🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(30 ஜூலை 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: 1 அரசர்கள் 3: 5, 7-12
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8: 28-30
நற்செய்தி: மத்தேயு 13: 44-52
இறைவனை சொந்தமாக்க...
ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கியதாக இருந்தது. தற்போது மக்கள் மத்தியில் மதிப்பு குறைந்து பாதாளத்திற்கு போய் கொண்டிருந்தது. மடத்தின் உள்ளே பிட்சூக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதைப் பொறுக்க இயலாத தலைவர் தன்னைவிட அனுபவத்தில் சிறந்த குருவை தேடிச் சென்றார். பிரச்சனைகள் அனைத்தையும் எடுத்துரைத்தார். சற்று யோசித்த அந்த குரு அவரிடம், உங்கள் மடத்தில் புத்தரின் சீடர்களாக நீங்கள் வாழ்கிறீர்களே தவிர யாரும் புத்தராக அதாவது புத்தரைக் தன்னில் யாரும் சொந்தமாக்குவதில்லை. ஆக உங்கள் வாழ்வில் இருக்கின்ற புத்தரை உணருங்கள் என்று கூறினாராம். அது முதல் அந்த மடாலயத்திலுள்ள ஒவ்வொருவரும் தங்களிலும் பிறரிலும் புத்தரை உணர ஆரம்பித்தார்களாம். இன்றைக்கு கிறிஸ்தவ வாழ்விலும் நாம் எண்ணற்ற பிரச்சனைகளை, நோய்களை, சோதனைகளை மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கு காரணம் நமது வாழ்வு கிறிஸ்துவை கொண்டிராததே ஆகும். பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிற்றுக்கிழமை நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவை சொந்தமாக்கும் வாழ்வை வாழ அழைப்பு தருகிறது. இறைவனை சொந்தமாக்க இன்றைய நற்செய்தி மூன்று பண்புகளை கிறிஸ்தவ வாழ்வுக்கு தருகிறது.
1. தேடுதல்
2. இழத்தல்
3. தேர்ந்தெடுத்தல்
1. தேடுதல்
மனித வாழ்வு தேடல் நிறைந்தது, ஒரு மனிதன் தன்னுடைய எல்லா நிலைகளிலும் யாரையாவது அல்லது எதையாவது தேடிக் கொண்டே இருக்கிறான். இன்றைய நற்செய்தியிலும் வணிகர் ஒருவர் நல்முத்துக்களை தேடிச் செல்கிறார். தேடியதை கண்டும் கொள்கிறார். "தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்" (மத் 7:7) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இறைவனை தேடுபவர்களாக வாழ வேண்டும். என்னுடைய கிறிஸ்தவ வாழ்வு இறைவன் தருகின்ற நிலைவாழ்வை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். இன்றைக்கு நாம் அழிந்து போகின்ற, மண்ணோடு மண்ணாக மக்கிப் போகின்ற பணம், புகழ், பெருமை, பதவி மற்றும் பொருள் என்னும் இவற்றை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் என்றும் அழியாத நிலைவாழ்வை தரக்கூடிய இறைவனை தேடுபவர்களாக நாம் மாற வேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம் அன்றாட ஜெப வாழ்விலும், திருப்பலியிலும், மற்றும் பக்தி முயற்சிகளிலும் இறைவனை தேடி அவரை நம் வாழ்வாக்க வேண்டும்.
2. இழத்தல்
தேடலின் முழுமையை சுவைக்க இழத்தல் அவசியமாகிறது. இன்றைய நற்செய்தியின் முதல் உவமையில் வரும் நபர் புதையலைத் தேடி போகவில்லை மாறாக அவர் பணி செய்யும் இடத்தில் எதிர்பார்க்காமலே அவருக்கு புதையல் கிடைக்கிறது. ஆனால் அவர் அதை கண்டவுடன் சிறிதும் தாமதிக்காமல் அப்புதையலை சொந்தமாக்க தன்னிடமிருந்தவற்றை இழப்பதற்கு தயாராக இருக்கிறார். நல்முத்துக்களை தேடிச் சென்ற வணிகரும் தான் தேடியது கிடைத்தவுடன் தன்னிடையே இருக்கின்ற யாவற்றையும் இழந்து அதை பெற்று கொள்கிறார். புதையலாக மற்றும் நல்முத்தாக இருக்கும் இறைவனை சொந்தமாக்க நம்மை இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே நற்செய்தி நமக்குத் தரும் பாடம். திருத்தூதர் பவுல் கிறிஸ்து என்னும் செல்வத்தை பெற இந்த உலகத்தில் உள்ள யாவற்றையும் குப்பையென கருதினார் (பிலி 3:8). கிறிஸ்துவை சொந்தமாக்க திருஅவையில் பல்வேறு புனிதர்கள் தங்களையும், தங்கள் உறவுகளையும் மற்றும் உடமைகளையும் இழந்தார்கள். புனித பிரான்சிஸ் அசிசியார் இறைவனுக்காய் யாவற்றையும் இழந்தார், தன்னையே முழுவதும் அவரிடம் சமர்ப்பித்தார். இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் கடவுளிடம் ஞானத்தை கேட்கிறார். அப்படியென்றால் அவர் இவ்வுலகத்தின் செல்வங்களை இழந்து இறைவன் என்னும் ஞானத்தை சொந்தமாக்கி இருக்கிறார். "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்." (யோவா 12:24) ஆக இயேசுவை சொந்தமாக்க நாம் நம்மையும் நம்மிடம் இருப்பவற்றையும் இழப்போம். இயேசு தன்னைப் பின்பற்ற விரும்பிய இளைஞரிடம் உன் சொத்துக்களை எல்லாம் இழந்து விட்டு வர அழைக்கிறார். அவரே தந்தையையோ, தாயையோ, சகோதர சகோதரிகளையோ மற்றும் உடமைகளையோ மேலாக கருதினால் நீங்கள் என்னுடையோர் அல்ல என்று கூறுகிறார். இன்றைக்கு கிறிஸ்தவ வாழ்வில் உறவுகளையும் உடமைகளையும் காட்டிலும் இறைவன் முக்கியம் என அவருக்காய் யாவற்றையும் தியாகம் செய்வோம். ஞாயிறு திருப்பலி செல்வதற்காக ஓய்வெடுக்க நினைக்கும் நம்முடைய எண்ணங்களையும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்னும் ஆசைகளையும் தியாகம் செய்வோம், இறைவனின் சொந்தமாக்க முயல்வோம்.
3. தேர்ந்தெடுத்தல்
தேடலின் நிறைவில் நாம் எத்தகையோராய் வாழ போகிறோம் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைய நற்செய்தியின் மூன்றாவது உவமையில், வீசப்பட்ட வலையில் எல்லாவிதமான மீன்கள் அகப்பட்டாலும் நல்ல மீன்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. கடவுள் தாம் அழைத்தவர்களைத் தமக்கு ஏற்புடையவராக்கி, அவருடைய மாட்சிமையில் பங்கு பெறச் செய்ய நம்மை தேர்ந்தெடுக்கிறார் என இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார். கோதுமையும் களைகளும் பிரித்தெடுக்கப்படுவதை போல, நல்ல மீன்களும் கெட்ட மீன்களும் பிரித்தெடுக்கப்படுவதை போல, இறைவன் தந்த அழகிய வாழ்வில் உலக மாயைகளுக்கு மத்தியில் இறைவனை தேர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இறைவன் தரும் இறையாட்சிக்கு நாம் தேர்ந்தெடுக்கப்படுவோம். அழைக்கப்பட்டவர்கள் பலராக இருந்தாலும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலரே. இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களாக வாழ அவரையே நம் வாழ்வாக்க முயல்வோம்.
இறைவனைப் பற்றி எல்லா நேரங்களிலும் சிந்தித்துக் கொண்டிருப்பது நடைமுறையற்றது. நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்காக உலகத்தின் போக்கில் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என நாம் பல வேளைகளில் நினைக்கின்றோம். ஆனால் இறைவனை முழுவதும் மறந்து வாழ்க்கையின் நடைமுறையில் திளைத்திருத்தல் அர்த்தமற்றது, அதை மாற்றிக் கொள்ள அழைப்பு பெறுகிறோம். இது இறைவனை மற்ற எல்லாவற்றை காட்டிலும் முதன்மையானதாக கொண்டிருக்கும் ஒரு அனுபவமாகும். அவரை சொந்தமாக்கும் இத்தகைய அனுபவத்தை பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.