Thursday, January 26, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 29-01-2023- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 4-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(29 ஜனவரி 2023, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: செப்பனியா 2: 3, 3: 12-13
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1: 26-31
நற்செய்தி: மத்தேயு 5: 1-12a

பேறுபெற்ற உள்ளங்கள்

ஒரு நாள் சாவியைப்பார்த்து சுத்தியல் கேட்டது. உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் பூட்டை திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ மிகவும் எளிதாக திறந்து விடுகிறாய் அது எப்படி? அதற்கு சாவி சொன்னது, நீ என்னை விட பலசாலி தான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய் . ஆனால் நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன் என்றது. அன்பார்ந்தவர்களே, இறைவனும் நம் தலையையோ அல்லது உடலையோ தொடுவதில்லை மற்றும் பார்ப்பதில்லை மாறாக அவர் நம் உள்ளத்தை தொடுகிறார் மற்றும் பார்க்கிறார். நமது உள்ளங்கள் இறைவனுக்கு உகந்ததாக மாற வேண்டுமென்றால் அவை பேறுபெற்ற உள்ளங்களாக இருக்க வேண்டும். நாம் எப்பேர்ப்பட்ட உள்ளங்களை கொண்டிருந்தால் பேறுபெற்றவர்களாக வாழலாம் என்பதை எடுத்துரைக்கின்றது இன்றைய நற்செய்தி. இயேசுவின் மலைப்பொழிவு எட்டு விதமான உள்ளங்களை எடுத்துரைக்கிறது. இத்தகைய பண்புகளை நிறைந்த உள்ளமாக நமது உள்ளங்கள் மாறுகின்ற பொழுது நாம் இறைவனில் பேறுபெற்றவர்களாகவோம்.

1. ஏழ்மையின் உள்ளம்
(“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.”)
இங்கு குறிப்பிடப்படுகின்ற ஏழ்மை பொருளாதாரம் சார்ந்தது அல்ல மாறாக ஆன்மீகம் சார்ந்தது. அதாவது இது தன்னைச் சார்ந்த வாழ்வையோ அல்லது இவ்வுலகை சார்ந்த வாழ்வையோ எடுத்துரைக்காமல் இறைவனைச் சார்ந்த வாழ்வை எடுத்துரைக்கிறது, இறைவன் முன் நாம் எல்லோரும் ஏழ்மையான அதாவது வெறுமையான உள்ளத்தோராய் நம்மை முழுவதும் அர்ப்பணிக்க அழைப்பு பெறுகின்றோம். இத்தகைய உள்ளம் நம்மை இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு வாழ்வை வாழவும், நாம் செய்த தவறுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்கவும், நம்முடன் வாழ்கின்ற நம்பிக்கையாளர்களோடு நல்லுறவு கொண்டு வாழவும் மற்றும் இறைவன் கொடுத்த இந்த அழகிய வாழ்வை முழுமையாக அவர் வழியில் வாழவும் அழைப்புத் தருகிறது.

2. மன்னிப்பின் உள்ளம்
(“துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.”)
பொதுவாக நம்முடன் வாழ்ந்து மரித்தவர்களுடைய இழப்பை எண்ணி நாம் துயருறுவோம் அல்லது உடைந்த உள்ளத்தோராய் வாழ்வோம். இங்கு குறிப்பிடப்படுகின்ற உடைந்த உள்ளம் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்ற உள்ளம். இது உலகைச் சார்ந்த துயரம் அல்ல மாறாக நமது ஆன்மீக வாழ்வைச் சார்ந்த துயரம். நமது ஆன்மீக வாழ்வில் இறைவனை மறந்து அவருடன் பேச மற்றும் அவரை பார்க்க மறந்த தருணங்களை நினைத்து துயருற்று உடைந்த உள்ளத்தோராய் மீண்டும் அவரிடம் வருகின்ற ஒர் உள்ளத்தை இது சுட்டிக்காட்டுகிறது.

3. தாழ்ச்சியின் உள்ளம்
(“கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.”)
இது தாழ்ச்சியான ஒரு வாழ்வுக்கு அழைப்பு தருகிறது. தாழ்ச்சி என்பது அடிமை வாழ்வுக்கு கொடுக்க கூடிய அழைப்பு அல்ல, மாறாக வலுவான மற்றும் உறுதியான உடலோடு தாழ்ச்சியான உள்ளத்தை கொண்டிருக்க கொடுக்கும் அழைப்பாகும். இது ஆணவத்தையும் மற்றும் அதிகாரத்தையும் தூக்கியெறிந்து இறைவன் முன் தாழ்ச்சியோடு அர்ப்பணிக்கின்ற ஒர் வாழ்வாகும். தாழ்ச்சியான உள்ளம் கொண்டோர் பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு மன்னிக்கும் எண்ணத்தைக் கொண்டிருப்போராகும்.

4. உண்மையின் உள்ளம்
(“நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.”)
இது நேர்மையான மற்றும் உண்மையான உள்ளத்தைக் கொண்டு வாழ அழைப்பு தருகிறது. இது நீதியோடு வாழவும் நீதியின் செயல்களை செய்யவும் தருகின்ற அழைப்பாகும். "நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்." (திருப்பாடல்கள் 11:7) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நீதியுள்ள ஆண்டவர் நம்மையும் நீதியோடு நடந்து நேரிய செயல்களை பிறருக்கு செய்கின்ற உண்மையின் உள்ளத்தை கொண்டவர்களாக வாழ அழைப்பு தருகிறார்.

5. இரக்கத்தின் உள்ளம்
(“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.”)
இது இரக்கமும் மன்னிப்பும் கொண்ட உள்ளத்தோராய் வாழ அழைப்பு தருவதாகும். திருஅவையில் ஒவ்வொரு நம்பிக்கையாளரும் இரக்கமுள்ள இதயம் கொண்டோராய் வாழ அழைப்பு பெறுகிறோம். இத்தகைய உள்ளத்தினர் தான் இறையாட்சியை சொந்தமாக்குபவர்கள். இரக்கமுள்ள இதயம் ஆன்மாவை வளர்க்கிறது.

6. தூய்மையின் உள்ளம்
(“தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.”)
தூய உள்ளம் அநீதியையும் தீமையையும் அழித்து நன்மையிலும் உண்மையிலும் வாழ அழைப்பு தருகிறது. இத்தகைய உள்ளத்தினர் பாவ கறையின்றி இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அவரில் வாழ்வர்.

7. அமைதியின் உள்ளம்
(“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.”)
அமைதி நல்லுறவை நோக்கி அழைத்துச் செல்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் எல்லா போராட்டங்களுக்கும் மற்றும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் அமைதியை அன்பு செய்யவும் இவ்அமைதியின் மூலம் நம்முடனும், பிறருடனும் மற்றும் இறைவனுடனும் நல்லுறவில் வளர அழைப்புப் பெறுகிறோம்.

8. சிலுவையின் உள்ளம்
(“நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.”)
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (மத்தேயு 16:24) இது கிறிஸ்துவுக்காக துன்பத்தை ஏற்றுக்கொள்ள கொடுக்கும் அழைப்பாகும். கிறிஸ்துவுக்காக நாம் பல வகையில் துன்பங்களை ஏற்றுக் கொண்டால் நாம் இறைவனில் பேறுபெற்றவர்களாவோம்.

மழைப்பொழிவிலே இயேசு எடுத்துரைக்கின்ற இத்தகைய உள்ளங்கள் நம்மில் இருக்கிறதா? என சிந்தித்துப் பார்ப்போம். ஏழ்மையையும், மன்னிப்பையும், தாழ்ச்சியையும், உண்மையையும், இரக்கத்தையும், தூய்மையையும், அமைதியையும், மற்றும் சிலுவையையும் சுமந்து செல்லுகின்ற உள்ளங்களாக நம்முடைய உள்ளங்கள் மாறப்பட வேண்டும். அப்போதுதான் இறைவனிலே நாம் பேறுபெற்றவர்களாக வாழ முடியும். இன்றைக்கு நாம் அடியெடுத்து வைத்திருக்கின்ற பொதுக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையின் திருவழிபாட்டு வாசகங்கள் நமக்கு இத்தகையொரு அழைப்பை தருகிறது. இயேசு நம் உள்ளத்தை பார்க்கிறார் மற்றும் அவர் அதை தொடுகிறார் என்பதை உணர்ந்து மேற்கண்ட பண்புகளால் உள்ளத்தை நிறைப்போம். இறைவனோடு இணைந்திருக்கின்ற பேறுபெற்றவர்களாவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.



Thursday, January 19, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 3-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 22-01-2023- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 3-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(22 ஜனவரி 2023, ஞாயிறு)


முதல் வாசகம்: எசாயா 9: 1-4
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1: 10-13, 17
நற்செய்தி: மத்தேயு 4: 12-23


அழைப்பு எத்தகையோருக்கு...

கடற்கரையில் ஒருவன் நடந்து கொண்டிருந்தான். அவ்வழியே நடந்து கொண்டிருக்கும் போது கால் தட்டி கீழே விழுந்தான். என்ன என்று அவ்விடத்திலிருந்த மணலை சற்று நோண்டி பார்க்கின்ற பொழுது ஒரு மூட்டை கிடைத்தது. புதையல் என்று நினைத்து அதைப் பிரித்து பார்த்த போது அதில் நிறைய மண் பொம்மைகள் இருந்தது. ஏமாற்றத்தோடு இந்த மண் பொம்மைகளை வைத்து நான் என்ன செய்வேன் என்று நினைத்து கொண்டு ஒவ்வொரு பொம்மையாக கடலில் தூக்கியெறிந்து கொண்டிருந்தான். எல்லா பொம்மைகளையும் எரிந்த பின்பு கடைசியாக ஒரு பொம்மையை தூக்கி எறியும் பொழுது அந்த பொம்மை கீழே விழுந்து உடைந்தது. அந்த பொம்மையிலிருந்து சில தங்க நாணயங்கள் கீழே விழுந்தது. அப்போதுதான் அவனுக்கு புரிந்தது அவன் கடலில் தூக்கியெறிந்த அனைத்து மண் பொம்மைகளுக்குள்ளும் தங்க நாணயங்கள் இருந்ததென்று. இதை நினைத்து வருத்தப்பட்டான். மண் பொம்மையின் வெளிப்புற தோற்றத்தை வைத்து உள்ளேயிருந்த அழகான விலைமதிப்புள்ள தங்க நாணயங்களை இழுந்து விட்டேனே என்றான். இது வெறும் பொம்மைக்கு மட்டுமல்ல மனிதருக்கும் தான். இன்றைக்கு பலரை நாம் வெளி உருவத்தை வைத்து மதிப்பீட்டு விடுகின்றோம் ஆனால் அவர்களுக்குள் சென்று பார்த்தால்தான் அவர்களுடைய மதிப்பும் நமக்கு தெரியும். இன்றைய நற்செய்தியில் இயேசு அழைத்த சீடர்களின் வெளித்தோற்றத்தை அவர் பார்க்கவில்லை. மாறாக அவர்களுக்குள் இருந்த குணத்தை பார்த்து அவர்களை அழைக்கிறார்.

பொதுக்காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அடியெடுத்து வைத்துள்ள நம் ஒவ்வொருவரையும் இறைவனின் அழைப்பு எத்தகையோருக்கு என்னும் மையச் சிந்தனையில் சிந்திக்க அழைப்பு தருகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

செபுலோன்/நப்தலி:
இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் இயேசு செபுலோன் மற்றும் நப்தலின் கடற்கரை எல்லையிலிருக்கின்ற கப்பர்நாகுமுக்கு செல்லுகிறார். அசீரியர்கள் இஸ்ரயேலின் வடக்குப் பகுதியை கைப்பற்றியபோது செபுலோன், நப்தலி குலங்களை முதலில் விழ்த்தினர் (2 அரச 15:29). இவ்வாறு அப்பகுதிகளை கைப்பற்றிய பின் அம்மக்களை நாடு கடத்தி அந்த இடங்களில் மற்ற மக்களை குடியமர்த்தினார்கள். அவர்கள் அனைவருமே பிற தெய்வங்களை வழிபடுகின்ற புற இனத்தவர். இயேசு தன்னுடைய பணி யூதர்களுக்கு மட்டுமல்லாது புற இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் உண்டு என்பதை காட்டுவதற்காகவே நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன் நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். சீடர்களையும் அப்பகுதியிலிருந்து அழைக்கிறார்.

சீடர்களின் அழைப்பு:
இன்றைய நற்செய்தியில் இயேசு அழைத்த சீடர்கள் பெரிய பதவி, பணம் மற்றும் பொறுப்புகளில் இருந்தவர்கள் அல்ல மாறாக சாதாரண மனிதர்கள். இவர்களை ஏன் இயேசு அழைக்க வேண்டும்? இவர்களிடம் பணமும், பதவியும், பொருளும் மற்றும் பொண்ணும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இறையாட்சிக்கு தேவையான நல்ல குணங்கள் இருந்தது. எத்தகைய குணங்கள் இந்த சீடர்களிடம் இருந்தது என்பதை தொடர்ந்து சிந்திப்போம்.

1. சகோதரர்களை அழைத்தார் (சகோதரத்துவம்)
இயேசு அழைத்த பேதுருவும் மற்றும் அந்திரேயாவும் சகோதரர்கள். அதேபோல செபதேயுவின் மகன் யாக்கோபும் மற்றும் யோவானும் சகோதரர்கள். இவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் இது அவர்களிடம் இருந்த ஒற்றுமையையும் சகோதரத்துவ உணர்வையும் வெளிப்படுத்துகிறது. இவர்கள் தங்களது குடும்பத்தை அதிகம் அன்பு செய்தவர்களாகவும், தங்கள் தந்தைக்கு கீழ்படிபவர்களாகவும் இருந்தார்கள். தாய் மற்றும் தந்தையை மதித்து சகோதரத்துவ உணர்வோடு வாழுகின்ற இவர்கள் தான் இவ்வுலகில் யாவரையும் சகோதர சகோதரிகளாக எண்ணி இயேசுவின் பணியை தொடர்ந்தாற்றுவார்கள் என்பதை உணர்ந்துதான் இயேசு அவர்களை அழைக்கிறார்.

2. உழைப்பாளிகளை அழைத்தார் (உழைப்பு)
பேதுருவையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும், யாக்கோபையும் மற்றும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு அழைத்த போது அவர்கள் வலைகளை கடலில் வீசியும் மற்றும் பழுது பார்த்தும் கொண்டிருந்தார்கள், அப்படியென்றால் அவர்கள் உழைத்துக் கொண்டிருந்தார்கள். இது இயேசு தன்னை பின்பற்ற விரும்பும் எவரும் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் அதாவது தனது பணியை தொடர்ந்தாற்ற உழைக்க மனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

3. தியாகம் செய்பவர்களை அழைத்தார் (தியாகம்)
இயேசு கொடுத்த அழைப்பை ஏற்ற சீடர்கள் தங்கள் தந்தையையும், படகையும் மற்றும் வலைகளைகளையும் விட்டு விட்டு உடனடியாக அவரை பின்பற்றினார்கள். அப்படியென்றால் இயேசுவின் அழைப்பை ஏற்று அவருடைய சீடர்களாக மாற அவர்கள் எதையும் தியாகம் செய்வதற்கு தயாராக இருந்தார்கள்.
“என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” (மத்தேயு 4:19) என இயேசு இச்சீடர்களுக்கு அழைப்பு தந்தது அவர்களின் உள்ளார்ந்த குணங்களை கண்டு கொண்டதால்தான். எனவே இயேசுவின் அழைப்பு யூதர்களுக்கு மட்டுமல்லாது புற இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் உண்டு அதாவது எல்லோருக்குமானதாகும். வெளிப்புற தோற்றத்தை வைத்து எவரையும் மதிப்பீடு செய்யாமல் உள்ளார்ந்த நல்ல குணங்களை வைத்து யாவரையும் இறையாட்சிக்குள் நுழைய இறைவன் அழைக்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்று அவரைப் பின்பற்ற இந்த சீடர்களைப் போல சகோதரத்துவம், உழைப்பு மற்றும் தியாகம் என்னும் நல்ல குணங்களோடு வாழ்வோம். இவற்றில் வளரும் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் அழைப்பு சொந்தமானது என புரிந்து கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை

Thursday, January 12, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 2-ஆம் ஞாயிறு - (ஆண்டு- A)- 15-01-2023- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலத்தின் 2-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(15 ஜனவரி 2023, ஞாயிறு)

முதல் வாசகம்: எசாயா 49: 3. 5-6
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 1: 1-3
நற்செய்தி: யோவான் 1: 29-34

கடவுளின் ஆட்டுக்குட்டி

    2001 செப்டம்பர் 11 அன்று காலை 8.45 மணிக்கு ஒரு விமானத்தை கொண்டு அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கோபுரத்தை தீவிரவாதிகள் நொறுங்கிவிழச் செய்ததை யாரும் மறந்து விட முடியாது. அந்நிகழ்வில் பல உயிர்கள் பிழைப்பதற்கு மிக முக்கிய காரணம் பெஞ்சமின் கீபே கிளார்க். நம்மில் பலரும் அறியாத இவர் ஒரு காவலாளியோ அல்லது தீயணைப்பு படை வீரரோ அல்ல. மாறாக அதே வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் 96-வது மாடியிலிருந்த ஒரு ஓட்டலில் வேலை செய்த சமையல்காரர். அந்நிகழ்வு நடந்தபோது தன்னுயிரை காப்பாற்றிக் கொள்ள இவர் ஓடவில்லை மாறாக பலரின் உயிரை காப்பாற்ற வழிகாட்டியாக இருந்தவர். உயிருக்காக போராடி 78-வது மாடியில் சக்கர நாற்காலியில் அவதியுற்ற ஒருவரை காப்பாற்றி இருக்கிறார். இவ்வாறு நூற்றுக்கணக்கான மனிதர்களை காப்பாற்ற பெஞ்சமின் அன்று தன்னுயிரை தந்தார். வரலாற்றில் பெஞ்சமினைப் போல பலர் பிறருக்காக தன்னுயிரை தந்திருக்கிறார்கள். ஆனால் மனித குலம் முழுவதற்கும் தன்னுயிரை தந்து மீட்பளித்தவரைத்தான் திருமுழுக்கு யோவான் இன்றைய நற்செய்தியில் 'கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று சான்று பகர்கின்றார். திருமுழுக்கு யோவான் எடுத்துரைக்கும் இந்த ஆட்டுக்குட்டி நமது கிறிஸ்தவ வாழ்வில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சிந்திப்போம்.

1. கடவுளின் ஆட்டுக்குட்டி (இறைமகன்)

    இன்றைய நற்செய்தியில் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" (யோவான் 1:29)
என்கிறார். யார் இந்த ஆட்டுக்குட்டி? திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு திருமுழுக்கு அளித்த போது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது (மத்தேயு 3:17). இக்குரல் கடவுளின் ஆட்டுக்குட்டி இறைமகன் என்பதை சுட்டிக்காட்டியது, எனவேதான் இறைவன் தந்த அந்த ஆட்டுக்குட்டிக்கு அவர் சான்றும் பகர்ந்தார். நமக்காக இறைவன் அனுப்பிய இயேசுவுக்கு நாமும் சான்று பகர அதாவது சாட்சிய வாழ்வு வாழ இன்று அழைப்புப் பெறுகின்றோம்.

2. பாவம் போக்கும் ஆட்டுக்குட்டி (மீட்பு)

    "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று இயேசுவை சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான் தொடர்ந்து, "ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" என்றும் எடுத்துரைக்கின்றார். ஏன் இவரை திருமுழுக்கு யோவான் ஆட்டுக்குட்டி என அழைக்க வேண்டும்? பழைய ஏற்பாட்டில் வரவிறுக்கின்ற மெசியாவை பற்றி எடுத்துரைக்கின்ற போது எசாயா இறைவாக்கினர், "அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்" (எசாயா 53:5,6) எனவும், மேலும் தொடர்ந்து "அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்." (எசாயா 53:7) என்கிறார். இதைத்தான் புதிய ஏற்பாட்டில் திருத்தூதர் பவுல், "நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்." (1 கொரிந்தியர் 5:7) என்கிறார். ஆக நமக்காக மற்றும் நம்முடைய பாவங்கள் மீட்கப்பட இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னையே பழைய ஏற்பாட்டில் பாவம் போக்கும் பலியாக அர்ப்பணிக்கின்ற செம்மறி ஆட்டை போல சிலுவை மரத்தில் அர்ப்பணிக்கின்றார். எனவேதான் ஒவ்வொரு முறையும் நாம் திருப்பலியில் பங்கேற்கின்ற பொழுது "உலகின் பாவங்களைப் போக்குகின்ற இறைவனின் செம்மறி" என ஜெபிக்கின்றோம். இன்று நமது திருஅவையும் 2000 ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்கு காரணம் பாவம் போக்கும் ஆட்டுக்குட்டியான இயேசுவை பின்பற்றி பல மறைசாட்சிகள் தன்னுயிரை தந்ததே காரணமாகும். இதைத்தான் "மனசாட்சிகளின் ரத்தம் கிறிஸ்தவத்தின் வித்து" என்கிறார் புனித தெர்த்தூலியன். உலகின் பாவங்களைப் போக்கிய இறைவனின் ஆட்டுக்குட்டியை போல மற்றும் திருஅவையின் மறைசாட்சியர்களைப் போல நாமும் சாட்சிய வாழ்வு வாழ அழைப்பு பெறுகின்றோம்.

3. தன்னை தந்த ஆட்டுக்குட்டி (நற்கருணை)

            பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவர் முதல் பாஸ்கா விழாவை கொண்டாட, குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதன் இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூசவும், இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவும் அழைப்பு தருகிறார் ( விடுதலைப் பயணம் 12:3,7,8). இது இறைவன் தன் ஒரே மகனின் உயிரையே கல்வாரி மலையில் அர்ப்பணித்து, அதை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு தரும் நற்கருணையாக விட்டு செல்வார் மற்றும் அதை ஒவ்வொரு நாளும் நாம் நம் உள்ளத்திலே ஏற்று வாழ வேண்டும் என்பதன் முன் அடையாளமாகும். இன்று ஒவ்வொரு நாளும் திருப்பலி வழியாக இந்த ஆட்டுக்குட்டியாம் நற்கருணையை நம்முடைய உள்ளத்திலும் வாழ்க்கையிலும் ஏற்று சான்று பகிர்ந்து வாழ அழைப்பு பெறுகின்றோம்.

        ஆட்டுக்குட்டியை கொல்வதற்காக நம்முடைய கரங்களில் நாம் ஏந்துகின்ற போது அதை அறியாத அது கரங்களை நக்குமாம். இது ஆட்டுக்குட்டியின் மாசற்ற மற்றும் தன்னலமற்ற நிலையை எடுத்துரைக்கிறது. இத்தகைய ஆட்டுக்குட்டியை உருவகமாக கொண்டு இயேசுவை சுட்டிக்காட்டுவது அவர் நமக்காக தன்னை அர்ப்பணிக்க வந்த இறைமைந்தன் என்பதை காட்டுகிறது. இன்றும் நற்கருணை வடிவிலே பிரசன்னமாகியிருக்கின்ற இந்த கடவுளின் செம்மறிக்கு சாட்சிய வாழ்வு வாழ்வோம்.
தூய ஆவியின் துணையில்...

        பொதுவாக ஒருவரை நாம் மற்றவருக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்றால் அவரைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆனால் திருமுழுக்கு யோவான் இயேசுவை 'கடவுளின் ஆட்டுக்குட்டி, உலகின் பாவங்களை போக்க வந்தவர்' மற்றும் 'இறைமகன்' என்று நான் முதலில் அவரை அறிந்திருக்கவில்லை. பின்னர் தூய ஆவியாரின் அருளால் தான் அறிந்து கொண்டேன் என்கிறார். இன்றைக்கு இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவை நாமும் நமது வாழ்வில் அறிந்து கொள்ள மற்றும் அவருக்கு சாட்சிய வாழ்வு வாழ தூய ஆவியின் அருளைப் பெற்றவர்களாக நாம் வாழ வேண்டும். இதைத்தான் "உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது நிறையுன்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்" என (யோவான் 16:18) வாசிக்கிறோம். தொடர்ந்து தூய ஆவியின் துணையோடு கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவுக்கு சான்று பகர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை


Friday, January 6, 2023

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா - (ஆண்டு- A)- 08-01-2023- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(08 சனவரி 2023, ஞாயிறு)

முதல் வாசகம்: எசாயா 60: 1-6
இரண்டாம் வாசகம்:  எபேசியர் 3: 2-3a, 5-6
நற்செய்தி: மத்தேயு 2: 1-12

சந்திப்பு தந்த புது வாழ்வு

இன்றைக்கு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழாவை தாயாம் திருஅவையானது கொண்டாடி மகிழ்கின்றது. இது ஒரு பழமையான விழா. கிரேக்க மற்றும் உரோமானிய கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான ஒரு விழா. பேரரசரின் பிறப்பையோ, பதவியேற்பு விழாவையோ அல்லது நகரத்திற்கு அவரின் வருகையையோ சுட்டிக் காட்டுவதற்கு திருக்காட்சி என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உரோமையர்களின் மதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆறாம் தேதி சூரிய கடவுளின் விழாவை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடி வந்திருக்கின்றனர், அதே நாளில் தான் ஏயோன் என்னும் கன்னியிடம் பிறந்த கடவுளின் பிறந்த நாளையும் அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதம் உரோமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முழுமையடைந்த போது, அதே ஜனவரி ஆறாம் தேதி ஆண்டவரின் திருக்காட்சி திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் இந்த ஜனவரி ஆறாம் தேதிக்கு பிறகு வருகின்ற ஞாயிற்றுக்கிழமையில் இவ்விழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். நம் திரு அவையின் பாரம்பரியம் கஸ்பார், மெல்கியோர் மற்றும் பல்தசார் இவர்களது பெயர்கள் என்பதை குறிப்பிடுகிறது. இன்றைய நற்செய்தி மூன்று ஞானிகள் இயேசுவை சந்தித்தபோது நிகழ்ந்த அவர்களின் எட்டு செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது.

1. தேடினார்கள் (2:1): இது கிழக்கிலிருந்து ஞானிகள் இயேசுவை தேடி எருசலேமுக்கு வந்தது.
2. விசாரித்தார்கள் (2:2): இயேசு எங்கு பிறந்திருக்கிறார் என்று தெரியாமல் ஏரோதிடம் யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழ கண்டோம் என விசாரித்தது.
3. பின்பற்றினார்கள் (2:9): மீண்டும் கண்ட விண்மீனை பின் தொடர்ந்து சென்றது.
4. மகிழ்ந்தார்கள் (2:10): இயேசு பிறந்திருக்கின்ற இடத்தில் விண்மீன் நின்றதும் பெருமகிழ்ச்சி கொண்டது.
5. கண்டார்கள் (2:11a): வீட்டிற்குள் சென்று குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதை கண்டது.
6. வணங்கினார்கள் (2:11b): இயேசுவை கண்ட ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கியது.
7. கொடுத்தார்கள் (2:11c): ஞானிகள் தங்கள் பேழைகளைத் திறந்து பொன், சாம்பிராணி மற்றும் வெள்ளைப்போளம் என காணிக்கைகளை கொடுத்தது.
8. திரும்பினார்கள் (2:12): ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாக நாடு திரும்பியது.

ஞானிகள் இயேசுவை சந்தித்த இந்த எட்டு செயல்பாடுகள் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மூன்று மாற்றங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இன்றைக்கு நாம் நமது வாழ்க்கையில் இயேசுவை கண்டு கொள்ளுகின்ற பொழுது இம்மாற்றங்கள் நம் வாழ்விலும் நிகழும்.

1. மகிழ்வு

ஞானிகள் "அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்." (மத்தேயு 2:10) இது இயேசுவை சந்திப்பதற்கு முன்பே அதாவது அவர் இருக்குமிடத்தை அடைந்தவுடனே கிடைத்த மகிழ்ச்சியாகும். மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டறிய ஏதோதோ வழிகளில் முயற்சிக்கின்றனர். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய வாழ்வில் இறைபிரசன்னத்திற்குள் நுழைந்தாலே மகிழ்ச்சியை பெறலாம்.

2. அர்ப்பணிப்பு

"வீட்டிற்குள் ஞானிகள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்." (மத்தேயு 2:11) இங்கு ஞானிகளின் இரண்டு விதமான அர்ப்பணிப்பை நாம் பார்க்கின்றோம். முதலில் ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையின் முன்பு தங்களை முழுவதுமாக அர்ப்பணித்தார்கள். அறிவிலும் மற்றும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய இவர்கள் ஒரு சிறு குழந்தையின் முன்பு வணங்குவது இவர்கள் சுயநலத்தை விட்டு தாழ்ச்சியோடு பிறந்திருக்கின்ற மெசியா முன்பு முழுவதுமாக தங்களை அர்ப்பணிப்பதை காட்டுகிறது. இரண்டாவதாக இவர்கள் தங்களை அர்ப்பணித்து தங்களிடையே இருந்தவற்றையும் காணிக்கைகளாக அர்ப்பணிக்கிறார்கள். பொன் அரசதன்மையையும், தூபம் தெய்வத்தன்மையையும் மற்றும் வெள்ளைப்போளம் மனிதத்தன்மைமையும் குறிக்கிறது என்கிறார் புனித பெர்னார்டு. இது தன்னையும் தன்னிடையே இருப்பதையும் இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்னும் அழைப்பை நமக்கும் தருகிறது. அன்று ஆபேல் தன்னை காணிக்கையாக கொடுக்கவில்லை மாறாக கொழுத்த தலையீறுகளைக் காணிக்கையாக கொடுத்தான். ஆபிரகாம் கூட தன் மகனை தான் காணிக்கையாக அர்ப்பணித்தார். ஆனால் ஞானிகள் அன்னை மரியாள் தன்னை முழுவதுமாக ஆண்டவரின் திட்டத்திற்காக அர்ப்பணித்தது போல தங்களது நிலை மறந்து முழுவதுமாக மீட்பரின் முன்பு காணிக்கையாக அர்ப்பணிக்கிறார்கள். நம் வாழ்விலும் இறைவனை சந்திக்கின்ற போது இறை பிரசன்னம் நம்முள் அர்ப்பண உணர்வை உருவாக்கும். இன்று நமக்காக பிறந்திருக்கிறவர் நம்முடைய பொருட்களை காணிக்கையாக அர்ப்பணிப்பதை காட்டிலும் நம்மை அவர் முன்பாக அர்ப்பணிக்க விரும்புகிறார்.

3. புதுபாதை (புதுவாழ்வு)

"ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் ஞானிகள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்." (மத்தேயு 2:12) இங்கு வேறு வழி என்பது அவர்களுக்கான புது வழி. இது ஞானிகளுக்கு புதுவாழ்வுமாகும், இத்தகையை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஞானிகள் இயேசுவை சந்தித்தது நிச்சயம் அவர்களுக்கு புது வழியை மட்டுமல்லாது புது வாழ்வையும் தந்திருக்கும். மகிழ்ச்சியையும், அர்ப்பண உணர்வையும் ஏற்படுத்திய இந்த சந்திப்பு புது வாழ்வை அவர்களுக்கு உருவாக்கி தந்திருக்கும். இன்றைக்கு ஒவ்வொரு நாளும் ஆண்டவரை நாம் ஆலயத்திலும், இறைவார்த்தையிலும், மற்றும் நற்கருணையிலும் சந்திக்கின்ற பொழுது நம்முடைய வாழ்க்கையிலும் புதிய மாற்றத்தையும் வாழ்வையும் நாம் உணர்வோம். எவ்வாறு ஆண்டவர் இயேசுவை சந்தித்த பிறகு ஞானிகளின் பாதை மாறியதோ, அதேபோல இறைவனை நம்முடைய வாழ்க்கையில் கண்டுணர்ந்த பிறகு நமது கஷ்டமான கவலைக்குள்ளான மற்றும் இடர்பாடுகளுக்குள்ளான பாதை மாறி புதுவாழ்வின் பாதை பிறக்கும்.

இஸ்ராயேல் மக்கள் தங்களது இருளான பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து புது ஒளியென்னும் விடுதலையின் பாதையை கிறிஸ்து என்னும் மெசியா வழியாக பெறுவார்கள் என்பதையே இன்றைய முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் பிறப்பு ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது என்பது இப்புதிய பாதை யூதருக்கு மட்டுமல்லாது எல்லோருக்குமானது என்பதை சுட்டிக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகமும் எடுத்துரைக்கிறது. எல்லோருக்குமான மற்றும் நம்முடைய வாழ்வை மாற்றும் அந்த புதிய பாதை இயேசுவில் இருக்கிறது, அவரை கண்டுகொள்வோம், புது வாழ்வை பெறுவோம். இறைவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை