முதல் வாசகம் : சீராக்கின் ஞானம் 3: 17-18, 20, 28-29
இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12: 18-19, 22-24a
நற்செய்தி : லூக்கா 14: 1, 7-14
இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12: 18-19, 22-24a
நற்செய்தி : லூக்கா 14: 1, 7-14
தாழ்ச்சியுடையோர் மாட்சியடைவர்
பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ‘‘ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?’’ என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி ‘‘அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து ‘‘ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?’’ என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் ஒருவன் கேட்டு சென்றான்” என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் ‘‘வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?’’ என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி ‘‘மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்” என்று சொன்னார். அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் தாழ்ச்சியும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார். இன்று தாழ்ச்சியே நமது வார்த்தையாக, வாழ்வாக மற்றும் அடையாளமாக மாறி நம்மை வானளவு உயர்த்துகிறது. பொதுக்காலம் 22வது ஞாயிற்று கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கும் நம் அனைவரையும் இன்றைய இறைவார்த்தை வழிபாடு தாழ்ச்சியோடு வாழ அழைப்பு தருகின்றது. 'தாழ்ச்சியுடையோர் மாட்சியடைவர் மற்றும் தாழ்ச்சியுடையோர் இகழ்ச்சியடையார்' என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப தாழ்ச்சியான நமது வாழ்வே நம்மை வானளவு உயர்த்தி, இச்சமுதாயத்தில் நமக்கென ஒரு அடையாளத்தை கொடுக்கிறது.
'Humility' என்னும் தாழ்ச்சிக்கான ஆங்கில வார்த்தையின் மூல வார்த்தை 'humilis' என்னும் இலத்தின் மொழியிலிருந்து பிறப்பெடுக்கிறது. தமிழில் அதன் அர்த்தம் 'நிலம்' அல்லது 'மண்' ஆகும். பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது மண் தான், இது ஒரு போதும் தன்னை உயர்த்தி காட்டாமல் தாழ்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைகிறது. "தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.” (லூக்கா 14:11) என இன்றைய நற்செய்தி வாசகமும், "குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்." (சீராக் 3:17) என இன்றைய முதல் வாசகமும் நம்மை தாழ்ச்சியோடு வாழ அழைப்பு தருகிறது. தாழ்ச்சியோடு வாழ்தலே நம்மை மாட்சிப்படுத்தும் என்கின்றது இறை வார்த்தை. பழைய ஏற்பாட்டில் கோலியாத்து தாவீதை எதிர் கொண்டு வந்த போது ஆணவத்தோடும் தற்பெருமையோடும் வந்தான். ஆனால், தாவீது பணிவோடு தன்னையே தாழ்த்தி, இறைவனை நம்பி கோலியாத்தை வென்றார் (1 சாமுவேல் 16:17). இறைவன் முன்பு தன்னையே தாழ்த்தி கொள்பவர் இறைவனால் உயர்த்த பெறுவார். புதிய ஏற்பாட்டில் "இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" (லூக்கா 2:51-52) ஆக, இயேசு 30-ஆண்டுகள் தாழ்ச்சி என்னும் பண்பில் வளர்ந்தார். அது மட்டுமல்லாது இயேசுவின் இரண்டு முக்கிய செயல்கள் அவரது தாழ்ச்சி என்னும் பண்பை எடுத்துரைக்கிறது.
1. மனித உருவெடுத்து சிலுவை சாவை ஏற்றது:-
"அவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்." (பிலிப்பியர் 2:7-9)
ஒரு சமுதாயத்தில் குருவாக மற்றும் போதகராக இருக்கின்ற ஒரு மனிதர் அவருடைய சீடர்களின் பாதங்களை கழுவி, துடைத்து மற்றும் முத்தமிடுவது அவரில் விளங்கிய தாழ்ச்சி என்னும் பண்பை நமக்கு சுட்டிக் காட்டுகிறது(யோவா 13:14). இயேசு தாழ்ச்சியோடு வாழ்ந்தார், அதனால் எப்பெயருக்கும் மேலாக இறைவன் அவரை உயர்த்தினார். நாமும் அவரை போல இறைவனால் உயர்த்தப்பட தாழ்ச்சியோடு வாழ நம்மையும் அழைக்கிறார். ஆலயத்தினுள் நுழைந்து தன்னையே பெருமையாய்ப் பேசிய பரிசேயனின் வேண்டுதல் கேட்கப்படவில்லை. மாறாக, ஆண்டவரே நான் பாவி. என் மேல் இரக்கமாயிரும் என தாழ்ச்சியோடு செபித்த ஆயக்காரனின் வேண்டுதல் தான் இறைவனால் கேட்கப்படுகிறது (லூக் 18:11-13). தாழ்ச்சியும் பணிந்த மனமும் மிகுதியான ஆசீர்வாதங்களை இறைவனிடமிருந்து நமக்கு பெற்றுத்தருகிறது.
அன்னை மரியாவும், “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என இறைவன் முன்பு தன்னை முழுவதுமாக தாழ்த்தினார். இதைத்தான் "நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார். ஆண்டவர் வலியாரை அரியணியினின்று அகற்றினார். தாழ்ந்தோரை உயர்த்தினார்” என மரியா தான் அடைந்த பேற்றைப் பாடுகிறார் (லூக் 1:51). பிரான்ஸ் நாட்டின் பிரன்னீஸ் மலைத்தொடரில் லூர்து என்ற இடத்திலுள்ள மசபியேல் குகையில் “நாமே அமலோற்பவம்” எனக் கூறிய மாதா, 1958 பிப்ரவரி 11 ஆம் நாள் முதல் பெர்னதெத் என்ற 14 வயது சிறுமிக்கு 18-முறை காட்சி கொடுத்து உலகிற்கு மீட்புச் செய்தியை அறிவித்தார். ஒரு முறை மாதா காட்சி கொடுத்தபோது பெர்னதெத்திடம் “உன் விரலை நீ மண்டியிட்டிருக்கும் இடத்திற்கு முன்னால் தரையில் விடு” என்றார். அப்படியே செய்யும் போது நீருற்று கொப்பளித்துக் கொண்டு வெளியே வந்தது. சேறும் சகதியுமான அத்தண்ணீரை நீ குடி” என்றார் மாதா. எந்த வெறுப்பையும் காட்டாதபடி அந்தக் கலங்கிய நீரைக் குடித்தாள் சிறுமி. இதுபற்றி ஒரு காட்சியில் பெர்னதெத் மாதாவிடம் விளக்கம் கேட்டபோது மாதா இவ்வாறு குறிப்பிட்டார். “உனக்குத் தாழ்ச்சி இருக்கிறதா என அறியவே உன்னைக் கலங்கிய நீரைக் குடிக்கச் சொன்னேன். நீ மகிழ்வோடு நான் சொன்னவாறே நடந்து கொண்டதால் உன்னிடம் மிகப்பெரிய இரகசியங்களையும் சொல்ல முன்வந்தேன்” என்றார். தாழ்ச்சி நிறை உள்ளமே இறைவனுக்கு உகந்த இதயம், அவ்விதயத்தை அன்னையை போல நாமும் பெறுவோம்.
"உண்மையில் வாழ்வதே தாழ்ச்சி" என்கிறார் புனித அவிலா தெரசா. "எல்லா நற்பண்புகளையும் இணைக்கும் மாபெரும் நற்பண்பு தான் தாழ்ச்சி, அது இல்லையென்றால் மாலையாகத் கோர்த்த மற்ற நற்பண்புகள் அனைத்தும் சிதறிவிடும்" என்கிறார் புனித ஜான் மரிய வியான்னி. "தாழ்ச்சி எல்லா நற்பண்புகளையும் விட மேலானது" என்கிறார் புனித வின்சென்ட் தெ பவுல். வாழ்க்கையில் எல்லா மனிதருக்கும் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் உண்டு. அதை அடைய பிறரை அவமானப்படுத்துவதும் மற்றும் காயப்படுத்துவதும் சரியான வழி அல்ல. இறைவனில் சரணடைந்து தாழ்ச்சி என்னும் பண்பில் வாழும் போது அவர் நம்மை உயர்த்துவார். இதைத்தான் "ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்" (யாக்கோபு 4:10) என்கிறது இறைவார்த்தை. இன்றைக்கு தாழ்ச்சியோடு வாழ்தலை அடிமைத்தனம் மற்றும் பலவீனம் என்று நினைக்கின்றோம். ஆனால் அது தான் நம்மை வளர்த்தெடுக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. தாழ்ச்சியோடு வாழும் குடும்பங்கள் பிரச்சனைகளை எளிதாக தீர்க்கும் குடும்பங்களாக மாறுகிறது. "தாழ்ச்சியோடு வாழ்தலே இறைவனை அடையும் வழி" என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே நம்மையும் நம் குடும்பங்களையும் உயர்த்தி, நம்மை இறைவனை நோக்கி அழைத்து செல்லும் தாழ்ச்சியை நம் ஆடையாக அணிந்து வாழ இறையருளை வேண்டுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)
காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)