Friday, August 30, 2024

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறு - (ஆண்டு- B)- 01-09-2023- ஞாயிற்றுக்கிழமை

                                                       

🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(01-09-2024, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: இணைச்சட்டம் 4: 1-2, 6-8

இரண்டாம் வாசகம்:  யாக்கோபு 1: 17-18, 21b-22, 27

நற்செய்தி: மாற்கு 7: 1-8, 14-15, 21-23


கிறிஸ்தவ வாழ்வு (வார்த்தையோடு & தூய வாழ்வு)

                வட ஆப்பிரிக்காவில் கிபி 354 இல் புனித அகஸ்டின் பிறந்தார். இவர் ஒரு சிறந்த தத்துவஞானி மற்றும் இறையியலாளர் ஆவார். இருப்பினும், இவரது ஆரம்ப ஆண்டுகளில், இவர் உலக இன்பங்கள் மற்றும் அறிவுசார் பெருமைகளில் ஈடுபட்டு இறைவனிடமிருந்து விலகி வாழ்ந்தார். இவருக்காக இவரது தாய் புனித மோனிகா தொடர்ந்து ஜெபித்து வந்தார். ஒரு நாள், தோட்டத்தில் ஒரு குழந்தையின் குரல் "எடுத்து வாசி" என்று அகஸ்டினுக்கு கேட்டது. உடனே அருகிலிருந்த திருவிவிலியத்தை எடுத்து உரோமையர் 13:13-14 திறந்து படித்தார்: “பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.” என்னும் இந்த வார்த்தைகள் புனித அகஸ்டினாரின் இதயத்தைத் துளைத்தன. உண்மையான வாழ்வு உலக ஆசைகளில் இல்லை, மாறாக கடவுளுடைய வார்த்தையின்படி வாழ்வதில்தான் உள்ளது என்பதை அவர் உணர்ந்தார். உள்ளத்தூய்மையை பெற்றார். புனித அகஸ்டினாரின் வாழ்க்கை நாம் வழிதவறினாலும், இறைவார்த்தையால் தூய வாழ்வு பெறுவோம் என்னும் நம்பிக்கையை நம் கிறிஸ்தவ வாழ்வுக்கு தருகிறதுபொதுக்காலத்தின் 22வது ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடு நம் கிறிஸ்தவ வாழ்வைப் பற்றி சிந்திக்க அழைப்பு தருகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் வார்த்தையோடு வாழ்வு மற்றும் தூய வாழ்வு என்னும் இரண்டு வழிகளை நமக்கு சுட்டிக்காட்டி சிந்திக்க அழைக்கிறது.

1. வார்த்தையோடு வாழ்வு
                இன்றைய இரண்டாம் வாசகம் படைப்புகளில் உண்மையை எடுத்துரைக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க இறைவன் விரும்பினார் என்பதை எடுத்துக் கூறுகிறது. பணிவோடு வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் அவ்வார்த்தையின் படி நடங்கள் என்னும் இரண்டு மாபெரும் கட்டளைகளை தந்து இறைவார்த்தையில் நம் வாழ்வு அமைய யாக்கோபு திருமுகம் அழைக்கிறது. இன்றைய  முதல் வாசகத்தில், மோசே இஸ்ராயேல் மக்களிடம் பேசுகிறார், கடவுளின் வார்த்தைகளாம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். கடவுளுடைய சட்டத்தில் சேர்க்கவோ குறைக்கவோ வேண்டாம், ஆனால் அதை உண்மையாகக் கடைப்பிடிக்கும்படி அவர் அவர்களைத் தூண்டுகிறார். மற்ற நாடுகள் இஸ்ராயேல் மக்கள் கடவுளின் வார்த்தையை கடைப்பிடித்து, ஞானமும் அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பர் என்பதை அங்கீகரிப்பர் என்கிறார். இன்றைக்கு நம் வாழ்க்கையில் இறைவார்த்தையின்படி வாழ்வதற்கு அழைப்பு பெறுகின்றோம். இஸ்ராயேல் மக்கள் இறைவார்த்தைக்கு செவிகொடுத்து பிற நாடுகளுக்கு ஒளியாக இருக்க அழைக்கப்பட்டது போல், நாமும் இறைவனுடைய வார்த்தையின்படி வாழ்வதன் மூலம் அவருடைய அன்புக்கும் நீதிக்கும் சாட்சிகளாக இருக்க  அழைக்கப்பட்டுள்ளோம். இதைத்தான் "உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்." என்கிறார் இறைமகன் இயேசு. (மத் 5:16) நல்ல சமாரியன் இயேசுவின் வார்த்தையின்படி செயல்படுபவராக இருக்கிறார். (லூக்கா 10:25-37) சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." (யோவான் 6:68) என்று கூறி வார்த்தையில் தான் வாழ்வு என்கிறார். இன்றைக்கு நாமும் ஆண்டவருடைய வார்த்தையை கேட்பவர்களாக மட்டுமல்லாது அதை அன்றாட வாழ்வில் வாழ்ந்து காட்டுகின்ற கிறிஸ்தவர்களாக வாழ முயற்சிப்போம். நாம் இறைவார்த்தையை நம்முடைய உள்ளத்தில் பணிவோடு ஏற்றுக் கொள்கின்றோமா? அந்த வார்த்தையை வாழ்ந்து காட்டுகின்றோமா? என சிந்தித்துப் பார்ப்போம். இறைவார்த்தையை வாசிப்போம், தியானிப்போம் மற்றும் வாழ்வோம்.

2. தூய வாழ்வு
                    இன்றைய இரண்டாம் வாசகம் தூய வாழ்வு வாழ நமக்கு அழைப்பு கொடுத்து, எது உண்மையான தூய வாழ்வு என்பதையும் எடுத்துக் கூறுகிறது. இது துன்புறும் அனாதைகள் மற்றும் கைம்பெண்களை கவனித்தல்தான் தூய வாழ்வு என்பதையும், இன்னும் உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ளுதல்தான் தூய வாழ்வு என்பதையும் எடுத்துக் கூறுகிறது. தூய வாழ்வின் இந்த இரண்டு நிலைகளையும் நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றுகின்றோமா? இன்றைய நற்செய்தி உள்ளத்தூய்மையை பற்றி எடுத்துக் கூறுகிறது. சீடர்கள் கை கழுவும் சடங்கைப் பின்பற்றாததற்காக பரிசேயர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, எசாயா 29:13 மேற்கோள் காட்டி: "வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது." என்கிறார்மேலும் வெளியிலிருந்து ஒருவருக்குள் செல்வது அல்ல, உள்ளிருந்து வெளிவருவதுதான் அவர்களைத் தீட்டுப்படுத்துகிறது என இயேசு எடுத்துரைத்து பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை மட்டும் தூய வாழ்வுக்கு அழைப்பு கொடுக்கவில்லை, மாறாக நம் ஒவ்வொருவரையும் தூய வாழ்வு வாழ அழைக்கிறார்இன்றைக்கு நமது எண்ணங்கள், நோக்கங்கள் மற்றும் செயல்கள் இறைச்சித்தத்துடன் இணைந்திருக்கும் ஆழமான மனமாற்றத்திற்கு அதாவது தூய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கிறார். மலைப்பொழிவில் இயேசு கூறியது போல், "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்." (மத்தேயு 5:8). எனவே நம் வாழ்வு பாவமற்ற, சுயநலமற்ற வாழ்வாம் தூய வாழ்வாக அமையட்டும்

            கொடைகளும் வரமும் விண்ணக தந்தை தரும் வாழ்வு என்னும் யாக்கோபின் வார்த்தைகளுக்கு ஏற்ப வார்த்தையோடும், தூய உள்ளத்தோடும் கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து விண்ணகத்தந்தையின் கொடைகளையும் வரங்களையும் பெறுவோம்.