Saturday, March 27, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 28-03-2021- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்   

புனித வாரம்

குருத்து ஞாயிறு

பயணம்

 எனது மொபைலுக்கு நேற்று ‌(சனிக்கிழமை) வந்த ஒரு whatsapp செய்தி இது. "வேலைக்கு ஆட்கள் தேவை, நாளை அரசர் வருகிறார், அரசரை சுமக்கும் கழுதையெல்லாம் ஒரு நாள் ஸ்டிரைக். அரசரை சுமக்க கழுதை தேவை, நாளை இந்த வேலைக்கு நீங்கள் தயாரா?"

கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இது ஒரு வேடிக்கையான செய்தியாக இருந்தாலும் இவை இன்றைய குருத்து ஞாயிறை நமக்கு நினைவுபடுத்துகின்றன. குருத்து ஞாயிறு இயேசுவினுடைய பயணத்தை நினைவுபடுத்துகிறது. இது எருசலேம் நகருக்குள் இறைமைந்தனின் பயணம், 

  சிலுவை சுமப்பதற்கான பயணம், மீட்பின் பயணம், விடியலுக்கான பயணம், நாம் மீட்புப் பெற தன்னை அர்ப்பணித்த பயணம், சுமைகளை ஏற்றுக்கொள்ள தயாரான பயணம், நிறைவாழ்வை நோக்கிய பயணம், இறைமகன் தன் இறப்பை நோக்கி செல்லும் பயணம் மற்றும் நம் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருகின்ற பயணம். பொதுவாக எருசலேமில் இது போன்ற பயணங்கள் அரசருக்கு, அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும் ஏற்பாடு செய்வதுண்டு ஆனால் இது எதிர்பாராத விதமாக மக்களே ஒன்று கூடி மக்களாக ஏற்பாடு செய்யப்பட்ட மக்களின் பயணம். இந்த பயணம் அதிகார வர்க்கத்திற்கு பயத்தை அளித்த, அவர்களுக்கு எதிரான பயணமாக அமைந்தது.

(A)-வரலாற்றில் இரண்டு பயணங்கள்:

(1)-காந்தியின் தண்டியாத்திரை பயணம்:- 

அன்று காந்தியின் தண்டியாத்திரை பயணம், ஆங்கிலேயருக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக அமைந்தது.

(2)-கிறிஸ்டோபர் கொலம்பஸின் பயணம்:-

 அன்று கிறிஸ்டோபர் கொலம்பஸின் 

பயணம், அமெரிக்கா என்னும் புதிய நாட்டை உலகிற்கு தந்தது.

(B)-விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இரண்டு பயணங்கள்: 

(1)-மோசேயின் பயணம்:

அன்று மோசே எகிப்து நோக்கி பயணித்தது இஸ்ராயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது.

(2)-பாலைவன பயணம்:-

இஸ்ராயேல் மக்களின் நாற்பது ஆண்டு பாலைவன பயணம், பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு, இறைவனுடைய மக்களாக அழைத்துச் சென்றது.

 (C)-விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இரண்டு பயணங்கள்:  

(1)-அன்னை மரியாவின் பயணம்:- அன்னை மரியாள் எலிசபெத்தை நோக்கி அவர் வீடு தேடிச் சென்ற பயணம். இந்த பயணம் எலிசபெத்துக்கும், அவருடைய வயிற்றில் இருந்த குழந்தைக்கும் பரிசுத்த ஆவியையும், அன்னையின் உதவியையும் தந்தது.

(2)- திருத்தூதர் பவுலின் பயணம்:- திருத்தூதர் பவுலின் மூன்று திருத்தூது பயணங்கள், இயேசுவை பலருக்கும் குறிப்பாக பிற இனத்தாருக்கு தந்தது.

விவிலியத்திலும் மற்றும் வரலாற்றிலும் பயணங்கள் எதையோ வெளிப்படுத்தி அது புது மாற்றத்தை மற்றும் புது வாழ்வை தருகின்றது. இன்று இயேசுவின் இந்தக் கழுதை பயணம் மற்றும் மக்களின் குருத்தோலை பயணம் எதை நமக்கு காட்டுகின்றது என்று சிந்திப்போம்.

 இந்தப் பயணங்கள் மூன்று விதமான செய்திகளை நமக்கு வெளிப்படுத்துகின்றது.

1. இயேசுவின் இறப்பு மற்றும் பாடுகள் 2. தந்தைக்கு கீழ்ப்படிதல்

3. இறைவனின்அன்பு

 இயேசுவின் பயணம் வெளிப்படுத்தும் இந்த செய்திகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இவை வெளிப்படுத்துகின்ற அடையாளங்களை சற்று சிந்திப்போம்.

1. எருசலேம் நகர்

 எருசலேம் ஒரு பழமையான பெரும் நகர். பணம் படைத்தவர்கள் அதிகம் வாழ்கின்ற ஒரு நகரம். நற்செய்தி நூல்களில் இயேசு எருசலேம் நகருக்கு மூன்று முறை செல்வேன், அங்கு பாடுகள் படுவேன் என்கின்றார்.(லூக்கா. 22:15,24:46, 25:26) ஆக, எருசலேம் நகரை நோக்கி இயேசு பயணிப்பது அவரது இறப்பு மற்றும் பாடுகளை தான் ஏற்கனவே அறிந்திருந்ததை நமக்கு வெளிப்படுத்துகிறது.

2. கழுதை 

யூதர்களுக்கு கழுதை தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. பாலஸ்தீனத்தில் கழுதையை மரியாதையோடு பார்த்தனர். அரசர்கள் போருக்குப் போகும் போது குதிரையில் போவார்கள், ஆனால் வரும் போது அமைதியின் மற்றும் வெற்றியின் அரசராக கழுதை மீது வருவார்கள். கழுதை பொதி சுமக்க மட்டுமல்ல, கழுதையின் தாடை எதிரியை அழிக்க பயன்பட்டது. இறைமைந்தன் இயேசுவின் இந்த எருசலேம் பயணம் மீட்பை பெறும் வெற்றி அரசரின் பயணம்.

 3. குருத்து 

யூதர்களுக்கு குருத்து என்பது சமாதானத்தைத் தந்தது, அது வெற்றியின் அடையாளம். இயேசுவின் எருசலேம் பயணம் மகிழ வேண்டிய தருணம். ஆதி கிறிஸ்தவர்கள் கல்லறையில் குருத்தை வைத்தார்கள், குருத்து மேலோங்கி உயர்ந்து நிற்பது போல இறந்தவர்கள் உயிர் பெற்று எழுவார்கள். இன்று நம் மனங்களும் குருத்தை போல இறைவனை நோக்கி உயர வேண்டும். கிறிஸ்து சாவை வெற்றிகொண்டு உயிர்த்தெழுவார் என்பதை கரங்களில் ஏந்தியிருக்கும் இந்த குருத்துகள் நமக்கு காட்டுகிறது.

4. ஓசன்னா முழக்கம் 

"தாவீது அரசரின் மகன் வாழ்க" - பாஸ்கா திருவிழாவிற்கு மக்கள் எருசலேமில் நுழைந்தவுடன் அவர்களை வரவேற்கும் வரவேற்பு கீதம் இது. அரசர்களின் பிடியிலிருந்து விடுபட கடவுளை நோக்கி உதவியை நாடும் கூக்குரல் இந்த முழக்கம். இயேசுவை "சிலுவையில் அறையும்" என்று மக்கள் முழங்குவதற்கான முன் அடையாளம் இந்த ஓசன்னா முழக்கம்.

இவையனைத்தும் இயேசுவின் பொதுநல உணர்வோடு கூடிய பாடுகளை மற்றும் இறப்பை நமக்கு எடுத்து இயம்புகிறது. தந்தையின் மீதுள்ள கீழ்ப்படிதல், தந்தை நம்மீது கொண்ட இறையன்பை நமக்கு இவை வெளிப்படுத்துவனவாக இருக்கிறது.

 நமது வாழ்வின் பயணங்கள்:-

 இன்று நமது வாழ்வின் பயணங்கள் எப்படி இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் பயணம் ஒரு பொதுநல பயணம், அன்பை மையப்படுத்திய பயணம், மீட்புக்கான பயணம், பிறரை வாழ வைக்கின்ற பயணம். இன்று நம்முடைய பயணங்கள் எப்படி இருக்கிறது? சுயநலத்தோடு கூடிய பயணமாக இருக்கிறதா? நமது பயணங்கள், நமக்காக, நம் வாழ்விற்காக, நம் குடும்பத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கின்ற பயணங்களாக இருக்கிறது. ஆனால், இறைமைந்தனின் இந்த கழுதை பயணம், பிறருக்காக பொதுநலத்தோடு கூடிய பயணமாக இருந்தது. இறை மைந்தனை போல நமது வாழ்வின் சிலுவைகளை ஏற்கும் பிறர்நல மற்றும் பொதுநல பயணத்தை நம் வாழ்வின் பயணங்களாக ஆக்குவோம். நம் வாழ்வின் பயணங்கள் இனிதே தொடங்கட்டும்.

Friday, March 19, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 5-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 21-03-2021- ஞாயிற்றுக்கிழமை

 

விவிலிய விதைகள்  

தவக்காலம் 5-ஆம் வாரம் ( ஆண்டு- B)

21-03-2021

ஞாயிற்றுக்கிழமை


அர்ப்பணம் (மடிதல்) தரும் மாற்றம்


                   "Unexpected Universe"  என்னும் புத்தகத்தில் "Star Thrower" என்னும் கதை ஒன்று உண்டு. இந்த கதையில் ஒருவர்  கடற்கரையில் கிடந்த அனைத்து நட்சத்திர மீன்களையும் எடுத்து கடலுக்குள் ஒன்று ஒன்றாக வீசி கொண்டிருந்தார். அதை பார்த்த அவ்வழியே வந்த மற்றொருவருக்கு ஒரே ஆச்சரியம். ஏன் இந்த மனிதன் கரையிலே கிடக்கின்ற இந்த நட்சத்திர மீன்களை உள்ளே எரிந்து கொண்டிருக்கின்றார் என்று யோசித்து, அவரிடம் சென்று கேட்டார்.  அதற்கு அந்த மனிதர் கடல் உள்வாங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த நட்சத்திர மீன்கள் எல்லாம் கரையிலே இப்படி பல மணி நேரங்கள் இருந்தால் இறந்துவிடும், அதற்காக நான் இவற்றை கடலுக்குள்  எரிந்துஇவைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றேன், இவைகளுக்கு வாழ்வு கொடுக்க முயற்சி செய்கிறேன் என்றாராம். அதற்கு அந்த  மனிதர் அவரை பார்த்து சிரித்து, இந்த கடற்கரை பல நூறு மைல்கள் நீளம் உடையது. இந்த கடற்கரையில் எண்ணற்ற மீன்கள் கரை ஒதுங்கி இருக்கின்றது. இவை அனைத்தையும் எப்படி உன்னால் கடலில் தூக்கி போட முடியும்எப்படி உன்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் ஒரு நட்சத்திர மீனை தன்னுடைய கையில் எடுத்து, அதை கடலுக்குள் தூக்கி எறிந்து விட்டு, இந்த ஒரு மீனின் வாழ்க்கையில் நான் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டேன், இதற்காக தான் என்னை முழுவதுமாக  அர்ப்பணித்தேன் என்று கூறினாராம்.

                              இறை இயேசுவில் இனியவர்களே, இன்றைய தவக்காலத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையின்  இறைவார்த்தை வழிபாடு, நம் ஒவ்வொருவரையும்  புது மாற்றத்திற்காக நம்மையே முழுவதுமாக அர்ப்பணிக்க அழைப்பு தருகிறது.  நாம் நம்மை அர்ப்பணிக்க  இயேசு கிறிஸ்துவே, நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றார். அவர் தன்னை அர்ப்பணித்தார், இழந்தார் மற்றும் இறந்தார் என்பதை காட்ட  இரண்டு அடையாளங்கள் நம்முன் வைக்கப்படுகின்றது.

1. திருச்சிலுவை
2.
நற்கருணை

                             இவை இரண்டும் நமக்கு இழத்தலுக்கான அடையாளங்களாக இருக்கின்றது. இவ்வடையாளங்களை பின்பற்றி, நாம் நம் வாழ்வில் வருகின்ற அனைத்து இழப்புகளையும், துன்பங்களையும் மாற்றத்திற்கான பாதையாக ஏற்றுக் கொள்வோம்.

1. சிலுவை என்னும் அடையாளம்:-

                                               அர்ப்பணம் தான் புது மாற்றத்தைத் தரும் என்கின்றது இன்றைய நற்செய்தி. "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவான். 12:24) என்னும் இயேசுவின் வார்த்தைகள் அவர் சிலுவையில் மடிந்து, தன் இறப்பால், இம்மண்ணுலகில் மக்களுக்கு புது வாழ்வைத் தந்ததை எடுத்துரைக்கின்றது. இதே வார்த்தைகள், நாம் நம்மை இழந்து, நம்மையே மடிய வைத்து, புது வாழ்வு பெற, பிறரையும் புது வாழ்வு பெற வைக்க அழைப்பு தருகின்றது. விதை மடிந்தால் தான் புது செடி உருவெடுக்கும், அதுபோல இயேசுவினுடைய  சிலுவை அர்ப்பணத்தின் புது அடையாளமாக இருக்கின்றது.  அவர் பாடுகள் மற்றும் இறப்பு, உயிர்ப்பு என்னும் புது வாழ்வை தந்து கொண்டிருக்கின்றது. அவர் தன்னைத் தானே தியாகம் செய்து, உருகி, தன்னை இழந்து, அர்ப்பணித்து மற்றவருக்கு மீட்பு எனும் புது வாழ்வைத் தந்தார் என்பதை சிலுவை நமக்கு வெளிப்படுத்துகின்றது.

2. நற்கருணை என்னும் அடையாளம்:-

                ஒவ்வொரு நாளும் திருப்பலியின் போது ஒரு மாற்றம் ஏற்படுகின்றது. நாம் காணிக்கையாக அர்ப்பணிக்கும் கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசம், இயேசுவின் உடலாக மற்றும் இரத்தமாக மாற்றப்படுகின்றது.  இயேசுவின் இந்த அர்ப்பணம் புது வாழ்வை தந்த மற்றும் தருகின்ற அர்ப்பணம்.  இயேசு தன்னை இழந்து அர்ப்பணமாக்கிய நற்கருணையே இதற்கு மாபெரும் அடையாளம்.  இவ்வடையாளத்தை பயன்படுத்தி நம்மை முழுவதுமாக அர்ப்பணிப்போம். நமது வாழ்வின் இழப்பு, மடிதல் மற்றும் அர்ப்பணம் என அனைத்தும் நமக்கு புது வாழ்வை தந்து, நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

நமது இழப்புகள் தரும் மாற்றம்:-
   

                      நம்முடைய பெற்றோர்கள் நமது நலனுக்காக பல தியாகங்கள் என்னும் இழப்புகளை  மற்றும் துன்பங்களை சந்தித்து நம்மை புது வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். நாமும் நமது வாழ்க்கையில் நம்மை முழுவதுமாக அர்ப்பணிக்கும் போது நம்மில் புதுவாழ்வு உருவாகிறது, மாற்றம் ஏற்படுகின்றது. நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலிருந்தும் புது நிலைக்கு அடியெடுத்து வைக்கின்ற போதும், நாம் பலவற்றை இழக்கின்றோம். ஆனால், பலவற்றை புதியதாக பெறுகின்றோம், அங்கு நம்மில் மாற்றம் ஏற்படுகின்றது. நமது அன்றாட வாழ்வில்நமது தேவையில்லாத செயல்கள், எண்ணங்கள், பேச்சுகள்,   சோம்பேறித்தனம், பொறாமை மற்றும் கோபம் என இவையனைத்தும் நம்மிடமிருந்து மடிய வேண்டும். அப்போது நம்மில் புதுவாழ்வும் மாற்றமும் ஏற்படும். அதைத்தான் இறைவார்த்தையின் வழியாய் இறைவன் எதிர்பார்க்கின்றார். அதற்காய்  நாம் வாழ்வின் அனைத்து துன்பங்களையும், கஷ்டங்களையும், வேதனைகளையும் மற்றும் இழப்புகளையும் புது வாழ்வுக்கான படிகளாக எண்ணுவோம். இன்னும் நம்மிடையே இருக்கின்ற தேவையில்லாத எண்ணங்கள், பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளையும் நாம் அர்ப்பணிப்போம். இறையருளை இறைஞ்சுவோம். வாழ்வில் மாற்றத்தை காண்போம்புதுவாழ்வு பெறுவோம், இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

                               அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF
                                                                  கும்பகோணம்







Saturday, March 13, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 4-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 14-03-2021- ஞாயிற்றுக்கிழமை

 

விவிலிய விதைகள்  

தவக்காலம் 4-ஆம் வாரம் ( ஆண்டு- B)

14-03-2021

ஞாயிற்றுக்கிழமை

 

நிலைவாழ்வு தரும் ஆன்மீகம்



                                           அருணிமா சின்ஹா  1989- ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் நகர் என்னும் ஊரில் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், ஓடும் ரயிலில் இருந்து 2011-ஆம் ஆண்டு சில கொள்ளையர்களால் அவள் கீழே தள்ளப்பட்டாள்.  24-மணி நேரம் சுயநினைவை இழந்து, 49-ரயில்கள் அவள் மீது ஏற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் விளைவாக, அவளது இடது காலை முழங்காலுக்குக் கீழே வெட்ட வேண்டியிருந்தது, அவளுக்கு வலது காலில் தடிகளும், முதுகெலும்பில் பல எலும்பு முறிவுகளும் கிடைத்தன. கால் இழந்து, வாழ்வை இழந்த நிலையில் கண்டங்களின் மிக உயர்ந்த சிகரங்கள் ஒவ்வொன்றிலும் ஏறி இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதை, அவரது நோக்கமாக கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே 2014 -ஆம் ஆண்டு வரை ஏழு சிகரங்களையும் இவ்வாறு செய்துள்ளார். 2015 - ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு வழங்கி கவுரவித்தது. கால் இழந்து, வாழ்வை இழந்த நிலையில் அருணிமா சின்ஹா எப்படி வாழ்வில் சாதித்தார் எனும் கேள்விகளுக்கு ஊடகங்கள் அன்று வெளியிட்ட அவரது பதில் "நம்பிக்கை". ஆம், அன்று அருணிமா சின்ஹாவுக்கு வாழ்வு கொடுத்து, இன்று மிகப்பெரிய மலை ஏறுபவராக மற்றும் விளையாட்டு வீராங்கனையாக மாற்றியது அவளது நம்பிக்கை தான். என்றும் நம் எல்லோருக்கும் வாழ்வு தருவது நம்பிக்கை தான். "நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்" (2 கொரிந்தியர் 5:7) என்னும் பவுலடிகளாரின் வார்த்தைக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு இன்றைய நாளிலே அழைப்பு தரப்படுகின்றது. அதிலும் சிறப்பாக நம் இறைவன் தருகின்ற அந்த நிலை வாழ்வைப் பெற  நம்பிக்கை எனும் ஆன்மீகத்தை பற்றிக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

1.  நிலைவாழ்வுக்கான பயணம்

                              நமது வாழ்க்கை ஒரு பயணமாக இருக்கின்றது. இந்த பயணத்திலேயே மனிதன் எதையோ தேடிக் கொண்டே இருக்கின்றான். கிறிஸ்தவர்களாகிய நாம் வாழ்க்கையில் எதை தேடினாலும் நாம் இறுதியாக இறைவனை தேடவும் மற்றும் இறைவன் தருகின்ற  நிலை வாழ்வை தேடவும் அழைக்கப்படுகிறோம். இந்த நிலைவாழ்வு தருபவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவாக இருக்கின்றார். "கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று" (1 யோவான் 5:11) என்னும் வார்த்தைகளே இதற்கு சான்று. கிறிஸ்துவில் நாம் கொள்ளுகின்ற நம்பிக்கையே நிலை வாழ்வு தருகின்ற ஆன்மீகம்.

2.  நிலைவாழ்வு தருபவரின் இரு உருவகங்கள்

   இன்றைய நற்செய்தி வாசகம் இறைமகன் இயேசு கிறிஸ்து நிலைவாழ்வு தருபவர் என்னும் இரண்டு உருவகங்களை வெளிப்படுத்தி காட்டுகின்றது.

a. உயர்த்தப்பட்ட பாம்பு (சிலுவையில் இயேசு)

 "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்"(யோவான் 3:14,15)  எனும் இறைவார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் இறைவனின் வழி தவறி சென்று, தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவர்கள் மீண்டும் வாழ்வு பெற, மோசே பாம்பு ஒன்றை செய்து அதை உயர்த்தி காட்டுகின்றார். அதைப் பார்த்தவர்கள் வாழ்வு பெறுகிறார்கள். அதுவே  மானிட மகனுக்கும் உருவகப்படுத்தப்படுகிறது. சிலுவையில் தொங்கும் இறைமகன் இயேசு கிறிஸ்துவை பார்க்கின்ற நாம் ஒவ்வொருவரும், நமது பாவ வாழ்விலிருந்து மீட்பு என்னும் புது வாழ்வைப் பெறுவோம். நிலைவாழ்வு தரும் மீட்பராக இவரே இருக்கின்றார், இவரில் நம்பிக்கை கொள்ளுவோம்.

 b. ஒளி

                   இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு கிறிஸ்து ஒளியாக உருவகப்படுத்தி காட்டப்படுகிறார். கிறிஸ்து என்னும் ஒளி வாழ்வு தருகின்ற ஒளியாக இருக்கிறது. உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8:12) என்னும் இறைவார்த்தையும் நமக்கு இதையே சுட்டிக்காட்டுகிறது.

3. நம்பிக்கை என்னும் ஆன்மீகம்

                    நம்பிக்கை வைத்தல் என்பது புது விதமான ஆன்மீகம். "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16)  எனும் இறைவார்த்தையின் அடித்தளத்தில், இவர் மீது நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வை பெறுவது ஒரு புது ஆன்மீகமாக இருக்கின்றது. இறை நம்பிக்கையோடு வாழ்வதே புது ஆன்மீகம் தான். அந்த நம்பிக்கையில் என்றும் ஊன்றியவர்களாக வாழ, இறைவனில் நம்மை அர்ப்பணிப்போம். நிலை வாழ்வைப் பெறுவோம்.

4. நம் வாழ்வில் நம்பிக்கையின் மூன்று நிலைகள்

                   நாம் எல்லோரும் குளத்தில் இருந்த மூன்று மீன்களின் கதையை தெரிந்து இருப்போம். வருமுன் காப்போம், வரும்பொழுது காப்போம் மற்றும் வந்தபின் காப்போம் என்னும் அக்கதையின் கருத்துகளை நன்றாகவே அறிந்து இருப்போம். ஏறக்குறைய இதே கருத்தைத் தான் நமது நம்பிக்கை வாழ்க்கையிலும் நான் பார்க்கின்றேன்.

a.
வருமுன் நம்பிக்கை

                 பல வேளைகளில் நாம் இறைவனின் நீதி தீர்ப்புக்கு முன்பு, அதாவது  ஒரு கஷ்டமான மற்றும் துன்பமான சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பே நம்பிக்கை கொண்டு விடுகின்றோம். விவிலியத்தில் இறைவாக்கு உரைக்க பட்டு உடனடியாக மனம் மாறி பலரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம் (திருமுழுக்கு யோவான்  மற்றும் சீடர்கள்)

b. வரும்பொழுது நம்பிக்கை

               நம்மில் பலர் இத்தகைய நம்பிக்கைதான் கொண்டிருக்கின்றோம். ஒரு கஷ்டம் மற்றும் துன்பம் வருகின்ற போது நாம் இறைவனை நாடுகின்றோம் என்பது வரும்பொழுது நம்பிக்கை. இயேசுவைக் கண்டு மனம் மாறிய சக்கேயு, இயேசு வருகின்றார் என அறிந்து, அவரிடம் வந்து, சுகம் பெற்ற நோயாளிகள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

c.
வந்தபின் நம்பிக்கை

               தனக்கு தண்டனை கிடைக்கப் போகிறது, தான் இறக்க போகின்றேன் என அறிந்து, சிலுவையில் நல்ல கள்ளன் இயேசுவிடம் பேசி மனம் மாறுகின்ற சூழ்நிலையே வந்தபின் நம்பிக்கை என்பதற்கான எடுத்துக்காட்டாகும். 'பட்டால் தான் புரியும்' என நம்மில் அதிகமானோர் வாழ்வில் கஷ்டங்கள் படுகின்ற பொழுதுதான் வாழ்வின் பாடங்களை உணர்கின்றோம்.

5. நிலைவாழ்வு தரும் ஆன்மீகம்

             ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” (யோவான் 11:21,22) எனும் லாசரின் சகோதரியின் வார்த்தைகள் நம்பிக்கையின் வார்த்தைகளாக இருக்கின்றது. அதன் பலனாக அவர் சகோதரர் வாழ்வு பெறுவதை பார்க்கின்றோம். நாமும் நமது வாழ்க்கையில் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு புது ஆன்மீகத்தில் இணைகின்ற போது  நிலை வாழ்வு பெறுவோம். நாம் நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வு பெற இரண்டு வழிகள் நமக்கு தரப்படுகின்றது. ஒன்று இறைவார்த்தை மற்றொன்று இயேசுவின் பாடுகள் இவற்றின் மீது நாம் நிலையான நம்பிக்கை கொள்ளுகின்ற பொழுது நிலைவாழ்வு நம்மை வந்து சேரும்.

(1)- இறைவார்த்தை

             "என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்"
(
யோவான் 5:24) என்னும் இறை வார்த்தையின் அடித்தளத்தில் இயேசுவின் வார்த்தையை நாம் உணர்ந்து, அவரை நம்புகின்ற போது நிலை வாழ்வைப் பெறுவோம். எனவே இறைவார்த்தையை வாழ்வாக்குவோம், நிலை வாழ்வை பெறுவோம்.

(2)-
இயேசுவின் பாடுகள்

            "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்"(யோவான் 3:14,15)  ன்னும் இன்றைய நற்செய்தியின் வார்த்தைகள் சிலுவையில் நமக்காக உயிர் துறந்த இயேசுவை நாம் பார்க்கின்ற போதெல்லாம், அவர் மீது நம்பிக்கை கொள்கின்ற போதெல்லாம் நிலைவாழ்வை பெறுவோம் என்பதை காட்டுகிறது. எனவே இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளை தியானித்து, அவர் மீது நம்பிக்கை கொண்டு அவர் தரும் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வோம்.  இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

 அருட்பணி. குழந்தை யேசு ராஜன் CMF
                                    கும்பகோணம்


தவக்காலம்-மனமாற்றத்தின் பாதை-21/  

அருட்பணி.அ.குழந்தை யேசு ராஜன். கிச 

மற்றும் கிளாரட் இல்ல சகோதரர்கள்/


                                 https://youtu.be/xUmxyJ97CvE