🌱விவிலிய விதைகள்🌱
தூய ஆவியார் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(28 மே 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: திபணி 2: 1-11
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 2: 3b-7, 12-13
நற்செய்தி: யோவான் 20: 19-23
தூய ஆவி: புதுப்பிறப்பின் அடையாளம்
ஒரு மனிதன் வாழ்வின் வழியை தேடிக் கண்டறியும் ஆவலோடு இருந்தான். ஆனால், அதைத் தேடுவதற்கான பாதை எது, அதற்கு வழிகாட்டக் கூடிய தக்க நபர் யார் என்பது அவனுக்குத் தெரியவில்லை. மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு சந்நியாசியைக் கண்டபோது, அவரிடம் சென்று, "நான் வாழ்வின் வழியை அறிய விரும்புகிறேன். எனக்கு அதற்கான பாதையையும், வழிகாட்டியையும் உங்களால் கூற இயலுமா?" என்று கேட்டான். "உனக்கு வாழ்வின் வழியை போதிக்கக்கூடிய குரு எங்கே இருப்பார், எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியும்!" என்று கூறிய அவர், "உனது குரு ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பார்" என்று கூறி, அந்த மரத்தையும், அவரது முழு உருவத்தையும் துல்லியமாக வர்ணித்தார். அவனும் தனக்கு வழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவரிடமிருந்து விடைபெற்று, அந்த மரத்தையும் குருவையும் தேடி ஊர் ஊராகச் சென்று கொண்டு இருந்தான். அந்த மரமோ குருவோ அவனுக்குத் தட்டுப்படவே இல்லை. முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. யாரோ ஒரு சந்நியாசி சொன்னதை நம்பி, முப்பது வருடங்களை தேடலில் வீணாக்கி விட்டோமே என்று வருந்திய அவன், தனது ஊருக்குத் திரும்பினான். அவனுக்கு வழி சொன்ன சந்நியாசி, அதே மரத்தடியில், வயதாகி அமர்ந்திருந்தார். அப்போதுதான் அவர் வர்ணித்தபடியே அந்த மரமும் அவரும் இருப்பதை கவனித்தான். அவரிடம் சென்று, "இதுதான் அந்த மரம்; நீங்கள்தான் அந்த குரு என்று ஏன் எனக்கு நீங்கள் அப்போதே சொல்லவில்லை? எனது 30 ஆண்டுகளை வீணாக்கி விட்டீர்களே!"என்று கேட்டான். அதற்கு அவர், "நீதான் எனது 30 வருடங்களை வீணாக்கிவிட்டாய்! மிகத் துல்லியமாக இந்த மரத்தைப் பற்றியும், எனது உருவத்தைப் பற்றியும் நான் வர்ணித்தேன். ஆனால், நீயோ, என்னையும் கவனிக்கவில்லை; அந்த மரத்தையும் கவனிக்கவில்லை. உனது தேடலின் ஆவேசம் உனது கண்களை மறைத்திருந்தது. கண் எதிரே உள்ள ஒன்றை அவ்வளவு துல்லியமாக வர்ணித்தும்கூட உன்னால் கண்டுகொள்ள இயலவில்லை என்றால், புறக் கண்ணுக்குப் புலப்படாத, அகக் கண்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய வாழ்வின் வழியை நீ எப்படி கண்டு கொள்ள முடியும்? என்று கேட்டார். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. நம் அக கண்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய வாழ்வின் வழியை நமக்கு அறிய செய்பவரை அதாவது நம்மையும் நம்முடைய வாழ்வையும் புதுப்பிறப்பெடுக்க செய்பவருமான தூய ஆவியை புறக்கண்களில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். தாயாம் திருஅவை இன்று பெந்தகோஸ்தே திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. இது தூய ஆவியாரின் வருகை மற்றும் திருஅவையின் பிறப்பு என இரண்டு முக்கிய நிகழ்வுகளை நினைவுப்படுத்துகிறது. ஆவியால் பிறப்படைந்த நாம் ஒவ்வொருவரும் மீண்டுமாக அவரில் புதுப்பிறப்படைய இவ்விழா நமக்கு அழைப்பு தருகிறது.
இன்றைய பெந்தகோஸ்தே நாளோடு பாஸ்கா காலம் நிறைவு அடைகிறது. பெந்தகோஸ்தே என்றால் ஐம்பதாம் நாள் என்று பொருள். பழைய ஏற்பாட்டில் பெந்தகோஸ்தே திருவிழாவானது அறுவடையில் விளைந்த முதல் கனியை கடவுளுக்கு நன்றியாக ஒப்புக் கொடுத்து கொண்டாடப்பட்டது.(எண் 29:26, விப 34:22) இந்த நாளில் நிலத்தின் முதல் கனிக்காக, எகிப்திய விடுதலைக்காக, மற்றும் பத்து கட்டளைகளுக்காக என்னும் மூன்று காரணங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு துணையாளராம் தூய ஆவியை அனுப்புவதாக வாக்களித்தார். அது இயேசுவின் உயிர்ப்பிலிருந்து ஐம்பதாவது நாளான பெந்தகோஸ்து நாளில் நிறைவு பெறுகிறது. இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று நிகழ்வுகளும், நமது கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உண்மைகள். இத்தகைய நம்பிக்கையின் மறையுண்மையாம் ஆவியானவரின் பெருவிழாவை இன்று கொண்டாடி மகிழ்கின்றோம். தொடக்கத்தில் நீரில் அசைவாடிய ஆவி (தொநூ 1:2), அன்னை மரியாவை ஆட்கொண்ட ஆவி (லூக் 1:35), எலிசபெத்தம்மாளை ஆட் கொண்ட ஆவி (லூக் 1:41), இயேசுவின் வாழ்வில் நிறைந்திருந்த ஆவி (லூக் 3:22), பெந்தகோஸ்து நாளன்று திருத்தூதர்களின் மீது மட்டுமல்லாது திருஅவையிலுள்ள ஒவ்வொருவர் மீதும் பொழியப்பட்டது. இவையனைத்திலும் ஒன்று மட்டும் பொதுவாகவே இருந்து வந்திருக்கிறது. ஆம், ஆவியானவர் புதுப்பிறப்பின் ஊற்றாக இருந்து கொண்டிருக்கிறார்.
1. பழைய ஏற்பாட்டில் புதுப்பிறப்பு
"மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது." (தொநூல் 1:2) என்னும் இறைவார்த்தை ஆண்டவரின் ஆவியே இவ்வுலகம் பிறந்ததற்கு காரணம் என்பதை அறிய வைக்கிறது. படைப்பின் துவக்கத்தில் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதன் மீது, ஆண்டவராகிய கடவுள், 'உயிர்மூச்சை ஊத', மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் (தொநூ 2:7) என வாசிக்கிறோம். இங்கு ஆண்டவரின் ஆவி உயிரின் அடையாளம். மூச்சு இருந்தால் தான் உயிர் வாழ முடியும், ஆண்டவர் தன் உயிர் மூச்சை தந்து நம்மை படைத்தார். தூய ஆவி நமக்கு உயிர் தந்து புதுபிறப்பெடுக்க செய்தார். இதைத்தான் "பள்ளத்தாக்கில் நிறைந்திருந்த எலும்புகள் மீது, நரம்புகள், தசை, தோல் என்று படிப்படியாக இணைக்கப்பட்டு, அவ்வுடல்களில் உயிர்மூச்சு புகுந்ததும், அவை அனைத்தும் மாபெரும் படைத்திரள்போல் நின்றன". (எசே 37:1-10) என்னும் இறைவாக்கினர் எசேக்கியேல் வார்த்தைகளும் நமக்கு எடுத்துரைக்கின்றது. "சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது." (1 சாமு 16:13) சாதாரண மனிதனாக இருந்த ஒருவரை அரசராக புதுப்பிறப்பெடுக்க செய்ததும் ஆண்டவரின் ஆவி தான். ஆக படைப்பில், மனித பிறப்பில், உலர்ந்த எலும்புகள் ஒன்று சேர்க்கப்படுகையில் மற்றும் திருப்பொழிவு செய்யப்படுகையில் என யாவற்றிலும் ஆவியானவரே புதுப்பிறப்பின் ஊற்றாக இருக்கின்றார். மேலும் "நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்" (யோவேல் 2:28) என இறைவன் அன்றே இறைவாக்கினர் வழியாக திருஅவைக்கு தூய ஆவியை முன்னறிவித்திருக்கிறார்.
2. புதிய ஏற்பாட்டில் புதுப்பிறப்பு
நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். (மத்தேயு 3:11, லூக்கா 3:16) என திருமுழுக்கு யோவான் வரவிருக்கும் இறைமகன் இயேசுவைப் பற்றி மட்டுமல்லாது தூய ஆவியாரின் வருகையைப் பற்றியும் புதிய ஏற்பாட்டில் முன்னறிவித்திருக்கிறார். இயேசு இம்மண்ணுலகில் மனிதனாக அன்னை மரியாவில் உருவெடுக்கவும், தன்னுடைய பணி வாழ்வில் பயணிக்கவும் மற்றும் சிலுவைச் சாவை ஏற்று மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் இயேசுவின் ஆற்றலாக இருந்தது தூய ஆவி. அதனால்தான் அதே தூய ஆவியை தன் பிரசன்னமாக மற்றும் துணையாளராக சீடர்களுக்கு அளிப்பேன் என வாக்களித்தார். இயேசு சீடர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்." என்றார். (யோவான் 20:21-22) தன் சீடர்கள் மீது, இயேசு, உயிர் மூச்சை ஊதி அவர்களை புதுப்படைப்பாக மாற்றினார். அதற்கும் மேலாக பெந்தகோஸ்தே நாளில் திருத்தூதர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டார்கள், அன்று திருத்தூதர்கள் மட்டுமல்லாது திருஅவையும் பிறப்படைந்தது.
3. நம் வாழ்வில் புதுப்பிறப்பு
"ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" (திருப்பாடல் 104:30) என்னும் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆவியானவரே நம்மை புதுப்பெடுக்க செய்கின்றார் மற்றும் புதுப்பிக்கின்றார். இயேசுவின் சீடர்கள் தூய ஆவியை பெற்றதையும் மற்றும் தூய ஆவி அவர்களுக்குள் குடி கொண்டதுமென யாவற்றையும் நாம் இரண்டு நிலைகளில் சிந்திக்கலாம்.
அ. அக வாழ்வில் தூய ஆவி
பெந்தகோஸ்து நாளில் சீடர்கள் தங்களுடைய அக வாழ்வுக்கான ஆவியைப் பெற்றார்கள். தூய ஆவி அகநிலையில் நம்மை ஆவியின் ஆலயமாக மாற்றி புனிதப்படுத்துகிறார். வாழ்வில் ஞானத்தோடும், விவேகத்தோடு நம்மை நடக்க உதவி செய்வது தூய ஆவி. "அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்." (மத் 3:11) இங்கு நெருப்பு தூய்மையின் அடையாளம். தங்கம் நெருப்பிலிடுகின்ற போதுதான் அது தூய்மை அடைகின்றது. அது போலத்தான் தூய ஆவியார் பாவங்களிலிருந்து நம்மை தூய்மையாக்கி புதுப்பிறப்பு என்னும் வாழ்வை தருகிறார். தூய ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள், எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்படும்." (யோவான் 20: 23) தூய ஆவியின் கொடைகளையும் மற்றும் வரங்களையும் பெற்ற ஒவ்வொருவரும் மன்னிக்கும் மனநிலையோடு ஆவியானவரால் வழிநடத்தப்படுவீர்கள். மனிதர்கள் பாவம் செய்து இறை உறவிலிருந்து பிரிந்து வாழுகின்ற போதெல்லாம் அவன் மீண்டும் இறைவனில் சரணடைய தூய ஆவியானவர் துணையாக இருக்கிறார்.
ஆ. புற வாழ்வில் தூய ஆவி
அக வாழ்வில் குடி கொண்டிருக்கும் தூய ஆவி புறவாழ்வில் இயேசுவுக்கு சாட்சிய வாழ்வு வாழ உதவுகிறார். பெந்தகோஸ்தே நாளில் அக வாழ்வில் ஆவியை பெற்ற சீடர்கள் சாட்சியாய் புற வாழ்வில் நற்செய்தியை பறைசாற்றி பலரும் ஆவியை பெற்றுக் கொள்ள செய்தார்கள். யூதர்களுக்கு பயந்து ஒரு அறையில் முடங்கி கிடந்தவர்கள், தங்களுக்குள் யார் பெரியவர் என்று அன்று போட்டியிட்டவர்கள், தந்தையின் வலப்பக்கத்தில் ஒருவரும் இடப்பக்கத்தில் மற்றொருவரும் அமர வேண்டும் என பதவி ஆசைப்பட்டவர்கள், உயிருக்கு பயந்து இயேசுவை மறுதலித்தவர், இயேசு இறந்ததும் ஓட முயன்றவர்கள் என தங்களது சுயநலம், போட்டி, பொறாமை, பதவி, ஆசை மற்றும் பயம் என்னும் கதவுகளை உடைத்தெறிந்து இயேசுவை பலருக்கும் அறிவித்தார்கள், அதற்கு அவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தூய ஆவியாரே காரணமாகும். மேலும், பேதுரு நிகழ்த்திய அருளுரையைக் கேட்டவர்களில் மூவாயிரம் பேர் மனமாற்றம் பெற்று திருமுழுக்கின் வழியாக தூய ஆவியை பெற்றார்கள். நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க இயலாது என புறவாழ்வில் யூத சங்கத்திற்கு எதிராக சீடர்கள் பேசக்கூடிய சக்தியை தந்தது தூய ஆவி. இந்த தூய ஆவியில் தான் அன்று இயேசுவின் சீடர்கள் மட்டுமல்லாது அவரை பின்பற்றியவர்கள், திருத்தொண்டர்கள் மற்றும் முதல் கிறிஸ்தவர்கள் என யாவரும் ஆட்கொள்ளப்பட்டார்கள், இயேசுவுக்கு சான்றும் பகர்ந்தார்கள்.
நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் மற்றும் குருத்துவம் என்னும் திருவருட்சாதனங்களின் வழியாக தூய ஆவியானவரை பெறுகின்றோம். இவை நம்மை ஆவியானவரின் ஆலயங்களாக மாற்றுகிறது. மேலும் "கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்." (உரோமையர் 8:14) எனவே, நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவும், இவ்வுலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் இருக்கவும் தூய ஆவி உதவுகிறார். “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." (யோவான் 3:5) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியில் பிறந்து இறையாட்சியைக் பற்றிக் கொள்ள இந்த பெந்தகோஸ்தே பெருவிழாவில் முயற்சி செய்வோம். தூய ஆவியால் நாம் இருளிலிருந்து ஒளியை நோக்கி பயணிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.