Thursday, March 30, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு - (ஆண்டு- A) - 02-04-2023 - ஞாயிற்றுக்கிழமை



🌱விவிலிய விதைகள்🌱
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(02 ஏப்ரல் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: எசாயா 50: 4-7
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2: 6-11
நற்செய்தி:  மத்தேயு 26: 14- 27: 66

பயணமும் பாடுகளும்

        ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்காக ஒரு பேருந்தில் பலரும் பயணம் செய்தார்கள். அதில் ஊரில் நல்லவர்
என்று பெயர் பெற்ற ஒரு பெரியவரும், நன்மையே செய்யாத முரடன் ஒருவனும் இருந்தார்கள். பேருந்து நெடுந்தூரம் சென்றதும் திடீரென இடியிடித்து மழை பெய்யத் தொடங்கியது. மரமொன்று வீழ்ந்து முறிந்து பாதை தடைப்பட்டு விட்டது. மழையும் விடவில்லை, அப்போது ஊரில் நல்லவர் கூறினார். இங்கு யாரோ பாவம் செய்தவன் இருக்கிறான் அதனால் தான் இந்த துன்பங்கள் நேர்கின்றது. அதனால் எல்லோரும் அதோ தூரத்தில் இருக்கும் மரத்தை நோக்கி ஒவ்வொருவராக இறங்கிச் சென்று தொட்டுவிட்டு வாருங்கள். யார் பாவம் செய்தவனோ அவனை ஆண்டவன் தண்டிக்கட்டும் என்றார், எல்லோரும் சம்மதித்தனர். அவர்கள் எல்லோரும் அந்த முரடன் மீதுதான் சந்தேகம் கொண்டனர் ஒவ்வொருவராக வண்டியிலிருந்து இறங்கி மரத்தை தொட்டுவிட்டு வந்தனர், எதுவும் நடக்கவில்லை இறுதியாக மிஞ்சியது முரடனும் நல்லவருமே. இப்போது முரட்டு மனிதனின் முறை, நல்லவர்மீது யாரும் சந்தேகப்படவில்லை. அந்த ஏழைமுரடன் வண்டியைவிட்டு இறங்கிச் சென்று மரத்தை தொட்டபோது இடிஇடித்து வானத்திலிருந்து பெரும் மின்னலோடு அந்த இடம்நோக்கி விழுந்தது, அவன் திரும்பிப் பார்த்தான். பேருந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது அவன்மட்டும் உயிர்தப்பியிருந்தான். அப்படியென்றால் அவன்மட்டுமே நல்லவன். நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தல்லவா? இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நமக்கு இதைத்தான் உணர்த்துகிறது. இயேசு நமக்கு விடுதலை தர வந்த அரசர் என யூதர்கள் நினைத்து அவரோடு எருசலேமுக்குள் பயணித்தனர். ஆனால் அவரது பயணமோ மீட்பை தரும் பாடுகளுக்கானது. நம் வாழ்வின் பயணமும் பாடுகளுக்கானது அதுவே மீட்பு என்னும் புதுவாழ்வுக்கானது என்பதை உணர்ந்து வாழ இன்றைய வழிபாடு அழைப்பு தருகிறது. தொடக்கத்தில் தவக்காலத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைதான் பாடுகளின் ஞாயிறாக நினைவு கூறப்பட்டது. ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு பின்பு தவக்காலத்தின் ஆறாவது ஞாயிற்றுக்கிழமை பாடுகளின் ஞாயிறாக நினைவு கூறப்படுகிறது. அதுவே இன்று குருத்து ஞாயிராகவும், புனித வாரத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. இன்றைய திருவழிபாடு இயேசுவின் பயணத்தையும் பாடுகளையும் தியானிக்க நமக்கு அழைப்பு தருகிறது. குருத்தோலை மந்திரித்தல், பவனி, 'ஓசன்னா' கீதம் என இவையனைத்தும் இயேசு கழுதை மீது உட்கார்ந்து எருசலேம் நகருக்குள் சென்ற பயணத்தையும், இன்றைய இறைவார்த்தை வழிபாடு குறிப்பாக நற்செய்தி வாசகம் அவரின் பாடுகளையும் நம் உள்ளங்களில் நினைவுபடுத்துகிறது.

இயேசுவின் பயணம்

இயேசுவின் பயணத்தை பற்றி நன்கு அறிந்து கொள்ள அவர் பயணத்தோடு தொடர்புடையவைகளை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

பெத்தானியா: இது இறைவனின் கொடையின் வீடு என்னும் பொருள்படும். இயேசு தன்னுடைய பணி வாழ்வின் இறுதி நாட்களில் இரவில் அதிகம் பெத்தானியாவில் தங்கியிருக்கிறார். இவ்விடம் ஆறுதலின் இடமாகவும் திகழ்கிறது. இயேசுவின் விண்ணேற்றமும் இறுதியில் இங்கு தான் நிகழ்ந்தது (லூக் 24:50). இங்கிருந்து தான் இயேசு தன்னுடைய பயணத்தை துவங்குகிறார்.

எருசலேம்: இது அமைதியின் நகர் என்று பொருள்படும். ஆனால் வரலாற்றில் அதிகமான வன்முறை இங்கு நடந்திருக்கிறது. இயேசுவின் காலத்திலும் இது ஒரு அமைதியற்ற நகராகவே இருந்தது. அதனால்தான் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்தபோது அதை பார்த்து அழுதார். இயேசுவின் இந்தப் பயணம் அவர் முன்னறிவித்தவாறு (மாற்கு 10:33) எருசலேமில் மீட்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பாடுகளை ஏற்கப்போவதை நோக்கி அமைகிறது.

கழுதை: இயேசு கழுதைக் குட்டியின்மீது அமர்ந்து செல்லும் செயல் இயேசுவின் தாழ்மையைக் குறிக்கும் ஒரு செயல் அல்ல. கீழை நாடுகளில் கழுதை மதிப்பிற்குரிய ஒரு விலங்கு. யூதத் தலைவராகிய யாயிரின் புதல்வர்கள் கோவேறு கழுதைகளின் மேல் பயணம் செய்தனர் (நீத 10:4). அரசு ஆலோசகரான அரித்தோபலும் (2 சாமு 17:23) சவுல் அரசரின் பேரன் மெபிபோசேத்தும் கழுதையின் மீது ஏறிச் சென்றனர் (2 சாமு 19:26). அன்றைய நாளில் போருக்கு போகும் போது அரசர் குதிரை மீது ஏறி செல்வார் மாறாக அமைதி விரும்பி வரும் போது கழுதை மீது ஏறி வருவார். (ஏசா 3:1-3, 1 அரச 4:26). இவ்வாறு இயேசு இச்செயலின் வழியாக தாம் ஒரு நாட்டை விடுதலைக்காய் போரிடச் செல்லும் அரசர் அல்ல; மாறாக வெற்றி என்னும் மீட்பை அருள வந்திருக்கும் இறைமைந்தன் என்பதை காட்டுகின்றார்.

குருத்தோலை: இது வெற்றியின் சின்னமாக கருதப்பட்டது. கி.மு. 164 ஆம் ஆண்டு யூதா மக்கபே எருசலேமை விடுவித்து ஆலயத்தைத் தூய்மைப்படுத்திய நேரத்தில் மக்கள் தழைகளால் அழகு செய்யப்பட்ட கழிகளையும் பசுங்கிளைகளையும் வெற்றியின் சின்னமாகிய குருத்தோலைகளையும் ஏந்திச் சென்றனர் (2 மக் 10:7). யூதாவின் உடன்பிறப்பான சீமோன் கி.மு. 142 இல் பகைவரை அழித்து, எருசலேமுக்கு விடுதலை வழங்கியபோது புகழ்ப்பாக்களையும் நன்றிப்பாக்களையும் பாடிக் கொண்டும் குருத்தோலைகளை பிடித்துக் கொண்டும் இசைக்கருவிகளான யாழ், கைத்தாளம், சுரமண்டலம் ஆகியவற்றை மீட்டிக் கொண்டும் கோட்டைக்குள் நுழைந்தார்கள் (1 மக் 13:51). இவ்வாறு இஸ்ரயேல் மக்களுக்குக் குருத்தோலை, விடுதலையின் வெற்றியின் சின்னமாய் இருந்தது. குருத்தோலைகளை பிடித்துக் கொண்டு இயேசுவை வரவேற்றபோது விடுதலை உணர்வுகள் அவர்களுக்குள் நிரம்பி நின்றன.

ஓசன்னா: எருசலேமில் இயேசுவின் வெற்றிப் பவனியின் போது மக்கள் 118 ஆம் திருப்பாடலை குறிப்பாக 25-26 வசனங்களை பாடினர். ஓசன்னா என்னும் சொல் இப்பாடலில் சிறப்பிடம் பெறுகிறது. ஓசன்னா என்னும் அரமேய-எபிரேயச் சொல்லுக்கு விடுதலை தாரும் - வெற்றி தாரும் என்பது பொருள். காலப்போக்கில் இச்சொல் ஒரு வாழ்த்து சொல்லாக பயன்படுத்தப்பட்டாலும் அதன் முதல் பொருள் விடுதலை தாரும் அல்லது எங்களுக்கு விடுதலை என்பதாகும்.

        உரோமை பேரரசின் கீழ் பல்வேறு வழிகளில் அடிமைப்பட்டு வந்த யூத மக்கள் உரோமை பேரரசை வீழ்த்தி தங்களை மீட்க ஓர் அரசர் வருவார் என்று எதிர்பார்த்து இருந்தனர் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தி நோயாளிகளை குணமாக்கிய இயேசுதான் தாங்கள் எதிர்பார்த்த மெசியா என நம்பி அவரை கழுதையின் மீது உட்கார வைத்து விடுதலையை எடுத்துரைக்கும் ஓசன்னா கீதத்தை முழங்கி எருசலேமுக்குள் அழைத்து சென்றனர். ஆனால் இயேசுவின் கழுதை பயணம் சிலுவை பயணத்திற்கான அடித்தளம் என்பதை அவர்கள் உணரவில்லை. இயேசு எருசலேமில் நுழைவதற்கு முன்பு இலாசரை உயிர்ப்பிப்பதையும், அதை கண்ட பலரும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வதையும் வாசிக்கின்றோம். இது பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் அவரை கொல்ல முயற்சிகளை எடுத்தார்கள். இதை இயேசு நன்கு அறிந்திருந்தும் எருசலேமை நோக்கி பாடுகளுக்காக பயணத்தை துவங்கினார். இயேசுவின் இந்தப் பயணம் பாடுகளை ஏற்று மீட்பு என்னும் இலக்கை நிறைவேற்றுவதற்கு ஓர் ஆரம்ப புள்ளியாகும்.

இயேசுவின் பாடுகள்

        இன்றைய இறைவார்த்தை வழிபாடு இயேசுவின் பாடுகளை தியானிக்க அழைக்கிறது. நற்செய்தி வாசகம் அவரின் இரண்டு விதமான பாடுகளை எடுத்துரைக்கின்றது. இயேசுவின் அநியாய தீர்ப்பு, கனமான சிலுவை, கன்னத்தில் அறை, சாட்டையடி, முள்முடி, விலாவில் ஈட்டி, கீழே விழுதல் மற்றும் சிலுவையில் அறைந்த ஆணிகள் என்னும் உடல் துன்பங்கள் அதாவது பாடுகள். அதுமட்டுமல்லாது இயேசு உள்ளத்து பாடுகளையும் ஏற்றார், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்து பாடிய மக்கள் (மத் 21:9), பிலாத்திடம் "சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!" என்று கூறியதும் (மத் 27:22). மேலும் தன் நண்பர்களாக கருதிய சீடர்களுள் யூதாஸ் பணத்திற்காக முத்தமிட்டு காட்டிக் கொடுத்ததும் (மத் 27:48), பேதுரு மூன்று முறை அவரை மறுதலித்ததும் (மத் 26:70) இயேசு எண்ணற்ற உள்ளத்துப் பாடுகளையும் அனுபவித்தார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.

பாடுகளுக்கான பயணம்

        இயேசு மகிழ்வோடு எருசலேம் நகருக்குள் பயணித்ததை போல நாமும் இன்று இந்த உலகில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பயணத்தில் நமக்கு பாடுகளே வேண்டாம் என்னும் உணர்வை கொண்டிருக்கின்றோம். இயேசுவின் பயணமே பாடுகளுக்காகதான், அவரது பாடுகள் மக்களின் மீட்பிற்காக என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால்தான் பயணத்தையும் பாடுகளையும் இயேசு மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். ஆனால், இயேசுவைப் பின்பற்றிய மக்கள் அவரின் பயணத்தில் மட்டுமே நிலைத்திருக்க விரும்பினார்கள், பாடுகளுக்குள் செல்ல விரும்பவில்லை. இன்று நம்மில் பலரும் உலக ஆசைகளுக்குள் மூழ்கி பாடுகளை வெறுத்து பயணத்தில் மட்டுமே வாழ ஆசை கொள்கின்றோம். பயணம் நம்மை நேரடியாக மீட்பை நோக்கி அழைத்துச் செல்வதில்லை. பயணம் பாடுகளுக்காகவும் பாடுகள் மீட்பு என்னும் புது வாழ்விற்காகவும் என்பதை உணர்ந்து கொள்ள அழைப்பு பெறுகின்றோம். இயேசு நம்முடைய துன்பத்தை அழிப்பதற்காக பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக நாம் துன்பத்தை வாழ்க்கையில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறியவும், அதுவே வாழ்வின் வெற்றிக்கான படிக்கல் என்பதை உணர வேண்டும் என்பதற்காகவே செய்தருளினார். அதனால்தான் “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத்தேயு 16:24) என்றார். துன்பத்தின் வழியே வெற்றி கிடைக்கும். பாடுகள் இயேசுவின் வாழ்வில் கடைசி வார்த்தைகள் அல்ல மாறாக அது புனித வாரத்தின் முதல் வார்த்தை அதனுடைய நிறைவு அவரின் உயிர்ப்பில் இருக்கிறது. நம்மில் பலரது வாழ்வும் பாடுகளை நோக்கி பயணிக்கலாம், ஆனால் அதன் நிறைவு நம் ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு என்னும் புது வாழ்வை தரும். நாம் எவ்வளவு கீழே விழுகிறோம் என்பது முக்கியமல்ல அதன்பின் எப்படி மேலே எழுகிறோம் என்பதே முக்கியம். கிறிஸ்தவர்களின் பாடுகளுக்கு உயிர்ப்பு என்னும் புதுவாழ்வு நிச்சயம் உண்டு என்பதை இயேசுவின் உயிர்ப்பை நோக்கிய அவரின் பயணமும் பாடுகளும் எடுத்துரைக்கிறது. குருத்து ஞாயிறு என்னும் பாடுகளின் ஞாயிறு கிறிஸ்தவர்களின் பயணத்திற்கும் பாடுகளுக்கும் உயிர்ப்பு என்னும் நம்பிக்கையை தருகிறது என்பதை உணர்ந்து கொள்வோம். பாடுகளின் பயணத்திற்கு தயாராவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Thursday, March 23, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 5-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 26-03-2023 - ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
தவக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(26 மார்ச் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: எசேக்கியேல் 37: 12-14
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8: 8-11
நற்செய்தி: யோவான் 11: 1-45

உயிர்ப்பு என்னும் புதுவாழ்வு

'உயிர்ப்பு என்னும் புதுவாழ்வு' இது திருவருகைக் காலத்தின் 5-ஆம் ஞாயிற்றுக் கிழமை நம் உள்ளத்தில் விதைக்கும் மையச் சிந்தனையாகும். இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று வகையான உயிர்ப்பை பற்றி எடுத்துரைக்கிறது.

1. அடிமையிலிருந்து உயிர்ப்பு
மீட்பின் வரலாற்றில் இறைவனை மறந்து நெறிகெட்டு போன யூதநாட்டு மக்கள் பாபிலோனுக்கும், இஸ்ராயேல் மக்கள் அசீரியாவுக்கும் நாடு கடத்தப்பட்டார்கள். அங்கு அவர்கள் அனைத்தையும் இழந்து இறந்து கொண்டிருந்தார்கள். இன்றைய முதல் வாசகத்தில் இந்த மக்களின் அடிமை வாழ்வு பள்ளத்தாக்கில் கிடந்த உலர்ந்த எலும்புகளுக்கு இணையாக இருப்பதாக ஆண்டவர் எசேக்கியலுக்கு கனவில் காட்சி தந்து தெரிவிக்கிறார். மேலும், நீ கனவில் கண்டதை இஸ்ராயேல் மக்களுக்கு போய் எடுத்துரை என்றும், 'இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்' (எசேக் 37:12,14) என்றும் எடுத்துரைத்து அடிமை வாழ்வு என்னும் இறப்பிலிருந்து புதுவாழ்வு என்னும் உயிர்ப்பை அவர்களுக்கு தருவேன் என்கிறார்.

2. பாவத்திலிருந்து உயிர்ப்பு
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பாவத்தால் இறந்து கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து அதிலிருந்து புதுவாழ்வு பெற அழைப்பு பெறுகின்றோம். பாவம் நம்மை சுய இயல்புக்கு ஏற்ப வாழ வைத்து கடவுளிடமிருந்து விலக்கி வைக்கிறது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் 'பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்' (உரோமையர் 8:10) என்கிறது. ஆக நாம் பாவம் என்னும் இறப்பிலிருந்து உயிர்ப்பு பெற இறைமகன் இயேசு கிறிஸ்து அருளும் தூய ஆவியால் நிரப்பப்பட வேண்டும், அப்போது புதுவாழ்வு நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகும்.

3. இறப்பிலிருந்து உயிர்ப்பு
இன்றைய நற்செய்தியில் இயேசு இலாசரின் கல்லறைக்கு சென்று அவரின் இறந்த உடலுக்கு உயிர் கொடுப்பதை வாசிக்கிறோம். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு நாள் நிச்சயம் இறப்போம் என்பதை அறிந்திருந்தாலும் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் இறைமகன் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழ செய்வார் என்பதை இந்நிகழ்வின் மூலம் அறிந்து கொள்கிறோம். “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" என்னும் இயேசுவின் வார்த்தைகள் இதற்கு சான்றாக உள்ளது.

இன்று நாம் சாகவில்லை என்று கூறலாம், ஆனால் இவ்வுலக வாழ்வின் துன்பங்களால், சோதனைகளால், பாவங்களால் மற்றும் இறைவனை விட்டு பிரிந்து உலக ஆசைகளில் அடிமை வாழ்வால் நாம் அனைவரும் இறந்திருக்கின்றோம். 'இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன்' என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப இறந்து அடக்கம் செய்யப்பட்ட நம் வாழ்வின் இத்தகைய துன்பம் மற்றும் பாவம் என்னும் கல்லறைகள் இரண்டு விதங்களில் திறக்கப்படுகிறது.
1. ஆவியால் உயிர்ப்பு
2. நம்பிக்கையால் உயிர்ப்பு
நம் அனைவருக்கும் ஆவியாலும் நம்பிக்கையாலும் உயிர்ப்பு என்னும் புதுவாழ்வு தரப்படும் என்று இன்றைய இறைவார்த்தை வழிபாடு எடுத்துரைக்கிறது.

1. ஆவியால் உயிர்ப்பு
இன்றைய இரண்டாம் வாசகத்தில் 'இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்' (உரோமையர் 8:11) என்னும் பவுலடிகளாரின் வார்த்தைகள் கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆவியாலே உயிர்ப்பு என்பதை உறுதிப்படுத்துகிறது. நம் திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும் தூய ஆவியால் கிறிஸ்துவில் பிறப்படைந்தோம், உறுதிப்பூசுதலின் வழியாக தூய ஆவியால் மீண்டும் நாம் உறுதிப்படுத்தப்பட்டோம், அதே தூய ஆவி நாம் பாவம் மற்றும் துன்பம் என உள்ளத்தால் இறந்தாலும், மேலும் இவ்வுலக வாழ்வை விட்டு உடலால் இறந்தாலும் நமக்கு உயிர்ப்பு என்னும் நிலையான புதுவாழ்வை அளிப்பார்.

2. நம்பிக்கையால் உயிர்ப்பு
"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்" (யோவான் 6:47) என்னும் இயேசுவின் வார்த்தைகள் நம்பிக்கையாலே வாழ்வு என்பதை எடுத்துரைக்கிறது. இன்றைய நற்செய்தியில் வெவ்வேறு நிலைகளில் பலரால் நம்பிக்கையாலே புதுவாழ்வு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

அ. சீடர்களும் நம்பிக்கையும்
இயேசு தன் சீடர்களிடம் பேசும்போது, “இலாசர் இறந்து விட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, “நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில், நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்” (யோவான் 11: 14-15) என்று சீடர்கள் நம்பிக்கை பெறுவதற்காக அவர் இறந்த இலாசரை உயிர்த்தெழத் செய்யப் போவதை முன்னரே அறிவிக்கிறார். மேலும் அவர் கல்லறை முன்பு நின்று கொண்டிருந்தபோது கூட இறைவனிடம், "நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” (யோவான் 11:42) என்று என்று ஜெபிக்கிறார். ஆக இயேசு இறந்த இலாசாரை உயிர்த்தெழச் செய்தது சீடர்களும் அவரை சுற்றியிருந்த அனைவரும் நம்பிக்கையில் வளர வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

ஆ. மார்த்தாவும் நம்பிக்கையும்
இயேசு வந்துகொண்டிருப்பதை கேள்விப்பட்டு மார்த்தா அவரிடம் சென்று “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்”(யோவான் 11: 20-22) என்று எடுத்துரைத்தது அவர் இயேசு மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது. மேலும் இயேசு மார்த்தாவிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார் (யோவான் 11: 25-27). இந்த வார்த்தைகள் அனைத்தும் உயிர்ப்பு என்னும் புதுவாழ்வுக்கு நம்பிக்கையே அடித்தளம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. இயேசு கல்லறை முன்னிருந்து “கல்லை அகற்றி விடுங்கள்” என்றார். அப்போது மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்கிறார். இயேசு மீண்டும் அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” (யோவான் 11: 39-40) என்று நம்பிக்கையே புதுவாழ்வின் பாதை என்பதை உறுதிப்படுத்துகிறார்.

இ. மரியாவும் நம்பிக்கையும்
இயேசு அங்கு வந்தபோது, அவர் இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” (யோவான் 11: 32) என மார்த்தா கூறிய அதே வார்த்தைகளை எடுத்துரைத்து அவரும் இயேசுவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என காட்டினார்.

ஆக இயேசு இலாசரை உயிர்ப்பித்த இந்த நிகழ்வில் மார்த்தாவும், மரியாவும், சீடர்களும் மற்றும் அங்கிருந்த அனைவரும் நம்பிக்கையே புதுவாழ்வு என்பதை உணர்ந்து கொண்டனர். "படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மானிடர் நற்பேறுபெற்றோர்!" (திருப்பாடல் 84 :12) என்னும் திருப்பாடலுக்கு ஏற்ப நாமும் ஆண்டவரில் உயிர்ப்பு என்னும் புதுவாழ்வு பெறுவதற்கு நம்பிக்கையே அடித்தளம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என நம் வாழ்க்கை கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிடுகிறது. இறப்பு என்பது வாழ்வு முடிந்த பிறகு வருவதல்ல மாறாக வாழும் போதும் நாம் பலமுறை இறந்து கொண்டு தான் இருக்கின்றோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு முறையும் பாவம் செய்யும் பொழுதும், மனித உரிமைக்கு எதிராக நடக்கும் பொழுதும், வாழ்வின் துன்பங்களையும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் பொழுதும் இறந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய இறப்புக்குப் பிறகும் உயிர்ப்பு என்னும் புதுவாழ்வு உண்டு அது நாம் கொள்ளும் நம்பிக்கையாலும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் ஆவியாலும் முழுமையாக நமக்கு வந்து சேரும் என்பதை நம்மில் உணர்ந்து வாழ்வோம். ஆண்டவரில் உயிர்ப்போம், புதுவாழ்வு பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.

Monday, March 13, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 4-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 19-03-2023 - ஞாயிற்றுக்கிழமை

 



🌱விவிலிய விதைகள்🌱
தவக்காலத்தின்4-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(19 மார்ச் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்:சாமுவேல் 16: 1b, 6-7, 10-13a
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5: 8-14
நற்செய்தி: யோவான் 9: 1-41

பார்வையற்ற நம் வாழ்வு

எடிசன் வாழ்ந்த காலத்தில் வீதிகளில் எண்ணெய் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. அக்காலத்தில், தான் வசித்து வந்த நியூயார்க் நகரத்தில் மின்சார விளக்குகள் எரிய வேண்டும் என்பது எடிசனின் இலட்சியமும் ஆசையுமாக இருந்தது. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த அந்த காலத்தில் மின்சார விளக்குகள் வருமென்று எடிசனைத் தவிர வேறு யாரும் நம்பவில்லை. 1879-ஆம் ஆண்டு 40 மணி நேரம் தொடர்ந்து எரியக்கூடிய மின்சார விளக்கை எடிசன் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். உலகிலேயே மின்மயமாக்கப்பட்ட முதல் நகரமாக நியூயார்க் மாறியது. ஒரு தனி மனிதனின் உழைப்பு, முயற்சி மற்றும் நம்பிக்கையால் இருளில் இருந்த நகரம் ஒளிக்கு மாறியது. ஒரு தனி மனிதனால் இருள் நிறைந்த உலகை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியுமானால் வானத்தையும் பூமியையும் படைத்த இறைவனால் பாவம், மற்றும் நம்பிக்கையற்ற இருளிலிருந்து நம் ஒவ்வொருவருக்கும் ஒளியை தர முடியும். தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடு இருளாக பார்வையற்று இருக்கும் நம் வாழ்வை இயேசு தருகின்ற ஒளியால் புது வாழ்வு பெற அழைக்கிறது.

இன்றைய நற்செய்தி பார்வையற்றவராக பிறந்தவரைப் பற்றியும், "நானே உலகின் ஒளி" (யோவான் 8:12) என்று கூறிய இயேசு அவரை குணமாக்குவதைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. இங்கு பார்வையற்றவருக்கு கிடைத்தது வெறும் கண் பார்வை மட்டுமல்ல மாறாக நம்பிக்கையின் பார்வையாகும். "அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது." (யோவான் 1:4) என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப பிறவியிலிருந்தே பார்வையற்று இருந்தவருக்கு ஒளி கொடுத்து புது வாழ்வை தருகிறார் இறைமகன் இயேசு. அங்கு பார்வையற்றவரின் பெற்றோர் உண்மையை எடுத்துரைக்கவில்லை (9:20). ஆனால், பார்வையற்றவர் தன் நம்பிக்கையால் இயேசுவுக்கு சான்று பகர்கிறார். இவரது நம்பிக்கைக்கு இரண்டு காரணங்களை குறிப்பிடலாம்.

1. தொடுதல்:
இயேசு நினைத்திருந்தால் தன் வார்த்தைகளாலே அவருக்கு பார்வை கொடுத்திருக்கலாம், ஆனால் அவர் அவரை தொட்டார். இயேசு உமிழ்நீரைச் சேற்றில் கலந்து அவர் கண்களைத் தொட்டுப் பூசினார். தாய் தன் பிள்ளையை தொடுவது போல தொடுகிறார். இயேசுவின் இறைத்தொடுதல் அவருக்கு கண் பார்வையை மட்டும் தரவில்லை மாறாக நம்பிக்கையின் ஒளியையும் தருகிறது.

2. அனுப்புதல்:
இயேசு உமிழ்நீர் கலந்த சேற்றை அவர் கண்களில் பூசியது மட்டுமல்லாது அவரை சிலோவாம் குளத்தில் கழுவ அனுப்புகின்றார். (இங்கு சிலோவாம் என்றால் அனுப்பப்படுதல் என்பது பொருள்) அனுப்பப்படுதல் இறையழைப்பை ஏற்று, தான் பெற்ற ஒளியை பிறருக்கும் தருவதன் அடையாளமாகும். இதனால் தான் தன்னை குணப்படுத்தியவர் நிச்சயமாக ஒரு இறைவாக்கினர் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

ஆன்மீக குருடர்கள்
பிறவிக்குருடர் பார்வை பெற்று இயேசு யார் என்ற உண்மையை கண்டு கொண்டார். ஆனால் பரிசேயர்களோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர்களின் அவநம்பிக்கை இயேசு தான் குணமாக்கினார் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்க செய்தது. ஒய்வு நாளை மீறிய செயலாகவே பார்க்க செய்தது. இவர்கள் இயேசுவிலிருந்த இரக்கத்தை, நன்மைத்தனத்தை மற்றும் பிறரது துன்பத்தைப் போக்கும் நல் மனதைக் காண தவறியவர்கள். பார்வையோடு இருந்த பரிசேயர்கள் அதனை கண்டுணராமல் சபிக்கவும், சட்டத்தை மீறவும் மற்றும் இயேசுவை துன்புறுத்தவும் முயன்றனர். இதுவே இவர்களை ஆன்மீகக் குருடர்களாக மாற்றியது. இன்றைய முதல் வாசகத்திலும் ஆண்டவரின் பார்வையில் தாவீது அழைக்கப்படுகின்றார். இஸ்ராயேல் மக்களை வழிநடத்த முழு நம்பிக்கையோடு அவரது கையில் ஒப்படைக்கின்றார். ஆண்டவர் தாவீதையும் மற்றும் பார்வையற்றவரையும் பார்த்ததை போல நம் ஒவ்வொருவரையும் பார்க்கிறார். அப்பார்வையற்றவரை போல நாமும் குருடர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல வேளைகளில் பரிசேயர்களை போல இறைவன் மீது நம்பிக்கையின்றி ஆன்மீக குருடர்களாக இருக்கிறோம்.

பார்வையற்ற நம் வாழ்வு
இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையாளர்கள் ஒளி பெறுவதைப் பற்றியும், ஒளியாய் இருப்பதை பற்றியும் எடுத்துரைக்கிறது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நம்பிக்கையற்று உண்மையை எடுத்துரைக்காமல் பார்வையற்றவர்களாக இருளில் இருக்கின்றோம். கிறிஸ்தவர்களாக இருந்தும் இயேசுவுக்கு நமது வார்த்தையாலும், செயலாலும் மற்றும் வாழ்வாளும் சான்று பகராமல் பார்வையற்றவர்களாக இருக்கின்றோம். சாட்சியமும் நம்பிக்கையும் மற்றும் தூய்மையும் ஆண்டவரில் ஒளி பெற்றவர்களாக நம்மை வாழ வைக்கிறது. நாம் உடலளவில் பார்வையுள்ளவர்களாக இருந்தாலும், நம்பிக்கையின்மையால், பாவ வாழ்வால் மற்றும் சான்று பகராமையால் நமது உள்ளத்தில் மற்றும் ஆன்மீக வாழ்வில் பார்வையற்றவர்களாக இருக்கின்றோம். இயேசுவினுடைய பணி பார்வையற்ற நமக்கு ஒளி தந்து வாழ்வு கொடுப்பதாகும். இதைத்தான் “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்னும் இயேசுவின் வார்த்தைகள் எடுத்துரைக்கின்றன. (யோவான் 14:6) கடலில் தத்தளிக்கும் கப்பல் கலங்கரை விளக்கை நோக்கி செல்வது போல நாமும் இயேசு என்னும் ஒளியை நோக்கி பயணிப்போம். நம் கிறிஸ்தவ வாழ்வை புதுப்பிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Wednesday, March 8, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 3-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 12-03-2023 - ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱
தவக்காலத்தின் 3-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(12 மார்ச் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 17: 3-7
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5: 1-2, 5-8
நற்செய்தி: யோவான் 4: 5-42

நிலைவாழ்வு தரும் தண்ணீர்

ஒருவர் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார். அங்கிருந்த பணம் கொடுப்பவரிடம் சீட்டு எழுதிக் கொடுத்து பணத்தைப் பெற்று, அதை எண்ணிய போது ஒரு தாள் குறைவாக இருப்பது போல் தோன்றியது. அப்போது அவர் பணம் கொடுப்பவரிடம் இதை இன்னொரு முறை இயந்திரத்தில் எண்ணி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அவரோ ஏன் ஒரு தாள் குறைவாக இருக்கிறதா? இப்பொழுது அதற்கெல்லாம் நேரமில்லை, நீங்களே சரியாக எண்ணுங்கள் என்று கூறினாராம். அதற்கு அந்த நபர் இல்லை ஒரு தாள் கூட இருப்பது போல் தெரிகிறது என்று சொல்ல, உடனே பணம் கொடுப்பவர் அதை வேகமாக வாங்கி ஒரு முறைக்கு நான்கு முறை இயந்திரத்திலும் கையிலும் எண்ணி கொடுத்தாராம். இதிலிருந்து நாம் தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பேசினால் நிச்சயம் மாற்றமிருக்கும் என்பதை உணர்கிறோம். இன்றைய நற்செய்தியிலும் இயேசு சமாரியப் பெண்ணோடு சரியான வார்த்தைகளை பேசி அவருடைய தாகங்களுக்கு வாழ்வு தரும் தண்ணீரைத் தந்து மாற்றத்தை ஏற்படுத்துவதை பார்க்கின்றோம்.

இயேசுவும் சமாரியர்களும்

இயேசு தன்னுடைய மூன்று ஆண்டு பணி வாழ்வில் பல்வேறு சூழல்களில் சமாரியர்களை சந்தித்திருக்கிறார். லூக்கா 10: 25-37 வசனங்களில் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு நல்ல சமாரியர் உவமையை எடுத்துரைக்கிறார். உயிருக்காக போராடிக் கொண்டிருந்தவரை அதாவது குருவும் மற்றும் லேவியரும் கைவிட்டுப் போனவரை சமாரியர் ஒருவர் காப்பாற்றுவதை எடுத்துரைக்கிறார். அதுமட்டுமல்ல லூக்கா 17 :11 -17 வசனங்களை வாசிக்கின்ற பொழுது 10 தொழுநோயாளர்கள் இயேசுவிடம் வருகின்றார்கள். எல்லோரும் இயேசுவின் வார்த்தையை கேட்டு குருவிடம் சென்று குணமடைந்த போது, ஒரு நபர் மட்டும் அதாவது சமாரியர் மட்டும் இயேசுவிடம் நன்றி கூற வருவதை பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு கிணற்று அருகிலிருந்த சமாரிய பெண்ணை சந்திப்பதை வாசிக்கிறோம். இவ்வாறு இயேசு பல வேளைகளில் சமாரியர்களை சந்தித்திருந்தாலும், நற்செய்தியில் சமாரியப் பெண்ணோடு உரையாடி அவர் தாகத்திற்கு வாழ்வு தரும் தண்ணீரை தருவது புது அனுபவமாக அமைகிறது. இன்றைக்கு அதே அனுபவத்தை நாமும் பெற்று இயேசு தரும் வாழ்வின் தண்ணீரை நமதாக்க அழைக்கப்படுகின்றோம். சமாரியப் பெண்ணுக்கு இரண்டு
விதமான தாகங்கள் இருந்தது.

1. சமுதாய தாகம்

கிமு 722-லிருந்து யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் எப்போதும் பகைமையுணர்வு இருந்து வந்தது. யூதர்கள் உயர்ந்தவர்கள், அறிவாளிகள் மற்றும் ஞானிகள் என்ற ஒரு நிலைப்பாடும், சமாரியர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற ஒரு நிலைப்பாடும் இருந்த சூழல் அது. அதுமட்டுமல்லாது யூதருக்கும் சமாரியருக்கும் இடையே பல்வேறு நிகழ்வுகளால் உறவு சீர்குலைந்து இருந்தது. அவர்கள் ஒருவர் மற்றவரை வெறுத்தனர், அவர்களிடையே பகைமை இருந்தது. அதனால் தான் யூதர்கள் எருசலேமுக்கு செல்லுகின்ற பொழுது சமாரியாவின் வழியாக செல்லாமல், யோர்தான் நதியை கடந்து 'பெரேயா' வழியாக அதாவது இரு மடங்கு தூரம் அதிகமாக பயணித்தார்கள். அதனால்தான் இயேசு குடிக்க தண்ணீர் கேட்கின்ற போது, நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்க தண்ணீர் கேட்பது எப்படி? என கேட்கிறார். அது மட்டுமல்லாது இயேசு வாழ்ந்த காலத்தில், ஆண்கள் சமூகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதினார்கள். இந்த சமுதாயம் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரு தவிப்பும் தாகமும் இந்த சமாரிய பெண்ணில் இருந்தது.

2. சமய தாகம்

இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை அதாவது இஸ்ராயேலை மூன்று பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள். வடக்கே கலிலேயா தெற்கே யூதேயா, கலிலேயோவுக்கும் யூதேயாவுக்கும் நடுவே சமாரியா இருந்தது. அந்தச் சமாரியா பகுதியில் சிக்கார் என்னும் ஊர் இருந்தது, இது பழைய ஏற்பாட்டு மரபுகளில் மைய இடமாகவும் சமாரியர்களின் வழிபாட்டுத் தலமாகவும் இருந்தது. சமாரியர்களின் நம்பிக்கையின் மையமான சிக்காரில் சமாரியப் பெண் சமய தாகத்தோடு இருக்கிறார். அந்த ஊரிலே ஈசாக்கின் மகன் யாக்கோபு அவருடைய மகன் யோசேப்புக்குக் கொடுத்த கிணறு இருந்தது. அதன் நீர் சுவையாக இருந்ததால் ஊர் மக்கள் எல்லோரும் அதில் தண்ணீர் எடுக்க வருவார்கள். அப்படி தனது உடல் தாகத்தைப் போக்க நினைத்த சமாரியப் பெண்ணின் உள்ளத்தில் சமய தாகமும் இருந்தது. ஆம், ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என இயேசு சொல்வது சமாரியர்கள் ஆசீரிய நாடு கடத்தலுக்கு பின் வழிபட்டு வந்த ஐந்து பிற இனத்து (அதாவது பாபிலோன், ஊத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம் நகரத்து தெய்வங்களை) வழிபட்டதை குறிப்பதாக இருக்கிறது. (2 அரச 17: 24 தொ) ஏனெனில் 'பாகால்' என்கிற எபிரேய வார்த்தைக்கு கணவர் மற்றும் பிற இனத்து கடவுள் என்று இரு பொருள் இருந்தது. ஆக இவ்வாறு சமாரியர்கள் பிற தெய்வங்களை வழிபட்டு சமய தாகத்தில் இருந்தனர். எனவேதான் இறைமகன் இயேசு கிறிஸ்து உம்முடன் இருப்பவர் உன் கணவர் அல்ல என கூறுகிறார். இது சமாரியப் பெண் வழிபடும் கடவுள் உண்மை கடவுள் இல்லை என்பதை காட்டுகிறது.

இவ்வாறு இயேசு சந்தித்த சமாரியப் பெண் சமய மற்றும் சமுதாய தாகங்களில் தவித்திருந்தாள். இதை இயேசு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்னும் வார்த்தையில் தொடங்கி தன் உரையாடலின் வழியாய் உணர வைத்து வாழ்வு தரும் தண்ணீரை கொடுத்து புது வாழ்வை தருகிறார்.

வாழ்வு தரும் தண்ணீர்

நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே மனம் திரும்பி வாழ அழைக்க வந்தேன் என இயேசு எடுத்துரைத்ததற்கு ஏற்ப பாவியான சமாரிய பெண்ணின் சமுதாய மற்றும் சமய தாகத்தை வாழ்வு தரும் தண்ணீரைத் தந்து போக்குகிறார். பழைய ஏற்பாட்டில் வாழ்வு தரும் தண்ணீர் தூய ஆவியாக சுட்டிக்காட்டப்படுகிறது. "நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்."(எசே 36:25-26) மற்றும் "தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்" (எசாயா 44:3) மேலும் யோவான் நற்செய்தி 7வது அதிகாரம் 37 & 39 இறைவார்த்தைகளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக் குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். என ஆவியாரே வாழ்வு தரும் தண்ணீர் என மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது." இயேசு சமாரியப் பெண்ணோடு உரையாடுகையில் அவர் சிறிது சிறிதாக இயேசுவின் மீது நம்பிக்கையில் வளர்வதைப் பார்க்கின்றோம். அதனால்தான் 'ஐயா' என்று மரியாதையுடன் அழைக்கத் தொடங்கிய (11:5) சமாரியப் பெண் இயேசுவை ஒரு இறைவாக்கினராகப் பார்க்கத் தொடங்குகிறார் (19). அவரது நம்பிக்கை இன்னும் அதிகமாக, இயேசுவை அவர் மெசியா எனக் கண்டு கொள்கிறார். இறுதியாக அவரை உலக மீட்பராக ஏற்றுக் கொண்டு சாட்சியும் பகர்கிறார். இவ்வாறு இயேசு சமாரியப் பெண்ணுக்கு வாழ்வு தரும் தூய ஆவியை தருகிறார்.

நம் வாழ்வின் தாகங்கள்

இயேசு தந்த வாழ்வு தரும் தண்ணீரைப் பெற்ற சமாரியப் பெண் இயேசுவே மெசியா என உலகிற்கு அறிக்கையிட்ட முதல் நற்செய்தியாளர் ஆகிறார். இந்த நற்செய்தி அறிவிப்பு தான் இவர் பாவ வாழ்விலிருந்து புது வாழ்வுக்கு கடந்த சென்றதன் அடையாளமாகிறது. இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவருமே சமாரியப் பெண்ணை போல பல்வேறு தாகங்களுக்கு உட்பட்டிருக்கிறோம். சமய, சமுதாய, இன, மொழி, குடும்ப மற்றும் எண்ணற்ற உள்ளத்து தாகங்கள் அன்றாடம் நம்மை நிலைவாழ்வு தருகின்ற நீருக்காக ஏங்க வைத்துக் கொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குமே வாழ்வு தருகின்ற தண்ணீரை தருபவராக இறைமகன் இயேசு இருக்கின்றார். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகமும், "நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது." (உரோமையர் 5:5) என்கிறது. நம்பிக்கையோடு அவர் பாதம் சரணடைகின்ற ஒவ்வொருவருக்கும் நிலைவாழ்வு தரும் தண்ணீரால் புது வாழ்வை அவர் தருவார். கல்வாரி மலையில் திருச்சிலுவையில் தாகமாய் இருக்கிறது என்று இவ்வுலகின் பாவமென்னும் தாகத்தை தீர்த்து துணையாளராம் தூய ஆவியின் வழியாய் நிலைவாழ்வு தரும் தண்ணீரை தந்த இயேசு நம் ஒவ்வொருவருக்கும் அதை என்றும் தர காத்திருக்கிறார். நம்பிக்கையோடு அவரிடம் செல்வோம், புது வாழ்வு பெறுவோம். இறைவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


Wednesday, March 1, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds - Tamil Sunday Homily - தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 2-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A) - 05-03-2023 - ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
தவக்காலத்தின் 2-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(05 மார்ச் 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: தொநூ 12: 1-4a
இரண்டாம் வாசகம்:  2 திமொ 1: 8b-10
நற்செய்தி: மத் 17: 1-9

மாற்றம் பெற்று வாழ...

மகாத்மா காந்தியின் மகனான மணிலாள் காந்தி தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் நகர் அருகேயிருந்த ஒரு கிராமத்தில் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார். ஒரு நாள் அவர் தன் மகன் அருண் காந்தியோடு டர்பன் நகருக்கு ஒரு கருத்தரங்கிற்காக காரில் சென்றார். செல்லும் வழியில் கார் பழுதானது, எனவே மணிலாள் காந்தி தன் மகன் அருன் காந்தியிடம் காரை சரிபார்த்து கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர சொன்னார். பல நாட்களாக அருன் காந்திக்கு திரையரங்கு சென்று திரைப்படம் பார்க்க வேண்டுமென்று ஆசை, ஆனால் அதற்கு தன் தந்தை அனுமதிக்கமாட்டார் என உணர்ந்த அவர், காரை பழுது பார்க்க கொடுத்த இடத்தின் அருகேயிருந்த திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்த்துவிட்டு வந்தார் ஆனால் அதற்குள் நேரமாகிவிட்டது. அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு கருத்தரங்கு நடைபெற்ற இடத்திற்கு சென்றார். அங்கு அவருடைய தந்தை மணிலாள் காந்தி அவருக்காக காத்திருந்தார். அவர் கேட்பதற்கு முன்பே அருண் காந்தி தன் தந்தையிடம் 'காரில் பெரிய பிரச்சனை இருந்ததால் சரி செய்ய இவ்வளவு நேரமாகி விட்டது' என்று கூறினார். உடனே அவருடைய தந்தை, 'சரி நான் இன்று வீட்டிற்கு நடந்தே வருகிறேன், நீ கார் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்' என்று கூறினார். உடனே அருண் காந்தியோ, 'ஏன் நடந்து வருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு அவரது தந்தை 'நான் இன்னும் என்னுடைய மகனை நேர்மையோடு இருக்கவும் மற்றும் உண்மையைப் பேசவும் கற்றுக் கொடுக்கவில்லை எனவே எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்கிறேன்' என்று கூறினார். மேலும் 'கருத்தரங்கு முடிந்தவுடன் அதாவது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, நான் கார் பழுது பார்க்குமிடத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது கார் தயாராகி விட்டது என்றார்கள்' என்று சொன்னார். அன்று மணிலாள் காந்தி தனக்கு கொடுத்துக் கொண்ட தண்டனை அருண் காந்திக்கு புது மாற்றத்தை கொடுத்தது, வாழ்நாள் முழுவதும் நேர்மையோடும் வாழ வகுத்தது. இதைப் போலத்தான் இறைமகன் இயேசு நாம் ஒவ்வொருவரும் பாவத்திலிருந்து மனமாற்றம் பெறுவதற்கு தன்னில் சிலுவை என்னும் பெரும் துன்பத்தை ஏற்றுக்கொண்டார்.

நாம் பயணிக்கும் இந்த தவக்காலம் இருளிலிருந்து ஒளிக்கு மாறவும், பழையதிலிருந்து புதுமைக்கு மாறவும், நிழலிலிருந்து நிஜத்திற்கு மாறவும் மற்றும் பொய்மையிலிருந்து உண்மைக்கு மாறவும் அழைப்பு தருகிறது. ஆக தவக்காலம் என்னும் மாற்றத்தின் காலம் நமக்கு தரும் அழைப்பையேற்று நாமும் நம் வாழ்வை மாற்றுவோம். இன்றைக்கு நாம் அடியெடுத்து வைத்திருக்கின்ற தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடும் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் மாற்றம் பெற்று வாழ அழைப்பு தருகிறது. முதல் வாசகம் இறைவன் ஆபிரகாமை அழைத்ததையும் மற்றும் அவருக்கு கொடுத்த வாக்குறுதியையும் எடுத்துரைக்கிறது. ஆபிரகாம் நாடு மற்றும் வீடு இவைகளை விட்டுவிட்டு அறியாத புதியதொரு இடத்திற்கு செல்ல அதாவது புதுவாழ்வு என்னும் மாற்றத்தை பெற அழைக்கப்பட்டார். நற்செய்தி வாசகம் இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை எடுத்துரைக்கிறது. இவ்விரண்டு நிகழ்விலும் இன்றைய மாற்றம்தான் நாளைய வாழ்வாக மாறும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இயேசுவின் உருமாற்றம் நம் வாழ்வு மாற்றம் பெறுவதற்கு அழைப்பு தருகிறது. இயேசுவின் உருமாற்றம் இரண்டு உண்மைகளை புரிந்து கொள்ளவும் அதனால் நம் வாழ்வு மாற்றம் பெற்றிடவும் அழைப்பு தருகிறது.

1. இறைச்சாயலை அறிந்து கொள்ள...

இறைவனின் மகிமையை மற்றும் மாட்சியை இயேசுவின் உருமாற்றம் வெளிக்கொணர்ந்தது. இயேசுவோடு உடன் வாழ்ந்த சீடர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் அவர் ஜெபிப்பதையும், அற்புதங்கள் செய்வதையும் மற்றும் பல்வேறு இடங்களில் நற்செய்தியை அறிவிப்பதையும் பார்த்தவர்கள், ஆனால் முதல் முறையாக அவருடைய இறைச்சாயலை வெளிப்படுத்தும் உருமாற்றத்தை அதாவது மகிமையை கண்டுணறுகிறார்கள். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் "அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின." (மத்தேயு 17:2). என வாசிக்கின்றோம். சீடர்கள் இயேசுவிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” இது வெறும் மக்களின் கூற்று மட்டுமல்லாது சீடர்களிடமும் அவ்வபோது எழுந்த சந்தேகங்களாகும். இவையனைத்து கேள்விகளுக்கும் பதில் தான் இயேசுவின் உருமாற்றம், இயேசு அவர்கள் நினைப்பது போல திருமுழுக்கு யோவானோ, எலியாவோ அல்லது இறைவாக்கினர்களுள் ஒருவரோ அல்ல மாறாக அவர் இறைமகன். இறைச்சாயலை கொண்டு மனித உருவில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதை அவர்களுக்கு இது உணர்த்தியது, அதனால்தான் இறைச்சட்டங்களின் அடையாளமாக மோசேயும், இறைவாக்கினர்களின் அடையாளமாக எலியாவும் இயேசுவின் உருமாற்றத்தில் தோன்றிய போது அச்சீடர்கள் முகங்குப்புற கீழே விழுந்து, இயேசு ஒரு சாதாரண மனிதர் அல்ல மாறாக இறைமகன் என்பதை உணர்ந்தார்கள். இயேசுவின் உருமாற்றம் சீடர்களை மட்டுமல்ல அது நம் ஒவ்வொருவரையும் இறைவன் தந்த இயேசுவை, நம் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? மற்றும் அதை உணர்ந்திருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்க அழைப்பு தருகிறது. சீடர்கள் இயேசுவின் உருமாற்றத்தில் அவரை கண்டு கொண்டது போல இன்றைக்கு நாமும் திருவருட்சாதனங்களிலும் குறிப்பாக நற்கருணையிலும் தன்னையே உருமாற்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இயேசுவை உணர மற்றும் வாழ்வாக்க அதனால் மாற்றம் பெற அழைப்பு பெறுகின்றோம். "உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன." (மத்தேயு 13:16,17) என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப இறைவனை நம்முடைய வாழ்வில் கண்டுகொண்டு அவரில் பேறுபெற்றவர்களாக வாழ நாமும் மனமாற்றம் பெறுவோம்.

2. இறைப்பணியை அறிந்து கொள்ள...

"மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்." (லூக்கா 9:30,31) என லூக்கா நற்செய்தியாளர் எடுத்துரைக்கும் இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் எருசலேமில் நிறைவேறவிருந்த இறப்பைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருப்பது அவரின் பணி வாழ்வை அதாவது மீட்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மனித உருவெடுத்ததை மற்றும் தன்னுயிர் அளிப்பதை சீடர்கள் அறிந்து கொள்ளவும், அவர் விட்டுச் செல்கின்ற இறையாட்சியின் விழுமியங்களை அதாவது பணி வாழ்வை தொடர்ந்தாற்ற அழைப்பு தருகிறது. பழைய ஏற்பாட்டில் விடுதலைக்காய் இஸ்ராயேல் மக்கள் தொடர்ந்த பாலைவன பயணத்தைப் போல இறைமகன் இயேசுவும் நம் ஒவ்வொருவருக்கும் மீட்பு தருவதற்காக சிலுவையின் வழியாய் கல்வாரி மலை நோக்கி தன் பணிவாழ்வில் பயணிக்கிறார். இது அவரது உயிர்ப்பின் வழியாக நம் ஒவ்வொருவருக்கும் நிறை வாழ்வு என்னும் இறையாட்சியை தரும். இயேசுவின் உருமாற்றத்தை அதாவது அவரது மாட்சியை பார்த்த பேதுரு நாம் இங்கேயே இருப்பது நல்லது என்று எடுத்துரைப்பது அவர் கண்ட அந்த மாட்சிமையிலும் மகிழ்ச்சியிலுமே திளைத்திருக்க ஆசை கொள்கிறார் என்பதை எடுத்துரைக்கிறது. ஆனால் இறைமைந்தன் இயேசு நாம் எப்போதும் இம்மகிழ்ச்சியிலே திளைத்திருக்க முடியாது. இம்மகிழ்ச்சியில் மட்டுமல்லாது வாழ்வில் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொகுசு நிலையிலிருந்து வாழ்வின் கஷ்டங்களையும், துன்பங்களையும் மற்றும் சிலுவைகளையும் சுமக்கின்ற மாற்றம் பெறுவதற்கு இயேசு தன் உருமாற்றத்தின் வழியாக அழைப்பு தருகிறார். எனவேதான் தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (மத்தேயு 16:24) மற்றும் "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன்." (யோவான் 12:24) என்கிறார். இயேசுவின் உருமாற்றம் சீடர்கள் அவருடைய இறப்பை மற்றும் பணி வாழ்வை அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாது, அவர் சுமந்த சிலுவையை சுமந்து பணி வாழ்வை தொடர வேண்டும் என்பதற்காக ஆகும், இன்றைக்கு அதே அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது.

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது. முன்னேற்றம் வேண்டுமெனில், மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். மாற்றங்கள் நம்மை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கின்றன. நமக்கு புதிய தேடல்கள், புதிய வாய்ப்புகளை அறிமுகம் செய்து வைக்கின்றன. இறைமைந்தன் இயேசுவை கண்டுணர்ந்து, வாழ்வின் சிலுவைகளை ஏற்று அவர் பணியை தொடர்ந்தாற்றுகின்ற கிறிஸ்தவர்களாக வாழ மனமாற்றம் பெறுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.