Saturday, November 26, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக் காலம் முதல் ஞாயிறு - ( ஆண்டு- C) - 27 -11-2022- ஞாயிற்றுக்கிழமை


                                                                                                                🌱விவிலிய விதைகள்🌱

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(27 நவம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: எசா 2:1-5
இரண்டாம் வாசகம்: உரோ 13: 11-14
நற்செய்தி: மத் 24: 37-44

விழிப்பும் - தயாரிப்பும்

அன்பிற்குரியவர்களே,
புதிய திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கமாக திருவருகைக் காலத்தில் நுழைந்திருக்கின்றோம். நான்கு வாரங்கள் கிறிஸ்து பிறப்புக்காக நம்மை நாமே தயாரிக்க திரு அவை இக்காலத்தை தந்திருக்கிறது. ஆக இது ஒரு தயாரிப்பின் காலம். நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் கீழை நாட்டு திருச்சபையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆறாம் தேதி திருக்காட்சி திருவிழாவை கொண்டாடினார்கள். அதில் பலரும் திருமுழுக்கு பெறுவதுண்டு, இவர்கள் இத்திருமுழுக்கை பெறுவதற்கு பல நாட்களாக தங்களை தயாரிப்பதுண்டு, இவர்கள் எடுத்துக் கொண்ட இந்த தயாரிப்பின் நாட்களே பின்னர் திருவருகைக் காலமாக அதாவது கிறிஸ்து பிறப்பு பெருவிழா தயாரிப்பின் காலமாக மாறியது.

முட்டை வியாபாரி ஒருவர் தனக்குப்பின் தன் கடையை நிர்வகிக்கக்கூடிய திறமை தன்னுடைய இரு மகன்களில் யாரிடம் இருக்கின்றது என்று சோதித்தறிந்து அவனிடம் கடையை ஒப்படைக்க நினைத்தாராம். எனவே தன் இரு மகன்களையும் அழைத்து அவர்கள் இருவருக்குமே தலா 1000 ரூபாயை கொடுத்து கடைக்கு முட்டை வாங்கி வரச் சொன்னாராம். இருவரும் சந்தைக்கு சென்றனர். மூத்த மகன் நன்றாக யோசித்து ஆயிரம் ரூபாயில் 200 ரூபாய்க்கு முட்டை வைக்கக் கூடிய பெட்டியையும், 100 ரூபாய்க்கு அந்த பெட்டிக்கு ஒரு பூட்டையும், மீதமுள்ள 700 நூறு ரூபாய்க்கு முட்டையையும் வாங்கினான். ஆனால் இளைய மகன் 200 ரூபாய்க்கு முட்டை வைக்கக் கூடிய பெட்டியை வாங்கிவிட்டு, ஏன் தேவையில்லாமல் பூட்டிற்காக 100 ரூபாய் செலவு செய்ய வேண்டும், மீதமுள்ள 800 ரூபாய்க்கு முட்டையை வாங்குவோம் அப்போது தான் தந்தை என்னை பாராட்டி கடையின் உரிமையை எனக்கு கொடுப்பார் என நினைத்தான். இருவரும் முட்டையை எடுத்துக்கொண்டு வருகின்ற வழியில், தண்ணீர் குடிக்கலாம் என்று ஒரு மரத்தருகே தங்களது முட்டை பெட்டிகளை வைத்தார்கள். அப்போது மரத்திலிருந்து குரங்குகள் வந்து பூட்டு போடாத முட்டை பெட்டியை திறந்து அதிலிருந்த முட்டைகளை எடுத்து வெளியே வீசி அனைத்தையும் நாசமாக்கியது. இறுதியாக வரவிருக்கின்ற ஆபத்தை அறிந்து விழிப்போடு அதற்காக தயாரித்த மூத்த மகனை தந்தை பாராட்டி கடையின் முழு பொறுப்பையும் ஒப்படைத்தார். இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடும் நம் ஒவ்வொருவரையும் விழிப்போடும் தயாரிப்போடும் வாழ அழைக்கிறது.

இன்றைக்கு நமது அன்றாட வாழ்வில் அனைத்து செயல்பாடுகளுக்கும் மற்றும் நமது இலக்குகளை அடைவதற்கும் விழிப்பும் தகுந்த முன்தயாரிப்பும் அவசியமாகிறது. கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் திருஅவையானது இறைமகன் இயேசுவை நமது வாழ்விலும் மற்றும் உள்ளத்திலும் ஏற்றுக்கொள்ள விழிப்போடு தயாரிக்க அழைப்பு தருகிறது. இச்சிந்தனையை நம்மில் விதைக்க இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டு விதமான எடுத்துக்காட்டுகளை கூறுகிறார்.

1. நோவாவும் மக்களும்

பழைய ஏற்பாட்டில் நோவா ஆண்டவருடைய வார்த்தையை ஏற்று வரவிருக்கும் பேராபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள விழிப்போடு பெட்டகத்தை தயாரிக்கிறார். இந்த முன் தயாரிப்பு நோவாவின் குடும்பத்தையும் பல உயிரினங்களையும் காப்பாற்றியது. ஆனால் நோவா காலத்தில் வாழ்ந்த மக்கள் வரவிருக்கின்ற ஆபத்தை அறியாது சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி நோவாவை ஏளனம் செய்து வாழ்ந்து மழை வெள்ளத்தில் இறந்தனர். விழிப்பும் தகுந்த முன்தயாரிப்பும் இங்கு வாழ்வு கொடுத்தது.

2. வீட்டு உரிமையாளரும் திருடனும்

இன்றைய நற்செய்தியில் இயேசு திருடன் வரும் வேளையில் வீட்டு உரிமையாளர் தன் வீட்டிலுள்ள பொருட்களை பாதுகாப்பதற்காக விழிப்போடு இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறார். வீட்டு உரிமையாளரின் விழிப்பு நிலை தான் அவரது உடமைகள் அனைத்தையும் பாதுகாக்கும். இவ்வாறு இவ்விரு எடுத்துக்காட்டுகளின் வழியாக இயேசு நம் ஒவ்வொருவரையும் விழிப்போடும் தயாரிப்போடும் வாழ அழைப்பு தருகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகமும் "இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது." (உரோமையர் 13:11) என ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ள விழித்திருந்து தயாரிக்க அழைப்பு தருகிறது. இத்திருவருகைக் காலத்தில் நாம் நான்கு நிலைகளில் விழிப்போடும் தகுந்த முன் தயாரிப்போடும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நம்மை தயாரிக்க முடியும்.

1. இயேசுவை அறிதல்

விழிப்பின் முதல் நிலையாக கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறிந்திருக்க வேண்டும். இவர் நமக்காக இந்த மண்ணுலகில் மனிதனாக அவதரித்து சிலுவையில் தன்னுயிரை அளித்து நம் பாவங்களிலிருந்து மீட்பு கொடுத்தார் என்பதை முற்றிலும் அறிய வேண்டும். மேலும் இவர் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தை மற்றும் நற்கருணையின் வழியாக நம்முள் வருகின்றார் என்பதையும் அறிந்து அதற்காக நம்மை தயாரிக்க வேண்டும். குறிப்பாக நாம் துவங்கியிருக்கின்ற இந்த திருவருகைக் காலத்தில் பிறக்க இருக்கும் இயேசுவை நம் உள்ளத்திலும் வாழ்விலும் பிறக்க செய்ய விழிப்போடு நம்மை தயாரிக்க வேண்டும். வெறும் அன்றாட நாட்டு நிகழ்வுகளை மட்டும் அறிந்து கொள்பவர்களாக நாம் இல்லாது, நமக்காக ஒருவர் இருக்கின்றார் என அறிந்து அவரை ஏற்றுக்கொள்ள நம்மை முழுவதுமாக தயாரிப்போம்.

2. தன்னை அறிதல்

விழிப்பின் இரண்டாவது நிலையாக தன்னிலையை முற்றிலுமாக நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இயேசுவை அறிந்த நாம் அவரை நமது வாழ்க்கைக்குள் கொண்டுவர முடியும். நமது கிறிஸ்தவ வாழ்வு எப்படியிருக்கின்றது? கிறிஸ்துவுக்குள் நம்முடைய வாழ்வு எத்தகைய நிலையில் இருக்கின்றது? மேலும் இந்த கிறிஸ்துவை நம்முள் மற்றும் நம் வாழ்க்கைக்குள் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோமா? இந்த திருவருகைக் காலத்தில் இயேசுவை நம்முள் ஏற்றுக் கொள்வதற்கு, நமது பங்குகளில் பாவசங்கீர்த்தனம் செய்கின்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் நமது உள்ளங்களையும் வாழ்வையும் தூய்மைப்படுத்தி இயேசுவை நம்முள் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

3. பிறரை அறிதல்

விழிப்பின் மூன்றாவது நிலையாக நம்மோடு உடல் வாழுகின்ற சகோதர சகோதரிகளை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். இறைவனை அறிந்து, நம் நிலையை அறிந்து இறைவனை நம்முள் ஏற்றுக் கொண்ட நாம் பிறரையும் ஏற்றுக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். குறிப்பாக இத்திருவருகைக் காலத்தில் நம்மோடு உடன் வாழுகின்ற ஏழை எளிய மக்களை அறிந்து அவர்களுக்கு உடை மற்றும் உணவு கொடுத்து உதவிட வேண்டும். இதுவும் பிறக்கவிருக்கின்ற இயேசுவுக்காக நாம் எடுக்கும் தயாரிப்பாகும். எனவே நம்முடைய சமுதாயத்திலிருக்கின்ற நம் சகோதர சகோதரிகள் இறைவனை ஏற்றுக்கொள்ள தங்களை தயாரிக்கவும், அவர்களை தயாரிப்பதன் மற்றும் உதவுவதன் மூலமாக நம்மை நாமே தயாரிக்கவும் முயற்சி எடுப்போம்.

4. சூழலை அறிதல்

விழிப்பின் நான்காவது நிலை நாம் வாழும் சூழலை அறிந்திருத்தல். குறிப்பாக நம்முடைய குடும்பம், இல்லம், பங்கு மற்றும் சமுதாயத்தின் நிலையை நன்கு அறிந்து, நாம் நம்மை தயாரித்தது போல நம்முடைய சூழலையும் இயேசுவின் வருகைக்காக மற்றும் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக தயாரிக்க நாம் உதவ வேண்டும். "ஒளிமயமாகிறது. ஆதலால், “தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்” (எபேசியர் 5:14) என்னும் இறைவார்த்தைக்கு ஏற்ப நமது பங்கு சமூகம் கிறிஸ்துவில் உயிர்த்தெழ மற்றும் விழித்தெழ நமது பங்களிப்பை தருவோம். பிறக்கவிருக்கின்ற இயேசு பாலகனை நம் வாழ்வாக்க நம்மை முழுவதுமாக தயாரிப்போம். அன்று பத்து கன்னியர்களுள் முன்மதியுடைய ஜவர் விளக்குகளோடும் மற்றும் எண்ணெய் கலன்களோடும் மணமகனை எதிர்கொள்ள வந்தது போல, நாமும் ஆண்டவரை எதிர்கொள்ள விழிப்போடு நம்மை தயாரித்து அவரை நமது உள்ளங்களில் ஏற்றுக் கொள்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.

Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை

Thursday, November 17, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - கிறிஸ்து அரசர் பெருவிழா - ( ஆண்டு- C) - 20 -11-2022- ஞாயிற்றுக்கிழமை

🌱விவிலிய விதைகள்🌱

கிறிஸ்து அரசர் பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(20 நவம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: 2 சாமு 5: 1-3
இரண்டாம் வாசகம்: கொலோ 1: 12-20
நற்செய்தி: லூக் 23: 35-43

வாழ்வளிக்கும் கிறிஸ்து அரசர்

வாழ்க்கையை வெறுத்த மன்னர் ஒருவர் தற்கொலை எண்ணத்தில் அதிகரித்து தன்னுடைய ரதத்தில் இமயமலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வழியில் ஒரு மனிதர் மரத்தடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். எளிமையான அவரது முகம் தாமரைப் போல மலர்ந்திருந்தது. எனவே அதைக் கண்டு தன்னுடைய ரதத்தினை நிறுத்தி அவர் அருகே சென்றார். கண்களைத் திறந்த அந்த மனிதர், என்ன வேண்டும்? எனக் கேட்டார். நான் காசியின் மன்னர், செல்வம் எல்லாம் இருந்தும் ஏதுமில்லாதது போல மனம் வாடுகிறேன். எளிமையாக இருந்தாலும் உங்களின் முகம் பிரகாசமாக இருக்க, அது என்னை ஈர்த்தது, சாக முடிவெடுத்த நிலையிலும் உங்களிடம் சற்று நேரம் பேசத் தோன்றுகிறது, அதனால் நின்று விட்டேன் என்றார். மன்னரின் பேச்சைக் கேட்டாலும் அந்த மனிதரின் பார்வை முழுவதும் மன்னரின் கால்களை நோக்கியே இருந்தது. மன்னருக்கு சிறு வயது முதல் கால்களை ஆட்டும் பழக்கம் இருந்தது. அந்த மனிதர் தனது கால்களை பார்க்கிறார் என்பதை அறிந்ததும் சற்றென அசைப்பதை நிறுத்தினார் மன்னர். மன்னா, எவ்வளவு காலமாக இந்த பழக்கம் உள்ளது? என கேட்டார். அவர் நினைவு தெரிந்த நாள் முதல் என்றார். இப்போது ஏன் நிறுத்திவிட்டாய்? என்று கேட்டார். அவர் நீங்கள் என் கால்களையே உற்று கவனித்தீர்கள் என்றார். பார்த்தாயா மற்றவர் உன்னை கவனிக்க வேண்டும் என கருதுகிறாய். பிறரை சார்ந்தே வாழ ஆசைப்படுகிறாய். உலகத்தைப் பற்றி கவலைப்படாதே, உன் கால்களை நான் கவனித்தால் நீண்ட நாள் பழக்கத்தை கூட நிறுத்தி விட்டேன் என்கிறாய். இனி உன்னையே நீ கவனிக்க தொடங்கு எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என உனக்கு தெரிய வரும். உன் வாழ்க்கை இந்த உலகத்திலே மற்றவர்களிடத்திலே மற்றும் மற்றவைகளிலே அல்ல, மாறாக உன்னிலே தான் இருக்கிறது. பணிவோடு அந்த மன்னர் தாங்கள் யார் என்று கேட்டார், அதற்கு அவரோ புத்தர் என்றார். அந்த மனிதர் காலில் விழுந்து வணங்கினார். இன்றைக்கு நாமும் நமது வாழ்க்கை இந்த உலகத்திலே மற்றும் மற்றவைகளிலே இருக்கின்றது என ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்னும் நம்முடைய அடையாளத்தில் அதாவது கிறிஸ்துவில் தான் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இன்று திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிற்றுக்கிழமை. இந்நாளை தாயாம் திரு அவையானது கிறிஸ்து அரசர் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றது. இந்த கிறிஸ்து அரசர் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு தருபவராக இருக்கிறார் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

1925-ஆம் ஆண்டு பாசிச சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகை தன்வசம் கொண்டு வந்து கொண்டிருந்தன. இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹீட்லரும் மற்றும் உலகம் முழுவதும் பாசிச சக்திகள் ஊடுருவி கொண்டிருந்த தருணத்தில் தான் திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் டிசம்பர் 11-ஆம் தேதி "Quas Primas" என்னும் தனது திருத்தூது மடலில் இயேசுவை திரு அவைக்கு அரசராக பிரகடனப்படுத்தி கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாட அழைப்பு தருகிறார். இவ்வுலகிற்கும் திருஅவைக்கும் புது நம்பிக்கையையும் வாழ்வையும் கிறிஸ்து அரசர் தருகிறார். ஆக இவ்விழா துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே மக்கள் பாசிச சக்தியால் இழந்து கொண்டிருந்த வாழ்வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதேயாகும்.

மீட்பின் வரலாற்றில் இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கென்று ஒரு அரசரை எதிர்பார்த்தனர். இறை விருப்பத்திற்கு எதிரான மக்களது பிடிவாதத்தால் இறைவன் அரசர்களை நியமிக்கின்றார். சவுல் தொடங்கி செதேக்கியா வரை எல்லா அரசர்களும் சிலை வழிபாடு, வேற்று தெய்வ வழிபாடு, ஆணவம், அதிகாரம் மற்றும் பழிவாங்குதல் என இறைவனுக்கு எதிராக வாழ்ந்து மக்களையும் தவறான வழிக்கு நடத்தினார்கள். தாவீது மற்றும் எசேக்கியா போன்ற சில அரசர்கள் மட்டுமே இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள். எனவே தான் தாவீதின் வழிமரபில் ஒரு அரசர் உங்களுக்காக தோன்றி புதுவாழ்வு தருவார் என்பதை வெளிக்கொணர இஸ்ரயேல் மக்களுக்கு தாவீதை அரசராக திருப்பொழிவு செய்கின்ற நிகழ்வு இன்றைய முதல் வாசகமாக தரப்பட்டிருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு கல்வாரி மலையில் இரண்டு கள்வர்களுக்கு இடையே சிலுவை மரத்தில் அறையப்பட்ட போது அவர்களுள் ஒருவர், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும் போது என்னை நினைவிற்கொள்ளும்" என்கிறார். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" (லூக் 23: 42-43) என்கிறார். இது இயேசு நாம் பாவத்திலிருந்து புதுவாழ்வு பெற தன்னுயிரை கையளிக்கின்ற இறுதி தருணத்திலும் கள்வர் ஒருவர் விடுத்த ஜெபத்தை ஏற்று விண்ணகம் என்னும் புதிய வாழ்வை உறுதிப்படுத்துவதை காட்டுகிறது. ஆக இறையாட்சியில் நம் ஒவ்வொருவருக்கும் மண்ணகத்தில் மட்டுமல்ல விண்ணகத்திலும் புது வாழ்வு உண்டு என்பதை இயேசு சிலுவையிலிருந்த போதே முன்னறிவித்திருக்கிறார். இயேசு நான்கு வகையில் நம் ஒவ்வொருவருக்கும் புது வாழ்வு அளிப்பதை அவரது பணி வாழ்வின் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம்.

1. நீதியளித்து வாழ்வளித்தார்

பழைய ஏற்பாட்டில் மூன்று பகுதிகளில் வரவிருக்கின்ற கிறிஸ்து அரசர் நீதியின் அரசராக மற்றும் நேர்மையாளராக இருப்பார் என முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. "மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்" என செக்கரியா 9:9 வரவிருக்கின்ற அரசர் நேர்மையோடு சரியான நீதி வழங்கி வாழ்வளிப்பவராக இருப்பார் என எடுத்துரைக்கிறது. இதே போல "இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்; தலைவர்களும் நீதியோடு ஆட்சி செய்வர்" என எசாயா 32:1-லும், "நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார்." -என எசாயா 11:4-லும் நீதியளித்து வாழ்வு தருகின்ற கிறிஸ்தவ அரசர் பற்றி முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.

2. மன்னித்து வாழ்வளித்தார்

இறை மைந்தன் இயேசு கிறிஸ்து தவறு செய்தவர்களை மற்றும் பாவத்தில் விழுந்தவர்களை மண்ணுலக அரசர்களைப் போல தண்டனையளித்து சாகடிக்காமல், அவர்களை மன்னித்து வாழ்வு தருபவராக இருக்கிறார். அதனால் தான் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்னை நோக்கி, “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என மன்னித்து புதுவாழ்வு அருளினார் (யோவான் 8:11). இயேசு தன் சீடர்களிடமும் "உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்" (மத்தேயு 5:39) என்றும், “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 18:22) என்றும் மன்னிப்பை பற்றி பறைசாற்றி அதனால் உருவாகும் புது வாழ்வை பற்றி எடுத்துரைக்கிறார். இறுதியாக தான் சிலுவையிலிருந்த போது கூட “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக்கா 23:34) என்று சொல்லி அவர்களுக்கான விண்ணக வாழ்வை உறுதிப்படுத்துகிறார்.

3. உணவளித்து வாழ்வளித்தார்

அரசர்கள் என்றாலே பொதுவாக அரண்மனை, அரியணை மற்றும் அந்தஸ்தோடு இருப்பார்கள். ஆனால் கிறிஸ்து அரசர் மாட்டு கொட்டகையில் பிறந்து, தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டு, அன்றே நான் பிறருக்கு உணவாக பிறந்திருக்கின்றேன் எனும் அடையாளத்தை காட்டியிருக்கிறார். ஏனென்றால் இந்த உணவு தான் மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாக இருக்கிறது. ஆனால் நம் கிறிஸ்து அரசர் தருகின்ற உணவு வெறும் உடலுக்கான உணவு அல்ல மாறாக ஆன்மாவிற்கானது. அதனால் தான் இயேசு “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது (யோவான் 6:35). என்கிறார். இதன் வெளிப்பாடாக தான் காட்டி கொடுக்கப்படுவதற்கு முந்திய இரவு நற்கருணை என்னும் வாழ்வு தரும் உணவை ஏற்படுத்தி இன்றும் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு தருகின்ற அரசராக திகழ்கிறார்.

4. தன்னுயிரளித்து வாழ்வளித்தார்

அரசர்கள் பொதுவாக போரில் மற்றும் தண்டனை வழங்குவதில் பிறரது உயிரை எடுத்து அவர்களது வாழ்வை அழிப்பார்கள். ஆனால் நம் கிறிஸ்து அரசர் தன்னுயிரை அளித்து வாழ்வை கொடுக்கிறார். பாவத்தினால் நாம் தொலைத்த வாழ்வை அவரது சிலுவை சாவால் மீண்டும் தருகிறார். இயேசுவின் சிலுவை சாவு நம் ஒவ்வொருவருக்கும் மீட்பை தந்து புதுவாழ்வை அளித்திருக்கிறது. பொதுவாக அரசர்கள் தனக்காக மற்றவரை அடிமையாக்கி வாழ்வார்கள். ஆனால் கிறிஸ்து அரசர் பிறருக்காக தன்னை சிலுவையில் அடிமையாக்கி வாழ்ந்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். அன்று இயேசுவின் சிலுவையில் "யூதரின் அரசர்" என்று எழுதப்பட்டிருந்தது (யோவான் 19:19). ஆனால் இயேசு தனது சிலுவை மரணத்தின் வழியாக தான் யூதரின் அரசர் அல்ல, மாறாக அரசருக்கெல்லாம் அரசர், இந்த மனித குலத்திற்கு அரசர், குறிப்பாக வாழ்வு தருகின்ற அரசர் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

நிலைவாழ்வு

அரசர்கள் என்றாலே பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் அரசாள்வார்கள். அவரது அரசாட்சி சில நாட்களுக்குள் முடிவுக்கு வந்து விடும். உலக வரலாற்றில் நாம் பார்த்த பேரரசர்களும் அவர்களுடைய ஆட்சிகளும் சில ஆண்டுகளுக்குள் முடிவடைந்து விட்டது. ஆனால் இயேசு “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” (யோவான் 18:36) என்கிறார். இதைத்தான் வானத்தூதரும் அன்னை மரியாவிடம் "அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” (லூக்கா 1:33) என்றார்.கிறிஸ்து அரசரின் இறையாட்சி எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியது. அதனால் அவர் தரும் வாழ்வும் இன்று மட்டுமல்ல என்றும் நிலைத்து நிற்கும்.

இன்றைக்கு வாழ்வு தருகின்ற இந்த கிறிஸ்து அரசரை நம் வாழ்வில் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றோமா? இன்றைக்கு வெறும் பணம், பதவி, பொருள், சினிமா, பொழுதுபோக்கு, தொலைக்காட்சி, கணினி,மொபைல் மற்றும் உறவுகள் மட்டுமே நமக்கு நிரந்தரமான மற்றும் மகிழ்வான வாழ்வை தந்து விட முடியாது. கிறிஸ்துவில் மட்டுமே நமக்கு நிரந்தரமான மற்றும் விண்ணக வாழ்விற்கான வழி உண்டு என்பதை உணர்வோம். அவர் வழியில் இந்த மண்ணக வாழ்வை மட்டும் அல்லாது விண்ணக வாழ்வையும் பெற்றுக் கொள்ளுவோம். அரசர் மற்றும் அரசாட்சி என்றாலே அது இறந்த காலத்தை சார்ந்தது இப்பொழுது அதைக் காண நாம் வரலாற்று புத்தகத்தை தான் புரட்டி பார்க்க வேண்டும். ஆனால் காலம் மாறிய காலத்திலும் கிறிஸ்து அரசர் பெருவிழாவை ஆண்டுதோறும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்றால், அது கிறிஸ்து அரசர் தரும் புது வாழ்வை நாம் பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். இதை உணர்ந்து அவர் வழியில் வாழ, வளர இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

கிறிஸ்துவில் அன்புடன், 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
கிளரீசியன் ஊடகப் பணியகம்
தாம்பரம், சென்னை

Thursday, November 10, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 33-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 13 -11-2022- ஞாயிற்றுக்கிழமை


 🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(13 நவம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: மலா 4: 1-2a
இரண்டாம் வாசகம்: 2 தெச 3: 7-12
நற்செய்தி: லூக் 21: 5-19

தயாரிப்போம்

வெளிநாட்டு பிரபல பாடகர் ஒருவர் இந்தியாவில் தன்னுடைய பாடல்களை அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய ரசிகர்களுள் ஒருவர் அவருக்கு ரோஜா பூ மாலையை அணிவிக்கிறார். அந்த மாலையை பெற்றுக் கொண்ட பின்னும், அந்த பாடகர் தொடர்ந்து நடனத்தோடு பாடலை பாடிக் கொண்டிருக்கிறார். தன்னை மறந்து நடனம் ஆட ஆட மாலையிலிருந்து ரோஜா பூ கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து தரையில் விழ ஆரம்பித்தது. இதை பார்த்துக் கொண்டிருந்த தம்பதியருள் கணவர் மனைவியை பார்த்து, 'நீ வேண்டுமானால் பார், இவர் பாடி முடிப்பதற்குள் இவருடைய கழுத்தில் வெறும் மாலையின் நாறு மட்டும் தான் இருக்கும்' என்று கூறினார். அதற்கு அவருடைய மனைவி 'நீங்கள் ஏன் அவருடைய கழுத்திலிருக்கின்ற மாலையின் நாறை பார்க்கிறீர்கள். அதே மாலையிலிருந்த ரோஜா பூ இதழ்கள் உதிர்ந்து தரையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அவர் நிற்கின்ற இடம் முழுவதும் ரோஜா பூ நிறைந்து கிடக்கின்றது' என்று கூறினார். இன்றைக்கு நாம் பார்க்கின்ற, கேட்கின்ற ஒவ்வொன்றிலும் பல்வேறு உள்ளார்ந்த அர்த்தங்கள் இருக்கும். நாம் எதை பார்த்து மற்றும் எவற்றை எடுத்து கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய இறைவார்த்தையை வாசிக்கும் போது, குறிப்பாக நற்செய்தியில் இயேசு எருசலேமின் அழிவை எடுத்துரைப்பது நமக்கு அச்சத்தை கொடுத்தாலும் அதன் பின்னணியில் அவர் தரும் அழைப்பை உணர வேண்டும். பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறான இன்றைய 33-வது ஞாயிறு திருவழிபாட்டு வாசகங்கள் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் தகுந்த முன் தயாரிப்போடு வாழ அழைப்பு தருகிறது. இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று விதமான எச்சரிக்கைகளை நம்முன் வைக்கின்றது. இதன் மூலம் இயேசு எவ்வாறு தன் சீடர்களையும் நம்மையும் முன் தயாரிப்போடு வாழ அழைப்பு தருகிறார் என்பதை சிந்திப்போம்.

1. துன்பத்தை எதிர்கொள்ள தயாரிப்போம்
(எருசலேம் கோவிலின் அழிவு)

இயேசுவின் காலத்தில் கட்டப்பட்டு இருந்த எருசலேம் ஆலயம் பெரிய ஏரோதால் கிமு. 20 மற்றும் 19-ல் கட்ட தொடங்கப்பட்டு கிபி 60-ல் முடிவடைந்த மூன்றாவது ஆலயமாகும். சலவைக் கற்களால் கட்டப்பட்டு, தங்க ஏடுகளால் பொதியப்பட்டு அழகிய சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கியது. உலகமே கண்டு வியக்கும் அளவுக்கு மிகவும் நேர்த்தியான கட்டடக்கலை தேவாலயத்தில் வெளிப்பட்டது. யூத மக்கள் இதன் அழகு கண்டு பெருமையால் பூரித்தார்கள். இயேசுவின் சீடர்களும் எருசலேம் தேவாலயத்தின் அழகை கண்டு பிரம்மித்தார்கள். இவ்வளவு உலகப் புகழ்பெற்ற மிகவும் அழகிய ஆலயம் அழிக்கப்படும் என இயேசு கூறுவது சீடர்களுக்கு ஒரு அடையாளம். இன்று இயேசுவோடு மகிழ்வாக இருக்கிற அவர்கள் எருசலேம் தேவாலயம் அழிவுறுவதை போல ஒரு நாள் மானிட மகன் சிலுவை சாவுக்கு ஆளாக்கப்படும் போது சீடர்கள் பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகும் நிலைவரும். இதை மனதைரியத்தோடு எதிர்கொண்டு இயேசுவின் பணியை தொடர்ந்தாற்ற அவர் அவர்களை தயார் செய்கிறார். இயேசு முன்னறிவிக்கின்ற துன்பம் லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பாகமாக கருதப்படுகின்ற திருத்தூதர் பணிகள் நூலில் நிறைவேறுவதை நாம் காண முடியும். திருத்தூதர்களும் மற்றும் தொடக்க கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் பொறுத்து அனுபவித்த துன்பங்களை தான் இயேசு முன்னறிவிப்பதாக இருக்கிறது. இயேசு தன்னுடைய சீடர்களை தயார் செய்கிறார். அவரது இறப்புக்குப் பிறகு தொடர்ந்து அவர்கள் அவரின் சீடர்களாக, அவர் விட்டு செல்லுகின்ற இறைப்பணியை தொடர்ந்தாற்ற ஏற்படுகின்ற துன்பங்களை எதிர்கொள்ளும் மன திறனை ஏற்படுத்த அவர்களை தயாரிக்கிறார். வரவிருக்கும் அழிவின் மத்தியிலும் மற்றும் துன்பங்களுக்கு இடையிலும் இயேசுவின் எதிர்கால சீடர்கள் இறைவழியில் வாழ முன்னறிவித்து திருத்தூதர்களை தயார்படுத்துகிறார். இன்றைக்கு இயேசு நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு இச்சமுதாயத்தில் பெறப்போகும் துன்பங்களை ஏற்றுக்கொள்ள தயாராக அழைப்பு தருகிறார். லஞ்சம், அநீதி, பொய், ஏமாற்றுத்தனம் என்னும் தவறுகளும் பாவமும் சூழ்ந்து நிற்கும் இச்சமுதாயத்தில் இயேசு கற்பித்த நற்செய்தியின் விழுமியங்களோடு உண்மை கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு எண்ணற்ற தியாகங்களையும், துன்பங்களையும் சோதனைகளையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு வாழ்வுக்கு நம்மை தயாரிக்க கிறிஸ்து இன்று அழைப்பு தருகிறார்.

2. உண்மையானதை அறிந்திட தயாரிப்போம்
(போலி இறைவாக்கினர்கள்)

எருசலேமின் அழிவு எப்போது வரும் அதனுடைய அறிகுறி எப்படியிருக்கும் என்று இயேசுவிடம் கேட்கப்படுவதற்கு அவர் எவ்விதமான அடையாளங்களையும் தராமல் எச்சரிக்கை தருகிறார். அதாவது தாங்களே மெசியா என்று சொல்லிக் கொண்டும், மெசியாவின் காலம் வந்து விட்டது எனவும் பல போலி இறைவாக்கினர்கள் வருவார்கள், எனவே எச்சரிக்கையோடு இருக்க அழைப்பு தருகிறார். இன்று நமது அன்றாட வாழ்விலும் இறைவன் இருக்க வேண்டிய இடத்தில் பணமும், பொருளும், பதவியும் மற்றும் சிற்றின்ப ஆசைகளும் சூழ்ந்து கிடக்கின்றது. இவையெல்லாம் போலிகளே, இறைவன் ஒருவரே உண்மையானவர் மற்றும் நிரந்தரமானவர் என்பதை நாம் நமது வாழ்க்கையில் உணர்ந்து, இத்தகைய போலிகளிலிருந்து விடுபட்டு “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6) என்று சொன்ன இயேசுவை ஏற்றுக் கொள்ள நம்மை முழுவதுமாக தயாரிப்போம்.

3. மனமாற்றம் பெற்றிட தயாரிப்போம்
(உலக முடிவு)

இன்றைய முதல் வாசகம் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்த தென்னாடான யூதா மக்களுக்கு சொல்லப்பட்டது. இவர்கள் கோவிலையும் மற்றும் வீடுகளையும் கட்டி எழுப்பிய பின்னும் ஒழுக்கமின்மை, ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வறுமை போன்றவற்றால் மனசோர்வடைந்து இருந்த சூழலில் இறைவாக்கினர் மலாக்கி ஆண்டவரின் நாள் வரும் எனவும், அது எப்படியிருக்கும் என்பதையும் மற்றும் அவரின் பெயருக்கு அஞ்சி நடக்கிற ஒவ்வொருவர் மீதும் "நீதியின் கதிரவன் எழுகிறது" (2:7) என்பதையும் எடுத்துரைக்கின்றார். மேலும் இன்றைய நற்செய்தியில் இயேசு பல பேரிடர்கள் மூலம் உலகம் அழிவுறும் போதும் கிறிஸ்தவர்களாக வாழ உங்களை தயார்படுத்துங்கள் என சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார். இறைவன் இஸ்ராயேல் மக்களுக்கு அவர்களது பாவ வாழ்வை பற்றிய எச்சரிக்கையை அளித்தது போல இன்றைக்கு நமது பாவ வாழ்வையும் பலர் வழியாக இறைவன் நமக்கு சுட்டிக் காட்டி எச்சரித்துக் கொண்டிருக்கிறார். இதை நமது வாழ்வில் ஏற்று, ஆண்டவரின் நாளில் நாம் ஒவ்வொருவருமே தீர்ப்பிடப்படுவோம் என்பதை முழுவதுமாக உணர்வோம். நாம் அடியெடுத்து வைக்கவிருக்கின்ற திருவருகை காலத்தில் இயேசுவை நமது உள்ளத்திலும் வாழ்விலும் ஏற்றுக்கொள்ள மனமாற்றம் பெற நம்மை முழுவதுமாக தயாரிப்போம்.

இன்றைய இரண்டாம் வாசகம் பவுலடிகளார் தெசலோனிய திருச்சபைக்கு எழுதியதாகும். இது ஆண்டவரின் இரண்டாம் வருகையை முழுமையாக உணராது சோம்பேறித்தனமாய் வாழ்ந்த மக்களை உழைத்து வாழவும், தங்களது கடமைகளை செய்யவும் மற்றும் இறுதி நாளை குறித்து அஞ்சாமல் உண்மையோடு வாழவும் அழைப்பு தருகிறது. இன்றைக்கு நாமும் ஆண்டவர் ஒரு நாள் நம் மத்தியில் நீதி தீர்ப்பிடுவார் என்பதை உணராமல் சோம்பேறித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை தவிர்த்து இயேசுவை ஏற்றுக் கொள்கின்ற மனம் பெற இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF








Wednesday, November 2, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 32-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 06 -11-2022- ஞாயிற்றுக்கிழமை

 

🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(06 நவம்பர் 2022, ஞாயிறு)

முதல் வாசகம்: 2 மக் 7: 1-2, 9-14
இரண்டாம் வாசகம்: 2 தெச 2: 16- 3: 5
நற்செய்தி: லூக் 20: 27-38

கிறிஸ்துவில் புது வாழ்வு

அது கிரேக்க மற்றும் எகிப்திய புராண கதைகளில் சொல்லக் கூடிய ஃபினிக்ஸ் பறவை. கழுகை போல மிகப்பெரிய பறவையாக சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திலுள்ள இந்த பறவையின் சிறப்பம்சம் 500 ஆண்டு கால இதன் வாழ்நாள் தான். எப்படி இந்த பறவை இவ்வளவு ஆண்டு காலம் வாழ முடியும் என்று சிந்திக்கின்ற போது, இந்த பறவை ஒவ்வொரு முறையும் மறுபிறப்பெடுப்பதே இதற்கு காரணம் என்கின்றனர். இப்பறவை எரியும் நெருப்பில் விழுந்து, முழுவதும் எரிந்து, தன்னுயிரை மாய்த்து முற்றிலும் சாம்பலாகும், பின்னர் புழுவாக பிறப்பெடுத்து சாம்பலை ஒன்றினைத்து புது பறவையாக உருவெடுக்கும். நமது கிறிஸ்தவ வாழ்வும் இந்த ஃபினிகஸ் பறவையை போல தான், இந்த மண்ணக வாழ்விலிருந்து இறக்கும் நாம் மீண்டும் விண்ணக வாழ்வில் கிறிஸ்துவில் புது பிறப்படைவோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் விண்ணக வாழ்வில் மீண்டும் கிறிஸ்துவில் புது வாழ்வை பெறுவோம் என்னும் மையசிந்தனையை நம்முன் வைக்கின்றது இன்றைய பொதுக்காலத்தின் 32 ஆம் ஞாயிற்று கிழமையின் இறைவார்த்தை வழிபாடு.
யூத முறைப்படி வாரிசு இன்றி இறப்பது ஒரு சாபக்கேடு, அதுமட்டுமல்லாது விதவை பெண் குடும்பத்தின் வெளியே திருமணம் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை. இதை கருத்தில் கொண்டு இறந்தவரின் சகோதரரே விதவையை ஏற்றுக் கொண்டு வாரிசு உண்டாக்குவது யூதர்களிடையே வழக்கமாக இருந்தது. இதன் பின்னணியில் தான் இன்றைய நற்செய்தியில் சதுசேயர்கள் ஏழு சகோதரர்களை மணந்த பெண்ணை பற்றி எடுத்துரைத்து, இயேசுவிடம் உயிர்த்தெழுதலை பற்றிய கேள்வியை கேட்கின்றார்கள். இவர்கள் உயர்ப்பிலும் மற்றும் வானத்தூதர்களிலும் நம்பிக்கையின்றி இருந்தார்கள். இயேசுவோ அவர்களுடைய பின்னணியில் "தோரா" எனப்படும் விவிலியத்தின் முதல் ஐந்து புத்தகங்களிலிருந்து இறைவன் வாழ்வோரின் கடவுள் எனவும், இதனால் நம் அனைவருக்கும் மறுவாழ்வு உண்டு எனவும் எடுத்துரைக்கின்றார்.

“உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” (விப 3:6) என இறைவன் மோசேயிடும் கூறியது வாழும் கடவுளாக தான் இருப்பதை எடுத்துரைத்ததன் அடையாளம். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என இவர்கள் வாழ்ந்தார்கள், இறந்தார்கள், ஆனால் இன்றும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இறந்த பிறகும் இவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் வாழ்ந்த காலத்தில் இறைவனில் வாழ்ந்ததால், இன்றும் இறைவனில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இறைவன் மோசேயிடம் தன்னை ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் கடவுள் என்று எடுத்துரைக்கின்றார். கிறிஸ்தவர்களாகிய நாமும் இன்று நமது வாழ்வில் கிறிஸ்துவில் வாழுகின்ற பொழுது, "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவான் 11:25) என்று கூறிய இயேசு இறப்பிலும் புது வாழ்வு வாழ செய்வார். மண்ணக வாழ்வில் கிறிஸ்துவை நாம் சொந்தமாக்கும் போது விண்ணக வாழ்வில் அவர் நம்மை சொந்தமாக்குவார்.

இன்றைய முதல் வாசகத்தில் தாயும் சகோதரர்கள் ஏழு பேரும் பன்றி இறைச்சியை உண்பதற்கு மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்ட போது, நான்காவது சகோதரன் இறக்கும் தறுவாயில், “கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன்” என்கிறார். (2 மக்கபேயர் 7:14) இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரிடத்திலும் இதே நம்பிக்கையிருக்க வேண்டும். மண்ணக வாழ்வில் நாம் விண்ணக வாழ்வுக்காக அதாவது கிறிஸ்துவில் புதுபிறப்படைய நம்மை முழுவதும் தயாரிக்க வேண்டும். நம் ஆண்டவர் இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை போல, கிறிஸ்தவர்களாகிய நாமும் இறந்து கிறிஸ்துவில் உயிர்த்தெழுவோம். இதைத் தான் பவுலடிகளார் "இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்"( கொரிந்தியர் 15:16,17) என்கிறார். அன்று இயேசு நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை, தொழுகை கூடத் தலைவரின் மகளை மற்றும் இலாசரை உயிர்த்தெழ செய்ததை போல நம்மையும் இறப்பினின்று உயிர்த்தெழ செய்வார்.

நாம் இரண்டு விதமான மனநிலையை கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு.
1. சதுசேயர்களின் மனநிலை:
இது உயிர்ப்பே இல்லை என்னும் மனநிலை.
2. இயேசுவை பின்பற்றியவரின் மனநிலை:
இது உயிர்ப்பு என்னும் புதுபிறப்பின் மனநிலை.
எத்தகைய மனநிலையோடு நாம் இருக்கிறோம் என சிந்தித்து பார்ப்போம். ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு இறைவனில் வாழ்ந்ததை போல, இயேசுவை பின்பற்றியவர்கள் அவர் தரும் புது வாழ்வில் நம்பிக்கை கொண்டதை போல நாமும் கிறிஸ்துவில் புது வாழ்வு பெற இம்மண்ணக வாழ்வில் நாளும் முயற்சி செய்வோம்.

அன்புடன்:-

Frகுழந்தை யேசு ராஜன் CMF