🌱விவிலிய விதைகள்🌱
பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
(30 ஏப்ரல் 2023, ஞாயிறு)
வழங்குபவர்
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை
முதல் வாசகம்: திபணி 2: 14a, 36-41
இரண்டாம் வாசகம்: 1 பேதுரு 2: 20b-25
நற்செய்தி: யோவான் 10: 1-10
நல்ல ஆயனாக வாழ...
அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட சிறைதான் 'சிங் சிங்'. கைதிகளாக அங்கிருந்தோர் மிக ஆபத்தான குற்றவாளிகள் என்பதால் இந்தச் சிறைக்கு பொறுப்பேற்க அதிகாரிகள் மிகவும் தயங்கினர். 1921-ம் ஆண்டு இச்சிறைக்குப் பொறுப்பேற்றார் லூயிஸ் லாஸ் என்கிற அதிகாரி. அவர் பொறுப்பேற்றபோது அவரது மனைவி கேத்தரினிடம் பேசியவர்கள் நீங்கள் இந்த சிறைக்குள் அடியெடுத்து வைப்பது ஆபத்து என்று எச்சரித்தனர். “சிறையில் இருக்கும் கைதிகளைப் பாதுகாப்பது எங்கள் இருவரின் கடமை. எனவே எனக்குக் கவலை சிறிதும் இல்லை” என்றார் கேத்தரின். கைதிகளின் குறைகளைப் பொறுமையாகக் கேட்டு பதிவு செய்தார். பார்க்கும் திறன் இழந்த கைதி ஒருவருக்கு ப்ரெய்ல் முறை மூலம் படிக்கக் கற்றுத் தந்தார். பார்வை இருந்தாலும் பேசவும் கேட்கவும் முடியாத கைதி ஒருவன் சொல்ல நினைத்ததைப் புரிந்துகொள்ள சைகை மொழியைக் கற்றுக்கொண்டார். கைதிகளுக்கு வேண்டியதை வாங்கி தந்தார். அவரது கணவர் சிறைக்குப் பொறுப்பேற்ற நாளிலிருந்து 16 ஆண்டுகளில் சிறைக்கைதிகளை தமது பிள்ளைகள்போல் நடத்திய கேத்தரின், 1937ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் ஒரு விபத்தில் இறந்தார். கேத்தரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கைதிகள் கேட்க, சிறைத் துறையிலிருந்து அனுமதி வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கைதிகள் வரிசையில் ஏறத்தாழ ஒரு மைல் தூரம் நடந்துபோய், வழி மாறிய அந்த ஆடுகளுக்குத் தாயாக இருந்து அன்பு காட்டிய கேத்தரினுக்கு தங்கள் கண்ணீரைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு சிறைக்குத் திரும்பினர். கண்காணிக்க யாருமே இல்லாத சூழலிலும் ஒரு கைதிகூட அங்கேயிருந்து தப்ப முயலவில்லை. நம் பொறுப்பில் இருப்போரை, நம்மை நம்பி நம்மைச் சார்ந்திருப்போரை காத்து வழிநடத்தும் நல்ல ஆயர்களாக வாழ அழைப்பு தருகிறது இன்றைய பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிற்றுக்கிழமை. இது நல்ல ஆயன் ஞாயிராகவும் கொண்டாடப்படுகிறது.
விவிலியத்தில் ஆயன்-ஆடுகள்:-
விவிலியத்தில் தொடக்கத்திலிருந்தே ஆயன் மற்றும் ஆடுகளை பற்றி பல பகுதிகளில் வாசிக்கின்றோம். முதல் பெற்றோரின் மகனான ஆபேல் ஆடுகளை மேய்த்தவன் (தொநூ.4:2.) அன்று முதல் இஸ்ராயேல், ஜோர்டான், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து போன்ற மத்திய கிழக்கு நாட்டு மக்களின் முக்கிய தொழில் ஆடுகளை மேய்த்தலாகவே இருந்தது. அவை அம்மக்களின் சொத்தாகக் கருதப்பட்டன. பழைய ஏற்பாட்டில் ஆயர்கள் என்றவுடன் பலர் நமது நினைவில் வருவார்கள். ஆபிரகாம் எகிப்தைவிட்டு வந்தபொழுது கால்நடைகளை உடையவராய் இருந்தார் (தொநூ.3:1-5). ஈசாக்கும் திரளான ஆட்டு மற்றும் மாட்டு மந்தையை உடையவராய் இருந்தார் (தொநூ.26: 13-14). மோசே மீதியான் நாட்டில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபொழுது அவரை எரிகின்ற முட்செடியில் இறைவன் அழைத்தார் (விப.3:1-10). தாவீது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபொழுது சாமுவேலால் அழைக்கப்பட்டு இஸ்ராயேலின் அரசனாக அருட்பொழிவு செய்யப்பட்டார் (1 சாமு.16:1-13). தெக்கோவா என்னும் ஊர் ஆயர்களுக்குள் இருந்த ஆமோஸ் இறைவனுடைய உண்மையான இறைவாக்கினராக கருதப்பட்டார் (ஆமோஸ்1:1). புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னையே நல்ல ஆயனாக எடுத்துரைக்கிறார். ஒத்தமை நற்செய்தியாளர்களான மாற்கு, மத்தேயு மற்றும் லுக்கா இயேசுவை உவமைகளை தருபவராக எடுத்துரைக்கிறார்கள். யோவான் நற்செய்தியாளர் இயேசுவினுடைய உவமைகளை எடுத்துரைக்காமல் இயேசுவையே உவமையாக எடுத்துரைக்கிறார். எடுத்துக்காட்டாக ஒத்தமை நற்செய்தி நூல்கள் திராட்சை தோட்ட குத்தகைக்காரர் உவமையை எடுத்துரைக்கின்ற பொழுது, யோவான் நற்செய்தி "உண்மையான திராட்சை செடி நானே" என இயேசுவையே உவமையாக காட்டுகிறது. அதே போலத்தான் ஒத்தமை நற்செய்தி நூல்கள் காணாமல் போன ஆடு பற்றிய உவமையை எடுத்துரைத்து இயேசுவை உவமைகளை தருபவராக சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இன்றைய நற்செய்தி பகுதி "நல்ல ஆயன்" என்று இயேசுவை உவமையாக காட்டுகிறது.
மூன்று வகையான ஆயர்கள்:-
விவிலியத்தில் மூன்று வகையான ஆயர்களை பற்றி நாம் வாசிக்கின்றோம்.
1. கூலிக்காக...
ஆயர்களில் சிலர் வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை மேய்த்தவர்கள். அந்த வேலைக்குக் கிடைத்த கூலியில்தான் அவர்கள் கவனம் இருந்ததே தவிர, ஆடுகளின் மீது அவர்களுக்கு அக்கறையில்லை. ஆடுகளுக்கு ஓர் ஆபத்து என்றால், ஆடுகளைப் பாதுகாப்பதில் துளியும் அக்கறையின்றி, தங்களைக் காத்துக் கொள்ள ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். எனவேதான் இயேசு சொன்னார்: “கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஓநாய், ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.”
2. திருடுவதற்காக...
இரண்டாவதாக ஆயர்களில் சிலர் தீய மனம் கொண்டு வாழ்ந்தனர். இவர்களின் இலக்கு கூலி அல்ல ஆடுகளே இவர்களின் இலக்கு. ஆடுகளைத் திருடி விற்பது அல்லது அவற்றைக் கொன்று, உண்டு ஏப்பம் விடுவது மட்டுமே இவர்களின் குறிக்கோள். எனவேதான் “திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்கும் அன்றி வேறு எதற்கும் திருடர் வருவதில்லை” என்றார் இயேசு.
3. ஆடுகளுக்காக...
ஒரு நல்ல ஆயனுக்கு ஆடுகளை நன்கு தெரியும். ஆடுகளுக்காகத் தன் உயிரையே தரும் அளவுக்கு ஆடுகளின்மீது ஆழ்ந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். இயேசு நம் பாவங்களிலிருந்து நம்மை மீட்க தன்னுயிர் தந்து நமக்கு நல்ல ஆயனாக இருக்கிறார். நற்செய்தி நூல்கள் ஆயனின் சில பண்புகளை எடுத்துரைக்கின்றது.
அ. ஆடுகளை அறிந்திருத்தல்:
என் ஆடுகளை நான் அறிந்திருக்கிறேன் என்று இயேசு கூறியதன் பொருள் என்ன? கிரேக்கர்கள் அறிதல் எனில் தெரிந்து கொள்ளுதல் என்று அர்த்தம் கொள்வர். ஆனால் யூதர்கள் அதைவிட சிறந்த பொருளைக் கூறுவர். அதாவது தன்னுடைய ஆடுகளிடம் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார் என்பதாகும். இது ஆயனின் தனிப்பட்ட உரிமையையும் ஆழமான கவனிப்பையும் காட்டுகிறது. நல்ல ஆயன் தனது ஆடுகள் அனைத்தின் மீதும் சிறந்த ஆர்வம் வைத்துள்ளார்.
ஆ. பெயர் சொல்லி அழைத்தல்:
நல்ல ஆயர்களுக்கும் போலி ஆயர்களுக்கும் உள்ள வேறுபாடு தமது ஆடுகளை பெயர் சொல்லி அழைக்கும் விதமாகும். ஆயன் ஆடுகளை பெயர் சொல்லி அழைக்கிறார். பெயர் என்பது ஒருவருடைய அடையாளத்தையும் அவருக்கு நாம் தருகின்ற மதிப்பையும் சுட்டிக்காட்டுகிறது. ஆடுகளும் ஆயனின் குரலுக்கு செவி கொடுக்கிறது. பொழுது சாயத் தொடங்கியதும் ஆயன் குரல் கொடுத்து அழைக்க பல திசைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் ஆயனைப் பின்பற்றத் தொடங்கும். அந்த மேய்ப்பன் தனது வாயினால் மெல்லிய ஒலியை எழுப்பி அவைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பான்.
இ. வழிகாட்டுதல்:
நானே வாயில் என்பது ஆடுகளுக்கு ஆயனே வழிகாட்டி என்பதாகும், ஏனெனில் ஆயன் தன் ஆடுகள் எப்பொழுது ஆட்டுக் கொட்டிலுக்குள் செல்ல வேண்டும், எப்பொழுது ஆட்டுக் கொட்டிலை விட்டு வெளியே வர வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றார். ஆயன் ஆடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கின்றார். சரியான வழியை அறிந்தவரும் அந்த வழி என்னவென்று காட்டுபவரும் அந்த வழியில் தானே முன்செல்பவருமே உண்மையில் நல்ல ஆயன். ஆடுகளை வழி நடத்துவதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ஆடுகளை முன்னே விட்டு ஆயன் பின்னே செல்வது இப்படி செல்லுகின்ற பொழுது சிங்கமோ ஓநாயோ ஆடுகளை தின்ன வந்தால் முதலில் தாக்கப்படுவது ஆடுகள் தான் இதற்கு மாறாக ஆயன் ஆடுகளுக்கு முன் செல்லும் போது முதலில் தாக்கப்படுவது ஆயன் தான். இதனால் ஆடுகள் பாதுகாப்பாகவும் சரியான வழியிலும் செல்லும்.
ஈ. பாதுகாத்தல்:
மேய்ப்பன் தனது மந்தையின் தொண்ணூற்றொன்பது ஆடுகளின் மேலும் காணாமல் போன ஆட்டுக்காகவும் அக்கறை உடையவராய் இருக்கிறார். தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான ஓரிடத்தில் விட்டுவிட்டு காணாமல்போன ஆட்டைத் தேடிச் செல்லுகிறார். தன்னைப் பற்றியோ தனது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படாது காணமல்போன ஆட்டின் தேவையைப்பற்றியே அவர் கவலைப்பட்டார். காணமற்போன ஆடு கிடைத்ததும் அதனை எடுத்துத் தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு வீடு திரும்பினார். அத்துடன் அவரது மகிழ்ச்சி நிறைவுபெறவில்லை. வீட்டுக்கு வந்து, நண்பர்களையும், அயலாரையும் அழைத்து மகிழ்கிறான். இவ்வாறாக பகலில் ஓநாய்களிடமிருந்தும் இரவில் திருடர்களிடமிருந்தும் ஆடுகளை பாதுகாப்பவனே நல்ல ஆயன்.
உ. தன்னுயிரை கொடுத்தல்:
"நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்." (யோவான் 10:11) ஆடுகளுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. அவை பொதுவாக சமவெளியிலோ மலையுச்சியிலிருந்து தூரமான இடத்திலோ மேயாது. ஆபத்து எங்கேயோ அவ்விடங்களில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதை நாம் பல இடங்களில் காணமுடியும். அச்சூழல்களில் எல்லாம் ஆடுகளை பாதுகாக்க தன்னுயிரை கொடுக்க முன் வருபவனே நல்ல ஆயன். இன்றைய இரண்டாம் வாசகமும் "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நம் பாவங்களுக்காக இறந்து நமக்கு மீட்பு தந்தார்." என தன்னுயிர் தந்து நல்ல ஆயனாக இயேசு இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கிறது.
நல்லஆயனாக வாழ...
ஆயன் இறைவன் என்றால் ஆடுகளோ மானிடரான நாம்தான். இறைவன் நம்மைப் பாதுகாத்து வழிநடத்துபவர்; நமக்காகத் தன்னுயிரைத் தரும் அளவுக்கு நம்மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்; நமக்கு முன்னே நடந்து நாளை நாம் எதிர்கொள்ளவிருப்பதை எல்லாம் இன்றே சந்தித்து நமக்கு வழிகாட்டும் நல்லவர்; சிந்தை இழந்து அவரது மந்தையைவிட்டு விலகி, துன்பங்களின் முட்புதரில் நாம் சிக்கிக்கொண்டால் மறவாமல் நம்மைத் தேடிவருபவர். அதனால்தான் திருப்பாடல்களில், ஆண்டவரே என் ஆயர்! எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்'' (திருப்பாடல்கள் 23: 1-2) என்று கூறப்பட்டுள்ளது. நல்ல ஆயனாம் இயேசு ஆடுகளாகிய நம் ஒவ்வொருவரையும் அறிந்து, பெயர் சொல்லி அழைத்து, பாதுகாத்து, வழிநடத்தி மற்றும் நமக்காக தன்னுயிரை தந்து வாழ்வளித்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு வெறும் ஆடுகளாக மட்டுமல்லாது, இயேசுவை பின்பற்றி நம்மோடு வாழுகின்ற குடும்பத்தாருக்கும், பிறருக்கும் நல்ல ஆயனாக வாழ அழைப்பு பெறுகின்றோம். இன்றைக்கு எப்பேற்பட்ட ஆயராக நாம் வாழ்கின்றோம்? பணத்திற்கு ஆசைக்கொள்ளும் சுயநல ஆயர்களாக இருக்கிறோமா? அல்லது பிறர் உடமைகளுக்கும் பொருளுக்கும் ஆசைக்கொள்ளும் திருட்டு ஆயர்களாக இருக்கின்றோமா? நல்ல ஆயனாம் இயேசுவின் குணநலன்களை பின்பற்றி வாழ்வில் ஒருவர் மற்றவருக்கு நல்ல ஆயனாக வாழ்வோம். "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" - என்னும் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டும் ஆயன்களே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நல்வழியில் வளர்க்கும் நல்ல ஆயர்களாக திகழ வேண்டும். ஆக பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதலாளிகள், அதிகாரிகள், தலைவர்கள், நீதிபதிகள் எல்லோரும் ஆயர்கள்தான். ஆடுகளின்மீது கொண்ட அக்கறையால் அவர்களைப் பாதுகாக்க அனைத்தும் செய்யும் நல்ல ஆயர்கள் எத்தனை பேர்? "ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்." (திருப்பாடல்கள் 118:20) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நல்ல ஆயனின் வழியில் வாழ்ந்து, நாமும் பிறர் நல்வழி நடக்க நல்ல ஆயர்களாக மாறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.