Tuesday, December 27, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Homily -தமிழ் மறையுரைகள் - திருக்குடும்பத் திருவிழா - ( ஆண்டு- A) - 30 -12-2022

  


🌱விவிலிய விதைகள்🌱
திருக்குடும்பத் திருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(30 டிசம்பர் 2022)

முதல் வாசகம்: சீராக் 3: 2-7, 12-14a
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3: 12-21
நற்செய்தி: மத்தேயு  2: 13-15, 19-23

திருக்குடும்பமும் நம் குடும்பங்களும்

"ஆனந்தமாக வாழ ஆடம்பரம் தேவையில்லை, அன்பானவர்கள் நம்முடன் இருந்தால் போதும்." என்னும் வரிகளுக்கு ஏற்ப அன்பு உள்ளங்கள் நிறைந்து ஆனந்தமாக நமது குடும்பங்கள் வாழ அழைப்பு தருகிறது இன்றைய திருக்குடும்ப திருவிழா. இன்றைய நற்செய்தி யோசேப்பு, மரியா மற்றும் இயேசு என்னும் நாசரேத்து திருக்குடும்பத்தை பற்றி எடுத்துரைக்கிறது.
சமூகம் மற்றும் பொருளாதாரப் பார்வையில் ஒரு சாதாரண குடும்பமாக நாசரேத்து யோசேப்பின் குடும்பம் திகழ்ந்தாலும், இறைமகன் இயேசுவை வளர்ப்பதிலும் தங்களது தூய மற்றும் மகிழ்வான வாழ்விலும் நம் குடும்பங்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது. நம் குடும்பங்களில் தம்பதியருக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் எத்தகைய வாழ்வை வாழ திருக்குடும்பம் அழைப்பு தருகிறது என்று சிந்திப்போம்.

1. கனவன்-மனைவிக்கு...

திருமணமாகி சில நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களில் முறிந்து போகின்ற சூழலில் தான் இன்றைய குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் யோசேப்பு மற்றும் அன்னை மரியாள் ஒருவர் மற்றவரை ஏற்று மகிழ்ச்சியோடு இறைமகன் இயேசுவை வளர்த்தெடுத்தார்கள். யோசேப்பு அன்னை மரியாவுக்கு அன்பையும் மற்றும் முழுமையான பாதுகாப்பையும் அளித்து வந்தார். அன்னை மரியாள் தன் கணவரான யோசேப்புக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்து வந்தார். இன்றைக்கு இத்தகைய ஒரு வாழ்வை கணவரும் மனைவியரும் கொண்டிருக்க அழைப்பு பெறுகின்றோம். இன்றைய இரண்டாம் வாசகமும், "திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும்." என்றும், "திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள்." (கொலோசையர் 3:18,19) என்றும் அழைப்பை தருகிறது.

2. பெற்றோர்களுக்கு...

அன்னை மரியாவும் யோசேப்பும் பெத்லகேமில் குழந்தை இயேசு நல்ல முறையில் பிறக்க இடம் தேடினார்கள். இன்றைய நற்செய்தியில் வாசிப்பது போல குழந்தையை ஏரோது கொல்ல வருகின்றான் என்று கேள்விப்பட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு செல்கின்றனர். காணாமல் போன பிள்ளையை தேடி கோவிலுக்கு ஓடோடி சென்றனர் (லூக் 2:45). எந்தப் பெற்றோரும் பிள்ளைகளை வளர்ப்பது எளிது என்று சொல்லுவது கிடையாது ஏனென்றால் அதில் எண்ணற்ற துன்பங்கள் நிறைந்து இருக்கிறது. அப்படியானால் அன்னை மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவை வளர்ப்பதில் எண்ணற்ற சவால்களை சந்தித்தார்கள். குழந்தையை காப்பாற்றுவதற்காக எகிப்துக்கு குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மீண்டும் அங்கிருந்து நாசரேத்துக்கு வர வேண்டியதாக இருந்தது. எல்லா சூழல்களிலும் அவர்கள் மன உறுதியோடும் மற்றும் நம்பிக்கையோடும் குழந்தையின் வளர்ப்பிலும் பாதுகாப்பிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் சரியான கிறிஸ்தவ நெறிமுறைகளில் வளர்க்கப்படுகின்ற பொழுது அவர்கள் தெய்வபயம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த பிள்ளைகளாகவும், பெற்றோர்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாகவும் இருப்பார்கள். பெற்றோர்கள் தாங்கள் பேசுகின்ற வார்த்தைகளிலும் மற்றும் அவர்களது செயல்பாடுகளிலும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகமும், "பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்." (கொலோசையர் 3:21) ஏனென்றால் அது பிள்ளைகளின் மனநலனையும் வளர்ச்சியையும் சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர்களும் அவர்களின் உடல், உள்ள, ஆன்ம மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். தங்களுடைய துன்பங்களுக்கு மத்தியிலும் நற்செய்தியின் விழுமியங்களை வாழ்க்கையாக்கி பிள்ளைகளுக்கு விதைக்கின்ற பெற்றோர்கள் திருஅவையில் நல்லதொரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள்.

3. பிள்ளைகளுக்கு...

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு தங்களுடைய பெற்றோர்களை மதிக்காத ஒரு சூழல் ஏற்பட்டு வருகிறது ‌. அதிலும் குறிப்பாக வயதான பெற்றோர்களை கைவிடுகின்ற சூழலும் அதிகரித்து கொண்டே வருகிறது. "இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்." (லூக்கா 2:52) இயேசு தன் பெற்றோர்களுக்கு பணிந்து நடந்தது போல ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களுடைய பெற்றோர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். இது அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கித் தரும். இன்றைய முதல் வாசகம் தாய் தந்தையை மேன்மைப்படுத்துவது, முதுமையில் அவர்களுக்கு உதவுவது, அவர்கள் மீது அன்பு, பரிவு மற்றும் பாசம் காட்டுவது பற்றி எடுத்துரைக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகமும், "பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்" (கொலோசையர் 3:20) என்கிறது. பத்து கட்டளைகளின் நான்காவது கட்டளை 'உன்னுடைய தந்தையையும் தாயையும் மதித்து நட' என்பதாகும். (விப.20:12) இன்றைக்கு இறைமைந்தன் இயேசுவை பின்பற்றி பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் நமது பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து, மதித்து, முதுமையில் அவர்களுக்கு உதவி மற்றும் பாதுகாத்து வாழ அழைக்கப்படுகின்றோம்.

திருக்குடும்பத்தை போல ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கும் மூன்று விதமான குடும்பங்களை நாம் எடுத்துக்காட்டாக கூறலாம்.

1. தமதிரித்துவ குடும்பம்

தமதிரித்துவ குடும்பமான தந்தை, மகன் மற்றும் தூய ஆவி என மூவரும் அன்பில், பணியில், இயல்பில் மற்றும் ஆற்றலில் ஒத்திருக்கிறார்கள். இன்றைக்கு நம்முடைய கிறிஸ்தவ குடும்பங்களும் அன்பில், நமது வாழ்வில், ஆற்றலில் மற்றும் சிந்தனையில் ஒத்திருந்து வாழ அழைப்பு பெறுகின்றோம்.

2. அப்போஸ்தலிக்க குடும்பம்

அப்போஸ்தலிக்க குடும்பமான இயேசுவும் அவருடைய பன்னிரண்டு சீடர்களும் எல்லா சூழ்நிலைகளிலும் ஒன்றித்து வாழ்ந்து நம் குடும்பங்களுக்கு ஒற்றுமையை கற்று தருகிறார்கள்.

3. தொடக்க கிறிஸ்தவ குடும்பம்

திருத்தூதர்கள் உருவாக்கிய தொடக்க கிறிஸ்தவ குடும்பம் "அவர்கள் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்." (திருத்தூதர் பணிகள் 2:42) இன்றைக்கு இக்குடும்பத்தை பின்பற்றி நமது கிறிஸ்தவ குடும்பங்களும் ஒன்றாக ஜெபித்து உண்டு மற்றும் உறவாடி வாழ அழைப்புப் பெறுகின்றோம்.

இயேசுவே மையம்
இத்தகைய மாதிரிகளை நம்முடைய குடும்பங்கள் பின்பற்றுகின்ற போது திரு அவையில் ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பங்களும் புனிதர்களின் ஒன்றிப்புக்குள் உள்ளாகிறது. ஏனெனில் இயேசுவை மையப்படுத்தி வாழுகின்ற ஒவ்வொரு குடும்பமும் புனிதர்களின் ஒன்றிப்புக்குள் இணைகின்றது. திருக்குடும்பத் திருவிழா திருக்குடும்பத்தை பற்றி சிந்திப்பதற்காக மட்டுல்ல மாறாக நம்முடைய குடும்பங்களை பற்றி சிந்திப்பதற்காக. திருக்குடும்பத்தின் மையம் இறைமைந்தன் இயேசு கிறிஸ்து. இயேசு இல்லையென்றால் திருக்குடும்பமே இல்லை. எனவேதான் திருக்குடும்பம் முற்றிலும் இறைத்திட்டத்திற்கு உட்பட்டிருந்தது. திருக்குடும்பத்தை முற்றிலுமாக இறைவன் வழிநடத்தினார். இறை வார்த்தைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடந்தார்கள். இன்றைக்கு நம்முடைய குடும்பங்களின் மையமாக இயேசு இருக்கிறாரா? இன்றைக்கு நம்முடைய குடும்பங்களும் இறைத்திட்டத்தை அறிந்து இறைவார்த்தைக்கு செவிகொடுத்து வாழ நம்முடைய குடும்பங்களும் இயேசுவை மையப்படுத்தி அமைக்கப்பட வேண்டும். அத்தகைய குடும்பங்களாக நம்முடைய குடும்பங்களை உருவாக்குவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை

Friday, December 23, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - கிறிஸ்து பிறப்பு பெருவிழா - ( ஆண்டு- A) - 25 -12-2022- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
கிறிஸ்து பிறப்பு பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(25 டிசம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: எசா 9: 2-4, 6-7
இரண்டாம் வாசகம்: தீத்து 2: 11-14 
நற்செய்தி: லூக்  2: 1-14

இயேசுவை சந்திப்போமா?

        பாலைவனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு காலையில் சென்று தூரத்தில் உள்ள மலையைப் பார்த்துக் கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒரு பரிசு உள்ளது என்று ஒருவன் கேள்விப்பட்டான். உடனே அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். மணலின் மீது அவன் நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது. பரிசை பெற அவன் மணலைத் தோண்ட ஆரம்பித்தான். அவன் தோண்ட… தோண்ட… சூரியன் மேலெழுந்து கொண்டிருந்தது. அவனது நிழல் சுருங்கி கொண்டே இருந்தது. அவன், தோண்டிக் கொண்டே இருந்தான். நண்பகலில் அவன் நிழல் அவன் காலடிக்குள் நுழைந்து கொண்டது. நிழலே இல்லை. அவன் ஏமாற்றத்தால் அழுது புலம்பினான். அப்பொழுது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவன் செயல் கண்டு சிரித்தார். அவன் அவரைப் பார்த்து யாவற்றையும் கூறினான். பின்பு அவர் கூறினார். பார் இன்னும் புரியவில்லையா, இப்போதுதான் உன் நிழல் நீயிருக்கும் சரியான இடத்தைக் காண்பிக்கிறது. அப்படியானால், நீ எதிர்பார்த்த பரிசு உனக்குள்ளே இருக்கிறது என்றார். கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இன்று நாம் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த கிறிஸ்மஸ் பெருவிழா கூட கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரிலும் கிறிஸ்து என்னும் பரிசு நமக்காக பிறந்திருக்கிறது. இந்தப் பரிசை நாம் சந்தித்து பிறருடன் பகிர்வதன் வழியாய் மானிடர் யாவரையும் ஏற்று மகிழ்வோடு வாழலாம் என்னும் மையச் சிந்தனையை தருகிறது.

            இன்றைய நற்செய்தியில் பெத்லகேமில் இயேசு பிறந்த போது வயல்வெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு ஆண்டவரின் தூதர், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்." (லூக் 2:10-11) என்று எடுத்துரைத்த போது இடையர்கள் சென்று இயேசுவை சந்தித்தனர். அக்காலத்தில் இடையர்கள் மதிக்கப்படாத ஒரு சமூகமாக கருதப்பட்டார்கள். கடவுளோ இஸ்ராயேல் மக்களின் நல்ல ஆயனாக சித்தரிக்கப்பட்டார். தன் ஒரே மகனின் பிறப்பை மதிக்கப்படாத இச்சமூகத்தினருக்கு வானத்தூதர் வழியாக அறிவிக்கிறார். இந்நிகழ்வை நாம் நான்கு நிலைகளில் சிந்திக்கலாம்.

1. நம்பினர்
        இயேசுவின் பிறப்புக்குப் பிறகு அச்செய்தியானது வானத்தூதர் மூலமாக இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர்கள் அதை முழுமையாக நம்பினார்கள். இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டது, (லூக்கா 2:15) ஆண்டவரின் செய்தி இது என்பதை இடையர்கள் நம்பியதை எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்லாது "இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறேன்" என்று கூறியது இயேசுவின் பிறப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி என்பதையும் அதனை அவர்கள் நம்பி ஏற்றுக் கொண்டதையும் காட்டுகிறது. அனைத்திற்கும் மேலாக "உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் வானத்தூதரின் செய்தி இயேசுவின் பிறப்பு வெறும் யூதர்களுக்கான பிறப்பு அல்ல மாறாக எல்லோருக்குமானது என்பதை தெளிவுபட எடுத்துரைக்கிறது. இச்செய்தியை முழுமையாக நம்பியதால்தான் உடனே இயேசுவை சந்திக்க அவர்கள் சென்றனர். இன்றைக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் பிறந்திருக்கின்ற இயேசு நமக்காக பிறந்திருக்கின்றார் என்பதை நாம் முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்கின்றோமா? உண்மையாகவே இந்த கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு மகிழ்வை தருகிறதா? என சிந்தித்து பார்க்க அழைப்பு பெறுகின்றோம்.

2. சென்றனர்
                    இயேசுவின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்பட்டபோது அதை நம்பி இடையர்கள் ஒருவர் மற்றவரிடையே வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து பிறந்திருக்கின்ற இயேசுவை சந்திக்கலாம் என்று முடிவெடுத்து செல்கிறார்கள். இங்கு இவர்கள் தனித் தனியாக செல்லவில்லை மாறாக எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செல்கிறார்கள். பிறந்திருக்கின்ற குழந்தையை சந்திக்க செல்வதற்கு அவர்கள் அதிக நாட்களும் மற்றும் நேரமும் எடுத்துக் கொள்ளவில்லை. அச்செய்தி அறிவிக்கப்பட்டவுடன் தங்களுக்குள் பேசி தாமதிக்காமல் விரைந்து சென்றதாக நாம் வாசிக்க கேட்கின்றோம். இயேசுவின் பிறப்பை மகிழ்வோடு ஏற்று நம்பியது மட்டுமல்லாது அந்த இயேசுவை காண்பதற்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து விரைந்து சென்றதை போல நமக்காக பிறந்திருக்கின்ற இயேசுவை சந்திக்க நான் செல்கின்றோமா? இந்த சந்திப்பு வெறும் கிறிஸ்துமஸ் அன்று நாம் சென்று பார்க்கின்ற குடில் அல்ல மாறாக நம் வாழ்வு முழுவதும் இந்த இறைவனை ஏற்று கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு கிடைக்கும் அழைப்பாகும்.

3. கண்டனர்
        இந்நிகழ்வின் மூன்றாவது நிலை தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் அதன் பெற்றோர்களான மரியாவையும் மற்றும் யோசேப்பையும் சந்தித்தது ஆகும். இடையர்கள் மகிழ்வோடு இயேசுவை சந்தித்ததை போல இன்றைக்கு நாமும் நமது வாழ்க்கையில் மகிழ்வோடு அவரை எல்லா நாளும், நேரமும் மற்றும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் அவரது பிரசன்னத்தை உணர்கின்றவர்களாக நம்மை மாற்றுகின்றதா நமது சந்திப்பு? என் சிந்திப்போம்.

4. பகிர்ந்தனர்
இடையர்கள் குழந்தையை கண்டது மட்டுமல்லாது, அவர்கள் வானத்தூதரின் மூலமாக கேள்வியுற்ற யாவற்றையும் பிறரோடு பகிர்ந்தார்கள். அதைக் கேட்டு யாவரும் வியப்படைந்தனர்‌. இங்கு பகிர்தல் என்பது நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார் என்ற இடையர்களின் உள்ளத்து மகிழ்வை வெளிப்படுத்துகிறது. தாங்கள் கொண்ட அந்த மகிழ்வை இடையர்கள் மற்றவரோடு பகிர்ந்ததைப் போல நாம் சந்தித்து உணர்ந்த இயேசுவை மற்றவரோடு பகிர்வதற்கு அழைப்புப் பெறுகின்றோம். இன்றைக்கு கிறிஸ்துமஸ் பெருவிழாவின் போது ஒருவர் மற்றவருக்கு நாம் கைக்குலுக்கி கொடுப்பது கிறிஸ்து பிறப்பு வாழ்த்து மட்டுமாக இருந்து விடக்கூடாது மாறாக கிறிஸ்துவை நாம் சந்தித்து அந்த சந்திப்பின் அடையாளமாக நம்முள் எழுகின்ற மகிழ்வின், அன்பின், மனித மாண்பின், சகோதரத்துவத்தின் மற்றும் சமத்துவத்தின் உணர்வுகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள அழைப்பு பெறுகின்றோம். இத்தகைய பகிர்தலில்தான் இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா அர்த்தம் பெறுகின்றது.

                    தொடக்கத்தில் இறைவன் உலகை படைத்த போது எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இறைவன் இந்த உலகிற்கு ஒளியை படைத்து ஒளியை தருகிறார் அவ்வொளியில் வாழ்வதற்கு மனிதரையும் படைத்து அழைப்பு தருகிறார். ஆனால் எல்லா மனிதர்களும் இவ்வொளியில் வாழ்வதில்லை. இயேசுவின் மாட்டு கொட்டகை பிறப்பும், தீவனத்தொட்டியில் கிடத்தியிருப்பதும் அவர் ஏழை எளியவருக்காக எளிய உருவில் புது ஒளியாக பிறந்திருக்கின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவர் பிறப்பை சந்திக்கும் நாமும் ஏழை எளியவரை ஏற்றுக் கொள்ள அழைப்பு பெறுகின்றோம். 2000 ஆண்டுகளாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அர்த்தம் பெற வேண்டுமென்றால், கிறிஸ்துவோடு சந்திப்பும், பிறரோடு பகிர்வும் மற்றும் நம் வாழ்வும் இயேசுவின் பிறப்புக்கான காரணத்தை வெளிப்படுத்தி காட்ட வேண்டும். இது வெறும் சமயத்தை உருவாக்குகின்ற பிறப்பு அல்ல, மாறாக சமத்துவத்தை உருவாக்குகின்ற பிறப்பு. மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் சமத்துவத்தோடும், சகோதரத்துவோடும் மற்றும் நல்லுறவோடும் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவினுடைய பிறப்பு நமக்கு எடுத்துரைக்கின்ற உண்மை.

        இயேசு நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு தர வந்தவர். இம்மண்ணுலகில் எத்தகைய மனிதர்கள் பிறந்திருந்தாலும், எல்லா பிறப்புகளும் நிரந்தரமான மகிழ்வையும் மற்றும் வாழ்வையும் தருவதில்லை. கிறிஸ்துவின் பிறப்பு மட்டும் தான் நிரந்தரமான மகிழ்வை தருகிறது. இது மனித மாண்பையும் மற்றும் உறவுகளையும் ஏற்றுக் கொள்ளுகின்ற பொழுதுதான் முழுமை அடைகிறது. இறைவனின் மீட்பு திட்டத்தில் எத்தனையோ நீதித் தலைவர்களும், அரசர்களும் மற்றும் இறைவாக்கினர்களும் இந்த சமத்துவத்தையும் மனித மாண்பையும் காப்பதற்கு முயற்சித்த போதெல்லாம் தோல்வி கண்டார்கள். தன் ஒரே மகனான இறை மைந்தன் இயேசு கிறிஸ்து இம்மண்ணுலகில் மனிதனாக அவதரித்த போது அவரும் சிலுவை சாவுக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் தான் வாழ்ந்த காலத்தில் தன் பிறப்புக்கான காரணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக அக்காலம் முதல் இக்காலம் வரை இந்த மனித மாண்பை காப்பதற்கு இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவை தொடர்ந்து நீடிக்கவில்லை. அது தொடர்ந்து காக்கப்பட வேண்டும் என்பதைத்தான் நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால், இன்றும் மக்களின் அடிமைத்தனமும் தாழ்நிலையில் மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய அடிமைத்தனத்தை ஒழித்து யாவரையும் மதம், சாதி, இனம் மற்றும் நிறம் என்னும் வேறுபாடுகளை கலைத்து ஏற்றுக் கொள்ளுகின்ற பொழுதுதான் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த கிறிஸ்து பிறப்பு அர்த்தம் பெறுகின்றது. இன்றைக்கு நம்முடைய குடும்பத்தில் நாம் அனைவரையும் ஏற்றுக் கொள்கின்றோமா? நம் உறவுகள் யாவரையும் ஏற்றுக் கொள்கின்றோமா? இன்று நாம் கொண்டாடக் கொண்டிருப்பது வெறும் சமய கிறிஸ்மஸ் பெருவிழா மட்டுமல்ல மாறாக சமத்துவ கிறிஸ்மஸ் பெருவிழா அப்படியென்றால் எல்லோரையும் எந்தவிதமான வேறுபாடின்றி ஏற்றுக் கொள்வதாகும். இதைத்தான் இயேசுவின் பிறப்பு இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் மற்றும் இடையர்கள் சென்று இயேசுவை கண்டு கொண்டதும், பகிர்ந்ததும் நமக்கு எடுத்துரைக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை

Friday, December 16, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக் காலம் 4-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) - 11 -12-2022- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
திருவருகைக் காலம் 4-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(18 டிசம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: எசா 7:10-14
இரண்டாம் வாசகம்: உரோ 1:1-7
நற்செய்தி: மத் 1: 18-24

யோசேப்பும் இறைத்தொடுதலும்

ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாம். ஆம், முயல் என்ன செய்யும் பாவம். ஒரு பக்கம் வேடன் விரட்டுகிறான், இன்னொரு பக்கம் நாய், மறுபக்கம் புலி என எந்த பக்கம் சென்றாலும் எதிரிகள் துரத்துகிறார்கள். எப்படியெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்தது. இறுதியாக குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று எண்ணி குளத்திற்குச் சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி குளத்தின் கரையிலிருந்த தவளைகள் குளத்துக்குள் குதித்தது. அட நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளன என்று ஆச்சரியப்பட்டு தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு தைரியத்தோடு தனக்கு நேர்ந்த எல்லா பிரச்சனைகளையும் மற்றும் துன்பங்களையும் சந்தித்தது. ஆம் முயலின் இக்கட்டான மற்றும் துன்பமான வேளையில் வாழ்வதற்கு ஒரு தூண்டுதலாக இருந்தது அந்த குளத்திலிருந்த தவளைகள்தான். நம் மனித வாழ்க்கையிலும் இக்கட்டான சூழலில் ஏதாவது ஒன்றின் வழியாய் இறைத் தொடுதல் நமக்கு கிடைக்கும். அத்தகைய இறைத்தொடுதலை நம் வாழ்வில் உணர்ந்து வாழ இன்றைய திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்தியில் புனித யோசேப்பு தன்னுடைய இக்கட்டான சூழலில் இறைத்தொடுதலை உணர்ந்து, அதை எதிர்கொண்டு வாழ்ந்ததைப் போல நாமும் வாழ அழைக்கப்படுகின்றோம்.

விவிலியத்தில் பல பகுதிகளில் புனித யோசேப்பை ஒரு வார்த்தை கூட பேசாத நபராக பார்க்கிறோம். அதே வேளையில் பல இக்கட்டான சூழல்களை சந்தித்த ஒரு நபராகவும் பார்க்கிறோம்.

1. இன்றைய நற்செய்தியில் அன்னை மரியா யோசேப்போடு நிச்சயிக்கப்பட்ட பின் அவர் கருவுற்று இருப்பதை அறிந்த யோசேப்பு, என்ன செய்வது? என்னும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறார் (மத் 11:2-11).

2. பேரரசர் அகுஸ்து சீசர் கட்டளையை ஏற்று கணக்கெடுப்பிற்காக தனது சொந்த ஊராகிய பெத்லகேமுக்கு சென்ற போது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. அச்சூழலில் அவர்கள் தங்குவதற்கு ஒரு விடுதி கூட கிடைக்கவில்லை (லூக் 2: 1-7). இதுவும் யோசேப்பை இக்கட்டான ஒரு சூழலுக்கு தள்ளியது.

3. குழந்தை பிறந்த பிறகும், ஏரோது குழந்தையை கொல்ல தேடுகிறான் என்பதை அறிந்து யோசேப்புக்கு ஆண்டவரின் தூதர் கனவில் எகிப்துக்கு தப்பி ஓட சொல்லுவதும், (மத் 2: 13-15) மீண்டுமாக எகிப்துக்கு திரும்பி வர செய்தலும் யோசேப்பு சந்தித்த இக்கட்டான சூழல்கள். (மத் 2: 19-21)

4. யோசேப்பும் அன்னை மரியாவும் சிறுவன் இயேசுவோடு பாஸ்கா விழாவை கொண்டாட எருசலேமுக்கு சென்ற போது அவர் காணாமல் போனதும், என்னை ஏன் தேடினீர்கள்? என இயேசு கேட்டதும் இயேசுவின் வளர்ப்பு தந்தையாகிய யோசேப்புக்கு மிகவும் இக்கட்டான ஒரு சூழலை கொடுத்திருக்கும் (லூக் 2: 1-7).

புனித யோசேப்பு தான் சந்தித்த இத்தகைய எல்லா இக்கட்டான சூழலிலும் இறைத் தொடுதலை உணர்ந்தார். அதனால்தான் அவரால் எல்லா துன்பங்களையும் கடந்து பயணிக்க முடிந்தது. மீட்புத்திட்டத்திற்காக தன்னை அர்ப்பணிக்க முடிந்தது. யோசேப்பு வாழ்ந்த காலத்தில் யூத முறைப்படி திருமணத்தில் மூன்று படிநிலைகள் இருந்ததை பார்க்கின்றோம்.

1. பேசி முடிவெடுத்தல்: பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் சிறு வயதில் இருக்கின்ற போதே அவர்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து அவர்களுக்காக பேசி முடிவெடுப்பார்கள்.

2. நிச்சயதார்த்தம்: இது திருமணத்திற்கு சில மாதங்கள், வாரங்கள் அல்லது நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வோரின் முழு சம்மதத்தோடு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும். ஆனால் அவர்கள் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ஒன்று கூடி வாழ மாட்டார்கள். இருப்பினும் யூத முறைப்படி நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அவர்கள் பிரிய வேண்டுமென்றால் விவாகரத்து என்று சொல்லக்கூடிய திருமண முறிவு சீட்டைப் பெற வேண்டும். அன்னை மரியாவும் யோசேப்பும் இந்நிலையில் தான் இருந்தார்கள்.

3. திருமணம்: இதுதான் இன்றைய காலகட்டத்தில் நாம் பார்ப்பதை போல
திருமணத்தின் முழுமையான நிலையாகும். இதன் பின் இருவரும் ஒன்று கூடி ஒரே இல்லத்தில் வாழ்வார்கள்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலையிலிருக்கும் பொழுது அதாவது "மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால், அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்," (இணைச் சட்டம் 22:23,24) இத்தகைய பின்னணியில்தான் ஒரு நேர்மையாளராக இருந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட மரியா கருவுற்றிருப்பதை அறிந்து, அவரை இச்சூழலுக்கு உள்ளாக்க அவர் விரும்பாமல் மேலும் குழப்பமடைந்து இக்கட்டான ஒரு சூழலை சந்திப்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. அன்னை மரியாள் தூய ஆவியால் கருவுற்று இயேசுவை தன்னிலே ஏற்றதை போல, புனித யோசேப்பு கனவில் வானத்தூதரின் வழியாய் வந்த இறைவார்த்தையால் தொடப்பட்டு, இறைவனை உணர்ந்து மீட்புத்திட்டத்தில் தன்னை அர்ப்பணித்தார். இன்றைக்கு நாம் புனித யோசேப்பை போல நமது இக்கட்டான சூழலிலும் இறைத் தொடுதலை உணர்கின்றோமா? மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கை பயணத்தில் திடீர் துன்பங்கள் மற்றும் சோதனைகளின் வழியாய் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறோம். இத்தகைய சூழல்களில் எல்லாம் இறைவன் பலரின் வழியாக நம்மிடையே இறைச்செய்தியை அனுப்புகிறார், அதுவே நாம் துன்பத்திலிருந்து விடுபட இறைவனின் இறைத்தொடுதல், அதை நமது வாழ்க்கையில் உணர்கின்றோமா? இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேலின் அரசன் தமாஸ்சு நாட்டின் அரசனோடு கூட்டணி வைத்து யூதாவின் தலைநகரான எருசலேமை தாக்க தயாராக இருக்கின்ற போது, கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக "அஞ்சாதே! யாவே இறைவன் மீது நம்பிக்கை வை. நீயும் உன் மக்களும் காப்பாற்றப்படுவீர்கள். எருசலேமுக்கு எத்தகைய துன்பமும் வராது" எனும் நம்பிக்கை செய்தியை எடுத்துரைக்கிறார். அன்று யூத மக்களுக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்படுகின்ற போது இறைவாக்கினர் எசாயா வழியாக இறைத்தொடுதல் வெளிப்படுகிறது. இறைவன் மீது நாம் கொள்ளுகின்ற ஆழமான நம்பிக்கைதான் நமது இக்கட்டான மற்றும் துன்பமான சூழலில் இறைத்தொடுதலை நமக்கு உணர வைக்கும். அத்தகையோராய் வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை

Saturday, December 10, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக் காலம் 3-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) - 11 -12-2022- ஞாயிற்றுக்கிழமை

 


🌱விவிலிய விதைகள்🌱
திருவருகைக் காலம் 3-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(11 டிசம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: எசா 35:1-6a, 10
இரண்டாம் வாசகம்: யாக் 5:7-10
நற்செய்தி: மத் 11: 2-11


அவசரம் வேண்டாம் (பொறுமை)

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஒரு நாயை வளர்த்துவந்தார். அதற்கு டயமண்ட் என்று பெயரும் சூட்டி அன்பாகப் போற்றி வந்தார். ஒரு நாள் அவர் மாலையில் உலாவச் சென்றார். அப்பொழுது அறையின் மேஜை மீது மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அன்று என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அவர் உலாவச் சென்ற நேரத்தில் அந்த நாய் மேஜை மீது தாவிக் குதித்தது போலும். மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அங்கு அவர் எழுதிவைத்திருந்த காகிதங்களுக்குத் தீ வைத்தது. அத்தனையும் எரிந்து கருகின. அதன் அருமை பெருமை நியூட்டன் ஒருவருக்கே தெரியும். ஏனெனில் அவை அவரது இருபது ஆண்டுக் கால ஆராய்ச்சியின் முடிவுகளடங்கிய காகிதங்கள். உலாவச் சென்று திரும்பிய நியூட்டனுக்கு அவற்றைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி. எல்லாம் டயமண்டின் ‘திருவிளையாடல்’ தான் என்பது அவருக்குப் புரிந்தது. அதுவோ தான் செய்த பெரிய தீங்கை அறியாது அன்பாக வாலைக் குழைத்து நியூட்டனை வரவேற்றது. நியூட்டனைத் தவிர வேறு ஒருவர் அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால், நாயை எத்தி உதைந்து அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருப்பார். ஆனால் நியூட்டனோ அன்பாக நாயை எடுத்துத் தழுவி அணைத்து, “டயமண்ட், நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறியமாட்டாய்” என்று சொல்லிக் கொஞ்சினார். அது மீண்டும் வாலை ஆட்டி தன் நன்றியைத் தெரிவித்தது. நியூட்டன் மீண்டும் எழுதத் துவங்கினார். நியூட்டனின் பொறுமையை போல, நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் பொறுமையோடு வாழ அழைக்கிறது இன்றைய திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்று கிழமையின் வாசகங்கள்.

கத்தோலிக்கத் திருஅவை ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியின் ஞாயிறாக கொண்டாடுகிறது. "Gaudete" ('Rejoice' in English) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து மகிழ்ச்சி என்னும் வார்த்தை வருகின்றது. நவம்பர் மாதம் 11-ஆம் தேதி புனித மார்ட்டின் அவர்களின் திருவிழாவிலிருந்து சரியாக நாற்பது நாட்கள் திருவருகைக் கால நோன்பு கடைபிடித்ததின் நிறைவாக இந்த மகிழ்ச்சியின் ஞாயிறானது கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவத்தின் மற்றும் நமக்காக மீட்பர் ஒருவர் பிறக்கிறார் என்னும் கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி. அதனால் தான் இயேசுவின் பிறப்பில் வானதூதர் இடையர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:10,11) என்றார். இன்றைய முதல் வாசகமும் "ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்." என அவரால் எழும் மகிழ்வை எடுத்துரைக்கிறது. 'பொறுமை கடலினும் பெரியது' என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப மகிழ்ச்சியின் ஞாயிறு நம்மை பொறுமையோடு வாழ அழைப்பு தருகிறது.

பொறுமையின்மையின் அறிகுறி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானின் சீடர்கள் “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்கின்றனர். (மத் 11:2) இது அவர்கள் பொறுமை இழந்ததன் அறிகுறியாகும். இதற்கு இரண்டு காரணங்களை கூறலாம். 1. யோவான் சிறையிலிருந்தது மற்றும்
2. மெசியாவின் செயல்கள் மெசியாவுக்காக ஆவலோடு முன்னறிவித்து காத்திருந்தவர்கள் தங்கள் பொறுமையை இழந்து இயேசுவிடம் சென்று "வரவிருப்பவர் நீர் தாமா? என்று கேட்கின்றனர்.

பொறுமையின் பலனும் முன்மாதிரியும்

இன்றைய இரண்டாம் வாசகம் பொறுமையின் பலனை எடுத்துரைக்கிறது. "பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார்."(யாக் 5:7) அதே போல் "நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது" (யாக் 5:8) என்கிறது. இங்கு ஆண்டவருக்காய் பொறுமையோடு நமது தயாரிப்பும் காத்திருப்பும் புதுவாழ்வு என்னும் பலனை தரும். மேலும், "நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்."(யாக் 5:10) என நமக்கு பொறுமைக்கான முன்மாதிரியையும் தருகிறது. சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே - வெற்றி வேர்க்கை நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் பல ஆண்டுகளாக ஆண்டவரின் வருகைக்காக பொறுமையோடு காத்திருந்த இஸ்ராயேல் மக்களை போல, இயேசு நம்முள் பிறக்க வேண்டுமென்று பொறுமையோடு காத்திருப்போம். இந்தப் பொறுமை வெறும் கொண்டாடவிருக்கின்ற கிறிஸ்துமஸ் திருவிழாவிற்கு மட்டுமல்லாது, நமது அன்றாட ஜெப வாழ்விலும் இறைவனின் ஆசீரும் அருளும் கிடைக்க வேண்டுமென்று பொறுமையோடு காத்திருப்போம். இரவு முழுவதும் விழித்திருந்தாலும் கூட ஒரு மலர் மலர்வதை நம்மால் காண இயலாது. ஆனால் காலையில் பூத்து மணக்கும் போது தான் மொட்டின் பொறுமையான மலர்ச்சி நமக்கு புரியும். வெறும் நமது கிறிஸ்தவ வாழ்வில் மட்டுமல்லாது அன்றாட குடும்ப வாழ்விலும் பொறுமை அடிப்படையாக தேவைப்படுகிறது. கணவன் மற்றும் மனைவியிடையே பொறுமையின்மை அவர்களின் வாழ்வையே அழித்துவிடும். இதைத்தான் சீன பழமொழி 'ஒரு கண நேர பொறுமை பேரழிவைத் தடுக்கவும் செய்யும், ஒரு கண நேர பொறுமையின்மை மொத்த வாழ்வை கூட அழிக்கவும் செய்யும்' என்கிறது. இன்று பொறுமையாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும் செவி கொடுக்காததால் பல பிரச்சனைகள் உருவாகிறது. அதுமட்டுமல்லாது பொறுமையின்மை அடுத்தவர்களின் தவறான மதிப்பீட்டுக்கு ஆளாவது, பிறருக்குத் துன்பம் விளைவிப்பது மற்றும் கவனம் சிதைவு போன்ற பல பாதிப்புகளை வர செய்கின்றது. இன்றைக்கு நாம் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாமே நமக்கு உடனடியாக கிடைத்து விட வேண்டும், எங்கு செல்ல வேண்டுமானாலும் நாம் உடனடியாக சென்று விட வேண்டும் மற்றும் எதையும் வேகமாக நடத்தி முடித்து விட வேண்டும் என அவசரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் பொறுமையை கற்றுக் கொள்வோம். ‘பதறாத காரியம் சிதறாது’ என்பது போல நிதானத்தை உருவாக்கிக்கொள்ளும்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வாழ்க்கையின் சிக்கல்களைக் களையவும் பல வழிகள் பிறக்கின்றன. எனவே நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொறுமையோடு வாழ முயற்சிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை

Saturday, December 3, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) - 04 -12-2022- ஞாயிற்றுக்கிழமை



                    🌱விவிலிய விதைகள்🌱

திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(04 டிசம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: எசா 11:1-10
இரண்டாம் வாசகம்: உரோ 15: 4-9
நற்செய்தி: மத் 3: 1-12

மனமாற்றம் என்னும் பாதை

        தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்கிறார், "ஆன்மீகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?" புதிய சீடன், "இறைவனை அறிவதும், அடைவதும் தான் ஆன்மீகத்தின் நோக்கம்" என்கிறான். "இத்தனை நாள் ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறாயே, இறைவனை அறிந்தாயோ" என்று கேட்கிறார். "இல்லை, ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்" என்றான். அதற்கு குரு, "நல்லது, உண்மையிலேயே இறைவனை அறிந்து விட முடியும் என்று நம்புகிறாயா?" என்று மீண்டும் கேட்டார். சீடன் சற்றே யோசித்து விட்டுச் சொன்னான், "நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது." "எதனால் இந்த சந்தேகம் வருகிறது? "பலர் பலவிதமாக இறைவனைப் பற்றி சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவைவிட குழப்பமே மிஞ்சுகிறது." என்றான் சீடன். 'நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே... இப்போது நான் வேறு விதமாக கேட்கிறேன்... நீ ஆண்டவனை தெரிந்து கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா?" "ஆமாம் குருவே." என்றான். சீடனே, உன் விருப்பத்தின் காரணமாகவே நீ ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு இருக்கிறாய். இறைவனை அடைய ஒரு எளிமையான மாற்று வழியை சொல்லித் தருகிறேன். இந்த வழியில் இறைவனை அடைய முடியாது. ஆனால், இறைவன்தான் உன்னை வந்து அடைவார்" என்றார் குரு. "இது குழப்பமாக இருக்கிறதே." என்றான் சீடன். "ஒரு குழப்பமும் இல்லை, அரசன் இருக்கிறார் அவர் அருகே நெருங்குவதோ, பேசுவதோ, அறிவதோ எளிமையான விஷயமல்ல. முடியவும் முடியாது, ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஒருவனுக்கு இருக்கிறது. அவன் நாட்டில் உள்ள எல்லா மக்களும் பயன்படும்படியாக கடுமையாக உழைக்கிறான். பல நல்ல செயல்களை செய்கிறான். இந்த செய்தியை ராஜா அறிகிறார். உடனே தான் கேள்விப்பட்ட அந்த மனிதனை பார்ப்பதற்கு அவரே அழைப்பு தருகிறார் அல்லது அவரே சென்று நேரில் பார்க்கிறார். அவனோடு உரையாடுகிறார், பாராட்டுகிறார் மற்றும் பரிசுகள் தருகிறார். இவ்வாறெல்லாம் நடக்கும் இல்லையா?" "நிச்சயம் நடக்கும் குருவே" என்கிறான் அந்த சீடன். மேலும் குரு சீடனிடம், "ராஜா தான் இறைவன், நீ தான் அவன், நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவை அடைய இயலாது. ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்தால் ராஜாவே உன்னை பார்க்க வருவார். இறைவனை பார்க்கும் முயற்சியை கைவிடு, இறைவன் உன்னை தேடி வர தகுதியான செயல்களில் ஈடுபடு, உன்னை தயாரித்துக் கொள், இறைவன் உன்னை வந்து அடைவார்" என்று கூறினார் குரு. இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இறைவனை சந்திக்க வேண்டும் மற்றும் அவர் அருளாசீரோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக பல பக்தி முயற்சிகளிலும் ஈடுபடுகிறோம். ஆனால் இந்த இறைவன் நிரந்தரமாக நம்மில், நம் உள்ளத்தில் மற்றும் நம் வாழ்வில் வந்து தங்க வேண்டும் என்று ஆசை கொள்வதில்லை. திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் அடியெடுத்து வைத்துள்ள நம் ஒவ்வொருவரையும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு வெறும் இறையாசீரை பெறுகின்ற கிறிஸ்தவர்களாக வாழாது, நம்மை தேடி வரும் தெய்வத்தை வரவேற்று அவரில் வாழுகின்ற கிறிஸ்தவர்களாக வாழ, அதற்காக நம் வாழ்வின் பாதையை தயாரிக்க அழைப்பு தருகிறது.

    இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் வருகைக்காக நம் உள்ளங்களை தயாரிக்க அழைப்பு தருகிறார். "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." என்று பறைசாற்றி நம் எல்லோருக்கும் மனமாற்றம் என்னும் புது பாதையை தருகிறார். இன்றைய நற்செய்தி முழுவதையும் வாசித்து தியானிக்கின்ற பொழுது நம்முடைய மனமாற்றம் எப்பேற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நம்மால் உணர முடியும்.

1. எளிமையான வாழ்வு

            நற்செய்தி எடுத்துரைக்கின்ற திருமுழுக்கு யோவானின் எளிய வாழ்வு நம் மனமாற்றத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் வாழ்ந்ததையும், ஒட்டக முடியாலான ஆடையை அணிந்ததையும், தோல் கச்சையை இடையில் கட்டியதையும் மற்றும் காட்டுத் தேன், வெட்டுக்கிளி போன்ற உணவை உண்டதையும் எடுத்துரைத்து, அவரின் எளிய வாழ்வை நமக்கு காட்டுவதன் அர்த்தம் நாமும் எளிய வாழ்வை ஏற்றுக் கொள்ள பெறும் அழைப்பாகும். இங்கு எளிமையான வாழ்வு என்பது நமது செல்வங்களை தூக்கி எறிந்து விட்டு குடிசையில் வாழ்வது அல்ல, மாறாக நம் வாழ்வில் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதும், நம்மிடையே இருப்பதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் ஆகும். எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக்கொண்டு, ஏழை எளியவருக்கு நம்மாலான உதவிகளை செய்கின்ற எளிமையான உள்ளம் கொண்ட வாழ்வே உண்மையான மனமாற்றம் என்பதை திருமுழுக்கு யோவானின் பாலைவன வாழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

2. வெளிவேடமற்ற வாழ்வு

            இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் சதுசேயர் மற்றும் பரிசேயர்களை "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?" எனக் கேட்பது சரி செய்யவில்லை வெளிவேட வாழ்வு உண்மையான மனமாற்றம் அல்ல என்பதை எடுத்துரைக்கிறது. சதுசேயர்களும், பரிசேயர்களும் சுயநல வாழ்வை வாழ்ந்து தங்கள் வாழ்வுக்காக பிறரை கஷ்டப்படுத்தி வாய்ப்பேச்சு வீரர்களாக வாழ்ந்தவர்கள். சட்டங்களை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி, பிறர் வாழ்வை அழித்து இயேசு கூட தங்கள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். கிறிஸ்தவர்களாகிய நமது மனமாற்றம் இத்தகைய பரிசேய மற்றும் சதுசேய வெளிவேட மாற்றமாக அல்லாது, உண்மையான மனமாற்றமாக அமைய திருமுழுக்கு யோவான் அழைப்பு தருகிறார்.

3. தூய ஆவியில் வாழ்வு

            திருமுழுக்கு யோவான் மனமாற்றத்தின் அடையாளமாக மக்களுக்கு தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார். அவரே "எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னை விட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக் கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்." என்று உரைக்கிறார். இது கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரின் மனமாற்றமும் தூய ஆவியில் வாழ நம்மை அழைத்துச் செல்லும் மாற்றமாக அமைய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியின் ஆலயங்களாக வாழுகின்ற ஒரு மாற்றமாக நமது மனமாற்றம் அமைவதே ஆண்டவரின் வருகைக்காக உண்மையான தயாரிப்பாகும். அப்படியென்றால் நமது மனமாற்றம் நம்மை தூய ஆவியின் கனிகளையும் கொடைகளையும் நமது வாழ்வாக்க அழைத்துச் செல்வதாக இருக்க வேண்டும். அன்று அன்னை மரியாள் தூய ஆவியின் அருளால் கிறிஸ்துவை தன்னுடைய கருவில் தாங்கி, ஆவியின் ஆலயமாக மாறி இறுதி வரை மீட்பு திட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். ஆண்டவர் இயேசுவின் இறப்புக்குப் பிறகு திருத்தூதர்களும் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியை பெற்று இயேசுவை அகில உலகத்திற்கும் எடுத்துச் சென்றனர். இன்று நாமும் அதே ஆவியில் வாழ்கின்ற ஒரு மாற்றத்தை நம்மில் உருவாக்கி பிறக்கவிருக்கின்ற இயேசுவை நம்முள் ஏற்றுக்கொள்வோம்.

4. கிறிஸ்துவில் வாழ்வு

                இன்றைய முதல் வாசகம் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி சென்ற இஸ்ராயேல் மக்களுக்கு, ஜெசெவின் கோத்திரத்திலிருந்து மெசியா தோன்றுவார். அவர் மீது ஆண்டவரின் ஆவி தங்கும்‌. நீதியோடு தீர்ப்பு வழங்குவார் என்னும் தேடி வரும் மெசியாவின் நம்பிக்கையூட்டும் செய்தியை இறைவாக்கினர் எசாயா அறிவிக்கின்றார். இன்றைய இரண்டாம் வாசகம் நாம் ஒரே மனத்தினராக வாழ வேண்டும் என்றும் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் வருகைக்காக நம்மை தயாரிக்க அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்தியில் நம்மை தேடி வரும் தெய்வத்திற்கு மனமாற்றம் என்னும் பாதையை நம் வாழ்வில் உருவாக்க திருமுழுக்கு யோவான் அழைப்பு தருகிறார். நமது மனமாற்றம் கிறிஸ்துவில் நம்மை வாழ வைக்க வேண்டும். கிறிஸ்துவை சாராத வாழ்வு உண்மையான மனமாற்றம் பெற்ற வாழ்வாக அமையாது. எனவே திருவருகை காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நம் ஒவ்வொருவரும் மனமாற்றம் என்னும் பாதையை ஆண்டவருக்காக உருவாக்குவோம் அவரை நம் உள்ளத்திலும் வாழ்விலும் ஏற்றுக் கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை