Friday, December 11, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு- (ஆண்டு- B)- 13-12-2020- ஞாயிற்றுக்கிழமை

 

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
(
ஆண்டு- B)

13-12-2020

ஞாயிற்றுக்கிழமை


பிறப்புக்கு ஒரு சான்று
(திருமுழுக்கு யோவான்)

 



                   ஜப்பானில் முதியவர் கூட்டம் ஒன்று அடிக்கடி கூடி செய்திகளைப் பரிமாறிக் கொண்டே டீ அருந்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தது.
சுவையான புதிய வகை டீ ஏதேனும் எங்கேயும் கிடைக்கிறதா என்பதைப் பார்ப்பது அவர்களின் ஒரு வழக்கம். அந்த டீ எவ்வளவு விலையாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி அவர்கள் விசாரித்து அறிந்துகொண்டு அது எப்படிப்பட்ட கலவையைக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வர். ஒரு நாள் அங்கிருந்த வயதானவர் ஒருவரின்  முறை வந்தது. அவர் தான் கொண்டு வந்திருந்த புது மாதிரியான டீயை அனைவருக்கும் தந்தார். அனைவரும் அதை சுவைத்துப் பார்த்தனர். அருமையோ அருமை! இதுவரை அப்படிப்பட்ட சுவையுள்ள டீயை சாப்பிட்டதே இல்லை என்று ஒரு மனதாக அனைவரும் கூறினர். இப்படிப்பட்ட டீயை எப்படிக் கலந்து தயாரிப்பது என்பதை அறிய அனைவரும் ஆர்வம் கொண்டு அவரைக் கேட்டனர். அதற்கு அவர்,”நண்பர்களே! இது எனது வயலில் உள்ள குடியானவன் காலம் காலமாகச் சாப்பிட்டு வரும் டீ தான்! மிக அருமையான விஷயங்கள் உண்மையிலேயே அதிக விலை கொண்டவையும் அல்ல; எங்கேயோ தூரத்தில் இருப்பவையும் அல்ல; நமக்கு அருகில் உள்ள சிறந்த விஷயங்களை நாம் அறிவதே இல்லைஎன்றார். முதியவர் குடியானவர் தயாரித்த டீயை தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது போல  திருமுழுக்கு யோவானும் இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து, இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். உடனிருக்கும், விலை குறைவு மற்றும் தரம் அதிகம், ஆனால் அதற்கு சான்று பகர யவரும் இல்லை. முதியவர் தான் வந்தார். அதே போல நம்மோடிருக்கும், நம் மத்தியில் இருக்கும்இயேசு கிறிஸ்துவுக்கு அன்று திருமுழுக்கு யோவான் சான்று பகர்ந்தது போல நாமும் சான்று பகர இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு தருகிறது.

                   "இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்". (லூக்கா 21:12,13,14எனும் இறைவார்த்தையில் இறைமகன் இயேசு கிறிஸ்து  சீடத்துவ வாழ்க்கைக்கு 'சான்று பகர்தல்' அடித்தளம் என்பதை எடுத்துரைக்கின்றார். ஆனால் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பே அவருடைய பிறப்புக்கு தன்னுடைய வாழ்வின் எல்லா நிலையிலும் சான்று பகர்ந்தவர் திருமுழுக்கு யோவான். தனது பிறப்பால், வார்த்தையால், வாழ்வால் மற்றும் தன்னுடைய  ஒவ்வொரு செயலாலும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு சான்று பகர்ந்தவராக  வாழ்ந்தவர் திருமுழுக்கு யோவான்.

 1. பிறப்பால்...

                        கிறிஸ்துவின் சீடத்துவ வாழ்க்கையின் ஆரம்ப புள்ளி புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பில் துவங்குகிறது. அதனால் தான் திருமுழுக்கு யோவானை மீட்புத் திட்டத்திற்காய் இறைவன் கருவறையிலே தேர்ந்தெடுத்தார்"அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்". (லூக்கா 1:7) என்னும் இறை வார்த்தைக்கு ஏற்ப முதிர்ந்த வயதில் மலடியாக இருந்த பெண் கருவுற்றாள். இது ஒரு சாதாரண நிகழ்வல்ல, அற்புதமான மற்றும் ஆச்சரியமான நிகழ்வு, அவரது பிறப்பே வரப்போகின்ற இயேசுவுக்கு சான்றாக மாறிய ஒரு நிகழ்வு.

2. ஆவியால்...

                      தூய ஆவியால் அன்று கருவறை காவியமாய் மாறியது. திருமுழுக்கு யோவான் கருவில் உருவாகி, கருவறையில் தவழ்ந்த போது, பிறப்புக்கு ஒரு சான்று ஆவியால் நிகழ்ந்தது. "மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்ட பொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்". (லூக்கா 1:41)  என்னும் இறைவார்த்தைகேற்ப யூதேயா மலை நாட்டில் முதிர்ந்த வயதில் மலடியாய் கருவுற்றிருந்த எலிசபெத்தை சந்திக்க, அன்னைமரியாள் வந்து, அவரை வாழ்த்தினார். அவர் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது வயிற்றிலிருந்து திருமுழுக்கு யோவான் தூய ஆவியால் மகிழ்ச்சியால் துள்ளினார். கருவறையில் மகிழ்ச்சியில் துள்ளிய திருமுழுக்கு யோவான் என்னும் சிசு அன்றே தனது துள்ளலில் தூய ஆவியால் இயேசுவுக்கு சான்று பகர்ந்தது.

3. வார்த்தையால்...

வார்த்தைகளின் சக்தி எவற்றை வேண்டுமானாலும் நிகழ்த்திக்காட்டும். அவை பிறரை வாழவும் வைக்கும். பிறரை சாகவும் வைக்கும். அதனால் தான் வள்ளுவர் அன்றே,

'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

                     எனக் கூறினார். அன்று இறைவனின் வார்த்தை உலகைப் படைத்தது‌. பின்பு அவரின் வார்த்தை மனிதனையும் படைத்தது. அன்று  ஹிட்லரின் வார்த்தை பல உயிர்களை கொன்றது. நற்செய்தியிலும் பரிசேயர்களின் மற்றும் சதுசேயர்களின்  வார்த்தைகள் இயேசுவையும் மற்றும் மக்களையும் இகழ்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் 'அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டதுஎன்று பறைசாற்றி வந்தார்'.(மத்தேயு 3:1-2) திருமுழுக்கு யோவானின் இத்தகைய வார்த்தைகள் இயேசுவுக்கு சான்று பகர்ந்தது. அவர் வருகைக்காய் மக்களை தயார் செய்தது.



 
4. உண்மையால்...

            கிறிஸ்து கற்பித்த இறையாட்சியின் மதிப்பீடுகளான  உண்மை, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் நேர்மை ஆகியவற்றை தன் வாழ்நாளில் முழுவதுமாக வாழ்ந்து இயேசுவுக்கு சான்று பகர்ந்தவராக திருமுழுக்கு யோவான் விளங்கினார்.   'ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்லஎன்று சொல்லிவந்தார்'. (மத்தேயு 14:4) என்னும் இறைவார்த்தையிலே அடுத்தவர் மனைவியோடு வாழ்வது தவறு என்பதைச் சுட்டிக்காட்டிசமுதாயத்தில் நடந்த அனைத்து அநீதிகளையும், அனைத்து ஒழுக்க கெட்ட செயல்களையும், கேட்டு நீதிக்கும், உண்மைக்கும்  துணை நின்றவராக திருமுழுக்கு யோவான் விளங்குகின்றார். இவையனைத்தும்  அவர் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தார் என்பதை காட்டுகிறது.

 


5.  தாழ்ச்சியால்...


                      தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை. ஆணவம் கொண்டவர்களே வாழ்வில் வீழ்த்தப்படுகின்றார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார், என நாம் வாசிக்கின்றோம். யோவான் அவர்களிடம், நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லைஎன்றார்.(யோவான் 1:26,27)  என வாசிக்கின்ற போது, திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவை விட தான் பெரியவர் அல்ல என்று தன்னையே தாழ்த்தி 'தாழ்ச்சி' என்ற பண்பில் நிலைத்து நிற்பதை நாம் பார்க்கின்றோம். கிறிஸ்துவுக்கு முன் வந்தாலும், கிறிஸ்துவுக்கு எல்லாவிதமான தயாரிப்பை  செய்தாலும், தான் கிறிஸ்துவை காட்டிலும் பெரியவர் அல்ல என்று தன்னையே தாழ்த்திய திருமுழுக்கு யோவானின் 'தாழ்ச்சி' அந்த கிறிஸ்துவுக்கே அவர் சான்று பகர்ந்தார் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. தாழ்ச்சி மனம் கொண்டவர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள். இவர்கள் எப்போதுமே பிறரை உயர்வாகவே கருதுவர். ஆதலால் தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. பணிந்த உள்ளமே பரமனுக்கு ஏற்ற உள்ளமாகும். எனவே, தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்வோம்.

6. எளிமையால்...

         எளிமை என்பது ஏழ்மை அல்ல, உன்னதமான தர்மம். அற்புதமான வாழ்க்கையின் வேர். "உண்மையான ஞானஸ்தன் எளிமையான வாழ்க்கையைத் தான் விரும்புவான். எளிமையாகத் தான் வாழ்வான்" என்று நம்பினார் சாக்கிரட்டீஸ். அவரது நம்பிக்கையை போலஎன்றும் எளிமையாய் வாழ்ந்தார் திருமுழுக்கு யோவான்"இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்". (மத்தேயு 3:4)  என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் தன்னுடைய உடையாலும், உணவாலும் மற்றும் வாழ்விடத்தாலும் எளிமையாய் வாழ்ந்து, அதற்கு இயேசு, நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்என்றார்.(மத்தேயு 19:21)  என  இறையாட்சியின் தயாரிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார்.

7. சீடத்துவத்தால்...

                   சீடத்துவம் என்பது மலர் மஞ்சம் போன்று மென்மையான ஒன்றல்ல, இலகுவானதும் அல்ல.அது தொடர் வெற்றிகளும் செல்வச் செழிப்பும் நிறைந்ததல்ல . இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்சீடத்துவத்தின் முக்கிய நோக்கம் குருவோடு இருத்தல், அவர் சொல் கேட்டல், அவர் வழி நடத்தல், பிறருக்கு இவர் தான் குரு மற்றும் இது தான் இவரது வழி என்று தானும் நடந்து, பிறரையும் நடக்க வைப்பது. இதைத்தான் திருமுழுக்கு யோவான் செய்தார்.   யோவான் அவரைக் கூர்ந்து பார்த்துதானும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சி பாதையில் நடந்து பிறரும் அந்தப் பாதையில் நடக்க பிறரும் அந்தப் பாதைக்காக தன்னை  தயாரிக்க இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” (யோவான் 1:36) என இறைமகன் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டி அவருக்கு சான்று பகர்ந்தார்.

8. வாழ்வால்...

                    ஒருவர் மற்றவரை பொது இடங்களில் புகழ்தல் என்பது அவருடைய வாழ்க்கையின்  நிலையை நமக்கு எடுத்துரைக்கின்றது. அதுவும் சமுதாயத்தில் நன்கு அறிந்த ஒருவர், குரு, பெரியவர் மற்றும்  தலைவர் நம்மைப் புகழ்வது என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல. அது நமது பண்பையும், உழைப்பையும் மற்றும் பொறுப்புணர்வையும் சுட்டிக்காட்டுகின்றது. நாம் அவரது வாழ்க்கையில் செய்த செயல்களை, அவருக்கு சான்று பகர்ந்ததை எடுத்துரைக்கின்றது. "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்". (மத்தேயு 11:11) என இறைமகன் இயேசு கிறிஸ்துவே திருமுழுக்கு யோவானை புகழ்தல் என்பது, திருமுழுக்கு யோவான் தன்னுடைய பிறப்பினாலும்வாழ்க்கையாலும்வார்த்தையாலும்செயல்களாலும் மற்றும் இறப்பாலும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்து வாழ்ந்ததை எடுத்துக்காட்டுகின்றது.

               ஆம், கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்தவர்களே, நாம் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்த திருவருகைக்காலம் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும், நம் மீட்பராம் கிறிஸ்துவின் பிறப்புக்கு திருமுழுக்கு யோவானை போல சான்று பகர அழைக்கின்றது. வரவிருக்கின்ற கிறிஸ்துவை நம்முடைய வாழ்விலும், சொல்லாலும் மற்றும் செயலாலும் சான்று பகர்வோம்.பிறக்க இருக்கின்ற இயேசு பாலகன், நம் ஒவ்வொருவருக்கும் நிறைவான அருளாசீரை தந்தருள அவருக்குச் சான்று பகர்ந்து, அவரது பிள்ளைகளாய் மாறுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்


 

 

 

 

 

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.  

 

No comments: