகவும் அமைய இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Friday, June 23, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 25-06-2023- ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(25 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: எரேமியா 20: 10-13
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 12-15
நற்செய்தி: மத்தேயு 10: 26-33

இறை அச்சம்

            மரத்தடியில் முனிவர் ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே நோய் கிருமியொன்று பறந்து சென்று கொண்டிருந்தது. இந்த முனிவர் அதை தடுத்து நிறுத்தி, "நீ யார்? எங்கே செல்கிறாய்?" எனக் கேட்டார். அதற்கு அந்த நோய்க்கிருமியோ, "நான்தான் கொரோனா பக்கத்தூரில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. நான் அங்கு சென்று மக்களை கொல்ல போகிறேன்" என்று கூறியது. அதற்கு அந்த முனிவரோ மக்களை இப்படி கொல்வது பெரும் பாவம் என்றும், அவர்களை கொல்லாமல் இப்படியே திரும்பி சென்று விடு என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு கொரோனாவோ, "இது ஒரு பாவம் என்றால் ஏன் கடவுள் என்னை இந்த மண்ணுலகில் உருவாவதற்கு வழி வகுக்க வேண்டும்?" என்று கேட்டது. முனிவருக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை, அவர்களுடைய உரையாடலின் நிறைவாக வெறும் நூறு பேருக்கு மட்டுமே கொரோனா தந்து சாவடிப்பது என்ற உடன்பாட்டுக்கு வந்தார்கள். சில நாட்களில் கொரோனா நோயால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தார்கள் என்ற செய்தி முனிவருக்கு கிடைத்தது. உடனே முனிவர் கொரோனாவை சந்தித்து, "வெறும் நூறு பேரை மட்டுமே கொல்வதற்கு நாம் பேசியிருந்தோம் ஆனால் இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள்" என்று கேட்டார். கொரோனாவோ, "நான் கொரோனா தந்து சாகடித்தது வெறும் நூறு பேரை மட்டும்தான், மற்றவர்கள் எல்லாம் அந்த பயத்தாலே இறந்தவர்கள்" என்று கூறியதாம். இன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா மனிதர்களிடத்திலும் பயம் இருக்கின்றது. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வாழ்வின் ஏதோ ஒரு சூழ்நிலையில் நம்மை இந்த பயம் ஆட்கொள்கிறது. எல்லா மனிதர்களிடத்திலும் பொதுவான உணர்வாக இருக்கின்ற இந்த பயம் பல வேலைகளில் நம் வாழ்வை தீர்மானிக்கின்ற ஒன்றாக அமைந்து விடுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் பயம் என்னும் அச்சத்தை எப்படி கையாள போகின்றோம்? இந்த அச்சம் நமக்கு தேவையா? எதற்கு நாம் அச்சம் கொள்ள வேண்டும்? என்னும் கேள்விகளுக்கு விடையாக இன்றைய இறைவார்த்தை நம்முன் வைக்கப்படுகின்றது.

அஞ்ச வேண்டாம்:-
          இன்றைய முதல் வாசகத்தில் இறைவனின் செய்தியை கேட்ட ஏரேமியா அதனை அரசனிடம் எடுத்துரைக்கின்றார். அரசனும் அந்த செய்திக்கு செவிமடுப்பதற்கு பதிலாக ஏரேமியாவை தேசத்துரோகி எனக் கூறி துன்புறுத்த ஆரம்பித்தார். அவருடைய நண்பர்கள் கூட அவருக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் இறைவாக்கினர் ஏரேமியா இந்த துன்பங்களை கண்டு ஒருபோதும் அஞ்சாமல் இறைவன் என்னாலும் என்னோடு இருக்கின்றார் என நம்பிக்கையோடு இருந்தார். இன்றைய நற்செய்தியிலும் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அச்சமின்றி உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்ற அழைப்பு தருகிறார். "ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்" (மத் 10:28) அதாவது அழிந்து போகும் மற்றும் உடலை கொல்லும் உலகின் மாயைகளுக்கு அஞ்ச வேண்டாம் என்கிறார். தொடக்க கிறிஸ்தவர்கள் பலவிதமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் ஒரு நாளும் மற்றும் ஒருபோதும் அஞ்சவில்லை. இறைவனுடைய துணையை அவர்கள் எந்நாளும் உணர்ந்தார்கள், அவரில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார்கள். "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத் 28:20) என்ற இயேசுவின் வார்த்தையின் அடித்தளத்தில், நம்மை படைத்து காத்து வழிநடத்தி நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்ட நம் இறைவன் நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சாமல் அவர் மீது நம்பிக்கை கொண்டு வாழ அழைப்பு பெறுகின்றோம்.

அஞ்சுங்கள்:-
          உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்று கூறும் இயேசு ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் என்கின்றார். இது இறை அச்சத்தை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. விவிலியத்தில் யாக்கோபின் பிள்ளைகள் அவர்களுடைய சகோதரனான யோசேப்புக்கு அஞ்சினர். (தொநூ 43:18) மோசே பார்வோனுக்கு அஞ்சி எகிப்திலிருந்து தப்பித்து ஓடினார். (விப 2: 14) சவுலும் இஸ்ராயேலரும் கோலியாத்துக்கு அஞ்சினர். (1சாமு 17:11 ) இவை அனைத்தும் மனிதன் தன் வாழ்வில் உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சுகின்ற நிலையாகும். ஆனால் இத்தகைய நிலை மாறி தூய ஆவியின் கொடைகளில் ஒன்றான இறை அச்சம் என்னும் தெய்வ பயம் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்கிறது இன்றைய நற்செய்தி வாசம். இரண்டு விதமான இறை அச்சம் உண்டு, இது நம்முடைய நோக்கங்கள் மற்றும் வாழ்வின் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.

1. அடிமைத்தனமான பயம் (Survile Fear)
            இது தான் செய்த தவறுக்கு கடவுள் தண்டிப்பார் என்னும் பயம். தண்டனைக்கு பயந்து இறைவனை நோக்கி வரும் இத்தகைய நிலை அடிமைத்தனமான பயம் ஆகும். தான் செய்த தவறுக்கு தன்னுடைய முதலாளியிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் எனக்கு பெரும் தண்டனை கிடைக்கும் அல்லது நான் என்னுடைய வேலையை இழக்க நேரிடும் என்பதற்காக ஒரு தொழிலாளியிடம் ஏற்படுகின்ற பயம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

2. அன்பு உறவுக்கான பயம் (Filial Fear)
        இந்த நிலையில் ஒருவர் செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறார். இது இறைவன் கொடுக்கும் தண்டனைக்கு பயந்து அல்ல மாறாக அவருக்கும் இறைவனுக்குமுள்ள உறவு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆகும். இது ஒரு குழந்தை தான் செய்த தவறுக்கு தன்னுடைய பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கும் நிலையாகும். பெற்றோர் தன்னை தண்டிப்பார் என்பதற்காகவோ அல்லது அவர்களுக்கு அடிமையாக இருப்பதற்காகவோ அல்லாது, மாறாக இந்த குழந்தை பெற்றோரை அன்பு செய்வதாலும் தன்னுடைய பெற்றோரை இழந்து விடாமல் இருப்பதற்காகவும் ஆகும்.

        ஆக திரு அவையிலே நமக்கு கற்பிக்கின்ற இறை அச்சம் இறைவன் நாம் செய்த தவறுக்கு தருகின்ற தண்டனைக்கு பயந்து நாம் கொள்கின்ற அச்சம் அல்ல மாறாக என்னை படைத்த, வழி நடத்திக் கொண்டிருக்கின்ற மற்றும் அன்பு செய்கின்ற இறைவனை நான் ஒருபோதும் மறவாமல் அன்பு செய்வேன் என்னுடைய அன்புக்கு என்னுடைய பாவங்கள் மற்றும் செயல்பாடுகளும் ஒருநாளும் தடையாக இருக்காது என்பதற்காக ஆகும். எனவேதான் இன்றைய நற்செய்தியில் இயேசு உலகைச் சார்ந்தவர்களுக்கும் மற்றும் உலகை சார்ந்தவைகளுக்கும் அஞ்சாது, ஆன்மாவை கொல்ல வல்லவருக்கே அஞ்சுங்கள் என்கின்றார்.

பாவமும் அச்சமும்:-
            பாவம் நம்முடைய ஆன்மாவை கொல்கிறது. பாவம் இறையன்பு மற்றும் இறையுறவிலிருந்து நம்மை பிரிக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகம் மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்து மனிதனை சாவு என்னும் பயத்தில் தள்ளியது என்கிறது எனவே பாவநிலையை விட்டு அகலுவோம். தோபித்து 4:21 -ல் நாம் கடவுளுக்கு அஞ்சிப் பாவம் செய்யாமல் இருந்தால், கடவுள்முன் மிகப்பெரிய செல்வனாக வாழ்வோம் என கூறப்பட்டுள்ளது. மேலும் "ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்" என்கிறது நீமொழிகள் 1:7. பாவம் உண்மையையும் நீதியையும் பின் தள்ளுகிறது. எனவே வாழ்வில் வரும் துன்ப துயரங்களைக் கண்டு பயப்படாது, பாவத்திற்கும் பாவம் செய்வதற்கு மட்டுமே பயப்பட அழைப்பு பெறுகிறோம். இறையச்சம் நேர்மையான மற்றும் மகிழ்ச்சியான இதயத்திலிருந்து புறப்படுகின்றது. எனவேதான் இறையச்சம் இறைப்பற்றையும், இறை உறவையும் அன்பையும் மற்றும் நம்பிக்கையும் நம்மில் வளர்க்கிறது. எனவே இன்றைக்கு நாம் கொள்கின்ற இறை அச்சம் எப்பேற்பட்டதாக இருக்கின்றது? நாம் ஒருபோதும் பாவம் என்னும் குழியில் விழாமல் இருப்பதற்கு இறையச்சம் நமக்கு ஊன்று கோலாக இருக்கின்றது என்பதை நாம் உணர்கின்றோமா? பாவம் என்னை இறையன்பில் இருந்து பிரித்தெடுக்கின்றது என்பதை உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம், இறை அச்சம் என்னும் தெய்வ பயத்தில் வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Friday, June 16, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 18-06-2023- ஞாயிற்றுக்கிழமை

    

 

🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(18 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 19: 2-6a
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 6-11
நற்செய்தி: மத்தேயு 9: 36- 10: 8

அழைப்பின் மேன்மை...

            பட்டம் விட்டுக் கொண்டிருந்த தன் மகளைப் பார்த்து அப்பா, "இந்த நூலின் வேலை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த மகளோ, "இந்த நூல்தான் இந்த பட்டத்தின் சுதந்திரத்தையே தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது" என்று சொன்னாராம். அதற்கு அப்பா, "இல்லை இந்த நூல் தான் பட்டத்தை பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது" என்று சொல்லிவிட்டு ஒரு கத்தரிக்கோல் எடுத்து அந்த நூலை வெட்டி விட்டாராம். இங்கும் அங்குமாக மேலே பறந்த பட்டம், சிறிது நேரத்தில் கீழே விழுந்து விட்டதாம். இறைவனால் அழைக்கப்பட்டு இறைவனோடு இருக்கின்ற போதும் நாம் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருப்பது போலவும், திருப்பலிக்கும், திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கும் செல்ல கட்டாயப்படுத்தப்படுவது போலவும் நமக்கு தெரிந்தாலும், உண்மையாகவே நாம் வாழ்வது இறைவனின் அழைப்பிலும் அவ்வழைப்பு நமக்கு காட்டுகின்ற வழிகாட்டுதலிலும் தான் இருக்கிறது என்பதை உணர வைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இன்று பொதுக்காலத்தின் பதினொன்றாவது ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுகின்றோம். 
இன்றைய நற்செய்தி வாசகம்
                                                                    1. பரிவு கொண்டார்.
                                                                    2. அழைத்தார்
                                                                    3. அதிகாரம் தந்தார்.
                                                                    4. அனுப்பினார்

          என்னும் இயேசுவின் நான்கு செயல்களை சுட்டிக்காட்டுகிறது. அச்செயல்பாடுகள் இயேசு தரும் அழைப்பின் மேன்மைகளை உணர்ந்திட நம்மை அழைக்கின்றது‌.

1. பரிவு கொண்டார் (இயேசு காட்டும் பரிவு)

            வழிகாட்டியில்லாத அதாவது ஆயனில்லாத ஆடுகளைப் போல இருந்த மக்களை பார்த்து இயேசு பரிவு கொள்கிறார். இது ஒர் உள்ளார்ந்த  இறை இரக்கமாகும். திருவிவிலியம் இறைவனை இரக்கம் மிகுந்தவராக அதாவது பரிவு கொள்பவராக சுட்டிக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டில் எகிப்தில் மக்கள் படும் வேதனையை என் கண்களால் கண்டேன் (விப 3:7) என இறைவன் அவர்கள் மீது பரிவு கொண்டு மோசேயை அழைக்கிறார். எகிப்திய விடுதலைக்குப் பிறகும் பாலைவனத்தில் அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்து, செங்கடலை இரண்டாகப் பிரித்து எகிப்திய படைகளிலிருந்து மீட்பது அவர் கொண்ட இரக்கத்தின் அடையாளமாகும். புதிய ஏற்பாட்டிலும் இயேசு பல இடங்களில் மக்கள் மீது பரிவு கொண்டு எண்ணற்ற புதுமைகளையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதை பார்க்கிறோம். லூக்கா 7:13-ல் கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்து பாடையில் தூக்கிக் கொண்டு வந்த போது இயேசு அப்பெண்ணின் மீது பரிவு கொண்டு அழாதே என்று கூறி இறந்தவனை உயிர் பெற செய்கிறார். மாற்கு 1:40-ல் இயேசுவிடம் தொழுநோயாளர் ஒருவர் வந்து நீ விரும்பினால் என் நோயை குணமாக்கும் என்று கேட்க, இயேசு அவர் மீது பரிவு கொண்டு அவரை தொட்டு அவரது தொழுநோயை குணமாக்குவதை பார்க்கின்றோம். மத்தேயு 20:34 -ல் பார்வையற்ற இருவர் இயேசுவை தேடி வந்த போது அவர்கள் மீதும் பரிவு கொண்டு இயேசு பார்வை தருகிறார். இவ்வாறு இயேசு காட்டிய இரக்கத்தை அதாவது பரிவை நாமும்  ஒருவர் மற்றவர் மீது காட்ட அழைப்பு பெறுகின்றோம். நம்மோடு உடனிருக்கின்ற, உறவாடுகின்ற மற்றும் சமுதாயத்தில் நாம் காண்கின்ற ஏழைகள், எளியவர், ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்டோர் என யாவரிடத்திலும் சிறிது கருணை உள்ளத்தோடு பரிவு காட்டி வாழ்வோம். "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்." (மத்தேயு 5:7) என மலைப்பொழிவில் இயேசு எடுத்துரைப்பதற்கு ஏற்ப நாமும் இரக்கமுடையவர்களாக வாழ்வோம். 

2. அழைத்தார் (உடனிருக்க தந்த அழைப்பு)

    இயேசுவின் இரண்டாவது செயலாக சீடர்களை அழைப்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இயேசுவை பலர் பின்பற்றி இருந்தாலும் அவர் பன்னிருவருக்கு மட்டுமே அவரோடு இருக்க மற்றும் அவர் பணி செய்ய அழைப்பு கொடுப்பதை பார்க்கின்றோம். பன்னிரண்டு என்பது இஸ்ராயேல் மக்களின் பன்னிரு குலங்களை குறிக்கலாம். குலத்திற்கு ஒருவராக பன்னிருவரை அழைத்ததாலே வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள் என சீடர்களுக்கு கூறுகிறார். இயேசு அழைத்தது பணக்காரர்களையோ பதவியில் இருப்பவர்களையோ அல்ல, மாறாக சாதாரண மீனவர்களாக மற்றும் வரிதண்டுபவர்களாக இருந்த தகுதியற்ற எளிய மனிதர்களையே அழைத்தார். இயேசு தகுதியற்றவர்களை அழைத்து அவரோடு உடனிருக்க செய்து தகுதியுள்ளவர்களாக மாற்றினார். இயேசு செல்லுமிடமெல்லாம் சீடர்கள் உடன் பயணித்தது பொதுத்தயாரிப்பாக இருந்தாலும், அவரோடு உடனிருந்தது அதாவது அவரோடு தங்கி அவர் சொல்வதை கேட்டது தனித் தயாரிப்பாக அமைகிறது. இங்கு உடனிருப்பு தாயரிப்பின்றி தகுதியற்றவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்றியிருக்கிறது. இறைவன் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். திருமுழுக்கு மற்றும் ஒவ்வொரு திருவருட்சாதனத்தின் வழியாக அழைப்பு கொடுத்த இறைவன் நாம் அவரோடு உடனிருக்க ஆவல் கொள்கிறார். கிறிஸ்தவ வாழ்வே இறைவனோடு உடனிருத்தல் தான், அப்போதுதான் அது முழுமை பெறுகிறது. நமது கிறிஸ்தவ வாழ்வு அவரோடு உடனிருக்கின்ற வாழ்வாக அமைகின்றதா? சிந்திப்போம். திருஅவை காட்டும் இறைவழியில் வாழ இறையழைப்பை ஏற்று அவரில் உடன் வாழ்வோம்.

3. அதிகாரம் தந்தார். (இயேசு தந்த கொடைகள்)

         இயேசு அழைத்த சீடர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார். இங்கு அதிகாரம் என்பது வாழ்வின் நெறிமுறைகளாகும், எனவே தான் எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார். பொதுவாக எந்த ஒரு குருவும் தன்னுடைய சீடர்களுக்கு தன்னிடமிருந்த எல்லா அதிகாரங்களையும் கொடுப்பதில்லை. ஆனால் இறைமகன் இயேசு கிறிஸ்து தான் செய்த எல்லா அற்புதங்களையும் அதாவது நற்செய்தியை பறைசாற்றவும், நோயாளிகளை குணமாக்கவும், பேய்களை ஓட்டவும், தொழுநோயாளிகளை குணமாக்கவும் மற்றும் இறந்தோரை உயிர்ப்பெற்றெழச் செய்யவும் அதிகாரம் தருகிறார். மேலும் கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் என்கின்றார். இயேசுவின் இந்த மூன்றாவது செயல் அவர் நமக்கு கொடுத்திருக்கின்ற கொடைகளைப் பற்றிய தியானிக்க அழைப்பு தருகிறது. இன்றைக்கு கிறிஸ்தவர்களாக நமக்கும் இயேசு பல அதிகாரங்களையும் திறமைகளையும் மற்றும் திறன் கையும் கொடுத்திருக்கிறார். இதை பிறரோடு பகிர்ந்து வாழ்வதற்கு அழைப்பு தருகிறார். நம் திறமைகள் நம்மை மட்டும் வளர்த்தெடுக்காமல் பிறரையும் வளர்ப்பவையாக அமையட்டும். ஒரு தாலந்து பெற்றவர் மண்ணிலே அதை புதைத்து வைத்தது போல நாமும் நம் திறமைகளையும் மற்றும் அன்போடு உறவாட கொடுத்த உறவுகளையும் மண்ணோடு மண்ணாக புதைக்காமல் இருப்போம். இறைவன் கொடுத்த அழகிய வாழ்வை முழுமையாக பயன்படுத்துவோம்.

4. அனுப்பினார் (அனுப்பப்படுவது சான்று பகர...)

         அழைக்கப்படுவது  அனுப்பப்படுவதற்காக... இறைவன் மோசேயை அழைத்தார், எகிப்தில் அவதியுறும் மக்களை மீட்க அனுப்பப்படுவதற்காக...இறைவாக்கினர்களை அழைத்தார் தன் மக்களை வழிநடத்த அனுப்புவதற்காக... ஆக சீடர்களை அழைத்த இயேசு அவர்களை தன் பணியை தொடர்ந்தாற்ற அனுப்புகிறார். கப்பலானது துறைமுகத்தில் இருப்பது பாதுகாப்பானது. ஆனால் அது அதற்காக கட்டப்பட்டது அல்ல மாறாக கடல் அலைகளை எதிர் கொண்டு பல்வேறு நாடுகளுக்கும் பயணிப்பதற்காக. இந்த அழகிய வாழ்வும் அழைப்பும் அவரோடு உடனிருப்பதற்காக மட்டுமல்ல அவர் பணியை தொடர்ந்தாற்றுவதற்கே ஆகும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இவ்வாழ்விற்கு அழைக்கப்பட்டது இயேசுவுக்கு சான்று பகர அனுப்பப்படுவதற்காக. எனவே இயேசுவின் அழைப்பையும் அனுப்பப்படுதலையும் ஏற்று நம் வாழ்வு அவருக்கு சான்று பகரும் வாழ்வாக அமைய முயற்சிப்போம். சீடர்களுக்கு துணையாளராம் தூய ஆவியை தந்து வழிநடத்திய அதே இறைவன் நம்மையும் வழிநடத்துவார் மற்றும் ஆசீர்வதிப்பார்.

Tuesday, June 6, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா - (ஆண்டு- A) - 11-06-2023 - ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
 கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(11 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: இணைச்சட்டம் 8: 2-3, 14b-16a
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 10: 16-17
நற்செய்தி: யோவான் 6: 51-58

நற்கருணை காட்டும் அடையாளங்கள்

            கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவை இன்று கொண்டாடுகிறோம். இந்த விழாவானது திருத்தந்தை 10-ஆம் பத்திநாதரால் 1264-ஆம் ஆண்டு 'டிரான்சித் தூருஸ்' என்னும் திருத்தூதுமடல் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டது. "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”(மத் 28:20) என்னும் இயேசுவின் வார்த்தைகளின் வெளிப்பாடுதான் நற்கருணை. அப்ப இரச குணங்களுக்குள் இயேசுவின் திருஉடலும் திருஇரத்தமும் அவருடைய இறை இயல்பும் மனித இயல்பும் அடங்கியிருக்கிற அருளடையாளமே நற்கருணை ஆகும். இது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக விளங்குகிறது. அப்படியென்றால் திருஅவையின் மையமே நற்கருணைதான். "நற்கருணை நம்பப்பட வேண்டியது; கொண்டாடப்பட வேண்டியது; அனுபவித்து வாழப்பட வேண்டியது" என்கிறார் மறைந்த திருத்தந்தை 16-ஆம் ஆசீர்வாதப்பர். நற்கருணை கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் ஓர் தெய்வீக விருந்து. அன்று இறுதி இராவுணவில் நற்கருணையை ஏற்படுத்தி தன்னுடலை கையளித்த இயேசுஇ இன்றும் ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்காக தன்னுடலை கையளிக்கின்றார். இந்த இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தையும் அடையாளப்படுத்தும் அப்பத்தையும் இரசத்தையும் நாம் உண்டு பருகும்போதெல்லாம் நாம் அவராகவே மாறுகிறோம் என்பதை உணரவும்இ நற்கருணையின் மாட்சியை உணர்ந்து அப்பக்தியில் நாளும் வளர இவ்விழா நமக்கு அழைப்பு தருகிறது. நற்கருணை நமக்கு வெளிப்படுத்தும் ஐந்து முக்கிய பண்புகளை சிந்தித்து அதன் மாட்சியை உணர்ந்து கொள்வோம்.

1. தியாகத்தின் அடையாளம்

        தனக்கென்று பாராமல் பிறருக்கு தேவையென்றால் யாவற்றையும் தர காத்திருக்கும் மனமே தியாகம் ஆகும். இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காக அர்ப்பணித்து உயிரையே தந்திருப்பது தியாகத்தின் அடையாளம். நாம் ஒவ்வொரு முறையும் நற்கருணையை கொண்டாடுகின்ற போது இயேசுவின் தியாகத்தை மீண்டும் மீண்டுமாக வாழ்ந்து காட்டுகின்றோம். நமக்காக தன்னுடைய உயிரை தியாகமாய் அர்ப்பணித்து மீட்பு தந்து இன்றளவும் அத்தியாகத்தின் அடையாளமாக நற்கருணையாய் வீற்றிருக்கின்றார் இயேசு. அவரைப் போல நாமும் நம்முடைய குடும்பங்களில் இருக்கின்ற கணவன்இ மனைவிஇ பெற்றோர்கள்இ பிள்ளைகள்இ உடன் பிறந்தவர்கள் மற்றும் சமுதாயத்தில் இருக்கின்ற ஏழைகள்இ அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்கள் என யாவருக்கும் நம் நேரங்களை தியாகம் செய்து பேசி உறவாடவும்இ நம்மிடையே இருப்பவற்றை தியாகம் செய்து உதவவும் முன்வருவோம்.

2. அன்பின் அடையாளம்

                   "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை." (யோவான் 15:13) என்னும் அவரின் வார்த்தைக்கு ஏற்ப தன்னுயிரை தந்து நற்கருணை வடிவில் இயேசு அன்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். “அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்; அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்” என்கிறது நீதிமொழிகள். 

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

                அதாவது அன்பு இல்லாதவர் எல்லாம் என்னுடையது என்பர். அன்பு உடையவர் தன் உடலையும் பிறருக்கானது என்பர் என்னும் வள்ளுவரின் வார்த்தைகள் இயேசுவின் வாழ்வில் நடந்த உண்மைகள். பிறரன்பு உணர்வோடு வாழப்பட வேண்டிய மறைபொருளை ‘ஆமென்’ என்று சொல்லி நாவினால் பெற்று மட்டும் திருப்தி அடையலாகாதுஇ மாறாக இயேசுவைப் போல பிறர் நலம்இ பிறரன்பு என்று நம்மோடு இருப்பவர்களோடு வாழ்ந்தால் தான் நற்கருணையை வாழ்வாக்க முடியும். 

3. பகிர்வின் அடையாளம் 

            "பெறுவதிலும் தருவதே இன்பம் பயக்கும்" என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப இல்லை என்று வருவோர்க்குஇ இல்லை என்று சொல்லாமல் இருப்பதை பகிர்ந்து வாழ்வதே சிறந்த மனித வாழ்வாகும். இறைமகன் இயேசு கிறிஸ்து இறைச்சாயலிலிருந்து மனிதச்சாயலுக்கு கடந்து வந்து மானுட குல மீட்புக்காக தன் உடலையும் இரத்தத்தையும் பகிர்ந்தார். தொடக்க திருஅவையில் நற்கருணை பகிர்வு அவர்கள் சம்பாதித்த பொருட்களையும் பகிர வைத்ததுஇ திருத்தூதர்களின் பாதங்களில் கிறிஸ்தவர்கள் தங்களது பொருட்கள் அனைத்தையும் வைத்து தேவையானவற்றை எடுத்துச் சென்றார்கள் (திப.2:43). 
இன்று நற்கருணை பகிர்வின் அடையாளமாகஇ அதாவது தன்னையே நமக்காக கையளித்த இயேசுவைப் போல பிறரது துன்பத்திலும்இ துயரத்திலும்இ வறுமையிலும் மற்றும் ஏழ்மையிலும் நம் வாழ்வை பகிர்ந்து கொள்ள அழைப்பு தருகிறது.

4. உறவின் அடையாளம் 

                பழைய ஏற்பாட்டில் இறைவன் தன் மக்களோடு பல வழிகளில் உறவை வலுப்படுத்தி வந்துள்ளார். அடிமைத்தனத்திலிருந்து மீட்டுஇ பாலைவனத்தில் வழிநடத்தி மற்றும் உடன்படிக்கையை ஏற்படுத்தி இறை - மனித உறவை உருவாக்கினார். இதே உறவு புதிய ஏற்பாட்டில் இறைவன் மனித உருவெடுத்ததன் வழியாக தொடர்ந்தது. இவ்வுறவு நிலைத்து நிற்க இயேசு உறவின் அடையாளமாய் நற்கருணையை தந்தார். அதனால்தான் "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்இ நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்". (யோவான் 6:56) என்கிறார். கிறிஸ்துவின் திருவுடலும் திருஇரத்தமும் அவரோடு இணைந்திருக்க அதாவது உறவில் வளர அழைப்பு தருகிறது. உறவின் உச்சக்கட்டஇ இறுதிக்கட்ட வெளிப்பாடாக இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் நமக்கு தந்துள்ளார். ஆகஇ நற்கருணை உறவுக்கான நிரந்தர உருவம். தொடக்கத் திருஅவையில் திருத்தூதர்கள் இறைவேண்டலிலும் அப்பம் பிடுவதிலும் இறைவனைப் போற்றுவதிலும் ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள். (திப. 2:42) நற்கருணை பகிர்வு அவர்களை உறவில் வளர்த்தது. இயேசுவும் "நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. (யோவான் 15:4) என அவர் உறவில் இணைந்து வாழ அழைப்பு தருகிறார். இன்றைய உறவுகள் தொலைபேசியில் தொடங்கி தொலைவிலேயே நின்று கொண்டிருக்கிறது. இதயத்தில் நிலைத்திருக்க வேண்டிய உறவுகள் இண்டர்நெட்டில் மட்டுமே இருக்கிறது. மண்ணுக்கும்இ பொன்னுக்கும்இ பொருளுக்கும்இ புகழுக்கும் மட்டுமே உறவுகள் என்ற நிலைதான் இன்றைய உலகம். இதில் உறவுக்காக உயிரைத் தந்த இயேசுவைப்போல இறைவனோடும் நம்மோடு உடனிருப்பவர்களோடும் உண்மையான உறவில் நிலைத்திருப்போம்.

5. வாழ்வின் அடையாளம்

                பழைய ஏற்பாட்டில் பாலைவனத்தில் இஸ்ராயேல் மக்களுக்கு பொழியப்பட்ட மன்னா என்னும் உணவு அவர்களுக்கு நிலைவாழ்வை தரவில்லை. அதை உண்ட அனைவரும் இறந்தனர். ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுஇ “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”(யோவான் 6:51) என நிலைவாழ்வின் அடையாளத்தை தருகிறார். இயேசுவின் திரு உடல் அவருடைய வாழ்வில் பங்கு கொள்ளவும்இ திரு இரத்தம் அவருடைய இறப்பில் பங்கு கொள்ளவும் நமக்கு அழைப்பு தருகிறது. "வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்." (யோவான் 6:57) என்னும் இயேசுவின் வார்த்தைகள் நற்கருணையை ஏற்று நிலைவாழ்வை பெற்றுக் கொள்ள அழைப்பு தருகிறது.

                கி.பி. 1730 ஆகஸ்ட் 14ந்தேதி இத்தாலியின் சியன்னா நகரில்இ புனித பிரான்சிஸ் ஆலயத்தில் நுழைந்த கொள்ளையர்கள் நற்கருணை பேழையில் வைக்கப்பட்டிருந்த நற்கருணை அப்பங்கள் இருந்த தங்கப் பாத்திரத்தை தூக்கிச் சென்றுவிட்டனர். அந்த கொள்ளையர்கள் வீசியெறிந்த நற்கருணை அப்பங்கள்இ இரண்டு நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 17ந்தேதி மீண்டும் கண்டெடுக்கப்பட்டன. அந்த நற்கருணை அப்பங்கள் இன்றளவும் அழியாமல் இருக்கின்றன. ஆம்இ நற்கருணையில் இயேசு நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நற்கருணையின் வடிவில் நம்மோடு உறவாடஇ உரையாட ஆவலாயிருக்கும் இறைவனை தேடுவோம். அவரோடிணைந்துஇ அவரன்பை சுவைத்திடுவோம். நற்கருணையின் வழியாக நமது ஆன்மப் பசியைஇ தாகத்தை போக்குகின்றார்இ நம்மைக்; குணமாக்குகின்றார்இ விசுவாச வாழ்வில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகின்றார். நம்மீது அவர் வைத்துள்ள அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றார். அத்தயை இறைவனின் தியாகத்தைஇ அன்பைஇ பகிர்வைஇ உறவை மற்றும் வாழ்வு தரும் நற்கருணையை உய்த்துணர்ந்தவர்களாகஇ நாம் பெற்ற அன்பைஇ பிறரோடு பகிர்ந்துஇ இறைன்பிற்கு சாட்சியாகஇ அவரோடு என்றும் இணைந்து நற்கனி தருபவர்களாகஇ அவரோடு என்றும் நெருங்கிய உறவுள்ளவர்களாக வாழ்ந்திடுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Thursday, June 1, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - மூவொரு கடவுள் பெருவிழா - (ஆண்டு- A) - 04-06-2023 - ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
மூவொரு கடவுள் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(04 ஜூன்  2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 34: 4b-6, 8-9
இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 13: 11-13
நற்செய்தி: யோவான் 3: 16-18

மூவொரு இறைவன் காட்டும் அன்பு

புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் இந்த உலகம் பருப்பொருள், இடம் மற்றும் காலம் ஆகியவற்றால் ஆனது என்கிறார். பருப்பொருள் என்பது திடமானது, சக்தியுடையது மற்றும் நகர்தலையுடையது. இடம் என்பது நீளம், உயரம், அகலத்தைக் கொண்டது. காலம் என்பது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தைக் கொண்டது. இவை மூன்றும் இல்லையேல் அல்லது ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. ஏனெனில் இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன. அதேபோல தான் மூவொரு கடவுளும் இருக்கிறார். இன்று தாயாம் திரு அவையானது மூவொரு இறைவனின் திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. இது திருஅவையில் மிக முக்கியமான ஒரு விழா. 1334-ஆம் ஆண்டு திருத்தந்தை 22-ஆம் யோவான் பெந்தகோஸ்தே ஞாயிற்றுக்கு அடுத்து வருகின்ற ஞாயிறை மூவொரு இறைவனின் பெருவிழாவாக கொண்டாட திருஅவைக்கு அழைப்பு கொடுத்தார். வழிபாட்டு ஆண்டின் முதல் பாதிப்பகுதிக்கு முடிவாகவும், மறு பாதிப்பகுதிக்கு தொடக்கமாகவும் இந்த விழா அமைகிறது. நைசீயா -காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட மறையுண்மையே இந்த விழாவாகும். இது திருஅவையின் அடித்தளமாக உள்ளது. இவ்விழாவும் இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நம்மை மூவொரு இறைவன் காட்டும் அன்பில் வளர அழைப்பு தருகிறது.

மூவொரு இறைவன்:

    பேராயர் புல்டன்ஷீன், மூவொரு இறைவனைப்பற்றிக் கூறும்போது, மூன்று கோடுகளால் வரைந்த முக்கோணத்தை நாம் மூன்று கோடுகள் என்று கூறுவதில்லை, மாறாக முக்கோணம் என்றே கூறுகின்றோம். அதுபோல, இறைவன் மூன்று நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் மூன்று மனிதர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், நாம் மூவொரு இறைவன் என்றே கூறுகின்றோம் என்கிறார். கடவுள் மூன்று ஆட்களாக இருக்கின்றார், இவர்கள் மூவராக இருந்தாலும் ஒரே கடவுள். இன்றைக்கு மூவொரு இறைவனை புரிந்து கொள்வதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் நமக்கு தரப்படுகிறது. ஒரு குடும்பத்திலிருக்கும் குடும்பத் தலைவர் தன் தந்தைக்கு மகனாகவும், மனைவிக்கு கணவராகவும், பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருப்பதைப் போலவும், மேலும் ஒரு மரம் வெளியே மட்டும் தெரிந்தாலும், மரம், மரத்தின் வேர், வேரில் உயிர்ச்சத்து இருப்பதைப் போலவும், நீரானது திரவ, திட மற்றும் ஆவி நிலைகளில் இருப்பதைப் போலவும் மூவொரு இறைவன் இருக்கிறார். மேலும் ரோஜா ஒன்று சிவப்பாக , மணமுள்ளதாக, மலரின் அமைப்பைப் கொண்டதாக உள்ளது. எரியும் திரி ஒன்றில் ஒளியுண்டு, வெப்பமுண்டு மற்றும் மெழுகுதிரிக்குரிய அமைப்பும் உண்டு. அதேபோல மூவொரு கடவுள் மூன்று தன்மைகளைக் கொண்டிருந்தாலும் ஒரே கடவுளாக இருக்கிறார். மேலும் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்." (மத் 28:19) என இயேசுவே மூவொரு இறைவனின் மறைப்பொருளை வெளிப்படுத்துகிறார்.

மூவொரு இறைவனில் அன்பு:

        யூத மதத்தில் கடவுள் உண்மையான யூதர்களை மட்டுமே அன்பு செய்கிறார் எனவும், மற்றவர்களை வெறுக்கிறார் எனவும் நம்பினர். ஆனால் கிறிஸ்தவத்தில் இறைவன் இந்த உலகிலுள்ள யாவரையும் அன்பு செய்கிறார், அவர் தன்னை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வதில்லை. அவருடைய அன்பு உலகெங்கும், உலகிலுள்ள யாவரிடத்திலும் மூழ்கிக் கிடக்கிறது. அன்பே இறைவனாக இருப்பதே இறையன்புக்கான காரணமாகும்.

தந்தை:-
        தந்தையாகிய கடவுள் இந்த உலகத்தை படைத்து தன் அன்பின் அடையாளமாய் மனிதரிடம் ஒப்படைக்கிறார். தன் அன்பின் பாதையிலிருந்து மாந்தர்கள் விலகி செல்லும் போதெல்லாம் நீதித்தலைவர்களையும், இறைவாக்கினர்களையும் மற்றும் அரசர்களையும் அனுப்பி அவர்களை மீண்டுமாக அன்பின் பாதையில் வழி நடத்துகிறார். இறுதியாக "தனது ஒரே பேறான மகனை அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புக் கூர்ந்தார்" (யோவான் 3:16).

இயேசு:-
    இம்மண்ணுலகில் மனிதராய் பிறந்த இயேசு தன் பணி வாழ்வின் மூலமாக இறையன்பை வெளிப்படுத்தினார். இறையாட்சியை எடுத்துரைத்து, நோயாளிகளை குணமாக்கி, தீய ஆவியை விரட்டியடித்து, இறந்தவரை உயிர்ப்பித்து, இறுதியாக அன்பின் மிகுதியால் சிலுவை சுமந்து தன்னுயிரை தந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன் (யோவான் 14:16) என வாக்களித்தார்.

தூய ஆவி:-
        உலகப்படைப்பில் நிறைந்திருந்த ஆவி, இயேசுவின் பிறப்பிலும், திருமுழுக்கிலும் மற்றும் வாழ்விலும் உடனிருந்த ஆவி, பெந்தகோஸ்து நாளில் திருத்தூதர்களை உறுதிப்படுத்தி திரு அவையில் பிறப்பெடுக்க செய்தது. இன்றைக்கு திருமுழக்கு, உறுதிப்பூசுதல் மற்றும் குருத்துவம் என்னும் திருவருட்சாதனங்களின் வழியாக நம்மை உறுதிப்படுத்தி ஆவியின் ஆலயங்களாக அன்பின் பாதையில் வழிநடத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் தன் மக்களின் அழுகுரலை கேட்ட இறைவன் அவர்கள் மேல் கொண்ட அன்பால் அவர்களை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை அளிக்க மோசேவை அழைக்கிறார். ஆக அன்பே இறைவன் என எடுத்துரைப்பது மூவொரு இறைவனை அறிந்து கொள்வதற்கான எளிமையான வழி. கடவுள் ஒருவரே, இவர் தந்தை, மகன் தூய ஆவியார் என்று மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்றும், இவர்கள் யாதொரு வேறுபாடுமின்றி ஒரே அன்பு உறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை மற்றும் கடவுள் தன்மையோடு இருப்பதால் மூவரும் மூன்று கடவுள் அல்ல மாறாக ஒரே கடவுள் என நாம் நம்புகிறோம். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே, வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து தந்தையாகிய இறைவனின் குரல் கேட்டது. (மத் 3:16,17) ஆக இயேசுவின் திருமுழுக்கில் மூவொரு இறைவனும் அவர்களின் அன்புறவும் வெளிப்படுத்தப்படுகிறது.

நம் வாழ்வுக்கு அன்பு

        அன்புறவில் ஒன்றிணைந்த மூவொரு இறைவனை போல, நாமும் அன்புறவில் ஒருவர் மற்றவரோடு ஒன்றிணைய அழைப்புப் பெறுகிறோம். "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்." (யோவான் 17:21) என்னும் இயேசுவின் வார்த்தைகள் இதுவே இறைவிருப்பம் என்பதை எடுத்துரைக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகமும், நாம் நம்மோடு உடனிருப்பவரை அன்பு செய்தால், "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் நம் அனைவரோடும் தங்கும்" (2 கொரி 13:13) என்கிறது. நாம் ஒவ்வொரு முறையும் சிலுவை அடையாளம் வரையும் போதும், ஜெபிக்க துவங்கும் போதும் மூவொரு இறைவனை உச்சரிக்கின்றோம். நம்பிக்கை அறிக்கையை எடுத்துரைக்கின்ற போது மூவொரு இறைவனில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறோம். மூவொரு இறைவன் நாம் வணங்குவதற்குரிய மறைபொருள் மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய மறைபொருளுமாவார், தந்தை தமது மகனை முழுமையாக அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாக கையளிக்கிறார், அவ்வாறே மகனும் தந்தையை அன்பு செய்து, அவருக்குத் தம்மை முழுமையாகக் கையளிக்கிறார். இவர்களுடைய பரஸ்பர அன்பிலிருந்து பிறப்பவர்தான் தூய ஆவியார். மூவொரு இறைவனின் அன்பு நம் குடும்ப வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்து தங்களை முழுமையாகக் கையளிக்கின்றனர். இவ்விருவரின் பரஸ்பர அன்பின் கனிதான் குழந்தை. எனவே ஒவ்வொரு குடும்பமும் மூவொரு இறைவனின் குடும்பத்தை அடித்தளமாகக் கொண்டு அன்பு வழி வாழ வேண்டும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

            என்னும் வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். அன்பின் மிகுதியால் தான் மூவொரு இறைவன் தன் மகனையே மனித குல மீட்புக்காக முழுமையாக அர்ப்பணித்தார். அதே அன்பை மூவொரு இறைக்குடும்பத்திற்கும் நம் குடும்பங்களுக்கும் வெளிப்படுத்தி வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.